இன்று 58 வயது முடிந்து 59ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு, தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
ஐதராபாத்தில் சுல்தான் படப்பிடிப்பில் இருந்த ரஜினியை, தொலைபேசி மூலம் முதல்வர் கருணாநிதி வாழ்த்தினார்.
இலங்கைத் தமிழர்கள் துயரத்தில் உள்ள நிலையில் தனது பிறந்த நாளைக் கொண்டாட வேண்டாம் என ரசிகர்களுக்கு அவர் ஏற்கனவே வேண்டுகோள் விடுத்திருந்ததால், சற்று அடக்கி வாசிக்க வேண்டியதாகிவிட்டது ரசிகர்களுக்கு.
மேலும் ரஜினியும் இன்று சுல்தான் படப்பிடிப்புக்காக ஐதராபாத் போய்விட்டார். நேற்று பெங்களூரு போன அவர் தனது அண்ணனிடம் ஆசி பெற்றுக் கொண்டு ஐதராபாத் போய்விட்டார்.
இந் நிலையில் முதல்வர் கருணாநிதி, ரஜினியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
அழகிரி - ஸ்டாலின் வாழ்த்து
முதல்வரின் மூத்த மகன் மு.க அழகிரி மற்றும் இளைய மகனும் உள்ளாட்சித் துறை அமைச்சருமான ஸ்டாலின் ஆகியோரும் ரஜினிக்கு தங்கள் வாழ்த்துக்களை தொலைபேசி மூலம்தெரிவித்தனர்.
சிரஞ்சீவி - சந்திரபாபு நாயுடு
ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் பிரஜா ராஜ்யம கட்சித் தலைவர் சிரஞ்சீவி ஆகியோரும் பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.
ப.சிதம்பரம்
மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும் இன்று தனது வாழ்த்துக்களை பிறந்த நாள் காணும் ரஜினிக்குத் தெரிவித்துக் கொண்டார்.
இவர்களைத் தவிர இன்னும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் ரஜினி்க்கு தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.
திரையுலகில் ரஜினிக்கு நெருக்கமான பலரும் தொலைபேசி மூலம் வாழ்த்துக்களைத் தெரிவிக்க முயன்றதாகக் குறிப்பிட்டனர். இவர்களில் ஒரு சிலரால் மட்டுமே ரஜினியுடன் தொடர்பு கொள்ள முடிந்ததாம்.
தமிழகமெங்கும் நற்பணிகள் செய்த ரசிகர்கள்
சென்னை தி.நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்தில் ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் சிறப்பு வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்து கொண்ட ரசிகர்களுக்கும், பக்தர்களுக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
தி.நகர் பகுதியில் ரஜினிகாந்த்தின் பிரமாண்ட கட் அவுட்டும் ரசிகர் மன்றம் சார்பில் வைக்கப்பட்டிருந்தது. அதற்கு ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்தனர்.
தமிழகம் முழுவதும் ரஜினியின் பிறந்த நாளை ரசிகர்கள் கோவில்களில் விசேஷ வழிபாடுகள், பூஜைகளை நடத்தியும், அன்னதானம் உள்ளிட்டவற்றை மேற்கொண்டும் கொண்டாடினர். எந்திரன் படம் வெற்றி அடைய வேண்டும் எனவும் பல கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
இன்று மாலையிலும் பல்வேறு நல உதவி நிகழ்ச்சிகள் நடைபெற ஏற்பாடு செய்துள்ளனர் ரசிகர்கள்.
தள மாற்றங்கள் @ giriblog | Announcement
4 years ago
No comments:
Post a Comment