Showing posts with label Fans Meet. Show all posts
Showing posts with label Fans Meet. Show all posts

Friday, November 7, 2008

ரஜினிக்கு டாக்டர் ராமதாஸ் பாராட்டு!

லங்கைப் பிரச்சினை மற்றும் ரஜினி – ரசிகர் மன்ற சந்திப்பு குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அளித்து வரும் பேட்டிகள் பெரும் ஆச்சர்யத்தைத் தருவதாக உள்ளன.

ரஜினியை பகிரங்கமாகப் பாராட்டும் ராமதாஸ், அரசியல் பிரவேசம் ரஜினியின் தனிப்பட்ட விஷயம் என்றும், அவர் அரசியலுக்கு வருவதாக அறிவிக்கும்போது அதுபற்றி கருத்து சொல்வேன் என்றும் கூறியுள்ளார்.

ஏற்கெனவே சில வாரமிருமுறைப் பத்திரிகைகளில் ரஜினியைப் பாராட்டிப் பேசியுள்ள ராமதாஸ், இப்போது இணையதளங்களுக்கும் அதே போன்றதொரு பேட்டியை அளித்துள்ளார்.

தமிழகத்தில் அரசியல் கணக்குகள் தலைகீழாக மாறிவரும் சூழலில் ராமதாஸின் ரஜினி ஆதரவுப் பேச்சுகள் பலவிதமாக திரித்துக் கூறப்பட்டாலும், நாம் அதுபற்றிக் கவலைப்பட வேடியதில்லை. அவர்களுக்கான பதிலை ராமதாஸே கூறிவிடுவார்.

ஒரு ரஜினி எதிர்ப்பாளராக மட்டுமே பார்க்கப்பட்டு வந்த ராமதாஸ், தன்னை எதிர்த்து 2004 பொதுத் தேர்தலில் வாக்களிக்கச் சொல்லி பகிரங்கமாகக் குரல் கொடுத்தவர் ரஜினி என்பதையும் தாண்டி அவரைப் பாராட்டியிருப்பது அவரது அரசியல் முதிர்ச்சியைக் காட்டுகிறது.

இன்றைய தட்ஸ்தமிழ் இணையதளத்தில் அவர் அளித்துள்ள பேட்டி தமிழ் மக்களுக்கு ஒரு இனிய அதிர்ச்சி. ஆனால் அரசியலில் எதுவும் எப்போதும் நடக்கலாம் என்ற பொது நியதியை மனதில் கொண்டு தொடர்ந்து படியுங்கள் (ரஜினி பற்றி டாக்டர் கூறியவற்றை மற்றும் இங்கே பிரசுரித்துள்ளோம். முழுமையாகப் படிக்க www.thatstamil.com-ஐக் கிளிக்கவும்!)

ரஜினியைப் பாராட்டுகிறேன்! -டாக்டர் ராமதாசு

-ஷங்கர்

அட... என பலரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது சமீபத்தில் ரஜினி பற்றி பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அளித்து வரும் பேட்டிகள்.

இலங்கைத் தமிழர் பிரச்சினையில் முதல்வர் கருணாநிதி நேர்மையாக நடந்து கொள்ளவில்லை என்றும், நடிகர் ரஜினிக்கு இருக்கும் மன உறுதியும் தைரியமும் கூட கருணாநிதிக்குக் கிடையாது எனவும் சமீபத்தில் கூறியிருந்தார் ராமதாஸ்.

மேலும் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ள எதிர்பார்ப்புகள் குறித்தும் எந்த எதிர்மறைக் கருத்தும் ராமதாஸ் தெரிவிக்கவில்லை.

ரஜினியின் நேர் எதிரியாகக் கருதப்பட்டு வந்த ராமதாஸ் மற்றும் அவரது மகனும் மத்திய அமைச்சருமான டாக்டர் அன்புமணி ஆகியோர் திடீரென ரஜினியைப் பாராட்டத் துவங்கியிருப்பது ஏன்...

இந்தக் கேள்வியை டாக்டர் ராமதாசிடமே கேட்டோம். தட்ஸ்தமிழுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டியில் அதற்கான பதிலைத் தெரிவித்தார் ராமதாஸ்.

பேட்டி விவரம்:

ரஜினிக்கு உங்களிடமிருந்து கிடைத்துள்ள இந்த திடீர் பாராட்டின் பின்னணி என்ன?

இதிலென்ன பெரிய பின்னணி இருக்கிறது... யாரையும் கண்ணை மூடிக் கொண்டு எதிர்க்கும் அரசியலை நான் ஒருபோதும் நடத்தியவனில்லை. நல்ல விஷயங்களை யார் செய்தாலும் பாராட்டுபவன் இந்த ராமதாஸ்.

இலங்கைத் தமிழர் ஆதரவு உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ரஜினி வரமாட்டார் என்றெல்லாம் பலர் சொல்லிக் கொண்டிருந்தபோது பொறுப்புடன் உண்ணாவிரதம் முடியும் வரை இருந்து, மனமார்ந்த ஆதரவைத் தெரிவித்திருந்த ரஜினியைப் பாராட்டியதில் என்ன தவறு இருக்கிறது. ஒரு தமிழன் என்ற முறையில், தமிழர்களுக்கு ஆதரவு எங்கிருந்து கிடைத்தாலும் அதை ஏற்பதில் தவறில்லை என்றே கருதுகிறேன். எனக்கு உண்மையிலேயே ரஜினியின் பேச்சு ஆச்சரியத்தையும், பிரச்சினையை அவர் சரியாகப் புரிந்து கொண்டு பேசியது மகிழ்ச்சியையும் அளித்தது.

போர்க் களத்தில் துன்புற்று அடிபட்டுக் கிடக்கும் தமிழர்கள் அனைவருக்கும் ஒத்தடம் கொடுப்பது போலிருந்த அவரது பேச்சை நான் மட்டுமல்ல, தமிழுணர்வாளர்கள் அனைவருமே வரவேற்கிறார்கள்.

அதேபோல பாமகவின் வேண்டுகோளுக்கிணங்கி திரைப்படங்களில் புகைப்பது, மது அருந்துவது போன்ற காட்சிகளையே நீக்கியிருக்கிறார். இன்றைக்கு உள்ள சின்ன நடிகர்கள் கூட, நீ சொல்லி நாங்க என்ன திருந்தறது என்று கேட்கும் நேரத்தில், இவர் எங்கள் கோரிக்கையை ஏற்றுத்தான் திரைப்படத்தில் அத்தகைய காட்சிகளை வைக்காமல் தவிர்ப்பதாக வெளிப்படையாகக் கூறியது பாமகவின் வெற்றிதானே... நாம் சொன்னதை அவர் மதித்து நடந்து கொண்டார். அதற்கும் திட்ட வேண்டும் என எதிர்பார்க்கிறீர்களா...

ரஜினிக்குள்ள தைரியம் கருணாநிதிக்குக் கூட இல்லை என்று கூறியிருக்கிறீர்களே...?

நான் எதையும் மறைத்துப் பேசவில்லையே... உண்மையில் அன்று ரஜினியின் பேச்சில் இருந்த துணிச்சலும் தெளிவும் ஒரு மாநில முதல்வரான கருணாநிதிக்குக் கூட இல்லை (குறிப்பு: இந்தப் பேட்டி அவர் இரு தினங்களுக்கு முன்பு அளித்தது). இதை இப்போதும் நான் மறுக்கவில்லை.

இலங்கை அரசு தன் தோல்வியை ஒப்புக் கொள்ள வேண்டும் என்று ரஜினி கூறிய விதம் தமிழர்களின் வெற்றியை பிரபலப்படுத்தியிருக்கிறது. இதைக்கூட இங்குள்ள ஆட்சியாளர்கள் சொல்ல பயப்படுகிறார்களே... சிங்கள அரசின் பேடித்தனத்தை தோலுரித்துக் காட்டிவிட்டார் ரஜினி. முதல் முறையாக அவரது நட்சத்திர அந்தஸ்து ஒரு மிகச் சரியான காரணத்துக்காகப் பயன்பட்டிருப்பதில் மகிழ்ச்சியே.


ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்த கருத்துக்கள், அவரது ரசிகர்கள் அவரை அரசியலுக்கு வருமாறு அழைப்பது போன்றவை குறித்து...?

அதில் நான் கருத்து சொல்ல ஒன்றுமில்லையே... அவர்களுக்குள் நடக்கிற பேச்சுக்களை ஒரு பொது நிகழ்வாக்க நான் விரும்பவில்லை. அவர்தான் இப்போதைக்கு விருப்பமில்லை என்று சொல்லிவிட்டாரே... அவர் வரும்போது பார்க்கலாம். ஆனால் குடும்பத்தை, வேலையைப் பாருங்கள் என்று அவரே சொன்ன பிறகும், இந்த இளைஞர்கள் வீணாகப் போவதுதான் என்னைப் போன்றவர்களின் கவலை.

ரஜினி அரசியலுக்கு வருவதாக இருந்தால் வந்து விட்டுப் போகட்டும். அதில் எங்களுக்கென்ன இருக்கிறது. ஆனால் பொதுவாகவே, நடிகர்கள் பின்னால் இந்த நாட்டு இளைஞர்கள் போவதை நாங்கள் தொடர்ந்து எதிர்ப்போம்.

http://www.envazhi.com

நாளையே கட்சி துவங்கினாலும் ரஜினிதான் முதல்வர்! – சோ

சோவுக்கு அறிமுகம் தேவையில்லை. ரஜினி - சோ நட்புக்கும் அப்படியே. நல்லதோ கெட்டதோ எப்போதும் தன் கணிப்பில் பிடிவாதமான உறுதியுடன் இருப்பவர் சோ.

அவர் கூறுவது எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், ரஜினி விஷயத்தில் அவர் கூறும் பல கருத்துக்கள், கணிப்புகள் ஏற்புடையவையே.

ரஜினி தன் ரசிகர்களைச் சந்திக்கிறார் என்ற தகவல் கடந்த 1-ம் தேதி விறுவிறுவென பரவிக் கொண்டிருந்த நேரத்தில் ஒரு பிரபல ஆங்கில நாளிதழ் அவரிடம் அதுகுறித்துக் கருத்துக் கேட்டது.

கொஞ்சமும் யோசிக்காமல் சட்டென்று சோ சொன்ன பதில்:

ரஜினி பற்றி எதுவாக இருந்தாலும் அவரை விட்டுவிடுகிறார்கள். என்னைத்தான் கேட்கிறார்கள். நான் என்ன மாத்தியா சொல்லிவிடப்போகிறேன்... எப்போதும் சொல்வதுதான். ரஜினி நாளைக்கே கட்சி ஆரம்பித்தால் கூட தமிழகத்தின் அடுத்த முதல்வர் அவர்தான், அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை..., என்றார்.

ரசிகர்களுடனான ரஜினியின் சந்திப்பு மற்றும் அதில் அவர் சொன்ன அழுத்தமான பதில்கள் போன்றவை ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் ஒரு பாஸிட்டிவ் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், சோவிடம் அதுகுறித்து கேட்கப்பட்டது.

அடுத்த நொடி பளிச் பளிச்சென்று வந்து விழுந்தன அவரிடமிருந்து கருத்துக்கள்.
ரஜினி வருவாரா வரமாட்டாரா என்ற ஆரூடத்துக்குள் போகாமல், சோ கூறியதை இங்கே அப்படியே தருகிறோம்:

ரஜினி எவ்வளவு தெளிவாக பதில் சொன்னாலும் என்னிடம் ஒரு முறை தெளிவுரை கேட்பதை வழக்கமாக வைத்துக் கொண்டார்கள் போலிருக்கிறது.

என் கருத்தில் மாற்றமில்லை. ரஜினி அரசியலுக்கு எப்போது வரவேண்டும் என்பதை நானோ நீங்களோ முடிவு செய்ய முடியாது. அவர்தான் அதை முடிவு செய்ய வேண்டும். ரஜினி கூறியது போல சந்தர்ப்பம் சூழல் இதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

ஒரு மாநிலமே அவர் பின்னால் நின்று அரசியலுக்கு வாருங்கள் என தூண்டிவிட்டாலும், இன்னும் அவர் காட்டுகிற நிதானம், இந்த ரசிகர் பட்டாளத்தை சரியாக வழிநடத்த வேண்டுமே என்ற அவரது பொறுப்புணர்வு அக்கறை... நாளை பொறுப்புக்கு வந்தால், அந்தக் கடமையை நிறைவேற்றப் போதுமான பயிற்சி தனக்கு வேண்டும் என்ற நினைப்பு... இவரை விட தகுதியான ஒருவர் தமிழ்நாட்டுக்குக் கிடைக்கமாட்டார்.

நான் திரும்பவும் சொல்கிறேன்... இன்று நாட்டுக்குத் தேவை நாணயமான மனிதர்கள், நேர்மையாளர்கள். ரஜினிக்கு மட்டும்தான் இன்று அந்தத் தகுதி இருக்கிறது. எனவே ஆண்டவன் அவருக்கு சீக்கிரம் உத்தரவு கொடுக்கட்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

அவருக்குள் பல திட்டங்கள் இருப்பது போலத்தான் தெரிகிறது. அவரை அவர் வழியில் விட்டுவிடுவதே சிறந்தது, என்றார்.

ரஜினியின் மனம் புரிந்தவர் அல்லவா...

http://www.envazhi.com

Thursday, November 6, 2008

மீடியாவுக்கு ரஜினி தந்த மரியாதை!

மீடியாவைப் பொறுத்தவரை ரஜினி ஒரு செய்திச் சுரங்கம். அவரது படங்களோ காமதேனு. அவரது சராசரி படங்கள் ஒளிபரப்பாகும்போது கூட, சாதாரண நாட்களைவிட ஒன்றரை மடங்கு கூடுதல் பார்வையாளர்கள் கிடைக்கிறார்கள் தமிழ் சேனல்களுக்கு. அதுவே சூப்பர் ஹிட் படமாக இருந்தால் கேட்க வேண்டுமா...

மிகையாகச் சொல்வதாக நினைக்கவேண்டாம், இன்றைக்கு பல பத்திரிக்கைகள் தங்கள் வாசகர்களைத் தக்கவைத்துக் கொள்ள ஏதாவது ஒரு வடிவில் ரஜினியை தலைப்புச் செய்தியாக்குகின்றன.

நாம் முன்பே சொன்னபடி, வாரமிரு முறை இதழ்கள் இரண்டில் கண்டிப்பாக இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை ரஜினி பற்றிய ‘டெஸ்க் ஒர்க்’ கட்டுரை இருந்தே தீர வேண்டும் என்பது கட்டாய உத்தரவாம்.

உண்மையில் வேறு ஒரு நடிகராக இருந்தால், கடந்த சில வருடங்களாகவே மீடியா செய்து வரும் அட்டூழியத்தைச் சகிக்க முடியாமல் விரட்டியடித்திருப்பார்கள். கணக்கில்லாமல் வழக்குத் தொடர்ந்து, பல பத்திரிக்கையாசிரியர்கள், வெளியீட்டாளர் மற்றும் சம்பந்தப்பட்ட நிருபரை கோர்ட்டுக்கும் போலீஸ் ஸ்டேஷனுக்கும் அலைய விட்டிருப்பார்கள்.

ஆனால் ரஜினியோ எப்போதுமே நல்ல மனிதனாக இருப்பதால், ‘பகைவனுக்கும் அருள்வாய் நெஞ்சே...’ என்பதுபோல், அழையா விருந்தாளிகளாக வந்தாலும் பத்திரிக்கையாளர்களுக்கு உரிய மரியாதையை அளிப்பது வழக்கம். அதற்கு சமீபத்திய ரசிகர் மன்ற நிர்வாகிகள் சந்திப்பு ஒரு நல்ல உதாரணம்.

ஆரம்பத்தில் இவர்களை உள்ளே விடலாமா என்பதில் சத்தியநாராயணாவுக்கு நிறைய தயக்கம் இருந்தது. ஆனால் அவருக்கு ரஜினியிடமிருந்து வந்த தெளிவான உத்தரவு, ‘மீடியா பீப்பிள் எல்லாரையும் உள்ளே விடுப்பா!’, என்பதுதான்.

புகைப்படக்காரர்கள் விரும்பிய வரை புகைப்படங்கள் எடுத்துத் தள்ள, வீடியோகிராபர்கள் தங்கள் பங்குக்கு ‘சுட்டுத்’ தள்ளினர்.

இந்தப் பேட்டியை கலைஞர் டிவியும் ஒளிப்பதிவு செய்திருந்தாலும் சில காரணங்களுக்காக அவர்கள் ஒளிபரப்ப யோசித்துக் கொண்டிருக்க, அந்த கேப்பில் புகுந்து விளையாடியது சன். மற்றபடி ரஜினி, இன்னார்தான் ஒளிபரப்பவேண்டும் என எந்தக் கட்டுப்பாடும் விதிக்கவில்லை.
இத்தனைக்கும் இந்த நிகழ்வைப் பதிவு செய்ய நாடு முழுவதிலுமிருந்து பலவேறு தேசிய அளவிலான சேனல்கள் ராகவேந்திரா மண்டபத்துக்குப் படையெடுத்திருந்தன. எவ்வித அழைப்பும் இல்லாமலேயே.

