Tuesday, September 30, 2008

Exclusive: இப்போது கட்சி ஆரம்பித்தால் ஆட்சியைப் பிடிப்பாரா ரஜினி?

இதற்கான பதிலை நாமே சொன்னால் அது ரஜினி மீதுள்ள ப்ரியத்தில் கூறியதாகத்தான் நமது நண்பர்களே நினைப்பார்கள்.

மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்?

எத்தனை பேர் ரஜினிக்கு ஆதரவுக் கரம் நீட்டுவார்கள்?

இதோ அரசியல், வணிகம், சினிமா என பல துறைகளைச் சேர்ந்த ஒரு 10 விஐபிக்களிடம் நான் நேரடியாகப் பேசியவற்றிலிருந்து இந்தக் கேள்விக்கான பதிலாய் தருகிறேன்!

சு.திருநாவுக்கரசர் – பாஜக தலைவர்

அவர் எப்போதோ கட்சி ஆரம்பித்திருக்க வேண்டியவர். ஆனால் பல காரணங்களால் அது இன்னமும் நடக்கவில்லை. இன்றைய சூழலில் கூட முதல்வர் பதவிக்கான் வேட்பாளர் என்று அவர் தன்னை முன்னிறுத்தி மக்களைச் சந்தித்தால் தமிழ்நாட்டு அரசியலே தலைகீழாகிவிடும். ஆனால் செய்வாரா... தெரியவில்லை.
அவர் சொல்வதுபோல காலம்தான் இதற்கு பதில் சொல்லும்.

பி.வாசு – இயக்குநர்

ரஜினி சார் இன்னும் அரசியல் பத்தி வெளிப்படையா எதுவும் அறிவிக்கல. அதனால் நானும் ஓபனா பேச முடியாது. ஒருவேளை ஆரம்பிச்சார்னா, நிச்சயம் தமிழ்நாட்டு அரசியலை நிர்ணயம் செய்யும் சக்தியாக அவர் இருப்பார். இப்போதே அவர் அப்படித்தான் இருக்கிறார் என நம்புகிறேன்.

எனக்கென்னமோ அவர் மிகப்பெரிய உயரத்தைத் தொடப் போகிறார் என்று உள்ளுணர்வு சொல்கிறது. பார்க்கலாம்!

சோ – பத்திரிகையாளர்

எதுக்கு இப்போ இந்தக் கேள்வி?

அவர் முதலில் தன்னைத் தயார்படுத்திக்கிட்டு வரட்டும் சொல்றேன்.... இன்னொன்னு நான் யாரை பாராட்டுகிறேனோ அவர்கள் பெருசா வர்றதில்லை. அதனால இனி ரஜினியை நான் பாராட்டப் போறதில்லை. கடுமையா விமர்சிக்கப் போறேன்.

அப்பதான் அவர் எம்ஜிஆர் மாதிரி முதல்வர் ஆகி இன்னும் என்னோட விமரிசனங்களுக்கு ஆளாவார்னு நம்பறேன்...!!

மோகன்பாபு – நடிகர்

ரஜினி அரசியல் கட்சி தொடங்கி ஒரு வருஷம் கடுமையா கவனம் செலுத்தினாலே போதும், இந்த தமிழ்நாட்டின் அதிகாரம் அவர் கைக்கு வந்துடும்.

நான் பலமுறை அவன்கிட்ட சொல்லியிருக்கேன்...

‘டேய் கட்சி ஆரம்பிச்சு, இந்த ஜனங்களுக்கு இன்னும் நிறைய செய்டான்னு... ஆந்திரா அரசியல்ல நான் ஒரு எம்பியாக இருந்தேன். அவ்வளவுதான். அங்க பெருசா செய்ய முடியல. ஆனா ரஜினி கட்சி ஆரம்பிச்சான்னா உச்சத்துக்குப் போவான். இது அவன் ராசி. சினிமாவில் இப்போ அவன்தான் முதல்வர். அரசியலிலும் இது நிச்சயம் நடக்கும்... அப்போ இந்த மோகன்பாபுவை நினைச்சுக்கங்க.

எனக்கு ஒரு வாய்ப்புக் கொடுத்தான்னா... நான்கூட அவன் கட்சியில சேர்ந்துருவேம்பா... ஜோக் இல்ல.. சீரியஸாதான் சொல்றேன். எனக்கும் தமிழ்நாட்டுல செட்டில் ஆகற ஆசையிருக்கு!

எஸ்பி முத்துராமன் – இயக்குநர்

நான் இந்த கேள்விக்கு பதில் சொல்ல தயங்குவேன்னு நினைச்சீங்களா... மாட்டேன்.

கட்சி ஆரம்பிச்சு முழுசா இறங்கினார்னா, ஒரு முதல்வரை வைத்து அதிகப் படங்களை இயக்கியவன் என்ற பெருமை எனக்குக் கிடைக்கும். ஆனா அவர் இயல்புக்கு அரசியல் சரிப்படுமா என்பதை அவர்தான் தீர்மானிக்கணும்.

உங்க கேள்விக்கு பதில் கிடைச்சுடுச்சா....!

வெங்கட் பிரபு – இயக்குநர்

சார் கட்சி ஆரம்பிச்சா நிச்சயம் ஜெயிப்பார். ஆனா எங்களுக்கு சினிமாவின் ஒரே சூப்பர்ஸ்டாரான ரஜினி சாரும் வேணுமே... அதான் பிரச்சினை. என்னை மாதிரி உள்ளவர்கள் ரஜினியை அரசியல்ல பெரிய தலைவரா பார்க்கவும் ஆசைப்படறோம், சினிமாவில சூப்பர்ஸ்டாரா இருக்கணும்னும் ஆசைப்படறோம்.

பேராசைதான்... ஆனா சார் விஷயத்தில அந்த அளவெல்லாம் கிடையாது.

வடிவேலு - நடிகர்

‘பணம் சம்பாதிக்க ஆயிரம் தொழில் இருக்கு... அதை விட்டுட்டு இந்த புனிதமான அரசியலை ஏன்யா பயன்படுத்தறீங்க!’-ன்னு தன்னோட படத்துல கேட்டவர் அண்ணன் சூப்பர்ஸ்டார்.
எனக்கு ஒரு பிரச்சினை வந்த உடனே நான் கட்சி ஆரம்பிப்பேன், தேர்தல்ல நிப்பேன்னு கொதிச்சிட்டேன். நான் கண்டிப்பா தேர்தல்ல நிப்பேன். அதுல மாற்றமில்ல.

ஆனா எவ்வளவோ சோதனைகளுக்குப் பின்னும் அமைதியா, தன் வழியில போயிட்டிருக்கிற ரஜினி சாரை நினைச்சா எனக்கு பிரமிப்பா இருக்கு. இப்படியொரு மனுஷன் அரசியலுக்கு வரணும்... நிறைய செய்யணும்.

அன்புமணி – மத்திய சுகாதாரத் துறை அமைச்சர்

இது ஜனநாயக நாடு. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அதை நாங்கள் எதிர்க்கவில்லை. எந்தக் கொள்கையுமில்லாமல், வெறும் நடிகர் என்ற புகழை மட்டும் வைத்துக்கொண்டு அரசியலுக்கு வருவதைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம்.
ரஜினி வரட்டும்... தன் கொள்கைகளைச் சொல்லட்டும். அவற்றுக்கு மக்களிடம் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து அவரது அரசியல் வெற்றி அமையப்போகிறது.

தங்கராஜ் – ஐஏஎஸ் அதிகாரி

நல்ல விஷயம்தான். நான் அரசியலுக்கும் அப்பாற்பட்டு ரஜினியை விரும்புகிறேன். அவரது கொள்கைகளும், மக்களிடம் அவரது அணுகுமுறையையும் பொறுத்து அவரது அரசியல் வெற்றி அமையும். மற்றபடி நான் அரசியல் பேசக்கூடாது.

தொல் திருமாவளவன் – விடுதலைச் சிறுத்தைகள்

அவர் ஒரு புகழ்பெற்ற நடிகர் என்பதை விடுத்துப் பேசுகிறேன்... ரஜினியின் இயல்புக்கு அரசியல் சரிப்படும் என்று எனக்குத் தோன்றவில்லை. மற்றபடி நல்ல மனிதர்.
அவருக்கு அரசியல் களப்பணி தெரியாது. அவர் கட்சி ஆரம்பித்து களத்துக்கு வந்தால்தான் எதையும் கூறமுடியும். மீடியா பிம்பத்தையும் உங்களைப் போன்ற பத்திரிகையாளர் யூகங்களையும் மட்டுமே வைத்து நான் எந்தக் கருத்தைச் சொல்வது?

ரஜினி இதுவரை அரசியலில் இல்லை. அவர் அரசியலில் இறங்கட்டும், வெற்றி வாய்ப்பு குறித்துப் பிறகு பேசலாம்.

Monday, September 29, 2008

அட கேவலமே...!


இன்றைய தேதிக்கு உலகிலேயே வசூலில் சாதனைப் படைத்த, முதல் தரமான, யாராலும் தொட முடியாத உயரத்துக்குப் போய் விட்ட ஒரே திரைப்படம் எது தெரியுமா?

சின்ன குழந்தையைக் கேட்டால் கூடச் சொல்லிவிடுவார்கள், 'காதலில் விழுந்தேன்' என்று!!
சன் டிவி(களின்)யின் அன்றாட தலைப்புச் செய்தியே இந்தப் படத்தின் வரலாறு காணாத சாதனை பற்றித்தான்...

அட கேவலமே, என்று நீங்கள் தலையில் அடித்துக் கொள்வது எனக்கும் தெரிகிறது. என்ன செய்ய... நாம்தானே அவர்களை மேலும் மேலும் வளர்த்து, நம்மையே தின்னும் அசுரர்களாக மாற்றி வைத்திருக்கிறோம்! நமக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்!!

சன் நெட்வொர்க் மற்றும் அவர்கள் தொடர்புடைய அனைத்து தகவல் தொடர்பு சாதனங்களும் எப்படியெல்லாம் தவறாக, கிரிமினல்தனமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்பதை இந்த வலைப்பூவில் நாம் ஏற்கெனவே அலசியிருக்கிறோம்.

இப்போது மீண்டும் ஒரு முறை நமது வாதங்களுக்கான ஆதாரங்களை சன் குழுமத்தினரே உருவாக்கித் தந்திருக்கிறார்கள்.

காதலில் விழுந்தேன் என்ற மட்டமான மூன்றாம் தர படத்துக்கு சன் டிவியும் அதன் சார்பு மீடியாவும் செய்கிற விளம்பரத்தைப் பார்க்கும்போதுதான் மீடியா உலகின் கேவல நிலையும் கயமைத்தனமும் பலருக்கும் புரிய வந்துள்ளது.

இந்தப் படத்தை மதுரையிலும் ராமநாதபுரத்திலும் ரிலீஸ் செய்ய விடவில்லையாம் அழகிரியின் ஆதரவாளர்கள். நல்ல வேளை, ஒரு பெரிய கொடுமையிலிருந்து அந்த இரு மாவட்ட மக்களையும், அவர்களின் பொன்னான நேரத்தையும் பணத்தையும் காப்பாற்றியிருக்கிறார் அழகிரி!

இதற்காக இவர்கள் குய்யோ முறையோ என வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு வைக்கும் 'செய்தி ஒப்பாரி' இருக்கிறதே... சகிக்கலை!

அதேநேரம் இது இந்திய அரசியல் சாசனம் மீடியாவுக்கு வழங்கியுள்ள உரிமைகளை சன் நிறுவனம் எ்படியெல்லாம் மீறுகிறது என்பதை வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது.

சன் நிறுவனம் மத்திய அரசிடமிருந்து செய்தி ஒளிபரப்பு உரிமம் பெற்றுள்ள ஒரு மிகப் பெரிய ஊடகம். செய்தி என்ற பெயரில் யாரும் எதை வேண்டுமானாலும் தொலைக்காட்சியில் வாசித்துவிட முடியாது. அதற்கு ஏராளமான நடைமுறைகள் உள்ளன. அந்த நடைமுறைகள், சட்ட விதிகள் அனைத்தையும் ஒப்புக் கொண்டு செய்தி ஒளிபரப்பு உரிமம் பெற்றுள்ள சன் தொலைக்காட்சி, இப்போது மக்களுக்கு எவ்வளவு பெரிய துரோகத்தைச் செய்து கொண்டிருக்கிறது பாருங்கள்.

ஒரு மூன்றாம் தர படத்தை இவர்கள் வாங்கிவிட்டார்கள் என்பதற்காக, தலைப்புச் செய்தியிலேயே, 'காதலில் விழுந்தேன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி, மக்கள் மகிழ்ச்சிக் கொண்டாட்டம்', என்றெல்லாம் செய்தியாகவே தருகிறார்கள்.

விளம்பரம் என்ற பெயரில் 10 நிமிடங்களுக்கு ஒரு முறை இந்தப் படத்தின் டிரெயிலர், பாட்டு என படுத்துகிறார்கள். நிமிடத்துக்கொரு முறை விளம்பரம் செய்துவிட்டுப் போகட்டும், நமக்கென்ன... ஆனால் ஒரு உண்மைச் செய்தியாகவே இதைத் திணிக்க முயற்சிப்பது எத்தனை பெரிய குற்றம்?

தனது சொந்த லாபத்துக்காக, மக்களின் பாக்கெட்டைச் சுரண்டுவதற்காக, பாரபட்சமில்லாமல் உண்மைத் தகவல்களை மட்டுமே செய்தியாகக் கூறவேண்டிய முக்கிய நேரத்தில், நன்கு தெரிந்தே ஒரு பெரும் பொய்யைக் கூறிக்கொண்டிருக்கும் சன் டிவியை, மத்திய அரசு மனது வைத்தால் முழுமையாக முடக்கிவிட முடியும்.

இதுகுறித்து, மாநில அரசின் முதல்வர் என்ற முறையில் கருணாநிதி ஒரு கடிதம் எழுதினாலே போதும். ஆனால் செய்வார்களா...? நிச்சயம் மாட்டார்கள். அதுதான் அவர்கள் குடும்பத்துக்கே உரிய அரசியல் ஸ்டைல்!

அழகிரி மேட்டருக்கு வருவோம்...

இந்தப் படம் மதுரையிலும் பிற தென் மாவட்டப் பகுதியிலும் ரிலீஸ் ஆகவிடாமல் அழகிரி தடுப்பதாக சன் டிவி, தினகரன் செய்திகள் உளறுவது போதாதென்று, அந்தப் படத்தின் இயக்குநரை விட்டு பத்திரிகைகளுக்கும் செய்தி கொடுக்க வைத்துக் கொண்டிருக்கிறது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

நாம் அழகிரி அல்லது அவரது ஆட்கள் செய்வதை நியாயப்படுத்தவில்லை. ஆனால், அழகிரிக்கு எதிராக ஆதாரமிருந்தால் போலீசுக்குப் போக வேண்டியதுதானே, சன் நிறுவனம்?
அட கருணாநிதியின் போலீஸ் மீது நம்பிக்கை இல்லையென்ற வைத்துக் கொள்வோம்... கோர்ட்டுக்குப் போகலாமே.

அதைவிட்டுவிட்டு, வடிவேலுவுடன் மல்லுக் கட்டிக் கொண்டிருக்கும் விஜய்காந்த், தன் கட்சியின் பெயரைக் கூட மறந்துவிட்ட சரத்குமார், மகனைக் கண்டிக்க வக்கற்ற ராஜேந்தர்... அட நேற்று வரை கருணாநிதியின் வீட்டு வாசலில் பழியாய் கிடந்துவிட்டு, இன்று முறுக்கிக் கொண்டு அவரது எதிரிகள் வீட்டு திண்ணைகளில் அமர்ந்து வெட்டிப் பஞ்சாயத்துப் பேசிக்கொண்டிருக்கும் விளங்காத கம்யூனிஸ்டுகளின் வீட்டுக் கதவுகளைத் தட்டிக் கொண்டிருக்கிறார்கள்..?

விதி வலியது.... இதே சன் நிறுவனம், ரஜினியின் குசேலன் படத்தைத் தங்களுக்குத் தரவில்லை என்ற கடுப்பில் எப்படியெல்லாம் அந்தப் படத்துக்கு எதிராக பிரச்சாரம் செய்தார்கள்...! விநியோகஸ்தர்களை, தியேட்டர்காரர்களைத் தூண்டிவிட்டார்கள்?

அன்று அவர்கள் குசேலனுக்கு எதிராக விதைத்தை வினையை அறுவடை செய்யும் நேரமல்லவா இது!

பிரஸ் கவுன்சில் மற்றும் மத்திய அரசிடம் சன்னுக்கு எதிரான ஆதாரங்களை இப்போதாவது சமர்ப்பிக்கவேண்டும்.

செய்யுமா தமிழக அரசு?

Saturday, September 27, 2008

இன்று வருகிறார் ரஜினி!


ரஜினியின் அரசியல் குறித்து இதுவரை எத்தனையோ முறை பரபரப்பான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளன. அதனையொட்டி அவர் அரசியலுக்கு வருகிறார், வரமாட்டார் என பந்தயம் கட்டும் அளவுக்கு நிலைமை போயிருக்கிறது.

ஆனால் இந்த முறை ரஜினியின் அரசியல் குறித்த பரபரப்புகளுக்கு தகுந்த ஆதாரங்கள் பலவற்றைக் காட்டுகிறார்கள் அவரது நெருங்கிய நண்பர்கள்.

அவர் சென்னையில் இருக்கும் வரை கிளம்பவில்லை. ஆனால் எந்திரனுக்காக அவர் அமெரிக்கா கிளம்பிய பின்னர்தான் அத்தனை பரபரப்புகளும் கிளம்பியுள்ளன என்பதையும் நாம் மறந்துவிடவில்லை.

அமெரிக்காவிலிருந்தாலும் தன்னைப் பற்றி வரும் செய்திகள், ரசிகர் மன்ற நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வருகிறார் ரஜினி. அங்கிருந்துதான் தனது மன்றங்களுக்கு பல உத்தரவுகளை ரஜினி பிறப்பித்தார் என்றும், அழைப்புகள் கூட அவரது உத்தரவுக்குப் பிறகுதான் அனுப்பப்பட்டன என்றும் நமக்கு நம்பகமான நபர்கள் மூலம் இன்று காலை தகவல் கிடைத்தது.

எனவே அமைதியான சூழலில் கிளம்பிப் போனவர் இப்போது பரபரப்பான சூழலில் திரும்புகிறார்.

இந்தப் பரபரப்புக்கு ஆதாரமில்லாமல் இல்லை. அனைத்தும் உண்மைதான் என பல விஷயங்களைச் சுட்டிக் காட்டுகிறார்கள் ரஜினியின் நண்பர்கள். அவற்றில் பெரும்பாலானவற்றைப் பற்றி ஏற்கெனவே இங்கே விவாதித்திருக்கிறோம்.
இன்று ரஜினி வருகிறார். அடுத்து என்ன நடக்கும்... என்ற கேள்விக்கு யூகங்களை பதிலாகத் தருவதை விட, அவர் வாயாலேயே என்ன பதில் வருகிறது என்று பார்ப்போம்...


இதோ ரஜினி வருகை குறித்த செய்தி (தட்ஸ்தமிழ்):

மீண்டும் ஒரு பரபரப்பான சூழலில் அமெரிக்காவிலிருந்து இன்று இரவு சென்னை வருகிறார் ரஜினி. இது அவரது போயஸ் கார்டன் இல்லத்திலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருக்கும் தகவல்.

ஒரு மாத கால எந்திரன் முதல் கட்டப் படப்பிடிப்பு முடிந்த நிலையில் ரஜினி சென்னை திரும்புகிறார். அவரை விமான நிலையத்தில் பெரும் திரளாக வரவேற்க முதலில் திட்டமிட்டிருந்தனர் ரசிகர் மன்றத்தினர். 1996 தேர்தலின் போது ரஜினிக்கு விமான நிலையத்தில் அளிக்கப்பட்ட வரவேற்புக்கு இணையாக ஏற்பாடு செய்யவும் முடிவு செய்திருந்தனர்.

ஆனால், அந்த மாதிரி எதுவும் செய்துவிடாதீர்கள், ரஜினி அதை விரும்பவுமில்லை என தலைமை மன்றத்திடமிருந்து உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதையடுத்து, இப்போதைக்கு அமைதியாக இருக்க ரசிகர்கள் முடிவு செய்துள்ளனர்.

இருந்தாலும் இன்று மாலை நெருங்க நெருங்க ஒரு வேகத்தில் அனைவரும் விமான நிலையத்தில் குவிந்தாலும் வியப்பதற்கில்லை, என்கிறார் ரஜினி ரசிகர் மன்ற சென்னை மாவட்டப் பிரமுகர் ஒருவர்.

அரசியல் போஸ்டர்கள்!!

நீண்ட நாட்களுக்குப் பிறகு தனது ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களை மொத்தமாகச் சந்திக்கிறார் ரஜினி. இதனால் உற்சாகமடைந்துள்ள அவரது ரசிகர்கள் சென்னை நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் ஆங்காங்கே பேனர்கள் வைத்துள்ளனர். ஏராளமான போஸ்டர்களை தங்கள் சொந்த செலவில் ஒட்டியுள்ளனர்.

ரஜினி, எம்ஜிஆர் படங்கள் இடம்பெற்றுள்ள இந்த பேனர் மற்றும் போஸ்டர்களில் மகாத்மா காந்தி, காமராஜர், விவேகானந்தர், காயிதே மில்லத், தேவர் போன்ற பெரும் தலைவர்களோடு ரஜினியை ஒப்பிட்டு வாசகங்கள் அச்சிடப்பட்டுள்ளன.

இந்தப் போஸ்டர்கள் மாவட்ட அளவிலும் ஒட்டப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்தனர் ரஜினி மன்ற நிர்வாகிகள் சிலர்.

ரசிகர்களுக்கு அழைப்பு!

ரஜினி-ரசிகர்கள் சந்திப்புக்கு அக்டோபர் 3-ம் தேதி முதல் ரஜினி தேதி ஒதுக்கியுள்ளார். மாவட்ட வாரியாக ரசிகர்களை ராகவேந்திரா மண்டபத்துக்கு வருமாறு ரஜினி ரசிகர் மன்றத் தலைவரான சத்தியநாராயணா அழைப்பு அனுப்பியுள்ளார்.

முதலில் சென்னை மற்றும் புறநகர் பகுதி ரசிகர்ளையும், மன்றப் பொறுப்பாளர்களையும் சந்திக்கும் ரஜினி, மற்ற மாவட்டங்களிலிருந்து தலா 25 மன்றப் பொறுப்பாளர்களைச் சந்திக்கப் போகிறாராம்.

இதற்கான அழைப்புகள் அனுப்பப்பட்டுவிட்டதாகவும், மற்ற விபரங்ளை இன்று ரஜினி வந்தபிறகு கூறுவதாகவும் மன்றத் தலைவர் சத்தியநாராயணா தெரிவித்துள்ளார்.

Friday, September 26, 2008

கருத்துக் கணிப்பு: ஒரு நாள் கூத்து!


ஜனநாயக நாட்டில் அவ்வப்போது மக்களின் மனதைப் படம் பிடிக்க கருத்துக் கணிப்புகள் நடத்துவதும் அதற்கேற்ப சில நடவடிக்கைகளை மேற்கொள்வதும் சகஜம்தான்.

ஆனால் சம்பந்தமே இல்லாமல் இத்தகைய கணிப்புகள் சில கருத்துத் திணிப்புகளுக்குக் காரணமாகிவிடுவதுதான் பல சந்தேகங்களைத் தோற்றுவிக்கிறது. ரஜினிக்கு எதிராக இந்த கருத்துக் கணிப்புகள் வந்துவிட்டதால் இப்படிச் சொல்வதாக நினைக்க வண்டாம். நாம் எந்தக் கணிப்பையும் ஆதரிப்பதில்லை.

பலமுறை இந்தக் கணிப்புகள் ஒரு குறிப்பிட்ட பிரிவினரையாவது திசை திருப்ப உதவியிருக்கின்றன.

இதனால்தான் கருத்துக் கணிப்பு என்ற நடவடிக்கைக்கே தடை போடும் முயற்சியில் இறங்கி உள்ளது தேர்தல் கமிஷன்.

லயோலா கல்லூரி முடிவுகளைப் பொறுத்தவரை, பல முரண்பாடுகள் உள்ளன.

தமிழக அரசின் இலவசத் திட்ட அறிவிப்புகளை 82 சதவிகித மக்கள் வரவேற்கின்றனர்.

ஆனால் ஒரு ரூபாய் அரிசித் திட்டத்தை 52 சதவிகிதம் பேர் எதிர்க்கிறார்கள்.

லயோலாவின் முன்னாள் மாணவரான விஜய்க்கு ரஜினியை விட 0.02 சதவிகித அதிக ரசிகர்கள் ஆதரவு இருக்கிறதாம். சரி... எஸ்.ஏ. சந்திரசேகர் சந்தோஷப்பட்டுக் கொள்ளட்டும். ஆனால் இந்த ரேஸில், விஜய்யைவிட அதிக ரசிகர்களைக் கொண்டவராகக் கூறப்படும் அஜீத் நிலை என்ன?

ரஜினியின் திரை உலகப் போட்டியாளர் கமல்ஹாசன் முதல் 5 இடங்களுக்குள் கூட இல்லையா? விஜய்காந்துக்கு (10 சதவிகிதமாம்!) உள்ளதை விட கமல்ஹாசனுக்கு ரசிகர் பலம் குறைவு என்று சொல்ல வருகிறதா... இந்தக் கணிப்பு? இது ஏற்றுக் கொள்ளக்கூடிய விஷயம்தானா...

அதிமுக - திமுகவை விட, ரஜினி –கமலை விட இவர்கள் முக்கியமாக எடுத்துக் கொண்டது விஜய்காந்தைத்தான்.

இல்லாவிட்டால் ஒருபடமும் ஓடாத, வரிசையாக 7 மெகா பிளாப்புகளைக் கொடுத்த விஜய்காந்துக்கு கமல்ஹாசனை விட அதிக செல்வாக்கு என்று சொல்ல வேண்டிய அவசியமென்ன?

6.5 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட ஒரு மாநிலத்துக்கு 2700 பேரை மட்டுமே பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுத்த சாம்ப்ளிங் அடிப்படை மகா தவறான ஒன்று.

எந்த ஒரு இலக்குமின்றி wide spectrum-ல் ஒரு கருத்துக் கணிப்பு நடத்துவதே அபத்தம். இதில் ரஜினி பற்றிய கேள்வி எதற்கு? அவர் கட்சி ஆரம்பித்துவிட்டாரா? தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தாரா? அட, குறைந்தபட்சம் அதுபற்றிப் பேசுவது கூட இல்லையே... பிறகு ஏன் அவர் பெயரை உபயோகப்படுத்துகிறார்கள்...

ரஜினி என்ற மூன்றெழுத்தைத் தொடாமல் அவர்கள் இந்தக் கணிப்பை நடத்தியிருந்தால் அதுபற்றிப் பேச ஒருவரும் முன் வந்திருக்க மாட்டார்கள்.
நிறைய முரண்கள், கேள்விகள் உள்ளன இந்தக் கணிப்பில்.

ஏதோ சின்னப்புள்ளத்தனமாக சில குறிப்புகளைக் கொட்டியிருக்கிறார்கள் இந்தக் கல்லூரி மாணவர்கள். அவற்றை நாம் சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. ராஜநாயகத்தின் விசுவாசம், நம்பகத் தன்மையின் லட்சணம் நமக்கும் தெரியும். இவர்களது கணிப்பு இதற்கு முன்பு எத்தனை முறை தலைகீழானது என்பதும் நாம் பார்த்ததுதான்.

இந்தக் கருத்துக் கணிப்பின் பலன் நமது மீடியாவுக்கு ஒருநாள் கழிந்த நிம்மதி... அவ்வளவுதான்!

இதுதான் ஒரு நல்ல மக்கள் தலைவனுக்குரிய குணம்! - 2


ரஜினி எதிர்பார்த்த ‘வேளை’ வந்துவிட்டதா?

இந்தத் தொடர்ச்சியை நீங்கள் படிக்கும் தருணத்தில் என்ன மாதிரி செய்திகள் மீடியாவில் உலா வந்து கொண்டிருக்கும், அவற்றைப் படித்துவிட்ட பின் உங்களின் மனநிலை எப்படியிருக்கும் என்பதையெல்லாம் உணர முடிகிறது.

சிலர் ரஜினிக்கு சுத்தமாக ஆதரவே இல்லை என்றும், இன்னும் சிலர் கட்சி தொடங்க ரஜினிக்கு ஜோசியர் அனுமதி கொடுத்துவிட்டார் எனறெல்லாம் தங்கள் கற்பனை எல்லைகளை விரித்துக் கொண்டே போகிறார்கள். முன்பே நாம் சொன்து போல கதை வசனத்தை சினிமாக்காரர்களை மிஞ்சும் அளவுக்கு லாஜிக்குடன் எழுதக் கற்றுக் கொண்டார்கள் பத்திரிகையாளர்கள்.

இருக்கட்டும்... அதைப் பற்றி இன்னொரு சந்தர்ப்பத்தில் பேசலாம். மேலே தொடருங்கள்...

ரஜினி அரசியலுக்கு வர இது உகந்த தருணமா... அல்லது அவர் நினைப்பது போன்ற சாதகமான சூழல் இப்போது உள்ளதா... இதுதான் நண்பர்கள் பலரும் நம்மைக் கேட்கும் ஒரே கேள்வி.

நிச்சயம் ரஜினி விரும்பிய மாதிரி ஒரு நல்ல சூழல் இப்போது தமிழகத்தில் இல்லைதான்.
ஆனால்-

முந்தைய பதிவில் நாம் குறிப்பிட்ட அந்த சாதகமான சூழலில் ரஜினி வந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?

ஒரு நல்ல ஆட்சியாளர் எனப் பெயரெடுக்க ரஜினி பெரும்பாடுபட்டிருப்பார்... ஆனால் அவர் மூலம் நிறைய அனுபவிக்கத் துடித்துக் கொண்டிருந்த கும்பலால் அவருக்கும் கெட்ட பெயராகி, சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தையும்கூட இழக்க வேண்டி வந்திருக்கும். சுயநல அரசியல் தந்திரர்களிடம் சிக்கி பெரும் வேதனைக்கு ஆளாக நேரிட்டிருக்கும்.

அன்றைக்கு ரஜினி ஒரு பெரும் அரசியல் சக்தியாக இருந்தார் (இப்போதும்தான்... லயோலா சர்வேயையெல்லாம் விட்டுத் தள்ளுங்கள்!). அதனால் அவரை வைத்துக் குளிர் காய பெரும் கூட்டம் காத்திருந்தது. தங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறாத கோபத்தில் ரஜினிக்கு எதிராகப் போனவர்கள்தான் இப்போது ரஜினியைக் கடுமையாக விமர்சித்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த 12 ஆண்டுகளில் ரஜினியை அரசியலுக்கு வருமாறு மக்கள் நிர்பந்தப்படுத்துவது இது 3-வது முறை. ஆனால் இன்றைய சூழல் மற்ற இரு சந்தர்ப்பங்களிலிருந்தும் வேறுபட்டது. அன்று ரஜினி ரசிகர்கள் மட்டுமல்லாது, ஏழை, பணக்காரன், படித்த, படிக்காதவர்கள் என்ற பேதமில்லாமல் பொதுமக்கள், மீடியா, பெரும்பாலான அரசியல் கட்சிகள், ஆன்மீகப் பெரியவர்கள்... அட அவ்வளவு ஏன்... காவல் துறையினர் கூட ரஜினி முதல்வராக வரவேண்டும் என விரும்பினர்.

ஆனால் இன்று-

ரசிகர்களும், பொதுமக்களும் மட்டும்தான் ரஜினிக்கு பலமாக நிற்கிறார்கள். மற்ற பிரிவினரிடம் பெரிய சலனம் எதுவும் தெரியவில்லை. காரணம் மீடியா உலகம் ஒட்டு மொத்தமாக அவருக்கு எதிராக திரும்பியிருக்கிறது.

அவர் என்னதான் நல்லது செய்தாலும் அதிலும் ஒரு குற்றம் சொல்லத் தயாராக நிற்கிறது மீடியா.

அதிகார வர்க்கம் அவர் பக்கமில்லை. பொதுமக்களில் ஒரு பிரிவினர்கூட ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி அலட்டிக் கொள்ளவில்லை.

ஆனால் இப்போதும் அதே போன்ற நிதானத்தைதான் ரஜினி கடைப்பிடிக்கிறார். இதுதான் நல்ல தலைவன் மற்றும் நிர்வாகிக்கு அடையாளம்.

இந்த விஷயத்தில் ரஜினி ஒரு ஞானி (முற்றும் உணர்ந்தவர் என்ற அர்த்தத்தில் சொல்கிறேன்!). அன்றைய வரவேற்புக்கு மயங்கிவிடவும் இல்லை, இன்றைய எதிர்ப்பு நிலைக்கு அஞ்சவும் இல்லை. எந்த மண்ணிலும் தவழ்ந்து, எத்தகைய மனிதர்களையும் தழுவிச் செல்கிற நதி மாதிரிதான் அவரது ஓட்டம்!

ரஜினியின் அரசியல் பிரவேசத்தில் ஏற்பட்ட தாமதம்தான் மக்கள் மனதில் அவர் மீதிருந்த நல்ல அபிப்பிராயத்துக்கு ஒரு தற்காலிகத் திரையைப் போட்டிருக்கிறது. அப்படியெனில் மக்கள் அவர்மீது வெறுப்பாக இருக்கிறார்களா என்றால் அப்படியும் இல்லை. இது வெறுப்புமில்லை, விருப்பும் இல்லை...

‘வந்தா வரட்டும்... பார்க்கலாம்’ என்ற ஜஸ்ட் லைக் தட் அணுகுமுறை இது!

ஆனால் மக்களின் இந்த மனநிலை மாறும். அவரைப் பற்றிய நல்ல அபிப்பிராயங்கள் மீது விழுந்துள்ள தற்காலிக திரை நிச்சயம் மறையும். அதற்கு உகந்த நேரம் இதுதான்!

ரஜினி எந்த முடிவை அறிவிப்பதாக இருந்தாலும் அதற்கு இதைவிட்டால் வேறு நல்ல சந்தர்ப்பம் கிடைக்குமா தெரியவில்லை.

'நான் அரசியலுக்கு வரவே மாட்டேன். குசேலன் படத்தில் நான் பேசிய வசனங்களே முடிவானவை' என அவர் அறிவித்துவிட்டாலும் கூட மக்கள் ஒன்றும் விமர்சிக்கப் போவதில்லை.

'பரவால்லய்யா... தில்லான ஆள் இவர். என்னதான் வருந்தி வருந்தி கூப்பிட்டாலும் அரசியல்.. கட்சியெல்லாம் தனக்கு ஒத்து வராதுங்கிறதுல தெளிவா இருக்காரே...' என்று மக்கள் பாராட்டுவார்கள்...

இதற்காக அவர் படத்தைப் பார்க்காமலும் இருக்கமாட்டார்கள். அரசியலில் தோற்றாலும் நடிப்பில் மரியாதைக்குரிய ஒரு உயர்ந்த இடம் ரஜினிக்குக் கிடைக்கும்.

ரசிகர்கள்தான் மனம் வெதும்பிப் போவார்கள். ச்சே... இதுக்காகத்தானா இவ்வளவு காலம் காத்திருந்தோம் என்று வெறுப்பின் விளிம்புக்குப் போவார்கள். அதுகூட எந்திரன் அல்லது சுல்தான் ரிலீஸ் வரைக்கும்தான்.

மனதுக்குள் நெருடலும் கோபமும் மிச்சமிருந்தாலும், தங்கள் அபிமான சூப்பர் ஸ்டாரின் படத்தை ஒரு ரசிகன் என்ற முறையில் நிச்சயம் மிஸ் பண்ண மாட்டார்கள். ரஜினி ரசிகர்களின் மனநிலை அப்படித்தான். ரஜினியும் விரும்பும் வரை சூப்பர் ஸ்டாராகவே இருக்கலாம்.
ஒருவேளை இந்த முறை அரசியலுக்கு வந்துவிட்டால் -

நிச்சயம் இது ஒரு பாதுகாப்பான பந்தயமாக அமையும் ரஜினிக்கு.

அலையின் வேகத்தோடு கடலோடுவதில் என்ன வீரமிருக்கிறது? அதே அலை எதிர் முகம் காட்டும் போது கடலோடுவதில் ஏதாவது விவேகமிருக்கிறதா? கப்பல் கவிழ்ந்து கதியற்றுப் போகவேண்டி வரும்.

ஆனால் சாதகமான அலையும் எதிர்ப்பலையும் இல்லாத ஒரு இயல்பான நிலையில் கடலோடுவதுதான் நிலையான வெற்றிகளைத் தரும். இலக்கை அடைய சற்று தாமதமானாலும் எதிராளிகளை சரியான வியூகமிட்டு வீழ்த்த போதிய அவகாசமும், அதற்குத் தோதான தெளிந்த மனநிலையும் இருக்கும்.

அப்படியொரு தருணம் இதுதான்!

ஆனால் இந்த முறையும் ரஜினி எந்த முடிவும் சொல்லாமல் தவிர்த்தால், அவருக்குத்தான் பல சங்கடங்கள் தோன்றும். கடந்த இருமுறைகளிலாவது மக்களின் அதிருப்தி அவருக்கு எதிராகத் திரும்பியது. ஆனால் இம்முறை மக்கள் மட்டுமல்ல, ரசிகர்களும் எதிராகத் திரும்பி விடும் அபாயமிருக்கிறது.

ரஜினி எப்போதும் விவேகமான முடிவுகளைத்தான் மேற்கொண்டிருக்கிறார். சிலர் அவரைக் குழப்பவாதி என்று வர்ணித்ததுண்டு. நிச்சயம் இல்லை. விவேகமுள்ள ஒரு தலைமைக்குரிய குணம் அவரிடம் உள்ளது. அதை எப்போது வெளிப்படுத்த வேண்டுமோ அப்போது வெளிப்படுத்தினால் போதும் என்றுதான் அவர் தனது நண்பர்களிடம் கூறிவந்திருக்கிறார்.

ஆகவே எந்த முடிவாக இருந்தாலும் ரஜினி அதைத் தயங்காமல் அறிவிக்க வேண்டிய தருணம் இதுவே... உரிய முறையில் இதைப் பயன்படுத்திக் கொண்டால் அவருக்கு மட்டுமல்ல, ஒரு சமூகத்துக்கே உயர்வு நிச்சயம்!

சரி...ஒருவேளை அரசியலுமில்லாமல், சினிமாவுமில்லாமல்... எல்லாரும் சொல்லிக் கொண்டிருப்பது போல சமூக நல இயக்கம் ஆரம்பித்தால், எத்தகைய வரவேற்பிருக்கும்?

நாளை அலசலாமே!

குறிப்பு: இதன் கடைசி பகுதிக்குச் செல்லும் முன் இரு நிகழ்வுகளைப் பதிய வேண்டியிருக்கிறது. எனவே ஒரு சின்ன இடைவெளி!
குறிப்பு: மேலும் படங்களுக்கு www.onlyrajini.com பாருங்கள்.

Thursday, September 25, 2008

இதுதான் ஒரு நல்ல மக்கள் தலைவனுக்குரிய குணம்!


ரஜினி இப்போது அரசியல் கட்சியை அறிவிக்கப் போகிறார்... அல்லது சமூக இயக்கம் தொடங்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு முன்னெப்போதுமில்லாத அளவுக்கு பெரிதாகிக் கொண்டே போகிறது.

சிலர் இந்த நிலையை 1996-ல் நிலவிய சூழலுடன் ஒப்பிடுகிறார்கள்... சில பத்திரிகைகளிலும் இந்த ரீதியிலான அலசல்கள் ஆரம்பமாகியுள்ளன.

அன்றைய சூழலில் செய்திக்காக ரஜினியின் பின்னாலேயே சுமார் 3 ஆண்டுகாலம் சுற்றியவன், அவரது அனைத்து பத்திரிகையாளர் சந்திப்புகளிலும் பங்கேற்றவன் என்ற முறையில் இது குறித்த என் பார்வை...

1996-ல் மக்கள் ஒரு நிஜமான அரசியல் மாற்றத்தை விரும்பினார்கள். அதற்கு ரஜினிதான் பொருத்தமான தலைமையைத் தருவார் என்றும் தீவிரமாக நம்பினர்.
அவருடைய ஒரு வார்த்தையை மட்டுமே மந்திரம் மாதிரி நம்பி அவர் பின்னால் ஓடிவரத் தயாராக இருந்தார்கள்.

அரசியல் கட்சிகள் பக்கமும் அவருக்கிருந்த செல்வாக்கு அபரிமிதமானது. தமிழ் மாநிலக் காங்கிரஸ் எனும் கட்சியைத் துவங்கிய மூப்பனார், அந்தக் கட்சிக்குத் தலைமை ஏற்க வருமாறு ரஜினியை ஒருமுறையல்ல 4 முறை பத்திரிகையாளர் சந்திப்புகளில் அழைத்தார்.
தனிப்பட்ட முறையிலும் ரஜினியை கட்சித் தலைமை ஏற்கும்படி மூப்பனார் எந்த அளவு வேண்டிக் கொண்டார் என்பதை சோ பலமுறை மேடைகளிலேயே கூறியது உங்களுக்கும் நினைவிருக்கும்.

டெல்லியிலோ, அன்றைய பிரதமர் நரசிம்மராவ் ரஜினி முதல்வராக ஒப்புக் கொண்டால், காங்கிரசுக்கு கூட்டணியே வேண்டாம். சில உதிரிக் கட்சிகளுடன் தனித்தே போட்டியிட்டு ஆட்சியைப் பிடித்து விடலாம் என்று கூறினார்.

இந்த அளவு தங்கத் தட்டில் வைத்து வழங்கப்பட்ட வாய்ப்பைத்தான் ரஜினி மறுத்தார். உலகில் எந்தத் தலைவருக்கும் கிடைக்காத வாய்ப்பு இது. வேறு நபராக இருந்திருந்தால்...

நினைக்கவே முடியவில்லை அல்லவா...

ஆனால் ரஜினி இந்தப் பதவிக்கும், அதை ஒரு வியாபாரமாகக் கொண்டு பணம் சம்பாதிக்கவும் என்றுமே விரும்பியதில்லை.

அவர் விரும்பியது ஒரு நல்ல ஆட்சி... அதை யார் தந்தால் என்ன? என்பதுதான் அவரது வாதம். அந்த நல்ல எண்ணத்தில் மக்கள் தந்த அரிய வரத்தை வேறு சிலரிடம் ஒப்படைத்தார். என்ன... அன்று அதைத் தரக் கூடாதவர்களிடம் தந்துவிட்டார். அதுதான் பிரச்சினையே!

அன்று ரஜினிக்கு நிலவிய செல்வாக்கைப் பார்த்து, நிச்சயம் அடுத்த எம்ஜிஆர் அல்லது அவரையும் தாண்டி ஒரு படிமேலே கூடப் போய்விடுவார் இந்த மனிதர் என்று நிருபர்களிடம் கமெண்ட் அடித்த ரகுபதி, ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், சாத்தூர் ராமச்சந்திரன் போன்றவர்கள் இன்னும்கூட அமைச்சர் என்ற அந்தஸ்தை கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அன்று மட்டும் ரஜினி மந்திரிசபை அமைத்திருந்தால், இவர்கள் ஒருபோதும் கோட்டைக்குப் போயிருக்க முடியாது...

இதற்காக, கருணாநிதி உள்ளிட்டவர்கள் ரஜினிக்குப் பட்டிருக்கும் நன்றிக்கடன் அடுத்த ஜென்மத்திலும்கூட தீராதது.

உண்மை... இது மிகைப் புகழ்ச்சியில்லை. இந்த விவரங்கள் நம்மில் பலருக்கும் நன்கு தெரியும், எனவே மேம்போக்காக இவற்றை நினைவுபடுத்துகிறேன்.

அன்றைய சூழல் இது... இன்றைக்கு...?

தொடரும்!

Monday, September 22, 2008

எந்திரன் : EXCLUSIVE...!!சீரியஸிலிருந்து ஜில் சினிமாவுக்கு வருவோம்...

இதுவரை கமர்ஷியல் தளங்களில் எதிலும் வராத எக்ஸ்க்ளூசிவ் எந்திரன் படங்கள் இதோ...

இதோ சூப்பர் ஸ்டாரின் எந்திரன் - தி ரோபோவின் அட்டகாசமான எக்ஸ்க்ளூசிவ் ஸ்டில்கள்.
உடனே ஒட்டு வேலைோ என சந்தேகப்பட வேண்டாம்.

படங்கள் நிஜமானவைதான் என இவற்றை அனுப்பி வைத்தவர்கள் கற்பூரம் அணைத்துச் சத்தியம் செய்யவும் தயாராக இருக்கிறார்கள்.

பெருநாட்டின் மாச்சு பிக்கு பின்னணியில் இளமை ததும்பும் ரஜினியும், அழகு தேவதை ஐஸ்வர்யா ராய் பச்சனும் ஆடிப் பாடும் முதல் டூயட்டின் இரு காட்சிப் பதிவுகள்.


திரை வடிவத்தை நினைத்தாலே... ஜிவ்வென்று மனம் பறக்கிறதல்லவா...

இவை அதிகாரப்பூர்வமான ஸ்டில்களா... படத்தில் இடம்பெறுமா என்பதையெல்லாம் ஷங்கர் வந்து சொன்னால்தான் உண்டு.

ஆனால் இந்தப் படத்தின் ரஜினியின் ஹேர் ஸ்டைல், அவரது உடைகள் எல்லாமே பிரமிக்க வைக்கின்றன.

எப்படியும் இன்னும் ஒரு வாரத்துக்கு தாங்கும் இந்த ஸ்டில்கள்!

ஏன்? ஏன்? ஏன்?


விஜய்காந்துக்கு எதிராக திடீரென்று ஏன் இத்தனைப் பதிவுகள்...
திடீரென்று திமுகவுக்கு ஆதரவாகக் குரல் ஒலிக்கிறதே என்றெல்லாம் நண்பர்கள் பின்னூட்டங்களில் கருத்துப் பதிந்துள்ளார்கள்.

அவர்களுக்கு ஒரு விளக்கம்!

நான் திமுக அனுதாபி இல்லை.

ரஜினி பொது வாழ்க்கைக்கு வரவேண்டும் என ஏன் ஆசைப்படுகிறோம்... என்பதற்கான விளக்கங்கள்தான் நீங்கள் இங்கே படித்த விஜய்காந்த் - வடிவேலு மோதல்கள் குறித்த பதிவுகள்.

சக நடிகர் ஒருரால் தாக்கப்பட்டவுடன் நான் அரசியலுக்கு வந்து அவரை தோற்கடிப்பேன் என காமெடியன் ஒருவரே இத்தனை உணர்ச்சிவசப்படுகிறார்.

இந்த தாக்குதலுக்குக் காரணமாகக் காட்டப்படும் கதாநாயகனோ, இது கலைஞரின் வேலை என்று, அரசியல் மற்றும் பதவியிலேயே குறியாக இருக்கிறார்.

வடிவேலுவுக்கும் விஜய்காந்துக்குமாவது பகை இருக்கிறது... ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டிக் கொள்ள முகாந்திரமுள்ளது.

ஆனால் சம்பந்தமே இல்லாமல் அரசியல் என்ற ஒன்றை மட்டுமே காரணமாக வைத்து கலைஞர் மீது, அதுவும் ஒரு மாநில முதல்வர் மீது விஜய்காந்த் குற்றம் சாட்டுவது எத்தனை பெரிய அயோக்கியத்தனம்?

வடிவேலு வீட்டு மீது கல்லெறியச் சொன்னதும் கலைஞர்தான், பின்னர் வடிவேலுவை போலீசில் புகார் தரச் சொன்னதும் கலைஞர்தான் என்று சொல்ல வருகிறாரா விஜய்காந்த்?
அல்லது, வடிவேலுவே தன்வீட்டு மீது கல்லெறிந்து கொண்டார் என்கிறாரா?

கலைஞர் ஒரு அரசியல்வாதி மட்டுமல்ல... மாநில முதல்வர். அவருக்கு எதிராக விஜய்காந்த் இப்படிக் குற்றம் சாட்ட என்ன ஆதாரம் வைத்திருக்கிறார்?

மாநில முதல்வர் மீது ஆதாரமில்லாமல் இப்படியொரு குற்றச்சாட்டைக் கூறியதற்காக இவரை இப்போதே சிறையில் தூக்கிப் போட சட்டம் இடம் தருகிறதே...
இப்படிப்பட்ட அரை வேக்காடுகளைத்தான் நாளைய நம்பிக்கை நட்சத்திரம் என்றெல்லாம் சிலர் தூக்கிப் பிடித்து வருகிறார்கள். அதை நம்மால் முடிந்தவரை எக்ஸ்போஸ் செய்யவே இத்தனை பதிவுகள்.

ஆனால்-

ரஜினி?

ஒரு கண்ணியமான மனிதர். நல்லவர். தனிப்பட்ட காரணங்களுக்காக உணர்ச்சிவசப்பட்டு மக்களைத் தூண்டிவிடாதவர். பாபா படத்துக்கு நேர்ந்தது போல ஒரு நிலை வடிவேலுவுக்கோ விஜய்காந்துக்கோ நேர்ந்திருந்தால்... சற்று கற்பனை செய்து பாருங்கள்.

ஆனால் ரஜினி அப்போதும் நிதானம் காத்தார். ரசிகர்களைத் தூண்டிவிட்டு வன்முறை செய்யச் சொல்லவில்லை. ராமதாஸ் வீட்டு மீது கல்லெறியச் சொல்லவில்லை.
அல்லது குசேலனை இப்படி குறிவைத்து தாக்கினார்களே என்று பத்திரிகைகளே வாங்காதீர்கள் என தன் ரசிகர்களுக்கு கட்டளையிடவில்லை அவர்.

ரஜினி என்ற நல்ல மனிதர்தான் இந்த நாட்டு அரசியலுக்கு இப்போது தேவை என்பதாலேயே இங்கே இவற்றைக் குறிப்பிடுகிறேன். மற்றபடி, ரஜினியோடு வேறு யாரையும் ஒப்பிடவும் முடியாது, ஒப்பிடவும் கூடாது.

பதினைந்து ஆண்டுகளாக ஒரு மாநிலத்தின் பெரும்பான்மை மக்களே அரசியலுக்கு வா... வா... என வருந்தி வருந்தி அழைத்தும், இன்னமும் அமைதி காக்கிறாரே... அந்தப் பக்குவம் வேறு யாருக்கு வரும்?

சினிமா, அரசியல் இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டு மக்களுக்கு பெரிய அளவில் நன்மை செய் வேண்டும் என்ற ஒரு லட்சியம் ரஜினிக்கு இருக்கிறது. தமிழ் மக்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும்... விஜய்காந்த் மாதிரி சில்லறை அரசியல்வாதிகளைப் புறம் தள்ள வேண்டும்!

'விஜய்காந்தை முதல்வர்னு வாழ்த்தணுமாம்'!!


விஜயகாந்த்துக்கு எதிராக என்னை யாரும் தூண்டி விடவில்லை. இப்போதும் சொல்கிறேன், அவரை விட எனக்கே மக்கள் செல்வாக்கு அதிகம். இதை நான் வருகிற தேர்தலில் அவருக்கு எதிராகப் போட்டியிட்டு, அவரைத் தோற்கடித்து ஜெயிப்பேன் என்கிறார் வடிவேலு.

முதல்வர் கருணாநிதியின் தூண்டுதலின் பேரில்தான் வடிவேலு புகார் கூறுகிறார், முதல்வருடைய விளையாட்டில் வடிவேலு பகடைக்காயாகி விட்டார் என்றெல்லாம் காலையில் வடிவேலு மீது குற்றம் சாட்டியிருந்தார் விஜய்காந்த்.

ஆனால் வடிவேலுவோ இதைக் கேட்டு இன்னும் கொதித்துப் போய்விட்டார்.

சைதாப்பேட்டை கோர்ட்டில் இன்று ஆஜராகி விஜயகாந்துக்கு எதிராக சாட்சியம் அளித்த வடிவேலு (முந்தைய வழக்கில்) செய்தியாளர்களிடம் பேசுகையில்,
அடிச்சது என் வீட்டை. என் பொண்டாட்டி புள்ளைங்களுக்கு என் கண்ணெதிரே வந்த ஆபத்து இது. இதைப் பார்த்துட்டு நான் சும்மா இருப்பேனா... இதை வெளியே சொன்னா முதலமைச்சர் தூண்டுதல்னு சொல்றதா... நல்லாருக்கு நியாயம்.

நான் யாருடைய தூண்டுதலின் பேரிலும் புகார் கூறவில்லை. நடந்ததை மக்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள். என்னோட பிரச்சினையை நான் சொல்றேன். அதுக்குக் காரணம் அவர்தான்னு எனக்கு நல்லா தெரியும்.

எனக்கு எல்லா மக்களுடைய ஆதரவும், எல்லா ஹீரோக்களின் ஆதரவும், எல்லா ஹீரோக்களின் ரசிகர்களின் ஆதரவும் உள்ளது. நான் தமிழக மக்களின் வீட்டுப் பிள்ளை. அவர்களுடைய ரேஷன் கார்டுகளில் மட்டும்தான் எனது பெயர் இல்லை. மத்தபடி அவங்க குடும்பத்துல நானும் ஒருத்தன்.

நான் அனைவரையும் சிரிக்க வைக்கும் ஒரு ஜோக்கர். எல்லாக் கட்சிக்கும் பொது நான். எனவே யாருடைய தூண்டுதலின் பேரிலும் நான் எதையும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

விஜய்காந்தை முதல்வர்னு சொல்லணுமாம்!!

மக்களிடம் விஜயகாந்தை விட எனக்குத்தான் செல்வாக்கு அதிகம். நிச்சயமா அடுத்த தேர்தல்ல நான் அவரை எதிர்த்து நிற்பேன். அவர் எங்க நின்னாலும் அவரை தோற்கடிப்பேன். இதுல எந்த மாற்றமும் கிடையாது.

இதுக்கெல்லாம் காரணம் அவரோட 4 படங்கள்ல நான் தொடர்ந்து நடிக்க மறுத்ததுதான். அவரை முதல்வர்னு வாழ்த்திப் பேசணும்னு தருமபுரி, கஜேந்திரா, சபரி, பேரரசு படங்கள்ல கேட்டாங்க. நான் நடிக்க மாட்டேன்னு சொல்லிட்டேன். நான் யாராயும் அப்படியெல்லாம் சொல்ல முடியாது. எனக்கு எல்லாக் கட்சித் தலைவர்களும் நண்பர்கள்தான்...!, என்கிறார் வடிவேலு உறுதியாக.

இது எப்படி இருக்கு!

எதிர்பார்த்த மாதிரியே திமுக மீது பழிபோட்ட விஜய்காந்த்!


இப்போதுதான் விஜய்காந்த் பிரஸ் மீட் முடிந்தது...

இதற்கு முந்தைய ஒரு கட்டுரைக்கு வந்த ஒரு பின்னூட்டத்துக்கு பதிலளித்தபோது, நிச்சயம் இது திமுக – அதிமுக சதி என்றுதான் விஜய்காந்த் கூறுவார் என கூறியிருந்தேன்.

அதில் சின்ன மாற்றம்... திமுகவின் திட்டமிட்ட சதி இது என விஜய்காந்த் தெரிவித்துள்ளார். அவருக்குத் தெரிந்த அரசியல் அது. அவரது இந்தப் பொய்யை வலுவாக, உரத்துச் சொல்ல பேருதவி புரிந்துள்ளது சன் நெட்வொர்க், தனது நேரடி ஒளிபரப்பு மூலம்!

வடிவேலு என்ன, கருணாநிதியே எதிர்த்து நின்றாலும் நான் போட்டிக்குத் தயார் என கொக்கரிக்கிறார் விஜயகாந்த் தனது பேட்டியில். எல்லாம் நேரம்!

பேட்டிக்கு வந்திருந்த நிருபர்கள் எல்லாரும் நமுட்டுச் சிரிப்புடன் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். காரணம் இந்த பதில் அவர்கள் முன்கூட்டியே எதிர்பார்த்த ஒன்றுதானே!

இதோ... விஜய்காந்த் பேட்டியின் சில பகுதிகள்...!

அப்போ எம்ஜிஆர்... இப்போ நான்!? (கொடுமை... கொடுமை)

இது ஆளுங்கட்சியின் தூண்டுதலின் பேரில் நடந்ததுள்ளது. இது கருணாநிதிக்கு கை வந்த கலை. அப்போது எம்.ஜி.ஆருக்கு எதிராக இப்படித்தான் செய்தார். எம்.ஜி.ஆர். வளர்ந்தது, கட்சியில் அவரது செல்வாக்கு வளர்ந்தது அவருக்குப் பிடிக்கவில்லை. சேலத்தில் ராஜேந்திரன் தாக்கப்பட்டார். பிறகு சுகுமாரன் வழக்கு. இப்படி நிறைய பொய் வழக்குகளைப் போட்டவர் கருணாநிதி. இப்போது எனக்கும் அதே மாதிரி செய்கிறார்.

கருணாநிதியின் திட்டத்திற்கு வடிவேலு பகடைக் காயாகி விட்டார். அவ்வளவுதான். அதை அவருடைய பேச்சுக்களைப் பார்த்தாலே தெரியும். ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை அவர் மாறி மாறிப் பேசுகிறார்.

முதலில் கல்லால் அடித்தார்கள் என்றார், பிறகு 20 பேர் வந்தார்கள் என்றார், பிறகு 30 பேர் வந்தார்கள், ஒரு பைக்கில் நான்கு பேர் வந்தனர் என்றார். பைக் நம்பரைப் பார்க்கவில்லை என்றார். அதாவது ஆளுங்கட்சியினர் சொல்லிக் கொடுக்கக் கொடுக்க அதன்படி பேசுகிறார். தப்பு தப்பாக சொல்கிறார்.

கடைசியில் மாலை 6 மணிக்கு மேல், ஆளுங்கட்சியினர் சொன்னார்களோ என்னவோ, விஜயகாந்த் தூண்டுதல்தான் காரணம் என்கிறார்.

என் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது வன்முறையான கேஸ், தவறான கேஸ்.

சக நடிகரை தாக்கலாமா என்கிறார். அவர் சக நடிகர் என்றால், எனது தங்கை கணவர் இறந்தபோது நான் இல்லாத நிலையில், அவர் நல்லது செய்திருக்கலாம். அதை செய்யவில்லை. பிரச்சினைதான் செய்தார்.

அடுத்த மாதம் நடக்கப் போகும் தேமுதிக இளைஞர் அணி மாநாட்டைத் தடுக்கவும், கெடுக்கவுமே இந்த சீப்பான நடவடிக்கையில் இறங்கியுள்ளார் கருணாநிதி. எனது கட்சி வளருகிறது என்று அவருக்கு கோபம்.

நேற்று காலையில் காங்கிரஸுக்கு ஆட்சியில் பங்கு கொடுக்கலாம் என்றார். மாலையில் புதுச்சேரியிலும் பங்கு கேட்போம் என்கிறார். எப்போது பார்த்தாலும் அவருக்கு பதவி ஆசைதான். பதவி ஆசை அவரை விடாது (இவருக்கும் இவர் மனைவி மச்சானுக்கும் ஆசையே கிடையாது பாருங்க...) .

முதலில் தமிழ்நாட்டு காவல்துறையில் உள்ள திமுக போலீஸ், அதிமுக போலீஸ் ஒழிய வேண்டும். காவல்துறையினரின் போக்கையெல்லாம் பார்த்து விட்டு, காக்கி டிரஸ் போட்டு நடிக்கவே கூடாது என்று முடிவெடுக்கும் நிலைக்கு நான் வந்து விட்டேன். என்ன பேசினாலும் கேஸ், எத்தனை பொய் கேஸ்.

என்னை எப்படி ஒழிக்க முடியும் என்றுதான் யோசித்துக் கொண்டிருக்கிறார். என் வீட்டைச் சுற்றி போலீஸ். நல்லதைச் சொல்லி அவரால் ஓட்டு வாங்க முடியாது. எல்லாமே ஊழல். எல்லாமே பொய்க் கேஸ். இதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்.

கருணாநிதியே போட்டியிட்டாலும் கவலை இல்லை!

வடிவேலு அரசியல் காழ்ப்புணர்ச்சி என்கிறார். தேர்தலில் நிற்பேன் என்கிறார். யார் வேண்டுமானாலும் நிற்கலாம், இது ஜனநாயக நாடு. கருணாநிதியே என்னை எதிர்த்து நின்றாலும் நான் பயப்பட மாட்டேன். எனக்கு தெரியும் எப்படி தேர்தலை சந்திக்க வேண்டும் என்று.

இந்த அரசுக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் ஓய மாட்டேன். தைரியத்தை சோதித்துப் பார்த்தால் அது முடியாது. நான் தைரியமானவன். மக்கள் பிரச்சினைகளுக்காக உள்ளே தூக்கிப் போட்டால் தைரியமாக போவேன்(தூக்கி உள்ளே போடுங்கப்பா முதல்ல... எத்தை நாள் தாக்குப்பிடிக்கும் இவர் கட்சி பார்க்கலாம்!)

காவல்துறை நல்லவர்களுக்காக பாடுபட வேண்டும். கெட்டவர்களுக்குத் துணை போகாதீர்கள். அடுத்த ஆட்சி மாறினால், நீங்கள் எங்கே போய் விழுவீர்கள் என்று தெரியாது. அத்தனையும் தூசு தட்டி எடுக்கப்படும். அப்போது நீங்கள் மாறித்தான் ஆக வேண்டும். மக்கள் வரிப்பணத்தில் நீங்கள் சம்பாதித்த காசை திரும்ப வாங்குவோம்.

இப்போது எனது பேச்சை மக்கள் பார்க்கக் கூடாது, கேட்கக் கூடாது என்பதற்காக அனைத்து மாவட்டங்களிலும் பவர் கட் (!!) என எனக்கு செய்தி வந்துள்ளது. இதற்குப் பெயர்தான் சர்வாதிகாரம். இதுதான் சர்வாதிகார ஆட்சி என்றார் விஜயகாந்த்.

ரெம்பத்தான் கண்ணைக் கட்டுதே... என்கிறீர்களா...

வடிவேலு சொன்னதைத்தான் நானும் இங்கே சொல்ல வேண்டியிருக்கிறது.

இன்னும் ஆட்சியின் அருகில்கூட வரவில்லை... அதற்குள் என்னமா சவுண்ட் விடுறார்... அடுத்த தேர்தல்ல இவருக்கு கூடுதலா ஒரு சீட் கெடச்சா கூட தமிழ் மக்களுக்கு ரொம்ப இருட்டான காலமாயிடும் போலருக்கே!

விஜய்காந்த் ஜெயிச்சா... நாடு தாங்காதுண்ணே...! – இது வடிவேலு வெடி!!


ஒரு இடத்தில் ஜெயித்ததற்கே இந்த ஆளு (விஜயகாந்த்) இந்த பாடுபடுத்துறாரே... நாளைக்கு பத்து இடத்தில் ஜெயிச்சிட்டா இந்த நாடு என்னாகுமோன்னு பயமா இருக்குண்ணே... அவருக்கு மட்டும்தானா மக்கள் செல்வாக்கு... எனக்கும்தாண்ணே இருக்கு. நான் நின்னா ஓட்டுப்போட மாட்டாங்களா நம்ம மக்கள்... இப்ப சொல்றண்ணே... அவர் எந்தத் தொகுதியில் போட்டியிட்டாலும் நான் அவரை எதிர்த்துப் போட்டியிடுவேன். நானா, விஜயகாந்த்தா பார்த்துடுவோம்ணே...

-விஜய்காந்த் தொண்டர்களின் வன்முறைத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட வடிவேலு அளித்த பேட்டியின் ஒரு பகுதி இது.

நடிகர் வடிவேலுவுக்கும், விஜயகாந்த்துக்கும் இடையே கடந்த சில வருடங்களாகவே கருத்து வேறுபாடுகளும், அதுதொடர்பான மோதல்களும் இருந்து வருவது தெரியும்தானே...

சில மாதங்களுக்கு முன்பு விஜயகாந்த் வீட்டுக்கு வந்தவர்கள், வடிவேலு அலுவலகம் காரை நிறுத்தியது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே கடும மோதல் ஏற்பட்டு, அதில் வடிவேலு கடுமையாக தாக்கப்பட்டார்.

இதுதொடர்பாக போலீஸில் விஜயகாந்த் மேலாளர் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்கு சைதாப்பேட்டை கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் இன்று வடிவேலு சாட்சியம் அளிக்கவுள்ளார்.

இந்த நிலையில் நேற்று காலை 50-க்கும் மேற்பட்டோர் 20-க்கும் மேற்பட்ட பைக்குகள், ஆட்டோக்களில் சாலிகிராமத்தில் உள்ள வடிவேலு வீட்டுக்கு வந்தனர்.

பின்னர் வடிவேலு வீட்டின் மீது கொலை வெறித்தாக்குதலை மேற்கொண்டனர். வீடு மற்றும் அலுவலகம் மீது சரமாரியாக பெரிய பெரிய கற்களை வீசி அடித்ததில் வீட்டின் கண்ணாடி ஜன்னல்கள், வீட்டின் வரவேற்பரையில் இருந்த ஷோகேஸ் ஆகியவை உடைந்து சிதறின.

வீட்டுக்குள் இருந்தவர்கள் மீதும் கற்கள் விழுந்ததில் வடிவேலு வீட்டினரில் ஒருவர் காயமடைந்ததாக தெரிகிறது. அதிர்ஷ்டவசமாக வடிவேலு உள்ளிட்டோர் உயிர் தப்பினர்.

இந்த கொலை வெறித் தாக்குலைப் பார்த்து அந்த தெருவே பரபரப்பாகியது. அனைவரும் தெருவில் கூடிவிட்டனர். சிறிது நேர தாக்குதலுக்குப் பின்னர் அந்த கும்பல் வந்த வண்டிகளில் திரும்பி விட்டது.

போலீஸாருக்குத் தகவல் போய் அவர்கள் விரைந்து வந்தனர்.

'எந்தக் கோட்டையைப் பிடிக்கப் போகிறார்?'

நடந்த சம்பவம் குறித்து வடிவேலு இப்படிக் கூறுகிறார்:

20க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களில் வந்தனர். வந்தவுடன் கற்களை எடுத்து வீட்டின் மீதும், அலுவலகம் மீதும் சரமாரியாக வீசினர். தொடர்ந்து வீசிக் கொண்டே இருந்தனர். பக்கத்து வீடுகளிலும் போய் கற்கள் விழுந்தன.

என் தலைவனை எதிர்த்து விட்டு வாழ்ந்து விடுவாயா என்று கோபத்துடன் கூறியபடி கற்களால் தாக்கினர்.

நான் ஒரு நகைச்சுவை நடிகன். என்னை தாக்கி விட்டு எந்தக் கோட்டையை இவர் பிடிக்கப் போகிறார் என்று தெரியவில்லை. என்னை அடித்துதான் இவர் கோட்டையைப் பிடிக்க வேண்டுமா? அந்த அளவு வீக்கான பார்ட்டியா இவரு...

ஒரு இடத்தில்தான் ஜெயித்திருக்கிறார். அதற்கே இப்படியா? என்னை எதற்காக குறி வைக்கிறார் என்று தெரியவில்லை. கடந்த ஒரு வருடமாகவே என்னை தாக்கி வருகிறார்கள். பலமுறை கொலை மிரட்டல்கள் விடுத்துள்ளனர். இதையெல்லாம் நான் வெளியில் சொல்லாமல் இருக்கிறேன்.

ஒரே எதிரி... அது விஜய்காந்த்தான்!

நான் காமெடி நடிகன். ரவுடி அல்ல. ஜனங்களை சிரிக்க வைப்பது மட்டுமே எனது தொழில். ஜனங்கள்தான் எனது கடவுள். கல் வீசியவர்களுக்கும், அதைத் தூண்டியவர்களுக்கும் மக்கள் சரியான பாடம் கற்றுக் கொடுப்பார்கள்.

எனக்கு இந்த உலகிலேயே ஒரேயொரு எதிரிதான் இருக்கிறார். வேறு யாரும் எனக்கு எதிரிகள் இல்லை. அஜீத் படத்தை வைத்திருந்தார்கள் என்று கூறுகிறார்கள். அது திசை திருப்பும் செயல்.

நானா, விஜயகாந்த்தா பார்த்து விடுவோம்ணே!

விஜயகாந்த்தான் என்னைக் கொலை செய்ய ஆளை அனுப்பியுள்ளார். கடந்த ஒரு வருடமாகவே இதை அவர் செய்து கொண்டிருக்கிறார்.

மக்கள் செல்வாக்கு என்று நீ கூறுவாயானால் எனக்கும்தான் மக்கள் செல்வாக்கு இருக்கிறது. அடுத்த தேர்தலில் நீ எங்கே வேண்டுமானாலும் போட்டியிடு. நான் உன்னை எதிர்த்துப் போட்டியிடுகிறேன். மக்கள் செல்வாக்கு எனக்கா, விஜயகாந்த்துக்கா என்று பார்த்து விடுவோம்ணே...

நீ ஒரு கட்சியின் சார்பில் போட்டியிடுகிறாய். நான் சுயேச்சையாக போட்டியிடுகிறேன். அத்தனை கட்சிகளின் ஆதரவுடனும் உன்னை எதிர்த்துப் போட்டியிடுவேன். பார்த்து விடலாம்.

எம்ஜிஆர் பேரச் சொல்லக்கூட தகுதியில்ல!

என்னை ஆள் வைத்து அடிச்சீல்ல, உனக்கு எந்தத் தகுதியும் இல்லை. நான் உன்னை எதிர்த்துப் போட்டியிடுகிறேன். அதில் நீ ஜெயித்து விட்டால் இந்த தமிழ் சினிமாவை விட்டே விலகி விடுகிறேன்.

ஒரு இடத்தில் ஜெயிச்சதுக்கே இந்தாளு இந்த பாடு படுத்துறாரே..., நாளைக்கு பத்து இடத்தில் ஜெயிச்சுட்டா இந்த நாடு என்னாகுமோன்னு பயமா இருக்குண்ணே...

இந்த லட்சணத்துல இந்தாளு எம்ஜிஆர் பெயரையெல்லாம் எந்த தகுதில உபயோகப்படுத்துறார்னே தெரியலயே...உண்மையில அந்த புரட்சித் தலைவரோட பெயரைச் சொல்லக்கூட இந்தாளுக்குத் தகுதியில்ல!!”

இதற்காகத்தானே ஆசைப்பட்டீர்கள் தமிழ்ப் பெருங்குடி மக்களே...!


விஜயகாந்த் நடிப்பு அல்லது அரசியல் குறித்து இதுவரை நமக்கு பெரிதாக எந்த அபிப்பிராயமும் இருந்ததில்லை. இரு கழகங்களின் மீதுள்ள வெறுப்பு, ரஜினி வருவார் என்ற நம்பிக்கை தாமதமாகிக் கொண்டிருப்பதால் ஏற்பட்ட சலிப்பு போன்றவைதான் மக்களுக்கு அவர் மீதான ஆர்வமாக மாறியிருக்கிறது என்பதே நடுநிலையாளர்கள் கருத்து (அது யார் நடுநிலையாளர்கள் என்கிறீர்களா... ஒட்டுப் போடக் கூட போகாமல் ஏஸி அறைக்குள் அல்லது மரத்தடிகளில் பஞ்சாயத்து பேசும் பார்ட்டிகள்!).

களத்தில் இறங்கி ஓட்டுப் போடும் மக்களின் நாடித் துடிப்பை அறிய ஊர் ஊராய்ச் சுற்றும் என்னைப் போன்றவர்கள் பெரும்பாலானோரின் கருத்து இதற்கும் ஒருபடி கீழ்... தினமலர், சன்டிவி, தினகரன், மாலைமுரசு போன்றவை கொஞ்சம் மூடிக்கிட்டிருந்தா இந்த ஆள் இருக்கிற இடமே தெரியாது..., என்பதே அந்த அபிப்பிராயம்.

ஆனால் சில பத்திரிகைகளும், கருத்துப் பரப்பிகளும் விஜய்காந்த்தான் இந்த மாநிலத்துக்கு நல்ல மாற்று என்பது போன்ற விஷ வித்தை விதைக்க முயற்சித்து வருகிறார்கள்.

அவர்களுக்குத் தெரியாது... கலைஞரை விட மோசமான குடும்ப அரசியல், ஜெயலலிதாவை விட கொடுமையான அதிகார வெறி இரண்டுக்கும் சொந்தக்காரராகத்தான் விஜய்காந்த் திகழ்வார் என்பது.

விஜய்காந்த் சமீபத்திய ஒரு பிரஸ்மீட்டில் சொன்னது:

சார், உங்க கொள்கை என்ன?

மக்கள் நல்லா வாழணும்... இதாங்க என் கொள்கை..!

அதான் எப்படி நல்லா வாழ்வாங்க... என்ன திட்டமிருக்கு?

அதெல்லாம் ஆட்சிக்கு வந்ததும் பார்த்துக்கிடுவோம்...

கட்சியில உங்க மனைவி, மச்சினன் ஆதிக்கம் அதிகமிருக்கே...

நீங்க திமுக ஆளா...

ஏன்... நடுநிலையாளர் யாரும் இப்படிக் கேட்க மாட்டார்களா...

பாருங்க... என் மனைவிக்கு, மச்சின்னுக்கு என் மேல அளவு கடந்த பாசம், அக்கறை இருக்கு... அப்படிப்பட்டவங்க என் கட்சி மேலயும் அதே அளவு அக்கறை காட்றதுல உங்களுக்கு என்ன கஷ்டம்!

அடக் கடவுளே... இப்படி ஒரு ஆளுக்காக வரிந்து கட்டிக் கொண்டு வேலை பார்க்கவும் நாலுபேர் இருக்கிறார்களே என்பதுதான் வேதனை.

இந்த நபருக்காக திமுகவை, பாமகவை திட்டுவது எவ்வளவு தவறானது பாருங்கள். கலைஞராவது, தன் கடைசி காலம் நெருங்கிவிட்டதை அறிந்தும், தன் மகனுக்கு முடி சூட்ட முடியாமல், எதிரிகள் விமர்சிப்பார்களே என்ற தயக்கத்தில் அமைதி காக்கிறார். ராமதாஸ் இன்னும் கூட பதவியை நேரடியாக அனுபவிக்காமல் தனக்கு வேண்டப்பட்ட, குடும்ப உறுப்பினர்களுக்குக் கொடுக்கிறார்.

ஆனால் இந்த விஜய்காந்துக்கு எந்த பொது நல நோக்கமும் கிடையாது. அவரது ஒரே குறி, பதவி. ஒரு வேளை தப்பித் தவறி கிடைத்துவிட்டால், அதை மனைவி, மச்சான் கையில் ஒப்படைத்துவிட்டு குனியமுத்தூர் தோப்பில் குறிகேட்டபடி உட்கார்ந்துவிடுவார்.

ஆண்டாள் அழகர் கல்லூரி மாதிரி... ‘பிரமலதா - சுதீஷ் தமிழ்நாடு அரசு’ என்ற நிறுவனத்தை உருவாக்கவே அவரும் அவர் மனைவியும் பேராசைப் பிடித்து அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

இதற்கு ரஜினி ரசிகர்கள் ஆதரவு கிடைக்காதா என்ற ஏக்கத்துடன் உள்ளடி வேலைகள் பலவற்றில் இறங்கிக் கொண்டிருக்கிறார் விஜய்காந்த்.

இது ஒரு பக்கமிருக்கட்டும்...

இவரது ஆட்களுக்கும் நகைச்சுவை நடிகர் வடிவேலுவுக்கும் ஏற்பட்டுள்ள பிரச்சினை இருக்கிறதே... அது ‘பிரிட்டிஷ் பிரச்சினை’யாகிவிட்டது இப்போது!

இருவர் வீடும் ஒரே தெருவில், அதுவும் எதிரெதிரில்தான் அமைந்திருக்கிறது.
வடிவேலு தன் படங்களில் தொடர்ந்து நடிக்க மறுப்பது ஒரு பக்கம் கோபமென்றால், ‘பெரிய தலைவராகி’விட்ட பின்னும் தன்னிடம் பணிய மறுப்பதில் கட்டுக்கடங்காத கோபம் விஜய்காந்துக்கும் அவர் மச்சான் சுதீஷுக்கும்.

இந்தக் கோபம்தான் வடிவேலு மற்றும் விஜய்காந்த் ஆதரவாளர்களிடையே பெரும் மோதலாகி, இப்போது விஜய்காந்த் ஆட்கள் வடிவேலு வீட்டுக்குள் நள்ளிரவில் கல்லெறியும் கேவலம் வரை கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது.

ஏற்கெனவே ஏற்பட்ட பழைய மோதல் கேஸே இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையிலிருக்கிறது அதற்குத்தான் நாளை சாட்சி சொல்ல கோர்ட்டுக்குப் போகத் தயாராக இருந்தார் வடிவேலு.
இதைத் தடுக்க சினிமா பாணியில் ஒரு நாள் முன்பே கல்லெறிந்து மிரட்டியிருப்பதாக வடிவேலு கூறியிருக்கிறார்.

‘என்னைப் பணிய வைக்க அவரும் (விஜய்காந்த்), அவரோட ஆட்களும் எவ்வளவோ பண்ணிட்டாய்ங்க... ஆனா நான் என் பாட்டுக்கு வேலைய பார்த்துக்கிட்டுப் போயிட்டே இருக்கேன். இப்ப கல்லக் கொண்டெறியற லெவலுக்கு வந்திருக்காய்ங்க... இந்தக் காமெடியனோட மோதி கோட்டைக்குப் போயிடலாம்னு கனவு காணுறாரே... எவ்வளவு கேவலம் பாருங்க..., என்கிறார் வடிவேலு. காமெடியானாக இருந்தாலும் அவர் வார்த்தைகளில் எவ்வளவு பொருள் பொதிந்துள்ளன பாருங்கள்!

இப்போது வடிவேலு கொடுத்த புகாரின் அடிப்படையில் விஜய்காந்த் உள்ளிட்ட 30 பேர் பேர் மீது போலீசார் வழக்குத் தொடர்ந்திருக்கிறார்கள். இதில் விஜய்காந்த் கைதாகவும் வாய்ப்பிருக்கிறது.

உடனே கலைஞர் அரசு பழிவாங்குவதாக விஜய்காந்த் சீன் கிரியேட் பண்ணும் வாய்ப்பும் ஏராளமிருக்கிறது. இதை வைத்தே ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்று அவர் மனைவி மந்திரம் ஓதி, கேப்டனை (இதென்ன படிச்சி வாங்கின பட்டமா... இல்ல மிலிட்டரில டப்பு டப்புனு சுட்டு வாங்கின ரேங்கா...!) களமிறக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை...

இதையெல்லாம் யோசிக்க ஏது நம்மாளுங்களுக்கு நேரம்... இப்படிப்பட்ட ஏமாற்றுப் பேர்வழிகள், எம்ஜிஆர் பெயரை தவறாகப் பிரயோகிக்கும் கறுப்பு ஆடுகள் வரவேண்டும் என்பதற்காகத்தானே அவர்களும் காத்துக் கிடந்தார்கள்... வேணும்... நல்லா வேணும்!

Sunday, September 21, 2008

சிவாஜியை மிஞ்சியதா தசாவதாரம்?!


கமல்ஹாசனின் தசாவதாரம் இன்று 100-வது நாள் விழா கொண்டாடுகிறது. அதைப் பற்றி என்ன சொன்னாலும் விமர்சனமாகிவிடும் என்பது தெரியும். இருந்தாலும், சொல்லாமல் இருக்க முடியாது நம்மால்.

ஆளவந்தானுக்குப் பிந்தைய கமல் படங்களில் ஹேராம், விருமாண்டி போன்றவை பேசப்பட்டாலும் வர்த்தக ரீதியாக பெரும் பின்னடைவையே அவருக்குத் தந்தன.
பம்மல் கே சம்பந்தம், பஞ்சதந்திரம், வசூல் ராஜா, மும்பை எக்ஸ்பிரஸ்... இந்த 10 ஆண்டுகளில் கமலின் தோல்விப் பட வரிசை அவரது சாதனைகளை மிஞ்சும் அளவுக்குப் பெரியதுதான்.

வேட்டையாடு விளையாடு ஓரளவுக்கு ஓடியது. இந்நிலையில் ஏகப்பட்ட குறைகள், லாஜிக் மீறல்களுடன் வந்தது தசாவதாரம். கமலும் அவற்றை மறுக்கவில்லை.

ஆனாலும் வசூல் ரீதியாக கமலுக்கு நிறைவைத் தந்த படம் தசாவதாரம்.

இன்று அந்தப் படத்தின் 100-வது நாள் விழா.

எப்படியும் ஒரு தியேட்டரிலாவது சில்வர் ஜூப்ளி கொண்டாடிவிடும் இந்தப் படம் என்ற நம்பிக்கை கமல் ரசிகர்களுக்கு.

இருக்கட்டும்...

தசாவதாரம் 100 நாள் கொண்டாடியதில் நமக்கு எந்த அதிருப்தியும் இல்லை. சச்சின் போன்ற படங்கள் 200 நாள் கொண்டாடும்போது தசாவதாரம் கொண்டாடக் கூடாதா என்ன...?

நம் விமர்சனம் கமல் மீதல்ல...

அந்தப் படத்தின் தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் மீதுதான். அவருக்கு சிவாஜி படத்தின் பிரம்மாண்டம் மற்றும் வெற்றியைப் பார்த்து வந்த காய்ச்சல் இருக்கிறதே... அது டபுள் நிமோனியாவை விட அதிகம். அப்போதே தனது விஷமத்தனத்தை ஆரம்பித்துவிட்டார்.

சிவாஜியின் பிரமாண்டத்தை மிஞ்சும் விதத்தில் ஒரு படம் எடுக்கப் போகிறேன் என ஆரம்பித்து, ரஜினி படத்தை விட ஒரு ரூபாயாவது அதிக விலைக்கு என் படத்தை விற்பேன் (நான் கற்பனையாக சொல்லவில்லை... ஆதாரங்களோடுதான் சொல்கிறேன்!!) என்று சபதம் போட்டது வரை பல கதைகள் நமக்குத் தெரியும்.

ஆனால் அதற்கும் இவருக்கு சிவாஜிதான் வழிகாட்டியது. பின்னே... இவரிடம் ஏது சொந்த சரக்கு... இவர் கம்பெனி பேனரே காப்பிதானே. அதற்காக அமெரிக்காவின் ஆஸ்கார் அகாடமி இவரைக் காய்ச்சி எடுத்ததும், பிறகு அந்த பெயரை இவர் இழந்ததும் தனிக்கதை. அது முழுமையாக நமக்கும் தெரியும், பிறகு சொல்கிறேன்.

இப்போது சிவாஜியைவிட தசாவதாரம் மிகப்பெரிய வெற்றி பெற்றுவிட்டதாகக் கூறிவருகிறார் இந்த ‘வெறும்’ ரவிச்சந்திரன்.

அது உண்மைதானா...

சில விவரங்கள்:

சென்னையில் 6 திரையரங்குகளில் தசாவதாரம் 100 நாட்களைத் தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. சென்னைக்கு வெளியே மாயாஜாலில் தொடர்ந்து 100-வது நாளாக ஓடிக் கொண்டிருக்கிறது இந்தப் படம்.

சிவாஜி உலகமெங்கும் 800-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 50 நாட்களைத் தாண்டியது, நல்ல வசூலுடன்.

உலகெங்கும் 121 திரையரங்குகளில் 100-வது நாள் விழாவைக் கொண்டாடிய ஒரே இந்தியத் திரைப்படம் சிவாஜி மட்டுமாதான் (சிவாஜி தமிழ் 108 திரையரங்குகளில் 100 நாள், தெலுங்கு 13 திரையரங்குகள்).

வெளிநாடுகளில் ஓரிரு வாரங்களைத் தாண்டுவதே இந்தியத் திரைப்படங்களுக்கு பெரும் சிரமம். ஆனால் 16 வெளிநாட்டுத் திரையரங்குகளில் சிவாஜி 100 நாட்களைக் கடந்து ஓடியது.

மலேஷியா – 6 தியேட்டர்கள்
சிங்கப்பூர் – 2 தியேட்டர்கள்
அமெரிக்கா – சியாட்டில் சிட்டி
மஸ்கட் – ரூபி சினிமா
தென்னாப்பிரிக்கா – 2 தியேட்டர்கள்
கனடா – 2 தியேட்டர்கள்
இலங்கை – கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் 100 நாள்

சிவாஜி வெள்ளி விழாக் கொண்டாடிய திரையரங்குகள்:

சென்னை: பால அபிராமி – பகல் காட்சி (சென்னையில் 17 தியேட்டர்களில் ரிலீசாகியிருந்தது)
காஞ்சிபுரம்: பாபு – 4 காட்சிகள்
அம்பத்தூர்: ராக்கி – 4 காட்சிகள்
பெங்களூர் பிவிஆர் – 2 காட்சிகள்

மலேஷியாவில் சிவாஜியின் வசூல் சாதனை மகத்தானது. எட்டு வார கலெக்ஷன் மட்டும் 2,422,788 டாலர்கள். கிட்டத்தட்ட ரூ. 11 கோடியே 63 லட்சம்!
ஆனால் தசாவதாரம் வசூல் 7 கோடியே 80 லட்ச ரூபாய்தான்.

பிரிட்டன் பாக்ஸ் ஆபீஸ் சரித்திரத்தில் முதல் 10 இடங்களுக்குள் இடம்பெற்ற ஒரே திரைப்படம் சிவாஜி மட்டுமே. முதல்வாரம் 9-ம் இடத்தில் இருந்தது சிவாஜி. பிரிட்டனில் மொத்தம் ஏழு வாரங்கள் ஓடியது சிவாஜி. மூன்றாவது வார முடிவில் சிவாஜியின் வசூல்: 5 கோடியே 74 லட்சம் ரூபாய்.

ஆனால் தசாவதாரம் டாப் டென் வரிசைக்குள்ளும் வரவில்லை. வசூலித்ததோ: 4 கோடி ரூபாய்தான், அதுவும் கடைசிநாள் தூக்கப்படும் வரையிலான வசூல்!

எல்லாம் சரி... இந்தப் படம் எதுக்குன் னுதானே கேக்குறீங்க... தசாவதாரம் 100-வது நாள் விழா கொண்டாட்ட லட்சணம்...(நன்றி அருண்) உலகத்தரம் கொடிகட்டிப் பறக்குதுல்ல, மொழியிலும், கலாச்சாரத்திலும்!!

நன்றி: www.rajinifans.com,

கதை-வசனம் கரெக்டாதான் இருக்கு... ஆனா நம்பத்தான் முடியல!


குமுதம் ரிப்போர்ட்டர் இந்த இதழைப் படித்துவிட்டு நமது நெருங்கிய நண்பரும் பத்திரிகையாளருமான ஒருவர் அடித்த காமெண்ட் இது. காரணம் கடந்த காலம் உணர்த்தும் உண்மைகள் அப்படி...

இந்த பிளாக்கில் நாம் பதிவு செய்துள்ள சில விஷயங்களைப் படித்துவிட்டு, ரஜினி ரசிகர்களும், நடுநிலையாளர்களும், சக ப்ளாக்கர்களும் கூட நம்ப முடியாமல், ‘இதெல்லாம் உண்மைதானா...?’ என என்னிடமே கேட்டிருக்கிறார்கள்.

ரஜினி ஒரு சமூக நல அமைப்பைத் தொடங்கி அதை ரசிகர்களிடம் ஒப்படைக்கப் போகிறார்... அல்லது அந்த அமைப்பின் செயல்பாடுகளைப் பார்த்துவிட்டு பின்னர் அதையே அரசியல் இயக்கமாக மாற்றப் போகிறார் என்ற பேச்சுக்களை நாமும் கூட முழுமையாக நம்பவில்லைதான். ஆனால் வழக்கத்துக்கு மாறான சில வேலைகளில் ரஜினியின் நெருங்கிய வட்டத்தினர் ஈடுபட்டு வருவதைப் பார்க்கும்போதுதான் இந்தப் பேச்சுக்களை நம்ப வேண்டி வருகிறது.

இந்த இதழ் ரிப்போர்ட்டரில் எழுதப்பட்டுள்ள ரஜினி டிவி விஷயம் ஏதோ இன்று நேற்று உருவானதல்ல... பல மாதங்களாகவே பேசப்பட்டு வருவதுதான். ஆனால் இதனை ரஜினியின் மகள் சவுந்தர்யா ரஜினியின் பொது வாழ்க்கையை மனதில் கொண்டு ஆரம்பிப்பதுபோல் தெரியவில்லை.

ஒரு திரைப்படம் அல்லது இதர கமர்ஷியல் ப்ராஜக்ட் போலத்தான் இதுவும். இந்த யோசனை தனக்கு இருப்பது பற்றியும், ரஜினியின் அனுமதிக்காக காத்திருப்பதாகவும் ஏற்கெனவே சவுந்தர்யா சில பத்திரிகையாளர்களிடமும் பேசியிருக்கிறார். இப்போது ரஜினியின் அக்டோபர் சந்திப்பு, அரசியல் முயற்சி ஆகியவற்றோடு இதை வசதியாக முடிச்சுப் போட்டிருக்கிறார்கள்.
இருந்தாலும் நண்பர் சொன்னதுபோல், கதை வசனத்தை நன்றாகத்தான் எழுதியிருக்கிறது குமுதம் குழு.

பத்திரிக்கை விற்க வேறு வழியே தெரியவில்லை... !

இன்றைய சூழலில் யாரைப் பற்றி எழுதினாலும் மக்கள் படிக்க ஆர்வம் காட்டுவதில்லை. கருணாநிதி, ஜெயலலிதா, விஜய்காந்த், சரத்குமார் அல்லது கமல்ஹாசன் என யாரைப் பற்றி எழுதினாலும் அவை வெறும் செய்திகள் அல்லது கிசுகிசுக்கள்தான். பத்திரிக்கை விற்பனையைத் தூண்டும் சக்தி அந்த எழுத்துக்களுக்குக் கிடையாது.
ஆனால் ரஜினி பற்றிய எழுத்துக்களுக்கு மட்டும் – என்னதான் மோசமாகவே எழுதினாலும் - தனி ஜீவன் வந்துவிடுகிறது.

இந்த ரிப்போர்ட்டர் இதழே கூட அதற்கு ஒரு சாட்சிதான்.

வழக்கத்துக்கு மாறாக ஒருநாள் முன்னதாகவே இந்த இதழ் கடைகளுக்கு வந்துவிட்டது. ஆலந்தூர் சுரங்கப்பாதை அருகே ஒரு கடையில் போஸ்டர் தொங்கவிடும்போதே அதை வேடிக்கைப் பார்க்க ஐந்தாறுபேர் நின்றுவிட்டனர்.

‘திரும்ப ஆரம்பிச்சிட்டாங்கடா...’ என்று முணுமுணுத்தபடி அந்த இதழை வாங்கத் தொடங்கினர். நான் திரும்ப அந்தக் கடைக்கு வந்த போது ஒரு மணி நேரத்துக்குள் 25 இதழ்கள் விற்றுவிட்டாக சந்தோஷத்துடன் சொன்னார் கடைக்காரர்.

‘இந்த சூட்சுமம் தெரிஞ்சதாலதான் தொடர்ந்து ரஜினி மேட்டரா எழுதித் தள்றாங்க... எப்படியும் ரோபோ படம் வரும் வரை இப்படியே காலத்தை ஓட்டிட முடியும். வேற எந்த நடிகர் பத்தி நியூஸ் போட்டாலும் வாங்க மாட்டேங்கறாங்க... ரஜினி அட்டைப்படம்னா அன்னிக்கே வித்துத் தீந்துடும்... ஜனங்க அவர்மேல அவ்வளவு நம்பிக்கை வச்சிருக்காங்க...’ என்றார் கடைக்காரர்.

இதோ... அடுத்த இதழ் விகடனுக்கும் ரஜினிதான் அட்டைப்பட நாயகனாக அருள்பாலிக்கப் போகிறார்!

எல்லாம் சரிதான்... இப்படியெல்லாம் சம்பாதித்துவிட்டு படம் ரிலீசாகும்போது வேண்டுமென்றே பொய்யையும் புழுதியையும் வாரித் தூற்றுகிறார்கள்...
கேட்காத மன்னிப்பைக் கேட்டதாக எழுதினார்கள்... நல்ல படத்தை ஓடவிடாமல் செய்தார்கள். நல்லதே செய்தாலும் தமிழர்களுக்கு எதிரானவராக ரஜினியைத் திட்டமிட்டுச் சித்தரிக்கிறார்கள்.
நியாயம்தானா?

Saturday, September 20, 2008

யார் அடுத்த சூப்பர் ஸ்டார்? - மதன் நச்!


விகடன் போக்கில் ஆயிரம் குற்றம் குறைகள் இருந்தாலும், மதனின் புத்திசாலித்தனம் மற்றும் எழுத்து நடை இன்னும் கூட பல நடுநிலை வாசகர்களை நிறுத்தி வைத்திருக்கிறது.
இதை அவரிடம் சொன்னபோது சிரித்துக் கொண்டார். அதுக்குக் காரணமும் விகடன்தானே... என்றார் ஒருமுறை.

என்னதான் அவரைப் புகழ்ந்தாலும் அல்லது வெறுப்பேற்றினாலும் அப்படியா... என சாதாரணமாக கேட்டுவிட்டுப் போகும் குணம் அவருக்குண்டு. அதே போல ஹாய் மதன் கேள்வி – பதில் பகுதிகளில் மதன் சொல்லும் பதில்களுக்கு தனி மரியாதையே உண்டு.
தமிழ் இலக்கிய உலகின் சகலகலா வல்லவர் அமரர் சுஜாதாவுக்குப் பிறகு, அதே சுவாரஸ்யமும் நம்பகத் தன்மையும் கொண்ட பதில்களைத் தந்தவர் மதன் மட்டுமே. காரணம் ஒவ்வொரு பதிலுக்கும் அவர் செலவழிக்கிற உழைப்பு, அவரது விசாலமான வாசிப்பு...

ஒருமுறை இளையராஜா – ஏஆர் ரஹ்மான் ஒப்பிடுங்கள்... என்று ஒரு கேள்வி.
அதற்கு அவர் அளித்த நச்சென்ற பதில்தான் அதன்பிறகு அத்தகைய முட்டாள்தனமான ஒப்பீடுகளுக்கே ஒரு முற்றுப்புள்ளி வைத்தது.

மதன் பதில் இதோ: இளையராஜா- ரஹ்மான் இருவரையும் ஒப்பிடுவதே முட்டாள்தனம். ராஜா திரையிசையில் மட்டுமல்ல... சாஸ்திரிய இசையிலும் சிகரம் தொட்டவர். ரஹ்மான் தமிழ் திரையிசையை இன்னொரு தளத்துக்கு இட்டுச் செல்லும் முயற்சியில் இருக்கிறார். இந்த இருவேறு துருவங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கும் சிறுபிள்ளைத்தனம் இனியும் வேண்டுமா...

மீண்டும் ஒருமுறை இதேபோன்ற கேள்வி வந்தபோதும், முந்தைய தன் கருத்தை மாற்றிக் கொள்ளாமல் அதே போன்றதொரு பதிலைத் தந்தவர்.

கடந்த 2004-ம் ஆண்டு, பாபாவுக்குப் பிறகு புதிய படங்கள் எதையும் ரஜினி அறிவிக்காத நேரம். பொதுத் தேர்தல் முடிவுகளும் ரஜினியின் விருப்பத்துக்கு மாறாக அமைந்துவிட்டன. அவர் யாரை புறக்கணிக்கச் சொன்னாரே அந்தக் கட்சிக்கு அமோக வெற்றி கிடைத்திருந்தது.

அப்போது மதனின் கேள்வி பதில் பகுதியில் ஒருவர் இப்படிக் கேட்டிருந்தார்:

கேள்வி: இனி ரஜினி?

மதன்: இனி ரஜினி இனி கஜினி என எழுதுவேன் என்று எதிர்பார்த்தீர்களா... இல்லை. இந்த தேர்தலில் ரஜினி வாய்ஸ் எடுபடவில்லை என்பதற்காக அவர் அவ்வளவுதான் என்று சொல்லிவிட முடியாது. நிச்சயம் அவர் திரும்பி வருவார், முன்பைவிட பலமாக. என்னுடைய கவலையெல்லாம், கடைசி மேட்சில் டக் அடித்துவிட்டு ஓய்வுபெற்ற பிராட்மேனைப் போல அவர் ஆகிவிடக் கூடாது என்பதுதான்.


இதோ இந்த வார விகடனில், ரஜினிக்கு அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? என்ற கேள்விக்கு இப்படிக் கூறியுள்ளார்:

மதன்: சூப்பர்ஸ்டார் என்பது ஒரு டைட்டில். சிவாஜியையும், எம்ஜிஆரையும் நாம் சூப்பர்ஸ்டார் என்று அழைத்ததில்லை. ரஜினிக்கு மட்டுமே சூப்பர்ஸ்டார் பட்டத்தைத் தந்திருக்கிறோம். எதிர்காலத்தில் அவருக்கு இணையாக அல்லது அவரை விடப் புகழுடன் ஒரு நடிகர் வந்தாலும் அவருக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் தருவோமா என்பது சந்தேகமே!

இது எப்படி இருக்கு!!

எந்திரன்: ஹவாயில் இரண்டாவது டூயட்!


சூப்பர் ஸ்டார் ரஜினி – ஐஸ்வர்யா ராய் பச்சன் நடிக்கும் எந்திரன் – தி ரோபோ படத்தின் இரண்டாவது டூயட் பாடல் காட்சியை ஹவாய் தீவுகளில் படமாக்குகிறார் இயக்குநர் ஷங்கர்.

எந்திரன் படப்பிடிப்பு இப்போது வட மற்றும் தென் அமெரிக்க கண்டங்களின் எழில்மிகு இயற்கை காட்சிகளின் பின்னணியில் படமாக்கப்பட்டு வருகிறது.

கடந்த 8-ம் தேதி தொடங்கிய எந்திரன் படப்பிடிப்பின் முதல் பகுதி வரும் அக்டோபர் 5-க்குள் முடிவடைகிறது.

அதற்குள் மூன்று பாடல் காட்சிகள் மற்றும் ரோபோ ரஜினியின் வடிவமைப்பு போன்றவற்றை முடித்துவிடும் திட்டத்திலிருக்கிறார் ஷங்கர்.

ஆறு பாடல்கள் இடம்பெற உள்ள இந்தப் படத்துக்கு இதுவரை 3 பாடல்களை போட்டுக் கொடுத்து விட்டாராம் ரஹ்மான். இன்னும் 3 பாடல்கள் மற்றும் ரோபோ ரஜினிக்கான அதிரடி தீம் மியூசிக் என ரஹ்மானுக்கு எக்கச்சக்க வேலை வைத்திருக்கிறாராம் ஷங்கர்.

இப்போதைக்கு ட்ராக் மட்டும்தான் போட்டுக் கொடுத்துள்ளாராம் ரஹ்மான். பின்னர் இந்தப் பாடல்களை லண்டனில் உள்ள தனது விருப்ப ஸ்டுடியோவில் டிஜிட்டல் முறையில் பதிவு செய்து தரப் போகிறாராம்.

முதல் டூயட் பாடலை தென் அமெரிக் காவில் உள்ள பெரு நாட்டின் புகழ் பெற்ற வரலாற்று நினை விடமான மாச்சு பிக்கு மற்றும் அமேசான் காடுகளில் வைத்துப் படமாக்கிய ஷங்கர், அடுத்த டூயட் பாடலை அமெரிக்காவின் உல்லாச உலகமான ஹவாய் தீவுகளில் வைத்துப் படமாக்கி வருகிறாராம்.

மூன்றாவது பாடல் எந்திரன் ரஜினி பங்கேற்கும் அதிரடிப் பாடல். இது ஹாலிவுட் ஸ்டுடியோவில் படமாகிறது.

Friday, September 19, 2008

களை கட்டும் மண்டபம்... மிரட்சியில் கட்சிகள்!


இனி ரஜினி ரசிகர்களுக்கும் அபிமானிகளுக்கும் நிறைய சுவாரஸ்யங்கள் காத்திருக்கின்றன.
அதில் முக்கியமானது, ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து தொடர்ந்து வெளிவரும் ஆதாரப் பூர்வமான புதுப்புது தகவல்கள்.

மீடியா வர்ணிப்பதைப் போல ‘அக்டோபர் புரட்சி’க்கு முழுமையாகத் தயாராகிக் கொண்டிருக்கிறது ராகவேந்திரா கல்யாண மண்டபம்.

அனைத்து மன்றங்களுக்கும் முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது. ரஜினியுடனான சந்திப்புக்கான நாள் மற்றும் நேரம் இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்பட உள்ளது. ரஜினி அமெரிக்காவிலிருந்து திரும்பும் தேதி முடிவான கையோடு, இந்த விவரங்கள் பத்திரிகைகள் மூலமாகத் தெரிவிக்கப்படும் என்கிறார் சத்தியநாராயணா.

சம்பந்தப்பட்ட மன்றங்களின் தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்களுக்கும் இது தனியாகத் தெரிவிக்கப்பட உள்ளது. அநேகமாக அக்டோபர் இரண்டாம் வாரம் இந்தச் சந்திப்பு நிகழும் என்றும், ரஜினி முன்கூட்டியே வந்தால் முதல் வாரத்திலேயே கூட சில மாவட்ட மன்றத்தினர் வரவழைக்கப்படுவார்கள் என்றும் தெரிகிறது.

இன்னொரு பக்கம், ரஜினி அரசியல் பிரவேசம் நிகழ வாய்ப்புள்ளது என்ற தொனியில் சத்தியநாராயணா பேசியதைத் தொடர்ந்து, உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் தொடங்கி, அகில இந்திய தலைவர்கள் வரை பலரும் சத்தியநாராயணாவைத் துளைத்தெடுக்கிறார்களாம், மேல் விவரங்களைத் தரச் சொல்லி.

காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைவர்களே இதில் அதீத ஆர்வம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கெனவே பல ஆண்டு காலமாக தமிழகத்தின் கோட்டையைப் பிடிக்க ரஜினி என்ற வரம் வேண்டிக் காத்திருக்கும் பாஜக அளவுக்கு அதிகமான குழைவையும் குசல விசாரிப்புகளையும் காட்டுவதாகச் சொல்கிறார்கள். ஆனால் இவர்கள் யாருக்கும் எந்தப் பிடியும் கொடுக்காமல் சத்தியநாராயணா பதிலளித்து வருகிறார்.

இந்த நடவடிக்கைகள் அனைத்தும் மிகவும் கலக்கத்தைக் கொடுத்துள்ளது இரு நடிகர்கள் -கம்- பார்ட் டைம் அரசியல்வாதிகளுக்கு. அவர்கள் யாரென்று சொல்லித் தெரியவேண்டியதில்லை.
இந்த மாதிரி ஒரு சூழலை சத்தியமாக அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.

காரணம், உங்களுக்கு நினைவிருக்கும், ரஜினி கட்சி ஆரம்பித்தால், நான் பொதுச் செயலாளராகப் பணியாற்றவும் தயங்கமாட்டேன். எந்தக் கட்சியிலும் சேராத, சேர விரும்பாத என் மனைவி ராதிகா கூட ரஜினி கட்சியில் இணைந்து பணியாற்றத் தயாராக இருக்கிறார், என்றெல்லாம் அறிக்கை விட்டவர் சரத்குமார்.

காவிரி நீர் உண்ணாவிரதத்தின் போது ரஜினியின் நம்பிக்கையான காரியதரிசி மாதிரி கூடவே இருந்து, ரஜினி கவர்னரைச் சந்தித்தபோது தரப்பட்ட கோரிக்கை மனுவின் நகல்களைப் பத்திரிகைகளுக்கு விநியோகித்ததும் கூட சரத்குமார்தான் (ஒருவேளை அன்று அவர் கனவு பலிக்காமல் போனதுதான் ரஜினிக்கு எதிராக அவரைத் திருப்பிவிட்டதோ என்றுகூட எண்ணத் தோன்றுகிறது!!).

எனவே இன்று ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி என்றே அனைவரும் பேசத் தொடங்கியிருப்பது அவர்களை நிலைகுலைய வைத்துள்ளது.
விஜயகாந்தின் கட்சியில் பல ரஜினி ரசிகர்களும் இருப்பது உங்களுக்கும் தெரியும். இப்போது, ரஜினியே அரசியலுக்கு வந்துவிட்டால் அஸ்திவாரத்துக்கு ஆபத்து வந்துவிடுமோ என அஞ்சுகிறார் விஜயகாந்த்.

இதன் விளைவுதான், தனக்கு வேண்டப்பட்ட பத்திரிகை ஆசிரியர் மூலம், ரஜினிக்கு எதிரான செய்திகளை சில தினங்களுக்கு முன் வெளியிடச் செய்திருந்தார் என பேசிக்கொள்கிறார்கள். ரஜினி கட்சி ஆரம்பித்தால் மாவட்ட அளவில் வேலை செய்ய 100 பேர்கூட இல்லை என்றெல்லாம் அந்தப் பத்திரிகையும் விஜய்காந்துக்கு விசுவாசம் காட்டியிருந்தது.

நாம் முன்பே சொன்னதுபோல இனி எந்தப் பத்திரிகையைத் திறந்தாலும் ரஜினி சினிமா... ரஜினி கட்சி என்ற செய்திகளைத்தான் நீங்களும் பார்க்கப் போகிறீர்கள்.

ஆக... ரஜினி பற்றிய வதந்திகளுக்கும், அனுமானங்களுக்குமே இப்படி நடுங்குபவர்கள், அவர் களத்தில் இறங்கிவிட்டால் இன்னும் என்னவெல்லாம் பிதற்றப் போகிறார்களோ...

எச்சரிக்கையாக இருக்க வேண்டும் ரஜினி ரசிகர்கள்!

குறிப்பு: ரஜினி ரசிகர்களையும் அவர்கள் பலத்தையும் உளவறியும் வேலை படு வேகமாக நடந்து வருகிறது. அதுபற்றி நாம் ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தது நினைவிருக்கலாம். மேலும் சில புதிய விவரங்களையும் நாளை தருகிறேன்!

Tuesday, September 16, 2008

எச்சரிக்கை -3: ரஜினி... அரசியல்... சத்தியநாராயணா!


இதில் நமது கருத்தென்று எதுவும் இல்லை. ரஜினி மன்றங்களின் தலைவர் சத்திய நாராயணா சமீபத்தில் அளித்துள்ள பேட்டியின் ஒரு பகுதி:

ரஜினி தன் மன்றத் தினரைச் சந்திப்பாரா மாட்டாரா... அல்லது வழக்கமான எதிர்பார்ப்பைக் கிளப்பும் வேலையா இது என்று மீடியாவில் விவாதம் செய்து கொண்டிருந்தவர்களுக்கு, அகில இந்திய ரசிகர் மன்றத் தலைவரான சத்திய நாராயணா கொடுத்திருக்கும் பதில் இது, அதுவும் ரஜினியின் உத்தரவோடு!

இந்நேரம் பல நிர்வாகிகளுக்கு தலைமை மன்றத்திலிருந்து ரஜினியுடனான சந்திப்பு குறித்த உத்தரவு பறந்திருக்கக் கூடும். இன்னும் 20 நாட்கள்தான் உள்ளன, ரசிகர்கள் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள.

ரஜினி ரசிகதர்களைப் பொருத்தவரை இந்த தீபாவளி வாணவேடிக்கை முழங்கும் உற்சாகத் திருநாளாகத் திகழ்வது சூப்பர் ஸ்டாரின் வார்த்தைகளில் இருக்கிறது. ஆனாலும் சத்திய நாராயணாவின் பேட்டியில் பொதிந்துள்ள உள்ளர்த்தம், அவர்களை இப்போதே தீபாவளி கொண்டாட வைத்துள்ளது.
நல்லது நடக்கட்டும்...

அரசியலில் ரஜினி இறங்க நீங்கள்தான் முட்டுக்கட்டையா...?

...அரசியலில் தலைவர் உடனே இறங்கவேண்டும் என ஆசைப்படும் சில மன்ற நிர்வாகிகள், அதே ஸ்பீடில் தலைவரிடம் இதுபற்றி நான் பேசி ஏதாவது செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அரசியல் விஷயத்தில் தன்னிச்சையாக நான் எந்தக் கருத்தையும் சொல்ல முடியாது. இதுதான் நிதர்சனம்.

ஆனால், இதை என்னுடைய இயலாமையாகவோ, திட்டமிட்ட மெத்தனமாகவோ சிலர் நினைக்கிறார்கள். அதற்கு நான் என்ன செய்ய முடியும்? தலைவர் அரசியலுக்கு வந்தால் சந்தோஷப்படும் முதல் ஆள் நான்தான்.

அரசியலைப் பொறுத்தமட்டில் தலைவர் யாரையும் பாதிக்காத முடிவைத்தான் எடுப்பார். கடைக்கோடி ரசிகனின் நிலைப்பாடு வரை அவர் யோசிப்பார். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று அவர் செயல்பட மாட்டார். இதையெல்லாம் புரிந்துகொள்ளாத ஒருசில ரசிகர்கள் ஆதங்கப்பட்டால் நான் என்ன செய்வது?

அக்டோபர் புரட்சியாக, ரொம்ப நாளைக்கப்புறம் ரசிகர்களை ரஜினி சந்திக்கப் போவதாகச் சொல்வது உண்மைதானே…?

உண்மைதான். ஒட்டுமொத்த மாவட்ட நிர்வாகிகளையும் ஒருசேர தலைவர் இதுநாள் வரை சந்தித்ததில்லை. ஆனால், அக்டோபர் முதல் வாரத்தில் சந்திக்க விரும்புவதாகச் சொல்லி இருக்கிறார்.
முதல் நாள் சென்னை மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளையும், அடுத்த நாள் இதர மாவட்ட நிர்வாகிகளையும் சந்திக்க ஏற்பாடு செய்யப் பட்டிருக்கிறது.

இந்தத் தகவலை அனைத்து மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கும் சொல்லி இருக்கிறோம். எந்திரன் ஷ¨ட்டிங்கால் ஒருசில நாட்கள் தள்ளிப் போனாலும் இந்த முறை தலைவர் கண்டிப்பாக ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்திப்பார். அதில் மாற்றமே இல்லை.

சிரஞ்சீவியைப் போல் கட்சி ஆரம்பிப்பதற்கான முன்னோட்டமாக அந்த சந்திப்பு இருக்குமா?

ஓய்வாக இருக்கிற நாட்களில் தலைவர் முடிந்த மட்டும் மன்றத்தினரைச் சந்தித்துக் கொண்டுதான் இருந்தார். ஒரு கட்டத்தில் வந்தவர்களே திரும்பத் திரும்ப வந்ததைக் கண்டு, தன்னை நேரில் பார்க்கவே முடியாது என ஏங்குகிற ஆட்களுக்கு வாய்ப்பு வழங்குங்கள் எனச் சொல்வார். ஆனால், அதற்குப் பின்னர் தலைவருக்கு ஓய்வு கிடைப்பது சாத்தியமில்லாத ஒன்றாகி விட்டது.

இப்போது அவர் அனைவரையும் சந்திப்பதாகச் சொல்லி இருப்பதில் எல்லோருக்குமே மிகுந்த சந்தோஷம். ஆனால் அரசியல் குறித்தோ, வேறேதும் விவகாரங்கள் குறித்தோ அவர் என்ன பேசப் போகிறார் என்று இப்போதைக்கு ஏதும் சொல்ல முடியாது. தலைவரின் முடிவு என்னவாக இருந்தாலும் அதன்படி நடக்க மட்டும்தான் எனக்குத் தெரியும்., என முடிந்துள்ளது அந்தப் பேட்டி!

ச்சும்மா அதிருதில்ல.... எனும் தலைப்பில் முன்பு வெளியான பதிவை மீண்டும் ஒரு முறை படித்துக் கொள்ளவும்!

குறிப்பு: சத்தியநாராயணாவுடன் இரு தினங்களுக்கு முன் நாம் பேசியதன் அடிப்படையில் ரஜினியின் அரசியல் நிலைப்பாடுகள் குறித்து மேலும் சில பதிவுகளும் வரவிருக்கின்றன.

எந்திரன் - அப்டேட்!


ஒரு சுறு சுறு, சூடான எச்சரிக்கைப் பதிவுக்கு முன்... இதோ சூப்பர் ஸ்டாரின் எந்திரன் - தி ரோபோ பற்றிய ஒரு ஜில் செய்தி.

எத்தனை முறை படித்தாலும், என்னதான் கதையாகவே இருந்தாலும் ரஜினி பற்றிய செய்திகளுக்கு இருக்கும் மவுசு தனி. இதை ரஜினி ரசிகர்களை விட நன்கு உணர்ந்திருப்பவர்கள் பத்திரிகைகளும், இதர செய்தி ஊடகங்களும்தான்...

நன்றி- தட்ஸ்தமிழ்

மாச்சு பிக்குவில் ரஜினி – ஐஸ் டூயட்!

பெரு நாட்டில் உள்ள உலக அதிசயங்களில் ஒன்றான மாச்சு பிக்குவில் ரஜினியும் ஐஸ்வர்யாவும் ஆடிப்பாடும் டூயட் காட்சி படமாக்கப்பட்டுள்ளது.

தென் அமெரிக்காவின் பெரு நாட்டில் உள்ள மிகப் புகழ்பெற்ற இடம் மாச்சு பிக்கு (Machu Picchu). ஐநாவின் யுனெஸ்கோவால் எட்டாவது உலக அதிசயமாக சிறப்பு அங்கீகாரம் தரப்பட்டுள்ள மிகச் சிறந்த சுற்றுலாத் தலம் இது. இங்கு படப்பிடிப்பு நடத்த அனுமதிக்கப்பட்டுள்ள முதல் படமும் எந்திரன்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் படப்பிடிப்பு நடந்தபோது செல்போன் காமிராக்களில் படமெடுத்து சிவாஜி பட ரகசியங்களை சிலர் வெளியிட்டதால், மீண்டும் அப்படியொரு தவறு நடக்கக் கூடாது என்பதில் ஷங்கர் கவனமாக உள்ளார். அதனால்தான் பத்திரிகை செய்திக் குறிப்பில் படப்பிடிப்பை அமெரிக்காவில் நடத்துவதாகக் கூறிவிட்டு, இப்போது பிரேசில், பெரு மற்றும் சிலி நாடுகளில் நடத்தி வருகிறார்.

முதல் பாடல் முழுமையாக முடிவடைந்துவிட்டதாம். இரண்டாவது பாடலை ஹாலிவுட் ஸ்டுடியோவில் எடுக்கத் திட்டமிட்டுள்ளார்.

இது எந்திரன் (ரோபோ) ரஜினி பிரமாண்ட அரங்கங்களின் பின்னணியில் பாடும் அறிமுகப் பாடல் என்பதால் மிகுந்த கவனத்துடன் வடிவைத்துள்ளாராம் ஷங்கர். ராகவா லாரன்ஸ்தான் இதற்கு நடனம் அமைப்பதாகக் கூறப்படுகிறது.சிவாஜியில் பட்டையைக் கிளப்பிய அதிரடி... பாடலுக்கு இவர்தான் நடனம் அமைத்திருந்தார்.

அமேசான் நதி மற்றும் மழைக் காடுகளிலிருந்து 100 மைல் தூரத்தில் உள்ள இந்த சரித்திரப் புகழ் பெற்ற இடத்தில் ரஜினியும் ஐஸ்வர்யாவும் பாடும் டூயட் பாடல் படமாக்கப்பட்டுள்ளது. ஆனால் முழுப் பாடலையும் இங்கு படமாக்கவில்லை ஷங்கர். இதன் இன்னொரு பகுதியை அமேசான் நதிப் படுகையிலும், பிரேஸில் நாட்டில் உள்ள அமேசான் காட்டின் இன்னொரு பகுதியிலும் எடுத்துள்ளதாக நம்பகமான தகவல்கள் கூறுகின்றன.

இந்தப் படத்தில் ரஜினிக்கு இரண்டு ஓப்பனிங் பாடல்கள். அதே போல ரஜினிதான் படத்தின் வில்லன் கம் ஹீரோ.
முழுக் கதையும் படித்துவிடத் துடிப்பவர்கள் சுஜாதாவின் என் இனிய இயந்திரா மற்றும் மீண்டும் ஜீனோ படிங்க!!

Sunday, September 14, 2008

எச்சரிக்கை -2: அதிகார வர்க்கத்தின் குள்ளநரித்தனம் ஆரம்பம்!


நண்பர்களே... முன்பே சொன்னது போல, ரஜினியின் அடுத்த நகர்வு என்ற என்பதை அனுமானித்து, அதிகார வர்க்கம் தனது குள்ளநரித்தனங்கள்... கவிழ்ப்பு முயற்சிகள், கலைப்பு தந்திரங்களுக்கு பலமான வியூகம் வகுத்துக் கொடுத்து வருகிறது.

நான்கு தினங்களுக்கு முன்பே இதற்கான ரகசிய ஆலோசனக் கூட்டங்கள் கோட்டை மற்றும் சிஐடி நகர் இல்லத்தில் நடந்து முடிந்திருப்பதாகவும், உளவுத் துறைக்கு மிகச் சவாலான பணி ஒன்றையும் இம்முறை முதல்வர் தரப்பு அளித்துள்ளதாகவும், டிஜிபி அலுவலகத்திலிருந்து நம்பகமான தகவல்கள் தெரிவிக்கி்ன்றன.

ரஜினி அறிவித்துள்ள இந்தச் சந்திப்பின் நிஜமான பின்னணி, குசேலன் ரிலீசுக்குப் பின் அவரது ரசிகர்கள் மனநிலை மற்றும் நிஜமான ரசிகர் மன்ற பலம் இந்த மூன்றையும் தெரிந்து கொள்வதுதான் இப்போதைய உடனடி நோக்கம்.

நோக்கம் இவைதான் என்றாலும், ரஜினியின் பலம் இவர்கள் எதிர்பார்ப்பதை விட கூடுதலாக இருந்தால் அதைக் குலைக்கவும் இந்த குழுவுக்கு முழுமையான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. தாராள பணப் பரிவர்த்தனைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே இது ரஜினி ஆதரவாளர்கள் விழிப்போடு செயல்பட வேண்டிய காலம் என்பதால், ஒரு நிமித்தக்காரனின் பணியை இந்தச் செய்தி மூலம் செய்கிறேன்.

எச்சரிக்கை 3... தொடரும்!

இது மகேசன் தீர்ப்பாகவும் அமையலாம்!


தொடர்ந்து மிகவும் தீவிரமான பதிவுகளாகவே தருவதாக நண்பர்கள் சிலர் கூறியிருந்தனர். அவர்களுக்காக இந்த புகைப்படம் (என்ன பண்றது... இதுவும் சீரியஸ்தான்!)
இதனை நீங்கள் அனைவரும் பல பதிவுகளில் பார்த்திருப்பீர்கள். அப்போது பெரிய வித்தியாசம் தெரிந்திருக்காது. அந்தக் கோணத்தில் பலர் பார்க்கவும் இல்லை!

இப்போது ரஜினி மற்றும் அவரது உலகத்துக்குள் ஏகப்பட்ட மாறுதல்கள் நடந்து கொண்டிருக்கும் தருவாயில் (மீடியா வர்ணிப்பது போல அக்டோபர் புரட்சி!) இந்தப் படம் எவ்வளவு செய்திகளைச் சொல்கிறது பாருங்கள்...

இது தற்செயல்தான் என்றாலும், டன் கணக்கில் உற்சாகத்தை வாரி வழங்கக் கூடிய செண்டிமெண்ட் செய்திகள் இந்தப் படத்துக்குள் அடங்கியிருக்கின்றனவே!

நல்ல கனவுகள் பலிக்க குறைந்தது 15 ஆண்டுகளாவது பிடிக்குமாம். நம்ம அணுவிஞ்ஞானி அப்துல் கலாம் அடிக்கடி சொல்லும் ஆரூடம் இது. ரசிகர்களை உசுப்பேற்ற இப்படிச் சொல்வதாக நினைக்க வேண்டாம்... நல்ல ஆரூடங்கள் பலித்துவிட்டுத்தான் போகட்டுமே!

எச்சரிக்கை -1: இப்போது தேவை ஒற்றுமை!


இது ரஜினி ரசிகர்களுக்கு மட்டுமல்ல.. அந்த வட்டத்தைத் தாண்டி அவரை நேசிக்கிற, அவரால் ஒரு நல்ல மாறுதல் இந்த மாநிலத்தில் ஏற்படும் என நம்புகிற லட்சக்கணக்கான மக்களுக்காக...

இந்தப் பதிவு எத்தனைப் பேரைப் போய்ச் சேரப் போகிறது என்பதல்ல முக்கியம்... சேர்ந்தவர்கள் அனைவரும் தங்கள் நண்பர் வட்டத்தில், பொதுமக்கள் மத்தியில், நான் சொன்னதாகக் கூட அல்ல... தங்கள் கருத்தாகவே இதைச் சொந்தம் கொண்டாடிக் கொண்டாலும் கவலையில்லை... ஆனால் நல்ல செய்தியை பரப்ப, பரவ உதவுங்கள்.
ரஜினி ஒரு குரல் கொடுத்தால் போதும்... ஒரு நொடியில் நாட்டின் தலைப்புச் செய்தியே இதுவாகத்தான் இருக்கும். இதில் இத்தனை பீடிகை எதற்கு? என நண்பர்கள் சிலர் பின்னூட்டம் எழுதக் கூடும்.

உண்மைதான்... ஆனால் ரஜினியின் அறிவிப்பு வருவதற்குள் உங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ளும் ஒரு Preparatory Measures என்று வேண்டுமானால் இதனைக் கருதிக் கொள்ளுங்கள்.

ஏனெனில் ரஜினி அரசியலுக்கு வரவேண்டும்... அல்லது அரசியலைத் தாண்டி இந்த மக்களுக்கு ஏதாவது பெரிதாகச் செய்யவேண்டும் என்பது பலரது கனவு. அந்தக் கனவு கிட்டத்தட்ட நிறைவேறும் சூழல் வந்துவிட்டதாகவே தோன்றுகிறது.

இம்முறை ரஜினி தன் ரசிகர் மன்ற நிர்வாகிகளைச் சந்திப்பது வெறும் புகைப்படம் எடுத்துக் கொள்வதற்கு மட்டுமல்ல... தான் என்ன செய்ய வேண்டும் என தன் ரசிகன் எதிர்பார்க்கிறான் என்பதை முழுமையாகத் தெரிந்து கொள்வதற்காகவும்தான்.

வெறும் விருப்பங்கள் அல்லது கருத்துக்களை மட்டும் அவர் எதிர்பார்க்கவில்லை. ஒரு சமூக மாறுதலுக்கான முயற்சிகளில் அவர் இறங்க முனைந்தால் உங்கள் பங்களிப்பும் ஒற்றுமையும் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளத்தான் இந்த சந்திப்பு.

ரஜினி பொதுவாழ்வுக்கு வருவது சம்பாதிக்க அல்ல... அதற்கு அவருக்கு அரசியல் தேவையில்லை... ‘பணம் சம்பாதிக்க ஆயிரம் வழி இருக்கு, தொழில் இருக்கு. அதுக்கு இந்தப் புனிதமான அரசியலை ஏன்யா பயன்படுத்தறீங்க?’ என்று அவர் கேட்டது வெறும் சினிமா வசனம் மட்டுமல்ல... மக்கள் அதை அப்படிப் பார்க்கவும் இல்லை. இப்படிப்பட்ட ஒரு மனிதர்தான் தங்களுக்கு வழிகாட்டியாக வேண்டும் என 15 ஆண்டுகாலமாகக் காத்துக் கிடக்கிறார்கள்.

எனவே, தன் சொந்த வாழ்க்கைத் தரத்தையெல்லாம் தூரப்போட்டுவிட்டு, தன்னை வாழவைத்த மக்களின் வாழ்வில் ஏதாவது திருப்திகரமான மாறுதலைச் செய்ய முடியுமா... அதற்கான மாற்று வழிகள் இருக்கிறதா என்றெல்லாம் தீவிரமாக யோசித்து சில திட்டங்களை யோசித்து வைத்துள்ளார் ரஜினி. அந்தத் திட்டங்களுக்கு ரசிகர்களைச் சந்தித்த பிறகுதான் முழு வடிவம் தரப்பட உள்ளது.

மன்றத்தினரை மொத்தம் நான்கு நாட்கள் சந்திக்கப் போகிறார் ரஜினி. இந்த நான்கு நாட்களும் நீங்கள் அவரை அணுகும் விதம், உங்கள் மீது அவருக்கும் நம்பிக்கை வரும் விதத்தில் இருக்க வேண்டும். அதற்காக நடிக்க வேண்டும் என்று அர்த்தமில்லை. முன்கூட்டியே உங்கள் மனங்களைத் தயார்ப்படுத்திக் கொண்டால், உங்களின் பக்குவம் அவரது நம்பிக்கையை அதிகரிக்கும்.

உணர்ச்சிவசப்பட்ட தொண்டர்களைக் கொண்டு கட்சி ஆரம்பித்து வெற்றிவாகை சூடியதெல்லாம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் காலம். அன்று பல நல்லவர்களுக்கு மத்தியில் சில புல்லுருவிகள் இருந்தார்கள். இன்றோ நிலைமை தலைகீழ். எதையும் வக்கிரத்தோடு பார்ப்பதே பகுத்தறிவு எனும் வியாதி பரவத் தொடங்கியுள்ளது.

எனவே இந்த முறை அரும்பத் தொடங்கியுள்ள மலரை நாம்தான் வேலியாய் நின்று, அது கனியாகி, விதையாய் மாற துணை நிற்க வேண்டும்...

அதற்கு நடுவில் பல குள்ளநரித்தனங்களை அதிகாரத்திலிருப்போர், அவர்களுக்கு எதிர் வரிசைகளில் இருப்போர் மற்றும் மீடியா செய்ய முயற்சிக்கக் கூடும் . அதற்காகத்தான் இந்த எச்சரிக்கை.

அது என்ன குள்ளநரித்தனம்? என்கிறீர்களா... சற்றே காத்திருங்கள்!

Saturday, September 13, 2008

ச்சும்மா அதிருதில்ல...!


இதுவரை... ரஜினி வருவார்... வரமாட்டார் என்று பந்தயம் கட்டிக் கொண்டிருந்தவர்கள் வாயை கிட்டத்தட்ட அடைத்த மாதிரிதான்.

எனக்குக் கிடைத்த மிக நம்பகமான தகவல்களின் அடிப்படையில் இதை எழுதுகிறேன்.
ரஜினி என்ற ஒரு நல்ல மனிதர், மனதளவில் மட்டுமல்ல... பொது வாழ்விலும் கூட யாராலும் களங்கம் சுமத்த முடியாத சுத்தமான மனிதர்... இந்த மாநிலத்தை ஆதிக்கம் செலுத்த வரப்போகிறார்.

ஆம்... நடிகர், அரசியல் பார்வையாளர், பொதுநல விரும்பி என்ற எல்லைகளைக் கடந்து நேரடியாகவே மக்களிடம் வரப்போகிறார் சூப்பர் ஸ்டார்.

பதவி, அதிகாரம் என்பதையும் தாண்டி, தான் மக்களுக்குச் செய்ய உத்தேசித்துள்ள பல நல்ல காரியங்களை தனி மனிதராக நின்று செய்யப் போகிறார்.

இதுகுறித்த பல தகவல்களை, கருத்துக்களை தனக்கு மிக நெருக்கமான நண்பர்கள் குழுவுடன் கூடி ரஜினி விவாதித்திருப்பது உண்மைதான்.

எனவே முன்னெப்போதும் இல்லாத ஒரு தீவிரத்துடன் ரஜினியின் உலகம் இயங்கத் தொடங்கியிருக்கிறது. சும்மாவே ரஜினி என்றதும் கவர் ஸ்டோரிகள் போட்டுத் தாக்கும் பத்திரிகைகளுக்கு, இனி தினமும் ஆரவாரம்தான்.

இது தெரிந்துதானோ என்னமோ, கடந்தவாரம் ரஜினியின் பெயரில் பத்திரிகை ஆரம்பிக்க 17 விண்ணப்பங்களை பத்திரிகைப் பதிவாளர் அலுவலகத்தில் கொடுத்திருக்கிறார்கள், சில பெரிய மனிதர்கள்.

மேலும் பல புதிய தகவல்கள், நேர்மறையான செய்திகள் காத்திருக்கின்றன உங்களுக்கு!

குறிப்பு: நண்பர்களே, இந்த செய்தியை என்னாலும் முதலில் நம்பத்தான் முடியவில்லை. ஆனால் வெளியில் வதந்தியாக உலா வந்த செய்திகளை, ரஜினியின் நெருங்கிய அரசியல் நண்பர்கள் உறுதிப்படுத் தொடங்கியுள்ளனர். ஆவி, ஜூவி மாதிரி நானும் அவசரப்படாமல், இரண்டு நாள் காத்திருந்து, சிலரிடம் பேசிய பிறகே இந்த தகவலை இங்கே பதிவு செய்கிறேன்.

இதனை... ஒரு முன்தெரிவிப்புக்கான பதிவாக எடுத்துக் கொள்ளவும்.

ராமானுஜதாஸன் கமல்ஹாசன்!


கமல்ஹாசன் என்ற திரைக் கலைஞனைத் தாக்கி எழுதும் எண்ணம் எப்போதும் எனக்குக் கிடையாது. ஆனால், அந்தப் பெரிய நடிகரின் சமூகப் பார்வை பற்றிய என்னுடைய மதிப்பீடுகளின் ஒரு பகுதிதான் இது. அவர் நடிப்பைப் பற்றி மேலான விமர்சனங்களை நிறைய வைத்தவன் என்பதால் இந்த விமரிசனத்தை வைப்பதிலும் தவறில்லை எனக் கருதுகிறேன்.

கமலின் இன்னொரு உலகம் பகுத்தறிவு பேசும் நாத்திக உலகம். இந்த தளத்தில் இவருக்கு நிறையவே நண்பர்கள் உண்டு. ஆனால் வசதிக்கேற்ப கடவுளை துணைக்கழைக்கும் இவரது நவீன பெரியாரிஸம்தான் நமக்குப் புரியவில்லை. இது பலருக்கும் தெரியும்.

ஆனால் என்ன காரணத்திலாலோ அவரது அத்துமீறல்களுக்கு மட்டும் சிலர் சிறப்புச் சலுகை காட்டுகின்றனர். மீடியாக்கள் அவரை செல்லப் பிள்ளையாய் கொண்டாடுகின்றன, கழுத்தில் தமிழன் வில்லை மாட்டி!

இது... அவரது கோணல்களைப் படம் பிடிக்கும் நேர்ப் பார்வை. அவ்வளவுதான்...

முன்னாள் பத்திரிகையாளர் (நமக்கு அவர் அப்படித்தான்!) ஒருவர் கமல்ஹாசனை தனது பிளாக்குக்காக சமீபத்தில் பேட்டி எடுத்திருக்கிறார்.

அதில்தான் கமல்ஹாசனின் பகுத்தறிவு பளபளக்கிறது!

இதோ அதில் ஒரு பகுதி...

...உண்மையிலேயே ஆதி சங்கரரும், ராமானுஜரும்தான் மிகப்பெரிய சமூக சீர்திருத்தவாதிகள். அவங்க தப்பா எடுத்துக்கலைன்னா ஒரு விஷயம், தாழ்த்தப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கும் கி.வீரமணியும், தொல்.திருமாவளவனும் தங்களை ராமானுஜதாஸன்னு சொல்லிக்கிட்டா கூட தப்பில்ல.

ஏன் தெரியுமா? பண்டை காலத்தில் தாழ்த்தப்பட்ட பிரிவுக்காரங்கதான் மூட்டைத் தூக்கிக்கிட்டு போவாங்க. வழியில அவங்களுக்கு முதுகு வலிச்சா, யாரும் உதவிக்கு வரமாட்டாங்க. மூட்டையை கீழே தரையில் வெச்சா, மறுபடியும் சுமக்கிறது கஷ்டம். இப்ப கூட கிராமப்பகுதிகள்ள, நீங்க மூணு கல் நட்ட சுமைதாங்கி கல் இருக்கும். இதை நிறுவனும்னு முதல்ல சொன்னவர் யார் தெரியுமா? ராமானுஜர்தான். இது ராமானுஜர் படம் எடுத்த ஜீ.வி, ஐயர் சொல்லித்தான் எனக்கே தெரியும்!


ஆஹா... என்ன அரிய கண்டுபிடிப்பு!

இந்த நடுகல்லுக்கும் தமிழனின் நாட்டார் தெய்வங்களுக்கும் உள்ள தொடர்பை எத்தனை லாவகமாக மறைக்க முயல்கிறார் பாருங்கள்!

ராமானுஜரை தெய்வமாக வழிபடுகிறார்கள் இவரது சமூகத்தினர். அப்படியெனில் ராமானுஜக் கடவுளையும் ஒப்புக் கொள்கிறாரா இந்த ‘ஸ்ரீலஸ்ரீ கமலானந்த ஸ்வாமிகள்’!

அது கிடக்கட்டும்... ராமானுஜரை கடவுளாக இவரது சமூகம் கொண்டாடுகிறது. அதே ராமானுஜர்தான் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஏகப்பட்ட நல்ல விஷயங்களைச் செய்ததாகக் கூறுகிறார்கள். அப்படியெனில் இவரது சமூகத்தினர், இன்றைக்கு தாழ்த்தப்பட்ட மக்களை சகோதரர்களாக அல்லவா ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும்! மாறாக, இன்றைக்கும் அவர்கள் நின்ற இடத்தை சாணம் தெளித்து தீட்டுக் கழிக்கிறார்களே... இந்த முரண்பாட்டுக்குப் பெயர்தான் பகுத்தறிவா...

ஆதி சங்கரர் மிகப் பெரிய சமூக சீர்திருத்தவாதிதான்... இவர்கள் சொல்லும் கதைகளின்படி. ஆனால் காஞ்சிபுரத்தில் நன்கு அறிமுகமான தலித் ஒருவனால் சங்கர மடத்து இரண்டாம் கட்டுக்குள் இன்னும்கூட நுழைய முடியாத நிலைதானே...

இதுபற்றியெல்லாம் தனது பகுத்தறிவுப் பிரச்சாரத்தில் கமல் பிரஸ்தாபிக்கலாமே... ஆனால் இன்றும் ராமானுஜதாஸன்... ரங்கராஜ நம்பியாக தன்னைக் காட்டிக் கொள்வதில்தானே இவருக்கு அக்கறை இருக்கிறது... வட கலை, தென்கலை என செத்துப்போன சமாச்சரங்களுக்கு விஞ்ஞான சாமரம் வீசிக் கொண்டிருக்கிறார் இந்த திறமையான கலைஞர் என்பதுதான் வேதனை.

தலித்துகள் என்றால் ஆப்ரிக்கர்களைவிட கருப்பாக... பூவராகன்களாகத்தான் இருப்பார்கள் என்பது இவர் உலகத்து நியதி போலும்! தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கற்பனையில் கூடவா நல்ல உருவம் கொடுத்துப் பார்க்க முடியாது!

இதே கமல்ஹாசன் முன்பொருமுறை விகடனுக்கு அளித்த பேட்டி...

நான் எப்போதும் என்னை பிராமணனாக அடையாளம் காட்டிக் கொள்ளக் கூடாது என்பதில் தீவிரமாக இருந்தேன். என் பெண்ணுக்குக் கூட பள்ளியில் சாதிப் பெயர் குறிக்க மறுத்துவிட்டேன்.

சின்ன வயதில் எங்கப்பா கூட கோயிலுக்குப் போய் கச்சேரியெல்லாம் கேப்பேன். ஆனா, எனக்கு சுட்டுப்போட்டாலும் பிராமணத்தனம் வராது. சுட்டுப் போட்டாலும் இந்த மந்திரங்கள் தெரியாது. அதைக் கத்துக்கும் ஆர்வமும் எனக்கில்லை... நான் படிச்சதெல்லாம் நான்-பிராமண இலக்கியங்கள்தான்!


ஆனால் இன்று கமல் அந்த பிளாக்கருக்கு அளித்துள்ள பேட்டி...

...ஆமாம், எனக்கு விஷ்ணு ஸகஸ்ரநாமம் முழுசா தெரியுமே... (கொஞ்சம் சொல்லிக்காட்டுகிறார்). சுப்ரபாதம் முழுசா தெரியும். திருப்பல்லாண்டு கூட தெரியும். எனக்கு அபிராமி அந்தாதி தெரிஞ்சதினாலதான் என்னால் குணா படத்தில் அதை சொல்ல முடிஞ்சுது.

இதுக்கு காரணம் டி.கே. சண்முகம் அண்ணாச்சி. குழந்தையாக இருந்தபோது அவருடைய நாடக குழுவில இருந்தேன். ஊர் ஊரா போவோம். அப்ப கோவிலுக்கு கூட்டிக்கிட்டு போவார். எந்த கோவிலுக்கு போறோமோ அந்த பாடல் சொல்லணும். அப்படித்தான் தேவாரம், திருவாசகம் படிச்சேன். பிரபந்தத்தில எனக்கு பல பாடல்கள் தெரியும்... (அபிராமி அந்தாதியிலும், திவ்யபிரபந்தத்திலும் சில பாடல்கள் சொல்லிக்காட்டினார்...)


ஏன் இவ்வளவு முரண்கள் கமல் அவர்களே...

மூட நம்பிக்கைக்கு எதிர்ப்பு என்று கூறிக்கொண்டே நீங்கள்தான் எத்தனை மூடத்தனங்களை, முரண்களை உங்களுக்குள் கொண்டிருக்கிறீர்கள்...

தம் வசதிக்காக மரபுகளை உடைத்துக் கொண்டு வாழ்வதற்குப் பெயர் பகுத்தறிவல்ல...

மரபுகளும், சமூக விதி மீறல்களும் ஒரு சமூகத்தின் முன்னேற்றத்துக்காகப் பயன்படும்போதுதான் அது புரட்சி. மற்றபடி சொந்த வசதிக்காக, ஒழுக்க மீறல்களுக்காக அவற்றைப் பயன்படுத்தும்போது, அது சுயநலமாகிறது!

இதை நமது ‘பச்சைத் தமிழர்கள்’ இனியாவது புரிந்து கொள்வார்களா... அல்லது பிரிவினை வளர்த்தாலும், நாகரீகமாக சாதியம் பேசினாலும் அவர் நம்மாளு என்று அனுசரித்துக் கொள்வார்களா... தொல் திருமாக்கள்தான் சொல்லவேண்டும்!

குறிப்பு: ரஜினிக்கு கமல் நெருங்கிய நண்பர். ரஜினி மிகவும் மதிக்கும் ஒருவரைப் பற்றி இப்படி எழுதலாமா என பின்னூட்டம் எழுதத் தயாராக உள்ள நண்பர்களுக்கு... அவர்களின் நட்புக்கும், இந்தக் கருத்துக்கும் சம்பந்தமில்லை. சொல்லப்போனால் கமல் என்ற நடிகரின் மீதான விமர்சனம் அல்ல இது. நடிகன் என்ற வட்டம் தாண்டிய கமலின் சமூகப் பார்வை மீதான விமர்சனம் மட்டுமே!

Friday, September 12, 2008

மிச்சமிருக்கும் மனிதநேயம்!


அரசியல்வாதிகள் திரும்பத் திரும்ப செய்யும் தவறு, திரைக் கலைஞர்கள் மீது நடத்தும் அநாவசியத் தாக்கு தல்கள்.

யாரைத் தாக்கினால் எளிதில் விளம்பரமும் பரபரப்பும் தங்களைச் சூழ்ந்து கொள்ளும் என்ற சூட்சுமம் புரிந்தவர்கள் இந்த அரசியல் வியாதிகள்.

அந்த விளம்பரம்தான் அதிகார வியாபாரத்துக்கு இவர்கள் போடும் முதலீடு. ஆனால் மக்களோ இதைப்பற்றி யோசிப்பதுகூட இல்லை பல நேரங்களில். தாங்கள் கண்ணால் பார்க்கும் உண்மைகளைக் கூட உணராமல், இந்த போலி அரசியவ்வாதிகளின் பின்னால் போய், நல்ல மனிதர்களின் மனங்களைக் காயப்படுத்துகிறார்கள்.

ரஜினி கன்னடர்களிடம் மன்னிப்புக் கேட்கவில்லை என்ற உண்மையை இவர்களில் பெரும்பாலோர் கண்ணால் பார்த்தவர்கள்தான். ஆனால் அதை உணர மறுத்தார்கள், சுயநல மீடியா மற்றும் போலி அரசியல்வாதிகள் போட்ட கூச்சலில் மயங்கி.

பலரும் நன்றாக இருக்க வேண்டும் என்ற பெருந்தன்மையில் ரஜினி செய்த ஒரு விஷயத்தை, வேண்டுமென்றே எதிர்மறையாக்கி, ஒரு இனத்துக்கே அவரை எதிரியாக்கப் பார்த்தார்கள். இது எத்தனை பெரிய கயமைத்தனம்?

இப்போது மகாராஷ்டிராவில் அமிதாப் பச்சன் குடும்பத்துக்கு எதிராக தேவையற்ற பிரச்சினைகளை எழுப்பி வருகிறார் பால் தாக்கரே மற்றும் அவரால் வளர்க்கப்பட்ட விஷ விருட்சமான ராஜ் தாக்கரே.

இன்னும் இப்படிப்பட்ட பண்பற்ற தலைவர்களின் பின்னால் லட்சக் கணக்கில் அணிவகுக்கவும், அவர்கள் சொல்லும்போதெல்லாம் போஸ்டர்களைக் கிழிக்கவும், சாணி அடிக்கவும் ஒரு கும்பல் தயாராக இருக்கிறது.

இந்தியா படித்தவர்கள் நிறைந்த நாடு என்று வெளியில் சொல்லிக் கொள்வதே எத்தனை வெட்கக்கேடான விஷயம்!

பண்பின் இருப்பிடம், கலாச்சாரங்களின் பிறப்பிடம், மக்களாட்சியின் தாயகம் என்று நம்மை நாமே சொறிந்து விட்டுக் கொள்வதில் ஏதாவது அர்த்தமிருக்கிறதா?

விஞ்ஞானமும், நவீனத்துவமும் வளர வளர மக்களிடம் மனிதத்துவம் மறைந்து வக்கிரம் வளர்ந்ததுதான் மிச்சம்!

இத்தனை தாக்குதல்களுக்குப் பின்னும் ரஜினியும் அமிதாப்பும் பணிந்து செல்வதற்குப் பெயர் கோழைத்தனம் அல்ல... இன்னும் சற்றே மிச்சமிருக்கும் மனிதநேயம் அது!

கொடிகட்டிப் பறக்கிறது தமிழன் நியாயம்!


ஒரு பசுவைக் கொன்ற பாவம் செய்த தன் மகனையே தேர்க் காலில் இட்டுக் கொன்று நீதியை நிலைநாட்டிய பரம்பரையாக்கும் நாங்கள்... என மார்தட்டிக் கொள்ளும் மறத் தமிழர்களுக்கு...

சில தினங்களுக்கு முன் மன்னிப்பு... வருத்தம் - இரண்டும் துவைதம் அல்ல... அத்வைதைமே... அதாங்க... இரண்டும் ஒன்றே என்று வாதிட்டு தங்கள் எழுத்து வல்லமையை பிரஸ்தாபித்த அஞ்ஞானிகள், ஆவிகள், ஜூவிகள் போன்ற பாவிகளை இன்னும் மதிக்கிற தமிழ் பெருங்குடி மக்களே...

நேற்று விகடன் போட்டிருக்கும் கூழைக் கும்பிடுக்கு அர்த்தம் என்ன... மன்னிப்பா... வருத்தமா.. அல்லது அவர்கள் பாணியில் இரண்டும் ஒன்றுதானா...?

இதோ ஜூனியர் விகடனில் வெளிவந்துள்ள ‘மன்னிப்பு’ மடல்...

கடந்த 10.9.08-ம் தேதியிட்ட ஜூ.வி. இதழ் கவர் ஸ்டோரியில் இடம்பெற்ற தகவல்களை முற்றிலுமாக மறுத்து, அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான செல்வி ஜெயலலிதா சார்பாக அவருடைய வழக்கறிஞர்

நவநீதகிருஷ்ணன் நோட்டிஸ் அனுப்பியுள்ளார்.

‘குறிப்பிட்ட அந்தச் செய்தி, வரிக்கு வரி உண்மைக்குப் புறம்பானது… உள்நோக்கத்தோடு வெளியிடப்பட்டுள்ளது’ என்பதோடு, ‘அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளர் பதவி என்பது முழுக்க முழுக்க ஜனநாயக முறைப்படி கட்சிக்காக வகுத்துள்ள விதிமுறைகளின்படியே நிரப்பப்படுகிறது. அதன் தேர்தல் நடைமுறையில் யாராலும் தலையிட்டு தவறான ஆதிக்கம் செலுத்த இயலாது’ என்றும் வழக்கறிஞர் கூறியுள்ளார்.

அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டே, அந்தச் செய்தியை நாம் வெளியிட்டோம். மற்றபடி, ஜூ.வி. ஒருபோதும் நடுநிலை தவறாது என்பதையும் யார் தூண்டுதலுக்கும் ஆளாகாது என்பதையும் இந்த தருணத்தில் மீண்டும் உறுதிபடுத்த விரும்புகிறோம்.

குறிப்பிட்ட அந்தச் செய்தி, யாருடைய நற்பெயருக்கும் களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் பிரசுரிக்கப்படவில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இருப்பினும், குறிப்பிட்ட அந்தச் செய்தியால் செல்வி ஜெயலலிதா மற்றும் அவரைச் சார்ந்தவர்களின் மனம் புண்பட்டிருப்பதாக அறிகிறோம். இதுகுறித்து, எங்கள் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
- ஆசிரியர்


ஜெயலலிதா ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டவுடன், துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று, தங்கள் நம்பகத்தன்மையையே (இருந்தால்தானே... என்கிறீர்களா!) அடகு வைத்து மன்னிப்புக் கேட்டுள்ளது விகடன் குழுமம். ரிப்போர்ட்டரும் இந்த இதழில் கேட்டுவிடும். அவர்களுக்குத் தெரிந்தது அது ஒன்றுதானே...

ஏதாவது சந்துமுனையில் நாலுபேர் பேசிக்கொள்ளும் புரளிகளைக் கூட கவர் ஸ்டோரியாக்குவதுதான் விகடன், குமுதத்துக்குத் தெரிந்த பத்திரிகை தர்மம்.
உதாரணம் பாருங்கள்:

பிரதமர் மன்மோகன் சிங், என்னை ஏமாற்றிவிட்டார், என யாராவது ஊர் பேர் தெரியாத ஒரு பெண் கூறினாலும் அதன் நம்பத் தன்மை, அதற்கான குறைந்தபட்ச ஆதாரங்கள் எதைப்பற்றியும் விசாரிக்காமல் ‘பிரதமர் ஏமாற்றினாரா... பெண் பகீர் புகார்!’ என அப்படியே பிரசுரிப்பதுதான் அவர்களுக்குத் தெரிந்த புலனாய்வு ஜர்னலிஸம்.

அடுத்த இதழிலேயே ‘நாம் விசாரித்த வகையில் இதற்கான ஆதாரம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. பிரதமர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டோம். இந்த இதழ் அச்சேறும் வரை பதில் கிடைக்கவில்லை...’ என்று கூறி மங்களம் பாடிவிடுவார்கள். இரண்டு இதழ்களுக்கு பரபரப்பாக மேட்டர் தேற்றிய லாபம் அவர்களுக்கு.

சற்றே அலசிப் பார்த்தால் அவர்களது ஒவ்வொரு பரபரப்பு கவர் ஸ்டோரிக்குப் பின்னாலும் இப்படிப்பட்ட அசிங்க உண்மைகள்தான் ஒளிந்து கிடக்கும்.
எனவே இவற்றைக் காசு கொடுத்து வாங்கிப் படிக்கும் மக்கள்தான் விழிப்போடு செயல்பட வேண்டும்.
எட்டு ரூபாய் செலவு பண்ணி இப்படிப்பட்ட பொய் பத்திரிகைகளை வாங்கிப் படிக்க வேண்டுமா...

இவர்கள் ஒரு பொய்ச் செய்தியைப் போட்டபிறகு சம்பந்தப்பட்டவர்கள் அதை மறுக்கும்வரை, மக்கள் உண்மை என்றே நம்ப வேண்டிய கட்டாயம். கேஸ் போடுவேன், கோர்ட்டுக்குப் போய் கோடிகளில் நஷ்ட ஈடு கேட்பேன், என்று யாராவது நோட்டீஸ் விட்டால் வாலைச் சுருட்டி பையில் போட்டுக் கொண்டு மன்னிப்புக் கேட்கும் படலத்தில் இறங்கிவிடுவார்கள்.


ரஜினி போன்ற நல்ல மனிதர்கள், இந்த மாதிரி மூன்றாம் தர பத்திரிகைகளுடன் மோதுவதைக் கூட விரும்புவதில்லை. இதனால், ரஜினி போன்றவர்களைப் பற்றி இந்தப் பத்திரிகைகள் கூறுவதை மக்களும் சில நேரங்களில் நம்பிவிடுகிறார்கள்.

இவர்களாவது மன்னிப்புக் கேட்கிறார்கள்... மாய்ந்து மாய்ந்து அடுத்த சில வாரங்களுக்கு துதி பாடுகிறார்கள், சம்பந்தப்பட்டவர்களைக் நேரில் ஆளனுப்பி சமாதானமும் செய்கிறார்கள்.

ஆனால் ரஜினி இப்படியெல்லாம் செய்யவில்லையே... மனதார.... நேர்மையாக தன்னுடைய பேச்சுக்கு விளக்கம் கூறினார். அவ்வளவே... ஆனால் அதை எந்தளவு முடியுமோ அந்த அளவு கொச்சைப்படுத்தி அவருக்கு களங்கம் உண்டாக்க முயன்ற இந்தப் பொய்யர்களின் முகமூடி ஒரே மாதத்தில் கிழிந்துவிட்டதே!

எங்கே அந்த போலி சுயமரியாதை பேசும் அஞ்ஞானிகள்?