Tuesday, November 18, 2008

போர் நிறுத்தம் ஏற்பட என் அறிவிப்பும் தூண்டுதலாக இருந்தால் மகிழ்ச்சி! - ரஜினி

லங்கைத் தமிழ் மக்கள் காயமுற்றுத் துன்புறும் இந்த தருணத்தில் தனது பிறந்த நாளை ரசிகர்கள் கொண்டாட வேண்டாம் என்று அறிக்கை விடுத்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
இதுகுறித்து ஏற்கெனவே இன்று காலை ஒரு செய்தி வெளியிட்டிருந்தோம்.

அதில் பிறந்தநாள் கொண்டாட்ட ரத்து குறித்து ரஜினியே அறிக்கை விடுப்பார் என மன்றப் பொறுப்பாளர் சுதாகர் அறிவித்திருந்ததைக் குறிப்பிட்டிருந்தோம்.

அவர் சொல்லி முடித்த 24 மணி நேரத்துக்குள் ரஜினி தனது அறிக்கையை மீடியாவுக்கு வழங்கியுள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது:

இலங்கையில் நடைபெற்று வரும் போர் காரணமாக ஒவ்வொரு தமிழனின் இதயமும் காயப்பட்டுள்ள இந்த நிலையில் எனது பிறந்த நாளைக் கொண்டாட வேண்டாம் எனறு ரசிகர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்கத் தூண்டுகோலாக எனது இந்த அறிவிப்பும் அமைந்தால் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன், என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார் ரஜினி.

எளிய முறையில் பணிகளைச் செய்யுங்கள்!

பிறந்த நாள் கொண்டாட்டம் வேண்டாம் என்ற ரஜினியின் முடிவு வெளியானதும், உலகம் முழுவதிலும் உள்ள ரஜினி ரசிகர்கள் தொடர்ந்து மண்டபத்துக்குப் போன் செய்து பிறந்த நாள் விழாவுக்கு தாங்கள் செய்துள்ள ஏற்பாடுகளைத் தெரிவித்து வந்ததால், இப்போது பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கு பதில் அன்னதானம், ரத்ததானம் போன்ற நற்பணிகளை ஏழை எளிய மக்களுக்கு பயனுள்ள விதத்தில் செய்ய அனுமதிக்கலாம் என மன்றப் பொறுப்பாளர் சுதாகர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

பிறந்தநாள் கொண்டாட்டங்கள் வேண்டாம் என்று ரஜினி சார் கூறிவிட்டார். ஆனால் ஏழை மக்களுக்காக நடக்கும் நற்பணிகள் தொடரலாம். அதையும் கூட எந்தவித ஆடம்பரமும் இல்லாமல் செய்ய வேண்டும் என்று ரஜினி கேட்டுக் கொண்டுள்ளார். இவை எல்லாமே ரஜினி சார் என்னிடம் சொன்னவை. அதை அப்படியே மீடியாவுக்குச் சொல்லிவிட்டேன், என்றார் சுதாகர்.

http://www.envazhi.com

No comments: