Wednesday, December 3, 2008

யார் தமிழன்? - ஒரு அலசல்

சில அரசியல் தலைவர்கள் நம் தமிழ்நாட்டை ஒரு தமிழன்தான் ஆளவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்களே. இதுபற்றி உங்கள் கருத்து என்ன?

'வரவேற்கத்தக்கது. சரியாத்தான் சொல்லியிருக்காங்க. தமிழ்நாட்டை ஒரு செட்டியாரோ, முதலியாரோ, கவுண்டரோ, தேவரோ, பிராமினோ அல்லது நான் பிராமினோ ஆளவேண்டும் என்று சொல்லலையே. ஒரு தமிழன்தான் ஆளவேண்டும் என்றுதானே சொல்லியிருக்காங்க. என்னைப் பொறுத்தவரை தமிழ் பேசுபவர்கள் அத்தனை பேரும் தமிழர்கள்தான்!'

-1995-ம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினி அளித்த தூர்தர்ஷன் பேட்டியில் ஒரு கேள்விக்கான அசத்தல் பதில் இது. (நன்றி: ஜெ. ராம்கி, ரஜினிபேன்ஸ்.காம்).

னிரெண்டு ஆண்டுகளுக்கு முன் குறிஞ்சிப் பூ பூத்த மாதிரி ரஜினி உதிர்த்த வார்த்தைகள் இவை. தமிழன் என்பதற்கு அவர் தன் பாணியில் தந்த இந்த விளக்கத்தை விட பொருத்தமான இன்னொன்றை யாராலும் தர முடியாது. (அட, என்ன ஒற்றுமை பாருங்கள். மீண்டும் பனிரெண்டு ஆண்டுகள் கழித்து இதேபோன்ற ஒரு அற்புத பேட்டியை ரசிகர்களுக்குத் தந்திருக்கிறார் நம்ம ‘சூப்பர் தலைவர்’!)

சரி... தமிழ்நாட்டை தமிழன்தான் ஆளவேண்டுமா... ரஜினியை மட்டும் மனதில் கொள்ளாமல் ஒரு பொதுவான கருத்து வேண்டும் என சில தலைவர்களைத் தொடர்பு கொண்டோம். நம்மிடம் தொடர்ந்து நட்புடன் பேசும் மிகச் சிலரை மட்டுமே இந்த குறுகிய நேரத்தில் தொடர்பு கொள்ள முடிந்தது.

அவர்களது கருத்துக்கள் சுருக்கமாக:

இல. கணேசன்

முதலில் நாம் இந்தியர்கள். அந்த நினைப்புதான் இறுதிவரை நமக்கு இருக்க வேண்டும். பிறப்பால் தமிழராக இருந்தாலும், உணர்வால் இந்தியர்களாகச் செயல்பட்டவர்களால்தான் செயற்கரிய சாதனைகள் பல செய்ய முடிந்த்து. அவர்களால்தான் இந்த தமிழ்நாட்டுக்கும் தமிழர்களுக்கும் பெருமை கிடைத்தது. தமிழர்களாக இருப்போம். இந்தியர்களாகச் செயல்படுவோம்.

ரஜினியை தமிழர் என்ற குறுகிய கண்ணோட்டத்துக்குள் யாருமே பார்க்கத் தேவையில்லை. அவர் நிஜமாகவே தமிழராக இருந்தாலும், இந்தியனாகத்தான் செயல்படுவார். அதுதான் அவர் இயல்பு.

பாரதிராஜா

பொம்மலாட்டம் பத்திரிகையாளர் சந்திப்பு முடிந்த கையோடு அவரை அணுகினோம்... ‘என்னை விட மாட்டியா நீ...’ என்று சிரித்தபடியே பேச ஆரம்பித்தார்!

தமிழ்நாட்டை தமிழர்தான் ஆள வேண்டும் என்பதில் என்ன தவறு இருக்கிறது. தமிழன் என்ற வார்த்தைக்கு ரஜினி சொன்ன விளக்கத்தை முழுமையாக ஏற்க முடியாது. தமிழ் பேசும் எல்லாரும் தமிழர்களாகி விடமாட்டார்கள். ஆனால் உணர்வால் தமிழர்களாக, தமிழர் நலம் காக்கும் ஆர்வமுள்ளவர்களாக இருக்க வேண்டும்.

ஆனால் யார் சொன்னாலும் சொல்லாவிட்டாலும், ரஜினி தமிழ்நாட்டைச் சேர்ந்தவராகிவிட்டார் என்பதை ஒப்புக் கொள்கிறேன். தமிழகத்தைச் சேர்ந்த மிகச் சிறந்த மனிதர்... போதுமாய்யா! (சிரிப்பு)

சார்... எனக்காக சொல்லணும்னு கேக்கல. ஜஸ்ட், உங்க அபிப்பிராயம் சொல்லுங்க...!

அட, எல்லார்கிட்டேயும் சொல்கிற அதே அபிப்பிராயம்தான்யா இது. நான் எங்கேயாவது ரஜினி தமிழ்நாட்டைச் சேர்ந்தவரில்லைன்னு பேசியிருக்கேனா.. இலங்கைத் தமிழருக்காக ராமேஸ்வரத்தில் நடத்திய போராட்டத்தின் போது கூட, தமிழர்களால் மிகப் பெரிய அந்தஸ்து பெற்றுள்ள ரஜினி, கமல் போன்ற நம்ம தமிழ் சூப்பர் ஸ்டார்கள் அறிக்கை விடணும்னுதான் கேட்டேன். விமர்சிக்கலை. அட, இதை சிரஞ்சீவிகிட்டேயா கேட்க முடியும். நம்மாளுங்க கிட்டதானேய்யா கேட்க முடியும்!

ஆனா நடிகர் சங்க உண்ணாவிரதத்துல, நாங்களே எதிர்பார்க்காத அளவுக்கு அருமையா தனது தமிழுணர்வைக் காண்பிச்சிட்டார் ரஜினி. அவரை ஏன் நான் குறை சொல்லப் போறேன். ஆனா, அவரது அரசியல் பத்தி இப்ப பேச மாட்டேன். அதுக்கான தருணம் வரல...

சோ எஸ் ராமசாமி

அடிக்கடி சோ கிட்ட கருத்து கேக்கறீங்களே-ன்னு சிலர் நினைக்கக் கூடும். அதற்கு ஒரு விளக்கம்: நான் மகான் அல்ல படத்தில் ஒரு காட்சியில் சோ போலீசில் மாட்டிக் கொள்வார்.

அப்போது அவரைக் காப்பாற்ற வரும் ரஜினியிடம் போலீஸ்: மிஸ்டர் விஸ்வநாத், இவரை (சோவை) உங்களுக்குத் தெரியுமா?

ரஜினி: என்னைப் பத்தி ‘தெரிஞ்ச’வர் இவர் மட்டும்தான்!

இது சினிமா டயலாக் மட்டுமல்ல... உண்மையும் கூட.

அதனால் அவர் கருத்து எப்போதும் தனி கவனம் பெறுகிறது!

12 வருஷமானாலும் ரஜினி சொல்ற எந்த வார்த்தைக்கு பவர் மட்டும் போகாதுங்கறதுக்கு இது ஒரு சாட்சி!

அவர் சொன்னதுதான் சரி. தமிழ் பேசறவங்கல்லாம் தமிழர்கள்தான். தமிழை ஆர்வமில்லாம, உணர்வில்லாம யாராலாவது கத்துக்க முடியுமா... மெட்ராஸ்ல தங்கி செட்டிலாயிட்டவங்கல்லாம் மதராஸி ஆன மாதிரி, தமிழ்நாட்டுல செட்டிலாகி, தமிழ் பேசுறவங்க தமிழர்கள்தானே...

ஆனா ரஜினி இந்த ‘கேட்டகிரி’ இல்ல. அவர் நிஜமாகவே தமிழுணர்வுள்ள தமிழன். இதுக்காக என் ஊர் கிருஷ்ணகிரின்னு எல்லாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமே கிடையாது. இங்க அரசியலுக்காக தமிழையும், தமிழ் உணர்வையும் வியாபாரமாக்கறவங்களைவிட பல மடங்கு உயர்வான தமிழர் அவர்!

-வினோஜாசன்
http://www.envazhi.com

No comments: