ரஜினியை பகிரங்கமாகப் பாராட்டும் ராமதாஸ், அரசியல் பிரவேசம் ரஜினியின் தனிப்பட்ட விஷயம் என்றும், அவர் அரசியலுக்கு வருவதாக அறிவிக்கும்போது அதுபற்றி கருத்து சொல்வேன் என்றும் கூறியுள்ளார்.
ஏற்கெனவே சில வாரமிருமுறைப் பத்திரிகைகளில் ரஜினியைப் பாராட்டிப் பேசியுள்ள ராமதாஸ், இப்போது இணையதளங்களுக்கும் அதே போன்றதொரு பேட்டியை அளித்துள்ளார்.
தமிழகத்தில் அரசியல் கணக்குகள் தலைகீழாக மாறிவரும் சூழலில் ராமதாஸின் ரஜினி ஆதரவுப் பேச்சுகள் பலவிதமாக திரித்துக் கூறப்பட்டாலும், நாம் அதுபற்றிக் கவலைப்பட வேடியதில்லை. அவர்களுக்கான பதிலை ராமதாஸே கூறிவிடுவார்.
ஒரு ரஜினி எதிர்ப்பாளராக மட்டுமே பார்க்கப்பட்டு வந்த ராமதாஸ், தன்னை எதிர்த்து 2004 பொதுத் தேர்தலில் வாக்களிக்கச் சொல்லி பகிரங்கமாகக் குரல் கொடுத்தவர் ரஜினி என்பதையும் தாண்டி அவரைப் பாராட்டியிருப்பது அவரது அரசியல் முதிர்ச்சியைக் காட்டுகிறது.
இன்றைய தட்ஸ்தமிழ் இணையதளத்தில் அவர் அளித்துள்ள பேட்டி தமிழ் மக்களுக்கு ஒரு இனிய அதிர்ச்சி. ஆனால் அரசியலில் எதுவும் எப்போதும் நடக்கலாம் என்ற பொது நியதியை மனதில் கொண்டு தொடர்ந்து படியுங்கள் (ரஜினி பற்றி டாக்டர் கூறியவற்றை மற்றும் இங்கே பிரசுரித்துள்ளோம். முழுமையாகப் படிக்க www.thatstamil.com-ஐக் கிளிக்கவும்!)
ரஜினியைப் பாராட்டுகிறேன்! -டாக்டர் ராமதாசு
-ஷங்கர்
அட... என பலரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது சமீபத்தில் ரஜினி பற்றி பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அளித்து வரும் பேட்டிகள்.
இலங்கைத் தமிழர் பிரச்சினையில் முதல்வர் கருணாநிதி நேர்மையாக நடந்து கொள்ளவில்லை என்றும், நடிகர் ரஜினிக்கு இருக்கும் மன உறுதியும் தைரியமும் கூட கருணாநிதிக்குக் கிடையாது எனவும் சமீபத்தில் கூறியிருந்தார் ராமதாஸ்.
மேலும் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ள எதிர்பார்ப்புகள் குறித்தும் எந்த எதிர்மறைக் கருத்தும் ராமதாஸ் தெரிவிக்கவில்லை.
ரஜினியின் நேர் எதிரியாகக் கருதப்பட்டு வந்த ராமதாஸ் மற்றும் அவரது மகனும் மத்திய அமைச்சருமான டாக்டர் அன்புமணி ஆகியோர் திடீரென ரஜினியைப் பாராட்டத் துவங்கியிருப்பது ஏன்...
இந்தக் கேள்வியை டாக்டர் ராமதாசிடமே கேட்டோம். தட்ஸ்தமிழுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டியில் அதற்கான பதிலைத் தெரிவித்தார் ராமதாஸ்.
பேட்டி விவரம்:
ரஜினிக்கு உங்களிடமிருந்து கிடைத்துள்ள இந்த திடீர் பாராட்டின் பின்னணி என்ன?
இதிலென்ன பெரிய பின்னணி இருக்கிறது... யாரையும் கண்ணை மூடிக் கொண்டு எதிர்க்கும் அரசியலை நான் ஒருபோதும் நடத்தியவனில்லை. நல்ல விஷயங்களை யார் செய்தாலும் பாராட்டுபவன் இந்த ராமதாஸ்.
இலங்கைத் தமிழர் ஆதரவு உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ரஜினி வரமாட்டார் என்றெல்லாம் பலர் சொல்லிக் கொண்டிருந்தபோது பொறுப்புடன் உண்ணாவிரதம் முடியும் வரை இருந்து, மனமார்ந்த ஆதரவைத் தெரிவித்திருந்த ரஜினியைப் பாராட்டியதில் என்ன தவறு இருக்கிறது. ஒரு தமிழன் என்ற முறையில், தமிழர்களுக்கு ஆதரவு எங்கிருந்து கிடைத்தாலும் அதை ஏற்பதில் தவறில்லை என்றே கருதுகிறேன். எனக்கு உண்மையிலேயே ரஜினியின் பேச்சு ஆச்சரியத்தையும், பிரச்சினையை அவர் சரியாகப் புரிந்து கொண்டு பேசியது மகிழ்ச்சியையும் அளித்தது.
போர்க் களத்தில் துன்புற்று அடிபட்டுக் கிடக்கும் தமிழர்கள் அனைவருக்கும் ஒத்தடம் கொடுப்பது போலிருந்த அவரது பேச்சை நான் மட்டுமல்ல, தமிழுணர்வாளர்கள் அனைவருமே வரவேற்கிறார்கள்.
அதேபோல பாமகவின் வேண்டுகோளுக்கிணங்கி திரைப்படங்களில் புகைப்பது, மது அருந்துவது போன்ற காட்சிகளையே நீக்கியிருக்கிறார். இன்றைக்கு உள்ள சின்ன நடிகர்கள் கூட, நீ சொல்லி நாங்க என்ன திருந்தறது என்று கேட்கும் நேரத்தில், இவர் எங்கள் கோரிக்கையை ஏற்றுத்தான் திரைப்படத்தில் அத்தகைய காட்சிகளை வைக்காமல் தவிர்ப்பதாக வெளிப்படையாகக் கூறியது பாமகவின் வெற்றிதானே... நாம் சொன்னதை அவர் மதித்து நடந்து கொண்டார். அதற்கும் திட்ட வேண்டும் என எதிர்பார்க்கிறீர்களா...
ரஜினிக்குள்ள தைரியம் கருணாநிதிக்குக் கூட இல்லை என்று கூறியிருக்கிறீர்களே...?
நான் எதையும் மறைத்துப் பேசவில்லையே... உண்மையில் அன்று ரஜினியின் பேச்சில் இருந்த துணிச்சலும் தெளிவும் ஒரு மாநில முதல்வரான கருணாநிதிக்குக் கூட இல்லை (குறிப்பு: இந்தப் பேட்டி அவர் இரு தினங்களுக்கு முன்பு அளித்தது). இதை இப்போதும் நான் மறுக்கவில்லை.
இலங்கை அரசு தன் தோல்வியை ஒப்புக் கொள்ள வேண்டும் என்று ரஜினி கூறிய விதம் தமிழர்களின் வெற்றியை பிரபலப்படுத்தியிருக்கிறது. இதைக்கூட இங்குள்ள ஆட்சியாளர்கள் சொல்ல பயப்படுகிறார்களே... சிங்கள அரசின் பேடித்தனத்தை தோலுரித்துக் காட்டிவிட்டார் ரஜினி. முதல் முறையாக அவரது நட்சத்திர அந்தஸ்து ஒரு மிகச் சரியான காரணத்துக்காகப் பயன்பட்டிருப்பதில் மகிழ்ச்சியே.
ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்த கருத்துக்கள், அவரது ரசிகர்கள் அவரை அரசியலுக்கு வருமாறு அழைப்பது போன்றவை குறித்து...?
அதில் நான் கருத்து சொல்ல ஒன்றுமில்லையே... அவர்களுக்குள் நடக்கிற பேச்சுக்களை ஒரு பொது நிகழ்வாக்க நான் விரும்பவில்லை. அவர்தான் இப்போதைக்கு விருப்பமில்லை என்று சொல்லிவிட்டாரே... அவர் வரும்போது பார்க்கலாம். ஆனால் குடும்பத்தை, வேலையைப் பாருங்கள் என்று அவரே சொன்ன பிறகும், இந்த இளைஞர்கள் வீணாகப் போவதுதான் என்னைப் போன்றவர்களின் கவலை.
ரஜினி அரசியலுக்கு வருவதாக இருந்தால் வந்து விட்டுப் போகட்டும். அதில் எங்களுக்கென்ன இருக்கிறது. ஆனால் பொதுவாகவே, நடிகர்கள் பின்னால் இந்த நாட்டு இளைஞர்கள் போவதை நாங்கள் தொடர்ந்து எதிர்ப்போம்.
http://www.envazhi.com
No comments:
Post a Comment