
ஆனால் சமீபத்தில் ஸ்ரீதர் மரணமடைந்தபோது, அவருக்கு நேரில் போய் அஞ்சலி செலுத்த முடியவில்லை ரஜினியால். ஆனால் அடுத்த நாளே ஸ்ரீதரின் குடும்பத்தைச் சந்தித்து ஆறுதல் கூறி, வேண்டிய உதவிகள் செய்வதாய் உறுதியும் அளித்துவிடடு வந்தார். ஆனால் அந்த சமயத்தில் சில நண்பர்கள், ஸ்ரீதருக்கு அஞ்சலி செலுத்த ரஜினி போகவில்லையே என வருத்தப்பட்டிருந்தனர். அவர்களுக்கான பதிலை இப்போது ரஜினி சொல்லியிருக்கிறார்.
சென்னை பிலிம் சேம்பரில் இயக்குநர் ஸ்ரீதருக்கு நேற்று நடந்த நினைவஞ்சலி கூட்டத்தில் பங்கேற்ற ரஜினி பேசியதாவது:
இயக்குநர் ஸ்ரீதர் மரணம் அடைந்தபோது, சில காரணங்களால் நான் நேரில் சென்று அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்த முடியவில்லை. அதற்காக வருத்தப்பட்டேன். மறுநாள் அவருடைய வீட்டுக்குச் சென்று அவருடைய குடும்பத்தினரிடம் துக்கம் விசாரித்தேன்.
அவருடைய டைரக்ஷனில், இளமை ஊஞ்சலாடுகிறது படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தபோது, நான் பல படங்களில் பிஸியாக இருந்தேன். ஸ்ரீதர் சார் படத்தை ஒப்புக் கொள்ள முடியாத சூழ்நிலை. உண்மையிலே ரொம்ப பிஸியாக இருந்தேன். அதனால நடிக்க முடியல என்று அவருடைய உதவியாளரிடம் நான் சொன்னபோது, உங்கள் பதிலை ஸ்ரீதரிடமே போனில் சொல்லி விடுங்கள் என்றார்.
போனை வாங்கிய ஸ்ரீதர் என்னிடம், ஹலோ ரஜினி எப்படி இருக்கீங்க? என்று கேட்டபோது, அவருடைய குரலில் மயங்கி என்னையும் அறியாமல் நடிக்க சம்மதம் சொல்லி விட்டேன்.
அந்த படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது ஒரு நாள் ஸ்ரீதர், கமல்ஹாசனுடன் தனியாகப் பேசிக்கொண்டிருந்தார். அந்த நேரத்துல போகக் கூடாதுன்னு 'கில்டியா பீல்' பண்ணி, ஒதுங்கி நின்னேன். அதன்பிறகு கமல் சிரித்தபடி வந்தார். ஸ்ரீதர் சார் என்ன சொன்னார்? என்று நான் கமலிடம் கேட்டேன்.
'இந்தப் படத்தில் ரஜினிக்கு சீன்களை அதிகப்படுத்தி விட்டேன். அதை ஒரு கதாநாயகன் என்ற முறையில் உங்களிடமும் சொல்ல வேண்டுமல்லவா...' என்று ஸ்ரீதர் சொன்னதாக கமல் என்னிடம் கூறினார். எவ்வளவு நல்ல மனிதர் ஸ்ரீதர்!. அப்போதான் அவர் எவ்ளோ பெரிய மனிதர்ன்னு தெரிஞ்சிகிட்டேன். இந்த நேர்மை எத்தனை பேரிடம் இருக்கும்!!.
அப்படிப்பட்ட ஸ்ரீதர், பிற்காலத்தில் ரொம்ப கஷ்டப்பட்டார். நான், அருணாசலம் படத்தைத் தொடங்கியபோது, அவரையும் ஒரு தயாரிப்பாளராகச் சேர்த்துக் கொள்ள விரும்பினேன். இதை அவரிடம் தெரிவித்தபோது, என்னை ஒரு மாதிரி பார்த்துவிட்டு, 'இதெல்லாம் தேவையில்லை. எனக்கு வேலை கொடு..' என்றார் உரிமையுடன்.
பின்னர், படையப்பா படத்தை ஆரம்பித்தபோது, அதில் அவரை வசனம் எழுதச் சொல்லலாமா? என்று யோசித்தோம். இந்த கலைஞர்களுக்கே ஒரு பிடிவாதம் உண்டு. அவர் வசனம் எழுதி, அதை ஏதாவது ஒரு சூழலில் நாம் திருத்த வேண்டிய நிலை ஏற்பட்டால், அவருடைய மனம் புண்படும் என்பதால் அதையும் பண்ண முடியவில்லை.
ஸ்ரீதர், மிக நல்ல மனிதர். யாருடைய மனதையும் அவர் புண்படுத்தியதில்லை. யாருக்கும் துரோகம் செய்யாதவர். எல்லோருக்கும் நல்லவராக வாழ்ந்தார். அவருக்கு ஏன் கஷ்டம் வந்தது? என்று யோசித்தபோது, சச்சிதானந்த சாமிகள் சொன்னது நினைவுக்கு வந்தது.
நல்லவர்களை ஆண்டவன் நிறைய சோதிப்பது எதனால் என்றால், இந்த ஜென்மத்திலேயே எல்லா கஷ்டங்களையும் அனுபவித்து விடு. அடுத்த ஜென்மத்தில் உனக்கு கஷ்டமே இல்லை என்று ஆண்டவன் தீர்மானிப்பதால்தான்... அப்படி நடக்கிறது. அவருடைய ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன் என்றார் ரஜினி.
http://www.envazhi.com
No comments:
Post a Comment