Thursday, December 18, 2008

‘பொறுத்திருந்து பாருங்க!’ - ரஜினி

ந்திரன் இந்தியாவிலேயே மிகப் பெரிய படம். பொறுத்திருந்து பாருங்க... நான் சொல்றது உங்களுக்கே புரியும் என்றார் ரஜினி.

எந்திரன் படத்தை 150 கோடி செலவில் தயாரிக்க திட்டமிட்டு வேலைகளைத் துவங்கின ஈராஸ் நிறுவனமும், அய்ங்கரன் இன்டர்நேஷனலும்.

ஆனால் சர்வதேச நிதி நெருக்கடியில் மாட்டிக் கொண்ட ஈராஸ், படத்திலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தது. இப்படியொரு பிரமாண்ட படத்தை தனித்து நின்று தயாரிக்கவும் அய்ங்கரனால் முடியாது. எனவே மாற்று வழி யோசித்துக் கொண்டிருந்தது அந்நிறுவனம். ஆனாலும் படப்பிடிப்புக்கு எந்தத் தடையும் வராமல் பார்த்துக் கொண்டவர்கள் இருவர்.
ஒருவர் நமது சூப்பர் ஸ்டார்... அடுத்தவர் இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான அருண்பாண்டியன்.

இன்னொரு பக்கம் படத்தை அய்ங்கரனை விட அதிக செலவில் தயாரிக்கும் பிரமாண்ட தயாரிப்பாளர்களையும் தேடி வந்தார் இயக்குநர் ஷங்கர்.

சில மாதங்களுக்கு முன் ரஜினி அமெரிக்காவிலிருந்து வந்திருந்த நேரம்...

அவரை தனியாகச் சந்தித்து ஒரு கோரிக்கை வைத்தார் கலாநிதி மாறன். சன் நிறுவனம் சன் பிக்சர்ஸ் என்ற பிரிவை ஆரம்பிக்கவிருப்பதாகவும், அதற்கு ரஜினி ஒரு படம் செய்து தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். ரஜினியும் அப்போது, கட்டாயம் படம் செய்யலாம் என்று கூறியிருந்தார்.

(இதே கோரிக்கையை ஸ்டாலின் மகன் உதய நிதியும் இரு ஆண்டுகளுக்கு முன் ரஜினியிடம் வைத்திருந்தார்.)

இப்போது, எந்திரன் படத்தையே செய்யச் சொல்லலாமே, என்ற யோசனை எழ, சன் தலைமைச் செயல் அலுவலர் ஹன்ஸ்ராஜ் சக்சேனாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக அவர் ரஜினியைச் சந்தித்துப் பேசினார். அய்ங்கரன் நிறுவனம் செலழித்த தொகைக்கு மேலேயே தரப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதெல்லாம் நடந்தபிறகு, தீ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் இப்படிச் சொன்னார் ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா:

நாங்கள் இதுவரை, மற்ற நிறுவனங்கள் தயாரிப்பில் இருந்தவற்றை வாங்கி அவர்களது பேனரிலேயே வெளியிட்டு வந்திருக்கிறோம். காதலில் விழுந்தேன், தெனாவட்டு எல்லாமே அப்படித்தான். இப்போது வரவிருக்கும் சிவா மனசுல சக்தி, தீ, திண்டுக்கல் சாரதி, பூக்கடை ரவி எல்லாமே மற்றவர்கள் தயாரித்து எங்களுக்குத் தந்தவை.

ஆனால் முதல் முறையாக சன் நிறுவனம் தனது சொந்த பேனரில் முழுக்க முழுக்க தயாரிக்கும் படம் ஒன்றை அறிவிக்க உள்ளது. நீங்கள் எதிர்பார்க்காத பிரமாண்ட படமாக அது இருக்கும் என்று சொல்லிக் கொள்கிறேன். டிசம்பர் 2-ம் வாரம் இதுபற்றிய அறிவிப்பை வெளியிடவிருக்கிறோம், என்றார்.

சரியாக 15 நாட்களில் இந்த அசத்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர் சூப்பர் ஸ்டாரும், அவர் பெயரிலேயே அமைந்துவிட்ட இந்த பட நிறுவனமும்... (குழப்பமாக உள்ளதா... சூப்பர்ஸ்டார்=சன்... சரிதானே!)

இதுபற்றி சூப்பர் ஸ்டார் ரஜினி கூறியிருப்பதாவது:

சன் பிக்சர்ஸ் பேனரில் ஒரு படம் பண்ணலாம் என இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே கலாநிதி மாறன் கேட்டிருந்தார். நிச்சயம் பண்ணலாம் என்று நான் அப்போது கூறியிருந்தேன். இப்போது இந்தப் படம் பண்றோம். அதுவும் அவர்களுடைய முதல் படமா எந்திரன் அமைஞ்சிருக்கு. ரொம்ப ஆச்சயர்யமாயிருக்கு. வெயிட் பண்ணி பாருங்களேன்... நிச்சயம் பெரிய சக்ஸஸ்புல் படமா இந்தப் படம் அமையும்..., என்றார்.

இந்தப் படம் மற்றும் சன் நிறுவனத்துடன் ஏற்பட்ட ஒப்பந்தம் குறித்து ரஜினி தெரிவித்த கருத்துக்களை சன் டிவி தனியாகப் பதிவு செய்துள்ளது. விரைவில் மிகப் பெரிய நிகழ்வாக அதை ஒளிபரப்பக் கூடும்.

குறிப்பு: சன் குழுமத்தின் மீது நீங்கள் வைத்த விமர்சனங்கள் என்னாச்சு என நண்பர்கள் சிலர் கேள்வி எழுப்பி உள்ளனர். அதுபற்றி விரிவான பதிவு விரைவில் வரும்.
http://www.envazhi.com

No comments: