Showing posts with label விஜய்காந்த். Show all posts
Showing posts with label விஜய்காந்த். Show all posts

Sunday, November 9, 2008

இது ஒப்பீடல்ல...!

செய்தி-1: மலப்புரம் அருகே ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மம்முட்டியின் சட்டையை ஆர்வமிகுதியில் பிடித்து இழுத்த ரசிகரை பலர் முன்னிலையில் பளார் என அறைந்தார் மம்முட்டி. (மலையாள மனோரமா, பிப்.13, 2008)

செய்தி-2: தூத்துக்குடி அருகே ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருந்த சரத்குமாரைப் பார்க்க ரசிகர்கள் முண்டியடித்ததில் ஒரு ரசிகரின் கை சரத்குமார் கன்னத்தில் பட்டுவிட்டது. உடனே அவர் காலரைப் பிடித்த சரத், ‘தொலைச்சுப் போடுவேன்...’ என எச்சரித்தார் (தினமணி, ஏப்.12, 2008)

செய்தி-3: திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறப்போன விஜய்காந்த், திடீரென ஆவேசப்பட்டு தன் ரசிகர் ஒருவரை மேடையிலேயே கன்னத்தில் அறைந்தார். இதைக் கண்ட மக்களும், மீடியா பிரதிநிதிகளும் கடும் அதிர்ச்சிக்குள்ளாயினர்.

பின்னர் அன்று மாலை நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தன்னிடம் அறை வாங்கிய நபரை தனது பழைய நண்பர் என்றும், தங்களுக்குள் இது சகஜம் என்றும் அவர் கூறினார் (தினத்தந்தி, ஜூலை. 13, 2008)

செய்தி-4: லண்டனில் உள்ள கலையரங்கம் ஒன்றில் கலை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. ஆயிரக்கணக்கான மலையாள ரசிகர்கள் இதற்காகக் கூடியிருந்தார்கள்.
மலையாள பாடகர் அப்சலுடன் இணைந்து மோகன்லால் பாடல் ஒன்றைப் பாடிக்கொண்டிருந்தார். அப்போது மோகன்லாலைப் பார்த்த பரவசத்தில் ஒரு ரசிகர் மேடையேறி அவர் அருகே சென்றார். ரசித்துப் பாடிக்கொண்டிருந்த மோகன்லால், திடீரென்று தனக்கு அருகில் வந்துவிட்ட ரசிகரைப் பார்த்ததும் ஆத்திரத்துடன் அவரைத் தாக்கினார். மேடையை விட்டு வேகமாக கீழே தள்ளிவிட்டார். அந்த ரசிகர் தரையில் போய் விழுந்தார்.

பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் ஸ்தம்பித்துப் போய்விட்டனர். சில நிமிடங்கள் நிகழ்ச்சி நின்றது. பின்னர் நிகழ்ச்சி தொடர்ந்தது. தாக்கப்பட்ட ரசிகரோ மேடையின் அருகில் அழுதபடியே பரிதாபமாக நின்று கொண்டிருந்தார். கடைசிவரை அவரிடம் ஒரு பேச்சுக்குக் கூட மோகன்லால் சமாதானப்படுத்தவில்லை.

இந்த சம்பவம் மலையாளத் தொலைக்காட்சிகளில் திரும்பத் திரும்ப ஒளிபரப்பானதால் கேரளா முழுக்க அதிர்ச்சி அலை பரவியுள்ளது. இதை பார்த்த மோகன்லால் ரசிகர்களும் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர் (தட்ஸ்தமிழ், நவம்பர்.9, 2008).

-இவை சில சமீபத்திய செய்திகள்.

இதோ இப்போது நீங்கள் படிப்பதும் ஒரு செய்திதான்... ஆனால் வித்தியாசத்தைப் பாருங்கள், பெருமிதம் கொள்ளுங்கள்!

ஆகஸ்ட் 14-ம் தேதி ஐதராபாத்தின் குசேலன் சிறப்புக் காட்சி. பார்த்து முடித்துவிட்டு வெளியில் வந்தால் டிரைவரைக் காணோம். காரைத் திறக்க முடியவில்லை. ரஜினியைப் பார்த்துவிட்ட கூட்டமோ பரவசத்துடன் அவரைத் தொட்டுத் தரிசிக்க நெருக்கியது.

என்னதான் அவரைச் சுற்றி பாதுகாவலர்களும், போலீசாரும் நின்றாலும், மக்கள் வெள்ளத்துக்கு அணைபோட முடியுமா... அவரது சட்டையை, கையைத் தொட்டுப் பார்க்க ஒரு கூட்டம் முண்டியடிக்க, அமைதியாகச் சிரித்தபடி நின்றார் ரஜினி. அனைவருக்கும் கையசைத்தார். சில நிமிடங்களில் பதறியடித்தபடி டிரைவர் ஓடிவந்துவிட்டார். ரஜினி சிரித்தபடி கையாட்டி விடைபெற்றார்.

மேலே தொடருங்கள்...

தன் ரசிகர்ளை வழி நடத்துவதிலும் சரி, அவர்கள் மீது அக்கறை காட்டுவதிலும் சரி ரஜினிக்கு நிகரான நடிகரை திரையுலகில் பார்ப்பது அரிது.

தன்னைப் பார்க்க வரும் ரசிகர்கள் மற்றும் மன்ற நிர்வாகிகளிடம் அவர் பேசும் விதம், அவர்களை பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைக்க அவர் ஏற்பாடு செய்யும் விதம் எல்லாமே, ஒரு பாசமிக்க மூத்த சகோதரனின் நடவடிக்கைகளுக்கு இணையாக இருக்கும்.
அவரைப் பார்க்க போயஸ் கார்டன் சென்ற பல ரசிகர்கள் இந்த அனுபவத்தை ஊரெல்லாம் சொல்லி மகிழ்ந்திருக்கிறார்கள்.

சமீபத்திய ரசிகர் மன்ற நிர்வாகிகள் சந்திப்பின்போது கூட, பேசி முடித்த கையோடு அவர் ரசிகர்களுக்குச் சொன்னது, ‘மதிய உணவு அரேஞ்ச் பண்ணியிருக்கு... சாப்பிட்டுவிட்டு போங்க... பத்திரம்... பத்திரமா வீட்டுக்குப் போங்க!’

தேவையின்றி கூட்டம் சேர்ந்து வேலை தடைபடுவதை மட்டும்தான் ரஜினி விரும்ப மாட்டாரே தவிர, ஒரு போதும் தனக்காகவே கூடும் கூட்டத்தை வெறுத்தவரில்லை. குசேலன் படத்திலேயே அதைத் தெளிவாகச் சொல்லியிருப்பார்.

‘தன் மீது கொண்ட அதீத பாசமே ரசிகர்களை இப்படியெல்லாம் நடந்து கொள்ள வைக்கிறது என்று அவருக்கும் தெரியும். அதனால்தான் அந்த மாதிரி ரசிகர்கள் பக்குவமடைய வேண்டும் என்ற நோக்கில் பல நல்ல விஷயங்களை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார். அவர்கள் பக்குவப்படக் காத்திருக்கிறார்,’ என்கிறார் ரஜினியை பல வருடமாகப்பார்த்து வரும் மூத்த பத்திரிகையாளர் ராதாராஜ்.

பொறுமை, பொறுப்பு இரண்டும் இருந்தால் பெருமைக்குரிய ரசிகனாக சமுதாயத்தில் தலை நிமிர்ந்து வாழலாம் என்பது ரஜினி காட்டியிருக்கும் வழி.

யாரோடும் ரஜினியை ஒப்பிடுவதற்கல்ல இந்தப் பதிவு.

‘எந்திரன் படத்துக்காக ரசிகர்களிடம் நடிக்கும் தந்திரன் ரஜினி’ என சில பாவிகள் செய்யும் பிரச்சாரத்தின் பின்னால் உள்ள அயோக்கியத்தனத்தைப் புரிந்து கொள்ளவே இது!
http://www.envazhi.com

Friday, October 31, 2008

இலங்கை விவகாரம்: கேப்'டவுன்'!!

எச்சரிக்கை: இந்தக் கட்டுரை ஈழத் தமிழ் ஆதரவாளர்களுக்கோ, அல்லது போர்முனையில் நிற்கும் புலிகளை ஆதரிப்பவர்களுக்கு எதிரானதோ அல்ல.

ஈழ ஆதரவு விஷயத்தில் நமது நிலைப்பாடு எப்போதும் ஒன்றுதான். இலங்கையில் வசிக்கும் அனைத்து தமிழர்களும் (மலையகத் தமிழர்கள் உள்பட) சம உரிமையுடன், சிங்களர்களுக்கு சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதே.

அதற்கான தீர்வு காந்தீய வழியில் வந்தாலும் சரி, நேதாஜி வழியில் கிடைத்தாலும் சரி, பெரும்பகுதி தாயகத் தமிழர்களைப் போல நமக்கும் சம்மதமே. எந்த முடிவும் தமிழர்களுக்கு சாதகமாகவே அமைய வேண்டும்.

யதார்த்தமாக இலங்கை விவகாரத்தைப் பார்ப்பவர்கள் பெரும்பாலும் இத்தகைய கருத்துக்களையே கொண்டிருப்பதை அறியலாம்.

ஆனால் அரசியல்வாதிகளின் ஆதரவுக்குள் ஆயிரம் கணக்குகள் இருக்கிறது. அப்படி ஒரு கணக்கைத்தான் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.

மற்றபடி இலங்கைப் பிரச்சினையின் உண்மைகள் குறித்து பின்னொரு சமயம் ஒரு தொடர் கட்டுரை எழுதும் விருப்பம் உள்ளது.

ரஜினிக்கு ஆதரவான இந்த தளத்தில் விஜய்காந்துக்கு எதிரான கருத்துக்கள் வருவது சகஜம்தான் என்ற மனநிலையில் உள்ளவர்களை நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை. உண்மையை யாரும் உரத்துச் சொல்லலாம்!

தனித் தமிழீழம் மலரும் வரை நான் பிறந்த நாள் கொண்டாட மாட்டேன் என்று வீர சபதம் எடுத்து, வைராக்கியமாக ‘வாழ்ந்து’ வருபவர் நம்ம விஜய்காந்த். ஈழத் தமிழர் ஆதரவு விவகாரத்தில் இயக்குநர்கள் ஒரு பக்கம் சிறை செல்வதும், நடிகர்கள்
உண்ணாவிரதமிருப்பதுமாக திரையுலகம் பரபரவென இயங்கிக் கொண்டிருக்கையில், மகனுக்கு பிரபாகரன் பெயர் சூட்டி தன் தமிழ்ப் பற்றை பறை சாற்றிக் கொண்டிருந்த விஜய்காந்த் மட்டும் அடக்கி வாசிப்பது ஏனோ?

அரெஸ்ட் பயமா... இல்லை... இல்லவே இல்லை! அரசியல் லாப நோக்கம்தான்!

இது என்ன புதுக்கணக்கு என்கிறீர்களா...

இது புதுசல்ல... பழைய கணக்குதான். என்றைக்கு டெல்லிக்குப் போய் மேலிடப் பிரதிநிதிகளைச் சந்தித்து காங்கிரஸ் கூட்டணிக்கு அச்சாரமிட்டு வந்தாரோ அன்று முதல் விஜய்காந்தின் ஈழப் பற்று ஈனஸ்வரத்தில் கேட்கத் துவங்கியிருப்பதை அரசியல் பாலபாடம் படிப்பவர்களும் கூட உணர முடியும்.

ராமேஸ்வரம் உண்ணாவிரதத்துக்கு வருவதாய் வாக்களித்த விஜய்காந்த் கடைசிவரை அந்தப் பக்கமே எட்டிப் பார்க்காத மர்மமும், இளைஞரணி மாநாடு முடிந்ததிலிருந்தே மந்திரித்துவிட்டவர் போல ஒரு மார்க்கமாய் திரிவதும் இந்த கூட்டணித் தேவைக்காகத்தான்.

இந்த மர்மம் புரிந்த பிறகுதான் கலைஞரும் ‘இந்திய இறையாண்மை மீதான தனது பற்றுத’லைக் காட்ட வேண்டி சில கைதுகளை அரங்கேற்றினார். இருக்கிற கூட்டணியைக் காப்பாற்ற வேண்டிய கடமை அவருக்கு மட்டும் இல்லாமல் போய்விடுமா என்ன?

இப்போது உண்ணாவிரத விவகாரத்துக்கு வருவோம். நாளை உண்ணாவிரதம். முன்பு பிரபாகரனை தனது தலைவராக அறிவித்த கேப்டன், இந்த உண்ணாவிரதத்தின் போது என்ன செய்யப் போகிறார்?

எல்லோரையும் போல சும்மா வந்து போகப்போகிறார். அவ்வளவுதான். இயற்கையாகப் பெய்யும் மழையாக இருந்தாலும் சரி, தன் வீட்டுத் தெருவில் பொங்கி வழியும் சாக்கடையாக இருந்தாலும் சரி, எல்லாவற்றுக்கும் கலைர்ஞர்தான் காரணம் என்று அறிக்கையாய் விட்டுத் தள்ளும் இந்த அரிதார கேப்டன், இலங்கை விவகாரத்தில் மட்டும் தன் நிலைப்பாட்டை பகிரங்கப்படுத்த மறுப்பது மீடியாவுக்கு தெரியாதா...

இந்த திடீர் பதுங்கலை விமர்சித்து முடிந்தால் ஒரு ‘மனம் திறந்த மடல்’ எழுதிப் பார்க்கட்டுமே மீடியா உலக ஜோல்னா பையன்கள்...

தமிழினத்தின் ஏக போக பிரதிநிதிகளாய், தமிழர்களின் ஒட்டுமொத்த மனசாட்சியாய் தங்களைத் தாங்களே சித்தரித்துக் கொள்ளும் அஞ்ஞானிகளுக்கு இப்போது எங்கே போனது அறிவு?

அது சரி... இந்த அரிதார கேப்டனுக்கு பார்ட் டைம் ஆலோசகராகச் செயல்படும் அவர்களிடம் இதையெல்லாம் எதிர்பார்க்க முடியுமா?

ஆனால் இந்த கபட நாடகங்களையெல்லாம் அறியாத தமிழ் மக்கள் செய்தித்தாள்களில் / மீடியாவில் பதிப்பிக்கப்படுகிற அனைத்தையும் நம்பி அல்லது அதன்பால் உணர்ச்சி வசப்பட்டு, இம்மாதிரி நிகழ்களில் கலந்து கொள்ள முடியாத அனைவரையுமே தமிழ்த் துரோகிகளாகவே வரித்துக் கொள்கிறார்கள். அல்லது இந்த அவலங்களைத் தோலுரித்துக் காட்ட முயல்பவர்களையும் இதே பட்டியலில் சேர்த்துக் கொள்கிறார்கள்.

இங்கே நல்லவர்கள் அதிகம் பேசுவதில்லை; அதிகம் பேசுபவர்களின் பின்னணியில் ஆயிரம் அரசியலிருக்கிறது!

இந்த வருட ஈழ ஆதரவு சீஸன் நமக்கு உணர்த்தும் பாடம் இது!


http://www.envazhi.com

Monday, October 20, 2008

தேமுதிக மாநாட்டு ‘சாதனை’!


விஜய்காந்த் ரூ.10 கோடி செலவில் பிரமாண்டமாய் சட்டசபை, நாடாளுமன்ற செட் போட்டு எடுத்த ‘இளைஞர் அணி மாநாடு சினிமா ரிசல்ட்’ என்ன?

வழக்கமாக சினிமாக்காரர்கள், சீசனில் படம் ரிலீஸானதும் ஒரு டயலாக் சொல்வார்கள்:

‘படம் பிரமாதமா இருக்குன்னு தமிழ்நாடே பாராட்டுது சார்...நல்ல கலெக்ஷன். தீபாவளி ரிலீஸ்லயே இந்தப் படம்தான் நம்பர் ஒன்...’
-இப்படி பேட்டி கொடுத்த மூன்றாவது நாளே படம் தியேட்டரைவிட்டு ஓடியிருக்கும்!

இந்த இளைஞரணி 'மாநாடு சினிமாவும்' இந்த லட்சணத்தில்தான் அமைந்தது.

நான் வித்தியாசமானவனாக்கும்... என்று மஞ்சள் கொடியோடு வந்து நின்ற விஜய்காந்த், இன்றைக்கு கழகங்களையே தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு பொய்யிலும் புனை சுருட்டிலும் ஓங்கி நிற்கிறார். பொதுமக்களுக்குத் தொல்லை கொடுப்பதில் இன்றைய தேதிக்கு இவரை அசைச்சுக்க முடியாது!

இவரது தொண்டர்கள் மட்டும் சளைத்தவர்களா... ராவண ராஜ்யத்தில் வானரப் படைகள் நிகழ்த்தியதாகச் சொல்லப்படும் ராமாயணக் காட்சிகள்தான் மனக் கண்ணில் நிற்கின்றன. அப்படியொரு ஆட்டம் போட்டிருக்கிறார்கள் இந்த விஜய்காந்த் சேனைகள், சிங்காரச் சென்னையில்...
ஒரு நபருக்கு 300 ரூபாய் கூலி, டாஸ்மாக் சரக்கு, பிரியாணி கொடுத்து இந்த கொள்கைச் சிங்கங்களைக் கூட்டி வந்திருக்கிறார் அவர்களின் கேப்டன்!

இதுகுறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் தட்ஸ்தமிழ் செய்திகளைப் பாருங்கள்!


தேமுதிக மாநாட்டு சாதனை!

...விஜய்காந்தின் தேமுதிக இளைஞர் அணி மாநாட்டுக்கு திரண்டு வந்திருந்த தொண்டர்கள் குடித்துவிட்டுப் போட்ட பீர் பாட்டில்கள் மற்றும் மதுப் புட்டிகளால் மெரினா கடற்கரையும் அண்ணாசாலை, சிவானந்தா சாலை பகுதிகளும் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

இந்த மாநாட்டுக்கு வந்த தொண்டர்கள் பெரும்பாலும் நல்ல 'மப்'பில் வந்திருந்தனர்.

கையோடு தாங்கள் கொண்டு வந்திருந்து டாஸ்மாக் ஐட்டங்களை நேற்று காலை முதலே அண்ணா சாலை, தீவுத் திடல், மெரினா கடற்கரைப் பகுதிகளில் 'கடை பரப்பி' விட்டனர்.

திறந்த வெளியில் குடித்துவிட்டு காலி மதுப் புட்டிகளையும், பிளாஸ்டிக் குப்பைகளையும் அப்படியே போட்டுவிட்டுச் சென்றதால் சென்னை நகரின் முக்கிய பகுதிகள் நாறிப் போய்விட்டதாக பொதுமக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக குடும்பம் குடும்பமாக சென்னைவாசிகளும், வெளியூர் பயணிகளும் வந்து குவியும் சென்னை மெரினா கடற்கரையில் எங்கும் பீர் பாட்டில்களும், பிளாஸ்டிக் குப்பைகளுமாகக் காட்சி தந்தது மக்களை கடும் அதிருப்திக்குள்ளாக்கியது.

மேலும் மணல் பகுதிகளில் உட்கார முடியாத அளவுக்கு தேமுதிக தொண்டர்கள் அசிங்கம் பண்ணி வைத்திருந்ததும், வார இறுதி நாளான நேற்று மக்களை மெரீனா பக்கம் நெருங்க விடாமல் செய்துவிட்டது.

இதுபோதாதென்று மஞ்சள் சட்டை அணிந்த சில இளைஞர்கள் பெண்களைக் கிண்டல் செய்வதிலும், கடல் அலைகள் கரையைத் தொடும் பகுதியில் நின்றவண்ணம் அலையில் குளிக்கும் பெண்களைக் கிண்டலடித்தும் மக்களின் வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்டனர்.

'தொண்டர்கள் எனும் பெயரில் இவர்கள் செய்திருந்த அசிங்கங்களைச் சுத்தம் செய்ய நியாயமாக சென்னை மாநகராட்சிக்கு பெரிய தொகையை வழங்கியிருக்க வேண்டும் சம்பந்தப்பட்ட கட்சித் தலைவர். அரசியல் கட்சி என்ற பெயரில் இவர்களைப் போன்றவர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள்', என்று அதிருப்தி தெரிவித்தார் இந்த மண்டத்தைச் சேர்ந்த சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர்.
கடற்கரையே இப்படியென்றால் தீவுத்திடல்....?
அங்கு இதை விட பலமடங்கு மோசமான நிலை. இதையும் மாநகராட்சிதான் சுத்தம் செய்தாக வேண்டும்.
இன்னொரு பக்கம் கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக 5 மணி நேரத்துக்கும் மேலாக நடுச் சாலையில் மழையில் அவதிப்பட்டனர் பொதுமக்கள்.
சென்னை போன்ற பெருநகரங்களில் போக்குவரத்துக்கும், மக்களின் அன்றாட வாழ்க்கைக்கும் இடையூறு விளைவிக்கும் இத்தகைய மாநாடுகளை அனுமதிக்கக் கூடாது என பலவேறு மக்கள் நலச் சங்கங்கள் கோரிக்கை விடுத்தும் அரசு கேட்பதாக இல்லை. அதனால்தான் மக்களுக்கு இவ்வளவு தொல்லை!


நெரிசலில் விழிபிதுங்கிய சென்னை!

ஒரு சின்ன மழைக்கே கடும் போக்கு வரத்து நெரிசலில் திணறும் மோசமான உள்கட்டமைப்பு வசதிகள் கொண்டது சென்னை நகரம்.

இதில் அவ்வப்போது மாநாடு, பேரணிகள் என்று அரசியல்வாதிகள் விளையாடுவார்கள். நேற்று விஜய்காந்தின் முறை.

பிற்பகல் அவர் கட்சியின் மாநாடு துவங்குவதற்கு முன் ஆரம்பித்த போக்குவரத்து நெரிசல் நள்ளிரவு தாண்டியும் நீடித்தது.

வார இறுதி, தீபாவளி சீசன், கூடவே இந்த மாநாட்டு கலாட்டக்களும் சேர்ந்து கொண்டதால் கிண்டியிலிருந்து, தி.நகர், பீச், அண்ணாசாலைக்கு சென்ற பலரும் கடும் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக் கொண்டு முன்னேறவும் முடியாமல் பின்செல்லவும் வழியில்லாமல் தவித்தனர்.

பேருந்துகளில் சென்றோர் சாதாரண தூரத்தைக் கடக்கவே பல மணி நேரம் ஆனது. வாகனங்களைத் திருப்பிவிட வழியின்றி போக்குவரத்து போலீசார் மிகவும் திணறிப்போனார்கள்.

கடற்கரை காமராஜர் ரோடு, அண்ணாசாலை போன்ற முக்கிய சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியவில்லை. பொதுமக்கள் பலர் அதிருப்தியுடன் திட்டியபடி வாகனங்களில் பல மணி நேரம் ஊர்ந்து சென்றனர்.


-இதுக்குமேல வித்தியாசமான கட்சிய, தலைவரை உலகத்துல எங்காவது உங்களால காட்ட முடியுமா...!

குறிப்பு: தமிழ்நாட்டில் எந்தக் கட்சித் தொண்டர்கள் குடிக்காமல் இருக்கிறார்கள்... திமுக, அதிமுக, மது ஒழிப்பு மாநாடு நடத்தும் பாமக, காந்தியடிகளைத் தலைவராகப் போட்டுக் கொள்ளும் காங்கிரஸ்... இப்படி எல்லா கட்சித் தொண்டர்களுமே குடிப்பதில் பிஎச்டியே வாங்கியிருக்கும் போது, விஜய்காந்தையும் அவர் கட்சிக்காரர்களையும் மட்டும் குடிகாரர்கள் என திட்டுவது சரியா என பல நண்பர்கள் கருத்து எழுதக் கூடும்.

அப்படி எழுதும் முன், 'நான் வித்தியாசமானவனுங்கோ... எங்க கட்சி வித்தியாசமோ வித்தியாமுங்கோ...' என்றெல்லாம் கவுண்டர் ஸ்டைலில் கூப்பாடு போட்டு வரும் விஜய்காந்தைக் கொஞ்சம் மனக் கண்ணில் நிறுத்திப் பார்க்கவும்.

அதே பதவி வெறி, அதே பணப் பேராசை, அதே துஷ்பிரயோகம், அதே கட்சிகளுடன் கூட்டு... அப்புறம் எதற்கு இந்தக் கருமம் வேறு... ஏற்கெனவே உள்ள கழகங்களே போதுமே!

தெரிந்து கொள்ளுங்கள் இந்த பதவி வெறியரை!

மாமன்னர் அக்பர் ஒரு முறை, ஒரு பெரிய கோட்டை அழிக்காமல் சின்னதாக்கிக் காட்ட முடியுமா என்றார்.

அதற்கு பீர்பால் பதிலேதும் பேசாமல், பெரிய கோட்டுக்குப் பக்கத்திலேயே ஒரு சின்னக் கோடு போட்டு, “மன்னா... இப்போது பெரிய கோடு அழிக்காமலேயே சின்னதாகிவிட்டது. அதேநேரம் சின்னக் கோடு இருப்பதாலேயே பெரிய கோட்டின் மகத்துவமும் புரிகிறதல்லவா...!” என்றாராம்.

இது கதையல்ல...மாமன்னர் அக்பரின் வரலாற்றில் இடம்பெற்றுள்ள சம்பவங்களில் ஒன்று. பரவலாக நீங்களும் கேள்விப்பட்டதும் கூட.

நல்ல மனிதர்களின் புகழை, பெருமையை அவர்களது நலம் விரும்பிகள் மூலம் அல்லாமல் தெரிந்து கொள்வது எப்படி?

சில மோசமான மனிதர்களின் செயல்பாடுகளைத் தொடர்ந்து கவனிப்பதன் மூலம்.
தமிழக மக்களுக்கு, குறிப்பாக வாக்குச் சாவடிகளில் மணிக்கணக்கில் நின்று வாக்களிக்கும் வாக்காளர்களுக்கும் அப்படியொரு சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது.

நல்ல மனிதர்கள் யார் என்பதைத் தாமதமாகக் கூட புரிந்து கொள்ளலாம். ஆனால் கெட்டவர்களை உடனே தெரிந்து கொள்ள வேண்டும்.

அந்த வகையில் தமிழகத்தில் சற்றே எட்டிப்பார்க்கத் துவங்கியிருக்கிற ஒரு தீய சக்தி விஜய்காந்த்!

இதைப் படிக்கும்போது, ‘ரஜினியின் புகழ் பரப்ப தளம் நடத்துபவர்கள் இப்படித்தான் சொல்வார்கள்’ என்று சிலர் முணுமுணுப்பது புரிகிறது.

பரந்து விரிந்த இநத வானத்தின் கீழே நடக்கும் அத்தனை நல்லது கெட்டதுகளையும் என்வழியில் அலச வேண்டும் என்பதே நமது நோக்கம். அதனாலேயே முன்பு விஜய் காந்த் – வடிவேலு சண்டையையும், எந்தளவு கீழ்த்தரமான அரசியல்வாதி விஜய்காந்த் என்பதையும் வெளிச்சம் போட்டுக் காட்டியிருந்தேன்.

இப்போது மாநாடு எனும் பெயரில் மக்களை ஏமாற்றும் வித்தைக்காரன் நாடகத்தை அரங்கேற்றியிருக்கும் இவரின் நிஜமுகத்தை அம்பலப்படுத்துவது அவசியமல்லவா!

இந்த மாநாடு எதற்காக?

சில தனியார் தொழிலதிபர்களின் தயவோடும், மீடியா உலக ஆக்டோபஸாகத் திகழும் சன் குழுமம் ஆதரவோடும் விஜய்காந்த் இப்படியொரு மாநாட்டை சென்னையில் நடத்தக் காரணம் என்ன?

தனக்கு சென்னை மக்களிடம் உள்ள செல்வாக்கைக் காட்டவும், தமிழகம் முழுக்க உள்ள தன் இளைஞர் சேனையை சென்னை மக்களுக்குக் காட்டவும்தான் என்று பத்திரிகையாளர்களிடம் கூறியிருந்தார் விஜய்காந்த்.

உலகத்தில் இப்படியொரு அற்ப காரணத்துக்காக மாநாடு நடத்திய ஒரே நபர் விஜய்காந்தாகத்தான் இருப்பார்.

ஒருவிதத்தில் அவர் அன்று உண்மையைத்தான் பேசியிருக்கிறார்.

இந்த மாநாட்டை இப்போது நடத்த ஒரு காரணமும் இல்லை. இலங்கைத் தமிழர் பிரச்சினையைக் கண்டித்து எல்லோரும் கறுப்பு பேட்ஜ் குத்திக் கொள்ளுங்கள் என்று சொல்லவா ரூ.10 கோடி செலவில் இப்படியொரு மாநாடு கூட்டினார்! அப்படியென்றால் எதற்கு இத்தனை வெட்டிச் செலவு... ஒரு அறிக்கையில் முடிக்க வேண்டிய விஷயமல்லவா இது!

மின்வெட்டு, வேலைவாய்ப்பு, கூட்டணி... இதெல்லாம் இன்று மக்கள் அறிந்தவை. அன்றாடம் விவாதிக்கிற பிரச்சினைகள். இதில் இந்த அரசின் பக்கம் உண்மையில் தவறு இருந்தால் மக்கள் தேர்தலில் பார்த்துக் கொள்வார்கள். இதை மாநாடு கூட்டிச் சொல்ல வேண்டிய அவசியமில்லையே. தினம் நான்கு முறை இந்த விஷயங்களுக்காகத்தானே இவர் அறிக்கை விட்டு பப்ளிசிட்டி தேடி வருகிறார்!

ஆமா... பதவிதான் முக்கியம்!

நிஜத்தில் எந்த கொள்கையும் இல்லாத, பதவி வெறியும், பணப் பேராசையும் கொண்ட ஒரு மனிதர் இவர்.

இதை இந்த திடீர் தலைவரே ஒப்புக் கொள்ளவும் செய்கிறார்! அவரது மாநாட்டு அறிவிப்பைப் பாருங்கள்:

“விஜயகாந்த் கட்சி ஆரம்பித்ததே ஆட்சியை பிடிக்கத்தான் என்று சிலர் கூறுகின்றனர். கட்சி தொடங்குவது ஆட்சியை பிடிக்காமல், காசிக்கும், ராமேஸ்வரத்திற்கும் போகவா?

ஓர் இடத்தை அடைய வேண்டுமானால் குறிக்கோள் இருக்க வேண்டும். ஆட்சியைப் பிடிக்கவே கட்சியை ஆரம்பித்தோம். ஆட்சியைப் பிடிக்க ஏன் ஆசைப்படக்கூடாது? ஆட்சியைப் பிடிக்கவே கட்சி. நான் மறைக்க வேண்டிய அவசியமில்லை.

தேர்தல் நெருங்குகிறது. அதற்குத் தயாராகுங்கள். கட்சியினர் ஒவ்வொருவரும் நூறு ஓட்டுகளையாவது வாங்கித்தர வேண்டும். தேர்தலில் எதற்கும், யாருக்கும் பயப்படக்கூடாது.
மக்களே... தேமுதிகவை ஆட்சியில் உட்கார வைத்துவிட்டு, அப்புறம் பாருங்கள்!”

-அப்புறம் என்னத்தைப் பார்ப்பது... இவரும், இவர் மனைவி – மைத்துனர் மற்றும் உறவினர்கள் தமிழகத்தைப் பட்டா போட்டு விற்கும் கோலாகலக் காட்சியையா?

குறிப்பு: தேமுதிக மாநாட்டின் ‘சாதனை’களை அடுத்த பதிவில் பார்க்க!

http://www.envazhi.com

Monday, September 22, 2008

விஜய்காந்த் ஜெயிச்சா... நாடு தாங்காதுண்ணே...! – இது வடிவேலு வெடி!!


ஒரு இடத்தில் ஜெயித்ததற்கே இந்த ஆளு (விஜயகாந்த்) இந்த பாடுபடுத்துறாரே... நாளைக்கு பத்து இடத்தில் ஜெயிச்சிட்டா இந்த நாடு என்னாகுமோன்னு பயமா இருக்குண்ணே... அவருக்கு மட்டும்தானா மக்கள் செல்வாக்கு... எனக்கும்தாண்ணே இருக்கு. நான் நின்னா ஓட்டுப்போட மாட்டாங்களா நம்ம மக்கள்... இப்ப சொல்றண்ணே... அவர் எந்தத் தொகுதியில் போட்டியிட்டாலும் நான் அவரை எதிர்த்துப் போட்டியிடுவேன். நானா, விஜயகாந்த்தா பார்த்துடுவோம்ணே...

-விஜய்காந்த் தொண்டர்களின் வன்முறைத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட வடிவேலு அளித்த பேட்டியின் ஒரு பகுதி இது.

நடிகர் வடிவேலுவுக்கும், விஜயகாந்த்துக்கும் இடையே கடந்த சில வருடங்களாகவே கருத்து வேறுபாடுகளும், அதுதொடர்பான மோதல்களும் இருந்து வருவது தெரியும்தானே...

சில மாதங்களுக்கு முன்பு விஜயகாந்த் வீட்டுக்கு வந்தவர்கள், வடிவேலு அலுவலகம் காரை நிறுத்தியது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே கடும மோதல் ஏற்பட்டு, அதில் வடிவேலு கடுமையாக தாக்கப்பட்டார்.

இதுதொடர்பாக போலீஸில் விஜயகாந்த் மேலாளர் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்கு சைதாப்பேட்டை கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் இன்று வடிவேலு சாட்சியம் அளிக்கவுள்ளார்.

இந்த நிலையில் நேற்று காலை 50-க்கும் மேற்பட்டோர் 20-க்கும் மேற்பட்ட பைக்குகள், ஆட்டோக்களில் சாலிகிராமத்தில் உள்ள வடிவேலு வீட்டுக்கு வந்தனர்.

பின்னர் வடிவேலு வீட்டின் மீது கொலை வெறித்தாக்குதலை மேற்கொண்டனர். வீடு மற்றும் அலுவலகம் மீது சரமாரியாக பெரிய பெரிய கற்களை வீசி அடித்ததில் வீட்டின் கண்ணாடி ஜன்னல்கள், வீட்டின் வரவேற்பரையில் இருந்த ஷோகேஸ் ஆகியவை உடைந்து சிதறின.

வீட்டுக்குள் இருந்தவர்கள் மீதும் கற்கள் விழுந்ததில் வடிவேலு வீட்டினரில் ஒருவர் காயமடைந்ததாக தெரிகிறது. அதிர்ஷ்டவசமாக வடிவேலு உள்ளிட்டோர் உயிர் தப்பினர்.

இந்த கொலை வெறித் தாக்குலைப் பார்த்து அந்த தெருவே பரபரப்பாகியது. அனைவரும் தெருவில் கூடிவிட்டனர். சிறிது நேர தாக்குதலுக்குப் பின்னர் அந்த கும்பல் வந்த வண்டிகளில் திரும்பி விட்டது.

போலீஸாருக்குத் தகவல் போய் அவர்கள் விரைந்து வந்தனர்.

'எந்தக் கோட்டையைப் பிடிக்கப் போகிறார்?'

நடந்த சம்பவம் குறித்து வடிவேலு இப்படிக் கூறுகிறார்:

20க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களில் வந்தனர். வந்தவுடன் கற்களை எடுத்து வீட்டின் மீதும், அலுவலகம் மீதும் சரமாரியாக வீசினர். தொடர்ந்து வீசிக் கொண்டே இருந்தனர். பக்கத்து வீடுகளிலும் போய் கற்கள் விழுந்தன.

என் தலைவனை எதிர்த்து விட்டு வாழ்ந்து விடுவாயா என்று கோபத்துடன் கூறியபடி கற்களால் தாக்கினர்.

நான் ஒரு நகைச்சுவை நடிகன். என்னை தாக்கி விட்டு எந்தக் கோட்டையை இவர் பிடிக்கப் போகிறார் என்று தெரியவில்லை. என்னை அடித்துதான் இவர் கோட்டையைப் பிடிக்க வேண்டுமா? அந்த அளவு வீக்கான பார்ட்டியா இவரு...

ஒரு இடத்தில்தான் ஜெயித்திருக்கிறார். அதற்கே இப்படியா? என்னை எதற்காக குறி வைக்கிறார் என்று தெரியவில்லை. கடந்த ஒரு வருடமாகவே என்னை தாக்கி வருகிறார்கள். பலமுறை கொலை மிரட்டல்கள் விடுத்துள்ளனர். இதையெல்லாம் நான் வெளியில் சொல்லாமல் இருக்கிறேன்.

ஒரே எதிரி... அது விஜய்காந்த்தான்!

நான் காமெடி நடிகன். ரவுடி அல்ல. ஜனங்களை சிரிக்க வைப்பது மட்டுமே எனது தொழில். ஜனங்கள்தான் எனது கடவுள். கல் வீசியவர்களுக்கும், அதைத் தூண்டியவர்களுக்கும் மக்கள் சரியான பாடம் கற்றுக் கொடுப்பார்கள்.

எனக்கு இந்த உலகிலேயே ஒரேயொரு எதிரிதான் இருக்கிறார். வேறு யாரும் எனக்கு எதிரிகள் இல்லை. அஜீத் படத்தை வைத்திருந்தார்கள் என்று கூறுகிறார்கள். அது திசை திருப்பும் செயல்.

நானா, விஜயகாந்த்தா பார்த்து விடுவோம்ணே!

விஜயகாந்த்தான் என்னைக் கொலை செய்ய ஆளை அனுப்பியுள்ளார். கடந்த ஒரு வருடமாகவே இதை அவர் செய்து கொண்டிருக்கிறார்.

மக்கள் செல்வாக்கு என்று நீ கூறுவாயானால் எனக்கும்தான் மக்கள் செல்வாக்கு இருக்கிறது. அடுத்த தேர்தலில் நீ எங்கே வேண்டுமானாலும் போட்டியிடு. நான் உன்னை எதிர்த்துப் போட்டியிடுகிறேன். மக்கள் செல்வாக்கு எனக்கா, விஜயகாந்த்துக்கா என்று பார்த்து விடுவோம்ணே...

நீ ஒரு கட்சியின் சார்பில் போட்டியிடுகிறாய். நான் சுயேச்சையாக போட்டியிடுகிறேன். அத்தனை கட்சிகளின் ஆதரவுடனும் உன்னை எதிர்த்துப் போட்டியிடுவேன். பார்த்து விடலாம்.

எம்ஜிஆர் பேரச் சொல்லக்கூட தகுதியில்ல!

என்னை ஆள் வைத்து அடிச்சீல்ல, உனக்கு எந்தத் தகுதியும் இல்லை. நான் உன்னை எதிர்த்துப் போட்டியிடுகிறேன். அதில் நீ ஜெயித்து விட்டால் இந்த தமிழ் சினிமாவை விட்டே விலகி விடுகிறேன்.

ஒரு இடத்தில் ஜெயிச்சதுக்கே இந்தாளு இந்த பாடு படுத்துறாரே..., நாளைக்கு பத்து இடத்தில் ஜெயிச்சுட்டா இந்த நாடு என்னாகுமோன்னு பயமா இருக்குண்ணே...

இந்த லட்சணத்துல இந்தாளு எம்ஜிஆர் பெயரையெல்லாம் எந்த தகுதில உபயோகப்படுத்துறார்னே தெரியலயே...உண்மையில அந்த புரட்சித் தலைவரோட பெயரைச் சொல்லக்கூட இந்தாளுக்குத் தகுதியில்ல!!”

இதற்காகத்தானே ஆசைப்பட்டீர்கள் தமிழ்ப் பெருங்குடி மக்களே...!


விஜயகாந்த் நடிப்பு அல்லது அரசியல் குறித்து இதுவரை நமக்கு பெரிதாக எந்த அபிப்பிராயமும் இருந்ததில்லை. இரு கழகங்களின் மீதுள்ள வெறுப்பு, ரஜினி வருவார் என்ற நம்பிக்கை தாமதமாகிக் கொண்டிருப்பதால் ஏற்பட்ட சலிப்பு போன்றவைதான் மக்களுக்கு அவர் மீதான ஆர்வமாக மாறியிருக்கிறது என்பதே நடுநிலையாளர்கள் கருத்து (அது யார் நடுநிலையாளர்கள் என்கிறீர்களா... ஒட்டுப் போடக் கூட போகாமல் ஏஸி அறைக்குள் அல்லது மரத்தடிகளில் பஞ்சாயத்து பேசும் பார்ட்டிகள்!).

களத்தில் இறங்கி ஓட்டுப் போடும் மக்களின் நாடித் துடிப்பை அறிய ஊர் ஊராய்ச் சுற்றும் என்னைப் போன்றவர்கள் பெரும்பாலானோரின் கருத்து இதற்கும் ஒருபடி கீழ்... தினமலர், சன்டிவி, தினகரன், மாலைமுரசு போன்றவை கொஞ்சம் மூடிக்கிட்டிருந்தா இந்த ஆள் இருக்கிற இடமே தெரியாது..., என்பதே அந்த அபிப்பிராயம்.

ஆனால் சில பத்திரிகைகளும், கருத்துப் பரப்பிகளும் விஜய்காந்த்தான் இந்த மாநிலத்துக்கு நல்ல மாற்று என்பது போன்ற விஷ வித்தை விதைக்க முயற்சித்து வருகிறார்கள்.

அவர்களுக்குத் தெரியாது... கலைஞரை விட மோசமான குடும்ப அரசியல், ஜெயலலிதாவை விட கொடுமையான அதிகார வெறி இரண்டுக்கும் சொந்தக்காரராகத்தான் விஜய்காந்த் திகழ்வார் என்பது.

விஜய்காந்த் சமீபத்திய ஒரு பிரஸ்மீட்டில் சொன்னது:

சார், உங்க கொள்கை என்ன?

மக்கள் நல்லா வாழணும்... இதாங்க என் கொள்கை..!

அதான் எப்படி நல்லா வாழ்வாங்க... என்ன திட்டமிருக்கு?

அதெல்லாம் ஆட்சிக்கு வந்ததும் பார்த்துக்கிடுவோம்...

கட்சியில உங்க மனைவி, மச்சினன் ஆதிக்கம் அதிகமிருக்கே...

நீங்க திமுக ஆளா...

ஏன்... நடுநிலையாளர் யாரும் இப்படிக் கேட்க மாட்டார்களா...

பாருங்க... என் மனைவிக்கு, மச்சின்னுக்கு என் மேல அளவு கடந்த பாசம், அக்கறை இருக்கு... அப்படிப்பட்டவங்க என் கட்சி மேலயும் அதே அளவு அக்கறை காட்றதுல உங்களுக்கு என்ன கஷ்டம்!

அடக் கடவுளே... இப்படி ஒரு ஆளுக்காக வரிந்து கட்டிக் கொண்டு வேலை பார்க்கவும் நாலுபேர் இருக்கிறார்களே என்பதுதான் வேதனை.

இந்த நபருக்காக திமுகவை, பாமகவை திட்டுவது எவ்வளவு தவறானது பாருங்கள். கலைஞராவது, தன் கடைசி காலம் நெருங்கிவிட்டதை அறிந்தும், தன் மகனுக்கு முடி சூட்ட முடியாமல், எதிரிகள் விமர்சிப்பார்களே என்ற தயக்கத்தில் அமைதி காக்கிறார். ராமதாஸ் இன்னும் கூட பதவியை நேரடியாக அனுபவிக்காமல் தனக்கு வேண்டப்பட்ட, குடும்ப உறுப்பினர்களுக்குக் கொடுக்கிறார்.

ஆனால் இந்த விஜய்காந்துக்கு எந்த பொது நல நோக்கமும் கிடையாது. அவரது ஒரே குறி, பதவி. ஒரு வேளை தப்பித் தவறி கிடைத்துவிட்டால், அதை மனைவி, மச்சான் கையில் ஒப்படைத்துவிட்டு குனியமுத்தூர் தோப்பில் குறிகேட்டபடி உட்கார்ந்துவிடுவார்.

ஆண்டாள் அழகர் கல்லூரி மாதிரி... ‘பிரமலதா - சுதீஷ் தமிழ்நாடு அரசு’ என்ற நிறுவனத்தை உருவாக்கவே அவரும் அவர் மனைவியும் பேராசைப் பிடித்து அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

இதற்கு ரஜினி ரசிகர்கள் ஆதரவு கிடைக்காதா என்ற ஏக்கத்துடன் உள்ளடி வேலைகள் பலவற்றில் இறங்கிக் கொண்டிருக்கிறார் விஜய்காந்த்.

இது ஒரு பக்கமிருக்கட்டும்...

இவரது ஆட்களுக்கும் நகைச்சுவை நடிகர் வடிவேலுவுக்கும் ஏற்பட்டுள்ள பிரச்சினை இருக்கிறதே... அது ‘பிரிட்டிஷ் பிரச்சினை’யாகிவிட்டது இப்போது!

இருவர் வீடும் ஒரே தெருவில், அதுவும் எதிரெதிரில்தான் அமைந்திருக்கிறது.
வடிவேலு தன் படங்களில் தொடர்ந்து நடிக்க மறுப்பது ஒரு பக்கம் கோபமென்றால், ‘பெரிய தலைவராகி’விட்ட பின்னும் தன்னிடம் பணிய மறுப்பதில் கட்டுக்கடங்காத கோபம் விஜய்காந்துக்கும் அவர் மச்சான் சுதீஷுக்கும்.

இந்தக் கோபம்தான் வடிவேலு மற்றும் விஜய்காந்த் ஆதரவாளர்களிடையே பெரும் மோதலாகி, இப்போது விஜய்காந்த் ஆட்கள் வடிவேலு வீட்டுக்குள் நள்ளிரவில் கல்லெறியும் கேவலம் வரை கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது.

ஏற்கெனவே ஏற்பட்ட பழைய மோதல் கேஸே இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையிலிருக்கிறது அதற்குத்தான் நாளை சாட்சி சொல்ல கோர்ட்டுக்குப் போகத் தயாராக இருந்தார் வடிவேலு.
இதைத் தடுக்க சினிமா பாணியில் ஒரு நாள் முன்பே கல்லெறிந்து மிரட்டியிருப்பதாக வடிவேலு கூறியிருக்கிறார்.

‘என்னைப் பணிய வைக்க அவரும் (விஜய்காந்த்), அவரோட ஆட்களும் எவ்வளவோ பண்ணிட்டாய்ங்க... ஆனா நான் என் பாட்டுக்கு வேலைய பார்த்துக்கிட்டுப் போயிட்டே இருக்கேன். இப்ப கல்லக் கொண்டெறியற லெவலுக்கு வந்திருக்காய்ங்க... இந்தக் காமெடியனோட மோதி கோட்டைக்குப் போயிடலாம்னு கனவு காணுறாரே... எவ்வளவு கேவலம் பாருங்க..., என்கிறார் வடிவேலு. காமெடியானாக இருந்தாலும் அவர் வார்த்தைகளில் எவ்வளவு பொருள் பொதிந்துள்ளன பாருங்கள்!

இப்போது வடிவேலு கொடுத்த புகாரின் அடிப்படையில் விஜய்காந்த் உள்ளிட்ட 30 பேர் பேர் மீது போலீசார் வழக்குத் தொடர்ந்திருக்கிறார்கள். இதில் விஜய்காந்த் கைதாகவும் வாய்ப்பிருக்கிறது.

உடனே கலைஞர் அரசு பழிவாங்குவதாக விஜய்காந்த் சீன் கிரியேட் பண்ணும் வாய்ப்பும் ஏராளமிருக்கிறது. இதை வைத்தே ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்று அவர் மனைவி மந்திரம் ஓதி, கேப்டனை (இதென்ன படிச்சி வாங்கின பட்டமா... இல்ல மிலிட்டரில டப்பு டப்புனு சுட்டு வாங்கின ரேங்கா...!) களமிறக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை...

இதையெல்லாம் யோசிக்க ஏது நம்மாளுங்களுக்கு நேரம்... இப்படிப்பட்ட ஏமாற்றுப் பேர்வழிகள், எம்ஜிஆர் பெயரை தவறாகப் பிரயோகிக்கும் கறுப்பு ஆடுகள் வரவேண்டும் என்பதற்காகத்தானே அவர்களும் காத்துக் கிடந்தார்கள்... வேணும்... நல்லா வேணும்!