நல்லோர் செல்லுமிடமெல்லாம் அவர்களுக்கும் சிறப்பு, அந்த இடங்களுக்கும் செழிப்பு என்று ஒரு முதுமொழி இருக்கிறது.
ரஜினி என்ற மனிதரை தமிழ்நாடு, கர்நாடாக, மகாராஷ்டிரா என இந்தியர்கள் எல்லைகளுக்குள் சிறை வைக்கத் துடிக்க, அவரோ தனது உதாரண குணங்களால் எல்லைகள் கடந்து புகழ்பெற்றுத் திகழ்கிறார்.
ரஜினியின் வார்த்தைகளுக்குள்ள வீர்யத்தை, சக்தியை சமீப நாட்களாக அவரது விமர்சகர்களும் தெளிவாக உணரத் தலைப்பட்டுள்ளனர்.
ரஜினி சொன்னதும் இலங்கைப் போர் நின்றுவிட்டதா... என்று கேட்கலாம். போர் நிற்காவிட்டாலும், இன்று இலங்கை ராணுவத்தில் கொத்துக் கொத்தாக பிணங்கள் விழுகிறதே, அந்த ஆவேச எதிர்ப்புக்கு உரமாக அமைந்துள்ளன ரஜினியின் வார்த்தைகள். இதை விடுதலைப் புலிகளே அறிவித்துள்ளனர்.
பொதுவாக எந்த அரசியல் தலைவரையும் தனிப்பட்ட முறையில் பாராட்டுவது புலிகளின் வழக்கமல்ல. அமரர் எம்ஜிஆர் மட்டுமே இதில் விதிவிலக்கு.
ஆனால் ரஜினியின் ஈழத் தமிழ் உண்ணாவிரதப் பேச்சுக்கு, தலைவர் பிரபாகரன், அரசியல் பிரிவுத் தலைவர் நடேசன், புலிகளின் ஊடகங்கள் என அனைத்துத் தரப்பிலும் ஒருமித்த பாராட்டு கிடைத்ததே இதற்குச் சான்று. நிச்சயம் ரஜினியின் வார்த்தைகள் போர்முனையில் நிற்கும் ஈழப் புலிகளுக்கு ஒரு உந்து சக்தி.
அதேபோல, ஈழத் தமிழர்களுக்காக தனது பிறந்த நாள் கொண்டாட்டங்களை அவர் ரத்து செய்திருப்பதும் உலகளாவிய தமிழ் நெஞ்சங்களின் காயங்களுக்கு ஒத்தடமாய் அமைந்துள்ளது.
ரஜினியின் இந்த மனிதாபிமானம், நியாயத்துக்காக மட்டுமே, அது எந்தச் சூழலாக இருந்தாலும், குரல் கொடுக்கும் அவரது பண்பு ஆகியவை மற்றவர்களை எந்தளவு கவந்துள்ளன என்பதற்கு இதோ இன்னுமொரு சான்று, பால் தாக்கரே ரஜினியை மராட்டிய மக்களின் உரிமைகளுக்காகக் குரல்கொடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
இது சரியா... தவறா என்பதை நாம் அப்புறம் அலசலாம்.
தென்னாப்பிரிக்க நிறவெறிக்கு எதிராகக் குரல் கொடுத்த காந்தியடிகளை இந்தியாவுக்கு வந்து போராடி சுதந்திரம் பெற்றுத் தாருங்கள் என்று இந்தியத் தலைவர்கள் வருந்தி அழைத்தது வரலாறு.
அதே போல உலகின் புரட்சிக்காரர் எனப்படும் சே குவேராவை, கியூபா மக்களுக்கு சுதந்திரம் பெற்றுத் தந்ததைப் போல எங்களுக்கும் போராடி சுதந்திரம் பெற்றுத் தாருங்கள் என பொலிவியாவும் பிற நாடுகளும் வருந்தி வருந்தி அழைத்ததும் வரலாறுதான்.
உலகில் மிகச் சில மனிதர்களுக்குத்தான், இந்த மாதிரி அபூர்வ அழைப்புகள் மக்களிடமிருந்து நேரடியாக வந்திருக்கின்றன (நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பால் தாக்கரே பின்னால் பெரும் மக்கள் சக்தி இருப்பது உண்மைதானே!)
மராட்டியர்களுக்காக போராட ரஜினிக்கு தாக்கரே அழைப்பு!
மும்பை: தமிழகத்தில் ரஜினிகாந்த்தின் வேலை முடிந்து விட்டது. இலங்கைத் தமிழர்களுக்காக அவர் குரல் கொடுத்ததைப் பாராட்டுகிறோம். இப்போது மராட்டியர்களின் உரிமைக்காக குரல் கொடுக்க ரஜினியை மகாராஷ்டிராவுக்கு வருமாறு அழைக்கிறேன் என்று சிவசேனா தலைவர் பால் தாக்கரே அழைப்பு விடுத்துள்ளார்.
மராட்டியத்தைப் பூர்வீகமாகக் கொண்டு, தமிழகத்தில் பிறந்து, கர்நாடகத்தில் வளர்ந்து, இன்று தமிழகத்தின் உச்ச நட்சத்திரமாகவும், இந்தியாவின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவருமாகவும் திகழும் ரஜினிகாந்த் அரசியல் பக்கம் வரவே தயக்கம் காட்டினாலும், அரசியல்வாதிகள் அவரை விடுவதாக இல்லை.
இந்த நிலையில் இப்போது பால் தாக்கரே, ரஜினியை மராட்டியர்களுக்காகப் போராட மும்பை வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து தனது சாம்னா இதழில் அவர் எழுதியுள்ள தலையங்கத்தில் கூறியிருப்பதாவது...
இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்தும், தமிழர்கள் படும் அவலங்களைக் கண்டித்தும், துயரங்கள், வேதனைகளை மதித்தும் தனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.
இதை நான் வரவேற்கிறேன், ரஜினியைப் பாராட்டுகிறேன். இதை நான் பிராந்தியவாதமாக எடுத்துக் கொள்ளவில்லை. இது முழுமையான தேசியவாதம். இப்படித்தான் இருக்க வேண்டும்.
இலங்கையில் தமிழர்கள் படும் துயரங்களுக்காக ரஜினி காந்த் கவலைப்படுகிறார். அதேபோல இலங்கைத் தமிழர் பிரச்சினையி்ல் தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் அனைவரும் ஓரணியில் உள்ளனர்.
இவர்கள் கட்சி வேறுபாடுகளை மறந்து விட்டு பதவியை ராஜினாமா செய்யப் போவதாகவும் அறிவித்தனர்.
ஆனால் இதேபோன்ற பிரச்சினையை நாங்கள் மகாராஷ்டிராவில் எழுப்பினால் மட்டும், தேசத்தை உடைக்கப் போவதாக குற்றம் சாட்டுகின்றனர். தமிழர்கள் பிரச்சினைக்காக செய்யும்போது யாரும் எதிர்ப்பு தெரிவிப்பது இல்லை. அதுவே மராட்டியர்களின் உரிமைகளுக்காக போராடினால் எங்களை தேசத் துரோகிகள் என்கிறார்கள்.
ரஜினிகாந்த் காவிரி நீர் பிரச்சினைக்காக போராடுகிறார். நாங்கள் மராட்டியர்களுக்கு வேலை வாங்கித் தருவதற்காக போராடுகிறோம். தமிழர்களின் உரிமைகளிலும், மராட்டியர்களின் உரிமைகளிலும் வேறுபாடு உள்ளதா.
மராட்டியம் உருவாக 105 பேர் இன்னுயிர் ஈந்தனர். ஆனால் ரஜினிகாந்த்தைப் போல ஒருவர் இன்னும் மராட்டியத்திற்குக் கிடைக்கவில்லை.
தமிழகத்தில் ரஜினிகாந்த்தின் பணிகள் முடிந்து விட்டன. அவர் மராட்டியத்திற்கு வந்து மராட்டியர்களின் உரிமைக்காக போராட வேண்டும் என்று கூறியுள்ளார் தாக்கரே.
செய்தி: தட்ஸ்தமிழ், தினத்தந்தி
குறிப்பு: தாக்கரே ஒரு பிரிவினைவாதி, சந்தர்ப்பவாதி அவர் பாராட்டைப் பெரிதுபடுத்த வேண்டாம் என்ற கருத்து கொண்டவர்களுக்கு:
இது ஒரு செய்தி. ரஜினியின் வார்த்தைகளுக்குள்ள மதிப்பு, அவரிடமுள்ள நேர்மை அடுத்தவர்களை எப்படியெல்லாம் பாதிக்கிறது என்பதைக் காட்டவே இந்த செய்தியைக் குறிப்பிட்டுள்ளோம்.
அதே நேரம் தாக்கரேயின் அர்த்தமற்ற அமிதாப் எதிர்ப்பு, பிறமாநில மக்கள் மீதான எதிர்ப்பை நாமும் ரசிக்கவில்லை.
http://www.envazhi.com
தள மாற்றங்கள் @ giriblog | Announcement
4 years ago
No comments:
Post a Comment