Sunday, November 2, 2008

வன்னிக் காடுகளைத் தொட்ட ரஜினியின் பேச்சு!


லங்கைப் பிரச்சினையில் நல்லவர்கள் அதிகம் பேசுவதில்லை. அதிகம் பேசுபவர்களுக்குப் பின்னால் ஆயிரம் அரசியல் இருக்கிறது...” என்று முன்பொரு பதிவில் குறிட்டிருந்தேன்.
ரஜினியின் ஈழத் தமிழ் ஆதரவுப் பேச்சும் அந்த மக்களுக்காக அவர் செய்துள்ள நிதியுதவியும் அந்த வார்த்தைகளை மெய்ப்பித்துள்ளன.

ரஜினியின் ஈழத் தமிழ் ஆதரவுப் பேச்சு, உலகமெங்கிலும் வசிக்கும் புலம் பெயர்ந்த தமிழர்கள் மற்றும் இலங்கையில் வசிக்கும் தமிழர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதை நமக்கு தனிப்பட்ட முறையில் குவியும் மின்னஞ்சல்கள் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.

தாயகத்தில் உள்ள தமிழர்களுக்கே கூட, ரஜினியின் இந்தப் பேச்சு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

இலங்கை இனப் பிரச்சினையில் ரஜினியின் நிலை என்ன என்று கேட்டும் விமர்சித்தும் வந்த பல அரசியல் தலைவர்களும், ரஜினி எதிர்ப்பாளர்களும், அவரது தீர்க்கமான இந்த நேரிய பேச்சைக் கேட்டு வாயடைத்துப் போய்விட்டார்கள்.

‘இத்தனை தீர்க்கமான சிந்தனை, கூரிய அவதானிப்பு கொண்டவரா இந்த மனிதர்!’ என வியந்து மகிழ்ந்தனர், இந்தப் போராட்டத்துக்கு வாழ்த்துச் சொல்ல பழ நெடுமாறனுடன் வந்திருந்த இரு இலங்கைத் தமிழ் எம்பிக்களும்.

குறிப்பாக விடுதலைப் புலிகளின் பெயரைக் குறிப்பிடாமல், அதே நேரம் ஈழ மக்களுக்காக அவர்கள் நடத்தும் ஆயுதமேந்திய போராட்டத்தின் பின்னால் உள்ள நியாயத்தை தனக்கே உரிய பாணியில் அவர் பேசிய விதம் ‘வன்னிக்காடுகள்’ வரை எதிரொலித்ததாக யாழ்ப்பாணத்தில் உள்ள நமது பத்திரிகையாள நண்பர் (பிரபல நாளிதழின் இலங்கை நிருபர் அவர்) நம்முடன் பகிர்ந்து கொண்டது சிலிர்ப்பைத் தந்தது.

இலங்கையின் ஈழப் பகுதியில் மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படும் மாதத்தின் துவக்க நாள் இன்று. ஒவ்வொரு நினைவு நாளின் போதும், மாவீரர்களின் நினைவிடத்தில் ஈழ விடுதலைப் போராளிகள் கூறும் வார்த்தை, ‘இங்கே இந்த மாவீரர்கள் புதைக்கப்படவில்லை; விதைக்கப்பட்டிருக்கிறார்கள்...’ என்பதே.

அந்த போராளிகளுக்கும், அவர்களை நம்பியுள்ள லட்சோப லட்சம் மக்களுக்கும் ரஜினியின் வார்த்தைகள் மிகுந்த ஆன்ம பலத்தைக் கொடுத்துள்ளதாகக் குறிப்பிட்டார் அந்த இலங்கை நண்பர்.

“ஒரு தெய்வ சகுனமாகவே ரஜினியின் பேச்சு இன்று அமைந்துவிட்டது. இந்தத் தகவல்கள் எட்டியபோது தங்கள் துன்பங்களையும் மறந்து இந்தப் பகுதி மக்கள் சந்தோஷப்பட்டதைக் காண முடிந்தது. அமரர் புரட்சித் தலைவர் எம்ஜிஆருக்குப் பிறகு, இந்த மக்கள் இத்தனை நம்பிக்கையோடு காதுகொடுத்துக் கேட்ட வார்த்தைகள் ரஜினியினுடையவைதான். நீங்கள் அடிக்கடி சொல்வதுபோல், ரஜினி நிச்சயம் இனி உலக சூப்பர்ஸ்டார் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. இந்த ஆன்ம பலம் இந்த மக்களுக்கு இன்னும் உரத்தையும், பல போர்களைத் தாங்கும் அல்லது வெற்றி கொள்ளும் நெஞ்சுறுதியையும் தரும்...” என்றார் அவர்.

நல்ல மனிதரின் வார்த்தைகளுக்கு மட்டுமே உள்ள சக்தி அது!

சிலர் இப்படிக் கேட்கலாம்:

ரஜின் பேசியதால் மட்டுமே, ராஜபக்சே அரசு திருந்திவிடப் போகிறதா... அந்த மக்களுக்கு விடிவு காலம் பிறந்துவிடுமா... என்று.

நிறவெறிக் கொள்கைக்கு எதிராக, தனக்கு சம்பந்தமே இல்லாத ஆப்பிரிக்க மண்ணில் காந்தியடிகள் முதல் போர்க்குரல் எழுப்பியபோது அவரை நோக்கி அந்நாட்டு காவல் துறைத் தலைவர் கேட்ட கேள்வி இது. இத்தனைக்கும் அன்று காந்தி மகாத்மாவாக அறியப்பட்டிருக்கவில்லை.

அதற்கு மகாத்மா சொன்ன பதில்: “இந்தக் குரல் ஒரு புள்ளிதான். ஆனால் இந்தப் புள்ளியே பல புள்ளிகளை ஈர்க்கும் மையமாக மாறும். அது இந்த சமுதாயத்துக்கே புதிய ஆன்ம பலத்தைத் தரும். அவர்களது உரிமைகளைப் பெறத் தேவையான போராட்டத்துக்கு மேலும் பலம் சேர்க்கும்”.

ரஜினி உலகறிந்த ஒரு சூப்பர்ஸ்டார். அவரது பேச்சு ஈழ மக்கள் போராட்டத்துக்குக் கிடைத்துள்ள மிகப் பெரிய அங்கீகாரம் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

ஈழ மக்களின் துயரம் பின்னுக்குத் தள்ளப்பட்டு, ரஜினியின் புகழ் பாடப்படுவதாகவும் சிலர் விமர்சிக்கக் கூடும்.

கிடைத்தற்கரிய ஒரு இடத்திலிருந்து மிக இக்கட்டான தருணத்தில் ஒரு ஆதரவு கிடைக்கும்போது, அந்த திருப்பத்துக்குக் காரணமானவர் மீதுதான் அனைவரது பார்வையும் விழும். அதுதான் இயற்கை. அந்த திருப்பமே ஒரு போராட்டத்தின் போக்கை இன்னொரு திசையில் தீவிரப்படுத்துகிறதென்றால், அதற்குக் காரணமானவரைப் புகழ்வதில் என்ன தவறு இருக்கிறது.

சிங்கள ராணுவத்தின் பேடித்தனத்தை இப்படி சம்மட்டியால் அடித்த மாதிரி இன்றுவரை ஒருவரும் கேட்டதில்லை. அதேநேரம் விடுதலைப் புலிகளின் 30 ஆண்டு கால போராட்டங்களின் வெற்றிகளை இத்தனை அழகாக யாரும் அங்கீகரித்ததுமில்லை எனப் பாராட்டுகிறார் பிரபல நாளிதழின் தலைமை நிருபர் மோகன்.

ரஜினியின் பேச்சு குறித்து திருமாவளவன் கூறியதை இங்கே முத்தாய்ப்பாகக் கூறுகிறேன்:

ரஜினி வெறும் நிழல் சூப்பர் ஸ்டார் அல்ல. அவர் நிஜமான துருவ நட்சத்திரம் என்பதை நிரூபித்துவிடார். ஈழ விடுதலைப் போரில் சற்றே அயர்வுற்றுக் கிடக்கும் நெஞ்சங்களையும் தட்டி எழுப்பியுள்ள அருமையான உரை என்றே அதைச் சொல்ல வேண்டும்.

முப்பது ஆண்டுகளாக நடந்த போரில் ஈழப் போராளிகளை சிங்கள ராணுவத்தால் வெல்லவே முடியவில்லை என்பதை, இதுவரை நடந்த எந்த ஆதரவுக் கூட்டத்திலும் யாரும் இவ்வளவு அழுத்தமாகச் சொன்னதில்லை.

இரு இனங்களுக்கு இடையே நடக்கும் ஒரு உரிமைப்போரில் சிறுபான்மைத் தரப்புக்கு கிடைக்கிற வெற்றி அங்கீகரிக்கப்பட வேண்டும். அந்த அங்கீகாரம் இருந்தாலே ஆயிரம் யானை பலம் வந்துவிடும் ஒரு மனிதனுக்கு.

ஒரு மனிதனுக்கே இப்படியென்றால், ஒரு சமூகத்துக்கு? ஈழத் தமிழ் சமுதாயத்துக்கு அப்படியொரு பலத்தைத் தந்துள்ள பேச்சு இது. நாம் சரியான பாதையில்தான் போய்க் கொண்டிருக்கிறோம். நம் தாய் வழிச் சொந்தங்கள் நம் பின்னால் இருக்கிறார்கள் என்ற புத்துணர்வை ஈழ மக்களுக்குத் தந்துள்ள பேச்சு.

அன்பு நண்பர் ரஜினி நீடூழி வாழ்க!, என்றார்.

திருமா மட்டுமல்ல, இன்று லட்சோப லட்சம் தமிழ் மக்கள் சொல்லிக் கொண்டிருக்கும் வார்த்தை இதுவாகத்தான் இருக்கும்!
http://www.envazhi.com

11 comments:

G.Ragavan said...

உண்மையைச் சொல்றேன்... இந்தப் பதிவு நான் நெனைக்கிறத அப்படியே சொல்லுது.

என்னோட வலைப்பூவுல ரஜினி படத்துக்குக் குறுக்கக் கோடு போட்டிருக்கேன். ஆனா.. இந்த முறை அவரது பேச்சு.... மிகவும் சிறப்பானது என்பதிலும் மிகவும் பொருத்தமானது என்பதிலும் மிகவும் தேவையானது என்பதிலும்... மிகவும் ஆற்றல்தருவது என்பதிலும் மறுகருத்தில்லை.

ஆ.ஞானசேகரன் said...

ரொம்ப பெருமையா சொல்ல வேண்டாம், இந்த முறையும் முதிற்சி இல்லாத பேச்சுதான். ரஜினி பேசியது. மேடை பேச்சு என்பது திரைப்பட பஞ்ச் டயலாக் இல்லை நண்பரே.. சற்று யோசித்து பாரும்..காவேரி பிரச்சனை சுதப்பல், ஒக்கனைகல் பிரச்சனை சுதப்பல், குசேலன் மன்னிப்பு சுதப்பல் பொலதான் இதுவும்.... ஆனால் அவரின் நன்கொடை பாராட்டகூடியது.. மெளனம்தான் அவருக்கு வெற்றி.... முடிந்தால் சொல்லியனுப்புங்கள்

இதே மாதிரி நாளைக்கு இலங்கையில் ஒரு சூப்ப்ர் ஸ்டார் காஷ்மீரில் 30 ஆண்டுகளுக்கு மேலாக தனி முழக்கம், சண்டை நடந்துக்கொண்டிருக்கிறது அதனால் இந்தியா தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று சொன்னால், ரஜினியின் பதில் என்னவாக இருக்கும் ?
மேலும் http://idlyvadai.blogspot.com/2008/11/blog-post_02.html பார்க்கவும்

கிரி said...

ஈழ தமிழர்கள் பிரச்சனை பற்றி தன் கருத்தை மிக சிறப்பாக பதிவு செய்துள்ளார்.

குறை கண்டு பிடிக்கும் கூட்டம் வழக்கம் போல இதற்கும் ஏதாவது காரணம் தேடும்.

ஆ.ஞானசேகரன் said...

//கிரி said...
ஈழ தமிழர்கள் பிரச்சனை பற்றி தன் கருத்தை மிக சிறப்பாக பதிவு செய்துள்ளார்.

குறை கண்டு பிடிக்கும் கூட்டம் வழக்கம் போல இதற்கும் ஏதாவது காரணம் தேடும்.
//
வணக்கம் கிரி அவர்களே, சிங்கள ராணுவனை ஆம்பளையா? என்ற கேள்வி, முதிற்சியில்லா பேச்சு என்று ஒப்புகொள்வீர்களா?

ஜோசப் பால்ராஜ் said...

//November 2, 2008 5:48 PM
ஆ.ஞானசேகரன் said...
//கிரி said...
ஈழ தமிழர்கள் பிரச்சனை பற்றி தன் கருத்தை மிக சிறப்பாக பதிவு செய்துள்ளார்.

குறை கண்டு பிடிக்கும் கூட்டம் வழக்கம் போல இதற்கும் ஏதாவது காரணம் தேடும்.
//
வணக்கம் கிரி அவர்களே, சிங்கள ராணுவனை ஆம்பளையா? என்ற கேள்வி, முதிற்சியில்லா பேச்சு என்று ஒப்புகொள்வீர்களா? //

உண்மையத்தானே சொல்லியிருக்காரு ரஜினி. அதுல என்னத் தப்பு.

ஜோசப் பால்ராஜ் said...

//ஆ.ஞானசேகரன் said...
//கிரி said...
ஈழ தமிழர்கள் பிரச்சனை பற்றி தன் கருத்தை மிக சிறப்பாக பதிவு செய்துள்ளார்.

குறை கண்டு பிடிக்கும் கூட்டம் வழக்கம் போல இதற்கும் ஏதாவது காரணம் தேடும்.
//
வணக்கம் கிரி அவர்களே, சிங்கள ராணுவனை ஆம்பளையா? என்ற கேள்வி, முதிற்சியில்லா பேச்சு என்று ஒப்புகொள்வீர்களா?//

உண்மையத்தானே சொல்லியிருக்காரு ரஜினி. அதுல என்னத் தப்பு. நல்லாக் கேக்கிறீங்கய்யா.

Anonymous said...

//சிங்கள ராணுவனை ஆம்பளையா? என்ற கேள்வி, முதிற்சியில்லா பேச்சு என்று ஒப்புகொள்வீர்களா?//

தமிழனுக்கு வெட்டிதனமாக உணர்ச்சி வசப்படத் தெரியுமே ஒழிய யோசிக்க தெரியாது. இதைதான் இந்த சினிமாகாரனுகளும் அரசியல்வியாதிகளும் பயன்படுத்தி கொள்கிறார்கள். இப்படி உணர்ச்சிவசப்பட்டு நீ ஆம்பிளையா எனக் கேட்டால் உடனே ராஜபட்சே சண்டையை நிறுத்துவானா என்னா?

உருப்படியாக இந்த சினிமாகாரனுக நிறைய பணவுதவி செய்து தமிழனுகளுக்கு உதவலாம். மொத்த நன்கொடை 47 லடசமாம்.அட பிச்சைகாரனுவளா இவ்வளவுதானா உங்களாள தரமுடியும்? ராமேஸ்வரத்தில உதார் விட்ட வடிவேலு கொடுத்தது 2.5 லட்சம். வடிவேலுவோட ஒருநாள் சம்பளம் இதவிட அதிகம். ரஜினி கொடுத்தது 10 லட்சம்... அடேய் உங்களுகெல்லாம் மனசாட்சியே கிடையாதா?

குட்டிபிசாசு said...

ரஜினி பேசாம இருந்தாத் தான் எல்லாருக்கும் பிடிக்கும் போல, நல்ல எண்ணம்!

//மேலும் http://idlyvadai.blogspot.com/2008/11/blog-post_02.html பார்க்கவும்//

சொந்தமா யோசிங்கப்பா!

கிரி said...

//வணக்கம் கிரி அவர்களே, சிங்கள ராணுவனை ஆம்பளையா? என்ற கேள்வி, முதிற்சியில்லா பேச்சு என்று ஒப்புகொள்வீர்களா?//

வணக்கம் ஞானசேகரன்.

நீங்கள் எந்த அர்த்தத்தில் கேட்கறீர்கள் என்று கூறமுடியுமா?

ரஜினி, ஆம்பிளையா? என்று கேட்டது முதிர்ச்சி இல்லாத பேச்சு என்று கூறுகிறீர்களா?

அல்லது

சிங்களனை பார்த்து கேட்டது முதிர்ச்சி இல்லாத பேச்சு என்று கூறுகிறீர்களா?

என்னுடைய கருத்து அப்பாவி மக்களை கொல்லும் எவரும் முதலில் மனிதனே கிடையாது. எளியோரை வலியோர் வருத்துவது எக்காலத்திலும் ஏற்று கொள்ள முடியாது.

//இதே மாதிரி நாளைக்கு இலங்கையில் ஒரு சூப்ப்ர் ஸ்டார் காஷ்மீரில் 30 ஆண்டுகளுக்கு மேலாக தனி முழக்கம், சண்டை நடந்துக்கொண்டிருக்கிறது அதனால் இந்தியா தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று சொன்னால், ரஜினியின் பதில் என்னவாக இருக்கும் ?//

முதலில் இந்த இரண்டு பிரச்சனையும் ஒப்பிட்டு பேசுவதே தவறு என்பது என் தனிப்பட்ட கருத்து.

//ரொம்ப பெருமையா சொல்ல வேண்டாம், இந்த முறையும் முதிற்சி இல்லாத பேச்சுதான்//

ரஜினி சாதாரணமாக தான் கூறுகிறார், இதை பெரிது படுத்தி பிரச்சனைக்குள்ளாக்குவது ஊடகங்கள் மற்றும் ரஜினி எது பேசினாலும் அதற்க்கு குறை கண்டுபிடித்து பேசுபவர்கள்.

இந்த பதிவு ஈழ தமிழர்கள் பற்றியது, இருந்தாலும் நீங்கள் உங்கள் பின்னூட்டத்தில் குறிப்பிட்டு இருந்ததால் இதை கூறினேன்.

நீங்கள் எதை வைத்து ரஜினியின் பேச்சு முதிர்ச்சி இல்லாத பேச்சு என்று கூறினீர்கள் கூற முடியுமா? நான் ரஜினி ரசிகன் என்பதால் எனக்கு தட்டுப்படவில்லையோ என்னவோ! நீங்கள் கூறுங்கள் தெரிந்து கொள்கிறேன்.

Anonymous said...

புலம் பெயர்ந்த தமிழர்களிடம் சீன் போட்டு வசூலைக் கூட்ட ரஜினி உள்ளிட்ட சினிமாகாரனுவ கண்க்கு போடுறனுவ... அத ஒரு மேட்டருன்னு எடுத்துகிட்டு விவாதிக்கிறீங்க! தமிழன திருத்த முடியாதுப்பா!

கொண்டோடி said...

தலைப்பைத் தவிர கட்டுரைக்கும் வன்னிக்கும் எந்தத் தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை. சிலவேளை யாழ்ப்பாணத்தைத்தான் வன்னி என்கிறாரோ கட்டுரையாளர்?
தாம் நினைப்பதை மக்களிடம் திணிப்பதற்கு வன்னியை மேற்கோளிடுவது இப்போது பல ஆய்வாளரிடம் காணப்படும் போக்கு. 'வன்னி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன, புலிகளுக்கு நெருக்கமானவர்கள் சொன்னார்கள், வன்னி ஆய்வாளரொருவர் சொன்னார்' என்று அள்ளிவிட்டபடி ஆய்வுக்கட்டுரைகள் வந்துகொண்டிருப்பதைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். புலிகள் வியாபார முத்திரையாக மாறிப்போனது ஈழப்போராட்டத்தின் முக்கியமான வீழ்ச்சியே.

எனது பார்வையில் ரஜனியின் பேச்சு முதிர்ச்சியற்றதே தான். அதற்கு ஞானசேகரன் காட்டிய 'நீ ஆம்பிளையாடா' என்ற கேள்வியே போதுமானது. வழமையாக சினிமாப்படத்தில் பேசுவது போன்றேதான் இதுவும். என்னைக் கேட்டால் ஒப்பீட்டளவில் ரஜனி பரவாயில்லை என்பதே உண்மை. மன்சூர் அலிகானின் உணர்வு சரியாயிருக்கலாம். அதைமட்டும் வெளிக்காட்டிப் பேசிவிட்டுப் போவது நன்று. வரலாறு சொல்கிறேன் பேர்வழியென்று சொந்தநாட்டு வரலாறும் தெரியாமல், அண்டைநாட்டு வரலாறும் தெரியாமல் உளறுவதைத் தவிர்த்திருக்கலாம்.

முடிவாக, ரஜனியின் பேச்சு எமக்குச் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்துமென்பது ஓரளவு உண்மைதான். எங்களை ஆதரிப்பவர்களை வரவேற்போம். அதற்காக இப்படி லூசுத்தனமாக கட்டுரையெழுதுவதைத் தவிர்ப்பது நன்று.

இட்லிவடையோ கிறுக்குப் பிடித்தலையும் அனானியோ ஞானசேகரனோ நானோ ரஜனியின் பேச்சில் குறைகாண்பது ஒரே காரணத்தாலன்று, பின்னணிகள் வேறானவை.
================
முடிவாக, இராகவனிடம் ஒரு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். ;-)