பொதுவாக திராவிட கட்சிகளில் உள்ள தலைவர்களுக்கு இணையாக பேச்சுத் திறன் கொண்ட தலைவர்கள் தேசிய கட்சிகளான காங்கிரஸ் அல்லது பாஜகவில் இல்லை என்ற ஒரு கருத்து நிலவுகிறது.
யோசித்துப் பார்த்தால் அது உண்மைதான். யதார்த்தமான தேசியக் கட்சிகளின் பால் மக்களுக்கிருந்த ஈடுபாட்டைத் திருப்ப திராவிடக் கட்சிகள் பயன்படுத்திய உத்திகளுள் ஒன்று அலங்கார மேடைப் பேச்சு. ஆனால் தீரர் சத்தியமூர்த்தி, சிஎஸ் போன்ற போன தலைமுறை தலைவர்கள் அழுத்தமான, நாகரிகமான, மறுக்க முடியாத மேடைப் பேச்சுகளை வழங்குவதில் தனித்த திறனுடன் விளங்கினர்.
ஆனால் தமிழ் சினிமாவில் நிலவும் பாகுபாட்டைப் போலவே இவர்களின் பேச்சு ஏ சென்டர்களுக்கு மட்டும்தான் என்றிருந்த்து. ஆனால் அறிஞர் அண்ணா, கலைஜர், மக்கள் திலகம் எம்ஜிஆர் ஆகியோரது பேச்சுக்களே அனைத்துத் தரப்பு மக்களின் மனங்களையும் கொள்ளை கொண்டன.
இன்றைய தலைமுறையில் நல்ல மேடைப்பேச்சுக்கு திமுக பேச்சாளர்களை விட்டால் ஆள் கிடையாது (மோசமான பேச்சுக்கும்தான்!). புரட்சித் தலைவர் காலத்திலாவது பரவாயில்லை, ஆர்எம்வீ, முத்துசாமி, எஸ்டிஎஸ், ஜேப்பியார், நாவலர் என நிறைய தலைகள் இருந்தன. இவர்கள் பேச்சைக் கூட எடுபடாமல் செய்யுமளவுக்கு செல்வாக்கு புரட்சித் தலைவரின் முகத்துக்கு இருந்த்து. ஆனால் இன்றைய அதிமுகவில் அப்படிப்பட்டவர்களை வலை வீசித்தான் தேட வேண்டும்.
காங்கிரஸில் தமிழருவி மணியன், பீட்டர் அல்போன்ஸ் இருவரை விட்டால் நல்ல மேடைப் பேச்சுக்கு ஆளில்லை.
பாஜகவில் மூன்று நல்ல பேச்சாளர்கள் உள்ளனர். நமக்கெல்லாம் நன்கு தெரிந்த நண்பர்கள் திருநாவுக்கரசர், பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் இல கணேசன். இந்த மூவரைத் தவிர நான்காமவர் ஒருவர் உண்டு. அது நம்ம சோ. ஆனால் அவர் எப்போது பாஜவை ஆதரிப்பார், எப்போது காலை வாருவார் என்று அவரது குரு அத்வானிக்கே தெரியாது!
இவர்களை எல்லாம் விட இல கணேசனுக்கு உள்ள சிறப்பு அவரது பேச்சில் இழையோடும் அழுத்தம் திருத்தமான வாதம். எந்தக் கருத்தையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று பேசத் தெரியாத மனிதர் அவர். கட்சிப் பணிக்காகவே தன் இளமையை அர்ப்பணித்துக்கொண்ட கட்டை பிரம்மச்சாரி, நேர்மையான மனிதர்.
பாஜக என்ற கட்சியுடன் நமக்குள்ள முரண்பாடுகளை தள்ளிவிட்டுப் பார்த்தால், இல கணேசன் அபரிமிதமான திறமைகளை உள்ளடக்கிய யதார்த்தமான மனிதர். எல்லாராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய யதார்த்த அம்சங்களைக் கொண்ட நல்ல அரசியல்வாதி அவர்.
‘ஆர்த்தி’ என்ற புதிய ஆன்மீக தொலைக்காட்சி துவக்க விழா இரு தினங்களுக்கு முன் நடந்தது. சிறப்பு விருந்தினர் இல கணேசன்.
அவரது விழா சிறப்புரை மிகவும் அருமையாக, நிறைவாக இருந்தது. இந்த மனிதர் மட்டும் திராவிடக் கட்சிகளில் இருந்திருந்தால்... வைகோவைப் போல அருமையான பேச்சாளராக புகழ்பெற்றிருப்பார்... பரவாயில்லை. காலமிருக்கிறது. ரஜினி என்ற நேரிய மனிதரின் அரசியல் பிரவேசம் பாக்கியிருக்கிறது... பார்க்கலாம்!
தொடக்க விழா நிகழ்ச்சிகளுக்குப் பிறகு பதினைந்து நிமிடங்கள் அவருடன் பேச வாய்ப்புக் கிடைத்தது.
கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளாக நம்மைக் கவனித்து வரும் ஒரு நண்பர் அவர். அந்த உரிமையில் அவரது காரில் ஏறிக் கொள்ளச் சொன்னவர், தொடர்ந்து அரைமணி நேரம் நம்மிடம் பேசினார். அவரது பேச்சிலிருந்து...
(நமது கேள்விகளை விட்டுவிடுவோம்... நேரடியாக அவரது பேச்சுக்குப் போய்விடுவோம்!)
நல்ல மனிதர் ஒருவருக்காக இணையதளம் நடத்துகிறீர்கள், முதலில் வாழ்த்துக்கள். ரஜினிக்கு வெப்சைட் என்ற பேரில் அவரது புகழ் பாடும் வேலை வேண்டாம். அதை ரஜினியே விரும்ப மாட்டார். எனக்குத் தெரியும் நண்பர் ரஜினியைப் பற்றி!
மக்களை... அவரது ரசிகர்களை மேலும் விவரமானவர்களாக மாற்றும் முயற்சியில் இறங்குங்கள்.
கிட்டத்தட்ட ரஜினிக்கு மட்டும் 15க்கும் மேற்பட்ட இணைய தளங்களும், நூறுக்கும் மேற்பட்ட பிளாக்குகளும் இருப்பதாக நண்பர் குருமூர்த்தி என்னிடம் ஒருமுறை சொன்னார். எனக்குத் தெரிந்து உலகில் எந்த நடிகருக்கும் இந்தச் சிறப்பு இல்லை என்றே நினைக்கிறேன். நினைத்தால் பெருமையாக இருக்கிறது.
ஆன்மீகத்தையும், இந்த நாட்டின் கலாச்சாரத்தையும் பாதுகாக்க நினைக்கும் ஒரு உண்மையான இந்தியனுக்கு கிடைத்துள்ள பெருமை இது.
ரஜினியை ஒரு நடிகன் என்றா நினைக்கிறீர்கள். நிச்சயம் இல்லை. அவர் அதற்கும் மேல். அவர் ஒரு அரசியல்வாதி அல்லது சமூக சேவகர் என்ற வட்டத்துக்குள் அடங்குபவரில்லை.
இந்த உலகில் நான் பெரிதும் மதிக்கும் அடல் பிகாரி வாஜ்பாய், லால் கிஷன் அத்வானி ஆகிய பெரிய தலைவர்களின் வரிசையில் ரஜினியை நான் பார்க்கிறேன். உடனே, அவர் பாஜவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இதைச் சொல்வதாக நினைக்க வேண்டாம். நிச்சயம் அப்படியொரு குறுகிய மனப்பான்மை எனக்குக் கிடையாது.
ரஜினி ஒரு அதிசயப்பிறவி. அவர் ஆதரவு அத்வானி போன்ற நல்ல மனிதருக்குக் கிடைத்தால் நல்லதுதான். அப்படி இல்லாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் இந்த இந்திய மக்களுக்கு அவரது சேவை கிடைக்க வேண்டும். அவரைப் போன்ற நல்ல மனிதர் பிறப்பதே அரிது. அப்படி ஒரு அதிசய மனிதரின் வருகைக்காகத்தான் நாடு தவம் கிடக்கிறது.
ஒரு விஷயத்தை யோசித்துப் பாருங்கள்... இன்றைக்கு நாடு இருக்கும் நிலைமயில் எந்த மனிதரையாவது, அரசியலுக்கு வாருங்கள், கட்சி துவங்குங்கள் என மக்கள் அழைக்கிறார்களா... இல்லையே! அந்தப் பெருமையை ரஜினி ஒருவருக்குத்தான் மக்கள் முன் வந்து தருகிறார்கள். வருந்தி வருந்தி அழைக்கிறார்கள். ஆனால் அந்த மனிதரோ, தன்னைப் பக்குவப்படுத்திக் கொள்ள ஒரு யோகியைப் போல தவம் இருக்கிறார்.
ராமாயண, மகாபாரத காலத்து தருமங்களையும் இந்த பாரதத்துக்கு தேவையான கர்ம சிந்தனைகளையும் ஒருங்கே கொண்டவர் நண்பர் ரஜினி. நியாய தர்மத்துக்கு அந்த அளவு முக்கியத்துவம் தருபவர்.
அவர் இடத்தில் வேறு யாரையாவது நினைத்துப் பாருங்கள்.. அவசர கோலகத்தில் ஏதோ ஒரு கட்சி தொடங்கி அல்ப சந்தோஷங்களைப் பார்த்துவிட்டு இந்நேரம் காணமல் போயிருப்பார் அல்லது மோசமான அரசியல்வாதிகள் வரிசையில் இடம் பிடித்திருப்பார்.
வரமாட்டேன்... வரமாட்டேன் என்கிறார். கடைசியில் இவர் வந்துதான் இந்த நாடு நல்ல வழிக்கு திரும்ப வேண்டியிருக்கும் பாருங்கள், என அடிக்கடி சொல்வார் என் நண்பர் குருமூர்த்தி.
அத்வானியின் ஆச்சர்யம்!
சமீபத்தில் சென்னை வந்த அத்வானி அவர்கள் ரஜினியைச் சந்தித்தது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.
அது ஒரு அரசியல்லாத அரசியல் சந்திப்பு! அத்வானி அவர்கள் அத்தனை சீக்கிரம் ஒவுர் வீடு தேடிப் போய்விடமாட்டார். அவர் அந்த அளவு ஈகோ பார்ப்பவர் என்று நினைத்துவிட வேண்டாம். அவருக்கு மனிதர்களைப் பார்த்தவுடன் புரிந்துவிடும் ஒருவர் எவ்வளவு நேர்மையுடன் நடந்து கொள்வார் என்று. ரஜினியைச் சந்தித்துவிட்டு வந்தபின், அவரது மன உறுதி குறித்து மிகுந்த ஆச்சர்யப்பட்டார் அத்வானி. மக்களிடம் இத்தனை வரவேற்பு, அழைப்புகள் இருந்தும் ரஜினி அமைதி காக்கிறார் என்றால் அதற்குப் பின்னால் ஆழ்ந்த அர்த்தம் உள்ளது. இந்த மாதிரி நல்ல மனிதர்களின் நட்புதான் நமக்குத் தேவை; இவரைப் போன்ற மனிதர்கள்தான் இந்திய அரசியலுக்குத் தேவை என்றார். அதையே அவர் பத்திரிகையாளர்களிடமும் தெரிவித்தார்.
இந்த நாட்டின் தவப்புதல்வர்களுள் ஒருவர் ரஜினி. இந்த என் கருத்தில் என்றைக்கும் மாற்றம் இருக்காது, ரஜினி கட்சி ஆரம்பித்து தனி வழி கண்டாலும்...!, என்றார் இல கணேசன்.
இவை ஒப்புக்காக சொல்லப்பட்டவை அல்ல... உள்மனதிலிருந்து வந்த வார்த்தைகள் என்பதை நம்மால் உணர முடிந்தது!
http://www.envazhi.com
தள மாற்றங்கள் @ giriblog | Announcement
4 years ago
1 comment:
இல கணேசன் பாவம் இலவு காத்த கணேசன் ஆக இருக்கிறார். ரஜனி நேரடி அரசியலில் இறங்கி இலவு வெடித்து பஞ்சாய் பறக்கும்போது ஏமாறப்போகிறார்கள் கணேசன் அண்ட் கோ.
Post a Comment