Sunday, December 21, 2008

தமிழ்ப் பத்திரிகைகளின் 'நம்பகத்தன்மைக்கு' இதோ இன்னொரு சாம்பிள்!

மீண்டும் மீண்டும் தங்களின் நம்பகத் தன்மையை தாங்களே கேவலப்படுத்திக் கொள்வதில் தமிழ்ப் பத்திரிகைகளுக்கு நிகர் எதுவுமில்லை.

மற்றவர்களுக்கு எப்படியோ, ரஜினி ரசிகர்களுக்கு கிட்டத்தட்ட இது பழகிப்போன விஷயமாகிவிட்டது.

இருவாரங்களுக்கு முன் ரிப்போர்ட்டர் வாரமிருமுறை இதழில் ஒரு கவர்ஸ்டோரி.

‘ரஜினி பிறந்த நாளுக்கு ரசிகர்கள் தரும் அதிர்ச்சிப் பரிசு! - சத்தியநாராயணாவை ரஜினி கழற்றி விட்டுவிட்டதால், கோபித்துக் கொண்டுள்ள 14 மாவட்ட ரஜினி மன்ற தலைவர்கள், சத்தியின் ஆதரவாளர்களுடன் ரஜினி பிறந்த நாளன்று கூண்டோடு அதிமுகவில் சேரப் போகிறார்கள்!’


டிசம்பர் 12-ம் தேதியும் வந்தது... மாவட்டம் தோறும் நடந்த சிறப்பான பிறந்தநாள் கொண்டாட்டங்கள் குறித்த செய்திகள்தான் இதுவரை வந்து குவிந்த வண்ணம் உள்ளன.
அன்றைய தினம் ஈ, காக்கா, குருவி கூட ரஜினி மன்ற நண்பர்களைச் சுற்றிச் சுற்றித்தான் வந்துகொண்டிருந்திருக்கும். காரணம் இங்குதானே சரியான ‘தீனி’ இருந்தது அன்றைக்கு.

எந்தெந்த மாவட்டச் செயலாளர்கள் அதிமுகவில் போய்ச் சேர்ந்தார்கள்... என்ற விவரத்தை இந்த கட்டுரை தயாரித்த குமுதம் ஆசிரியர் குழு, அட... அடுத்த இதழில்கூட வேண்டாம்... இப்போதாவது வெளியிடலாமே!

அன்று, சத்தி மன வருத்தத்தில் புழுங்குவதாக விகடன் குழுமமும் இதே குமுதமும் அட்டைப் படக் கட்டுரையும், அவரது பேட்டியையும் (‘ராமனின் அம்பு முனை பட்ட வலி!’ - விகடன்!) வெளியிட்டன.

இதோ... அதே ரிப்போர்ட்டர் இதழில் இன்று வந்துள்ள சிறப்புக் கட்டுரை!

படித்துவிட்டு, நீங்களே ஒரு முடிவுக்கு வாருங்கள்... அப்படியே, சத்திக்கு ஓய்வளிப்பதாக ரஜினி மன்றத்திலிருந்து அறிவிப்பு வந்தபோது, நாம் வெளியிட்ட சத்தியநாராயணாவின் சிறப்புப் பேட்டியையும் நினைவில் கொள்ளுங்கள்!

ரஜினி பிறந்த நாளில் சத்தியநாராயணா செய்த யாகம்!!


கடந்த 12-ம்தேதி காலை பத்து மணி. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இடைக்காட்டூர் என்ற குக்கிராமத்தில் உள்ள சித்தர் கோயிலில் வந்து நின்றது ஒரு ஸ்கார்பியோ கார். அந்த காரில் இருந்து இறங்கி அமைதியாக கோயிலுக்குள் நுழைந்தவர் வேறு யாருமில்லை. சத்தியநாராயணா.

சூப்பர் ஸ்டார் ரஜினியால் மன்றப் பொறுப்பில் இருந்து கழற்றிவிடப்பட்டார் என்றும், ரஜினிக்கும் அவருக்கும் தற்போது ஏழாம் பொருத்தம் என்றும் சத்திய நாராயணாவைப் பற்றி பரபரப்புச் செய்திகள் சமீப காலமாக வந்து கொண்டிருக்கும் நிலையில், சத்தியநாராயணா ரஜினியின் பிறந்தநாளும் அதுவுமாக திடுதிப்பென இடைக்காட்டூர் சித்தர் கோயிலுக்கு வந்தது அங்கிருந்த சொற்ப பக்தர்களுக்கும் திகைப்பைத் தந்தது.

வயல்வெளிகளுக்கு நடுவில் எந்த அடிப்படை வசதியும் இல்லாத அந்த குட்டியூண்டு கோயிலில் சுமார் ஐந்து மணிநேரம் தங்கியிருந்து, ரஜினி மற்றும் லதா பெயரில் யாகம் நடத்திவிட்டு, அன்று மதியம் முந்நூறு பேருக்கு அன்னதானமும் செய்திருக்கிறார் சத்தி. ரஜினி பிறந்தநாளில் பிரபல சித்தர் கோயிலுக்கு வந்து ரஜினிக்கும் அவரது மனைவிக்கும் யாகம் செய்ததன் மர்மம் என்ன?

அதைத் தெரிந்து கொள்ள உடனே இடைக்காட்டூருக்குப் புறப்பட்டோம்.

மதுரை-ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் முத்தனேந்தல் என்ற சிற்றூரின் வடப்புறமாகப் பிரியும் சாலையில் மூன்றாவது கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது இடைக்காட்டூர். இந்த ஊரில் பிறந்து வளர்ந்து திருவண்ணாமலையில் ஜீவசமாதி ஆனவர்தான் இடைக்காட்டுச் சித்தர். இடைக்காடர் என்று அழைக்கப்படும் அவர் பதினெட்டுச் சித்தர்களில் தனித்தன்மை வாய்ந்தவராம்.

... ... ... அப்படி நவகிரக கோயில் என்று பெயர் கொண்ட அந்தச் சிறிய கோயிலில் மூலவரே நவகிரகங்கள்தானாம். கடந்த பத்தாண்டுகளாக திருவாதிரை பூஜையும், கடந்த ஐந்து மாதங்களாக பௌர்ணமி பூஜையும் நடந்து வருகிறது. அந்தக் கோயிலில்தான் 12-ம்தேதி நடந்த பௌர்ணமி பூஜையில் கலந்துகொண்டு யாகமும் நடத்திவிட்டுச் சென்றிருக்கிறார் சத்தியநாராயணா.

சென்னையிலிருந்து 12-ம்தேதி அதிகாலை சத்தியஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனர் தியாகராஜனுடன் விமானம் மூலம் மதுரை வந்த சத்தியநாராயணா, அங்கிருந்து காரில் பரமக்குடி வந்து லாட்ஜ் ஒன்றில் தங்கியிருக்கிறார். அங்கே தனக்கு நெருக்கமான மாவட்ட நிர்வாகிகளை மட்டும் வரவழைத்துப் பேசிய சத்தியநாராயணா, 'நான் வந்த விஷயமோ, நோக்கமோ வேறு எக்காரணம் கொண்டும் வெளியில் கசியக் கூடாது. குறிப்பாக பத்திரிகையாளர்களுக்குத் தெரியக் கூடாது' என்று கூறியிருக்கிறார். வெள்ளி, சனி ஆகிய இரண்டுநாட்கள் அவர் பரமக்குடியில் தங்கியிருந்தும் அவரது விசிட் அவரது விசுவாசிகளால் பொத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

ரஜினி பெயரில் சிறப்பு யாகம்!

12-ம்தேதி காலை பத்து மணியளவில் இடைக்காட்டூர் சித்தர் கோயிலுக்கு வந்து சேர்ந்த சத்தியநாராயணா, அங்கே ஏற்கெனவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த யாகசாலையில் தியாகராஜனுடன் அமர்ந்தாராம். அதன்பிறகு நடந்தவற்றை அந்தக் கோயில் அர்ச்சகர் நம்மிடம் விவரித்தார்.

