Saturday, November 1, 2008

தமிழர் பிணங்கள் புதைக்கப்படவில்லை; விதைக்கப்படுகின்றன! – ரஜினி ஆவேசம்

பொதுவாகவே ஈழத் தமிழர்கள் மீது அக்கறையில்லாதவர் ரஜினி என்பது போன்ற பேச்சுக்கள் மீடியாவில் இதுவரை வலம் வந்து கொண்டிருந்தன.

ஆனால் அவற்றை தனது உணர்ச்சிப்பூர்வமான ஈழ ஆதரவுப் பேச்சு மூலம் நேற்று துடைத்தெறிந்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினி.

இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்தும், உடனடி போர் நிறுத்தம் கோரியும் நடிகர் நடிகைகள் சென்னை நடிகர் சங்க வளாகத்தில் இன்று உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

இதில் ஆரம்பத்திலேயே கலந்து கொண்ட ரஜினி, இறுதியில் உணர்ச்சிப்பூர்வ உரை நிகழ்த்தினார்.

இலங்கையில் தமிழர்களது பிணங்கள் புதைக்கப்படவில்லை. விதைக்கப்படுகின்றன. நாளை இந்த விதைகள் மீண்டும் முளைக்கும். இலங்கை அரசையே அழிக்கும், என்றார் ரஜினி.
மேலும் இலங்கையில் நடக்கும் யுத்தத்தை உடனடியாக நிறுத்த ராஜபக்சே அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்தப் பிரச்சினையில் பெரிய நாடுகள் தலையிட வேண்டி வரும் என்றும் கூறினார்.

இந்தப் போராட்டத்துக்கு மாலையில்தான் ரஜினி வருவார் என்று காலையிலிருந்தே சிலர் கூறிக்கொண்டிருந்தனர். ஆனால் அதை உடைக்கும் வகையில் 11.30 மணிக்கே நடிகர் சங்க வளாகத்துக்கு வந்த ரஜினி வேட்டி, கறுப்பு சட்டை, ரேபான் கிளாஸ் சகிதம் விடுவிடுவென வேடை ஏற, அந்தப் பகுதியே அதிர்ந்தது, கீடியிருந்தவ்ரகளின் விசில் மற்றும் கரவொலியில்.

உண்ணாவிரதம் முடியும் வரை மேடையில் அமர்ந்து அனைவரது பேச்சுக்களையும் கேட்டார். பின்னர் அவர் பேசினார். அதன் முழுமையான வடிவம்:

என்னை வாழவைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களே...

இது மிக அருமையாக, உணர்வுப்பூர்வமான, அறிவுப்பூர்வமான உண்ணாவிரதம் இது. இந்தப் போராட்டத்தை சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கும் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், செயலாளர் ராதாரவியை நான் பராட்டுகிறேன். ராதாரவி சொன்ன மாதிரி இது 3-வது கட்டப் போராட்டம்தான். அதை சரியாக செய்திருக்கிறீர்கள்.

இங்கே சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதனால்தான் இது ரொம்ப சக்ஸஸ்புல்லா நடந்துகிட்டிருக்கு. கட்டுப்பாடில்லாத மனிதனால் எதையும் சாதிக்க முடியாது.
இலங்கைத் தமிழர் விஷயத்தில் நிறைய பேசலாம். பேச அவ்வளவு விஷயமிருக்கு.

இலங்கைத் தமிழர்கள் விஷயத்தில் என்ன நடக்கிறது என்ற உண்மை நிலையை இங்கு விளக்கிய ராதாரவி மற்றும் நண்பர் திருமாவளவனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் இங்கேயும் சரி, வெளிநாடுகளுக்குச் செல்லும்போதெல்லாம் பல இலங்கைத் தமிழர்களைச் சந்தித்திருக்கிறேன். அவர்கள் இலங்கைத் தமிழ்ல திட்டினால்கூட அது சங்கீதம் மாதிரி இனிமையாக இருக்கும். பாஷை மட்டுமல்ல, பழகுவதற்கும் அவ்வளவு இனிமையானவர்கள்.

அந்த நல்ல மக்கள் அவங்க நாட்ல வாழ முடியாமல் மற்ற நாடுகளில் எப்படியெல்லாம் அவதிப்பட்டு வாழ்கிறார்கள் என்பதை நினைக்கும்போது மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.

தமிழர்கள் சம உரிமைக்காக போராடினார்கள். அதை அடக்க சிங்கள ராணுவம் ஆயுதமெடுத்தது. யுத்தத்தை நிறுத்த வேண்டுமென்று எல்லாருமே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நம்ம இந்திய அரசும் மாநில அரசும் இதற்கு இன்னும் தீவிரமா முயற்சி எடுக்கணும்.

இங்கே நடப்பது, நாம் இங்கே பேசுவது அனைத்தும் இலங்கை அரசுக்கு, ராஜபக்சேவின் காதுகளுக்கு, அங்குள்ள எம்பிக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் சபைக்கு கேட்டும் என்ற நம்பிக்கையில், தைரியத்தில் நான் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

நீங்களா வீரர்கள்?

தமிழ் மக்கள் அங்கே சம உரிமைதான் கேட்டார்கள், அதற்காக போராட்டம் நடத்தினார்கள். ஆனால் அதை நீங்கள் கொடுக்கவில்லை.

உங்கள் சிங்கள அரசிடம் ராணுவம், விமானப்படை, கப்பல் படை என முப்படைகளும் உள்ளன. சகல வசதிகளும் சவுகரியங்களும் உள்ளன. யுத்தத்தை நீங்கள்தான் அறிவித்தீர்கள். ரெண்டு வருஷமா அஞ்சு வருஷமா, பத்து வருஷமா... முப்பது வருஷமா உங்களால் அவர்களை ஒழிக்க முடியலன்னு சொன்னா நீங்க என்ன வீரர்கள்... ஆம்பிளைங்களா நீங்கள்?

தோல்விய ஒத்துக்க முடியலேன்னு சொல்லு. ஓகே, ஒத்துக்கறதுக்கு உங்க ஈகோ இடம் கொடுக்கலியா... சரி... நீ என்னதான் செஞ்சிருக்கே... முடியல உன்னால... ஒத்துக்கணும்.

ஏழைகள் பாதிக்கப்பட்டால்...!

இனொன்னு புரிஞ்சுக்கணும்... இலங்கை மட்டுமல்ல... எந்த நாடாக இருந்தாலும், ஏழை மக்கள், பாமர மக்கள், அப்பாவி மக்கள், குழந்தைகள், பெண்கள், முதியோர் அவர்களின் வேதனை... அந்த காற்று பட்டாலும் கூட அந்த நாடு உருப்படாது. எந்த நாடகாட்டும், சாமானிய ஜனங்க பாதிக்கப்படக் கூடாது. எந்த நாடாக இருந்தாலும் சரி... எந்த விதத்திலயும் அப்பாவி மக்கள் பாதிக்கப்படக் கூடாது. அந்த நாடு உருப்படாது, அவங்க சுவாசக் காற்று பட்டால் கூட அந்த நாடு உருப்படாது.

உங்க நாட்ல பாமர மக்கள், பெண்கள், குழந்தைகள் பல ஆண்டுகளாக உதிரம் சிந்தி மடிகிறார்கள் அந்த பூமியில.

அங்க இருக்கிற பாமர மக்கள் சாகிறாங்க... அவர்களது பிணங்கள் புதைக்கப்படறதா நினைக்கிறீங்களா... கிடையாது... விதைக்கப்படறாங்க.

நீங்க யுத்தத்திதில் அந்த மக்களை எல்லாம் அழிச்சா கூட அந்த விதை உங்களை நிம்மதியா வாழ விடாது. நாளை இந்த விதைகள் மீண்டும் முளைச்சி வந்து உங்களை அழிக்கும் என்பதை புரிஞ்சுக்குங்க.

நான், என்னுடையது என்ற அகங்காரத்தை விட்டுவிட்டு, இறங்கி வந்து எல்லாருக்கும் இணக்கமான ஒரு முடிவை எடுத்து, யுத்தத்தை நிறுத்துங்க. அது உங்களுக்கு நல்லது.
முப்பது ஆண்டுகள் ஆன பிறகு வேணாம்னு சொன்னா அது எப்படி... செத்தவங்க வந்து வாழறவங்களை சும்மா விட்டுடுவாங்களா... முடியாது. அது எப்படி விடுவாங்க.
அந்த இடத்தை அடைஞ்சே தீரணும். இதை இலங்கை அரசு புரிஞ்சிக்கணும். புரிஞ்சி நடந்துக்கணும். அப்படி புரிஞ்சிக்கலேன்னா... பெரிய நாடுகள் இலங்கை அரசுக்கு இதைப் புரிய வைக்கணும் என்றார் ரஜினிகாந்த்.

ரூ.10 லட்சம் உதவி!

பின்னர் இலங்கைத் தமிழர் துயர் துடைப்பு நிதியாக தன் பங்குக்கு ரூ.10 லட்சத்தை வழங்குவதாக அறிவித்தவர், உடனடியாக அதற்கான காசோலையை சரத்குமாரிடம் வழங்கினார்.
http://www.envazhi.com

No comments: