Monday, November 24, 2008

மனசாட்சியை அடகு வைத்த மாறன் பிரதர்ஸ்!

நெய்க்கு தொன்னை ஆதாரமா... தொன்னைக்கு நெய் ஆதாரமா?

இந்த சாதாரண கேள்விக்குக் கூட விடை தெரியாத சின்னப் புள்ளத்தனத்துடன் சன் நிர்வாகிகளான கலாநிதி, தயாநிதி மாறன்கள் நடந்து கொள்ளும் விதம் சிரிப்பைத்தான் தருகிறது.

இன்றைக்கு சன்டிவி வளர்ந்துவிட்டிருக்கலாம். ராஜநாயகம் போன்ற சந்தர்ப்பவாதிகள், பொய்யர்களின் கருத்துக் கணிப்புகளில் முதலிடம் வகிக்கலாம்.

ஆனால் கலைஞரின் நிழல்தான் இந்த மாறன் சன்களையும் அவர்களின் ‘சன்’னையும் முழுக்க முழுக்க காப்பாற்றி வந்துள்ளது, நேற்றுவரை.

ஆனால் இந்த வளர்த்த கடாக்கள் இப்படியெல்லாம் பிரஸ்மீட் வைத்து, திமுகவின் அஸ்திவாரத்தையே கேள்விக்குறியாக்குவார்கள் என்று தெரிந்திருந்தால் நிச்சமாய் அன்றே இந்த 'சன்'னின் கழுத்தை நெறித்திருப்பார் கலைஞர்.

இன்றைக்கு மாறனை ஒரு மக்கள் தலைவனைப்போல் சித்தரிக்க முயல்கின்றன சன் நெட்வொர்க் ஊடக அங்கங்கள். இது எத்தனைப் பெரிய கேலிக் கூத்து.

மக்களை மட்டுமல்ல... மக்கள் மன்றத்தையே சந்திக்க விரும்பாதவர் மாறன் ... சந்திக்கவும் பிடிக்காது அவருக்கு. பெரும்பாலும் ராஜ்யசபா உறுப்பினராகப் போனவர், சிலமுறைதான் நேரடிப் போட்டியில் எம்பியாகியிருக்கிறார். அதுகூட திமுகவுக்கு அமோக ஆதரவிருந்த கால கட்டங்களில், அதுவும் பாதுகாப்பான சென்னைத் தொகுதிகளில்.

மாறன் என்ற ஒரு சாதாரண மனிதர், எம்பி, முன்னாள் மந்திரி என பல உயர்வுகளை அடையக் காரணமாக இருந்தது திமுகவும் கருணாநிதியும்தான். அந்தக் கருணாநிதி ஆட்சியின் தயவில்தான் சன் குழுமம் அசுரத்தனமாய் வளர்ந்து அச்சுறுத்தும் விதத்தில் கிளைபரப்பி நிற்கிறது.

அப்படியானால் மாறனுக்கு திறமையில்லையா எனக் கேட்கலாம். வாய்ப்பு... வாய்ப்புதான் ஒருவனுக்கு முக்கியம். ரஜினி சொல்வது போல சந்தர்ப்பம் சூழ்நிலை முக்கியம்.

மாறனுக்கு கிடைத்தது போல் மாமாக்களும், வாய்ப்புகளும் உங்களுக்கும் எனக்கும் கிடைத்திருந்தால், ஆயிரம் 'கத்தார் சாதனை'களை, கலாநிதிகளை, தயாநிதிகளை நாமும் உருவாக்கியிருப்போம்!

கலைஞரால்தான் சன்னுக்கு லாபமே தவிர, அந்த லாபத்துடன் ஒப்பிடும்போது சன் மூலம் திமுக பெற்ற நன்மைகள் குறைவுதான். அவ்வளவு ஏன்... ஆசியாவின் முதல்நிலை தொழிலதிபராகவும், துடிப்பான இளம் மத்திய மந்திரியாகவும் இந்த பிரதர்ஸுக்கு எப்படி பெயர் வந்தது? சன் மூலமா... தாத்தா கலைஞர் மூலமா...

கட்சியில் எத்தனையோ மூத்த நிர்வாகிகள் பதவிக்குக் காத்திருக்க, எல்லா விமர்சனங்களையும் தாங்கிக் கொண்டு அல்லது உதாசீனப்படுத்திவிட்டு தயாநிதிக்கு எம்பி வாய்ப்புக் கொடுத்து, முதல் ‘அட்டெம்டி’லேயே டிஸ்டிங்ஷன் பெற்றதற்குச் சமமாய் கேபினட் மந்திரி பதவியும் வாங்கிக் கொடுத்த (அதுவும் பத்திரிகைகள் விமர்சிக்கும் அளவு அடம் பிடித்து) கலைஞருக்கு அந்திம காலத்தில் இது தேவைதான்.

அவருக்குப் பிடித்தமான ‘வளர்த்த கடா...’ பாடலுக்கு ரொம்ப அழுத்தமான அர்த்தம் தெரிய வேண்டாமா... அதற்கு இயற்கை ஏற்படுத்திக் கொடுத்த சந்தர்ப்பம் இது!

தீட்டிய மரத்தில் கூர்பார்ப்பது போல, ‘சன்’னுக்கு அறிவாலய வீட்டில் இடமளித்த கலைஞரின் குடும்பத்துக்கே உலை வைக்கப் பார்த்து, வட்டியும் முதலுமாக வாங்கிக் கட்டிக் கொண்டது சன்னின் தவறா, அழகிரியின் தவறா?

அழகிரியோ ஸ்டாலினோ... யாருக்கு செல்வாக்கு இருக்கிறதோ அவர் வந்துவிட்டுப் போகிறார். இவர்களைப் பிரிந்து நின்று அடித்துக் கொள்ளத் தூண்டிவிடும் சகுனி வேலை செய்தது சன்தானே!

முரசொலியில் பிறந்து, அந்த வளாகத்தில் காலம் தள்ளி, அறிவாலயத்தில் அசுர பலம் பெற்ற அந்த ‘சன்’னின் இன்றைய ஏகபோக நிர்வாகிகள் சொல்கிறார்கள், திமுக ஆட்சிக்கு வர பெரிதும் காரணமாக இருந்தது சன்னும் தினகரனும்தானாம்.

அப்படியெனில் மக்களிடம் பொய் சொல்லி திமுகவுக்கு அரியணை கிடைக்கச் செய்தோம் என்கிறார்களா?

நேற்று மழையில் இன்று முளைத்த இந்த மாறன் பிரதர்ஸ்தான், கருணாநிதி என்ற 90 வயதைத் தொடும் தமிழ்க் கிழவனின் அரசியல் வாழ்க்கைக்கு அடித்தளமிட்டதாகக் கூறுகிறார்களா...

ஒரு ஆதரவுக்கு தோளைப் பிடித்து நடந்ததற்கு, அவரது கால்களையே வெட்டிவிட முயலும் இந்த மாறன் பிரதர்ஸ் எவ்வளவு பெரிய சூழ்ச்சியாளர்கள்!

இப்போதாவது புரிகிறதா...சன் டிவியின் அஸ்திவாரம் பொய் மட்டுமே என்று நாம் அடிக்கடி கூறுவதன் காரணம்!

குறிப்பு: இது கலைஞரை ஆதரிப்பதற்கான பதிவன்று. ஒரு பக்கத்துப் பொய் முகத்தை அம்பலப்படுத்த முனைகையில் இன்னொரு தரப்பு நிரபராதிகளாகவே தெரிவார்கள். இங்கே நம் நோக்கம், சன் குழும நிர்வாகிகளின் துரோகத்தை வெளிச்சமிடுவது மட்டுமே.

மற்றபடி கலைஞரின் அரசியல் குறித்து நாட்டுக்கே தெரியும், இதில் நாமென்ன புதிதாகச் சொல்வது!


-இமானுவேல்

http://www.envazhi.com

1 comment:

Anonymous said...

//அவருக்குப் பிடித்தமான ‘வளர்த்த கடா...’ பாடலுக்கு ரொம்ப அழுத்தமான அர்த்தம் தெரிய வேண்டாமா...//
வளர்த்த கடாக்களை பற்றி கலைஞருக்கு Ph.D செய்யக்கூடிய அளவுக்கு தெரியும். அவரை முட்டாத கடாக்களா... இருந்தாலும் இது கலைஞரின் சுபாவம்.
சற்று யோசித்துப் பாருங்கள்.ஜெயலலிதா தினமும் திட்டுவதையும் வசைமாறி பொழிவதையுமே அவர் பொருட்படுத்துவதில்லை. இதுவே மாற்றி யோசித்துப் பாருங்கள். என்னவெல்லாம் பிரளயம் நடக்கும் என்று...