Friday, September 5, 2008

உருவாகிறது ஒரு பரபரப்பு கவர் ஸ்டோரி!


‘ஏ... என்னப்பா... இந்த இஷ்யூவுக்கு என்ன போடப்போற... முன்ன கூட்டிச் சொல்லிடுய்யா... நானும் பார்த்துக்கிறேன். அப்புறம் நம்மைப் போட்டு ராவிடுவானுங்க..’
-இது தமிழகத்தின் பிரபலமான இரண்டு வாரமிருமுறைப் பத்திரிகை நிருபர்கள் தினசரி பேசிக் கொள்ளும் வழக்கமான வசனங்கள்.

சென்னை பெருநகரில் மட்டுமல்ல... ஒவ்வொரு மாவட்டத்திலுமுள்ள அவர்களின் நிருபர்கள் இப்படித்தான் கூடிப் பேசி வாரமிருமுறை கும்மியடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரே விஷயத்தை தலைப்புச் செய்தியாகச் சொல்ல இரண்டு குழுமம் இரண்டு வித பத்திரிகைகளை நடத்துவானேன்..!

நாம் என்னமோ கற்பனையாக இங்கே எழுதுவதாக சிலர் இங்கே கமெண்ட் எழுதக் கூடும். உங்கள் பங்குக்கு நீங்களே கூட ஒருமுறை புலனறிந்து பாருங்கள், உண்மை புரிந்து அதிர்ந்து நிற்பீர்கள்.

இந்த வாரம் ரஜினிதான் டாபிக் என்று வைத்துக் கொள்ளுங்களேன்...
‘வீழும் மவுசு – அதிர்ச்சியில் ரஜினி’, என ஒரு அரைவேக்காடு எழுதியிருக்கும். அதே நாளில் வெளியான போட்டிப் பத்திரிகை எனக் கூறிக்கொள்ளும் நிகழ்காலக் குரலோ, ‘ரஜினியின் புகழ் இன்னும் ஒருபடி உயர்வு’ – என செய்தி வெளியிட்டிருப்பார்கள். அவர்கள் நோக்கம் பத்திரிகை தர்மமல்லா... கல்லாப் பெட்டி தர்மம்.

‘நான் அடிக்கிற மாதிரி அடிப்பேனாம், நீ தடவிக் கொடுப்பியாம். எப்படியோ ரெண்டு பேர் மேலேயும் பார்வை இருந்து கொண்டே இருக்குமல்லவா... அதுதான் பிழைக்கும் வழி. இதிலிருந்து மட்டும் மாறவே கூடாது’ - இந்த இரு குழுமங்களின் எடிட்டோரியல் விதி இதுதான்!


எக்ஸ்க்ளூசிவ் மேட்டர் என்று போஸ்டர், அட்டைப் படம், பத்திரிகை விளம்பரம் என எல்லா வழியிலும் இவர்கள பிரம்மாண்டப் படுத்துவார்கள். வாங்கிப் படித்துப் பார்த்தால், இருவருமே ஒரே விவகாரத்தைதான் எழுதியிருப்பார்கள், அதுவும் ஒரே மாதிரியாக! அப்போதுதானே உங்களைப் போன்று காசு கொடுத்துப் பத்திரிகை வாங்குபவர்கள் இவர்களின் பொய்யை உண்மையென்று நம்புவார்கள்.

சரி... ரஜினி விவகாரத்தில் மட்டும் ஏன் ஒருவர் எதிர்ப்பு, ஒருவர் ஆதரவு என்ற நிலையை எடுத்தார்கள். பத்திரிகை விற்பனைதான்.

இதே அழகிரி விவகாரமென்றால் இருவரும் ஒரே மாதிரிதான் எழுதியாக வேண்டும். இல்லாவிட்டால் சென்னைய விட்டே காலி செய்துகொண்டு ஓட வேண்டி வரும். ஆனால் ரஜினியைப் பற்றி எவ்வளவு எழுதினாலும், எந்த மாதிரி எழுதினாலும் இவர்கள் பத்திரிகை விற்கும்.

இனி இந்த சனியன்களை வாங்கவே கூடாது என சபதமேற்றவர்கள் கூட, காசு கொடுத்து அந்த இரு குழுமப் பத்திரிகைகளையும் வாங்கக் காரணம், ஏதாவது ஒரு வழியில் மீண்டும் மீண்டும் ரஜினி, ரஜினி படங்கள், சௌந்தர்யா, அல்லது இருக்கவே இருக்கிறது ரஜினி அரசியல் பிரவேச ‘எக்ஸ்க்ளூசிவ் கட்டுரை’... என போட்டுத் தாக்கிக் கொண்டே இருக்கிறார்கள்.