தன்னைக் கடுமையாக குறைகூறும் பல பத்திரிகையாளர்களைப் பற்றி ரஜினி தெரிவித்த கருத்துக்கள் அவரது பக்குவத்தையும் முதிர்ச்சியையும் காட்டுவதாக அமைந்திருந்தது.
குசேலன் விவகாரத்தில் நீங்கள் கேட்டது மன்னிப்பா வருத்தமா... என்ற கேள்விக்கு ரஜினி அளித்த பதில், அவரது உள்மனதைக் காட்டுவதாக அமைந்தன.

சத்தியமா நான் மன்னிப்புக் கேட்கல.. நான் வருத்தம்தான் தெரிவிச்சேன். மன்னிப்புக் கேட்க வேண்டிய அவசியமில்லே. ஆரம்பத்தில மீடியாக்காரங்க புரிஞ்சுக்காம மன்னிப்புக் கேட்டதா எழுதினாலும், பின்னர் உண்மை தெரிஞ்சிக்கிட்டாங்க. சரியா எழுதினாங்க... அவங்கள தப்பு சொல்லக் கூடாது... (ரஜினியின் முழுமையான பதில் இந்நேரம் உங்களுக்கே மனப்பாடமாகிவிட்டிருக்கும்!), என்றார்.

இன்னொரு கேள்வியில், நீங்க குழப்பவாதின்னு பத்திரிகைகளில் படிக்கும்போது ரொம்ப கஷ்டமா இருக்கே தலைவா, என ஒரு ரசிகர் கேட்ட போதும், ரஜினி பத்திரிகையாளர்களுக்கு எதிராக எதும் பேசவில்லை.

பத்திரிகைக்காரங்களை வச்சிக்கிட்டே இப்படி ஒரு கேள்வி கேட்கறீங்களே என சிரித்தவர், அடுத்து சொன்ன பதில் அவர் எவ்வளவு தெளிவானவர் என நிரூபித்தது.

நானும் சில நேரத்துல அப்படித்தானே நடந்துக்கிறேன்... நாம ஒண்ணு நெனச்சுப் பேசுவோம், அதை வேற விதமா புரிஞ்சிக்கிறாங்க. கொஞ்ச நாளைக்கு முன் நான் விட்ட அறிக்கை குழப்பமா இருக்குன்னாங்க. அந்த அறிக்கையை மட்டும் விடாம இருந்திருந்தா நாட்ல எவ்வளவு குழப்பம் வந்திருக்கும்... நான் என்னிக்குமே என் சுயநலத்துக்காக எந்தக் குழப்பமும் ஏற்படுத்தியதில்லை...

தன்னை உணரும் மனிதனே தலைசிறந்த தலைவன் என்பதை ரஜினி நிரூபித்த இடம் இதுதான்.

ரஜினி நினைத்திருந்தால், ‘நான் சொன்னதை மீடியா தவறாக பிரச்சாரம் செய்துவிட்டது..’ என பத்திரிகைகளை போட்டுக் காய்ச்சி எடுத்திருக்கலாம் வெளிப்படையாக. அந்த லட்சணத்தில்தான் இன்றைக்கு பெரும்பாலான பத்திரிகைகளும் பத்திரிகையாளர்களும் ரஜினி விஷயத்தில் நடந்து கொண்டன(ர்).

ஆனால் ஒரு நல்ல ஆட்சியாளர்/தலைவருக்கு அழகு எதிராளியையும் அரவணைத்து, அவருக்கும் அனைத்து நன்மைகளும் கிடைக்கச் செய்வதே.

ரஜினி ஒரு நல்ல தலைவர்!
http://www.envazhi.com

Tuesday, November 4, 2008

‘வாழ்வின் பொன்நாள்...’ – ரஜினி ரசிகர்கள் பரவசம்!

ன்ன பேசுவதென்றே தெரியவில்லை... என் வாழ்நாளில் இப்படியொரு தெளிவான சிந்தனை கொண்ட மனிதரை, கலைஞரை, அற்புதமான தலைவரை நான் பார்த்ததில்லை. என் ஆயுசுக்கும் இந்த மனிதருக்கு ரசிகனாய் இருந்த பெருமை ஒன்றே போதும்...”

-பாண்டிச்சேரி மாநில ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகியின் பரவச வார்த்தை இது.

“இப்பதான் சார் எனக்கு நிம்மதியா இருக்கு. இனி எவனாவது நம்ம தலைவர் பத்தி மூச்சுக் காட்ட முடியுமா.. இதுக்காகத்தான் சார் இத்தனை நாளும் தவம் கிடந்தோம். தலைவர் தன் திட்டப்பட்டி ஆண்டவன் உத்தரவோட வரும்போது வரட்டும். எங்களை நாங்க தயார்படுத்தி வச்சிக்கிறோம்...”

-இது கோவை மாவட்ட நிர்வாகியின் கருத்து.

“தலைவரின் மனசு எங்களுக்குப் புரியாமலில்லை... இந்த உலகத்துக்குப் புரிய வேண்டாமா (ஹை..ஹை!) அதற்காகத்தான் இந்தச் சந்திப்புக்கு இத்தனை பிடிவாதம் காட்டினோம். இப்போது எல்லாமே தெளிவாகிவிட்டது. தலைவர் எங்களுக்கு பதவி, அதிகாரம் எதையும் கொடுக்காவிட்டாலும் கூட, இந்த ஒரு சந்திப்பு மூலம் மட்டுமே எங்களுக்குப் புதிய அந்தஸ்து கிடைத்துவிட்டது. அந்த பவர் ரஜினியைத் தவிர வேறு யாருக்கு உண்டு?”

-இது ரஜினி மன்ற முக்கிய நிர்வாகிகளுள் ஒருவரான ஓம்சேகர்.

“யார் என்ன வேணா சொல்லட்டும். எங்களுக்கு தலைவர்கிட்டேயிருந்து சரியான, தேவையான செய்தி கிடைத்துவிட்டது. இதுபோதும் எங்களுக்கு..” என்கிறார் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக் (ரஜினியின் பூர்வீகம் கிருஷ்ணகிரி என்பதை நினைவூட்டி, ரஜினியின் பாராட்டுப் பெற்றவர்!)

வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு பரவச நிலையில் ராகவேந்திரா கல்யாண மண்டபத்திலிருந்து வெளிவந்த ரசிகர்கள் நம் களப்பணியாளரிடம் பகிர்ந்து கொண்டவற்றில் ஒரு பகுதிதான் இங்கே நீங்கள் படிப்பவை.

இதுநாள் வரை, வருவாரா மாட்டாரா என்ற சந்தேகத்தோடே காலம் தள்ளிய ரசிகர்கள், இந்தச் சந்திப்புக்குப் பின், சந்தேகம் தீர்ந்து மிக ஆழமான, அழுத்தமான நம்பிக்கைகளைச் சுமந்தபடி ஊர் திரும்பியுள்ளனர்.

அதேநேரம், ரஜினி என்ற அப்பழுக்கற்ற மனிதருக்கு, தலைவருக்கு தொண்டராக இருக்க வேண்டுமென்றால் இன்னும் எப்படியெல்லாம் தங்கள் தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற மலைப்பும் இவர்களில் பலருக்கு இப்போதே எழுந்துள்ளதைக் குறிப்பிட்டாக வேண்டும்.

நேர்மை, தொண்டு மனப்பான்மை, நல்ல வழியில் பணம் சம்பாதிக்கத் தேவையான மனப் பக்குவம் இது மூன்றும் தன் ரசிகர்களிடம் இருந்தாக வேண்டும் என்கிறார் ரஜினி. இந்த மனப் பக்குவத்தை தன் ரசிகர்கள் அடைவதற்குத்தான் இந்த இடைவெளியைத் தந்திருப்பதாக ரசிகர்களும் நினைக்கிறார்கள்.

பணம், ஜனம் இரண்டும் ஒரே இடத்தில் இருக்கக் கூடாது. இருந்தால் அங்கே அரசியல் வந்துவிடும் என்ற ரஜினியின் வார்த்தைகளில் பொதிந்துள்ள அர்த்தங்கள் ஆயிரம்.

“எல்லா விஷயத்திலுமே தலைவர் ரொம்ப தீர்க்கமான முடிவோட இருக்காருப்பா... நாமதான் குழப்பத்தோட இருந்திருக்கோம் இத்தனை நாளா... இனி யார், என்ன சொன்னாலும், அதன் அடிப்படையில் தலைவருக்கு நெருக்கடி கொடுக்கும் வேலையை மட்டும் செய்யவே கூடாது... தலைவர் ஒரு ரூட்டு போட்டுக் கொடுத்திட்டார். அதில் போய்கிட்டே இருக்க வேண்டியதுதான்...” என்பதே, இந்த சந்திப்பின் முடிவின் ரசிகர்களின் மனநிலையாக இருந்தது.

ரஜினி சொல்வதுபோல, எதற்கும் நேரம், சூழல் சரியாக அமைய வேண்டாமா?

கள உதவி: கோபி
http://www.envazhi.com