Sunday, November 9, 2008

இது ஒப்பீடல்ல...!

செய்தி-1: மலப்புரம் அருகே ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மம்முட்டியின் சட்டையை ஆர்வமிகுதியில் பிடித்து இழுத்த ரசிகரை பலர் முன்னிலையில் பளார் என அறைந்தார் மம்முட்டி. (மலையாள மனோரமா, பிப்.13, 2008)

செய்தி-2: தூத்துக்குடி அருகே ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருந்த சரத்குமாரைப் பார்க்க ரசிகர்கள் முண்டியடித்ததில் ஒரு ரசிகரின் கை சரத்குமார் கன்னத்தில் பட்டுவிட்டது. உடனே அவர் காலரைப் பிடித்த சரத், ‘தொலைச்சுப் போடுவேன்...’ என எச்சரித்தார் (தினமணி, ஏப்.12, 2008)

செய்தி-3: திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறப்போன விஜய்காந்த், திடீரென ஆவேசப்பட்டு தன் ரசிகர் ஒருவரை மேடையிலேயே கன்னத்தில் அறைந்தார். இதைக் கண்ட மக்களும், மீடியா பிரதிநிதிகளும் கடும் அதிர்ச்சிக்குள்ளாயினர்.

பின்னர் அன்று மாலை நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தன்னிடம் அறை வாங்கிய நபரை தனது பழைய நண்பர் என்றும், தங்களுக்குள் இது சகஜம் என்றும் அவர் கூறினார் (தினத்தந்தி, ஜூலை. 13, 2008)

செய்தி-4: லண்டனில் உள்ள கலையரங்கம் ஒன்றில் கலை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. ஆயிரக்கணக்கான மலையாள ரசிகர்கள் இதற்காகக் கூடியிருந்தார்கள்.
மலையாள பாடகர் அப்சலுடன் இணைந்து மோகன்லால் பாடல் ஒன்றைப் பாடிக்கொண்டிருந்தார். அப்போது மோகன்லாலைப் பார்த்த பரவசத்தில் ஒரு ரசிகர் மேடையேறி அவர் அருகே சென்றார். ரசித்துப் பாடிக்கொண்டிருந்த மோகன்லால், திடீரென்று தனக்கு அருகில் வந்துவிட்ட ரசிகரைப் பார்த்ததும் ஆத்திரத்துடன் அவரைத் தாக்கினார். மேடையை விட்டு வேகமாக கீழே தள்ளிவிட்டார். அந்த ரசிகர் தரையில் போய் விழுந்தார்.

பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் ஸ்தம்பித்துப் போய்விட்டனர். சில நிமிடங்கள் நிகழ்ச்சி நின்றது. பின்னர் நிகழ்ச்சி தொடர்ந்தது. தாக்கப்பட்ட ரசிகரோ மேடையின் அருகில் அழுதபடியே பரிதாபமாக நின்று கொண்டிருந்தார். கடைசிவரை அவரிடம் ஒரு பேச்சுக்குக் கூட மோகன்லால் சமாதானப்படுத்தவில்லை.

இந்த சம்பவம் மலையாளத் தொலைக்காட்சிகளில் திரும்பத் திரும்ப ஒளிபரப்பானதால் கேரளா முழுக்க அதிர்ச்சி அலை பரவியுள்ளது. இதை பார்த்த மோகன்லால் ரசிகர்களும் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர் (தட்ஸ்தமிழ், நவம்பர்.9, 2008).

-இவை சில சமீபத்திய செய்திகள்.

இதோ இப்போது நீங்கள் படிப்பதும் ஒரு செய்திதான்... ஆனால் வித்தியாசத்தைப் பாருங்கள், பெருமிதம் கொள்ளுங்கள்!

ஆகஸ்ட் 14-ம் தேதி ஐதராபாத்தின் குசேலன் சிறப்புக் காட்சி. பார்த்து முடித்துவிட்டு வெளியில் வந்தால் டிரைவரைக் காணோம். காரைத் திறக்க முடியவில்லை. ரஜினியைப் பார்த்துவிட்ட கூட்டமோ பரவசத்துடன் அவரைத் தொட்டுத் தரிசிக்க நெருக்கியது.

என்னதான் அவரைச் சுற்றி பாதுகாவலர்களும், போலீசாரும் நின்றாலும், மக்கள் வெள்ளத்துக்கு அணைபோட முடியுமா... அவரது சட்டையை, கையைத் தொட்டுப் பார்க்க ஒரு கூட்டம் முண்டியடிக்க, அமைதியாகச் சிரித்தபடி நின்றார் ரஜினி. அனைவருக்கும் கையசைத்தார். சில நிமிடங்களில் பதறியடித்தபடி டிரைவர் ஓடிவந்துவிட்டார். ரஜினி சிரித்தபடி கையாட்டி விடைபெற்றார்.

மேலே தொடருங்கள்...

தன் ரசிகர்ளை வழி நடத்துவதிலும் சரி, அவர்கள் மீது அக்கறை காட்டுவதிலும் சரி ரஜினிக்கு நிகரான நடிகரை திரையுலகில் பார்ப்பது அரிது.

தன்னைப் பார்க்க வரும் ரசிகர்கள் மற்றும் மன்ற நிர்வாகிகளிடம் அவர் பேசும் விதம், அவர்களை பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைக்க அவர் ஏற்பாடு செய்யும் விதம் எல்லாமே, ஒரு பாசமிக்க மூத்த சகோதரனின் நடவடிக்கைகளுக்கு இணையாக இருக்கும்.
அவரைப் பார்க்க போயஸ் கார்டன் சென்ற பல ரசிகர்கள் இந்த அனுபவத்தை ஊரெல்லாம் சொல்லி மகிழ்ந்திருக்கிறார்கள்.

சமீபத்திய ரசிகர் மன்ற நிர்வாகிகள் சந்திப்பின்போது கூட, பேசி முடித்த கையோடு அவர் ரசிகர்களுக்குச் சொன்னது, ‘மதிய உணவு அரேஞ்ச் பண்ணியிருக்கு... சாப்பிட்டுவிட்டு போங்க... பத்திரம்... பத்திரமா வீட்டுக்குப் போங்க!’

தேவையின்றி கூட்டம் சேர்ந்து வேலை தடைபடுவதை மட்டும்தான் ரஜினி விரும்ப மாட்டாரே தவிர, ஒரு போதும் தனக்காகவே கூடும் கூட்டத்தை வெறுத்தவரில்லை. குசேலன் படத்திலேயே அதைத் தெளிவாகச் சொல்லியிருப்பார்.

‘தன் மீது கொண்ட அதீத பாசமே ரசிகர்களை இப்படியெல்லாம் நடந்து கொள்ள வைக்கிறது என்று அவருக்கும் தெரியும். அதனால்தான் அந்த மாதிரி ரசிகர்கள் பக்குவமடைய வேண்டும் என்ற நோக்கில் பல நல்ல விஷயங்களை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார். அவர்கள் பக்குவப்படக் காத்திருக்கிறார்,’ என்கிறார் ரஜினியை பல வருடமாகப்பார்த்து வரும் மூத்த பத்திரிகையாளர் ராதாராஜ்.

பொறுமை, பொறுப்பு இரண்டும் இருந்தால் பெருமைக்குரிய ரசிகனாக சமுதாயத்தில் தலை நிமிர்ந்து வாழலாம் என்பது ரஜினி காட்டியிருக்கும் வழி.

யாரோடும் ரஜினியை ஒப்பிடுவதற்கல்ல இந்தப் பதிவு.

‘எந்திரன் படத்துக்காக ரசிகர்களிடம் நடிக்கும் தந்திரன் ரஜினி’ என சில பாவிகள் செய்யும் பிரச்சாரத்தின் பின்னால் உள்ள அயோக்கியத்தனத்தைப் புரிந்து கொள்ளவே இது!
http://www.envazhi.com

No comments: