Friday, December 5, 2008

'தலைவருக்கு இந்த ஊரு!'

த்தனையோ முறை, தனது பூர்வீகம், இனம், மொழி குறித்தெல்லாம் மீடியாவும், வெற்று அரசியல்வியாதிகளும் திட்டித் தீர்த்தாலும் அமைதியாகக் கேட்டுக் கொண்டவர்தான் ரஜினி.

உள்ளத்தில் ஒளியுண்டாயின் வாக்கினினியே தெளிவிருக்கும் என்ற மகாகவியின் வார்த்தைக்கேற்ப, தன் உள்ளத்தில் சத்திய ஒளி இருந்ததால் அமைதி காத்தார் ரஜினி. இப்போது இயல்பாகவே தெளிவான வாக்காக அது வந்திருக்கிறது.

இன்றோ, 'எங்க ரஜினியாக்கும்', 'அட, ரஜினி நம்ம ஊருப்பா...', 'தலைவருக்கு சொந்த ஊரு தமிழ்நாடுப்பா...' என அதே மீடியாக்கள் வாழ்த்துக் கோஷம் பாடுகின்றன. இப்போதும் அதற்காக சந்தோஷம் கொள்ளவில்லை. அதே மாறாத அமைதியுடன் தன் பணிகளில் கவனம் செலுத்துகிறார் ரஜினி.

உற்றுக் கவனிப்பவர்களுக்கு ஒன்று புரியும். ரஜினி எப்போதும் தன்னிலையிலிருந்து மாறியதே இல்லை. சந்தோஷம், துக்கம், பிரச்சினை, வெற்றி, தோல்வி... எல்லாவற்றிலும் அசாதாரண நடுநிலைமையைக் கடைப்பிடித்து வந்திருக்கிறார்.

'கன்னடக்காரன்' என்றார்கள்... 'அப்டியா கண்ணா' என்று கேட்டுக் கொண்டார். 'மராட்டியன்' என்றார்கள்... 'சரி தம்பி' என அதையும் கேட்டுக் கொண்டார்.

இன்று 'தலைவா... நீ தமிழன்தான்' என்கிறார்கள். இப்போதும் அதே புன்னகைதான்!

இனி வேறு பத்திரிகையின் கட்டிங்கை இங்கே தரக் கூடாது என்ற பிடிவாதத்திலிருந்தேன். ஆனால் இந்தக் கட்டுரை போட வைத்துவிட்டது.

இனியும் யாராவது ரஜினியின் 'தமிழின அடையாளம்' குறித்துக் கேள்வியெழுப்பினால், முதலில் அதே கேள்வியோடு அவர்கள் அணுக வேண்டிய நபர், இன்றைய முதல்வர் கலைஞர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, முதல்வர் நாற்காலி கனவுகளோடு சுற்றிக் கொண்டிருக்கும் விஜய்காந்த், நண்பர்தான் என்றாலும் வைகோ...

இந்தப் பட்டியல் ரொம்பப் பெரிசுங்க, நினைவிருக்கட்டும்!

குமுதத்தின் நிருபர் தேனி கண்ணனுக்கு நன்றி.

தொடர்ந்து படியுங்கள்!

ணர்ச்சி மயமாகவும், உற்சாக விசிலோடும் நடந்த ரஜினியின் ரசிகர்கள் சந்திப்பில், `கிருஷ்ணகிரியிலுள்ள நாச்சிக்குப்பத்தில் உங்கள் அம்மா, அப்பா பிறந்த இடத்தில் நினைவு மண்டபம் கட்டுவீர்களா?' என்ற கேள்வி வாசிக்கப்பட, பளிச் என்று பிரகாசமான ரஜினி, ``யார்.. யார்.. இந்தக் கேள்வி கேட்டது.. அவர் வந்திருக்கிறாரா?'' என்று பரவசப்பட, கேள்வி எழுதி அனுப்பிய கார்த்திகேயனை அமைதியாக உற்றுப் பார்த்துக் கொண்டேயிருந்திருக்கிறார் ரஜினி.

அப்போதே 'தலைவரிடம் என்னவோ திட்டம் இருக்கு' என்று பரபரவென இயங்க ஆரம்பித்திருக்கிறது, ரஜினி தரப்பு. அதே பரவசத்துடன் தன் தரப்பு ஆட்களோடு ரஜினி மந்திராலோசனையில் திளைக்க, இப்போது சத்தியநாராயணா இடத்தில் சுதாகர் வந்திருக்கிறார். இன்னும் ரசிகர் மன்ற அளவில் சில வேலைகள் ரகசியமாக படு வேகத்தில் நடந்து கொண்டிருக்கின்றன.

'எங்கள் தலைவரும் பச்சைத் தமிழன்தான்' என்று தமிழகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் சந்தோஷ கூத்தாடிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில், ரஜினியின் பூர்வீக பூமியும், அவர் பிறந்த இடமுமான நாச்சிக்குப்பத்திற்குச் சென்றோம்.

பச்சைப் பசேல் கிராமம். பழங்கால மண் சுவர், நாட்டு ஓடுகள் வேய்ந்த நேர்த்தியான வீடுகள். பெரும்பாலும் மராட்டி மொழி பேசும் ஒவ்வொரு வீட்டிலும் வீரசிவாஜியின் படம் பூஜை அறையில் உள்ளது.

ரஜினியின் தாய் மாமா துக்காராம் ராவின் குடும்பத்தினர்தான் தற்போது இங்கு இருக்கின்றனர். வீட்டின் முன் அறையில் பல குடும்ப போட்டோக்களுக்கு நடுவே தன் தாய்மாமா துக்காராமை பாசத்தோடு கட்டிக் கொண்டு ரஜினி நிற்கும் போட்டோவும் இருந்தது. 76-ல் எடுக்கப்பட்ட அந்த போட்டோ, ரஜினியின் அப்பா ரானோஜிராவ் உடல் நிலை சரியில்லாத போது, பெங்களூரில் அவரைப் பார்க்கச் சென்றபோது எடுத்த படமாம்.

இப்போது அந்த வீட்டில் ரஜினியின் அத்தை சரஸ்வதி பாய் மட்டுமே இருக்கிறார். ரஜினியின் அம்மா, அப்பா வாழ்ந்த நாட்களை நினைவு கூர்ந்தார்.

'ரஜினியோட அப்பா பிறந்த ஊரும் இதுதான். ரஜினி பிறந்த ஊரும் இதுதான். ரஜினி அம்மா ராம்பாய் குடும்பம் இதே ஊர் பக்கத்துல இருந்தாங்க. அவங்க குடும்பமே பிழைப்புத்தேடி பெங்களூர் போய்ட்டாங்க. அப்பப்ப இங்க வந்து போவாங்க. அந்த சமயத்துலதான் ரஜினி அப்பா ரானோஜி ராவ்க்கும், ராம்பாய்க்கும் கல்யாணம் நடந்தது. வயல் வேலை தவிர, வேற எதுவும் இங்க பிழைக்க வழி கிடையாது. இருக்குற நிலத்தை வீட்ல பெரியவங்க பார்த்துப்பாங்க. புள்ளங்களை, சம்பாதிக்க பக்கத்துல இருக்குற பெங்களூருக்கு அனுப்பிடுவாங்க.

இப்பக்கூட ஒவ்வொரு வீட்டுக்கும் ஒருத்தரோ ரெண்டு பேரோ பெங்களூர்ல வேலை பார்க்குறாங்க. கிருஷ்ணகிரியில வேலை வாய்ப்புக்குவழியில்லாததால, இங்கிருந்து 70 கி.மீட்டர் தூரம் இருக்கிற பெங்களூருக்குப் போயிடுறாங்க. ரஜினி அப்பாவும் மனைவியோட பெங்களூர் போயிட்டார். அனுமந்த் நகர்ல தங்கி அவரு அப்பா போலீஸ் வேலை பார்த்தார். பிரசவத்துக்காக இங்க வந்துடுவாங்க. அப்ப ரஜினி வயித்துல இருக்கும் போது, இங்க இதே காம்பௌண்ட்ல எங்க சொந்தக்காரங்க கூடதான் ராம்பாய் இருந்தாங்க. அப்பல்லாம் ரொம்ப கஷ்டமான சூழ்நிலை. சாப்பாட்டுக்கும் அன்றாட செலவுக்கும் திண்டாட்டமா இருக்கும். அந்தக் கஷ்டமான நேரத்துலதான் ரஜினி பிறந்தார், இதே வீட்டில்' என்று வசூல் சக்ரவர்த்தியின் வரலாற்றுத் தொடக்கத்தைக் கூறினார் சரஸ்வதிபாய்.

'என்னோட கணவர் துக்காராம் மேல ரொம்பப் பிரியம் வெச்சிருந்தார் ரஜினி. அவர் இருக்குற வரைக்கும் சென்னைக்குப்போய் ரஜினியைப் பார்த்துட்டு வந்திட்டிருந்தார். அவரு சின்ன வயசுல இங்கேயே மூணு வருசம் அம்மாவோட தங்கியிருந்தார். பெங்களூர் போன பிறகு அடிக்கடி குடும்பத்தோட வருவாங்க. அவரு மெட்ராஸ் போயி சினிமாவுல சேர்ந்த பிறகு தியேட்டர்ல தான் அவரைப் பார்ப்போம்,' என்று ஏக்கத்தோடு சொன்ன சரஸ்வதி ரஜினியின் தாய்வழி சொந்தங்களை நமக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

வி.ஐ.பி. கேள்வி கேட்டு, ரஜினியிடம் 'வெரிகுட்' வாங்கிய கார்த்திக்கை சந்தித்தோம். 'பல முறை தலைவரை சந்தித்துப் பேசியிருக்கேன். ஒருமுறை என்னை வீட்டுக்கு வரவழைத்து மன்றம் தொடர்பா பேசினப்ப 'கிருஷ்ணகிரியிலருந்து நீங்க வர டைம் ஆறு மணி நேரமாகுமா?'னு கேட்டார். 'நான் கூட கிருஷ்ணகிரி தான்... நாச்சிக்குப்பம் நான் பிறந்தது'ன்னு போகிற போக்கில் சொன்னார். அப்போது அதுபற்றி நானும் கவனிக்கலை. அந்தக் கேள்விதான் இப்போது கேட்டேன். ரொம்பவும் சந்தோசமாயிட்டார். தலைவர் சந்தோசம் தானே எங்களுக்கு சந்தோசம். இனி அவர் என்ன சொன்னாலும் செய்யத் தயாரா இருக்கோம்' என்று கார்த்திக்கின் குரலில் உற்சாகம் பீரிடுகிறது.

கடந்த 92-ல தான் புதிய மன்றம் தொடங்க தடை போட்டிருக்கிறார் ரஜினி. இதற்கும் ஒரு காரணம் கூறுகிறார்கள். தீவிர ரசிகர்களின் பெற்றோர் சிலர் `எங்க பையன் உருப்படியா வேலை செய்யாம உங்க படத்துக்கு கட்_அவுட் வைக்கிறான்'னு தொடர்ந்து புகார் வர புதிய மன்றப் பதிவை நிறுத்தச் சொல்லியிருக்கிறார் ரஜினி.

ஆனால் 'எந்திரன்' முடிந்தவுடன் அரசியல் பற்றி உட்கார்ந்து பேசுவோம்' என்ற ஒற்றை வார்த்தை ரசிகர்களை குஷிப்படுத்தியிருக்கிறது.இதையெல்லாம் விட, சமீபத்தில் சென்னை வந்த அத்வானி, ரஜினியிடம் 'உங்களுக்கு இருந்த ஒரே தடை கர்நாடகக்காரர் என்கிற முத்திரை. அதுதான் உடைந்து விட்டதே. இனியும் என்ன தயக்கம்? களத்தில் இறங்குங்கள்' என்று வெளிப்படையாக பேசியிருப்பதாகத் தெரிகிறது. மெளனமாக அதைக் கேட்டுக் கொண்டார் ரஜினி. இப்போது அவர் மனதில் நாச்சிக்குப்பத்தில் தாய் தந்தைக்கு நினைவு மண்டபம் கட்டும் திட்டம் ஓடிக் கொண்டிருப்பதாகக் கூறுகிறார்கள், அவர் முகக் குறிப்பறிந்த நெருங்கிய நண்பர்கள்!

http://www.envazhi.com