ரஜினியை அத்வானி சந்தித்ததன் பின்னணி குறித்து இனி ஒவ்வொருவரும் கட்டுக் கதைகளாக எழுதிக் குவிப்பார்கள். நமக்கு அந்த விவரங்கள் வேண்டாம். உண்மை மட்டும்தான் தேவை. ரஜினியைப் போன்ற உண்மையான மனிதர்கள் கட்டுக் கதைகளுக்காக கவலைப்படுவதில்லை.
ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்த பின் அத்வானி பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியளிக்கையில், சென்னை வரும்போது வீட்டுக்கு வருமாறு ரஜினி அழைத்தார். எனக்கும் அவரைச் சந்தித்துப் பேசும் ஆவலிருந்தது. அது இன்றுதான் நிறைவேறியது.
ஆண்டவன் நினைத்தால் நான் அரசியலுக்கு வருவேன் என ரஜினி கூறியிருப்பதை நான் வரவேற்கிறேன். நான் அவரிடம், ‘உங்கள் நிலைப்பாடு அற்புதமானது. நீங்கள் நிச்சயம் அரசியலுக்கு வருவீர்கள். அதற்கு என் ஆசீர்வாதம்’, என்று கூறினேன். அவரிடம் பாஜகவுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்யுமாறு கேட்டேன், ஆனால் பதில் சொல்லவில்லை, என்று யதார்த்தமாகக் கூறினார்.
சும்மா விடுவார்களா நம்ம காகிதப் புலிகள்...
அதற்குள், ‘அத்வானி ஒன்றும் தானாகப் போகவில்லையாம், ரஜினி வேண்டி வருந்தி அழைத்ததால்தான் போனாராம்’, என எழுதிவிட்டனர்.
அவர்களது பொறாமைத் தீயில் நாளும் அவர்களே வெந்து கொண்டிருப்பதன் கஷ்டம் அவர்களுக்குத்தானே தெரியும்...! இதில் ஒரு அல்ப திருப்தி..!
அத்வானியின் இயல்பு!
ஒரு அரசியல்வாதியாக நாம் அத்வானியைப் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை. அவரது கட்சி மீதோ, அவர்களின் கொள்கை மீதோ நமக்கு பெரிய அபிப்பிராயமும் கிடையாது. ஆனால் அத்வானி நேர்மையாளர் எனப் பெயரெடுத்தவர். எளிமைக்கு மறுபெயர் அத்வானி என்று சொல்லலாம்.
2001-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் சமயத்தில் அவரது பேட்டி அவசரமாகத் தேவைப்பட்டது. அப்போது அவர் மத்திய அமைச்சர். அவரைப் பேட்டியெடுக்க அவரது செயலாளரிடம் தொடர்பு கொண்டோம். அடுத்த நாள் நேரில் வருமாறு அவரும் நேரம் ஒதுக்கிவிட்டார்.
ஆனால் டெல்லிக்குச் சென்று பேட்டியெடுத்து திரும்ப வேண்டும். அன்றைய விமானக் கட்டணப்படி பார்த்தால் கிட்டத்தட்ட 15 ஆயிரம் ரூபாய், இரண்டு நாள் கால அவகாசம் வேண்டும்.
செயலாளரிடம் நிலைமையைச் சொன்னபோது, டெல்லியில் உள்ள வேறு யாராவது ஒரு நிருபரை அனுப்புமாறு மாற்று யோசனை சொன்னார். ஆனால் அன்றைய சிறப்புக் கட்டுரைக்கான அவரது பேட்டி, குறிப்பாக இந்தி சேனலில் அன்றே ஒளிபரப்பாக வேண்டிய கட்டாயம். உடனே அவருக்கு நிலைமையை விளக்கினாம். அடுத்த 30 நிமிடம் கழித்து பேசச் சொன்னார்.
பேசினோம். மறுமுனையில் மாண்புமிகு எல்.கே. அத்வானி!
அத்தனை எளிமை, எளிதில் அணுகும் தன்மை கொண்டவர் அத்வானி. அவர் சூப்பர் ஸ்டாரை தேடி வந்து பார்ப்பதில் எந்த அதிசயமும் இல்லை. மீண்டும் மீண்டும் வரவேண்டியிருந்தாலும் வருவார்...!
மற்றபடி சூப்பர்ஸ்டாரின் இயல்பு பற்றி நாட்டுக்கே தெரியும். யாராக இருந்தாலும் தன்னைத் தேடி வந்துதான் பார்க்க வேண்டும் என்ற ஈகோ இல்லாத மனிதர் அவர்.
‘உங்கள் வீட்டுக்கு வருமாறு முன்பு அழைத்தீர்கள். வர முடியவில்லை. இப்போது சென்னை வருகிறேன். உங்களைப் பார்க்க வீட்டுக்கு வரலாமா...?’ என்று கேட்கும் இந்தியாவின் பிரதமர் பதவிக்கான பிரதான கட்சியின் வேட்பாளரிடம் அவர் என்ன பதில் சொல்லியிருக்க முடியும்?
ரஜினியைப் போன்ற நல்லவர்களின் பெருமையை இங்குள்ள வக்கிரம் பிடித்த அரசியல்வாதிகளுக்கும், நோயுள்ளம் கொண்ட பத்திரிகையாள பாவிகளும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஆண்டவன், அத்வானியை போயஸ் இல்லம் (இனி அரசியலில் போயஸ் இல்லம் என்றால் ரஜினி வீடு என்று பொருள் கொள்க!) போக வைத்தார் என்றே நினைக்கத் தோன்றுகிறது.
இன்னும் எத்தனை சரித்திர சந்திப்புகள் இந்த போயஸ் இல்லத்தில் நடக்கப் போகின்றனவோ!
என்ன சொல்றீங்க!
http://www.envazhi.com
தள மாற்றங்கள் @ giriblog | Announcement
4 years ago
No comments:
Post a Comment