காரணம் வற்றாத செய்திச் சுரங்கம் ரஜினி!

இவர்கள் மட்டும் என்றில்லை... பிற வார, மாத செய்தி இதழ்களும் கூட வேறு யாரைப் பற்றியும் தனிப்பட்ட முறையிலோ அல்லது அவர்களின் பொது வாழ்க்கை – நிர்வாகத் திறன் பற்றியோ எழுதத் திராணியற்றுக் கிடக்கின்றன. ஆனால் ரஜினி விவகாரம் என்று வந்துவிட்டால் மட்டும் தங்கள் அபார கற்பனைத் திறனைக் காட்டுகின்றன.

அரசு இலவச கலர் டிவி, இலவச நிலம், இலவச வீடுகள் என எல்லாம் பணக்காரர் வீடுகளில் தஞ்சமடைகின்றன. அல்லது கட்சிக்காரன் மட்டுமே அனுபவிக்க வசதியாகக் கொடுக்கப்படுகின்றன. இதை எழுத ஒரு பத்திரிகைக்கும் வக்கில்லை.

தொழில் வளர்ச்சி எனும் பெயரில் விளை நிலங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டு வருகின்றன. சென்னையைச் சுற்றி 100 கிலோ மீட்டர் தூரத்துக்கு வயல்கள் கிடையாது. ஆங்காங்கே சின்னச் சின்னத் தீவுகள் மாதிரிதான் சொற்ப அளவில் விவசாய வயல்கள் தெரிகின்றன. இதைப் பெரிதாக எழுத ஒரு ஜோல்னா பையனுக்கும் துப்பில்லை.

இம்மாதிரித் தகவல் கிடைக்கும் போது இரு குழும நிருபர்களுமே ஒன்றாகப் போய்த்தான் லோக்கல் அரசியல் பிரபலங்களைப் பார்க்கிறார்கள். கனமான ‘கட்டோடு’ வீடு திரும்புகிறார்கள். பின்னர் விஷயம் கமுக்கமாகிவிடும்.

இதிலும் ஓரிரு விதிவிலக்குகள் இருக்கவே செய்கிறார்கள் என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் அவர்கள் நேர்மையாய் இருந்து என்ன பலன், அந்த நிர்வாகங்கள்தான் ஏற்கெனவே அடிமாடுகளாகப் போய்விட்டனவே...

ஆனால் ரஜினி... வாய்ஸ் என்ற இரு வார்த்தைகள் இருந்தால் போதும் வரிந்து கட்டிக் கொண்டு வந்துவிடுகின்றன எழுதுவதற்கு.

பிரபலமான ஒரு மனிதரைப் பற்றி எப்படி எழுதாமல் இருக்க முடியும்?
நியாயமான கேள்விதான். ஆனால் நியாயமாக எழுத வேண்டும் அல்லவா... மலிவான வியாபார நோக்கத்துக்காக, ரஜினி போன்ற நல்ல மனிதர்களின் இமேஜை சிதைக்கும் உரிமையை, அதிகாரத்தை இவர்களுக்கு யார் தந்தது?

குறிப்பு: இந்தப் பதிவுக்கும், அடுத்து வரும் குமுதம் சர்வே குறித்த கட்டுரைக்கும் நீங்களாகவே முடிச்சுப் போட்டுக் கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல!!

4 comments:

Anonymous said...

பிழைக்கவும் ரஜினி பழிக்கவும் ரஜினி! (இயக்குன அமீர் கூறியது போல ) அனால் ஒன்று !வலைத்தளங்களில் வாந்தியெடுப்பது, பத்திரிகைகளில் வாந்தியெடுப்பது பொன்ற செயல்கள் துரோகிகள், எதிரிகள் இவர்களுக்கு ஹை-டெக் கா தெரியுது… நான் கேள்விப்பட்டேன், குசேலன் வெளிவந்த சில மணி நேரத்திலேயே யு டூயுப் ல மொத்த காட்சிகளையும் அப்லோடு செந்சிருக்கானுங்க, திருட்டு விசிடிய அளவுக்கதிகமா செந்சிருக்கானுங்க….

Vaanathin Keezhe... said...

நன்றி...
உண்மைதான். இதற்கென்றே ஒரு கும்பல் அலைகிறது...

கிரி said...

//பிரபலமான ஒரு மனிதரைப் பற்றி எப்படி எழுதாமல் இருக்க முடியும்?
நியாயமான கேள்விதான். ஆனால் நியாயமாக எழுத வேண்டும் அல்லவா... //

மொத்த பதிவையும் இந்த இரண்டு வரியில் கூறி விட்டீர்கள்

கலக்கலான பதிவு

Vaanathin Keezhe... said...

நன்றி