கைமாறியது ரஜினியின் எந்திரன்: சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது!
இது அதிகாரப்பூர்வமான செய்தி...
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் இந்திய சினிமாவின் பிரமாண்ட படைப்பான எந்திரன் – தி ரோபோவை அய்ங்கரன் நிறுவனத்திடமிருந்து மொத்தமாக பெரும் விலைக்கு வாங்கியுள்ளது சன் டிவியின், சன் பிக்சர்ஸ்.
இன்று மாலை சன் நிறுவனத் தலைவர் கலாநிதி மாறனை அவரது இல்லத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி, இயக்குநர் ஷங்கர் மற்றும் கேமராமேன் ரத்னவேலு ஆகியோர் சந்திக்கின்றனர்.
ஷங்கர் இயக்கும் எந்திரன் படத்தை அய்ங்கரன் நிறுவனம் 150 கோடி ரூபாய் பொருட் செலவில் தயாரிக்க திட்டமிட்டது.
இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரு வேடங்களில் நடிக்கிறார். நாயகியாக ஐஸ்வர்யா ராய், ரூ.6 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
பெரு நாட்டில் உள்ள உலக அதிசயமான மாச்சு பிக்குவில் இரு மாதங்களுக்கு முன் படப்பிடிப்பு துவங்கியது. கிட்டத்தட்ட 30 சதவிகித படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், அய்ங்கரன் நிறுவனமும், அதன் பங்குதாரரான ஈராஸ் இன்டர்நேஷனலும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்தன. சர்வதேச நிதி நெருக்கடி காரணமாக, ஈராஸ் இந்தப் படத்திலிருந்து சில வாரங்களுக்கு முன் விலகிக் கொண்டது.
இதனால் அய்ங்கரன் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் இறங்கியது.
இந்நிலையில், இந்த மாபெரும் படத்தைத் தயாரிக்க விருப்பம் தெரிவித்தது கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ்.
பெரும் தொகைக்கு படத்தை வாங்கியுள்ள சன் பிக்சர்ஸ், இந்தப் படத்தை இந்தியாவின் மிகப் பிரமாண்ட படமாக்க உறுதி பூண்டுள்ளது.
- நன்றி: தட்ஸ்தமிழ்
தள மாற்றங்கள் @ giriblog | Announcement
4 years ago
No comments:
Post a Comment