நாம் முன்பு எப்படி இருந்தோம், இப்போது எப்படி இருக்கிறோம், இனி எப்படி இருக்க வேண்டும் என்று 'பக்கா'வாகக் கணித்து வைத்துக் கொண்டிருக்கிறார் ரஜினி. எந்த முடிவு எடுப்பதானாலும் கொட்டினோம், கவிழ்த்தோம் என்று பரபரக்கச் செய்ய மாட்டார். நிதானமாக, நன்கு யோசித்துத்தான் முடிவெடுப்பார்…”
-ரஜினிக்கு இது யார் கொடுத்த சான்றிதழ் என்று யோசிக்கிறீர்களா...
இப்போது அவரைத் திட்டி எழுதி, தங்களது இருப்பை வெளிக்காட்ட வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ள அதே விகடன் குழுமம்தான்.
நேரத்துக்கு ஒரு பேச்சு, ஆண்டுக்கு ஒரு நிலைப்பாடு என மாறிக் கொண்டே இருக்கும் இவர்கள், எப்போதும் ஒரே நிலைப்பாட்டில் இயங்கும் ரஜினியை விமரிசிப்பதை என்னவென்று சொல்வது?
மதுரையில் நடந்த ஒரு விழாவில் ரஜினி பங்கேற்றுப் பேசியதை, ரஜினியின் பிறந்த நாளுக்காக தங்களது இலவச இணைப்பில் வெளியிட்டிருந்தனர்.
நியாயமாக இந்த வரிகளை அவர்கள்தான் தினசரி மனப்பாடம் செய்ய வேண்டும். தன் ரசிகர்களுக்கு ரஜினி தந்திருக்கும் இடம் என்ன என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டியது விகடன் போன்ற பத்திரிகைகள்தான்.
அன்றும், இன்றும்... ‘என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழ் மக்களே...’ என்றுதான் ரஜினி அழைக்கிறார். இதை அவர் எப்போதும் மறக்கவில்லை. மீடியாதான் இந்த உண்மையை அடிக்கடி மறப்பதும், பின்னர் நினைவுக்கு வந்து தடுமாறுவதுமாக காமெடி பண்ணிக் கொண்டிருக்கிறது.
தன் ரசிகர்கள் குறித்து ரஜினி கூறிய வரிகள்:
"மதுரைக்கும் எனக்கும் ஒரு நெருங்கிய நட்பு உண்டு. நான் மதுரைக்கு முதன்முதலில் வந்தது 'மூன்று முடிச்சு' பட விழாவுக்கு. இதில் 'மூன்று' உண்டு. அதன்பின் 'திரிசூலம்' படத்தின் வெற்றி விழாவுக்கு வந்தேன். 'திரிசூலம்' - மூன்று சூலம். இதிலும் 'மூன்று' உண்டு.
பிறகு. 'மூன்று முகம்' படத்தின் வெற்றி விழாவுக்கும் வந்தேன். இதிலும் 'மூன்று' உண்டு. மதுரை என்பதிலும் மூன்று எழுத்து. ரஜினி என்பதிலும் மூன்று எழுத்து. இப்படியாக எனக்கும் மதுரைக்கும் நெருங்கிய நட்பு உண்டு.
நான் சினிமாவுக்கு வந்ததே ஒரு அதிசயம். அதிலும் கதாநாயகன் அந்தஸ்து பெற்றது பெரிய அதிசயம். அதைவிட, ரசிகர்களாகிய உங்கள் உள்ளங்களை நான் வென்றது மிகப் பெரிய அதிசயம். இந்திப் படங்களில் நடிக்கச் சென்றதும் அதிசயம். அதன்பின் ஆங்கிலப் படத்தில் நடித்தது பேரதிசயம்.
நான் பிறந்தவுடன் டாக்டர்கள், 'இவன் பத்து நாள் கூடத் தாங்க மாட்டான். இறந்துவிடுவான்' என்று சொல்லிவிட்டார்களாம். நான் பிறந்த நட்சத்திரம் என்ன என்று எனக்குத் தெரியாது. 'மூன்று முடிச்சு' விழாவுக்கு வந்திருந்தபோது, மீனாட்சியம்மன் கோயிலுக்குச் சென்றேன்.
சக நடிகர்களெல்லாம் தங்கள் பிறந்த நட்சத்திரங்களைச் சொல்லி அர்ச்சனை செய்தார்கள். அர்ச்சகர் என்னிடம் 'உன் நட்சத்திரம் என்ன?' என்று கேட்டார். எனக் குத்தான் தெரியாதே! அப்போது என் நட்சத்திரம் என்ன என்று தெரியாது. இப்போது தெரிந்துவிட்டது'' என்று கூறவும், ரசிகர்கள் 'சூப்பர் ஸ்டார்' என்று உற்சாக மாகக் குரல் கொடுத்தனர்.
ரசிகர்களே என் தெய்வம்!
நான் ஒரு குதிரை மாதிரி. என் கண்மணிகளாகிய நீங்கள் என் மேல் அமர்ந்துள்ளீர்கள். எனக்கொரு கதை நினைவுக்கு வருகிறது. ஒரு குதிரைமேல் சாமியை வைத்து ஊர்வலம் வந்தார்கள். வரும் வழியில் எல்லோரும் வணங்கினார்கள். உடனே குதிரைக்குக் கர்வம் வந்துவிட்டது, எல்லோரும் தன்னை வணங்குகிறார்களே என்று!
கோயில் வந்ததும், சாமியை உள்ளே எடுத்துச் சென்றுவிட்டார்கள். அப்புறம் யாரும் குதிரையை மதிக்கவில்லை. அதுபோலத்தான் நானும்! ரசிகர்களாகிய நீங்கள் இருக்கும் வரைதான் எனக்கு மரியாதை...!"
ஆக, ரஜினி அன்று சொன்னதை இன்று வரை காப்பாற்றி வருகிறார். ‘தலைவா எங்களுக்காக என்ன செஞ்சீங்க?’ என்று தன் ரசிகன் தன்னை நேருக்கு நேர் பார்த்துக் கேட்கும் அளவு அவர்களை சமமாக நடத்துகிறார். அந்த நேர்மையும் சத்தியமும் ரஜினிக்கு இருக்கிறது.
ஆனால் 15 ரூபாய் கொடுத்து புத்தகம் வாங்கிப் படிக்கும் தங்கள் வாசகர்களுக்கு எந்த ஒரு விஷயத்தையும் விருப்பு வெறுப்பின்றி, யார் பக்கமும் சாயாமல், நடுநிலையாகச் சொல்லும் தொழில் தர்மமும், நேர்மையும் விகடனுக்கு இப்போது இருக்கிறதா?
-வினோஜாசன்
www.envazhi.com
தள மாற்றங்கள் @ giriblog | Announcement
4 years ago
No comments:
Post a Comment