Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Monday, February 2, 2009

கலைஞர் வளர்தெடுத்த அரசியல் நாகரீகம்!


கலைஞர் இனி ராஜபக்சேவின் ராஜதந்திரம், பெருந்தன்மை குறித்தும் பேசலாம்!

உடன்பிறப்பே, நான் திமுக தலைவர் பதவியை ராஜினாமா செய்வதற்காக, நீங்கள் யாரும் உணர்ச்சிவசப்பட்டு தீக்குளிக்க வேண்டாம்… என்று அவர் சொல்லி முடித்த மறுநாள் காலை நான்கைந்து பேர் உயிருடன் கொளுத்திக் கொண்டதாக செய்தி வந்தது, முன்பொருமுறை.

ஒரு விஷயத்தை ‘செய்யாதீர்கள்…அரசியலாக்காதீர்கள்’ என கலைஞர் மு. கருணாநிதி குறிப்பிட்டுச் சொல்கிறார் என்றால், அந்த விஷயத்தை அவர் தீவிரமாகச் செய்யப்போகிறார் என்று அர்த்தம்.

ஈழத் தமிழர் விஷயத்திலும் இப்போது இதே பாணி அரசியலை கலைஞர் கையிலெடுத்திருக்கிறார். ‘முத்துக்குமார் தீக்குளித்த சம்பவத்தை அரசியலாக்காதீர்கள்… இம்மாதிரி தீக்குளிப்புகளை ஊக்கப்படுத்தாதீர்கள்’ என இந்தப் பக்கம் அறிக்கை விட்டுவிட்டு, இன்னொரு பக்கம், அதை தீவிர அரசியலாக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளார். முத்துக்குமார் தீக்குளிப்பால் தமிழர்கள் மத்தியில் ஏற்பட்டுவிட்ட உணர்ச்சிப்பூர்வ போராட்ட நிலையை அடக்க முயலும் அரசியல் இது.

ஈழப் பிரச்சினையில் கலைஞர் அரசின் கையாலாகாத நிலையைக் கடுமையாகவே விமர்சித்திருந்த முத்துக்குமார், தன் மரணத்தை துருப்புச் சீட்டாக வைத்து போராடி ஈழப் பிரச்சினைக்குத் தீர்வு காணுங்கள் என தனது வாக்குமூலமாக அளித்த துண்டுப் பிரசுரத்தில் குறிப்பிட்டிருந்தார். இதனால் முத்துக்குமாரின் உடலுக்கு மரியாதை செலுத்த வந்த திமுக எம்எல்ஏ பாபுவை துரத்தியடித்தனர் மாணவர்கள். இன்னொரு பக்கம் அரசு அறிவித்த நிதியையும் முத்துக்குமார் குடும்பம் பெற்றுக் கொள்ள மறுத்துவிட்டது.

இதில் கடுப்பாகிவிட்ட கலைஞர், எங்கே முத்துக்குமாரின் மரணத்தை வைத்து, தமிழகத்தின் பிரதிநிதிகளாக வைகோ, ராமதாஸ் உள்ளிட்டவர்கள் தங்களைக் காட்டிக் கொள்வார்களோ என்ற பயத்தில், முத்துக்குமார் மறைவை அரசியலாக்காதீர்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதுவே முத்துக்குமாரின் தீக்குளிப்பு திமுகவுக்கு அனுசரணையாக இருந்திருந்தால், கலைஞரின் அறிக்கை எப்படியெல்லாம் வர்ணம் பூசி வந்திருக்கும் என யோசித்துப் பாருங்கள்.

செத்தவன் வீட்டில் அரசியல் செய்வதுதான் திராவிட அரசியலின் ஆரம்பமே. மொழிப்போர் தியாகிகள் என ஆரம்பித்து இப்போது ஈழப் போர் தியாகியாகிவிட்ட முத்துக்குமார் மரணம் வரை, அரசியலுக்கான முதல் விதையை ஊன்றுவதே திமுக அல்லது அதன் சார்பு அமைப்புகளாகத்தான் இருந்து வந்துள்ளன.

இப்போது தமிழகத்தில் தன்னெழுச்சியாக பரவியிருக்கும் ஈழ ஆதரவு நிலைப்பாட்டை தலைமையேற்று நடத்தியிருக்க வேண்டியதே கலைஞர்தான்.

இப்போது அவர் சார்ந்த ஊடகங்கள் திடீரென புலியெதிர்ப்புப் பிரச்சாரத்துக்கு மாறிவிட்டன. இதுவரை புலிகளின் அறிக்கைக்கு முக்கியத்துவம் தந்து வந்தவர்களுக்கு, இப்போது ராஜபக்சே பிரதர்ஸ் தருவதே அதிகாரப்பூர்வ செய்திகிவிட்டது. கலைஞரும் அவரைச் சார்ந்த ஊடகங்களும் இனி ராஜபக்சேவின் ராஜதந்திரம், பெருந்தன்மை குறித்தும் பேசலாம்!

உண்ணாவிரதம், கடையடைப்பு, பந்த் போன்றவற்றுக்கு எப்போதுமே வக்காலத்து வாங்கும் கலைஞருக்கு, அதையே மற்ற தலைவர்கள் செய்யும்போது கோபம் பொத்துக் கொண்டு வருகிறது. இன்று சட்டத்தின் ஏகபோகக் காவலராகிவிட்டார், ஒரு காலத்தில் அரசியல் சட்ட நகலெரித்த இந்த பகுத்தறிவுவாதி.

சேது சமுத்திரத்துக்காக இவர் அறிவித்த வேலை நிறுத்தம், உருக்கமான அறிக்கைகளையெல்லாம் அத்தனை சுலபத்தில் மறந்துவிட்டாரே மனிதர்!

சோனியா காந்தியின் புலிகள் பழிவாங்கும் படத்துக்கு ஆதரவாகவும், காங்கிரஸ் கூட்டணியை விட்டுவிட்டால் அரசியலில் தனது வாரிசுகளுக்கு எதிர்காலமே இல்லாமல் போய்விடுமோ என்ற நம்பிக்கையின்மையும்தான் இன்று கலைஞரை மாறி மாறி குட்டிக்கரணமடிக்க வைத்துள்ளன.

தமிழினத் தலைவராக இவரை உருவகப்படுத்திக் கொண்டாடிக் கொண்டிருந்த தமிழர்கள் நிஜமாகவே பரிதாபத்துக்குரியவர்களே!

-எஸ்எஸ்
http:/www.envazhi.com

Wednesday, December 3, 2008

யார் தமிழன்? - ஒரு அலசல்

சில அரசியல் தலைவர்கள் நம் தமிழ்நாட்டை ஒரு தமிழன்தான் ஆளவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்களே. இதுபற்றி உங்கள் கருத்து என்ன?

'வரவேற்கத்தக்கது. சரியாத்தான் சொல்லியிருக்காங்க. தமிழ்நாட்டை ஒரு செட்டியாரோ, முதலியாரோ, கவுண்டரோ, தேவரோ, பிராமினோ அல்லது நான் பிராமினோ ஆளவேண்டும் என்று சொல்லலையே. ஒரு தமிழன்தான் ஆளவேண்டும் என்றுதானே சொல்லியிருக்காங்க. என்னைப் பொறுத்தவரை தமிழ் பேசுபவர்கள் அத்தனை பேரும் தமிழர்கள்தான்!'

-1995-ம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினி அளித்த தூர்தர்ஷன் பேட்டியில் ஒரு கேள்விக்கான அசத்தல் பதில் இது. (நன்றி: ஜெ. ராம்கி, ரஜினிபேன்ஸ்.காம்).

பனிரெண்டு ஆண்டுகளுக்கு முன் குறிஞ்சிப் பூ பூத்த மாதிரி ரஜினி உதிர்த்த வார்த்தைகள் இவை. தமிழன் என்பதற்கு அவர் தன் பாணியில் தந்த இந்த விளக்கத்தை விட பொருத்தமான இன்னொன்றை யாராலும் தர முடியாது. (அட, என்ன ஒற்றுமை பாருங்கள். மீண்டும் பனிரெண்டு ஆண்டுகள் கழித்து இதேபோன்ற ஒரு அற்புத பேட்டியை ரசிகர்களுக்குத் தந்திருக்கிறார் நம்ம ‘சூப்பர் தலைவர்’!)

சரி... தமிழ்நாட்டை தமிழன்தான் ஆளவேண்டுமா... ரஜினியை மட்டும் மனதில் கொள்ளாமல் ஒரு பொதுவான கருத்து வேண்டும் என சில தலைவர்களைத் தொடர்பு கொண்டோம். நம்மிடம் தொடர்ந்து நட்புடன் பேசும் மிகச் சிலரை மட்டுமே இந்த குறுகிய நேரத்தில் தொடர்பு கொள்ள முடிந்தது.

அவர்களது கருத்துக்கள் சுருக்கமாக:

இல. கணேசன்

முதலில் நாம் இந்தியர்கள். அந்த நினைப்புதான் இறுதிவரை நமக்கு இருக்க வேண்டும். பிறப்பால் தமிழராக இருந்தாலும், உணர்வால் இந்தியர்களாகச் செயல்பட்டவர்களால்தான் செயற்கரிய சாதனைகள் பல செய்ய முடிந்த்து. அவர்களால்தான் இந்த தமிழ்நாட்டுக்கும் தமிழர்களுக்கும் பெருமை கிடைத்தது. தமிழர்களாக இருப்போம். இந்தியர்களாகச் செயல்படுவோம்.

ரஜினியை தமிழர் என்ற குறுகிய கண்ணோட்டத்துக்குள் யாருமே பார்க்கத் தேவையில்லை. அவர் நிஜமாகவே தமிழராக இருந்தாலும், இந்தியனாகத்தான் செயல்படுவார். அதுதான் அவர் இயல்பு.

பாரதிராஜா

பொம்மலாட்டம் பத்திரிகையாளர் சந்திப்பு முடிந்த கையோடு அவரை அணுகினோம்... ‘என்னை விட மாட்டியா நீ...’ என்று சிரித்தபடியே பேச ஆரம்பித்தார்!

தமிழ்நாட்டை தமிழர்தான் ஆள வேண்டும் என்பதில் என்ன தவறு இருக்கிறது. தமிழன் என்ற வார்த்தைக்கு ரஜினி சொன்ன விளக்கத்தை முழுமையாக ஏற்க முடியாது. தமிழ் பேசும் எல்லாரும் தமிழர்களாகி விடமாட்டார்கள். ஆனால் உணர்வால் தமிழர்களாக, தமிழர் நலம் காக்கும் ஆர்வமுள்ளவர்களாக இருக்க வேண்டும்.

ஆனால் யார் சொன்னாலும் சொல்லாவிட்டாலும், ரஜினி தமிழ்நாட்டைச் சேர்ந்தவராகிவிட்டார் என்பதை ஒப்புக் கொள்கிறேன். தமிழகத்தைச் சேர்ந்த மிகச் சிறந்த மனிதர்... போதுமாய்யா! (சிரிப்பு)

சார்... எனக்காக சொல்லணும்னு கேக்கல. ஜஸ்ட், உங்க அபிப்பிராயம் சொல்லுங்க...!

அட, எல்லார்கிட்டேயும் சொல்கிற அதே அபிப்பிராயம்தான்யா இது. நான் எங்கேயாவது ரஜினி தமிழ்நாட்டைச் சேர்ந்தவரில்லைன்னு பேசியிருக்கேனா.. இலங்கைத் தமிழருக்காக ராமேஸ்வரத்தில் நடத்திய போராட்டத்தின் போது கூட, தமிழர்களால் மிகப் பெரிய அந்தஸ்து பெற்றுள்ள ரஜினி, கமல் போன்ற நம்ம தமிழ் சூப்பர் ஸ்டார்கள் அறிக்கை விடணும்னுதான் கேட்டேன். விமர்சிக்கலை. அட, இதை சிரஞ்சீவிகிட்டேயா கேட்க முடியும். நம்மாளுங்க கிட்டதானேய்யா கேட்க முடியும்!

ஆனா நடிகர் சங்க உண்ணாவிரதத்துல, நாங்களே எதிர்பார்க்காத அளவுக்கு அருமையா தனது தமிழுணர்வைக் காண்பிச்சிட்டார் ரஜினி. அவரை ஏன் நான் குறை சொல்லப் போறேன். ஆனா, அவரது அரசியல் பத்தி இப்ப பேச மாட்டேன். அதுக்கான தருணம் வரல...

சோ எஸ் ராமசாமி

அடிக்கடி சோ கிட்ட கருத்து கேக்கறீங்களே-ன்னு சிலர் நினைக்கக் கூடும். அதற்கு ஒரு விளக்கம்: நான் மகான் அல்ல படத்தில் ஒரு காட்சியில் சோ போலீசில் மாட்டிக் கொள்வார்.

அப்போது அவரைக் காப்பாற்ற வரும் ரஜினியிடம் போலீஸ்: மிஸ்டர் விஸ்வநாத், இவரை (சோவை) உங்களுக்குத் தெரியுமா?

ரஜினி: என்னைப் பத்தி ‘தெரிஞ்ச’வர் இவர் மட்டும்தான்!

இது சினிமா டயலாக் மட்டுமல்ல... உண்மையும் கூட.

அதனால் அவர் கருத்து எப்போதும் தனி கவனம் பெறுகிறது!

12 வருஷமானாலும் ரஜினி சொல்ற எந்த வார்த்தைக்கு பவர் மட்டும் போகாதுங்கறதுக்கு இது ஒரு சாட்சி!

அவர் சொன்னதுதான் சரி. தமிழ் பேசறவங்கல்லாம் தமிழர்கள்தான். தமிழை ஆர்வமில்லாம, உணர்வில்லாம யாராலாவது கத்துக்க முடியுமா... மெட்ராஸ்ல தங்கி செட்டிலாயிட்டவங்கல்லாம் மதராஸி ஆன மாதிரி, தமிழ்நாட்டுல செட்டிலாகி, தமிழ் பேசுறவங்க தமிழர்கள்தானே...

ஆனா ரஜினி இந்த ‘கேட்டகிரி’ இல்ல. அவர் நிஜமாகவே தமிழுணர்வுள்ள தமிழன். இதுக்காக என் ஊர் கிருஷ்ணகிரின்னு எல்லாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமே கிடையாது. இங்க அரசியலுக்காக தமிழையும், தமிழ் உணர்வையும் வியாபாரமாக்கறவங்களைவிட பல மடங்கு உயர்வான தமிழர் அவர்!

-வினோஜாசன்
http://www.envazhi.com

Friday, November 28, 2008

இந்தியாவின் தவப் புதல்வர்களில் ஒருவர் ரஜினி! – இல கணேசன்

பொதுவாக திராவிட கட்சிகளில் உள்ள தலைவர்களுக்கு இணையாக பேச்சுத் திறன் கொண்ட தலைவர்கள் தேசிய கட்சிகளான காங்கிரஸ் அல்லது பாஜகவில் இல்லை என்ற ஒரு கருத்து நிலவுகிறது.

யோசித்துப் பார்த்தால் அது உண்மைதான். யதார்த்தமான தேசியக் கட்சிகளின் பால் மக்களுக்கிருந்த ஈடுபாட்டைத் திருப்ப திராவிடக் கட்சிகள் பயன்படுத்திய உத்திகளுள் ஒன்று அலங்கார மேடைப் பேச்சு. ஆனால் தீரர் சத்தியமூர்த்தி, சிஎஸ் போன்ற போன தலைமுறை தலைவர்கள் அழுத்தமான, நாகரிகமான, மறுக்க முடியாத மேடைப் பேச்சுகளை வழங்குவதில் தனித்த திறனுடன் விளங்கினர்.

ஆனால் தமிழ் சினிமாவில் நிலவும் பாகுபாட்டைப் போலவே இவர்களின் பேச்சு ஏ சென்டர்களுக்கு மட்டும்தான் என்றிருந்த்து. ஆனால் அறிஞர் அண்ணா, கலைஜர், மக்கள் திலகம் எம்ஜிஆர் ஆகியோரது பேச்சுக்களே அனைத்துத் தரப்பு மக்களின் மனங்களையும் கொள்ளை கொண்டன.

இன்றைய தலைமுறையில் நல்ல மேடைப்பேச்சுக்கு திமுக பேச்சாளர்களை விட்டால் ஆள் கிடையாது (மோசமான பேச்சுக்கும்தான்!). புரட்சித் தலைவர் காலத்திலாவது பரவாயில்லை, ஆர்எம்வீ, முத்துசாமி, எஸ்டிஎஸ், ஜேப்பியார், நாவலர் என நிறைய தலைகள் இருந்தன. இவர்கள் பேச்சைக் கூட எடுபடாமல் செய்யுமளவுக்கு செல்வாக்கு புரட்சித் தலைவரின் முகத்துக்கு இருந்த்து. ஆனால் இன்றைய அதிமுகவில் அப்படிப்பட்டவர்களை வலை வீசித்தான் தேட வேண்டும்.

காங்கிரஸில் தமிழருவி மணியன், பீட்டர் அல்போன்ஸ் இருவரை விட்டால் நல்ல மேடைப் பேச்சுக்கு ஆளில்லை.

பாஜகவில் மூன்று நல்ல பேச்சாளர்கள் உள்ளனர். நமக்கெல்லாம் நன்கு தெரிந்த நண்பர்கள் திருநாவுக்கரசர், பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் இல கணேசன். இந்த மூவரைத் தவிர நான்காமவர் ஒருவர் உண்டு. அது நம்ம சோ. ஆனால் அவர் எப்போது பாஜவை ஆதரிப்பார், எப்போது காலை வாருவார் என்று அவரது குரு அத்வானிக்கே தெரியாது!

இவர்களை எல்லாம் விட இல கணேசனுக்கு உள்ள சிறப்பு அவரது பேச்சில் இழையோடும் அழுத்தம் திருத்தமான வாதம். எந்தக் கருத்தையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று பேசத் தெரியாத மனிதர் அவர். கட்சிப் பணிக்காகவே தன் இளமையை அர்ப்பணித்துக்கொண்ட கட்டை பிரம்மச்சாரி, நேர்மையான மனிதர்.

பாஜக என்ற கட்சியுடன் நமக்குள்ள முரண்பாடுகளை தள்ளிவிட்டுப் பார்த்தால், இல கணேசன் அபரிமிதமான திறமைகளை உள்ளடக்கிய யதார்த்தமான மனிதர். எல்லாராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய யதார்த்த அம்சங்களைக் கொண்ட நல்ல அரசியல்வாதி அவர்.
‘ஆர்த்தி’ என்ற புதிய ஆன்மீக தொலைக்காட்சி துவக்க விழா இரு தினங்களுக்கு முன் நடந்தது. சிறப்பு விருந்தினர் இல கணேசன்.

அவரது விழா சிறப்புரை மிகவும் அருமையாக, நிறைவாக இருந்தது. இந்த மனிதர் மட்டும் திராவிடக் கட்சிகளில் இருந்திருந்தால்... வைகோவைப் போல அருமையான பேச்சாளராக புகழ்பெற்றிருப்பார்... பரவாயில்லை. காலமிருக்கிறது. ரஜினி என்ற நேரிய மனிதரின் அரசியல் பிரவேசம் பாக்கியிருக்கிறது... பார்க்கலாம்!

தொடக்க விழா நிகழ்ச்சிகளுக்குப் பிறகு பதினைந்து நிமிடங்கள் அவருடன் பேச வாய்ப்புக் கிடைத்தது.

கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளாக நம்மைக் கவனித்து வரும் ஒரு நண்பர் அவர். அந்த உரிமையில் அவரது காரில் ஏறிக் கொள்ளச் சொன்னவர், தொடர்ந்து அரைமணி நேரம் நம்மிடம் பேசினார். அவரது பேச்சிலிருந்து...

(நமது கேள்விகளை விட்டுவிடுவோம்... நேரடியாக அவரது பேச்சுக்குப் போய்விடுவோம்!)

நல்ல மனிதர் ஒருவருக்காக இணையதளம் நடத்துகிறீர்கள், முதலில் வாழ்த்துக்கள். ரஜினிக்கு வெப்சைட் என்ற பேரில் அவரது புகழ் பாடும் வேலை வேண்டாம். அதை ரஜினியே விரும்ப மாட்டார். எனக்குத் தெரியும் நண்பர் ரஜினியைப் பற்றி!

மக்களை... அவரது ரசிகர்களை மேலும் விவரமானவர்களாக மாற்றும் முயற்சியில் இறங்குங்கள்.

கிட்டத்தட்ட ரஜினிக்கு மட்டும் 15க்கும் மேற்பட்ட இணைய தளங்களும், நூறுக்கும் மேற்பட்ட பிளாக்குகளும் இருப்பதாக நண்பர் குருமூர்த்தி என்னிடம் ஒருமுறை சொன்னார். எனக்குத் தெரிந்து உலகில் எந்த நடிகருக்கும் இந்தச் சிறப்பு இல்லை என்றே நினைக்கிறேன். நினைத்தால் பெருமையாக இருக்கிறது.

ஆன்மீகத்தையும், இந்த நாட்டின் கலாச்சாரத்தையும் பாதுகாக்க நினைக்கும் ஒரு உண்மையான இந்தியனுக்கு கிடைத்துள்ள பெருமை இது.

ரஜினியை ஒரு நடிகன் என்றா நினைக்கிறீர்கள். நிச்சயம் இல்லை. அவர் அதற்கும் மேல். அவர் ஒரு அரசியல்வாதி அல்லது சமூக சேவகர் என்ற வட்டத்துக்குள் அடங்குபவரில்லை.

இந்த உலகில் நான் பெரிதும் மதிக்கும் அடல் பிகாரி வாஜ்பாய், லால் கிஷன் அத்வானி ஆகிய பெரிய தலைவர்களின் வரிசையில் ரஜினியை நான் பார்க்கிறேன். உடனே, அவர் பாஜவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இதைச் சொல்வதாக நினைக்க வேண்டாம். நிச்சயம் அப்படியொரு குறுகிய மனப்பான்மை எனக்குக் கிடையாது.

ரஜினி ஒரு அதிசயப்பிறவி. அவர் ஆதரவு அத்வானி போன்ற நல்ல மனிதருக்குக் கிடைத்தால் நல்லதுதான். அப்படி இல்லாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் இந்த இந்திய மக்களுக்கு அவரது சேவை கிடைக்க வேண்டும். அவரைப் போன்ற நல்ல மனிதர் பிறப்பதே அரிது. அப்படி ஒரு அதிசய மனிதரின் வருகைக்காகத்தான் நாடு தவம் கிடக்கிறது.

ஒரு விஷயத்தை யோசித்துப் பாருங்கள்... இன்றைக்கு நாடு இருக்கும் நிலைமயில் எந்த மனிதரையாவது, அரசியலுக்கு வாருங்கள், கட்சி துவங்குங்கள் என மக்கள் அழைக்கிறார்களா... இல்லையே! அந்தப் பெருமையை ரஜினி ஒருவருக்குத்தான் மக்கள் முன் வந்து தருகிறார்கள். வருந்தி வருந்தி அழைக்கிறார்கள். ஆனால் அந்த மனிதரோ, தன்னைப் பக்குவப்படுத்திக் கொள்ள ஒரு யோகியைப் போல தவம் இருக்கிறார்.

ராமாயண, மகாபாரத காலத்து தருமங்களையும் இந்த பாரதத்துக்கு தேவையான கர்ம சிந்தனைகளையும் ஒருங்கே கொண்டவர் நண்பர் ரஜினி. நியாய தர்மத்துக்கு அந்த அளவு முக்கியத்துவம் தருபவர்.

அவர் இடத்தில் வேறு யாரையாவது நினைத்துப் பாருங்கள்.. அவசர கோலகத்தில் ஏதோ ஒரு கட்சி தொடங்கி அல்ப சந்தோஷங்களைப் பார்த்துவிட்டு இந்நேரம் காணமல் போயிருப்பார் அல்லது மோசமான அரசியல்வாதிகள் வரிசையில் இடம் பிடித்திருப்பார்.
வரமாட்டேன்... வரமாட்டேன் என்கிறார். கடைசியில் இவர் வந்துதான் இந்த நாடு நல்ல வழிக்கு திரும்ப வேண்டியிருக்கும் பாருங்கள், என அடிக்கடி சொல்வார் என் நண்பர் குருமூர்த்தி.

அத்வானியின் ஆச்சர்யம்!

சமீபத்தில் சென்னை வந்த அத்வானி அவர்கள் ரஜினியைச் சந்தித்தது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

அது ஒரு அரசியல்லாத அரசியல் சந்திப்பு! அத்வானி அவர்கள் அத்தனை சீக்கிரம் ஒவுர் வீடு தேடிப் போய்விடமாட்டார். அவர் அந்த அளவு ஈகோ பார்ப்பவர் என்று நினைத்துவிட வேண்டாம். அவருக்கு மனிதர்களைப் பார்த்தவுடன் புரிந்துவிடும் ஒருவர் எவ்வளவு நேர்மையுடன் நடந்து கொள்வார் என்று. ரஜினியைச் சந்தித்துவிட்டு வந்தபின், அவரது மன உறுதி குறித்து மிகுந்த ஆச்சர்யப்பட்டார் அத்வானி. மக்களிடம் இத்தனை வரவேற்பு, அழைப்புகள் இருந்தும் ரஜினி அமைதி காக்கிறார் என்றால் அதற்குப் பின்னால் ஆழ்ந்த அர்த்தம் உள்ளது. இந்த மாதிரி நல்ல மனிதர்களின் நட்புதான் நமக்குத் தேவை; இவரைப் போன்ற மனிதர்கள்தான் இந்திய அரசியலுக்குத் தேவை என்றார். அதையே அவர் பத்திரிகையாளர்களிடமும் தெரிவித்தார்.

இந்த நாட்டின் தவப்புதல்வர்களுள் ஒருவர் ரஜினி. இந்த என் கருத்தில் என்றைக்கும் மாற்றம் இருக்காது, ரஜினி கட்சி ஆரம்பித்து தனி வழி கண்டாலும்...!, என்றார் இல கணேசன்.

இவை ஒப்புக்காக சொல்லப்பட்டவை அல்ல... உள்மனதிலிருந்து வந்த வார்த்தைகள் என்பதை நம்மால் உணர முடிந்தது!

http://www.envazhi.com

Thursday, November 13, 2008

அத்வானி – ரஜினி: எளிமையின் சிகரங்கள்!

ரஜினியை அத்வானி சந்தித்ததன் பின்னணி குறித்து இனி ஒவ்வொருவரும் கட்டுக் கதைகளாக எழுதிக் குவிப்பார்கள். நமக்கு அந்த விவரங்கள் வேண்டாம். உண்மை மட்டும்தான் தேவை. ரஜினியைப் போன்ற உண்மையான மனிதர்கள் கட்டுக் கதைகளுக்காக கவலைப்படுவதில்லை.

ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்த பின் அத்வானி பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியளிக்கையில், சென்னை வரும்போது வீட்டுக்கு வருமாறு ரஜினி அழைத்தார். எனக்கும் அவரைச் சந்தித்துப் பேசும் ஆவலிருந்தது. அது இன்றுதான் நிறைவேறியது.
ஆண்டவன் நினைத்தால் நான் அரசியலுக்கு வருவேன் என ரஜினி கூறியிருப்பதை நான் வரவேற்கிறேன். நான் அவரிடம், ‘உங்கள் நிலைப்பாடு அற்புதமானது. நீங்கள் நிச்சயம் அரசியலுக்கு வருவீர்கள். அதற்கு என் ஆசீர்வாதம்’, என்று கூறினேன். அவரிடம் பாஜகவுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்யுமாறு கேட்டேன், ஆனால் பதில் சொல்லவில்லை, என்று யதார்த்தமாகக் கூறினார்.

சும்மா விடுவார்களா நம்ம காகிதப் புலிகள்...

அதற்குள், ‘அத்வானி ஒன்றும் தானாகப் போகவில்லையாம், ரஜினி வேண்டி வருந்தி அழைத்ததால்தான் போனாராம்’, என எழுதிவிட்டனர்.

அவர்களது பொறாமைத் தீயில் நாளும் அவர்களே வெந்து கொண்டிருப்பதன் கஷ்டம் அவர்களுக்குத்தானே தெரியும்...! இதில் ஒரு அல்ப திருப்தி..!

அத்வானியின் இயல்பு!

ஒரு அரசியல்வாதியாக நாம் அத்வானியைப் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை. அவரது கட்சி மீதோ, அவர்களின் கொள்கை மீதோ நமக்கு பெரிய அபிப்பிராயமும் கிடையாது. ஆனால் அத்வானி நேர்மையாளர் எனப் பெயரெடுத்தவர். எளிமைக்கு மறுபெயர் அத்வானி என்று சொல்லலாம்.

2001-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் சமயத்தில் அவரது பேட்டி அவசரமாகத் தேவைப்பட்டது. அப்போது அவர் மத்திய அமைச்சர். அவரைப் பேட்டியெடுக்க அவரது செயலாளரிடம் தொடர்பு கொண்டோம். அடுத்த நாள் நேரில் வருமாறு அவரும் நேரம் ஒதுக்கிவிட்டார்.

ஆனால் டெல்லிக்குச் சென்று பேட்டியெடுத்து திரும்ப வேண்டும். அன்றைய விமானக் கட்டணப்படி பார்த்தால் கிட்டத்தட்ட 15 ஆயிரம் ரூபாய், இரண்டு நாள் கால அவகாசம் வேண்டும்.

செயலாளரிடம் நிலைமையைச் சொன்னபோது, டெல்லியில் உள்ள வேறு யாராவது ஒரு நிருபரை அனுப்புமாறு மாற்று யோசனை சொன்னார். ஆனால் அன்றைய சிறப்புக் கட்டுரைக்கான அவரது பேட்டி, குறிப்பாக இந்தி சேனலில் அன்றே ஒளிபரப்பாக வேண்டிய கட்டாயம். உடனே அவருக்கு நிலைமையை விளக்கினாம். அடுத்த 30 நிமிடம் கழித்து பேசச் சொன்னார்.

பேசினோம். மறுமுனையில் மாண்புமிகு எல்.கே. அத்வானி!

அத்தனை எளிமை, எளிதில் அணுகும் தன்மை கொண்டவர் அத்வானி. அவர் சூப்பர் ஸ்டாரை தேடி வந்து பார்ப்பதில் எந்த அதிசயமும் இல்லை. மீண்டும் மீண்டும் வரவேண்டியிருந்தாலும் வருவார்...!

மற்றபடி சூப்பர்ஸ்டாரின் இயல்பு பற்றி நாட்டுக்கே தெரியும். யாராக இருந்தாலும் தன்னைத் தேடி வந்துதான் பார்க்க வேண்டும் என்ற ஈகோ இல்லாத மனிதர் அவர்.

‘உங்கள் வீட்டுக்கு வருமாறு முன்பு அழைத்தீர்கள். வர முடியவில்லை. இப்போது சென்னை வருகிறேன். உங்களைப் பார்க்க வீட்டுக்கு வரலாமா...?’ என்று கேட்கும் இந்தியாவின் பிரதமர் பதவிக்கான பிரதான கட்சியின் வேட்பாளரிடம் அவர் என்ன பதில் சொல்லியிருக்க முடியும்?

ரஜினியைப் போன்ற நல்லவர்களின் பெருமையை இங்குள்ள வக்கிரம் பிடித்த அரசியல்வாதிகளுக்கும், நோயுள்ளம் கொண்ட பத்திரிகையாள பாவிகளும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஆண்டவன், அத்வானியை போயஸ் இல்லம் (இனி அரசியலில் போயஸ் இல்லம் என்றால் ரஜினி வீடு என்று பொருள் கொள்க!) போக வைத்தார் என்றே நினைக்கத் தோன்றுகிறது.

இன்னும் எத்தனை சரித்திர சந்திப்புகள் இந்த போயஸ் இல்லத்தில் நடக்கப் போகின்றனவோ!

என்ன சொல்றீங்க!
http://www.envazhi.com

Wednesday, November 12, 2008

‘நாளைய முதல்வரைச் சந்தித்த பாஜக பிரதமர் வேட்பாளர்’!!

ராகவ வீரா அவென்யூவுக்கு அடுத்த தெருவில்தான் இருக்கிறது அந்தப் பிரபல வீடு. அடுத்த முதல்வர் என அதிமுகவினரும் சில எதிர்க்கட்சிகளும் நம்பும் ஜெயலலிதாதாவின் வேதா இல்லம்தான் அது.

ஆனால் அந்த வீட்டை விட மிக சக்தி மிக்கதாக திகழ்வது ராகவ வீரா அவென்யூவிலிருக்கும் இன்னொரு இல்லம். வாய்மையே வெல்லும் என பொன்னெழுத்துக்கள் தகதகக்கும் அந்த இல்லத்தின் சொந்தக்காரர் யாரென்பது சொல்லாமலே தெரியும்!

இன்று புதன்கிழமை மாலை ஒட்டுமொத்த இந்தியாவின் கவனமும் அந்த இல்லத்தில் நடந்த சந்திப்பு மீதுதான் நிலைத்திருந்தது.

ஆம்... பாஜகவின் பிரதமர் வேட்பாளர் எல்.கே.அத்வானி இன்று சென்னையில் சூப்பர் ஸ்டார் ரஜினியைச் சந்தித்து அரைமணி நேரத்துக்கும் மேல் அரசியல் பேசினார்!

சென்னையில் இன்று நடந்த அத்வானியின் சுயசரிதை என் நாடு; என் வாழ்க்கை புத்தக வெளியீட்டு விழாவுக்கு வந்த அத்வானி முதலில் பார்த்துப் பேச விரும்பியது ரஜினியைத்தான்.

அவரிடம் ஏற்கெனவே ரஜினியின் சமீபத்திய அரசியல் சார்ந்த பேச்சுக்கள், அவரது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ள அசாதாரண எழுச்சி போன்றவை குறித்து சொல்லப்பட்டிருந்தது.

இதன் காரணமாகவே, தனது புத்தக வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக ரஜினி பங்கேற்க வேண்டும் என அத்வானி விரும்பினார். அதை தமிழக பாஜகவினரிடமும் தெரிவித்திருந்தார். அதன் ஒரு பகுதியாகத்தான் கடந்த இரு தினங்களுக்கு முன் ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்து விழாவுக்கு அழைப்பு விடுத்தார் இந்தி நடிகரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சத்ருகன் சின்ஹா.

அவரைத் தொடர்ந்து பிரதமர் பதவிக்கான பாஜக வேட்பாளரான அத்வானி இன்று போயஸ் கார்டன் சென்றார்.

மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இந்தச் சந்திப்புக்கு முக்கிய காரணமாக அமைந்தவர்கள் திருநாவுக்கரசர், சோ எஸ். ராமசாமி மற்றும் எஸ். குருமூர்த்தி ஆகிய மூவர்தான்.

இந்தச் சந்திப்பின் போது பேசப்பட்ட விவரங்கள் என்னவென்று ரஜினி தரப்பில் முழுமையாக வெளியிடப்படவில்லை. ஆனால் இச்சந்திப்பு குறித்துப் பேசிய திருநாவுக்கரசர், ரஜினியின் அரசியல் பிரவேசம், கட்சி ஆரம்பிக்கும் திட்டம் குறித்து அத்வானி கேட்டறிந்ததாகத் தெரிவித்தார்.

ரஜினியைச் சந்தித்துவிட்டு வந்த அத்வானி கூறுகையில், “இது அரசியல் நிமித்தமான சந்திப்புதான். வருகிற பொதுத்தேர்தலில் ரஜினியின் ஆதரவைக் கோரவே அவரது இல்லம் தேடிச் சென்றேன்....” என்று தெரிவித்தார்.

ஆனால் வெளிப்படையான எந்த ஆதரவையும தன்னால் அளிக்க முடியாது என ரஜினி தெரிவித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

உற்சாகத்தில் ரசிகர்கள்!

அடுத்த பிரதமர் எனும் நிலையில் வைத்துப் பார்க்கப்படும் நாட்டின் பெரிய தலாவர் ஒருவரே ரஜினியை வீடு தேடிப்போய் சந்தித்திருப்பது, ரஜினி ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

‘ஒரு வருங்கால முதல்வரை, வருங்கால பிரதமர் சந்தித்திருக்கிறார்...’ என அர்த்தத்துடன் சொல்லி மகிழ்கின்றனர் ரசிகர்கள்.

"மக்கள் ஆதரவு எனும் மகத்தான சக்தி இன்றைக்கு ரஜினியிடம் மட்டுமே உள்ளது. காரணம் மாசற்ற கரங்கள், நேர்மையான எண்ணங்களுக்குச் சொந்தக்காரர் ரஜினி. அதனால்தான் இன்று தமிழக அரசியலின் மையப் புள்ளியாகப் பார்க்கப்படுகிறார். டெல்லியைப் பொறுத்தவரை இன்றைக்கு கருணாநிதி, ஜெயலலிதாவை விட ரஜினியின் நகர்வுகள்தான் கூர்ந்து கவனிக்கப்படுகின்றன. இதை நன்கறிந்தவன் என்ற முறையில் சொல்கிறேன்", என்றார் நம்மிடம் முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர்.

ஒவ்வொரு தமிழனும் காலரைத் தூக்கிவிட்டுக் கொள்ளும் பெருமை இது!

நிஜமாகவே மகிழ்ச்சியில் மனம் அதிருதுங்கோ!!

http://www.envazhi.com

Friday, November 7, 2008

தன் 60 வது வயதில் அரசியலுக்கு வருவார் ரஜினி! –சொல்கிறார் சிரஞ்சீவி

அரசியலுக்கு வருவது குறித்து ரஜினி முடிவாக ஒரு பதிலைச் சொல்லிவிட்டார். ஆண்டவன் உத்தரவு வந்ததும் தன் அடுத்த உத்தரவை ரசிகர்களுக்கு வழங்கப் போவதாக அவர் அறிவித்துவிட்ட நிலையில் அவரது பேச்சுக்கு பொழிப்புரையும் விளக்கவுரையும் எழுதத் தொடங்கியுள்ளன சில வார இதழ்கள்.

ஆனால் ரஜினியின் புதிய கீதோபதேசத்தில் தெளிவும் மன நிம்மதியுமடைந்துள்ள அவரது ரசிகர்கள், ‘தலைவர் வரும்போது வரட்டும். உறுதியான உத்தரவை வழங்கட்டும். அதுவரை பொறுத்திருப்போம்’, என தங்களை உள்ளக் கிடக்கையை உள்ளுக்குள் வைத்துக் கொண்டு, ரஜினியின் இன்னொரு உத்தரவான குடும்பத்தைக் காப்பாற்றும் வேலையில் மூழ்கி விட்டார்கள்.

இந்நிலையில் தெலுங்கு முன்னணி நடிகரும், ரஜினியின் நண்பரும், சமீபத்தில் பிரஜா ராஜ்யம் கட்சி துவங்கி கலக்கி வருபவருமான சிரஞ்சீவி சிஎன்என் ஐபிஎன் ஆங்கிலத் தொலைக்காட்சிக்கு இன்று அளித்துள்ள பேட்டி முக்கியத்துவம் பெறுகிறது.
ரஜினி தனது 60 வது வயதில் அரசியலுக்கு வருவார் என்றும், இத்தகவலை ரஜினியே தன்னிடம் பேசும்போது தெரிவித்தார் என்றும் கூறியுள்ளார்.

அந்த பேட்டியின் சுருக்கம்:

என்னைக் கேட்டால் ரஜினி இப்போதே அரசியலில் இறங்க வேண்டும் என்றுதான் சொல்வேன். இதுதான் அதற்கான தருணமும் கூட.

நானும் அவரும் பலமுறை இது பற்றி ஆலோசனை செய்திருக்கிறோம். அப்போதெல்லாம் என்னிடம் ‘என்னுடைய 60-வது வயதில் அரசியலுக்கு வருவதுதான் சரியாக இருக்கும் என்று நம்புகிறேன்’ என்று ரஜினி கூறுவார்.

அவருக்கு பெரும் மக்கள் செல்வாக்கு உள்ளது. அவரளவுக்கு மக்களை வசீகரித்துள்ள தலைவர்கள் இப்போது தமிழகத்தில் இல்லை. மக்கள் அவரிடம் நிறைய எதிர்பார்க்கிறார்கள். எனவே இப்போது அரசியல் பற்றி அவர் முடிவு செய்யும் நேரம் வந்துவிட்டது, என்று கூறியுள்ளார் சிரஞ்சீவி.

இந்த நேர்காணலை வீடியோ பதிவாகப் பார்க்க:

ரஜினி அரசியலுக்கு வரவேண்டும்! - சிரஞ்சீவி

http://www.envazhi.com

நாளையே கட்சி துவங்கினாலும் ரஜினிதான் முதல்வர்! – சோ

சோவுக்கு அறிமுகம் தேவையில்லை. ரஜினி - சோ நட்புக்கும் அப்படியே. நல்லதோ கெட்டதோ எப்போதும் தன் கணிப்பில் பிடிவாதமான உறுதியுடன் இருப்பவர் சோ.

அவர் கூறுவது எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், ரஜினி விஷயத்தில் அவர் கூறும் பல கருத்துக்கள், கணிப்புகள் ஏற்புடையவையே.

ரஜினி தன் ரசிகர்களைச் சந்திக்கிறார் என்ற தகவல் கடந்த 1-ம் தேதி விறுவிறுவென பரவிக் கொண்டிருந்த நேரத்தில் ஒரு பிரபல ஆங்கில நாளிதழ் அவரிடம் அதுகுறித்துக் கருத்துக் கேட்டது.

கொஞ்சமும் யோசிக்காமல் சட்டென்று சோ சொன்ன பதில்:

ரஜினி பற்றி எதுவாக இருந்தாலும் அவரை விட்டுவிடுகிறார்கள். என்னைத்தான் கேட்கிறார்கள். நான் என்ன மாத்தியா சொல்லிவிடப்போகிறேன்... எப்போதும் சொல்வதுதான். ரஜினி நாளைக்கே கட்சி ஆரம்பித்தால் கூட தமிழகத்தின் அடுத்த முதல்வர் அவர்தான், அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை..., என்றார்.

ரசிகர்களுடனான ரஜினியின் சந்திப்பு மற்றும் அதில் அவர் சொன்ன அழுத்தமான பதில்கள் போன்றவை ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் ஒரு பாஸிட்டிவ் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், சோவிடம் அதுகுறித்து கேட்கப்பட்டது.

அடுத்த நொடி பளிச் பளிச்சென்று வந்து விழுந்தன அவரிடமிருந்து கருத்துக்கள்.
ரஜினி வருவாரா வரமாட்டாரா என்ற ஆரூடத்துக்குள் போகாமல், சோ கூறியதை இங்கே அப்படியே தருகிறோம்:

ரஜினி எவ்வளவு தெளிவாக பதில் சொன்னாலும் என்னிடம் ஒரு முறை தெளிவுரை கேட்பதை வழக்கமாக வைத்துக் கொண்டார்கள் போலிருக்கிறது.

என் கருத்தில் மாற்றமில்லை. ரஜினி அரசியலுக்கு எப்போது வரவேண்டும் என்பதை நானோ நீங்களோ முடிவு செய்ய முடியாது. அவர்தான் அதை முடிவு செய்ய வேண்டும். ரஜினி கூறியது போல சந்தர்ப்பம் சூழல் இதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

ஒரு மாநிலமே அவர் பின்னால் நின்று அரசியலுக்கு வாருங்கள் என தூண்டிவிட்டாலும், இன்னும் அவர் காட்டுகிற நிதானம், இந்த ரசிகர் பட்டாளத்தை சரியாக வழிநடத்த வேண்டுமே என்ற அவரது பொறுப்புணர்வு அக்கறை... நாளை பொறுப்புக்கு வந்தால், அந்தக் கடமையை நிறைவேற்றப் போதுமான பயிற்சி தனக்கு வேண்டும் என்ற நினைப்பு... இவரை விட தகுதியான ஒருவர் தமிழ்நாட்டுக்குக் கிடைக்கமாட்டார்.

நான் திரும்பவும் சொல்கிறேன்... இன்று நாட்டுக்குத் தேவை நாணயமான மனிதர்கள், நேர்மையாளர்கள். ரஜினிக்கு மட்டும்தான் இன்று அந்தத் தகுதி இருக்கிறது. எனவே ஆண்டவன் அவருக்கு சீக்கிரம் உத்தரவு கொடுக்கட்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

அவருக்குள் பல திட்டங்கள் இருப்பது போலத்தான் தெரிகிறது. அவரை அவர் வழியில் விட்டுவிடுவதே சிறந்தது, என்றார்.

ரஜினியின் மனம் புரிந்தவர் அல்லவா...

http://www.envazhi.com

Monday, November 3, 2008

ஆண்டவன் நினைத்தால் நாளையே கட்சி! – ரஜினி

விருப்பமில்லைாத எதையும் நான் அடுத்தவர் வற்புறுத்தலுக்காக செய்யமாட்டேன். ஆனால் ஆண்டவன் நினைத்தால் நாளையே அரசியல் கட்சிதான் என்று ரஜினி தன் ரசிகர்களிடம் இன்று கூறினார்.

ஆனால் இப்போது தமிழ் நாடு மட்டுமல்ல, நாடே சரியில்லை என்றும் அமைதியாக அவரவர் பணிகளில் கவனம் செலுத்துங்கள், அரசியல் பற்றிப் பின்னர் பார்க்கலாம் என்றும் ரஜினி தன் ரசிகர்களுக்குக் கூறியுள்ளார்.

கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இன்று ரஜினி – ரசிகர்கள் சந்திப்பு நடந்தது.

சரியாக 10 மணிக்கு ரஜினிகாந்த் மேடைக்கு வந்தார். மேடையில் 'கடமையைச் செய்; பலனை எதிர்பார்' என்று எழுதப்பட்டிருந்தது. முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அது முடிந்தவுடன் மேடையில் வைக்கப்பட்டிருந்த பாபாஜி உருவப் படத்தை ரஜினிகாந்த் வணங்கினார்.

பின்னர் ரசிகர்களை நோக்கி, "உங்களுடைய கேள்விகளை பேப்பரில் எழுதி, மன்ற நிர்வாகி சுதாகரிடம் கொடுங்கள். அவர் மேடையில் உங்களுடைய கேள்வி களை மைக்கில் வாசிப்பார். அதற்கு நான் பதில் கூறுகிறேன்' என்றார்.
இதைத்தொடர்ந்து ரசிகர்கள் தங்களுடைய கேள்விகளை எழுதி மேடைக்கு அனுப்ப ரஜினி பதில் கூறினார்.

கேள்வி: இந்த சந்திப்பின் நோக்கம் என்ன?

ரஜினி: நீங்கள் என்னை சந்திக்க வேண்டும் என்று ஆசைப்பட்டீர்கள். அதேப்போன்று நானும் உங்களை சந்திக்க வேண்டும் என்று ஆசைப் பட்டேன். இதுதான் நோக்கம்.

என்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று 300, 400 பேர் என கும்பலாக வருவதால், என்னால் எதுவும் செய்ய முடிய வில்லை. ஒருமுறை சச்சிதானந்த சுவாமிகள் தன்னுடைய சிஷ்யர்களிடம் பேசும்போது உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை கேளுங்கள் அதற்கு பதில் அளிக்கிறேன் என்றார். அதுதான் இப்போது நடக்கிறது.

கே: எதிர்காலம் திட்டம் என்ன?

ரஜினி: முதலில் உங்கள் குடும்பத்தை பாருங்கள். என்னுடைய எதிர்காலத்திட்டம் தற்போதைக்கு எந்திரன் படம்தான்.

கே: மன்ற நிர்வாகிகள் மூலம் நலத்திட்ட உதவிகள் செய்யப்படுமா?

ரஜினி: பணம், ஜனம் இரண்டையும் ஒன்று சேர்க்கக் கூடாது. சேர்ந்தால் அங்கு அரசியல் வந்துவிடும். என்னிடம் பணத்தை எதிர்பார்க்காதீர்கள். உங்களால் இயன்றதை நீங்களே செய்யுங்கள். நான் தனியாக உதவிகள் செய்துகொண்டே தான் இருக்கிறேன்.

கே: ரஜினி ரசிகர்களுக்கு என ஒரு அங்கீகாரம் கிடைக்குமா?

ரஜினி: சமூகத்தில் உங்களுக்கு என்று ஒரு அங்கீகாரம் கிடைக்கும்படி செய்வேன்.

கேள்வி: எந்திரன் படம் எப்படி இருக்கும்?

பதில்: உலகின் மிகச் சிறந்த படங்களுள் ஒன்றாக, இந்தியாவின் தலைசிறந்த படமாக இருக்கும்.

ரஜினியின் பூர்வீகம் கிருஷ்ணகிரி!

கேள்வு: உங்கள் பூர்வீக மாவட்டம் கிருஷ்ணகிரியில் உங்கள் தாய் தந்தைக்கு நினைவிடம் அமைப்பீர்களா?

ரஜினி: (இதைக் கேட்டதும் ஒரு நிமிடம் ரசிகர்களை புன்முறுவலுடன் பார்த்த ரஜினி, இந்தக் கேள்வியைக் கேட்ட ரசிகர் யார் எனக் கேட்க, கிருஷ்ணகிரியைச் சேர்ந்த கார்த்திக் என்ற ரசிகர் எழுந்து கைத் தூக்கினார். அவரைப் பாராட்டினார் ரஜினி) ஒரு நல்ல விஷயத்தைக் கூறினீர்கள். அது பற்றி யோசிப்பேன்.

குசேலனுக்கு ரூ.25 கோடி வாங்கினேனா?

கேள்வி: குசேலன் தோல்வி ஏன்? படத்துக்கு நீங்கள் ரூ.25 கோடி வாங்கியதாகக் கூறுகிறார்களே?

பதில்: அந்தப் பட பூஜையின்போதே அதில் என் பங்கு என்ன என்று கூறிவிட்டேன். இயக்குநர் வாசுதான் என் போர்ஷனை அதிகப்படுத்தார். தெலுங்கு உரிமை கொடுக்க வேண்டாம், நாமே ரிலீஸ் பண்ணலாம் என்றேன். கேட்கவில்லை, கொடுத்துவிட்டார்கள்.ரூ.60 கோடிக்கு விற்காதீர்கள் என்றேன். அதையும் மீறி விற்றார்கள். இதில் என் தப்பு என்ன? இந்தப் படத்துக்கு நான் ரூ.25 கோடி வாங்கியதாகக் கூறுவதும் தவறு.

கே: முதலில் ராகவேந்திரரை வழிபட்டீர்கள். பிறகு அருணாச்சலேஸ்வரர் என்றீர்கள். பாபாஜி என்றீர்கள். அடிப்படையில் உங்களுக்கே தெளிவான பார்வையில்லையா?

ரஜினி: (சிரிக்கிறார். சிறிது நேரம் யோசித்து விட்டு) இந்துவிலிருந்து முஸ்லீம், முஸ்லீம் இருந்து கிறிஸ்துவம் என்று மாறினால்தான் தவறு. அது கூட தவறு என்று சொல்ல முடியாது. நமது பாடத்திட்டத்திலேயே கூட வரலாறு, புவியியல், கணிதம் என்று பல படிப்புகள் உள்ளன.

அவை நமது ஞானத்தை விருத்தி செய்கிறது அது போன்று தான் தேடல் நிறைந்த உள்ளம் நமது ஆன்ம ஞானத்தை விருத்தி செய்கிறது. இதில் தவறும் ஒன்றும் கிடையாது. விருப்பம் உள்ளவர்கள் பின்பற்றுகிறார்கள்.

நான் குழப்பவாதியா?

கே: நீண்ட காலம் மன்றப் பணிகள் செய்து வரும் ரசிகர்களை பற்றி உங்கள் கருத்து?

ரஜினி: ரஜினி ரசிகர்களை பற்றி நான் பேச வேண்டிய அவசியம் கிடையாது. நாட்டு மக்களுக்கே தெரியும். இதை மற்றவர்களிடம் கேளுங்கள்.

கே: உங்களை குழப்பவாதி என்று சில பத்திரிக்கைகளில் எழுதும்போது அதை கேட்கவும், படிக்கவும் கஷ்டமாக இருக்கிறது. அதற்கு ஏன் நீங்கள் இடம் கொடுக்கிறீர்கள்.

ரஜினி: பத்திரிக்கைக்காரர்களை வைத்துக் கொண்டே இந்த கேள்வியை கேட்டால் எப்படி. சில நேரங்களில் நான் செய்வது கூட அப்படித்தான் இருக்கிறது. எல்லாம் அனுபவத்தில் இருந்து கற்றுக் கொள்வதுதான். இது செய்தால், இது நடக்கும் என யூகித்து செய்வதில்லை.

நாம் நினைப்பது சரி எனும்போது பேசி விடுகிறேன். வேறு கோணத்தில் பார்க்கிறவனுக்கு கஷ்டமாகத்தான் இருக்கும். அது தவிர்க்க முடியாது. குழப்பவாதி என்று சொல்லலாம். சுயநலத்தோடு எதையும் செய்ய மாட்டேன். எது சரி என்று படுகிறதோ அதைத்தான் செய்வேன்.

சில செய்திகளை படிக்கும் போது சிரிப்பாக இருக்கும். சில சிந்திக்க வைக்க செய்யும். சமீபத்தில் நான் வெளியிட்ட அறிக்கையை பற்றிக்கூட குழப்பவாதி என்று கூறினார்கள். அன்று நான் அந்த முடிவு எடுக்காவிட்டால் நாட்டில் எத்தகைய குழப்பங்கள் ஏற்பட்டிருக்கும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள முடியும்.

மற்றவர்களுக்காக விட்டுக் கொடுத்து சில நேரத்தில் கெட்ட பெயர் எடுத்துள்ளேன். இப்போது அவர்கள் அமைதியாக இருக்கிறார்கள். நானும் அமைதியாக இருக்கிறேன்.

ஒகேனக்கல் – வருத்தம் ஏன்?

கே: ஒகேனக்கல் விவகாரத்தில் மன்னிப்பு கேட்டதாகவும், வருத்தம் தெரிவித்ததாகவும் செய்திகள் வெளியானது. உண்மையில் நடந்தது என்ன? உங்கள் வாயால் சொல்லுங்கள்.

ரஜினி: (சிரித்துக்கொண்டே) முன்னாலே முன்னாலே போகனும் என்று நான் நினைக்கிறேன். நீங்கள் பின்னாலே பின்னாலே போகனும் என்கிறீர்கள். விஷயம் நடந்தது முடிந்தது. விட்ருங்க. அதிலேயே இருந்தால் எப்படி.

இந்தப் பிரச்சினையில் யார்கிட்டயும் எதுக்காகவும் நான் மன்னிப்புக் கேட்கல. அதுக்கான அவசியம் இல்ல.

முதலில் ஒகேனக்கல் பிரச்சனை சினிமா சம்பந்தப்பட்டது அல்ல. ஆனால் கர்நாடகாவில் எந்த பிரச்சனையானாலும் தியேட்டரைத்தான் முதலில் அடிப்பார்கள். அதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாகத்தான் அந்த கூட்டத்தில் நான் அமர்ந்தேன்.

அங்கு பேசியவர்கள் எப்படி பேசினார்கள் என்று உங்களுக்கு தெரியும். எனக்கு சிறிது கோபம் ஏற்பட்டது. அப்போது உணர்ச்சி வசப்பட்டு உதைக்கனும் என்று கூறிவிட்டேன். தண்ணீர் கொடுக்க மறுப்பவர்களை உதைக்க வேண்டும் என்று கூறி இருந்தால் பிரச்சனை முடிந்திருக்கும். அப்போது குசேலன் ரிலீசாகும் சமயம் கர்நாடகா விநியோகஸ்தர்கள் என்னைச் சந்தித்தார்கள். எடியூரப்பா தியேட்டருக்கு பாதுகாப்பு தருவதாக கூறினார். ரசிர்கள் கத்தி, கபடாவோடு நாங்களும் தயார் என்றார்கள்.

ஒரு பிரச்சனை ஆரம்பித்தால் உடனே முடிய வேண்டும். இழுத்தடிக்கக் கூடாது. அதனால் பொது நலத்திற்காக, மற்றவர்கள் நலனுக்காக நான் வருத்தம்தான் தெரிவித்தேன். மன்னிப்பு கேட்கவில்லை.

கேள்வி பதில் முடிந்ததும் ரஜினி பேசியதாவது:

மீண்டும் மீண்டும் நான் சொல்வது எல்லாம் குடும்பத்தை கவனியுங்கள். நான் என் மனைவிக்கு நல்ல கணவனாக, என் குழந்தைகளுக்கு நல்ல தகப்பனாக, தயாரிப்பாளர்களுக்கு நல்ல நடிகனாக என்று என் கடமைகளை செய்து வருகிறேன்.

நீங்கள் உங்கள் கடமையை செய்யுங்கள். கடமையைச் செய். பலனை எதிர்பார் இதுதான் நமது தத்துவம். அரசியலை பொறுத்தவரை ஒருவர் வெற்றி பெறுகிறார்கள் என்றால், அது திறமையாலோ, புத்திசாலித் தனத்தாலோ, உழைப்பாலோ என்று கூறினால் அது முட்டாள் தனம். சந்தர்ப்பம், சூழ்நிலை, நேரம் ஆகியவை தான் ஒருவரின் வெற்றிக்கு மிகப் பெரிய பங்களிப்பாக இருக்கிறது.

சரியில்லாத நேரத்தில் நீங்கள் குட்டிகரணம் அடித்தால் கூட ஒன்றும் செய்ய முடியாது. 1996ம் ஆண்டு இருந்த நிலைமை வேறு. அன்று பதவியில் போய் அமர வேண்டியது தான். அப்படி ஒரு சூழ்நிலை இருந்தது. ஆனால் யாரோ ஜெயித்து நாம் அனுபவிப்பதா.

நமக்கு ஒரு விஷயத்தில் திறமை இருக்க வேண்டும். அனுபவம் இருக்க வேண்டும். அதை நாம் செய்ய வேண்டும். தெரியாமல் ஒரு விஷயத்தை செய்யக் கூடாது.

நாடு சரியில்லை!

என் சிறு வயதில் பணக் கஷ்டத்தில் இருந்த போது கூட சினிமா பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக முறைப்படி 2 வருடம் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் படித்த பிறகு தான் நடிக்க வந்தேன். தெரியாத ஒரு விஷயத்தை செய்ய மாட்டேன்.

பலவந்தமாக திருமணம் செய்தால் அந்த வாழ்க்கை நடக்குமா? ஈடுபாடு இருந்தால் தான் இனிமையாக இருக்கம். ஒரு வேளை ஆண்டவன் சொன்னால் நாளைக்கே நடக்கலாம். தொடர்ந்து நாட்டில் நடப்பதை கண்காணித்துக் கொண்டே வாருங்கள்.

தற்போது நாடு சரியில்லை. தமிழ்நாடு மட்டும் அல்ல. ஒட்டுமொத்த இந்தியா முழுக்கவே அப்படித்தான் இருக்கிறது. பார்க்கலாம் ஆண்டவன் இருக்கிறான், என்றார் ரஜினி.

ஒவ்வொரு கேள்விக்கும் ரஜினி அளித்த பதில்கள் ரசிகர்களை உற்சாகத்தின் உச்சத்துக்குப் போக வைத்தன. பலத்த கைத்தட்டல், விசிலுடன் அவரது பதில்களை வரவேற்றனர்.

பிற்பகல், ரசிகர்கள் அனைவருக்கும் ராகவேந்திரா மண்டபத்தில் விருந்து பரிமாறப்பட்டது.
http://www.envazhi.com

Wednesday, October 22, 2008

‘தலைவா உன்னை நேரில் பார்க்கணும்!'


நான் அரசியலுக்கு வரும்போது வருகிறேன். நீங்கள் அதுவரை உங்கள் வேலையைப் பாருங்கள் என்பது சூப்பர் ஸ்டார் ரஜினியின் நிலைப்பாடு.

ஆனால் தங்கள் தலைவர் அரசியலில் ஈடுபட வேண்டும், அதுவும் இப்போதே நடக்க வேண்டும் என்பது தொண்டர்களாக மாறத் துடிக்கும் ஏராளமான ரசிகர்களின் விருப்பம்.

அதன் விளைவு, ரஜினி அறிக்கை வெளியிட்ட பின்னரும் அவரை அரசியலுக்கு அழைத்து கடிதங்களையும் தந்திகளையும் அவருக்கு ஏராளமாய் அனுப்பி வருகிறார்கள்.

இவற்றில் ரசிகர்கள் குறிப்பிட்டுப்பது இரண்டே விஷயங்கள்தான்:

தலைவா... உன்னை நேரில் பாக்கணும்!

சீக்கிரம் கட்சி ஆரம்பிச்சு, இந்த அரசியல்வாதிகளிடமிருந்து எங்களைக் காப்பாத்துங்க!

ரசிகர்களின் இந்தக் குரலுக்கு ஓரளவு பலன் கிடைத்த மாதிரிதான்.

இவர்களின் இரு கோரிக்கைகளின் முதலாவதை இன்னும் சில தினங்களில் ரஜினி நிறைவேற்றப் போவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வரவிருப்பதாக ராகவேந்திரா மண்டப நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், பத்திரிகை மற்றும் இணைய தளங்களில் இத்தகைய செய்திகளைப் பார்த்த உடனே அதையே நிஜமென்று நம்பி ரகசிகர்கள் ராகவேந்திரா மண்டபத்துக்கு வந்துவிடுகிறார்களாம். இதனால் அவர்களுக்கும் கஷ்டம், சாருக்கும் தேவையற்ற சங்கடம். அவர் சொன்ன பிறகு வந்தால் போதுமே, என்கிறார்கள் தலைமை ரசிகர் மன்ற நிர்வாகிகள்.

http://www.envazhi.com

Monday, October 20, 2008

உண்ணாவிரதம்: எதற்குக் கூப்பிடுகிறீர்கள் ரஜினியை?

தமிழ் திரையுலகினர் நடத்தும் எந்தப் போராட்டமாக இருந்தாலும் அதில் தவறாமல் கேட்கப்படும் கேள்வி, ‘ரஜினி பங்கேற்பாரா?’

ஈழத் தமிழர் ஆதரவு எனும் உணர்ச்சிப் பூர்வமான போராட்டத்துக்கு திரையுலகினர் ஒன்றுபட்டுக் குரல் கொடுக்கும் இந்த நேரத்தில் மட்டும் இந்தக் கேள்வி எழாமல் இருக்குமா?
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகப் போராட்டம் என்ற குரல் எழத் தொடங்கிய உடனே இந்தக் கேள்வியும் மீடியாக்களால் உருவாக்கப்பட்டுவிட்டது.

ரஜினியை இலங்கைத் தமிழர்களுக்கு எதிரானவராகச் சித்தரிக்க ஒரு கூட்டமே முயன்று கொண்டிருக்கிறது. ஆனால் இந்த விஷயத்தில் ரஜினியின் நிலைப்பாடு தெளிவானது.

‘இலங்கையில் அவதிபடும் தமிழர்களுக்கு விரைவில் நிரந்தர அமைதி கிடைக்க வேண்டும். இலங்கையில் மட்டுமல்ல, உலகின் எந்தப் பகுதியிலும் தமிழர்கள் கஷ்டப்படக்கூடாது என்பதே என் விருப்பம்...’ என்று சில ஆண்டுகளுக்கு முன் ஒரு பேட்டியில் அவர் குறிப்பிட்டிருந்ததை இங்கே நினைவுபடுத்த விரும்புகிறேன்.

அவரது இந்த பேட்டிக்குப் பிறகு பல சம்பவங்கள் நடந்துவிட்டன. இடையில் இலங்கைத் தமிழர் ஆதரவு என்று பேசினாலே பொடா பாயுமளவுக்கு மோசமான நிலையிருந்தது.
இப்போதுதான் திடீரென்று மீண்டும் ஈழத்து மக்களுக்கான ஆதரவு பெருமளவு திரளத் தொடங்கியிருக்கிறது.

இப்போது இந்த பேராட்டத்துக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ள ரஜினி, உண்ணாவிரதத்தில் பங்கேற்கப்போவதாகவும் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், செயலாளர் ராதாரவி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களுக்கு ரஜினியை அழைப்பதெல்லாம் சரிதான்.
அங்கே ரஜினியைப் பார்த்த பிறகுதான் இவர்களின் தமிழுணர்வு பீறிட்டுக் கிளம்பும். வாய்க்கு வந்தபடியெல்லாம் உளறத் தொடங்குவார்கள்.

அவரும் ஒரு தமிழர் என்று சொல்லித்தானே அழைக்கிறார்கள்... அவர் மேடைக்கு வந்ததும் எழும் ரசிகர்களின் ஆர்ப்பரிப்பான வரவேற்பையும் கைத்தட்டலையும் பார்த்த பிறகுதான் இவர்களுக்கு, அடடா இவர் பக்கத்து மாநிலத்துக்காரராச்சே, இவ்வளவு தமிழர்களுடைய ஆதரவும் இவருக்கு மட்டுமேவா... என்ற பொறாமை எட்டிப் பார்க்கும்.

அப்போதே விஷமத்தனத்தை ஆரம்பித்துவிடுவார்கள். மேடை நாகரீகமாவது, மண்ணாவது... பேயாட்டம்தான்!

அப்படியெல்லாம் இந்த முறை நடக்காமல் பார்த்துக் கொண்டால்தான் இந்த உண்ணாவிரதத்துக்கு மரியாதை.

காரணம் ரஜினிக்கு நேரும் அவமானம், ஈழத் தமிழனுக்கு ஆதரவு தரும் ஒவ்வொரு தமிழனுக்கும் நேரும் அவமானமாகவே கருதப்படும்!

ரஜினியை உயர்த்தி வைத்துப் பார்க்க இப்படி எழுதவில்லை. அவரது உயரம் உலகமறிந்தது.
ரஜினியை எதற்கு இந்த மாதிரி போராட்டத்துக்கு அழைக்கிறார்கள்... ரஜினி வந்து பேசினால் பிரச்சினை தீர்ந்துவிடும் என்றா... இல்லை. உலகத்தின் கவன ஈர்ப்பைப் பெறுவதற்காகத்தான்.

ஆனால் நடப்பது என்ன?

இவர்ள் அழைப்பை பெரிதாய் மதித்து ரஜினி வருவார்... மேடையில் உள்ள துண்டு துக்கடாவுக்குக் கூட மரியாதை செலுத்துவார் (அது அவர் பண்பு!)... உலகின் கவனமே அவர் பக்கம் திரும்பும். அவ்வளவுதான்... இங்குள்ள சத்யராஜுக்கும், சரத்குமாருக்கும், இவர்களுக்கும் கீழ் மட்டத்திலுள்ள நடிகர்களுக்கும் அடிவயிறு பற்றிக் கொண்டு எரியும் பொறாமையில்.

ரஜினியை இவர்கள் வருந்தி வருந்தி அழைக்கும் ஒவ்வொரு போராட்டமும் இப்படித்தான் முடிந்திருக்கிறது.

இந்த முறை ஈழத் தமிழனுக்கு ஆதரவுக் கரங்களை நீட்டும் முன் உங்கள் மனதிலுள்ள பொறாமை அழுக்கை கழுவிவிட்டு ஒன்றுபடுங்கள்... உங்கள் குரல் தூர்ந்து கிடக்கும் உலகின் செவிகளைக் கிழிக்கும்!
http://www.envazhi.com

தேமுதிக மாநாட்டு ‘சாதனை’!


விஜய்காந்த் ரூ.10 கோடி செலவில் பிரமாண்டமாய் சட்டசபை, நாடாளுமன்ற செட் போட்டு எடுத்த ‘இளைஞர் அணி மாநாடு சினிமா ரிசல்ட்’ என்ன?

வழக்கமாக சினிமாக்காரர்கள், சீசனில் படம் ரிலீஸானதும் ஒரு டயலாக் சொல்வார்கள்:

‘படம் பிரமாதமா இருக்குன்னு தமிழ்நாடே பாராட்டுது சார்...நல்ல கலெக்ஷன். தீபாவளி ரிலீஸ்லயே இந்தப் படம்தான் நம்பர் ஒன்...’
-இப்படி பேட்டி கொடுத்த மூன்றாவது நாளே படம் தியேட்டரைவிட்டு ஓடியிருக்கும்!

இந்த இளைஞரணி 'மாநாடு சினிமாவும்' இந்த லட்சணத்தில்தான் அமைந்தது.

நான் வித்தியாசமானவனாக்கும்... என்று மஞ்சள் கொடியோடு வந்து நின்ற விஜய்காந்த், இன்றைக்கு கழகங்களையே தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு பொய்யிலும் புனை சுருட்டிலும் ஓங்கி நிற்கிறார். பொதுமக்களுக்குத் தொல்லை கொடுப்பதில் இன்றைய தேதிக்கு இவரை அசைச்சுக்க முடியாது!

இவரது தொண்டர்கள் மட்டும் சளைத்தவர்களா... ராவண ராஜ்யத்தில் வானரப் படைகள் நிகழ்த்தியதாகச் சொல்லப்படும் ராமாயணக் காட்சிகள்தான் மனக் கண்ணில் நிற்கின்றன. அப்படியொரு ஆட்டம் போட்டிருக்கிறார்கள் இந்த விஜய்காந்த் சேனைகள், சிங்காரச் சென்னையில்...
ஒரு நபருக்கு 300 ரூபாய் கூலி, டாஸ்மாக் சரக்கு, பிரியாணி கொடுத்து இந்த கொள்கைச் சிங்கங்களைக் கூட்டி வந்திருக்கிறார் அவர்களின் கேப்டன்!

இதுகுறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் தட்ஸ்தமிழ் செய்திகளைப் பாருங்கள்!


தேமுதிக மாநாட்டு சாதனை!

...விஜய்காந்தின் தேமுதிக இளைஞர் அணி மாநாட்டுக்கு திரண்டு வந்திருந்த தொண்டர்கள் குடித்துவிட்டுப் போட்ட பீர் பாட்டில்கள் மற்றும் மதுப் புட்டிகளால் மெரினா கடற்கரையும் அண்ணாசாலை, சிவானந்தா சாலை பகுதிகளும் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

இந்த மாநாட்டுக்கு வந்த தொண்டர்கள் பெரும்பாலும் நல்ல 'மப்'பில் வந்திருந்தனர்.

கையோடு தாங்கள் கொண்டு வந்திருந்து டாஸ்மாக் ஐட்டங்களை நேற்று காலை முதலே அண்ணா சாலை, தீவுத் திடல், மெரினா கடற்கரைப் பகுதிகளில் 'கடை பரப்பி' விட்டனர்.

திறந்த வெளியில் குடித்துவிட்டு காலி மதுப் புட்டிகளையும், பிளாஸ்டிக் குப்பைகளையும் அப்படியே போட்டுவிட்டுச் சென்றதால் சென்னை நகரின் முக்கிய பகுதிகள் நாறிப் போய்விட்டதாக பொதுமக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக குடும்பம் குடும்பமாக சென்னைவாசிகளும், வெளியூர் பயணிகளும் வந்து குவியும் சென்னை மெரினா கடற்கரையில் எங்கும் பீர் பாட்டில்களும், பிளாஸ்டிக் குப்பைகளுமாகக் காட்சி தந்தது மக்களை கடும் அதிருப்திக்குள்ளாக்கியது.

மேலும் மணல் பகுதிகளில் உட்கார முடியாத அளவுக்கு தேமுதிக தொண்டர்கள் அசிங்கம் பண்ணி வைத்திருந்ததும், வார இறுதி நாளான நேற்று மக்களை மெரீனா பக்கம் நெருங்க விடாமல் செய்துவிட்டது.

இதுபோதாதென்று மஞ்சள் சட்டை அணிந்த சில இளைஞர்கள் பெண்களைக் கிண்டல் செய்வதிலும், கடல் அலைகள் கரையைத் தொடும் பகுதியில் நின்றவண்ணம் அலையில் குளிக்கும் பெண்களைக் கிண்டலடித்தும் மக்களின் வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்டனர்.

'தொண்டர்கள் எனும் பெயரில் இவர்கள் செய்திருந்த அசிங்கங்களைச் சுத்தம் செய்ய நியாயமாக சென்னை மாநகராட்சிக்கு பெரிய தொகையை வழங்கியிருக்க வேண்டும் சம்பந்தப்பட்ட கட்சித் தலைவர். அரசியல் கட்சி என்ற பெயரில் இவர்களைப் போன்றவர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள்', என்று அதிருப்தி தெரிவித்தார் இந்த மண்டத்தைச் சேர்ந்த சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர்.
கடற்கரையே இப்படியென்றால் தீவுத்திடல்....?
அங்கு இதை விட பலமடங்கு மோசமான நிலை. இதையும் மாநகராட்சிதான் சுத்தம் செய்தாக வேண்டும்.
இன்னொரு பக்கம் கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக 5 மணி நேரத்துக்கும் மேலாக நடுச் சாலையில் மழையில் அவதிப்பட்டனர் பொதுமக்கள்.
சென்னை போன்ற பெருநகரங்களில் போக்குவரத்துக்கும், மக்களின் அன்றாட வாழ்க்கைக்கும் இடையூறு விளைவிக்கும் இத்தகைய மாநாடுகளை அனுமதிக்கக் கூடாது என பலவேறு மக்கள் நலச் சங்கங்கள் கோரிக்கை விடுத்தும் அரசு கேட்பதாக இல்லை. அதனால்தான் மக்களுக்கு இவ்வளவு தொல்லை!


நெரிசலில் விழிபிதுங்கிய சென்னை!

ஒரு சின்ன மழைக்கே கடும் போக்கு வரத்து நெரிசலில் திணறும் மோசமான உள்கட்டமைப்பு வசதிகள் கொண்டது சென்னை நகரம்.

இதில் அவ்வப்போது மாநாடு, பேரணிகள் என்று அரசியல்வாதிகள் விளையாடுவார்கள். நேற்று விஜய்காந்தின் முறை.

பிற்பகல் அவர் கட்சியின் மாநாடு துவங்குவதற்கு முன் ஆரம்பித்த போக்குவரத்து நெரிசல் நள்ளிரவு தாண்டியும் நீடித்தது.

வார இறுதி, தீபாவளி சீசன், கூடவே இந்த மாநாட்டு கலாட்டக்களும் சேர்ந்து கொண்டதால் கிண்டியிலிருந்து, தி.நகர், பீச், அண்ணாசாலைக்கு சென்ற பலரும் கடும் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக் கொண்டு முன்னேறவும் முடியாமல் பின்செல்லவும் வழியில்லாமல் தவித்தனர்.

பேருந்துகளில் சென்றோர் சாதாரண தூரத்தைக் கடக்கவே பல மணி நேரம் ஆனது. வாகனங்களைத் திருப்பிவிட வழியின்றி போக்குவரத்து போலீசார் மிகவும் திணறிப்போனார்கள்.

கடற்கரை காமராஜர் ரோடு, அண்ணாசாலை போன்ற முக்கிய சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியவில்லை. பொதுமக்கள் பலர் அதிருப்தியுடன் திட்டியபடி வாகனங்களில் பல மணி நேரம் ஊர்ந்து சென்றனர்.


-இதுக்குமேல வித்தியாசமான கட்சிய, தலைவரை உலகத்துல எங்காவது உங்களால காட்ட முடியுமா...!

குறிப்பு: தமிழ்நாட்டில் எந்தக் கட்சித் தொண்டர்கள் குடிக்காமல் இருக்கிறார்கள்... திமுக, அதிமுக, மது ஒழிப்பு மாநாடு நடத்தும் பாமக, காந்தியடிகளைத் தலைவராகப் போட்டுக் கொள்ளும் காங்கிரஸ்... இப்படி எல்லா கட்சித் தொண்டர்களுமே குடிப்பதில் பிஎச்டியே வாங்கியிருக்கும் போது, விஜய்காந்தையும் அவர் கட்சிக்காரர்களையும் மட்டும் குடிகாரர்கள் என திட்டுவது சரியா என பல நண்பர்கள் கருத்து எழுதக் கூடும்.

அப்படி எழுதும் முன், 'நான் வித்தியாசமானவனுங்கோ... எங்க கட்சி வித்தியாசமோ வித்தியாமுங்கோ...' என்றெல்லாம் கவுண்டர் ஸ்டைலில் கூப்பாடு போட்டு வரும் விஜய்காந்தைக் கொஞ்சம் மனக் கண்ணில் நிறுத்திப் பார்க்கவும்.

அதே பதவி வெறி, அதே பணப் பேராசை, அதே துஷ்பிரயோகம், அதே கட்சிகளுடன் கூட்டு... அப்புறம் எதற்கு இந்தக் கருமம் வேறு... ஏற்கெனவே உள்ள கழகங்களே போதுமே!

தெரிந்து கொள்ளுங்கள் இந்த பதவி வெறியரை!

மாமன்னர் அக்பர் ஒரு முறை, ஒரு பெரிய கோட்டை அழிக்காமல் சின்னதாக்கிக் காட்ட முடியுமா என்றார்.

அதற்கு பீர்பால் பதிலேதும் பேசாமல், பெரிய கோட்டுக்குப் பக்கத்திலேயே ஒரு சின்னக் கோடு போட்டு, “மன்னா... இப்போது பெரிய கோடு அழிக்காமலேயே சின்னதாகிவிட்டது. அதேநேரம் சின்னக் கோடு இருப்பதாலேயே பெரிய கோட்டின் மகத்துவமும் புரிகிறதல்லவா...!” என்றாராம்.

இது கதையல்ல...மாமன்னர் அக்பரின் வரலாற்றில் இடம்பெற்றுள்ள சம்பவங்களில் ஒன்று. பரவலாக நீங்களும் கேள்விப்பட்டதும் கூட.

நல்ல மனிதர்களின் புகழை, பெருமையை அவர்களது நலம் விரும்பிகள் மூலம் அல்லாமல் தெரிந்து கொள்வது எப்படி?

சில மோசமான மனிதர்களின் செயல்பாடுகளைத் தொடர்ந்து கவனிப்பதன் மூலம்.
தமிழக மக்களுக்கு, குறிப்பாக வாக்குச் சாவடிகளில் மணிக்கணக்கில் நின்று வாக்களிக்கும் வாக்காளர்களுக்கும் அப்படியொரு சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது.

நல்ல மனிதர்கள் யார் என்பதைத் தாமதமாகக் கூட புரிந்து கொள்ளலாம். ஆனால் கெட்டவர்களை உடனே தெரிந்து கொள்ள வேண்டும்.

அந்த வகையில் தமிழகத்தில் சற்றே எட்டிப்பார்க்கத் துவங்கியிருக்கிற ஒரு தீய சக்தி விஜய்காந்த்!

இதைப் படிக்கும்போது, ‘ரஜினியின் புகழ் பரப்ப தளம் நடத்துபவர்கள் இப்படித்தான் சொல்வார்கள்’ என்று சிலர் முணுமுணுப்பது புரிகிறது.

பரந்து விரிந்த இநத வானத்தின் கீழே நடக்கும் அத்தனை நல்லது கெட்டதுகளையும் என்வழியில் அலச வேண்டும் என்பதே நமது நோக்கம். அதனாலேயே முன்பு விஜய் காந்த் – வடிவேலு சண்டையையும், எந்தளவு கீழ்த்தரமான அரசியல்வாதி விஜய்காந்த் என்பதையும் வெளிச்சம் போட்டுக் காட்டியிருந்தேன்.

இப்போது மாநாடு எனும் பெயரில் மக்களை ஏமாற்றும் வித்தைக்காரன் நாடகத்தை அரங்கேற்றியிருக்கும் இவரின் நிஜமுகத்தை அம்பலப்படுத்துவது அவசியமல்லவா!

இந்த மாநாடு எதற்காக?

சில தனியார் தொழிலதிபர்களின் தயவோடும், மீடியா உலக ஆக்டோபஸாகத் திகழும் சன் குழுமம் ஆதரவோடும் விஜய்காந்த் இப்படியொரு மாநாட்டை சென்னையில் நடத்தக் காரணம் என்ன?

தனக்கு சென்னை மக்களிடம் உள்ள செல்வாக்கைக் காட்டவும், தமிழகம் முழுக்க உள்ள தன் இளைஞர் சேனையை சென்னை மக்களுக்குக் காட்டவும்தான் என்று பத்திரிகையாளர்களிடம் கூறியிருந்தார் விஜய்காந்த்.

உலகத்தில் இப்படியொரு அற்ப காரணத்துக்காக மாநாடு நடத்திய ஒரே நபர் விஜய்காந்தாகத்தான் இருப்பார்.

ஒருவிதத்தில் அவர் அன்று உண்மையைத்தான் பேசியிருக்கிறார்.

இந்த மாநாட்டை இப்போது நடத்த ஒரு காரணமும் இல்லை. இலங்கைத் தமிழர் பிரச்சினையைக் கண்டித்து எல்லோரும் கறுப்பு பேட்ஜ் குத்திக் கொள்ளுங்கள் என்று சொல்லவா ரூ.10 கோடி செலவில் இப்படியொரு மாநாடு கூட்டினார்! அப்படியென்றால் எதற்கு இத்தனை வெட்டிச் செலவு... ஒரு அறிக்கையில் முடிக்க வேண்டிய விஷயமல்லவா இது!

மின்வெட்டு, வேலைவாய்ப்பு, கூட்டணி... இதெல்லாம் இன்று மக்கள் அறிந்தவை. அன்றாடம் விவாதிக்கிற பிரச்சினைகள். இதில் இந்த அரசின் பக்கம் உண்மையில் தவறு இருந்தால் மக்கள் தேர்தலில் பார்த்துக் கொள்வார்கள். இதை மாநாடு கூட்டிச் சொல்ல வேண்டிய அவசியமில்லையே. தினம் நான்கு முறை இந்த விஷயங்களுக்காகத்தானே இவர் அறிக்கை விட்டு பப்ளிசிட்டி தேடி வருகிறார்!

ஆமா... பதவிதான் முக்கியம்!

நிஜத்தில் எந்த கொள்கையும் இல்லாத, பதவி வெறியும், பணப் பேராசையும் கொண்ட ஒரு மனிதர் இவர்.

இதை இந்த திடீர் தலைவரே ஒப்புக் கொள்ளவும் செய்கிறார்! அவரது மாநாட்டு அறிவிப்பைப் பாருங்கள்:

“விஜயகாந்த் கட்சி ஆரம்பித்ததே ஆட்சியை பிடிக்கத்தான் என்று சிலர் கூறுகின்றனர். கட்சி தொடங்குவது ஆட்சியை பிடிக்காமல், காசிக்கும், ராமேஸ்வரத்திற்கும் போகவா?

ஓர் இடத்தை அடைய வேண்டுமானால் குறிக்கோள் இருக்க வேண்டும். ஆட்சியைப் பிடிக்கவே கட்சியை ஆரம்பித்தோம். ஆட்சியைப் பிடிக்க ஏன் ஆசைப்படக்கூடாது? ஆட்சியைப் பிடிக்கவே கட்சி. நான் மறைக்க வேண்டிய அவசியமில்லை.

தேர்தல் நெருங்குகிறது. அதற்குத் தயாராகுங்கள். கட்சியினர் ஒவ்வொருவரும் நூறு ஓட்டுகளையாவது வாங்கித்தர வேண்டும். தேர்தலில் எதற்கும், யாருக்கும் பயப்படக்கூடாது.
மக்களே... தேமுதிகவை ஆட்சியில் உட்கார வைத்துவிட்டு, அப்புறம் பாருங்கள்!”

-அப்புறம் என்னத்தைப் பார்ப்பது... இவரும், இவர் மனைவி – மைத்துனர் மற்றும் உறவினர்கள் தமிழகத்தைப் பட்டா போட்டு விற்கும் கோலாகலக் காட்சியையா?

குறிப்பு: தேமுதிக மாநாட்டின் ‘சாதனை’களை அடுத்த பதிவில் பார்க்க!

http://www.envazhi.com

Friday, October 17, 2008

இதுவா பத்திரிகை தர்மம்! – ஆர்எம்வீ

ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து 1995 முதல் வெளிப்படையாகப் பேசி வருபவர் ஆர்எம் வீரப்பன். ஒருவிதத்தில் அவர்தான் இந்த அரசியல் குறித்த பேச்சுக்கெல்லாம் பிள்ளையார் சுழி போட்டவர் என்பது அனைவருக்கும் தெரியும்.

ஆனால் அவரே, ரஜினி அரசியலுக்கு வரவே மாட்டார் என்றெல்லாம் கருத்துத் தெரிவித்ததாக சமீபத்தில் ஒரு பத்திரிகையில் குறிப்பிட்டிருந்தார்கள்.

இதைச் சொன்னவர் ஆர்எம்வீதானா? – இந்தக் கேள்வியை அவரிடமே கேட்டோம் இன்று.
அவரது பதிலை அப்படியே தருகிறேன். பத்திரிகை தர்மத்தின் லட்சணம் உங்களுக்கும் புரியும்!

ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றிய அவரது சமீபத்திய அறிக்கை குறித்தும் கருத்து கேட்டு என்னிடம் வந்தார்கள் சில பத்திரிகையாளர்கள். நானும் சில கருத்துக்களைச் சொன்னேன். ஆனால் அவர்களோ... நான் சொன்னவற்றில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில வரிகளை எடுத்து அவர்களுக்குப் பிடித்த மாதிரி கருத்து ஒன்றையும் வெளியிட்டுள்ளதைக் கண்டு உள்ளபடியே நான் வருத்தப்பட்டேன்.

இது பத்திரிகை தர்மமா... நான் சொன்னது என்ன?

“ரஜினி நல்ல மனிதர். எப்போதும் என்னிடம் அரசியல் குறித்து ஆர்வமாக பல விஷயங்களைப் பேசுவார், விவாதிப்பார். தனது முடிவான கருத்துக்களையும் கூறுவார். ஆனால் அரசியலுக்கு வரப்போவது குறித்து முடிவாக எதையும் சொல்லமாட்டார்.

எனக்குத் தெரிந்து ரஜினி இப்படித்தான். அவர் அரசியலுக்கு வருவதாக இருந்தால் எப்போதே வந்திருக்க வேண்டும். இப்போது அவருக்கு தனி அரசியல் இயக்கம் தொடங்கி நடத்தும் அளவுக்கு ஆர்வம் இருக்கிறதா எனத் தெரியவில்லை. இனி வருவாரா என்றும் உறுதியாகச் சொல்ல முடியாது.

மேலும் இந்த அறிக்கையில் தனது அரசியல் பிரவேசம் பற்றி அவர் எதையும் சொன்னதாக எனக்குத் தெரியவில்லை.

இப்போது அவரது தொண்டர்கள் சிலர் வேண்டாத வேலையில் இறங்கி அவருக்கு கெட்ட பெயரை உண்டாக்க முயற்சித்து வருகிறார்கள். தனிக் கட்சி, கொடி என்றெல்லாம் குழப்பம் ஏற்படுத்தி வருகின்றனர். அதற்கு முடிவு கட்டவே இந்த அறிக்கை. அவரது எதிர்காலத்தை நாம் தீர்மானிக்க முடியாது...”

-இதுதான் ஆர்எம்வீ சொன்னது.

அதை எப்படி வெட்டி, ஒட்டி திரித்து வெளியிட்டுள்ளன சில பத்திரிக்கைகள் என்பதை நீங்களே நேற்று பார்த்திருப்பீர்கள்!

இதைவிடக் கொடுமை, இன்னொரு பத்திரிகை ரஜினியின் அறிக்கை பற்றிய செய்திக்கு கொடுத்திருக்கும் தலைப்பு, ‘ரசிகர்களைக் கைவிட்ட ரஜினி!”
இவர்கள்தான் காஞ்சிபுரம் போய் நடராஜ குருக்களைத் தேடிப் பிடித்து, ரஜினி சோழி போட்டு நாள் பார்த்த கதையையெல்லாம் புலனறிந்து கொடுத்த நிகழ்காலத்தின் குரல்!

நல்லாருக்கு உங்க பத்திரிகை நியாயம்!

Monday, October 13, 2008

அரசியலுக்கு வரவேண்டுமென என்னை யாரும் வற்புறுத்தவும் முடியாது; வந்தால் யாராலும் தடுக்கவும் முடியாது!

ரஜினி தனது அரசியல் நிலைப்பாடு குறித்து இன்று ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

இதில் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து கிட்டத்தட்டமுழுமையான பதிலை ரசிகர்களுக்கு அவர் தந்திருக்கிறார். 'கண்ணா நான் வரும்போது உன்னைக் கூப்பிட்டுக்கிறேன்... அதுவரை உன் விருப்பப்படி இரு... அவசரப்படாதே!' - இதுதான் அவர் பாணியில் இந்த அறிக்கைக்கு அர்த்தம்!

தனக்காகக் காத்திருக்க முடியாமல் அவசரப்படும் ரசிகர்கள் விரும்பும் கட்சியில் சேர்ந்து கொள்ளுங்கள் என்பதே தன் ரசிகர்களுக்கு அவர் சொல்லியிருக்கும் செய்தி. மற்றபடி தன் பெயரில் கட்சி, தனிக் கொடி என்றெல்லாம் எல்லை மீறுபவர்கள் மீது நிச்சயம் சட்டப் பூர்வ நடவடிக்கை உண்டு என்று எச்சரித்துள்ளார்.

என்னை அரசியலுக்கு வருமாறு யாரும் வற்புறுத்தவும் முடியாது, அதே நேரம் வந்தால் யாரும் தடுக்கவும் முடியாது. அப்படி நான் வரும்போது என் ரசிகர்கள் எங்கிருந்தாலும் அவர்களை என்னுடன் இணைத்துக் கொள்வேன், என ஒரு அசத்தல் பன்ச் வைத்து அறிக்கையை முடித்திருக்கிறார் ரஜினி.

ரஜினி அறிக்கையின் சுருக்கம்:

அண்டை மாநிலங்களிலும் தமிழகத்திலும் சக நடிகர்கள் கட்சி ஆரம்பித்திருப்பதும், அதன் விளைவாக என் ரசிகர்கள் நானும் தமிழக அரசியலில் நேரடியாக ஈடுபட வேண்டும் என்ற எனது ரசிகர்களின் ஆர்வம் எனக்கு நன்றாகப் புரிகிறது.

அரசியல் ஈடுபடும் ஆர்வமுள்ளவர்கள் அவரவருக்கு விருப்பமான கட்சிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம்.

என் பெயரில் கட்சி, அதற்கென ஒரு கொடியை அறிமுகப்படுத்துதல், என் படத்தைப் பயன்படுத்துதல் போன்ற செயல்களில் எனது ரசிகர்களோ மற்றவர்களோ ஈடுபடுவதை நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். ]

...இத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசியலுக்கு வருமாறு என்னை யாரும் கட்டாயப்படுத்த முடியாது. அதேநேரம், நான் அரசியலுக்கு வர முடிவு செய்தால் அதை யாரும் தடுக்கவும் முடியாது. அப்படி துவங்கும் நிலையில் நான் இருந்தால் எனது ரசிகர்கள் எங்கிருந்தாலும் அவர்களை அழைத்துக் கொள்வேன், என்று ரஜினி அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
இந்த அறிக்கை அப்படியே இங்கு முழுமையாக தரப்பட்டுள்ளது. பெரிதாக்கிப்படிக்கவும்.
http://www.envazhi.com

அரசியல் இல்லையேல் சாகும் வரை உண்ணா விரதம்!


இது இன்று மாலை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் சிலர் அவசரமாகக் கூடி எடுத்துள்ள முடிவு.

இதுகுறித்து இன்றைய தட்ஸ்தமிழ் செய்தியை அப்படியே தந்து விடுகிறேன்...

“ரஜினிகாந்த் ரசிகர்கள் கோமா நிலையில் கிடக்கிறார்கள். அவர்களுக்கு உற்சாகத்தை அளித்து புத்துணர்வை அளிக்கும் வகையில், ரஜினிகாந்த் உடனடியாக கட்சி தொடங்க வேண்டும். இல்லாவிட்டால் தமிழகம் முழுவதும் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிப்போம் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு ரசிகர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என அவ்வப்போது குரல்கள் வெடிக்கும். இப்போதும் அதுபோலவே கோரிக்கைகள் வலுத்துள்ளன. ஆனால் இந்த முறை ரசிகர்கள் சற்று வேகமாக உள்ளனர். கோவை மாவட்ட ரசிகர்கள் ஒரு படி மேலே போய் தேசிய திராவிட மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் கட்சி ஒன்றை துவக்கினர். கட்சிக்கு கொடியையும் அவர்களே அறிமுகப்படுத்தினர்.

இனி கோவை மாவட்டத்தில் ரஜினி ரசிகர் மன்றம் எதுவும் செயல்படாது என்றும், தேசிய திராவிட மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரிலேயே இயங்குவோம் எனவும் அவர்கள் அறிவித்தனர்.

மேலும், சென்னையில் தங்களை ரஜினி சந்திக்கும் போது கட்சிக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் மறுக்கும் பட்சத்தில் அனைத்து மாவட்ட ரஜினி ரசிகர் மன்றங்களும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில 2 நாட்களுக்கு முன்பு சென்னையில் அனைத்து மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகள் கூடி ஆலோசனை மேற்கொண்டனர். இந்தச் சூழ்நிலையில் இன்று சென்னை மாவட்ட ரஜினி மன்றத்தினர் வள்ளுவர் கோட்டம் அருகே கூடி ஆலோசனை நடத்தினர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், 15ம் தேதி தலைவர் எங்களை சந்திப்பதாக கூறியிருக்கிறார். அன்றைய தினம் நாங்கள் அனைவரும் அவரை பார்க்க முடியாது. குறிப்பிட்ட சில பேர் மட்டும் தான் செல்ல முடியும்.

எனவே அன்றைய தினம் தலைவரிடம் என்ன பேச வேண்டும்; என்ன கூற வேண்டும் என்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் இது. இந்த கூட்டத்தில் எடுக்கும் முடிவு அனைத்து ரசிகர்களையும் கட்டுப்படுத்தும்.

தலைவர் நிச்சயமாக அரசியலுக்கு வரவேண்டும். ஒகேனக்கல், காவிரி பிரச்சனையை விட இன்று ரசிகர்கள் உணர்ச்சிவசப்பட்டு காணப்படுகிறார்கள்.

திரையுலகில் தன்னை திட்டியவர்களுக்கு கூட தனது படங்களில் வாய்ப்பு தரும் தலைவர், இத்தனை ஆண்டுகளாக அவருக்கு பின்னால் இருக்கும் எங்களுக்கு என்ன செய்திருக்கிறார்?

உறுப்பினர் பெருமையே போதும்!

நாங்கள் என்ன எம்பி பதவி, எம்எல்ஏ பதவியா கேட்கிறோம். அவர் அரசியல் கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்று தானே கேட்கிறோம். எங்களைக்கூட கட்சி நிர்வாகிகளாக போட வேண்டாம். ஆனால் அவர் கட்சி ஆரம்பித்து அதில் நாங்கள் உறுப்பினர் என்ற பெருமையே எங்களுக்கு போதும்.

தேர்தல் வரும் போதெல்லாம் அரசியல் கட்சிகளுக்கு ரஜினி ரசிகர்கள் தேவைப்படுகிறார்கள். ஆனால் தேர்தல் முடிந்த பிறகு, ஒரு ரேஷன் கார்டு பிரச்சனைக்கு சென்றால் கூட எங்களை ஒரு பொருட்டாக மதிக்க மாட்டேன் என்கிறார்கள்.

கோமாவில் கிடக்கிறோம்:

ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் தொடர்ந்து எங்களை தாக்கி வருகிறார்கள். நாங்கள் கோமா ஸ்டேஜில் கிடக்கிறோம். பல இடங்களில் எங்களுக்கு அவமானம் ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ரஜினி ரசிகர்களின் நிலைமை இதுதான்.

அரசியல் கட்சிக்கு மாற்றாக சமூக இயக்கம் ஆரம்பிப்பது என்பதெல்லாம் பேச்சுக்கு உதவாத காரியம். அதற்காக தலைவரை நாங்கள் எதிர்ப்பதாக அர்த்தம் கிடையாது. ஆனால் அரசியல் கட்சி ஆரம்பிப்பது அவசியமான ஒன்று.

சமீபத்தில் கோவை மாவட்ட ரசிகர்கள் தனி கட்சிக் கொடி ஆரம்பித்தது அவர்களுடைய நெருக்கடி நிலைமையை காட்டுகிறது. இருப்பினும் கட்சி, கொடி ஆகியவற்றை தலைவர் அறிவித்ததால்தான் மரியாதை. அதேநேரம் அவர்கள் மீது எந்த விதமான தவறான நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்பதுதான் எங்கள் நிலைப்பாடு.

ஒருவேளை அரசியல் கட்சி ஆரம்பிப்பது குறித்து தலைவர் மறுக்கும் பட்சத்தில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் ஈடுபடுவார்கள் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ரசிகர்களின் இந்தக் கொந்தளிப்பை எப்படி சமாளிக்கப் போகிறார் ரஜினி என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.”


-இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அனைவருமே ரஜினி சமூக நல இயக்கம் தொடங்கக் கூடாது, கட்சிதான் துவங்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்களின் இந்த தனிக்கட்சி, சாகும் வரை உண்ணாவிரத நெருக்கடிகள், ரஜினியை வேறு முடிவுக்குத் தள்ளிவிடக் கூடாது. எனவே சற்று நிதானம் தேவை!
http://www.envazhi.com

Saturday, October 11, 2008

ரஜினியின் இடம் அப்படியே இருக்கிறது! - ஆர்.எம்.வீரப்பன்


சில தினங்களுக்கு முன்புதான் முன்னாள் அமைச்சரும் ரஜினியின் நலம் விரும்பிகளுள் ஒருவருமான சு.திருநாவுக்கரசர் எம்பி, ரஜினியின் அரசியல் பிரவேச அவசியம் குறித்து வெளியிட்ட கருத்துக்களைத் தெரிவித்திருந்தோம். அதன் பிறகுதான் அவர் பத்திரிகைகளுக்கு பேட்டியளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த நமது மதிப்புக்குரிய முன்னாள் அமைச்சரும், எம்ஜிஆர் கழகத் தலைவருமான ஆர்எம் வீரப்பன்.

ரஜினியின் அரசியல் பிரவேசத்துக்கு முதல் கட்டியம் கூறியவர் ஆர்எம்வீதான். பாட்ஷா படத்தின் வெள்ளி விழாவையும் அதில் ரஜினி நிகழ்த்திய புயல் வேக உரையையும், அதனால் எழுந்த அரசியல் பூகம்பங்களையும் மறுபடியும் ஒருமுறை இங்கே நினைவு கூற வேண்டியிருக்காது என நம்புகிறேன்.

ரஜினிக்காக மந்திரி பதவியையே துறந்தவர், ரஜினி கட்சி ஆரம்பித்தால் எதையும் செய்யத் தயாராக இருந்தவர் என அமரர் மூப்பனார் அவர்களால் வர்ணிக்கப்பட்டவர் ஆர்எம்வீ.
இன்று ‘காலத்தின் கட்டாயம்’ அவரை இன்னொரு அணிக்குள் நிற்க வைத்திருந்தாலும் (அந்த ஏற்பாட்டைச் செய்தவரும் ரஜினிதான்!), இந்த நிமிடமே ரஜினி பொது வாழ்க்கை குறித்த சாதக அறிவிப்பை வெளியிட்டால் தயங்காமல் முதல் ஆதரவுக் குரல் தரத் தயாராக இருப்பவர்.

அவரிடம் எவ்வளவோ விஷயங்கள் பற்றி பேசினேன்.

அதில் அவர் ரஜினியைப் பற்றி, அவரது அரசியல் பிரவேசம் குறித்து கூறியதில் ஒரு பகுதியை மட்டும் தருகிறேன்.

இனி ஆர்எம்வீ:

நல்லவர்கள் எல்லோரும் ஒருமித்த குரலில் ஒரு நல்லவரை அரசியலுக்கு வருமாறு வேண்டிக் கொண்டோம். புரட்சித் தலைவருக்குப் பிறகு அப்படியொரு வாய்ப்பு ரஜினிக்கு மட்டுமே அமைந்தது.

இது யாராலும் உருவாக்கப்பட்டதல்ல... நான் முன்பே சொன்ன மாதிரி, காலத்தின் கட்டாயத்தில் அந்த வாய்ப்பு அவருக்கு தானாகவே அமைந்துவிட்டது. அதை அவர் மறுதலித்ததும் அதன் பின் வந்த நிகழ்வுகளும் வரலாறு.

அந்த முடிவு குறித்து நான் எதுவும் சொல்லமாட்டேன். அது அவரது சொந்த முடிவு.
ஆனால் இன்றைக்கு பத்திரிகைகளில் பரபரப்பாக பல விஷயங்களை எழுதுகிறார்கள். அதைப் படிக்கும்போது எனக்குள் பழைய வரலாறு சற்றே எட்டிப் பார்த்தது.

இப்போது ரஜினி அரசியலுக்கு வருவது சாத்தியமா?

இது ஜனநாயக நாடு. அவர் அரசியலுக்கு வருவதை யார் தடுக்கப் போகிறார்கள்... ஆனால் முதலில் அதற்கு அவர் தயாராக இருக்கிறாரா எனத் தெரியவேண்டும்.

யூகங்களுக்கு பதில் சொல்வது சரியாக இருக்காது. இருந்தாலும் உங்களைப் போன்ற அபிமானிகள் வருந்திக் கேட்பதால் சொல்கிறேன்... அரசியலில் ரஜினியின் இடம் அப்படியே இருப்பதாகத்தான் நம்புகிறேன்.

காரணம் மக்கள் மனதில் அவர் மீதான மரியாதை கொஞ்சமும் குறைந்ததாகத் தெரியவில்லை. தாங்கள் எதிர்பார்த்த மாதிரி அவர் அரசியலுக்கு வரவில்லையே என்ற கோபத்தில் சிலர் அவரை விமர்சிக்கக் கூடும். ஆனால் நல்லவர்களின் புகழ் நீண்டகாலம் நிலைத்திருக்கும், புரட்சித் தலைவரைப் போல...

-நிறைய பேசினாலும் அதில் அளவோடு எடுத்துக் கையாளுமாறு கேட்டுக் கொண்டார் ஆர்எம்வீ. அரசியல் சாணக்கியராயிற்றே!

குறிப்பு: ரஜினி ஆதரவாளர்களிடம் கருத்துக் கேட்டால் இப்படித்தானே சொல்வார்கள் என நண்பர் ஒருவர் கருத்து தெரிவித்திருந்தார். ஒரு காரியத்தில் இறங்குகிறோம்... அதற்கு நாம் யாரைக் கைத்துணைக்கு அழைப்போம்... நம்மை விமரிசிப்பவர்களையா... நலம் விரும்பிகளையா?

பல நேரங்களில் விமரிசனம் எனும் பெயரில் வரும் வக்கிரக் கணைகள் நல்ல முயற்சிகளைத் துவண்டு போகச் செய்துவிடும்.

ரஜினி அடிக்கடி சொல்வதுபோல, ஒரு நல்ல விஷயத்தைச் செய்யும்போது நமக்கு வேண்டியவர்களையெல்லாம் துணைக்கு அழைத்துக் கொள்ளவேண்டும். அந்த செயலின் முடிவில் கிடைக்கும் வெற்றியை தனக்கும் சிறிது வைத்துக் கொண்டு மீதியை துணை நின்ற அனைவருக்கும் பகிர்ந்து அளிக்க வேண்டும். என்ன சரிதானே!

http://www.envazhi.com

Thursday, October 9, 2008

கண்ணா வேணாம்... இது நல்லதுக்கில்ல!


நான் தீவிர ரஜினி ரசிகனாக்கும் என்று சொல்லிக் கொண்டே, ரஜினியைச் சிறுமைப்படுத்தும் முயற்சியில் சிலர் இறங்கியிருக்கிறார்கள்.

அவர்களில் முக்கியமானவர்கள் விஜய் மற்றும் அவரது தந்தை எஸ்ஏ சந்திரசேகரன்.
இன்று நேற்றல்ல... ஆரம்பத்திலிருந்தே இந்த இருவரும் இது போன்ற உள்ளடி வேலைகளில் தீவிரமாக இருந்திருப்பது சற்றே பின்னோக்கிப் பார்த்தால் புரியும்.

இன்றைய தேதிக்கு தன் சொந்த முகத்துக்கு பெரிய ஈர்ப்பு கிடைக்காது என்று தெரிந்து கொண்டு, ரஜினி ரசிகன் எனும் இரவல் முகத்தை மாட்டிக் கொண்டவர்தான் விஜய். அவர் இதுவரை நடித்துள்ள 48 படங்களில் 47-ல் ஏதாவது ஒரு காட்சியிலாவது ரஜினியின் முகம், அவர் நடித்த படத்தின் காட்சி அல்லது அவர் பெயராவது வருமாறு பார்த்துக் கொள்வார் விஜய்.

ரஜினி ரசிகர்களை ஈர்க்க இதைவிட்டால் வேறு வழி கிடையாது அவருக்கு.

ஆனால் இன்று ஏதோ ஒரு இடம் கிடைத்ததும், தீட்டிய மரத்திலேயே கூர் பார்ப்பது போல ரஜினியை மட்டம் தட்டும் காட்சிகளை விஜய்யின் தந்தை சந்திரசேகரன் தன் சமீபத்திய மூன்றாம் தரப் படமான பந்தயத்தில் வைத்திருந்தார்.

அந்தக் காட்சிகளைப் பார்த்தும் ரஜினி ரசிகர்கள் அமைதியாக இருக்கக் காரணம் இதைப் பெரிதுபடுத்தப் போய், தேவையில்லாமல் அந்த கேவலமான படத்துக்கு விளம்பரம் கொடுத்துவிடக் கூடாதே என்ற எண்ணத்தில்தான்.

ஆனால் இப்போதோ...

லயோலா கல்லூரி தயாரித்து வெளியிட்ட ஒரு சர்வேயைக் காட்டி, தந்தையும் மகனும் வானுக்கும் பூமிக்குமாய் குதிப்பதை தமிழ் மக்கள் கிண்டல் புன்னகையோடு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

நாம் முன்பே சொன்னது போல லயோலா சர்வே என்பது ஒட்டு மொத்த தமிழ் மக்களின் தீர்ப்பல்ல... அப்படி ஒரு சர்வே வெளியானதன் பின்னணி, அதில் குறிப்பாக விஜய்க்கு மட்டும் அளிக்கப்பட்ட முக்கியத்துவம், ரஜினியைச் சிறுமைப்படுத்த மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் ஒவ்வொன்றாக இப்போது வெளிவரத் தொடங்கியுள்ளன.

ரஜினியை விட விஜய் 0.2 சதவிகிதம் அதிக ஆதரவைப் பெற்றுவிட்டதாக அந்த கருத்துக் கணிப்பு கூறியுள்ளது. இதெல்லாம் ஒரு கணிப்பா... ரஜினி என்ற மனிதரின் நிஜ செல்வாக்கினை அரசியல், சினிமா எல்லைகளுக்கு அப்பாற்பட்டு இயங்கும் பொது மக்களே நன்கறிவார்கள்.

ஆனால் இதைப் புரியாத போலி ரசிகர் விஜய், ரஜினியை மிஞ்சும் ஆதரவு மக்களிடம் தனக்கு இருப்பதாகவும், தானே அடுத்த முதல்வர் என்றும் பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்து, தன்னைத் தானே புகழ்ந்து சந்தோஷம் கொள்கிறார். இந்த சர்வே முடிவை பெரிய பெரிய கட் அவுட்களில் எழுதி வைத்து பெருமையடித்து வருகிறார்.

சில பத்திரிகைகளில், தானே அடுத்த சூப்பர் ஸ்டார் என சிறப்புக் கட்டுரை வெளியிட ஏற்பாடு செய்து வருகிறார்கள் என்றும் அறிகிறோம்.

இவர்களுக்கு ரஜினி பாணியிலேயே நாம் சொல்ல விரும்புவது ஒன்றை மட்டும்தான்: கண்ணா வேணாம்... இது நல்லதுக்கில்ல, ரொம்ப நாள் தாங்காது!
http://www.envazhi.com

Wednesday, October 8, 2008

வேண்டாம் இந்த அர்த்தமற்ற ஒப்பீடு!


பத்திரிகைகளில் ரஜினியைப் புகழ்ந்து எழுதினால் மகிழ்கிறீர்கள்... விமர்சித்தால் கோபித்துக் கொள்கிறீர்கள். எப்போதும் நாங்கள் துதி பாடிக் கொண்டேஇருக்க முடியுமா...?

-இது பிரபல வார இதழின் பொறுப்பாசியரியராக உள்ள நம் நண்பர் கேட்ட கேள்வி.

அவருக்கு நான் சொன்ன பதிலை இங்கே குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.

‘நல்லவர் ஒருவரைப் பற்றி நல்லவிதமாகவே எப்போதும் எழுதுவதில் தவறில்லை. இன்னொன்று பொது வாழ்க்கையில் பத்திரிகைகள் குற்றம் சாட்டும் அளவுக்கு ரஜினி எந்தத் தவறும் செய்யவில்லை. அரசியலுக்கு அவர் வருவது, கட்சி ஆரம்பிப்பது எல்லாம் அவருக்குள்ள சூழ்நிலைகளைப் பொறுத்த விஷயம். ஆனால் அதற்காக மட்டுமே அவர் மீது கடும் விமர்சனங்களை வைப்பதில் என்ன அர்த்தமிருக்கிறது...

கட்சி ஆரம்பிக்கவில்லை என்பது ஒரு குற்றமா..!

தொடர்ந்து பத்திரிகைகள் அவரது அரசியல் பிரவேசம் குறித்து யூகங்கள் வெளியிடுவதும் பின்னர் அந்த யூகங்கள் பொய்த்துவிடும் நிலையில் அவரைத் திட்டித் தீர்ப்பதும் என்ன வகை பத்திரிகை தர்மம்?’

இந்தப் பதில் அவரை அமைதியாக்கிவிட்டது.

ரஜினியைப் பற்றி எழுதப்படும் நல்ல விஷயங்கள் நாடறிந்தவை... குற்றச்சாட்டுகள் இட்டுக் கட்டப்பட்டவை. அவர் யாரையும் சுரண்டியோ, ஓட்டு வாங்கி பதவிக்கு வந்து ஏமாற்றிக் கொண்டோ இல்லை, குற்றம் சாட்டிப் பேச. இதைப் புரிந்து கொண்டாலே போதும், அவர் மீதான விமர்சனங்கள் அடியோடு நின்றுபோகும்.

இன்று வெளியாகியுள்ள ரிப்போர்டர் வாரமிருமுறை இதழிலும் ரஜினிதான் கதாநாயகன். வழக்கம்போல பத்திரிகையும் அமோக விற்பனை!

வழக்கத்துக்கு மாறாக இந்த இதழில் சற்று தெளிவான, பரந்த பார்வையுடன் கூடிய கட்டுரை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள்.

ஆனால் தலைப்பில் மட்டும் வழக்கம் போல வியாபாரத்தனம்.

தலைப்பு: யார் அடுத்த சூப்பர் ஸ்டார்? – ரஜினியை உசுப்பி விட்ட கருத்துக் கணிப்பு!

இது என்ன அபத்தம்... யாரை யாருடன் ஒப்பிடுவது?

யார் அடுத்த சூப்பர்ஸ்டார் என இனி கேள்வி எழுப்புவதில் அர்த்தமே இல்லை. இந்த விஷயத்தில் ஒரு மூன்றாம் தர கருத்துக் கணிப்புக்காக கவலைப்படும் சாதாரண நபரும் அல்ல சூப்பர் ஸ்டார்.

இனி இந்தியத் திரையுலகைப் பொறுத்தவரை சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் ரஜினிக்கு மட்டுமே. உலக சூப்பர் ஸ்டார் என எல்லோரும் அவரை கொண்டாடும் வேளை நெருங்கும் தருணத்தில் இந்த மாதிரி அபத்தங்களை மீடியா தவிர்க்க வேண்டும். மற்றபடி தலைப்புக்கும் கட்டுரைக்கும் சம்பந்தமில்லை என்பதால், கட்டுரையின் நல்ல விஷயங்களைப் பாராட்டாமல் இருக்க முடியாது.

இந்தக் கட்டுரையின் ஆரம்பம் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது.

படை பரிவாரங்களுடன் ரோம் நகரை நெருங்கிவிட்டார் ஜூலியஸ் சீசர். இடையே நொப்பும் நுரையுமாகக் கொந்தளித்து ஓடும் ரூபிகான் ஆறு. ‘ஆற்றைக் கடந்து போய் ரோமைக் கைப்பற்றுவதா? இல்லை அப்படியே பின்வாங்கி விடுவதா?’ என்ற அறத்துன்பமான நிலை.

அப்போது சீசர் எடுத்த முடிவு ரூபிகான் ஆற்றைக் கடப்பதுதான். அதன்பின் நடந்ததெல்லாம் வரலாறு.

சீசரைப் போல சூப்பர் ஸ்டார் ரஜினியும் அவரது வாழ்க்கை வரலாற்றில் ஒரு ரூபிகான் ஆற்றின் பக்கம் வந்து சேர்ந்து விட்டதாகவே தோன்றுகிறது, அண்மையில் அவர் தொடர்பாக நடக்கும் சில நிகழ்வுகளைப் பார்க்கும்போது....


-இந்த சிறப்பான ஆரம்பம் இறுதி வரை தொடர்வதுதான் இக்கட்டுரையின் நல்ல அம்சம் (இங்கே தரப்பட்டுள்ள கட்டுரையின் பக்கங்களைக் கிளிக்கிப் பெரிதாக்கிப் படிக்கவும்!).

மற்றொரு சிறப்பு, நமது நண்பர் சுந்தரின் (http://www.onlyrajini.com) கருத்துக்களும் இந்தக் கட்டுரையில் இடம் பெற்றிருப்பது, அக்கட்டுரையை சரியான பாதையில் கொண்டு போய் முடிக்க உதவியிருக்கிறது.

ரஜினியைத் தாண்டிவிட்டார் விஜய் என்ற லயோலாவின் கருத்துக் கணிப்புக் குறித்த கேள்விக்கு சுந்தர் அளித்துள்ள பதில் சிறப்பாக இருந்தது. இதோ அந்தப் பகுதி:

“உடுமலையில் குசேலன் படப்பிடிப்பில் கலந்து கொண்டு சென்னை திரும்பும் வழியில் கோவை விமான நிலையத்துக்கு ரஜினி வருகிறார் என்ற தகவல் கசிந்ததும் சில மணிநேரங்களில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் விமான நிலையம் முன் குவிந்து விட்டார்கள். அப்போது, அவர்களின் நெரிசலில் சிக்கிய ரஜினியை விமான நிலையத்துக்குள் அழைத்துச் செல்ல அவரது உதவியாளர்கள் திணறிவிட்டார்கள்.

கடந்த 1989-ல் தனது நண்பருக்காக குளிர்பான அறிமுக விழாவில் கலந்து கொள்ள ரஜினி திருச்சி சென்ற போது, அவருக்கு கிடைத்த வரவேற்பை யாரும் மறந்துவிட முடியாது. இத்தனைக்கும் அந்த விழாவுக்கு முதல்நாள் இரவுதான் விழாவில் ரஜினி கலந்து கொள்கிறார் என்று அறிவித்தார்கள்.

ராமராஜன்(!) தொடங்கி கமல் வரை ரசிகர் மன்ற மாநாடுகளை நடத்தி விட்டார்கள். ஆனால், இதுவரை ரஜினி தனது ரசிகர்களை சென்னையைத் தவிர்த்து வேறு இடங்களில் சந்தித்ததே இல்லை. அப்படி ரஜினி மட்டும் ரசிகர்களைச் சந்திக்க ஒரு விழா நடத்தினால், அது தமிழகம் இதுவரை பார்த்திராத மிகப் பெரிய திருவிழாவாக இருக்கும். இதில் ரஜினி செல்வாக்குக் குறைந்து விட்டது என்று யாரோ சொல்கிறார்கள் என்பதையெல்லாம் எந்த ரசிகரும் நம்பத் தயாராகவே இல்லை...''


-கட்டுரையை முழுவதும் படியுங்கள்!
http://www.envazhi.com

எம்ஜிஆருக்குப் பின் ரஜினிதான்! - திருநாவுக்கரசர்


சில தினங்களுக்கு முன் பாஜக தலைவரும், ரஜினியின் நலம் விரும்பிகளில் ஒருவருமான சு.திருநாவுக்கரசர் எம்.பி, ரஜினியின் அரசியல் எதிர்காலம் குறித்து அளித்த சிறப்புப் பேட்டியின் ஒரு பகுதியை கொடுத்திருந்தேன்.

கிட்டத்தட்ட அதே கருத்தை நேற்றைய மாலைப் பத்திரிகைகளுக்கும் பேட்டியாகக் கொடுத்திருந்தார்.

நமது நண்பர்களில் சிலர், திருநாவுக்கரசரின் பேட்டி வந்து என்ன ஆகப்போகிறது என நினைக்கலாம்.

எந்தக் காரியத்திலும் இறங்கும் முன் நமக்கான ஆதரவுக் குரலைப் பெறுவது மிக முக்கியம். அது தருகிற மன உறுதியும், குதூகலமும் தனியானது.

ரஜினி மட்டும் கட்சி ஆரம்பித்தால், நான்தான் அக்கட்சிக்கு பொதுச் செயலாளர். இந்தப் பணியை விரும்பி செய்வேன். என் மனைவி ராதிகா எந்த நிலையிலும் அவரது கட்சியில் பணியாற்றத் தயார் என்று பகிரங்கமாக சேனல்களுக்கெல்லாம் பேட்டி கொடுத்த சரத்குமார் இன்று என்ன நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார்?

ஆனால் 12 ஆண்டுகளுக்கு முன் ரஜினியோடு இணைந்து செயல்படவும் தயாராக இருந்த, மக்கள் செல்வாக்கு மிக்க தலைவர் திருநாவுக்கரசர். இந்தப் 12 ஆண்டுகாலத்துக்குப் பிறகும் அதே மரியாதையுடன் ரஜினிக்கு அவர் ஆதரவு தர முன் வந்திருப்பது சாதாரண காரியமா?

மீண்டும் அவரிடம் பேசினோம்:

ரஜினியை எதற்காக அரசியலுக்கு மீண்டும் அழைக்கிறீர்கள்?

மிக எளிய ஆனால் உண்மையான காரணம் என்ன தெரியுமா... ரஜினிக்கு நிஜ வாழ்க்கையில் நடிக்கத் தெரியாது. அதனால்தான் அவருக்கு இத்தனை சிக்கல்கள் வருகின்றன. இந்த மாதிரி நல்ல மனம் படைத்தவர்கள்தான் இன்று நமக்குத் தேவை.

ரஜினி என்றைக்கோ முதல்வராகியிருக்க வேண்டியது. ஐயா மூப்பனார் அவருக்காக ராஜபாட்டை போட்டுக் கொடுக்கத் தயாராக இருந்தார். ஆனால் ரஜினி மறுத்துவிட்டார்.

பதவியை மறுப்பது சாதாரண விஷயமா... பத்துப் பைசாவுக்கு பிரயோஜனமில்லாத ஏதாவது ஒரு சங்கத்தின் உறுப்பினர் பதவியைக் கூடத் துறக்க யாரும் தயாராக இல்லாத இந்த நாட்டில், சகல அதிகாரமும் நிறைந்த மாநில முதல்வர் பதவியையே வேண்டாம் என ஒருவரால் மறுதலிக்க முடியுமென்றால் அவர் சாதாரண மனிதராக இருக்க முடியுமா?

அதனால்தான் ரஜினியை மீண்டும் மீண்டும் அழைக்கிறோம்.

ஆனால் இந்த விஷயத்தில் ரஜினி ஒன்றும் சொல்வதாகத் தெரியவில்லையே...?

அது அவரது தனிப்பட்ட விருப்பங்களைப் பொறுத்தது. என்னைக் கேட்டால், முன்னெப்போதும் இல்லாத சரியான சந்தர்ப்பம் அவருக்கு இப்போதுதான் வாய்த்திருக்கிறது. பாராளுமன்றத் தேர்தல் நெருங்கும் இந்த வேளையில் தமிழகத்தில் உள்ள முன்னணிக் கட்சிகள் அனைத்தும் மக்களிடம் நம்பிக்கையை இழந்து நிற்கின்றன. கட்சி ஆரம்பித்துள்ள வேறு சில நடிகர்களின் நிலைமையும் சொல்லிக் கொள்கிற மாதிரி இல்லை. அவர்களையெல்லாம் விட மிகச் சிறப்பாக, திட்டமிட்டுச் செயல்படக் கூடியவர் ரஜினி.

இந்தத் தருணத்தை அவர் சரியாகப் பயன்படுத்தி, தன்னை வாழவைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்.

ரஜினியிடம் நீங்கள் இது குறித்துப் பேசினீர்களா?

பேசியிருக்கிறேன். எல்லாவற்றுக்கும் ஒரு சிரிப்பு சிரித்து வைப்பார்.

ரஜினி வந்தால் இந்த முறை ஆட்சியைப் பிடித்துவிடும் வாய்ப்பு எந்த அளவு உள்ளது?

ரஜினியைப் பற்றி மீடியாவில் வருகிற செய்திகளை விடுங்கள். ஆனால் கிராமங்களில் பொது மக்களிடம் அவருக்கு நல்ல செல்வாக்கு உள்ளது.

எனக்குத் தெரிந்து புரட்சித் தலைவர் எம்ஜிஆருக்குப் பிறகு அவருக்கு இணையான செல்வாக்கு பெற்ற ஒரே நடிகர் ரஜினி மட்டும்தான். கூடவே அவருக்கு மக்களிடமுள்ள மிஸ்டர் கிளீன் இமேஜ், லஞ்சத்தின் பிடியில் சிக்கித் தவிக்கும் மக்களின் வாக்குகளை அள்ளித்தரும்.

ரஜினி அரசியலுக்கு வந்தால், நானும் அவருக்குத் துணையாக இருப்பேன் என்று முன்பு கூறினீர்கள். அதே மன நிலையில் இபேபோதும் இருக்கிறீர்களா...?

நிச்சயமாக... அதே நேரம் அவர் தனிக் கட்சி கண்டால் பாஜக அவருடன் கூட்டணி வைக்க முயற்சிக்கும். அல்லது தனியாகவே நின்றாலும் நாங்கள் ஆதரவளிப்போம். ஒரு நல்லவர் வரட்டுமே... அதற்காகத்தான்!
http://www.envazhi.com

Saturday, October 4, 2008

ரஜினி ரசிகர்களின் போக்கு தவறா?


சற்றுக் கடினமான மனதுடன் இந்தப் பதிவைத் தருகிறேன். புரிந்தவர்கள் கோபப்படாமல் சிந்திக்கட்டும். மற்றபடி எந்தப் பலனும் எதிர்பாராமல் ரஜினி என்ற ஈர்ப்பு விசைக்குக் கட்டுப்பட்ட ரசிகர்களுக்கு இந்தக் கட்டுரை சமர்ப்பணம்!

ரஜினியை அரசியலுக்கு வாருங்கள் என அழைக்க இதுவே சரியான தருணம் என வாதிடும் ரசிகர்கள் ஒருபக்கம்...

வேண்டாம்... அவர் இஷ்டப்படி விட்டுவிடுவோம். ரஜினி என்ற பிம்பத்தை மட்டும் ரசித்து மகிழ்வோம் என அறிவுபூர்வமாக பேசும் கூட்டம் இன்னொரு பக்கம்.

தாமாகவே ஒரு முடிவெடுத்து அந்த முடிவு நிறைவேற வழியில்லாத நிலையில் தாங்களாகவே எதிர்மறையாக சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள் ரஜினி ரசிகர்கள் என மேதாவித்தனம் காட்டும் விமர்சகர்கள் இன்னொரு கூட்டம்.

இதுதான் ரஜினி ரசிகர்கள் என்ற சமூகத்துக்குள் இன்று நிலவும் முரண்பாடு.

இந்த முரண்பாடு அந்த சமூகத்துக்குள்ளேயே இருந்தால் பரவாயில்லை. ஆனால் சிலர் தங்கள் எழுத்து வல்லமையைக் காட்டுவதாக எண்ணி மீடியாவில் வெளிச்சம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஒருவேளை இது ரஜினிக்கு எதிராக வேலை செய்யும் கூட்டத்தின் பிரச்சாரமாகவும் கூட இருக்கலாம். அப்படி இருந்தால் சந்தோஷமே... குறைந்தபட்சம் ரஜினி ரசிகர்களுக்குள் எந்த கருத்து பேதமுமில்லை என்ற சந்தோஷமாவது மிஞ்சும் சத்தியநாராயணா போன்றவர்களுக்கு!

ஒவ்வொரு முறையும் ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலிப்பது தவறா... இந்தக் குரலின் பின்னணியில் இருப்பது அரசியல் வியாபாரமா... ரஜினியின் அரசியல் பிரவேசத்தை வைத்து லட்சக் கணக்கில் சம்பாதித்துவிடத் துடிக்கிறார்களா ரசிகர்கள்?

இந்தக் கேள்விகளுக்கான விடைகளில் கொஞ்சம் கசப்பு தட்டினாலும், உண்மை உண்மைதானே!

இவற்றைப் பற்றி தீவிர பார்வையில் எழுதத் தொடங்கினால் பல ரசிகர்களால் மட்டுமல்ல... இன்று அறிவுஜீவித்தனம் பேசும் ஒருவராலும் அதைத் தாங்கிக் கொள்ள முடியாது. ஒரு கட்டத்தில் ரஜினி என்ற நல்ல நடிகரை, மனிதரை ரசிக்க முடியாத அளவுக்குக் கொண்டு போய்விட்டுவிடும் இந்த விவாதம்!

ஆரவாரம் இருந்தால்தான் திருவிழா!

ரசிகர்கள் பாலாபிஷேகம், பீரபிஷேகமெல்லாம் செய்யக் கூடாது. கட் அவுட் வைக்காமல், பேனர் கட்டாமல், பூமழை தூவாமல் அமைதியாக ரஜினி படத்தை ரசிக்க வேண்டும் என அறிவுரைத்துக் கொண்டிருக்கிறது ஒரு கூட்டம்.

குறைந்த பட்சம் இப்படியொரு சூழலில் அடுத்த வருடம் அமைதியாக எந்திரன் ரிலீசானால் எப்படியிருக்கும் என கற்பனை செய்து பாருங்கள்?

பட்டாசு கொளுத்தாமல், வாண வேடிக்கை இல்லாமல், தீப அலங்காரம் செய்யாமல், ஊர்கூடி வடம் பிடிக்காமல் ஒரு திருவிழா நடந்தால் எப்படி இருக்குமோ அப்படியாகிவிடும்!!

அப்படியொரு சூழல் நிலவும் போது, ‘என்ன ஆச்சு... ரஜினி படமா இது... ரசிகர்களுக்குப் பிடிக்காத மாதிரி எடுத்துவிட்டார்களே!’ என விமர்சனம் வைப்பவர்கள் நிச்சயம் இதே கூட்டத்தினராகத்தான் இருப்பார்கள். ‘ரஜினி தன் ரசிகர்கள் செல்வாக்கை இழந்துவிட்டார்’ என்பதற்கான அறிகுறி இது என கூலாகச் சொல்லிவிட்டுப் போவார்கள்.

ரஜினி படம் ரிலீசாவது ஒரு திருவிழா மாதிரி என எழுதிக் கிழிக்கும் யாருக்கும், அந்தத் திருவிழாவை யார் தயவுமின்றி சுயமாக நடத்தும் ரசிகர்களைப் பற்றிக் குறை சொல்லும் யோக்கியதை கிடையாது. எங்கோ ஒரு சில ரசிகர்கள் வரம்பு மீறியிருக்கலாம்... ஆனால் பரந்து விரிந்த சமுத்திரத்துக்குள் செம்மீனும் உண்டு, காதறுந்த செருப்பும் உண்டு.

ரஜினியும் அரசியலும்!

பின்னாளில் ரஜினி அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பில் மட்டுமே எந்தத் தொண்டனும் பாலாபிஷேகம் செய்யவில்லை. திரைக்கு முன்னால் சில்லறையை வாரி இறைக்கவில்லை. ஆனால் அந்தத் ரசிகனுக்குத் தொண்டனாகும் ஆசையைத் தூண்டிவிட்டது யார்? பல ரசிகர்களால் வெளிப்படையாகக் கேட்க முடியாத கேள்வி இது! ஆனால் இதற்கான பதில் ரஜினி உள்பட அனைவருக்கும் தெரியும்.

ரஜினி அரசியல் ஆசை துறந்தவரல்ல... அரசியலை இதற்கு முன் முயற்சித்துப் பார்க்காதவருமல்ல. கடந்த 15 ஆண்டுகளாக அரசியலில் தானும் ஒரு சக்தியாக அவர் நேரடியாகவும் மறைமுகமாகவும் இருந்தே வந்திருக்கிறார். இதை அவர் மறைக்கவில்லை. அதன் தாக்கம் அவரது ரசிகர்களிடமும் இருப்பது இயல்புதானே!

யாருக்கும் கிடைக்காத மக்கள் ஆதரவு எனும் அரிய வரம் ரஜினிக்கு மட்டும்தான் தானாகத் தேடி வந்தது. மூப்பனார் எனும் நியாயமான மனிதர் ஆதரவும் இருந்தது. ஆனால் அதையெல்லாம் திமுகவுக்கு வாரி வழங்கியவர் நமது ரஜினிதான்.

ரஜினிக்கு அரசியல் விருப்பமே இல்லை என்று வாதாடுபவர்களுக்காகத்தான் இதையெல்லாம் இங்கே குறிப்பிடுகிறேன்.

இன்றும் கூட எந்த தொலைக்காட்சி அல்லது பத்திரிகைப் பேட்டியிலும், தான் நிச்சயம் அரசியலுக்கு வரப்போவதில்ல. ரசிகர்கள் வீணாக கற்பனை செய்து கொள்ள வேண்டாம். அவரவர் வேலையைப் பாருங்கள். படம் வந்தால் ரசித்துவிட்டுப் போங்கள், என்று ரஜினி நேரடியாக பொட்டிலடித்த மாதிரி சொல்லவில்லை.

குசேலன் ரிலீசுக்கு இரு வாரங்களுக்கு முன் கைரளி டிவிக்கு அளித்த பேட்டியில் தனது அரசியல் பிரவேசத்தைக் காலம் முடிவு செய்யும் என்றுதான் அவர் கூறியுள்ளார்.
எனவேதான் வெறும் சூப்பர் ஸ்டார் என்ற நிலையைத் தாண்டி அவரை தலைவர் என விளித்து மகிழ்கிறார்கள் ரசிகர்கள். இதில் எங்கே தவறு வந்துவிட்டது?

ரஜினியின் இந்த மனநிலைக்கு எதிராக ரசிகர்கள் அமைதி காத்திருந்தால், அது ரஜினியின் செல்வாக்கை அல்லவா கேள்விக் குறியாக்கியிருக்கும்? கிட்டத்தட்ட அவரை அவமானப்படுத்துவதற்குச் சமானமாகிவிடும்.

இன்னொன்று, எல்லா ரசிகர்களும், தொண்டர்களும் அமைதியாக நன்கு சிந்திப்பவர்களாகத்தான் இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது எந்த வகை புத்திசாலித்தனம் என்று புரியவில்லை!

ஒவ்வொருவர் பார்வையும் வேறு வேறு கோணத்தில்தான் இருக்கும். ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்பதிலேயே ஆயிரம் பேர் ஆயிரம் கருத்துக்களைச் சொல்லிக் கொண்டிருக்கவில்லையா... அப்படித்தான்.

தனக்குப் பிடித்த நாயகன் தலைமைப் பொறுப்புக்கு வந்து இந்த சமூகத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் தன் கைக்காசை செலவழித்து போஸ்டர் அடிப்பவர்கள் மீது என்ன தவறு கண்டு விட்டார்கள் இவர்கள்?

இப்படி செலவழித்ததை திரும்ப எடுக்க வேண்டும் என்ற ஊழல் சிந்தனையோடேயே சுற்றிக் கொண்டிருப்பவர்கள் நிச்சயம் அடிமட்ட ரசிகர்கள் கிடையாது, அனைத்தும் அறிந்ததாகக் காட்டிக் கொள்ளும் அறிவு ஜீவிகளே!

இது ரஜினிக்கும் தெரியும். அதனால்தான் தன் ரசிகர்களிடம் அவர் கோபப்படுவதில்லை.
ரஜினியின் மன நிலை புரியாமல் ரசிகர்கள் அவரை நிர்பந்தப்படுத்துவதாக சிலர் விமர்சிக்கிறார்கள். இவர்களுக்கு மட்டும் ரஜினியின் மனம் புரிந்துவிட்டதா என்ன... பிரதமரைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு, ‘நான் அரசியலுக்கு வருவதை ஆண்டவன் தீர்மானிக்கட்டும்’ என்கிறார் ரஜினி.

இவர்களோ... ரஜினிக்கு அரசியல் பிடிக்காது. அவர் வழியில் அமைதியாக எளிமையாக வாழ்ந்து, விதவிதமாக ஸ்டைல் காட்டி தங்களை மகிழ்வித்து ரிட்டையர் ஆனால் போதும் என்கிறார்கள்.

இதை எடுத்துச் சொல்பவர்களுக்கு அறிவிக்கப்படாத பிஆர்ஓ என்று பட்டம் வேறு...

ரொம்ப்ப கஷ்டம்யா...!

குறிப்பு: ரசிகர்கள் ஏன் ரஜினியை திரும்பத் திரும்ப அரசியலுக்கு அழைக்கிறார்கள் என்பதற்கான காரணங்கள் அடுத்த பதிவில்... சொல்லப் போனால் இதை எழுதியது மட்டும்தான் நான். கருத்து சொன்னவர்கள் திருவாளர் பொதுஜனம்!