Thursday, November 13, 2008

‘பாக்ஸ் ஆபீஸ் பாதுஷா’ ரஜினி!

வெள்ளித்திரையில் மட்டுமல்ல... சின்னத்திரையிலும் கூட தன் படத்தின் நிழலைக் கூட வேறு எந்தப் படமும் தொடமுடியாது என்பதை அழுத்தம் திருத்தமாக நிரூபித்திருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி!

இந்த முறை தீபாவளிக்கு தமிழில் வெளியான படங்கள் இரண்டுதான். அவையும் பெரிய எதிர்பார்ப்பு ஒன்றும் இல்லாத நிலையில் வெளியாகின. இதற்குக் காரணம், தீபாவளியை முன்னிட்டு இந்தியத் தொலைக்காட்சிகளில் முதல்முறையாக ரஜினியின் சந்திரமுகி ஒளிபரப்பாகும் என சன் டிவி அறிவித்திருந்ததுதான். (இதுகுறித்து ஏற்கெனவே, ‘கல்லா கட்டும் சன் டிவி’ எனும் தலைப்பில் நாம் வெளியிட்ட கட்டுரையை நினைவில் கொள்க.)

இதற்குப் போட்டியாக, புதுப் படமான பில்லாவை ஒளிபரப்பப் போவதாக கலைஞர் தொலைக்காட்சி அறிவித்தது. இதுவும் ஒருவிதத்தில் ரஜினியின் படம்தான். அவரது பழைய பில்லாதான் அஜீத் நடித்த இந்தப் புது பில்லா என்பது உலகறிந்த உண்மை. ஆனால் நயன்தாராவையும் நமீதாவையும் முக்கால் நிர்வாணத்தில் நடமாட விட்டு இந்தப் படத்தை குடும்பத்துடன் பார்க்க விடாமல் செய்திருந்தனர்.

தீபாவளியன்று சன் டிவியில் சந்திரமுகி படம் ஒளிபரப்பாகத் தொடங்கியபோது பட்டாசுகளைக் கொளுத்தி மகிழ்ந்த ரஜினியின் ரசிகர்கள், படம் ஆரம்பித்ததும் பட்டாசு வெடிப்பதையே நிறுத்திவிட்டு படத்தில் மூழ்கிவிட்டதாக பத்திரிகைகள் எழுதியிருந்தன.
அந்த வகையில் சந்திரமுகியை ஒளிபரப்பிய சன் டிவியின் டிஆர்பி ரேட்டிங் யாரும் தொட முடியாத உயரத்துக்கு எகிறியிருக்கிறது.

மும்பையின் TAM நிறுவனம் இப்போது வெளியிட்டுள்ள புள்ளி விவரப்படி சந்திரமுகியை ஒளிபரப்பிய சன் டிவியின் டிஆர்பி ரேட்டிங் 20.82 ஆக இருந்துள்ளது!
இதே நேரத்தில் கலைஞர் தொலைக்காட்சி பில்லா படத்தை ஒளிபரப்பியது. ஆனால் இதற்குக் கிடைத்த டிஆர்பி ரேட்டிங் 4.28 சதவிகிதமே!

இந்தப் புத்தம் புதிய பில்லாவுக்கு ரசிகர்களிடம் இந்த அளவு மோசமான வரவேற்பு கிடைக்கும் என யாரும் நம்பவே இல்லை என்கின்றனர் சின்னத் திரையுலகில்.
ரஜினியின் சந்திரமுகிக்கு அடுத்து அதிக வரவேற்பைப் பெற்ற படம் வேட்டையாடு விளையாடு. இதற்கு கிடைத்த ரேட்டிங் 11.29. அன்று அதே நேரத்தில் கலைஞர் டிவியில் ஒளிபரப்பான மருதமலைக்கு கிடைத்த புள்ளிகள் 7.74.

விளம்பர வருவாய் என்று பார்த்தால் இந்தப் படத்தை வாங்கிய விலையைவிட இருமடங்குக்கும் மேல் சன் தொலைக்காட்சி சம்பாதித்துவிட்டது இந்த ஒரே நாளில்.
இனி இதே படம் ஒவ்வொரு முறை ஒளிபரப்பாகும் போதும் கிடைக்கும் தொகை போனஸ் மேல் போனஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிஞ்சிப்பூ போல அரிதாக படங்கள் கொடுத்தாலும் அடுத்த படம் வெளியாகும் வரை தமிழ் பொழுதுபோக்குத் துறையை வாழ வைத்துக் கொண்டிருக்கும் பாதுஷா, இந்த ‘பாட்ஷா ரஜினி’தான் என்பது மீண்டும் ஒருமுறை அழுத்தம் திருத்தமாக நிரூபணமாகியிருக்கிறது!
http://www.envazhi.com

1 comment:

Anonymous said...

மீசை முளைப்பதற்கு முன் ரஜினி ரசிகராய் மாறிய நீங்கள், இன்றைக்கு கல்லூரி செல்லும் வயதில் மகனோ/மகளோ இருந்தும் ரசிகனாகவே இருக்கிறீர்கள்.

உங்கள் தலைவரும் இதோ வருகிறேன், அதோ வருகிறேன் என்று உசுப்பேற்றிக் கொண்டேயிருப்பார்