‘ஏறத்தாழ இரண்டு மணிநேரம் நடந்த அந்த யாகத்தில், சத்தியநாராயணா பயபக்தியுடன், முழு ஈடுபாட்டுடன் அமர்ந்திருந்தார். `யாருக்காக யாகம்? அவர்களது பெயர், நட்சத்திரங்களைக் கூறுங்கள்' என்று யாகம் நடத்தியவர் கேட்டபோது, `ரஜினிகாந்த், திருவோண நட்சத்திரம், லதா ரஜினிகாந்த், மகம் நட்சத்திரம்' என்று சத்தியநாராயணா கூறினார். யாகம் மிக எளிமையாக நடந்து முடிந்த பின், கோயிலுக்குள் நடந்த அன்னதானத்தில் அவரே எல்லோருக்கும் உணவு பரிமாறினார். பிற்பகல் மூன்று மணிக்கு அவர் புறப்பட்டுப் போகும் வேளையில் எங்களிடம், `கோயில் சிறியதாக இருந்தாலும் சிறப்பாக இருக்கிறது' என்று சொல்லிவிட்டுச் சென்றார்’ என்றார் அந்த அர்ச்சகர்.

.... .... அந்த நவகிரக சித்தர் கோயிலை விட்டுக் கிளம்பும் முன் சத்தியநாராயணா, தன் சொந்தச் செலவில் கோயிலைச் சுற்றி பக்தர்கள் வலம் வர வசதியான ஏற்பாட்டைச் செய்து தருவதாகக் கூறியிருக்கிறார். அவரிடம் `அன்னதான மண்டபம்' ஒன்றையும் கட்டித்தருமாறு கோரிக்கை வைத்த கோயில் பக்தர்கள், அடுத்து வைத்த இன்னொரு கோரிக்கைதான் வித்தியாசமானது.


`ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமியன்று பதினெட்டு சித்தர்களும் இங்குள்ள நவகிரகங்களை வழிபட வருவதால் அந்த நாளில் கோயிலில் அதிர்வுகள் (வைபரேஷன்) அதிகமாக இருக்கும். ஆகவே வரும் சித்ரா பௌர்ணமியன்று சூப்பர் ஸ்டாரை இந்தக் கோயிலுக்கு அழைத்து வாருங்கள்' என்பதுதான் பக்தர்கள் வைத்த கோரிக்கை. அதற்கு எந்த பதிலும் கூறாமல் அமைதியாகச் சென்று விட்டாராம் சத்தி..."

-இப்படி முடியும் கட்டுரையில் மீண்டும் தங்கள் வக்கிரத்தைக் காட்டியுள்ளது குமுதம். அது,

"சத்தியநாராயணாவின் இந்தக் கோயில் விசிட், ரஜினி ரசிகர்கள் சிலருக்கு சிறிய சந்தேகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. தலைவரும் தளபதியும் தங்களுக்குள் `லடாய்' என்பது போல நாடகமாடுகிறார்களா? என்ற சந்தேகம்தான் அது. எது உண்மை என்பது அந்த இடைக்காட்டூர் சித்தருக்கே வெளிச்சம்!"

-நீங்கள்ளாம் திருந்தவே மாட்டீங்களாப்பா!!

ஒரு சின்ன நினைவூட்டல்: பசி என்பது நியாயமான விஷயம்தான்... அதற்காக வெந்தது... வேகாதது என கிடைப்பதையெல்லாம் நதிமூலம், ரிஷிமூலம் பார்க்காமல் எடுத்துப்போட்டு விழுங்குவது ஆறறிவு பகுத்தறிவு கொண்ட மனிதன் செயலா... அதுவும் வாளை விட வலியது என தோள் தட்டும் பத்திரிகைத் தொழிலுக்கு அழகா?

http://www.envazhi.com

No comments: