Showing posts with label குமுதம். Show all posts
Showing posts with label குமுதம். Show all posts

Sunday, December 21, 2008

தமிழ்ப் பத்திரிகைகளின் 'நம்பகத்தன்மைக்கு' இதோ இன்னொரு சாம்பிள்!

மீண்டும் மீண்டும் தங்களின் நம்பகத் தன்மையை தாங்களே கேவலப்படுத்திக் கொள்வதில் தமிழ்ப் பத்திரிகைகளுக்கு நிகர் எதுவுமில்லை.

மற்றவர்களுக்கு எப்படியோ, ரஜினி ரசிகர்களுக்கு கிட்டத்தட்ட இது பழகிப்போன விஷயமாகிவிட்டது.

இருவாரங்களுக்கு முன் ரிப்போர்ட்டர் வாரமிருமுறை இதழில் ஒரு கவர்ஸ்டோரி.

‘ரஜினி பிறந்த நாளுக்கு ரசிகர்கள் தரும் அதிர்ச்சிப் பரிசு! - சத்தியநாராயணாவை ரஜினி கழற்றி விட்டுவிட்டதால், கோபித்துக் கொண்டுள்ள 14 மாவட்ட ரஜினி மன்ற தலைவர்கள், சத்தியின் ஆதரவாளர்களுடன் ரஜினி பிறந்த நாளன்று கூண்டோடு அதிமுகவில் சேரப் போகிறார்கள்!’


டிசம்பர் 12-ம் தேதியும் வந்தது... மாவட்டம் தோறும் நடந்த சிறப்பான பிறந்தநாள் கொண்டாட்டங்கள் குறித்த செய்திகள்தான் இதுவரை வந்து குவிந்த வண்ணம் உள்ளன.
அன்றைய தினம் ஈ, காக்கா, குருவி கூட ரஜினி மன்ற நண்பர்களைச் சுற்றிச் சுற்றித்தான் வந்துகொண்டிருந்திருக்கும். காரணம் இங்குதானே சரியான ‘தீனி’ இருந்தது அன்றைக்கு.

எந்தெந்த மாவட்டச் செயலாளர்கள் அதிமுகவில் போய்ச் சேர்ந்தார்கள்... என்ற விவரத்தை இந்த கட்டுரை தயாரித்த குமுதம் ஆசிரியர் குழு, அட... அடுத்த இதழில்கூட வேண்டாம்... இப்போதாவது வெளியிடலாமே!

அன்று, சத்தி மன வருத்தத்தில் புழுங்குவதாக விகடன் குழுமமும் இதே குமுதமும் அட்டைப் படக் கட்டுரையும், அவரது பேட்டியையும் (‘ராமனின் அம்பு முனை பட்ட வலி!’ - விகடன்!) வெளியிட்டன.

இதோ... அதே ரிப்போர்ட்டர் இதழில் இன்று வந்துள்ள சிறப்புக் கட்டுரை!

படித்துவிட்டு, நீங்களே ஒரு முடிவுக்கு வாருங்கள்... அப்படியே, சத்திக்கு ஓய்வளிப்பதாக ரஜினி மன்றத்திலிருந்து அறிவிப்பு வந்தபோது, நாம் வெளியிட்ட சத்தியநாராயணாவின் சிறப்புப் பேட்டியையும் நினைவில் கொள்ளுங்கள்!

ரஜினி பிறந்த நாளில் சத்தியநாராயணா செய்த யாகம்!!


கடந்த 12-ம்தேதி காலை பத்து மணி. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இடைக்காட்டூர் என்ற குக்கிராமத்தில் உள்ள சித்தர் கோயிலில் வந்து நின்றது ஒரு ஸ்கார்பியோ கார். அந்த காரில் இருந்து இறங்கி அமைதியாக கோயிலுக்குள் நுழைந்தவர் வேறு யாருமில்லை. சத்தியநாராயணா.

சூப்பர் ஸ்டார் ரஜினியால் மன்றப் பொறுப்பில் இருந்து கழற்றிவிடப்பட்டார் என்றும், ரஜினிக்கும் அவருக்கும் தற்போது ஏழாம் பொருத்தம் என்றும் சத்திய நாராயணாவைப் பற்றி பரபரப்புச் செய்திகள் சமீப காலமாக வந்து கொண்டிருக்கும் நிலையில், சத்தியநாராயணா ரஜினியின் பிறந்தநாளும் அதுவுமாக திடுதிப்பென இடைக்காட்டூர் சித்தர் கோயிலுக்கு வந்தது அங்கிருந்த சொற்ப பக்தர்களுக்கும் திகைப்பைத் தந்தது.

வயல்வெளிகளுக்கு நடுவில் எந்த அடிப்படை வசதியும் இல்லாத அந்த குட்டியூண்டு கோயிலில் சுமார் ஐந்து மணிநேரம் தங்கியிருந்து, ரஜினி மற்றும் லதா பெயரில் யாகம் நடத்திவிட்டு, அன்று மதியம் முந்நூறு பேருக்கு அன்னதானமும் செய்திருக்கிறார் சத்தி. ரஜினி பிறந்தநாளில் பிரபல சித்தர் கோயிலுக்கு வந்து ரஜினிக்கும் அவரது மனைவிக்கும் யாகம் செய்ததன் மர்மம் என்ன?

அதைத் தெரிந்து கொள்ள உடனே இடைக்காட்டூருக்குப் புறப்பட்டோம்.

மதுரை-ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் முத்தனேந்தல் என்ற சிற்றூரின் வடப்புறமாகப் பிரியும் சாலையில் மூன்றாவது கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது இடைக்காட்டூர். இந்த ஊரில் பிறந்து வளர்ந்து திருவண்ணாமலையில் ஜீவசமாதி ஆனவர்தான் இடைக்காட்டுச் சித்தர். இடைக்காடர் என்று அழைக்கப்படும் அவர் பதினெட்டுச் சித்தர்களில் தனித்தன்மை வாய்ந்தவராம்.

... ... ... அப்படி நவகிரக கோயில் என்று பெயர் கொண்ட அந்தச் சிறிய கோயிலில் மூலவரே நவகிரகங்கள்தானாம். கடந்த பத்தாண்டுகளாக திருவாதிரை பூஜையும், கடந்த ஐந்து மாதங்களாக பௌர்ணமி பூஜையும் நடந்து வருகிறது. அந்தக் கோயிலில்தான் 12-ம்தேதி நடந்த பௌர்ணமி பூஜையில் கலந்துகொண்டு யாகமும் நடத்திவிட்டுச் சென்றிருக்கிறார் சத்தியநாராயணா.

சென்னையிலிருந்து 12-ம்தேதி அதிகாலை சத்தியஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனர் தியாகராஜனுடன் விமானம் மூலம் மதுரை வந்த சத்தியநாராயணா, அங்கிருந்து காரில் பரமக்குடி வந்து லாட்ஜ் ஒன்றில் தங்கியிருக்கிறார். அங்கே தனக்கு நெருக்கமான மாவட்ட நிர்வாகிகளை மட்டும் வரவழைத்துப் பேசிய சத்தியநாராயணா, 'நான் வந்த விஷயமோ, நோக்கமோ வேறு எக்காரணம் கொண்டும் வெளியில் கசியக் கூடாது. குறிப்பாக பத்திரிகையாளர்களுக்குத் தெரியக் கூடாது' என்று கூறியிருக்கிறார். வெள்ளி, சனி ஆகிய இரண்டுநாட்கள் அவர் பரமக்குடியில் தங்கியிருந்தும் அவரது விசிட் அவரது விசுவாசிகளால் பொத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

ரஜினி பெயரில் சிறப்பு யாகம்!

12-ம்தேதி காலை பத்து மணியளவில் இடைக்காட்டூர் சித்தர் கோயிலுக்கு வந்து சேர்ந்த சத்தியநாராயணா, அங்கே ஏற்கெனவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த யாகசாலையில் தியாகராஜனுடன் அமர்ந்தாராம். அதன்பிறகு நடந்தவற்றை அந்தக் கோயில் அர்ச்சகர் நம்மிடம் விவரித்தார்.

‘ஏறத்தாழ இரண்டு மணிநேரம் நடந்த அந்த யாகத்தில், சத்தியநாராயணா பயபக்தியுடன், முழு ஈடுபாட்டுடன் அமர்ந்திருந்தார். `யாருக்காக யாகம்? அவர்களது பெயர், நட்சத்திரங்களைக் கூறுங்கள்' என்று யாகம் நடத்தியவர் கேட்டபோது, `ரஜினிகாந்த், திருவோண நட்சத்திரம், லதா ரஜினிகாந்த், மகம் நட்சத்திரம்' என்று சத்தியநாராயணா கூறினார். யாகம் மிக எளிமையாக நடந்து முடிந்த பின், கோயிலுக்குள் நடந்த அன்னதானத்தில் அவரே எல்லோருக்கும் உணவு பரிமாறினார். பிற்பகல் மூன்று மணிக்கு அவர் புறப்பட்டுப் போகும் வேளையில் எங்களிடம், `கோயில் சிறியதாக இருந்தாலும் சிறப்பாக இருக்கிறது' என்று சொல்லிவிட்டுச் சென்றார்’ என்றார் அந்த அர்ச்சகர்.

.... .... அந்த நவகிரக சித்தர் கோயிலை விட்டுக் கிளம்பும் முன் சத்தியநாராயணா, தன் சொந்தச் செலவில் கோயிலைச் சுற்றி பக்தர்கள் வலம் வர வசதியான ஏற்பாட்டைச் செய்து தருவதாகக் கூறியிருக்கிறார். அவரிடம் `அன்னதான மண்டபம்' ஒன்றையும் கட்டித்தருமாறு கோரிக்கை வைத்த கோயில் பக்தர்கள், அடுத்து வைத்த இன்னொரு கோரிக்கைதான் வித்தியாசமானது.


`ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமியன்று பதினெட்டு சித்தர்களும் இங்குள்ள நவகிரகங்களை வழிபட வருவதால் அந்த நாளில் கோயிலில் அதிர்வுகள் (வைபரேஷன்) அதிகமாக இருக்கும். ஆகவே வரும் சித்ரா பௌர்ணமியன்று சூப்பர் ஸ்டாரை இந்தக் கோயிலுக்கு அழைத்து வாருங்கள்' என்பதுதான் பக்தர்கள் வைத்த கோரிக்கை. அதற்கு எந்த பதிலும் கூறாமல் அமைதியாகச் சென்று விட்டாராம் சத்தி..."

-இப்படி முடியும் கட்டுரையில் மீண்டும் தங்கள் வக்கிரத்தைக் காட்டியுள்ளது குமுதம். அது,

"சத்தியநாராயணாவின் இந்தக் கோயில் விசிட், ரஜினி ரசிகர்கள் சிலருக்கு சிறிய சந்தேகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. தலைவரும் தளபதியும் தங்களுக்குள் `லடாய்' என்பது போல நாடகமாடுகிறார்களா? என்ற சந்தேகம்தான் அது. எது உண்மை என்பது அந்த இடைக்காட்டூர் சித்தருக்கே வெளிச்சம்!"

-நீங்கள்ளாம் திருந்தவே மாட்டீங்களாப்பா!!

ஒரு சின்ன நினைவூட்டல்: பசி என்பது நியாயமான விஷயம்தான்... அதற்காக வெந்தது... வேகாதது என கிடைப்பதையெல்லாம் நதிமூலம், ரிஷிமூலம் பார்க்காமல் எடுத்துப்போட்டு விழுங்குவது ஆறறிவு பகுத்தறிவு கொண்ட மனிதன் செயலா... அதுவும் வாளை விட வலியது என தோள் தட்டும் பத்திரிகைத் தொழிலுக்கு அழகா?

http://www.envazhi.com

Friday, September 5, 2008

இது குமுதத்தின் முறை!


போனவாரம் ரஜினியின் இமேஜ் சரியத் தொடங்கிவிட்டதாக, கொலம்பஸூக்கு இணையான அரிய கண்டுபிடிப்பை வெளியிட்டு தனது முட்டாள்தனத்தைப் பறைசாற்றிக் கொண்டது விகடன்.

இந்த வாரம் குமுதத்தின் முறை. அவர்கள் கேட்டிருப்பது ஒரே கேள்விதான். அதாவது, ரஜினியின் வாய்ஸூக்கு மவுசு குறைந்துவிட்டதா?

இதில் ரஜினியின் வாய்ஸூக்கு இன்னும் மவுசு இருப்பதாக, அதாவது ரஜினிக்கு ஆதரவாக 86 சதவிகிதமும், மவுசு குறைந்து விட்டதென 10 சதவிகிதமும், தெரியவில்லை என 4 சதவிகிதத்தினரும் தெரிவித்திருந்தார்கள்.

எத்தனை பேரிடம் கேட்ட கேள்வி இது, எத்தனை பேர் பதில் சொன்னார்கள், எந்தெந்த ஊர்களில் நடத்தப்பட்டது என்ற விவரங்கள் எதையும் குமுதமும் தரவில்லை. ஜனங்களுக்கு என்ன தெரியும் என்று நினைத்து விட்டார்களோ... அல்லது சர்வே நடத்தியவர்களுக்கே விஷயம் தெரியாதா... புரியவில்லை.

இருந்தாலும் இந்த சர்வே கட்டுரை முழுக்க ரஜினியின் புகழ் பாடும் வகையில் பாலச்சந்தர், எஸ்பி முத்துராமன், ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் சத்தியநாராயணா, ரஜினியின் நண்பர்கள் சோ எஸ் ராமசாமி, பாபு ராஜேந்திரன் ஆகியோரிடம் கருத்துக்களைப் பெற்று பதிவு செய்துள்ளனர்.

‘இருபத்தைந்து வருஷமா அவர் சூப்பர் ஸ்டாரா நிக்கறாருன்னா சும்மாவா... அவரது படங்களுக்குப் போட்டியே அவரோட அடுத்த படம்தான் சார்...’ என ஒரு இளம் பெண் கூறியிருப்பதையே பல இளைஞர்களும் வழிமொழிந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர் இக்கட்டுரையில்.

ரஜினியின் எந்தப் படத்திலும் நஷ்டம் வந்ததே இல்லை என முத்துராமனும், எனக்கு உதவி செய்ய வந்த அந்தப் புண்ணியவானுக்கு இப்படி இக்கட்டு ஏற்பட நானே காரணமாகிவிட்டேனே, என பாலச்சந்தரும் உருக்கமாகக் கூறியிருந்தனர்.

ஆயுளில் பாதி நாட்களைக் தலைவருடனே கழித்துவிட்டேன். தலைவரைப் பற்றி பெரிய மனிதர்கள் பெருமையாகப் பேசுவதைக் கேட்பதே தனக்கு சந்தோஷமான விஷயம் என ரஜினி மன்றத் தலைவர் சத்யநாராயணா தெரிவித்திருந்தார்.

நல்லது... ஒரு நல்ல விஷயத்தை ஒப்புக் கொண்டு, வெளியிட்ட குமுத்துக்கு நன்றி!

நியாயமா?

ஏன்... இதே இதழில், குசேலன் வெளியான அடுத்த வாரம் ஒரு அஞ்ஞானி, கடிதம் என்ற பெயரில் ரஜினி குறித்து ஒரு குப்பைக் கட்டுரை எழுதியிருந்தாரே... அப்போது தெரியவில்லையா ரஜினியின் செல்வாக்கு என்ன என்பது?

இவர்களுக்கு நிச்சயம் தெரிந்துதானிருக்கிறது.

ஆனால் அதை வெளியில் லட்சக்கணக்கானோர் படிக்கும் ஒரு ஊடகத்தின் மூலம் வெளிப்படுத்தி, குசேலன் என்ற படத்துக்கு பாஸிடிவ் இமேஜ் ஏற்படுத்துவதை இவர்கள் விரும்பவில்லை.

குசேலன் ரிலீசாவதற்கு ஒரு நாள் முன்பே படத்துக்கு ஓஹோவென விமர்சனம் எழுதிய இதே குமுதம், அடுத்த வாரமே அஞ்ஞானிகளை விட்டு காலை வாருகிறது. போன இதழில் கூட ரஜினிக்கு சவுந்தர்யா அட்வைஸ் என இஷ்டத்துக்கும் அவிழ்த்துவிட்டுள்ளது.

எதற்காக... எல்லாம் வியாபார உத்தி!

எனவே... ஆஹா இவர்கள் பரவாயில்லையே... நமக்கு ஆதரவாக சர்வே போட்டிருக்கிறார்களே எனறு மயங்கிவிட வேண்டாம் ரஜினியின் ரசிகர்கள்.
இவர்கள் ஒருபோதும் ரஜினிக்கு மனப்பூர்வமான ஆதரவைத் தெரிவிக்க விரும்பாதவர்கள்.

இதே குமுதம் அரசு பதில்களில் மறைமுகமாக ரஜினியைத் தாக்கி, அமிதாப்பைத் தூக்கியிருப்பதையும் மறந்துவிட வேண்டாம்.

அப்படியெனில் ரஜினி பற்றி யாருமே எதையும் எழுதக் கூடாதா..?

நியாயமாகப் பார்த்தால் ரஜினியைப் பற்றி எழுத இவர்கள் யாருக்கும் முதலில் குறைந்தபட்ச உரிமை கூடக் கிடையாது.

இவர்கள் ஒன்றும் அவரை ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுத்து பொது வாழ்க்கையில் அமர்த்திவிடவில்லை. அல்லது, சும்மா கிடந்தவரைக் கூப்பிட்டு கோடிக் கணக்கில் கொட்டிக் கொடுத்து விடவில்லை.

கஷ்டப்பட்டு 30 வருடங்கள் நடித்துச் சம்பாதித்தார். தன்னோடு இருந்த அத்தனைப் பேருக்கும் சம்பாத்தியத்துக்கு வழி செய்து கொடுத்தார். எத்தனையோ சாதாரண தயாரிப்பாளர்களை நட்சத்திர தயாரிப்பாளர்களாக்கினார். இதோ இப்போதும் கூட தன் படத்தில் பணியாற்றிய பின்னணி தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு லட்சக் கணக்கில் அள்ளிக் கொடுத்திருக்கிறார். அதுவும் தான் கவுரவ வேடத்தில் நடித்த ஒரு படத்துக்காக.

காசு கொடுத்து யாரையும் அவர் மன்றத்துக்கு அழைக்கவில்லை, பேனர் கட்டச் சொல்லவில்லை. அவர் மீதான ஈர்ப்பில், அன்பில் தானாகச் சேர்ந்த கூட்டம் இது. அதனால்தான் மற்ற எல்லோரையும் விட ரஜினி ரசிகர்களுக்கு ஒரு தனி மரியாதை இப்போதும். அவர்கள் சொல்வது கூட நட்சத்திர அந்தஸ்துடன் செய்தியாகும் தகுதியைப் பெறுகிறது.

ஒரு இஸ்திரிப் பெட்டியை வழங்கி போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டு, அன்று மாலைப் பத்திரிகையிலேயே வண்ணத்தில் அந்தச் செய்தி வெளியாகியிருக்க வேண்டும் என அலையும் சரத்குமார்கள், விஜய்காந்துகளுக்கு மத்தியில் லட்சணக்கணக்கான ரூபாய் பெறுமானமுள்ள உதவிகளை சத்தமில்லாமல் செய்துவரும் ரஜினியைப் பற்றி அவதூறு பரப்ப இவர்கள் யாருக்குமே உரிமை கிடையாது.

நியாயமாக இதுவரை இவர்கள் பரப்பிய அவதூறுகளுக்கு ரஜினி சற்றே விரலசைத்திருந்தால் கூட கம்பி எண்ணிக் கொண்டிருந்திருப்பார்கள்.

ஆனால் ரஜினி இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்ட, விமர்சனங்கள் தீண்டாத மனிதராக தன்னை மாற்றிக் கொண்டுள்ளார்.

ஒன்றுமில்லை... விஜயகாந்துக்கு எதிராக ஒரே ஒரு கட்டுரையை எந்த அஞ்ஞானியையாவது விட்டு எழுதச் சொல்லுங்களேன் பார்ப்போம்... அல்லது எந்த ஒழுக்க நெறிமுறைகளுக்கும் உட்படாத கமல்ஹாசனை விமர்சனம் செய்து ஒரு கட்டுரை எழுதச் சொல்லுங்கள் பார்க்கலாம். இவர்களால் நிச்சயம் முடியாது.

ஆனால் ரஜினி...

தன்னைப் பற்றி நல்லவிதமாக எழுதிச் சம்பாதிப்பவர்களையும் கண்டு கொள்வதில்லை, திட்டி எழுதி கல்லா கட்டும் நச்சுப் பத்திரிகைகளையும் கண்டு கொள்வதில்லை.

மக்களும், தனக்கு மேலுள்ள மகான்களும் பார்த்துக் கொள்வார்கள் இந்தக் கும்பலை என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை அவருக்கு. தனக்காக ரசிகர்கள் ஆவேசப்பட்டு எந்த வித ஆபத்திலும் மாட்டிக் கொள்ளக் கூடாது என்ற நிஜமான அக்கறையில், ரசிகர்களை இம்மாதிரி சோதனையான கட்டங்களில் மட்டும் சந்திப்பதே இல்லை. ஒரு நல்ல தலைவனுக்குரிய தகுதி இதுதான்.

நல்லவர்களைப் பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை... குமுதம், விகடன், நக்கீரன் போன்ற பத்திரிகைகள் புரிந்து கொண்டு அமைதியாக இருந்தால் கூடப் போதுமே!

உருவாகிறது ஒரு பரபரப்பு கவர் ஸ்டோரி!


‘ஏ... என்னப்பா... இந்த இஷ்யூவுக்கு என்ன போடப்போற... முன்ன கூட்டிச் சொல்லிடுய்யா... நானும் பார்த்துக்கிறேன். அப்புறம் நம்மைப் போட்டு ராவிடுவானுங்க..’
-இது தமிழகத்தின் பிரபலமான இரண்டு வாரமிருமுறைப் பத்திரிகை நிருபர்கள் தினசரி பேசிக் கொள்ளும் வழக்கமான வசனங்கள்.

சென்னை பெருநகரில் மட்டுமல்ல... ஒவ்வொரு மாவட்டத்திலுமுள்ள அவர்களின் நிருபர்கள் இப்படித்தான் கூடிப் பேசி வாரமிருமுறை கும்மியடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரே விஷயத்தை தலைப்புச் செய்தியாகச் சொல்ல இரண்டு குழுமம் இரண்டு வித பத்திரிகைகளை நடத்துவானேன்..!

நாம் என்னமோ கற்பனையாக இங்கே எழுதுவதாக சிலர் இங்கே கமெண்ட் எழுதக் கூடும். உங்கள் பங்குக்கு நீங்களே கூட ஒருமுறை புலனறிந்து பாருங்கள், உண்மை புரிந்து அதிர்ந்து நிற்பீர்கள்.

இந்த வாரம் ரஜினிதான் டாபிக் என்று வைத்துக் கொள்ளுங்களேன்...
‘வீழும் மவுசு – அதிர்ச்சியில் ரஜினி’, என ஒரு அரைவேக்காடு எழுதியிருக்கும். அதே நாளில் வெளியான போட்டிப் பத்திரிகை எனக் கூறிக்கொள்ளும் நிகழ்காலக் குரலோ, ‘ரஜினியின் புகழ் இன்னும் ஒருபடி உயர்வு’ – என செய்தி வெளியிட்டிருப்பார்கள். அவர்கள் நோக்கம் பத்திரிகை தர்மமல்லா... கல்லாப் பெட்டி தர்மம்.

‘நான் அடிக்கிற மாதிரி அடிப்பேனாம், நீ தடவிக் கொடுப்பியாம். எப்படியோ ரெண்டு பேர் மேலேயும் பார்வை இருந்து கொண்டே இருக்குமல்லவா... அதுதான் பிழைக்கும் வழி. இதிலிருந்து மட்டும் மாறவே கூடாது’ - இந்த இரு குழுமங்களின் எடிட்டோரியல் விதி இதுதான்!


எக்ஸ்க்ளூசிவ் மேட்டர் என்று போஸ்டர், அட்டைப் படம், பத்திரிகை விளம்பரம் என எல்லா வழியிலும் இவர்கள பிரம்மாண்டப் படுத்துவார்கள். வாங்கிப் படித்துப் பார்த்தால், இருவருமே ஒரே விவகாரத்தைதான் எழுதியிருப்பார்கள், அதுவும் ஒரே மாதிரியாக! அப்போதுதானே உங்களைப் போன்று காசு கொடுத்துப் பத்திரிகை வாங்குபவர்கள் இவர்களின் பொய்யை உண்மையென்று நம்புவார்கள்.

சரி... ரஜினி விவகாரத்தில் மட்டும் ஏன் ஒருவர் எதிர்ப்பு, ஒருவர் ஆதரவு என்ற நிலையை எடுத்தார்கள். பத்திரிகை விற்பனைதான்.

இதே அழகிரி விவகாரமென்றால் இருவரும் ஒரே மாதிரிதான் எழுதியாக வேண்டும். இல்லாவிட்டால் சென்னைய விட்டே காலி செய்துகொண்டு ஓட வேண்டி வரும். ஆனால் ரஜினியைப் பற்றி எவ்வளவு எழுதினாலும், எந்த மாதிரி எழுதினாலும் இவர்கள் பத்திரிகை விற்கும்.

இனி இந்த சனியன்களை வாங்கவே கூடாது என சபதமேற்றவர்கள் கூட, காசு கொடுத்து அந்த இரு குழுமப் பத்திரிகைகளையும் வாங்கக் காரணம், ஏதாவது ஒரு வழியில் மீண்டும் மீண்டும் ரஜினி, ரஜினி படங்கள், சௌந்தர்யா, அல்லது இருக்கவே இருக்கிறது ரஜினி அரசியல் பிரவேச ‘எக்ஸ்க்ளூசிவ் கட்டுரை’... என போட்டுத் தாக்கிக் கொண்டே இருக்கிறார்கள்.

காரணம் வற்றாத செய்திச் சுரங்கம் ரஜினி!

இவர்கள் மட்டும் என்றில்லை... பிற வார, மாத செய்தி இதழ்களும் கூட வேறு யாரைப் பற்றியும் தனிப்பட்ட முறையிலோ அல்லது அவர்களின் பொது வாழ்க்கை – நிர்வாகத் திறன் பற்றியோ எழுதத் திராணியற்றுக் கிடக்கின்றன. ஆனால் ரஜினி விவகாரம் என்று வந்துவிட்டால் மட்டும் தங்கள் அபார கற்பனைத் திறனைக் காட்டுகின்றன.

அரசு இலவச கலர் டிவி, இலவச நிலம், இலவச வீடுகள் என எல்லாம் பணக்காரர் வீடுகளில் தஞ்சமடைகின்றன. அல்லது கட்சிக்காரன் மட்டுமே அனுபவிக்க வசதியாகக் கொடுக்கப்படுகின்றன. இதை எழுத ஒரு பத்திரிகைக்கும் வக்கில்லை.

தொழில் வளர்ச்சி எனும் பெயரில் விளை நிலங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டு வருகின்றன. சென்னையைச் சுற்றி 100 கிலோ மீட்டர் தூரத்துக்கு வயல்கள் கிடையாது. ஆங்காங்கே சின்னச் சின்னத் தீவுகள் மாதிரிதான் சொற்ப அளவில் விவசாய வயல்கள் தெரிகின்றன. இதைப் பெரிதாக எழுத ஒரு ஜோல்னா பையனுக்கும் துப்பில்லை.

இம்மாதிரித் தகவல் கிடைக்கும் போது இரு குழும நிருபர்களுமே ஒன்றாகப் போய்த்தான் லோக்கல் அரசியல் பிரபலங்களைப் பார்க்கிறார்கள். கனமான ‘கட்டோடு’ வீடு திரும்புகிறார்கள். பின்னர் விஷயம் கமுக்கமாகிவிடும்.

இதிலும் ஓரிரு விதிவிலக்குகள் இருக்கவே செய்கிறார்கள் என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் அவர்கள் நேர்மையாய் இருந்து என்ன பலன், அந்த நிர்வாகங்கள்தான் ஏற்கெனவே அடிமாடுகளாகப் போய்விட்டனவே...

ஆனால் ரஜினி... வாய்ஸ் என்ற இரு வார்த்தைகள் இருந்தால் போதும் வரிந்து கட்டிக் கொண்டு வந்துவிடுகின்றன எழுதுவதற்கு.

பிரபலமான ஒரு மனிதரைப் பற்றி எப்படி எழுதாமல் இருக்க முடியும்?
நியாயமான கேள்விதான். ஆனால் நியாயமாக எழுத வேண்டும் அல்லவா... மலிவான வியாபார நோக்கத்துக்காக, ரஜினி போன்ற நல்ல மனிதர்களின் இமேஜை சிதைக்கும் உரிமையை, அதிகாரத்தை இவர்களுக்கு யார் தந்தது?

குறிப்பு: இந்தப் பதிவுக்கும், அடுத்து வரும் குமுதம் சர்வே குறித்த கட்டுரைக்கும் நீங்களாகவே முடிச்சுப் போட்டுக் கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல!!