Showing posts with label Sathyanarayana. Show all posts
Showing posts with label Sathyanarayana. Show all posts

Sunday, December 21, 2008

தமிழ்ப் பத்திரிகைகளின் 'நம்பகத்தன்மைக்கு' இதோ இன்னொரு சாம்பிள்!

மீண்டும் மீண்டும் தங்களின் நம்பகத் தன்மையை தாங்களே கேவலப்படுத்திக் கொள்வதில் தமிழ்ப் பத்திரிகைகளுக்கு நிகர் எதுவுமில்லை.

மற்றவர்களுக்கு எப்படியோ, ரஜினி ரசிகர்களுக்கு கிட்டத்தட்ட இது பழகிப்போன விஷயமாகிவிட்டது.

இருவாரங்களுக்கு முன் ரிப்போர்ட்டர் வாரமிருமுறை இதழில் ஒரு கவர்ஸ்டோரி.

‘ரஜினி பிறந்த நாளுக்கு ரசிகர்கள் தரும் அதிர்ச்சிப் பரிசு! - சத்தியநாராயணாவை ரஜினி கழற்றி விட்டுவிட்டதால், கோபித்துக் கொண்டுள்ள 14 மாவட்ட ரஜினி மன்ற தலைவர்கள், சத்தியின் ஆதரவாளர்களுடன் ரஜினி பிறந்த நாளன்று கூண்டோடு அதிமுகவில் சேரப் போகிறார்கள்!’


டிசம்பர் 12-ம் தேதியும் வந்தது... மாவட்டம் தோறும் நடந்த சிறப்பான பிறந்தநாள் கொண்டாட்டங்கள் குறித்த செய்திகள்தான் இதுவரை வந்து குவிந்த வண்ணம் உள்ளன.
அன்றைய தினம் ஈ, காக்கா, குருவி கூட ரஜினி மன்ற நண்பர்களைச் சுற்றிச் சுற்றித்தான் வந்துகொண்டிருந்திருக்கும். காரணம் இங்குதானே சரியான ‘தீனி’ இருந்தது அன்றைக்கு.

எந்தெந்த மாவட்டச் செயலாளர்கள் அதிமுகவில் போய்ச் சேர்ந்தார்கள்... என்ற விவரத்தை இந்த கட்டுரை தயாரித்த குமுதம் ஆசிரியர் குழு, அட... அடுத்த இதழில்கூட வேண்டாம்... இப்போதாவது வெளியிடலாமே!

அன்று, சத்தி மன வருத்தத்தில் புழுங்குவதாக விகடன் குழுமமும் இதே குமுதமும் அட்டைப் படக் கட்டுரையும், அவரது பேட்டியையும் (‘ராமனின் அம்பு முனை பட்ட வலி!’ - விகடன்!) வெளியிட்டன.

இதோ... அதே ரிப்போர்ட்டர் இதழில் இன்று வந்துள்ள சிறப்புக் கட்டுரை!

படித்துவிட்டு, நீங்களே ஒரு முடிவுக்கு வாருங்கள்... அப்படியே, சத்திக்கு ஓய்வளிப்பதாக ரஜினி மன்றத்திலிருந்து அறிவிப்பு வந்தபோது, நாம் வெளியிட்ட சத்தியநாராயணாவின் சிறப்புப் பேட்டியையும் நினைவில் கொள்ளுங்கள்!

ரஜினி பிறந்த நாளில் சத்தியநாராயணா செய்த யாகம்!!


கடந்த 12-ம்தேதி காலை பத்து மணி. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இடைக்காட்டூர் என்ற குக்கிராமத்தில் உள்ள சித்தர் கோயிலில் வந்து நின்றது ஒரு ஸ்கார்பியோ கார். அந்த காரில் இருந்து இறங்கி அமைதியாக கோயிலுக்குள் நுழைந்தவர் வேறு யாருமில்லை. சத்தியநாராயணா.

சூப்பர் ஸ்டார் ரஜினியால் மன்றப் பொறுப்பில் இருந்து கழற்றிவிடப்பட்டார் என்றும், ரஜினிக்கும் அவருக்கும் தற்போது ஏழாம் பொருத்தம் என்றும் சத்திய நாராயணாவைப் பற்றி பரபரப்புச் செய்திகள் சமீப காலமாக வந்து கொண்டிருக்கும் நிலையில், சத்தியநாராயணா ரஜினியின் பிறந்தநாளும் அதுவுமாக திடுதிப்பென இடைக்காட்டூர் சித்தர் கோயிலுக்கு வந்தது அங்கிருந்த சொற்ப பக்தர்களுக்கும் திகைப்பைத் தந்தது.

வயல்வெளிகளுக்கு நடுவில் எந்த அடிப்படை வசதியும் இல்லாத அந்த குட்டியூண்டு கோயிலில் சுமார் ஐந்து மணிநேரம் தங்கியிருந்து, ரஜினி மற்றும் லதா பெயரில் யாகம் நடத்திவிட்டு, அன்று மதியம் முந்நூறு பேருக்கு அன்னதானமும் செய்திருக்கிறார் சத்தி. ரஜினி பிறந்தநாளில் பிரபல சித்தர் கோயிலுக்கு வந்து ரஜினிக்கும் அவரது மனைவிக்கும் யாகம் செய்ததன் மர்மம் என்ன?

அதைத் தெரிந்து கொள்ள உடனே இடைக்காட்டூருக்குப் புறப்பட்டோம்.

மதுரை-ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் முத்தனேந்தல் என்ற சிற்றூரின் வடப்புறமாகப் பிரியும் சாலையில் மூன்றாவது கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது இடைக்காட்டூர். இந்த ஊரில் பிறந்து வளர்ந்து திருவண்ணாமலையில் ஜீவசமாதி ஆனவர்தான் இடைக்காட்டுச் சித்தர். இடைக்காடர் என்று அழைக்கப்படும் அவர் பதினெட்டுச் சித்தர்களில் தனித்தன்மை வாய்ந்தவராம்.

... ... ... அப்படி நவகிரக கோயில் என்று பெயர் கொண்ட அந்தச் சிறிய கோயிலில் மூலவரே நவகிரகங்கள்தானாம். கடந்த பத்தாண்டுகளாக திருவாதிரை பூஜையும், கடந்த ஐந்து மாதங்களாக பௌர்ணமி பூஜையும் நடந்து வருகிறது. அந்தக் கோயிலில்தான் 12-ம்தேதி நடந்த பௌர்ணமி பூஜையில் கலந்துகொண்டு யாகமும் நடத்திவிட்டுச் சென்றிருக்கிறார் சத்தியநாராயணா.

சென்னையிலிருந்து 12-ம்தேதி அதிகாலை சத்தியஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனர் தியாகராஜனுடன் விமானம் மூலம் மதுரை வந்த சத்தியநாராயணா, அங்கிருந்து காரில் பரமக்குடி வந்து லாட்ஜ் ஒன்றில் தங்கியிருக்கிறார். அங்கே தனக்கு நெருக்கமான மாவட்ட நிர்வாகிகளை மட்டும் வரவழைத்துப் பேசிய சத்தியநாராயணா, 'நான் வந்த விஷயமோ, நோக்கமோ வேறு எக்காரணம் கொண்டும் வெளியில் கசியக் கூடாது. குறிப்பாக பத்திரிகையாளர்களுக்குத் தெரியக் கூடாது' என்று கூறியிருக்கிறார். வெள்ளி, சனி ஆகிய இரண்டுநாட்கள் அவர் பரமக்குடியில் தங்கியிருந்தும் அவரது விசிட் அவரது விசுவாசிகளால் பொத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

ரஜினி பெயரில் சிறப்பு யாகம்!

12-ம்தேதி காலை பத்து மணியளவில் இடைக்காட்டூர் சித்தர் கோயிலுக்கு வந்து சேர்ந்த சத்தியநாராயணா, அங்கே ஏற்கெனவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த யாகசாலையில் தியாகராஜனுடன் அமர்ந்தாராம். அதன்பிறகு நடந்தவற்றை அந்தக் கோயில் அர்ச்சகர் நம்மிடம் விவரித்தார்.

‘ஏறத்தாழ இரண்டு மணிநேரம் நடந்த அந்த யாகத்தில், சத்தியநாராயணா பயபக்தியுடன், முழு ஈடுபாட்டுடன் அமர்ந்திருந்தார். `யாருக்காக யாகம்? அவர்களது பெயர், நட்சத்திரங்களைக் கூறுங்கள்' என்று யாகம் நடத்தியவர் கேட்டபோது, `ரஜினிகாந்த், திருவோண நட்சத்திரம், லதா ரஜினிகாந்த், மகம் நட்சத்திரம்' என்று சத்தியநாராயணா கூறினார். யாகம் மிக எளிமையாக நடந்து முடிந்த பின், கோயிலுக்குள் நடந்த அன்னதானத்தில் அவரே எல்லோருக்கும் உணவு பரிமாறினார். பிற்பகல் மூன்று மணிக்கு அவர் புறப்பட்டுப் போகும் வேளையில் எங்களிடம், `கோயில் சிறியதாக இருந்தாலும் சிறப்பாக இருக்கிறது' என்று சொல்லிவிட்டுச் சென்றார்’ என்றார் அந்த அர்ச்சகர்.

.... .... அந்த நவகிரக சித்தர் கோயிலை விட்டுக் கிளம்பும் முன் சத்தியநாராயணா, தன் சொந்தச் செலவில் கோயிலைச் சுற்றி பக்தர்கள் வலம் வர வசதியான ஏற்பாட்டைச் செய்து தருவதாகக் கூறியிருக்கிறார். அவரிடம் `அன்னதான மண்டபம்' ஒன்றையும் கட்டித்தருமாறு கோரிக்கை வைத்த கோயில் பக்தர்கள், அடுத்து வைத்த இன்னொரு கோரிக்கைதான் வித்தியாசமானது.


`ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமியன்று பதினெட்டு சித்தர்களும் இங்குள்ள நவகிரகங்களை வழிபட வருவதால் அந்த நாளில் கோயிலில் அதிர்வுகள் (வைபரேஷன்) அதிகமாக இருக்கும். ஆகவே வரும் சித்ரா பௌர்ணமியன்று சூப்பர் ஸ்டாரை இந்தக் கோயிலுக்கு அழைத்து வாருங்கள்' என்பதுதான் பக்தர்கள் வைத்த கோரிக்கை. அதற்கு எந்த பதிலும் கூறாமல் அமைதியாகச் சென்று விட்டாராம் சத்தி..."

-இப்படி முடியும் கட்டுரையில் மீண்டும் தங்கள் வக்கிரத்தைக் காட்டியுள்ளது குமுதம். அது,

"சத்தியநாராயணாவின் இந்தக் கோயில் விசிட், ரஜினி ரசிகர்கள் சிலருக்கு சிறிய சந்தேகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. தலைவரும் தளபதியும் தங்களுக்குள் `லடாய்' என்பது போல நாடகமாடுகிறார்களா? என்ற சந்தேகம்தான் அது. எது உண்மை என்பது அந்த இடைக்காட்டூர் சித்தருக்கே வெளிச்சம்!"

-நீங்கள்ளாம் திருந்தவே மாட்டீங்களாப்பா!!

ஒரு சின்ன நினைவூட்டல்: பசி என்பது நியாயமான விஷயம்தான்... அதற்காக வெந்தது... வேகாதது என கிடைப்பதையெல்லாம் நதிமூலம், ரிஷிமூலம் பார்க்காமல் எடுத்துப்போட்டு விழுங்குவது ஆறறிவு பகுத்தறிவு கொண்ட மனிதன் செயலா... அதுவும் வாளை விட வலியது என தோள் தட்டும் பத்திரிகைத் தொழிலுக்கு அழகா?

http://www.envazhi.com

Tuesday, November 18, 2008

சத்தியநாராயணாவை நீக்கவில்லை! – சுதாகர் பேட்டி

அகில இந்திய ரஜினிகாந்த் மன்ற பொறுப்பாளர் பதவியில் இருந்து சத்யநாராயணாவை நீக்கிவிட்டதாக வந்துள்ள செய்திகளில் எந்த உண்மையும் இல்லை. அவை மவெறும் வதந்திகளே. சத்தியநாராயணா நீக்கப்படவில்லை. தற்காலிக ஓய்விலிருக்கிறார், என ரஜினியின் நெருங்கிய நண்பரும், மன்றப் பணிகளை கவனிப்பவருமான சுதாகர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து நேற்று அவர் கூறியுள்ளதாவது:

ரஜினி ரசிகர் மன்றத்தில் இப்போதும் சத்தியநாராயணா பொறுப்பில்தான் உள்ளார். அவர் நீக்கப்பட்டதாகக் கூறப்படுவது வீண் வதந்தி.

கடந்த 3-ந் தேதி சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் ரஜினிகாந்த் ரசிகர்களை சந்தித்து பேசியபோது, சத்யநாராயணாவை மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் செய்து மன்ற பணிகளை கவனிக்க ஏற்பாடு செய்வீர்களா? என்று ஒரு ரசிகர் கேள்வி கேட்டார்.

அந்த கேள்விக்கு ரஜினிகாந்த் பதில் அளிக்கும்போது, சத்யநாராயணாவுக்கு உடல் நலம் இல்லை. அவரை ஓய்வு எடுத்துக் கொள்ளும்படி நான்தான் கூறியிருக்கிறேன். அவருடைய தாயார் சமீபத்தில் மரணம் அடைந்து விட்டார். தந்தைக்கு 88 வயது ஆகிறது. அவரை, சத்யநாராயணாதான் கவனிக்க வேண்டியிருக்கிறது. எனவேதான் கொஞ்சநாளைக்கு ஓய்வு எடுத்துக்கப்பா... உனக்கு பதில் நானே அதுவரை மன்றத்தைப் பார்த்துக்கிறேன், என்று கூறினார். இப்போது தான் சொன்னதைப் போலவே சத்திக்கு ஓய்வளித்துள்ளார் ரஜினி.

ஆனால் சத்யநாராயணாவை நீக்கிவிட்டதாகவும், அவருக்கு பதில் என்னை நியமித்து இருப்பதாகவும் கண், காது, மூக்கு வைத்து வதந்தியைப் பரப்பி விட்டார்கள். அதில், கொஞ்சமும் உண்மை இல்லை. சத்யநாராயணாவை நீக்கிவிட்டதாக ரஜினிகாந்த் சொல்லவில்லை. சத்திக்கு உடல் நலம் இல்லாததால், தற்காலிகமாக ஓய்வு எடுத்துக்கொள்ள சொல்லியிருக்கிறார்.

நானே பார்த்துக் கொள்வேன்! - ரஜினி

இனிமேல் மன்ற பணிகளை நான்தான் கவனிப்பேன், என்று ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். இதற்காக ராகவேந்திரா மண்டபத்தில் 2 பணியாளர்களை வேலைக்கு நியமித்துள்ளார். அவர்கள் ரசிகர்களிடம் இருந்து வருகிற போன்கள் மற்றும் தகவல்களைக் குறித்து வைத்து என்னிடம் தருகிறார்கள். ரசிகர்களின் நிறை, குறைகளைக் கேட்டு, அவற்றை ரஜினிகாந்திடம் கூறவும், ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் கூறும் பதில்களை, ரசிகர்களிடம் கூறுவதற்காகவும்தான் அவர் என்னை நியமித்து இருக்கிறார்.

அவர் உத்தரவுப்படி, நான் என் பணிகளைச் செய்து வருகிறேன். இதுதான் உண்மை, என சுதாகர் தெரிவித்துள்ளார்.

எனவே மன்றப் பொறுப்பை தன் கையில் நேரடியாக ரஜினியே எடுத்துக் கொண்டிருப்பதால், பல அதிரடி முடிவுகள் அடுத்தடுத்து வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
http://www.envazhi.com

மீடியாவின் எல்லை மீறிய செயல்! - சத்யநாராயணா

மன்றப் பொறுப்பாளர் பதவியிலிருந்து சத்தியநாராயணா நீக்கம், புதிய தலைவராக சுதாகர் நியமனம் என்றெல்லாம் இரு தினங்களாக செய்திகள் வந்தவண்ணமுள்ளன.

உண்மையில் நடந்தது என்ன?

சத்தியநாராயணா மீது ரஜினிக்கு உண்மையிலேயே அதிருப்தியா... அவர் தனக்கென்று தனி கோஷ்டி சேர்க்கிறார் என்பது உண்மையா?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் வெறும் யூகங்களின் அடிப்படையில் ‘அவல்’ தர முடியாது.
எனவே இதுகுறித்த தீவிர விசாரணையில் இறங்கினோம். முதலில் ராகவேந்திரா மண்டப பொறுப்பாளர்கள் சொன்ன தகவல்:

“சத்தி சார் நீக்கப்பட்டார் என்று ரஜினி இதுவரை எங்கும் சொல்லவில்லை. எந்த அறிக்கையும் விடவும் இல்லை. ஏற்கெனவே சத்திக்கு கொஞ்சநாள் ஓய்வு தர வேண்டும் என்று ரஜினி சொல்லிக் கொண்டிருந்தார். ஒரு பக்கம் உடல் நலக் கோளாறு. மறுபக்கம் தாயை இழந்த சோகம். இப்போது வயதான தந்தையைப் பராமரிக்க வேண்டிய பொறுப்பு.

தாய் தந்தைக்குத்தான் முதலிடம் என்று அடிக்கடி சொல்வார் ரஜினி. எனவேதான் இப்போது சத்திக்கு தற்காலிக ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. மற்றபடி ரஜினி ரசிகர் மன்றத்தின் எந்த முடிவாக இருந்தாலும் அதை ரஜினிதான் முதலில் சொல்ல வேண்டுமே தவிர மீடியா இஷ்டத்துக்கு சொல்லவிட முடியாது... சத்தி எப்போதும்போல இந்த குடும்பத்தின் ஓர் அங்கம்தான்...”

இந்தக் கேள்விகளுக்கான பதிலைச் சொல்லக் கூடிய இருவர் சூப்பர் ஸ்டார் ரஜினி. மற்றொருவர் சத்தியநாராயணாதான். மிக நீண்ட முயற்சிக்குப்பின் சத்தியைத் தொடர்பு கொண்டோம். நேரில் சந்திக்கக் கேட்டபோது, ‘இப்போது வேண்டாமே’ என்றவர், தனது நிலை குறித்து சுருக்கமாக கருத்து சொல்லி முடித்துக் கொண்டார்.

எனக்கு உடல் நலம் சரியில்லை. ரெஸ்டில் இருக்கிறேன். ரஜினி சாரே என்னை ஓய்வெடுக்கச் சொல்லியிருக்கிறார். அவ்வளவுதான். சார் அடிக்கடி சொல்வார்... ஏம்பா இவ்ளோ கஷ்டப்படற... கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கோ, என்பார். இப்போது சில வாரங்கள் ஓய்வுக்காக வீட்டிலிருக்கிறேன். அதற்குள் மீடியா இப்படியெல்லாம் கதை எழுதுவது வேடிக்கையாக உள்ளது.

நான் விடுமுறையில் போனால், அந்த வேலையை இன்னொருவர் கவனித்துக் கொள்ளமாட்டாரா... அப்படித்தான் நண்பர் சுதாகர் இப்போது பார்த்துக் கொள்கிறார். அதற்குள் நான் ராஜினா செய்துவிட்டேன் என்றும், வேறு சில வேண்டாத கோணத்திலும் செய்திகளை வெளியிட்டுள்ளனர்.

நேற்றிலிருந்தே ரசிகர்களின் போன் கால்களுக்கு பதில் சொல்ல முடியவில்லை. இன்று இன்னும் அதிகம்.

இந்தச் செய்திகளைப் படித்துவிட்டு, சாரே கோபப்பட்டார். ஒரு விஷயம் கேள்விப்பட்டால் குறைந்தபட்சம் உறுதிப்படுத்திக் கொள்ளக்கூட மாட்டார்களா பத்திரிகைக்காரர்கள்...! இது அவர்களின் எல்லை மீறிய செயல்...” என்றார்.

Tuesday, September 16, 2008

எச்சரிக்கை -3: ரஜினி... அரசியல்... சத்தியநாராயணா!


இதில் நமது கருத்தென்று எதுவும் இல்லை. ரஜினி மன்றங்களின் தலைவர் சத்திய நாராயணா சமீபத்தில் அளித்துள்ள பேட்டியின் ஒரு பகுதி:

ரஜினி தன் மன்றத் தினரைச் சந்திப்பாரா மாட்டாரா... அல்லது வழக்கமான எதிர்பார்ப்பைக் கிளப்பும் வேலையா இது என்று மீடியாவில் விவாதம் செய்து கொண்டிருந்தவர்களுக்கு, அகில இந்திய ரசிகர் மன்றத் தலைவரான சத்திய நாராயணா கொடுத்திருக்கும் பதில் இது, அதுவும் ரஜினியின் உத்தரவோடு!

இந்நேரம் பல நிர்வாகிகளுக்கு தலைமை மன்றத்திலிருந்து ரஜினியுடனான சந்திப்பு குறித்த உத்தரவு பறந்திருக்கக் கூடும். இன்னும் 20 நாட்கள்தான் உள்ளன, ரசிகர்கள் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள.

ரஜினி ரசிகதர்களைப் பொருத்தவரை இந்த தீபாவளி வாணவேடிக்கை முழங்கும் உற்சாகத் திருநாளாகத் திகழ்வது சூப்பர் ஸ்டாரின் வார்த்தைகளில் இருக்கிறது. ஆனாலும் சத்திய நாராயணாவின் பேட்டியில் பொதிந்துள்ள உள்ளர்த்தம், அவர்களை இப்போதே தீபாவளி கொண்டாட வைத்துள்ளது.
நல்லது நடக்கட்டும்...

அரசியலில் ரஜினி இறங்க நீங்கள்தான் முட்டுக்கட்டையா...?

...அரசியலில் தலைவர் உடனே இறங்கவேண்டும் என ஆசைப்படும் சில மன்ற நிர்வாகிகள், அதே ஸ்பீடில் தலைவரிடம் இதுபற்றி நான் பேசி ஏதாவது செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அரசியல் விஷயத்தில் தன்னிச்சையாக நான் எந்தக் கருத்தையும் சொல்ல முடியாது. இதுதான் நிதர்சனம்.

ஆனால், இதை என்னுடைய இயலாமையாகவோ, திட்டமிட்ட மெத்தனமாகவோ சிலர் நினைக்கிறார்கள். அதற்கு நான் என்ன செய்ய முடியும்? தலைவர் அரசியலுக்கு வந்தால் சந்தோஷப்படும் முதல் ஆள் நான்தான்.

அரசியலைப் பொறுத்தமட்டில் தலைவர் யாரையும் பாதிக்காத முடிவைத்தான் எடுப்பார். கடைக்கோடி ரசிகனின் நிலைப்பாடு வரை அவர் யோசிப்பார். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று அவர் செயல்பட மாட்டார். இதையெல்லாம் புரிந்துகொள்ளாத ஒருசில ரசிகர்கள் ஆதங்கப்பட்டால் நான் என்ன செய்வது?

அக்டோபர் புரட்சியாக, ரொம்ப நாளைக்கப்புறம் ரசிகர்களை ரஜினி சந்திக்கப் போவதாகச் சொல்வது உண்மைதானே…?

உண்மைதான். ஒட்டுமொத்த மாவட்ட நிர்வாகிகளையும் ஒருசேர தலைவர் இதுநாள் வரை சந்தித்ததில்லை. ஆனால், அக்டோபர் முதல் வாரத்தில் சந்திக்க விரும்புவதாகச் சொல்லி இருக்கிறார்.
முதல் நாள் சென்னை மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளையும், அடுத்த நாள் இதர மாவட்ட நிர்வாகிகளையும் சந்திக்க ஏற்பாடு செய்யப் பட்டிருக்கிறது.

இந்தத் தகவலை அனைத்து மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கும் சொல்லி இருக்கிறோம். எந்திரன் ஷ¨ட்டிங்கால் ஒருசில நாட்கள் தள்ளிப் போனாலும் இந்த முறை தலைவர் கண்டிப்பாக ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்திப்பார். அதில் மாற்றமே இல்லை.

சிரஞ்சீவியைப் போல் கட்சி ஆரம்பிப்பதற்கான முன்னோட்டமாக அந்த சந்திப்பு இருக்குமா?

ஓய்வாக இருக்கிற நாட்களில் தலைவர் முடிந்த மட்டும் மன்றத்தினரைச் சந்தித்துக் கொண்டுதான் இருந்தார். ஒரு கட்டத்தில் வந்தவர்களே திரும்பத் திரும்ப வந்ததைக் கண்டு, தன்னை நேரில் பார்க்கவே முடியாது என ஏங்குகிற ஆட்களுக்கு வாய்ப்பு வழங்குங்கள் எனச் சொல்வார். ஆனால், அதற்குப் பின்னர் தலைவருக்கு ஓய்வு கிடைப்பது சாத்தியமில்லாத ஒன்றாகி விட்டது.

இப்போது அவர் அனைவரையும் சந்திப்பதாகச் சொல்லி இருப்பதில் எல்லோருக்குமே மிகுந்த சந்தோஷம். ஆனால் அரசியல் குறித்தோ, வேறேதும் விவகாரங்கள் குறித்தோ அவர் என்ன பேசப் போகிறார் என்று இப்போதைக்கு ஏதும் சொல்ல முடியாது. தலைவரின் முடிவு என்னவாக இருந்தாலும் அதன்படி நடக்க மட்டும்தான் எனக்குத் தெரியும்., என முடிந்துள்ளது அந்தப் பேட்டி!

ச்சும்மா அதிருதில்ல.... எனும் தலைப்பில் முன்பு வெளியான பதிவை மீண்டும் ஒரு முறை படித்துக் கொள்ளவும்!

குறிப்பு: சத்தியநாராயணாவுடன் இரு தினங்களுக்கு முன் நாம் பேசியதன் அடிப்படையில் ரஜினியின் அரசியல் நிலைப்பாடுகள் குறித்து மேலும் சில பதிவுகளும் வரவிருக்கின்றன.

Saturday, September 6, 2008

ரஜினி... அரசியல்... எச்சரிக்கை!


மீண்டும் ஒருமுறை மீடியா தனது ஊக வர்த்தகத்தைத் தொடங்கிவிட்டது, சூப்பர் ஸ்டார் ரஜினி விஷயத்தில். இந்த முறையும் தினமலர்தான் இதற்குப் பிள்ளையார் சுழி போட்டிருக்கிறது.

ரஜினி, இயந்திரன் – தி ரோபோ ஷூட்டிங்குக்கு அமெரிக்கா போய்விட்டதால், அடுத்த ஒருமாதத்துக்கு செய்திகள் வேண்டுமே. அதற்கான ஏற்பாடுகளில் இப்போதே இறங்கிவிட்டார்கள் போலிருக்கிறது.

எப்படியிருந்தாலும், ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற கேள்வியை எழுப்பி, மீண்டும் அவரைப் பற்றிய பல்வேறு பரபரப்புகளை உயிருடனே வைத்திருக்க பகீரதப் பிரயத்தனங்களை மேற்கொண்டுள்ளன பத்திரிகைகள். அதற்கான முதல் கல்லை இந்த முறை தினமலர் அடித்துள்ளது. அவர்களைப் பொறுத்தவரை வந்தால் மாங்காய், போனால் வெறும் கல் அவ்வளவுதான்.
இங்குதான் ரசிகர்கள் கவனமாக இருக்க வேண்டும். காரணம், இயந்திரன் ரிலீஸ் வரை இதுபோல பயங்கரமாக உசுப்பி விட்டுக் கொண்டே இருப்பார்கள். ரஜினியும் வழக்கம் போல மவுனமாகவே இருப்பார். சரியாக படம் வெளிவரும் தருணம் பார்த்து தங்கள் சதி வேயை அரங்கேற்றத் தொடங்கிவிடுவார்கள்.

ரசிகர்களும் ஒருவேளை அப்படியும் இருக்குமோ என்று ஒருகணம் மயங்கிப் போகிறார்கள். குசேலனுக்கு நடந்தது அதுதான்.

படம் ரிலீஸ் ஆகும் வரை இவர்கள் கொடுத்த பப்ளிசிட்டி என்ற, பாஸிட்டிவ் ரிப்போர்ட்ஸ் என்ன... அதே படம் வெளியாவதற்கு ஒரு இரவு முன்பு மொத்தமாகக் கவிழ்த்தார்கள்.
ரஜினி மன்னிப்பு கேட்டார் என்ற பொய்யை, சர்வ நிஜம் போலவே பேசி வைத்துக் கொண்டு வெளியிட்டு பல தீவிர ரசிகர்களையும் கூட நம்ப வைத்தன இதே தினமலர், தினகரன் நாளிதழ்கள்.

தன் பேச்சு குறித்து மக்களுக்கு ரஜினி அளித்த விளக்கத்துக்கு மன்னிப்பு முகம் மாட்டி ரஜினியை தமிழ் விரோதி போலவே சித்தரித்தார்கள். அஞ்ஞானிகள், பார்நிவேதாக்கள், மொட்டைக் கடிதாசி நிபுணர்களெல்லாம் வரிந்து கட்டிக்கொண்டு வந்து தங்கள் வக்கிரத்தைக் கொட்டினார்கள்.

அதனால் இந்த கயவர்களிடம் இம்முறை கவனம் தேவை!

சரி... தினமலர் செய்தியில் எந்த அளவு உண்மை...?

ரஜினி மன்றத் தலைவர் சத்தியநாராயணாவை பெரும்பாலான மாவட்ட நிர்வாகிகள் சமீபத்தில் சந்தித்தது உண்மை என்பதை ராகவேந்திரா கல்யாண மண்டப நிர்வாகிகள் உறுதிப்படுத்தினர். அதுமட்டுமல்ல, அனைத்து மாவட்ட ரஜினி ரசிகர்களையும் நான்கு தினங்கள் சந்திக்கப் போகிறார் ரஜினி, அக்டோபர் மாதத்தில்.

‘இப்போ இந்தச் செய்தி வெளியில் கசிவதில்கூட ஒரு ஆபத்திருக்கிறது. இயந்திரன் படத்துக்காக இப்போதிலிருந்தே ரசிகர்களை உற்சாகமாக்க ஆரம்பித்துவிட்டார் ரஜினி என்றெல்லாம் விமரிசனங்கள் வரும். ஆனால் இம்முறை சார் அவர்களுக்கு ஒரு மெஸேஜ் வைத்திருக்கிறார். நிச்சயம் அது ரசிகர்களைச் சந்தோஷப்படுத்தும். மற்றபடி எந்தச் செய்தியையும் நம்பாதீர்கள். சார் சொல்வதுதான் உண்மையான செய்தி... மற்றதெல்லாம் இவர்களாகவே இட்டுக் கட்டிக் கொள்வதுதான்..’ என்கிறார் சத்தியநாராயணா.

நூறு சதவிகிதம் வாஸ்தவமான வார்த்தைகள்!