Wednesday, December 10, 2008

'அவர் வந்தாதான் நாடு சரியாகும்!'

து சமீபத்தில் நமக்கு நன்கு தெரிந்த ஒருவர் வீட்டில் நடந்த சம்பவம்.

அவர்களுக்கு ஒரே மகன். 9-ம் வகுப்பு படிக்கிறான். ஆனால் படிப்பைத் தவிர மற்ற எல்லாவற்றிலும் அவனுக்கு நாட்டம் அதிகம். தினமும் புத்தகப் பையைத் தூக்கிக் கொண்டு பள்ளிக்குச் செல்வான். ஆனால் வகுப்பிலிருக்க மாட்டான். நண்பர்களுடன் வீடியோ கேம்ஸ் விளையாடிக் கொண்டிருந்துவிட்டு, மாலையானதும் ‘டாண்’ என்று வீட்டுக்கு வந்துவிடுவான்.

சென்னை அண்ணா நகரில் உள்ள பிரபல மனநல மருத்துவர் ஒருவரிடம் சமீபத்தில் அவனை அழைத்துப் போயிருந்தார்கள். பிரச்சினை முழுவதையும் கேட்ட அவர், கடைசியில் பெற்றோருக்கும் அந்த மாணவனுக்கும் சில அறிவுரைகளைச் சொல்லி அனுப்பியுள்ளார். ஆனால் பையனுக்கு அதெல்லாம் விளங்கியதாகத் தெரியவில்லை. தீவிர ரஜினி ரசிகன் அந்தப் பையன்.

ஒருநாள் எதேச்சையாக ரஜினியின் வீடியோ பேச்சு ஒன்றை அவன் பார்த்திருக்கிறான், தங்கள் வீட்டில் உள்ள கம்ப்யூட்டரில். அதன் பிறகு அவனுக்குள்ளே ஒரு மனமாற்றம். தன் தாயாரிடம் இதுபற்றிச் சொன்னதோடு, ‘இனி நல்லா படிக்கிறேம்மா...’ என்று மட்டும் கூறினானாம். எப்போதும் இதுபோல அவன் பேசியதே இல்லையாம்.

இப்போது முன்பு போல கட் அடிப்பதில்லை என்றும், இந்த ஒரு மாதமாக ஒழுங்காக பள்ளிக்குப் போய் வருவதாகவும் கூறினார்கள். இரு தினங்களுக்கு முன் நம்மைச் சந்தித்த அந்த மாணவரின் தாய், ‘ரஜினியை நினைச்சா பெருமையா இருக்குப்பா... அவர் வந்தாதான் நாடு சரியாகும்...’ என்றார்.

ஒரு 15 வயதுச் சிறுவனுக்கு இந்த அளவு மனமாற்றம் ஏற்படுத்திய அந்த வீடியோ எது?

ஏவிஎம் நிறுவன பள்ளிக்கூட விழாவில் சில ஆண்டுகளுக்கு முன் அவர் ஆற்றிய சிறப்புரை அது.

இதே நிகழ்ச்சிக்கு ஒரு நாளிதழின் செய்தியாளராக அன்று நான் போயிருக்கிறேன். அப்போது ரஜினியின் பேச்சை முழுவதுமாக பிரசுரிக்கும் வகையில் எழுதிக் கொடுத்தேன். காரணம் அத்தனை நுட்பமான பல விஷயங்களை, உளவியல் சார்ந்த கருத்துக்களை ஒரு ஆசிரியரின் தெளிவுடனும் பொறுப்புடனும் அவர் பேசியிருப்பார்.

ரஜினியின் சிந்தனை எப்போதுமே தெளிவானது, தீர்க்க தரிசனம் மிக்கது, தொலை நோக்குப் பார்வை கொண்டது. அவரை சரியாகக் கவனிப்பவர்கள் இதை நன்கு உணர்ந்திருப்பார்கள்.

மெத்தப் படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை அவரது ரசிகன் எனப் பெருமையாகச் சொல்லிக் கொள்வதே இதனால்தான்.

ரஜினியைப் போன்ற ஒரு மனிதரால்தான் மாணவர் சமுதாயத்தை சரியான பாதையில் வழிநடத்த முடியும் என்பதற்கு அவரது இந்தப் பேச்சு ஒரு உதாரணம்.

அவரது பேச்சின் ஒரு பகுதியைக் கவனியுங்கள்:

“பெற்றோர் தங்கள் கனவுகளை பிள்ளைகள் மீது திணிப்பது வழக்கமானது. அது மட்டுமல்ல... அவனைப் பார் எப்படிப் படிக்கிறான், அவனை மாதிரி நடந்து கொள், அவனை மாதிரி படிச்சுப் பெரியவனாகி குடும்பத்தைக் காப்பாத்து என்றெல்லாம் பேசுவது ஒரு குழந்தைக்கு தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தும்.

இதனால் குழந்தைகளின் அடையாளம் தொலைந்து போகிறது... அவர்களை முதலில் அவர்களாக இருக்க விடுங்கள். நிச்சயம் ஒவ்வொரு பிறப்பிலும் ஒரு தனித் தன்மை, தனிக் கலை ஒளிந்திருக்கும்!

இன்றைக்கு பல மன நல மருத்துவர்கள் கட்டணம் வாங்கிக் கொண்டு கொடுக்கிற ஆலோசனை இது. இதை ஏதோ கிண்டலாகச் சொல்லவில்லை. மேலே நீங்கள் படித்த சம்பவமே இதற்கு சான்று.

இந்த நிகழ்ச்சியில் ரஜினி கூறிய இன்னொரு அற்புதமான தத்துவம்:

“...ஒவ்வொருவரும் நிகழ்காலத்தைப் பற்றி மட்டும் சிந்தித்தால் போதும். பொதுவாக நாம எல்லாம் நாளை நடக்கப் போவதை மட்டுமே நினைக்கிறோம். அது தேவையில்லை. இன்று நீங்கள் அனுபவிப்பது நேற்று நீங்கள் செய்ததன் பலன்களை.

இன்றைய காரியங்களைச் சிறப்பாகச் செய்தால் நாளை அதற்குரிய பலன் உங்களுக்குக் கிடைக்கும். இன்றைய வீட்டுப் பாடங்களை ஒழுங்காக செய்யுங்கள். இன்று முடிக்க வேண்டிய வேலைகளைச் சரியாக முடியுங்கள்... நாளைய பலன் உங்களைத் தானாக வந்து சேரும்...

பெரியவங்க எல்லாம் நேற்று அல்லது நாளையைப் பற்றிய சிந்தனையிலேயே இருக்கிறார்கள். ஆனால் குழந்தைகளும் சிறுவர்களும்தான் நிகழ்காலத்தில் வாழ்கிறார்கள்...”

இதற்கெல்லாம் சிகரம் வைத்தது போலிருக்கும் அவரது பேச்சின் இன்னொரு பகுதி:

“தானத்திலேயே சிறந்த தானம் வித்யா தானம். அதை மிஞ்சிய தானம் கிடையாது. ஆனால் அப்படிப்பட்ட வித்யா தானத்தை சிலர் பெரும் பணம் பெற்றுக் கொண்டு விலைக்கு விற்கிறார்கள். இதைவிட மிகப் பெரிய பாவம் எதுவுமில்லை... அவங்களால நிம்மதியாவே இருக்க முடியாது!”

நினைவிருக்கட்டும்... இது சமீபத்தில் அவர் பேசியதல்லை. ஒரு பதினைந்து ஆண்டுகளுக்கு முன் பேசியது. அன்றே அவரது பேச்சிலிருந்த தீட்சண்யத்தைப் பாருங்கள்...

குறிப்பு: வீடியோக்களைப் பார்க்கும் முன் ரஜினியின் முன்னுரை பற்றிய ஒரு பார்வை... 'பணமில்லாம கஷ்டப்பட்டவே உண்மையைத்தான் பேசுவேன். பணம் புகழ் வந்தப்புறம் இருக்கிற கொஞ்ச நாள்ல உண்மையைத் தவிர வேறெதையும் பேசறதில்லை... அதனால் எத்தனையோ தொல்லைகள் வந்தாலும் உண்மையை மட்டுமே நான் பேசறேன்...'

அடுத்து நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்ததோடு, பெரும்பகுதி நேரத்தை எடுத்துக் கொண்ட கங்கை அமரனுக்கு அவர் வைத்த குட்டு. இந்த ஆளுமை, நேர்மை யாருக்கு வரும்!

இதெல்லாம் ரஜினி ஒருவரால மட்டும்தான் முடியும்! நிஜமாகவே ஆளப்பிறந்த மனிதர் இவர்!!

இதே அந்த வீடியோ... உங்கள் உணர்வுகளைச் சொல்லுங்கள்!

ரஜினி பேச்சு - முதல் பகுதி



ரஜினி பேச்சு- இரண்டாம் பகுதி




-வினோஜாஸன்

No comments: