Showing posts with label மீடியா. Show all posts
Showing posts with label மீடியா. Show all posts

Friday, November 14, 2008

ஏன் இந்த புறக்கணிப்பு?

நண்பர்களே...

இந்தப் புறக்கணிப்பு தேவைதானா... இவ்வளவு தீவிமாக, பகிரங்கமாக நம் எதிர்ப்பைக் காட்ட வேண்டுமா என்று நம்மைக் கேட்ட நண்பர்கள் கூட இப்போது, 'விடக்கூடாது. ஒரு கை பார்த்துவிடலாம் இந்த விஷமிகளை!' என்று சொல்லும்அளவுக்கு நாளுக்குநாள் தங்களைத் தரம் தாழ்த்திக் கொண்டு வருகின்றன இந்த பத்திரிகைகள்.

தினமலர் – விகடன் புறக்கணிப்பு குறித்த ரசிகர்கள் மற்றும் ரசிகரல்லாத வாசகர்களிடமிருந்து தொடர்ந்து மின்னஞ்சல்கள் வந்தவண்ணமுள்ளன. இவர்களில் சிலருடைய விவரங்கள் மட்டும் வெளியிடப்பட்டுள்ளன. தொடர்ந்து பின்னூட்டங்கள் மூலமும் ரசிகர்கள் - வாசகர்கள் தங்கள் விபரங்களை வெளியிட்டு வருகின்றனர்.

இவை அனைத்துமே ஒருங்கிணைக்கப்பட்டு நாளைய பதிவில் வெளியிடப்படும். இதற்கென்ற தனி பகுதி ஒன்றும் ஒதுக்கப்படும்.

அடுத்து ஒரு விளக்கம்...

தினமலர் – விகடன் புறக்கணிப்பை பகிரங்கமாகக் கோருவதால் அதுகுறித்து சில மிரட்டல் பாணி மின்னஞ்சல்களும், தொலைபேசி எச்சரிக்கைகளும் நமக்குக் வந்துள்ளன. அவர்களின் விவரமும் தனியாகத் தரப்படும்.

நமது நோக்கம் தெளிவானது. தினமலர்- விகடன் குழுமத்துடன் நமக்கு நேரடி மோதலோ, கொடுக்கல் வாங்கலோ கிடையாது!

யார் சம்பந்தப்பட்ட செய்தியாக இருந்தால் என்ன... நடுநிலையாகக் கொடுக்க வேண்டியதுதானே அவர்களின் கடமை...? ஆனால் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்காக, பல லட்சம் மக்கள் படிக்கும் ஊடகத்தைத் தவறாகப் பயன்படுத்துவதை மட்டுமே நாம் எதிர்க்கிறோம்.

ரஜினி எதிர்ப்புச் செய்திகளை மட்டுமே அவர்கள் பிரதானப்படுத்துகிறார்கள். ரஜினிக்கும் அவரது ரசிகர்களுக்கும் எதிராக கருத்துத் திரிப்புகளை வெளியிடுவதில் மட்டுமே தனி கவனம் செலுத்துகிறார்கள். எனவே ரசிகர்கள் சார்பில் காட்டப்படும் காந்தீய வழியிலான எதிர்ப்பு இது.

இது அவர்கள் போட்டுக்கொடுத்த ரூட்டுதான்!

ரஜினி என்பவர் ஒரு சாதாரண நடிகர் அல்ல... சினிமா என்கிற ஒரு தொழிலையே தீர்மானிக்கிற சக்தியாகத் திகழ்பவர். தன்னால் முடிந்த நல்ல காரியங்களைச் செய்யும் அவர், தன் பின்னால் உள்ள மக்கள் சக்தியை ஒருபோதும் சுயநலத்துக்காகப் பயன்படுத்தாதவர். அத்தகைய மனிதருக்கு எதிராக வேண்டுமென்றே இன துவேஷத்தையும், தனிமனித தாக்குதல்களிலும் இவ்விரு பத்திரிகைகளும் இறங்கியதாலேயே, ரசிகர்களின் கோபத்தைத் திரட்டும் முயற்சியில் இறங்கியுள்ளோம்.

நாடறிந்த ஒரு நல்ல மனிதரையே இந்த அளவு குறிவைத்து, பாரபட்சமாக செய்தி வெளியிடும் இவர்கள் எப்படி பொதுநலத்துடன் செயல்படுவதாக நம்ப முடியும்... சமூக விரோதிகளுக்கும் இந்த நடுநிலையற்ற பத்திரிகைகளுக்கும் என்ன வித்தியாசம்?

ரசிகர்களின் கோபம் மிகச் சக்தி வாய்ந்த ஒரு ஆயுதம் என்பதை இந்த இரு பெரு வியாபாரிகளுமே நன்கு புரிந்தவர்கள் என்பதால் உடனடியாக அவர்களைக் குளிரவைக்கும் முயற்சிகளில் இறங்கக் கூடும்...

பாக்கெட்டை பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள்!!

-என்வழி

Friday, November 7, 2008

விகடன், தினமலர் குழும இதழ்களைப் புறக்கணிப்போம்!

லைவர் மீடியாவுக்குத் தரும் மரியாதையைப் பற்றி பெரிசாக எழுதினீர்களே, அதற்கு அவர்கள் திரும்பக் காட்டும் மரியாதையைப் பார்த்தீர்களா? என நிறையப்பேர் கேட்கிறார்கள்.

ஆனந்த விகடன், ஜூனியர் விகடன், குங்குமம், தினமலர், எக்ஸ்பிரஸ், டைம்ஸ் என பல பத்திரிகைகள் ரஜினி நடத்திய இந்த நேர்மையான ரசிகர் சந்திப்புக்கு உள்ளர்த்தம் கற்பித்து வருகின்றன.

ஆனால் இவர்களில் ரஜினி எதிர்ப்பில் இப்போது மிகவும் தீவிரம் காட்டத் துவங்கியிருப்பது விகடன் குழுமம். இந்த லட்சணத்தில் ரஜினி ரசிகர்களிலேயே கூட நிறையப்பேர் காலிப் பெருங்காய டப்பா விகடனின் நடுநிலைத்தனத்தைக் கட்டிக் கொண்டு அழுகிறார்கள்.

எந்த வித சமூக அக்கறையும், குறைந்தபட்ச தொழில் நேர்மையும் கூட இல்லாத விகடன், எந்திரன் திரைப்படத்தை ஓட்டுவதற்காகத்தான் ரஜினி இந்த சந்திப்பை மேற்கொண்டார் திரும்பத் திரும்ப ஒரே பொய்யை சின்னப்புள்ளத்தனமாக கூவிக் கொண்டிருக்கிறது. அதன் கொடுக்கு ஜூவியிலும் இதே பல்லவிதான்.

பஞ்சமா பாதகர்கள் என தமிழில் உள்ள சொல்லுக்கு புதிய விளக்கமாக விகடன் குழுமம் என்று போட்டுக் கொள்ளலாம்.

இவர்களை இன்னும் எத்தனை முறை திட்டுவது... இவர்களின் திருட்டுத்தனங்களை இன்னும் எத்தனைமுறை அம்பலப்படுத்துவது...

இவர்கள்தான் திருடர்கள் என்று புரிந்துவிட்டதல்லவா... இனி புறக்கணியுங்கள்.

புறக்கணிப்பது முடியாத காரியம் என்று யாரும் சொல்லாதீர்கள். என்ன எழுதினாலும் அதைப் படித்து திட்டவாவது ஒரு கூட்டம் இருக்கிறதே என்ற துணிச்சலில்தான் அவர்கள் ரஜினி என்ற மனிதனின் சமூகப் பொறுப்புணர்வைக் கூட மதிக்காமல் எந்த எல்லைக்கும் போகத் துணிந்திருக்கிறார்கள்.

எப்போது விஜய்காந்த் என்ற அரசியல்’வியாதி’யின் அறிவிக்கப்படாத பிஆர்ஓக்களாக விகடன் குழுமத்தினர் மாறிவிட்டார்களோ, அப்போதே தங்கள் கொஞ்ச நஞ்ச மரியாதையையும் தொலைத்துவிட்டு கேவலமாக நிற்கிறார்கள்.

இலங்கை இனப் பிரச்சினைக்காக உண்ணாவிரதமிருந்த ரஜினி இறுதியில் அனைவரது மனங்களையும் வெல்லும் விதத்தில் நிகழ்த்திய எழுச்சியுரையைக் கேட்டு மேடையிலேயே அவரைக் கைகுலுக்கி தோளில் தட்டி தன் பாராட்டைத் தெரிவித்து, சரணாகதிப் படலத்தை ஆரம்பித்து வைத்தார் சத்யராஜ். இது உலகறிந்தது.

ஆனால் போட்டோ கமெண்ட் எனும் பெயரில் அந்தப் படத்துக்கு ஜூவி கக்கியிருக்கும் விஷம் ஒன்றே போதும், விகடன் குழுமத்தினர் எந்த மாதிரி இழி பிறவிகள் என்பதைப் புரிந்து கொள்ள.

விகடன் இந்த அளவு கதிகலங்கிப் போய் ரஜினிக்கு எதிராக பிதற்றுவதற்கு இன்னொரு காரணம், அவர்கள் இதுவரை கிண்டலடித்து வந்த அனைத்து விஷயங்களையும் ரஜினி ஒரே சந்திப்பில் தவிடு பொடியாக்கி விட்டதுதான்.

ரஜினி குழப்பவாதி

ரஜினி சுயநலவாதி

அரசியல் ஆசை காட்டி ஏமாற்றுகிறார்...

இப்படி விதவிதமான பொய்களை அடுக்கி அட்டைப் படக் கட்டுரைகளாகப் போட்டு, ரஜினி ரசிகர்களில் ஒரு பிரிவினரைச் சுரண்டி வந்தனர் இந்த விஷமிகள்.

ஆனால் ரஜினி ஒரே சந்திப்பில் தனது சமூகத்தையும் பொதுமக்களையும் தெளிய வைத்துவிட்டார். இனி என்ன சொன்னால் ரசிகர்களைச் சுரண்ட முடியும் எனத் தெரியாமல் ஜுர வேகத்தில் பிதற்றிக் கொண்டுள்ளனர்.

இன்னொரு பக்கம், அயோக்கியத்தனத்தில் விகடனுக்கு தான் சற்றும் சளைத்ததல்ல என முழங்கியபடி வரும் பொய்மலர்...தினமலர்.

ஏற்கெனவே மீடியா உலகில் மானங்கெட்ட பத்திரிக்கை என்ற பெயரைச் சம்பாதித்துள்ள இந்த தினமலர் கும்பல் முழுமையாக அழியும் காலம் நெருங்கி வருகிறது. அதற்கான முயற்சிகளை நாம் எடுக்க வேண்டியதில்லை. தினமலர் பார்ட்னர்களே செய்து வருகின்றனர்!

ரசிகர்கள் மனநிலைப் புரிந்து அவ்வப்போது பாராட்டு, அவ்வப்போது விமர்சனம் என காலத்தை பாதுகாப்பாக ஓட்டிக் கொண்டிருக்கின்றன குங்குமம், குமுதம் குழுக்கள்.

ரஜினி சொன்ன குருவும் தேளும் கதையெல்லாம் இந்த சந்தர்ப்பவாதிகளுக்குப் புரியாது.

தேள் கொட்டுகிறதா... பார்த்தவுடனே அடித்துக் கொல்லுங்கள் அதை..!

கடமையைச் செய்; பலனை எதிர்பார் என புதிய வேதம் சொன்னவரின் ரசிகர்கள் கடைப்பிடிக்க வேண்டியது இனி இந்த அதிரடியைத்தான்!

அதை விட்டுவிட்டு சும்மா புலம்பிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை!

-SS

http://www.envazhi.com

Thursday, November 6, 2008

மீடியாவுக்கு ரஜினி தந்த மரியாதை!

மீடியாவைப் பொறுத்தவரை ரஜினி ஒரு செய்திச் சுரங்கம். அவரது படங்களோ காமதேனு. அவரது சராசரி படங்கள் ஒளிபரப்பாகும்போது கூட, சாதாரண நாட்களைவிட ஒன்றரை மடங்கு கூடுதல் பார்வையாளர்கள் கிடைக்கிறார்கள் தமிழ் சேனல்களுக்கு. அதுவே சூப்பர் ஹிட் படமாக இருந்தால் கேட்க வேண்டுமா...

மிகையாகச் சொல்வதாக நினைக்கவேண்டாம், இன்றைக்கு பல பத்திரிக்கைகள் தங்கள் வாசகர்களைத் தக்கவைத்துக் கொள்ள ஏதாவது ஒரு வடிவில் ரஜினியை தலைப்புச் செய்தியாக்குகின்றன.

நாம் முன்பே சொன்னபடி, வாரமிரு முறை இதழ்கள் இரண்டில் கண்டிப்பாக இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை ரஜினி பற்றிய ‘டெஸ்க் ஒர்க்’ கட்டுரை இருந்தே தீர வேண்டும் என்பது கட்டாய உத்தரவாம்.

உண்மையில் வேறு ஒரு நடிகராக இருந்தால், கடந்த சில வருடங்களாகவே மீடியா செய்து வரும் அட்டூழியத்தைச் சகிக்க முடியாமல் விரட்டியடித்திருப்பார்கள். கணக்கில்லாமல் வழக்குத் தொடர்ந்து, பல பத்திரிக்கையாசிரியர்கள், வெளியீட்டாளர் மற்றும் சம்பந்தப்பட்ட நிருபரை கோர்ட்டுக்கும் போலீஸ் ஸ்டேஷனுக்கும் அலைய விட்டிருப்பார்கள்.

ஆனால் ரஜினியோ எப்போதுமே நல்ல மனிதனாக இருப்பதால், ‘பகைவனுக்கும் அருள்வாய் நெஞ்சே...’ என்பதுபோல், அழையா விருந்தாளிகளாக வந்தாலும் பத்திரிக்கையாளர்களுக்கு உரிய மரியாதையை அளிப்பது வழக்கம். அதற்கு சமீபத்திய ரசிகர் மன்ற நிர்வாகிகள் சந்திப்பு ஒரு நல்ல உதாரணம்.

ஆரம்பத்தில் இவர்களை உள்ளே விடலாமா என்பதில் சத்தியநாராயணாவுக்கு நிறைய தயக்கம் இருந்தது. ஆனால் அவருக்கு ரஜினியிடமிருந்து வந்த தெளிவான உத்தரவு, ‘மீடியா பீப்பிள் எல்லாரையும் உள்ளே விடுப்பா!’, என்பதுதான்.

புகைப்படக்காரர்கள் விரும்பிய வரை புகைப்படங்கள் எடுத்துத் தள்ள, வீடியோகிராபர்கள் தங்கள் பங்குக்கு ‘சுட்டுத்’ தள்ளினர்.

இந்தப் பேட்டியை கலைஞர் டிவியும் ஒளிப்பதிவு செய்திருந்தாலும் சில காரணங்களுக்காக அவர்கள் ஒளிபரப்ப யோசித்துக் கொண்டிருக்க, அந்த கேப்பில் புகுந்து விளையாடியது சன். மற்றபடி ரஜினி, இன்னார்தான் ஒளிபரப்பவேண்டும் என எந்தக் கட்டுப்பாடும் விதிக்கவில்லை.
இத்தனைக்கும் இந்த நிகழ்வைப் பதிவு செய்ய நாடு முழுவதிலுமிருந்து பலவேறு தேசிய அளவிலான சேனல்கள் ராகவேந்திரா மண்டபத்துக்குப் படையெடுத்திருந்தன. எவ்வித அழைப்பும் இல்லாமலேயே.

தன்னைக் கடுமையாக குறைகூறும் பல பத்திரிகையாளர்களைப் பற்றி ரஜினி தெரிவித்த கருத்துக்கள் அவரது பக்குவத்தையும் முதிர்ச்சியையும் காட்டுவதாக அமைந்திருந்தது.
குசேலன் விவகாரத்தில் நீங்கள் கேட்டது மன்னிப்பா வருத்தமா... என்ற கேள்விக்கு ரஜினி அளித்த பதில், அவரது உள்மனதைக் காட்டுவதாக அமைந்தன.

சத்தியமா நான் மன்னிப்புக் கேட்கல.. நான் வருத்தம்தான் தெரிவிச்சேன். மன்னிப்புக் கேட்க வேண்டிய அவசியமில்லே. ஆரம்பத்தில மீடியாக்காரங்க புரிஞ்சுக்காம மன்னிப்புக் கேட்டதா எழுதினாலும், பின்னர் உண்மை தெரிஞ்சிக்கிட்டாங்க. சரியா எழுதினாங்க... அவங்கள தப்பு சொல்லக் கூடாது... (ரஜினியின் முழுமையான பதில் இந்நேரம் உங்களுக்கே மனப்பாடமாகிவிட்டிருக்கும்!), என்றார்.

இன்னொரு கேள்வியில், நீங்க குழப்பவாதின்னு பத்திரிகைகளில் படிக்கும்போது ரொம்ப கஷ்டமா இருக்கே தலைவா, என ஒரு ரசிகர் கேட்ட போதும், ரஜினி பத்திரிகையாளர்களுக்கு எதிராக எதும் பேசவில்லை.

பத்திரிகைக்காரங்களை வச்சிக்கிட்டே இப்படி ஒரு கேள்வி கேட்கறீங்களே என சிரித்தவர், அடுத்து சொன்ன பதில் அவர் எவ்வளவு தெளிவானவர் என நிரூபித்தது.

நானும் சில நேரத்துல அப்படித்தானே நடந்துக்கிறேன்... நாம ஒண்ணு நெனச்சுப் பேசுவோம், அதை வேற விதமா புரிஞ்சிக்கிறாங்க. கொஞ்ச நாளைக்கு முன் நான் விட்ட அறிக்கை குழப்பமா இருக்குன்னாங்க. அந்த அறிக்கையை மட்டும் விடாம இருந்திருந்தா நாட்ல எவ்வளவு குழப்பம் வந்திருக்கும்... நான் என்னிக்குமே என் சுயநலத்துக்காக எந்தக் குழப்பமும் ஏற்படுத்தியதில்லை...

தன்னை உணரும் மனிதனே தலைசிறந்த தலைவன் என்பதை ரஜினி நிரூபித்த இடம் இதுதான்.

ரஜினி நினைத்திருந்தால், ‘நான் சொன்னதை மீடியா தவறாக பிரச்சாரம் செய்துவிட்டது..’ என பத்திரிகைகளை போட்டுக் காய்ச்சி எடுத்திருக்கலாம் வெளிப்படையாக. அந்த லட்சணத்தில்தான் இன்றைக்கு பெரும்பாலான பத்திரிகைகளும் பத்திரிகையாளர்களும் ரஜினி விஷயத்தில் நடந்து கொண்டன(ர்).

ஆனால் ஒரு நல்ல ஆட்சியாளர்/தலைவருக்கு அழகு எதிராளியையும் அரவணைத்து, அவருக்கும் அனைத்து நன்மைகளும் கிடைக்கச் செய்வதே.

ரஜினி ஒரு நல்ல தலைவர்!
http://www.envazhi.com