Wednesday, December 17, 2008

சரோஜா தேவியோடு நடிக்க முடியாமல் போய்விட்டதே...! - ரஜினி கலகல பேச்சு!!

ரோஜாதேவி காலத்தில் ஹீரோவாக நடிக்க முடியாதது வருத்தம் அளிக்கிறது என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசினார்.

திருமதி லதா ரஜினிகாந்த் நடத்தும் ஆஷ்ரம் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நேற்று மாலை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு லதா ரஜினிகாந்த் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக சூப்பர் ஸ்டார் ரஜினி கலந்து கொண்டார்.

விழாவில் பழம்பெரும் பாடகர் பி.பி.சீனிவாஸ், நடிகை சரோஜாதேவி, எஸ்.என்.லட்சுமி, தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன், அரசு ஆஸ்பத்திரி மருத்துவ நிபுணர் கிருஷ்ணசாமி, விளையாட்டு வீராங்கனை சிறுமி விஜயலட்சுமி உள்பட பலர் சிறப்பிக்கப்பட்டனர்.

விழாவில் நடிகர் ரஜினிகாந்த், சரோஜாதேவிக்கு விருது வழங்கி பேசியதாவது:

சரோஜாதேவி காலத்தில் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று எனக்கு ஆசை இருந்தது. ஆனால் அப்போது முடியவில்லை. அவருடன் நடிக்க முடியாதது எனக்கு மிகுந்த வருத்தம் அளிக்கிறது.

ஒரு வேளை அந்த நேரத்தில் நான் ஹீரோவாக நடித்தால் கூட, அப்போது திரையுலக ஜாம்பவான்களாக இருந்த எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன் ஆகியோரை மீறி என்னால் அவருடன் நடித்திருக்க முடியுமா, அதற்கு அவர்கள் என்னை அனுமதித்திருப்பார்களா தெரியவில்லை.

சரோஜாதேவியின் நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் இந்த விழாவிற்கு வந்து கலந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது, என்றார் ரஜினி.

இந்த விழாவில் ரஜினியின் மதிப்புக்குரிய எஸ்பி முத்துராமன், மகளும் முன்னாள் மாணவியுமான சவுந்தர்யா ரஜினிகாந்த், முன்னாள் மாணவர்கள் நகுல், சிம்பு ஆகியோரும் பங்கேற்றனர்.

முன்னதாக பள்ளி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. குழந்தைகளுக்கு ரஜினி தன் கையால் பரிசுகளை வழங்கினார்.

வெள்ளை வேட்டி, சட்டையில் ஒரு பேராசிரியரின் கம்பீரத்துடன் விழாவுக்கு ரஜினி வந்திருந்தார். விழா முடிந்த பிறகும் அரங்கில் சிறிது நேரம் இருந்து, குழந்தைகளிடம் பேசிக் கொண்டிருந்தார் ரஜினி.

http://www.envazhi.com

No comments: