Sunday, November 2, 2008

ரஜினியைச் சந்திக்க சென்னைக்குப் புறப்பட்ட ரசிகர்கள்!

ஜினி தன் ரசிகர்களைச் சந்திப்பது உறுதியாகிவிட்டது. இதற்கான அதிகார்ப்பூர்வ அழைப்புகளும் மன்ற நிர்வாகிகளுக்கு அனுப்பப்பட்டுவிட்டன. ரசிகர்களில் பலரும் இன்றே சென்னையில் முகாமிடத் துவங்கிவிட்டனர்.

மீடியாவில் ரஜினி - ரசிகர் சந்திப்பு குறித்து சத்யநாராயணாவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இன்று வெளியாகியுள்ளது.

அதன் விவரம் (தினத்தந்தி மற்றும் தட்ஸ்தமிழ்):

ரசிகர்களை நாளை சந்திக்கிறார் ரஜினி!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நாளை – திங்கள்கிழமை- காலை தனது ரசிகர்களைச் சந்தித்துப் பேசுகிறார்.

தங்கள் தலைவர் ரஜினியைச் சந்திக்க வேண்டும், தங்களது உணர்வுகளை அவருக்குத் தெரிவிக்க வேண்டும் என ரஜினி ரசிகர்கள் பல மாதங்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
மேலும் தனியாக அரசியல் கட்சி தொடங்கும்படி வற்புறுத்தி வருகிறார்கள். ஆனால் இதுவரை அவர், அரசியல் கட்சி தொடங்குவது குறித்து இறுதியான அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.

இந்த நிலையில், கோவையில் அவருடைய ரசிகர்கள் தாங்களாகவே கட்சி தொடங்கி, கொடியும் அறிமுகம் செய்தார்கள்.

எந்திரன் படப்பிடிப்புக்காக கோவா சென்றிருந்த ரஜினிகாந்த், இதையறிந்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் ஒரு அறிக்கை விடுத்தார்.

என் பெயரில் கட்சி, கொடி எதுவும் இருக்கக் கூடாது. ரசிகர்கள் அவரவர் விருப்பப்பட்ட கட்சிகளில் இருக்கலாம். அரசியலுக்கு வரும்படி என்னை யாரும் கட்டாயப்படுத்த முடியாது. நான் அரசியலுக்கு வந்தால், யாராலும் அதை தடுக்க முடியாது. ஒருவேளை அரசியலுக்கு வரும் சூழல் ஏற்பட்டால் அப்போது என் ரசிகர்கள் எங்கிருந்தாலும் அவர்களை என்னோடு அழைத்துக் கொள்வேன், என அந்த அறிக்கையில் கூறியிருந்தார்.

இந்த அறிக்கைக்குப் பிறகு, ரசிகர்கள் பொறுமை காத்தனர். தங்கள் தலைவரை எப்படியும் பார்த்துப் பேச வேண்டும் என்ற கோரிக்கையை மட்டும் விடாமல் வலியுறுத்தி வந்தனர். ரசிகர்களின் ஆர்வத்தை, மன்ற பொறுப்பாளர் சத்யநாராயணா, ரஜினிகாந்திடம் தொடர்ந்து எடுத்துக் கூறி வந்தார்.

அதற்கு இப்போது பலன் கிடைத்திருக்கிறது. ரசிகர்களை சந்தித்துப் பேச சம்மதித்து விட்டார் ரஜினிகாந்த்.

நாளை காலை 10 மணிக்கு சந்திப்பு!

அதன்படி, அவர் நாளை (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில், ரசிகர்களை சந்தித்துப் பேசுகிறார்.
ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் தலா 10 பேர் வீதம் மொத்தம் 320 பேர்களை ரஜினிகாந்த் சந்தித்து, அவர்களின் கருத்துக்களைக் கேட்டறிகிறார். இதற்கான அழைப்புக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

ரசிகர் மன்றங்களின் இன்றைய நிலை, புதிய மன்றங்களுக்கு அனுமதி, அடுத்த கட்ட நடவடிக்கைகள் போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து ரஜினியிடம் தங்கள் கருத்துக்களைச் சொல்லத் தங்களைத் தயார்படுத்திக் கொண்டுள்ளதாக ரஜினி மன்ற நிர்வாகிகள் ஓம் சேகர், ரஜினி கணேசன் போன்றோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த சந்திப்புக்கான விரிவான ஏற்பாடுகளை, ரஜினி ரசிகர் மன்ற தலைவர் சத்யநாராயணா செய்து வருகிறார்.

இதுகுறித்து சத்யநாராயணா கூறியதாவது:

இது அதிகாரப்பூர்வமான அறிவிப்புதான். முதலில் மாவட்டத்துக்கு 7 பேர் வீதம் சந்திப்பதாகக் கூறினார் தலைவர். ஆனால் ரசிகர்களின் அன்பு வேண்டுகோளுக்கிணங்க அதை மறுபரிசீலனை செய்துள்ளார். காலை பத்து மணிக்கு சந்திப்பு தொடங்குகிறது. குறிப்பிட்ட நேரத்துக்குள் தலைவரிடம் தங்கள் உணர்வுகளைச் சொல்ல நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. புகைப்படமும் எடுத்துக் கொள்ளலாம்.

http://www.envazhi.com

1 comment:

Anonymous said...

சூப்பர் ஸ்டாரின் பேச்சு மணதுக்கு ஒரு புதிய எழுச்சியை தந்து இருக்கிறது, தமிழக மக்களையும் ஒரு உலுக்கு உலுக்கி விட்டு இருக்கிறது, ரJஅனியின் சேனை இனி அலை அலையாக போரட்டத்தில் குதிக்கும் என எதிர்பார்க்கலாம். இதுவே அவரது அரசியல் பிரவேசத்துக்கும் உந்து சக்தியாக இருக்கும், போலி அரசியல் வாதிகள் இது கண்டு மிரள போகிறார்கள். தலைவரின் பேச்சில் ஒரு சக்தி பிறக்குது மூச்சினில்.