Friday, October 31, 2008

இலங்கை விவகாரம்: கேப்'டவுன்'!!

எச்சரிக்கை: இந்தக் கட்டுரை ஈழத் தமிழ் ஆதரவாளர்களுக்கோ, அல்லது போர்முனையில் நிற்கும் புலிகளை ஆதரிப்பவர்களுக்கு எதிரானதோ அல்ல.

ஈழ ஆதரவு விஷயத்தில் நமது நிலைப்பாடு எப்போதும் ஒன்றுதான். இலங்கையில் வசிக்கும் அனைத்து தமிழர்களும் (மலையகத் தமிழர்கள் உள்பட) சம உரிமையுடன், சிங்களர்களுக்கு சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதே.

அதற்கான தீர்வு காந்தீய வழியில் வந்தாலும் சரி, நேதாஜி வழியில் கிடைத்தாலும் சரி, பெரும்பகுதி தாயகத் தமிழர்களைப் போல நமக்கும் சம்மதமே. எந்த முடிவும் தமிழர்களுக்கு சாதகமாகவே அமைய வேண்டும்.

யதார்த்தமாக இலங்கை விவகாரத்தைப் பார்ப்பவர்கள் பெரும்பாலும் இத்தகைய கருத்துக்களையே கொண்டிருப்பதை அறியலாம்.

ஆனால் அரசியல்வாதிகளின் ஆதரவுக்குள் ஆயிரம் கணக்குகள் இருக்கிறது. அப்படி ஒரு கணக்கைத்தான் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.

மற்றபடி இலங்கைப் பிரச்சினையின் உண்மைகள் குறித்து பின்னொரு சமயம் ஒரு தொடர் கட்டுரை எழுதும் விருப்பம் உள்ளது.

ரஜினிக்கு ஆதரவான இந்த தளத்தில் விஜய்காந்துக்கு எதிரான கருத்துக்கள் வருவது சகஜம்தான் என்ற மனநிலையில் உள்ளவர்களை நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை. உண்மையை யாரும் உரத்துச் சொல்லலாம்!

னித் தமிழீழம் மலரும் வரை நான் பிறந்த நாள் கொண்டாட மாட்டேன் என்று வீர சபதம் எடுத்து, வைராக்கியமாக ‘வாழ்ந்து’ வருபவர் நம்ம விஜய்காந்த். ஈழத் தமிழர் ஆதரவு விவகாரத்தில் இயக்குநர்கள் ஒரு பக்கம் சிறை செல்வதும், நடிகர்கள்
உண்ணாவிரதமிருப்பதுமாக திரையுலகம் பரபரவென இயங்கிக் கொண்டிருக்கையில், மகனுக்கு பிரபாகரன் பெயர் சூட்டி தன் தமிழ்ப் பற்றை பறை சாற்றிக் கொண்டிருந்த விஜய்காந்த் மட்டும் அடக்கி வாசிப்பது ஏனோ?

அரெஸ்ட் பயமா... இல்லை... இல்லவே இல்லை! அரசியல் லாப நோக்கம்தான்!

இது என்ன புதுக்கணக்கு என்கிறீர்களா...

இது புதுசல்ல... பழைய கணக்குதான். என்றைக்கு டெல்லிக்குப் போய் மேலிடப் பிரதிநிதிகளைச் சந்தித்து காங்கிரஸ் கூட்டணிக்கு அச்சாரமிட்டு வந்தாரோ அன்று முதல் விஜய்காந்தின் ஈழப் பற்று ஈனஸ்வரத்தில் கேட்கத் துவங்கியிருப்பதை அரசியல் பாலபாடம் படிப்பவர்களும் கூட உணர முடியும்.

ராமேஸ்வரம் உண்ணாவிரதத்துக்கு வருவதாய் வாக்களித்த விஜய்காந்த் கடைசிவரை அந்தப் பக்கமே எட்டிப் பார்க்காத மர்மமும், இளைஞரணி மாநாடு முடிந்ததிலிருந்தே மந்திரித்துவிட்டவர் போல ஒரு மார்க்கமாய் திரிவதும் இந்த கூட்டணித் தேவைக்காகத்தான்.

இந்த மர்மம் புரிந்த பிறகுதான் கலைஞரும் ‘இந்திய இறையாண்மை மீதான தனது பற்றுத’லைக் காட்ட வேண்டி சில கைதுகளை அரங்கேற்றினார். இருக்கிற கூட்டணியைக் காப்பாற்ற வேண்டிய கடமை அவருக்கு மட்டும் இல்லாமல் போய்விடுமா என்ன?

இப்போது உண்ணாவிரத விவகாரத்துக்கு வருவோம். நாளை உண்ணாவிரதம். முன்பு பிரபாகரனை தனது தலைவராக அறிவித்த கேப்டன், இந்த உண்ணாவிரதத்தின் போது என்ன செய்யப் போகிறார்?

எல்லோரையும் போல சும்மா வந்து போகப்போகிறார். அவ்வளவுதான். இயற்கையாகப் பெய்யும் மழையாக இருந்தாலும் சரி, தன் வீட்டுத் தெருவில் பொங்கி வழியும் சாக்கடையாக இருந்தாலும் சரி, எல்லாவற்றுக்கும் கலைர்ஞர்தான் காரணம் என்று அறிக்கையாய் விட்டுத் தள்ளும் இந்த அரிதார கேப்டன், இலங்கை விவகாரத்தில் மட்டும் தன் நிலைப்பாட்டை பகிரங்கப்படுத்த மறுப்பது மீடியாவுக்கு தெரியாதா...

இந்த திடீர் பதுங்கலை விமர்சித்து முடிந்தால் ஒரு ‘மனம் திறந்த மடல்’ எழுதிப் பார்க்கட்டுமே மீடியா உலக ஜோல்னா பையன்கள்...

தமிழினத்தின் ஏக போக பிரதிநிதிகளாய், தமிழர்களின் ஒட்டுமொத்த மனசாட்சியாய் தங்களைத் தாங்களே சித்தரித்துக் கொள்ளும் அஞ்ஞானிகளுக்கு இப்போது எங்கே போனது அறிவு?

அது சரி... இந்த அரிதார கேப்டனுக்கு பார்ட் டைம் ஆலோசகராகச் செயல்படும் அவர்களிடம் இதையெல்லாம் எதிர்பார்க்க முடியுமா?

ஆனால் இந்த கபட நாடகங்களையெல்லாம் அறியாத தமிழ் மக்கள் செய்தித்தாள்களில் / மீடியாவில் பதிப்பிக்கப்படுகிற அனைத்தையும் நம்பி அல்லது அதன்பால் உணர்ச்சி வசப்பட்டு, இம்மாதிரி நிகழ்களில் கலந்து கொள்ள முடியாத அனைவரையுமே தமிழ்த் துரோகிகளாகவே வரித்துக் கொள்கிறார்கள். அல்லது இந்த அவலங்களைத் தோலுரித்துக் காட்ட முயல்பவர்களையும் இதே பட்டியலில் சேர்த்துக் கொள்கிறார்கள்.

இங்கே நல்லவர்கள் அதிகம் பேசுவதில்லை; அதிகம் பேசுபவர்களின் பின்னணியில் ஆயிரம் அரசியலிருக்கிறது!

இந்த வருட ஈழ ஆதரவு சீஸன் நமக்கு உணர்த்தும் பாடம் இது!


http://www.envazhi.com

3 comments:

Anonymous said...

சென்ற அவள் விகடன் இதழில் திருமதி விஜயகாந்த் தங்கள் மூத்த மகனின் பெயர் விஜயபிரபாகர் எனக் கூறியுள்ளார்.
அவரது பெயர் பிரபாகரனா?

Anonymous said...

//எல்லோரையும் போல சும்மா வந்து போகப்போகிறார். //

எல்லோரையும் போல-ன்னா? ரஜினியைப் போலவா?

Anonymous said...

கலைஞர் கருணாநிதி - தமிழர்களில் அனுபவமிக்க, மூத்த நாடகக் கலைஞன்

- தேசப்பித்தன்

வன்னியிலிருந்து அனுப்பப்பட்டதாக சொல்லப்படும் ஓர் இறுவட்டை பார்த்ததும், தமிழக முதலமைச்சரால் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட நாடகம் ஒன்று 29ம் திகதி சுபமாக, அதாவது முதல்வர் கருணாநிதிக்கு சுபமாக முடிவடைந்துள்ளது.

ஆறுதலாக இருக்கும் என்று சொல்லி ஆறு அம்ச தீர்மானங்களை நிறைவேற்றிய தமிழக அனைத்துக் கட்சிக் கூட்டத்துடன் (?) ஆரம்பித்த கூத்தை, சொந்தப் பணத்தில் பத்து இலட்சம் ரூபாயை வழங்கியும் இந்திய மத்திய அரசின் முயற்சிகளுக்கு நன்றி கூறியும் நிறைவு செய்து வைத்துள்ளார் கருணாநிதி. இந்தியா என்ன செய்து கிழித்துவிட்டதென்று நன்றி கூறினாரோ, அது வேறு விடயம்.

கலைஞர் அரங்கேற்றிய இந்த நாடகத்தில் பல கதாபாத்திரங்கள் இருந்தன. தமிழக முதல்வர், இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள், இந்தியப் பிரதமர், காங்கிரசின் தலைவர், தமிழக எதிர்க்கட்சித் தலைவர்கள், தமிழ் சினிமாத்துறை, இலங்கை அரச அதிபர், இலங்கை அதிபரின் ஆலோசகர் எனப் பலரும் பங்கு பற்றியிருந்தனர். நாடகத்தில் பங்கு பற்றிய அனைவருமே தமது தரப்புக்களிற்கு ஏதுவான சாதகமான இலாபப் பங்குகளை பெற்றுக் கொள்ளத் தவறவில்லை.

இந்த கூத்தாட்டத்தில் பயனடைந்தவர் என்றால் அது கருணாநிதியும் அவரது குடும்ப அரசியல் தலைமையும், இந்திய மத்திய அரசின் அதிகார மையமும் எனலாம். இந்த நாடகத்தை பயன்படுத்திக் கொண்டவர்கள் இலங்கையின் இனவாத அரசியல் தலைவர்கள். பாதிக்கப்பட்டவர்கள் என்று பார்த்தால், ம.தி.மு.கவின் தலைவர்களும், தமிழ்ப் பற்றுக்கொண்ட தமிழ்த் திரை இயக்குநர்களும் எனலாம். ஏமாற்றப்பட்டவர்கள் என்ற வகையில் வஞ்சக நோக்கங்கள் எதுவுமின்றி ஈழத் தமிழர்களுக்காக வெயிலிலும் கடும் மழையிலும் தமது ஆதரவுக் கரங்களை உயர்த்திய சாதாரண தமிழகத் தமிழர்கள் என வகைப்படுத்தப்படுகிறார்கள். ஏமாறுவோம் எனத் தெரிந்தும் சொந்த மக்களையும் ஏமாற்றி, தாங்களும் ஏமாளியானவர்கள் யாரென்றால் அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களும், நெடுமாறன், ராமதாஸ், திருமாவளவன் போன்ற தமிழக தலைவர்களும்தான். ஒட்டுமொத்தமாக, இந்த நாடகத்தில் பழைய அனுபவத்தையே பாடமாகக் கற்றுக் கொண்டவர்கள் ஈழத் தமிழர்கள் மட்டுமே என்றால் அதை மறுப்பதற்குமில்லை.

மின்வெட்டு, விலைவாசி உயர்வு என்பவற்றால் மதிப்பிழந்திருந்த கருணாநிதி தலைமையிலான ஆளும் தரப்பு, மக்களின் கவனத்தை திசை திருப்ப வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. அதேவேளை அடுத்த ஆண்டின் நடுப்பகுதியில் நாடாளுமன்ற சட்டசபைத் தேர்தல்களுக்கான கூட்டணியாக மீண்டும் காங்கிரசுடனான தற்போதைய கூட்டை பலமானதொரு நிலையில் புதுப்பிக்க வேண்டிய தேவையும் இருந்தது. அதாவது மத்தியில் தமிழக கூட்டணியின் 40 எம்.பிக்கள் எனும் பலத்தை ஆளும் காங்கிரசுக்கு உணர்த்த வேண்டிய தருணமாகவும் இன்றைய காலம் தி.மு.கவிற்கு விளங்குகின்றது.

ஆனந்தவிகடன் - நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் இணைந்து நடாத்திய கருத்துக் கணிப்பில் வெளிப்படுத்தப்பட்ட புலிகள் இயக்கம் அதன் தலைமைத்துவம் ஈழத் தமிழர்களின் போராட்டம் என்பன பற்றிய தமிழக மக்களின் உணர்வலைகளை சாதகமாக பயன்படுத்த துணிந்த கருணாநிதிக்கு ஈழத் தமிழர்கள் பற்றிய நாடகக் கூத்து மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதும் தெரியும்..

மூதூர் கிழக்கில் இருந்து தமிழ்மக்கள் விரட்டப்பட்டு கிழக்கில் சுமார் இரண்டு இலட்சம் மக்கள் தொடர்ச்சியாக இடம்பெயர்ந்து அவலப்பட்டு, குண்டுவீச்சுக்களிலும், எறிகணை வீச்சுக்களிலும் முன்னூறுக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டபோது வாய்மூடி கண்ணயர்ந்திருந்த கருணாநிதி, மத்திய அரசின் இலங்கைத் தமிழர் கொள்கையே தனது கொள்கை என்று சப்பைக் கட்டு கட்டிய கருணாநிதி, விடுதலைப் புலிகளுக்கு தமிழ்நாட்டில் எக்காலத்திலும் இடமில்லை என்று கூறி, இலங்கை அகதிகளுக்கெதிரான போக்கை சொல்லிலும் செயலிலும் காட்டி வந்த கருணாநிதி

இன்று இறுவெட்டை பார்த்து கண்ணீர்விட்டு, பத்து இலட்சம் ரூபா பணம் கொடுத்து நிவாரணப் பொருட்களை சேகரித்து அனுப்பி வைக்க தயாராகின்றார் என்றால் அது தேர்தல் நோக்கத்தைத் தவிர வேறொன்றில்லை.

தமிழ்நாட்டு எம்.பிக்கள் பதவிகளை துறக்க மாட்டார்கள் என்பதை ஈழத் தமிழர்கள் நன்கு அறிந்து வைத்திருப்பதைப் போல இந்திய நடுவண் அரசும் கூட நன்கு அறியும். இருந்தும் கருணாநிதியின் நாட்டியத்திற்கு உணர்ச்சியூட்டி இலங்கையை மிரட்டியதன் மூலம் இந்திய அரசு தனது பிராந்திய மேலாதிக்கத்தை உறுதிப்படுத்த இச்சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்திக் கொண்டது. அதில் இலங்கைத் தமிழர்களின் நலன்கள் எதுவும் உள்ளடக்கப்பட்டிருக்காது என்பதும் உண்மை.

ஈழப் போராட்டத்தின் இறுதி மூலோபாயமாக ஆயுதப் போராட்டம் அமைந்துள்ளதும், அதன் முதன்மையானதும், ஒரே போராட்ட அமைப்பாகவும் ஜனநாயக மறுப்பையும், ஈவு இரக்கமற்ற படுகொலைக் கலாச்சாரத்தையும் பிரதான தந்திரோபாயங்களாக கொண்ட புலிகள் அமைப்பே தற்போது விளங்குகின்றது.

புலிகளை ஜென்ம விரோதியாக ஒதுக்கி வைத்துள்ள இந்திய மத்திய அரசுக்கு இலங்கை அரசை மிரட்டி அடிபணிய வைக்கக் கூடிய மாற்று அமைப்புக்களோ, வழிகளோ வடகிழக்கில் கிடையாது. அதற்காக புலிகளை மறைமுகமாகவேனும் ஆசிர்வதிக்கும் எண்ணமும் தற்போதைக்கு இல்லை. இந்த நிலையில் இலங்கை அரசின் யுத்த அரசியலுக்கு முண்டு கொடுப்பதைத் தவிர வேறு வழி ஏதும் இந்தியாவுக்கு இருப்பதாக தெரியவில்லை. இலங்கை அரசு தன்னைவிட்டு விலகிச் செல்வதை தடுப்பதற்கு.

ஆனாலும் இலங்கை அரசோ இந்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் இல்லை என்பதுதான் உண்மை. மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று தடவைகள் கப்பல்கள்மூலம் கனரக யுத்த உபகரணங்களை எந்தவிதமான நிர்ப்பந்தங்களும் நிபந்தனைகளுமின்றி தென்கோடியில் இறக்கிவிட்டு செல்ல பாகிஸ்தானும் ஈரானும் சீனாவும் தயாராக உள்ளன. பொருளாதார உதவிகளை வழங்கி, இந்திய - மேற்குலக இராஜதந்திர அழுத்தங்களை உதாசீனப்படுத்தக் கூடிய பலத்தை இலங்கைக்கு கொடுக்க சீனாவும் ஈரானும் தயாராக உள்ளன.

இலங்கை - இந்திய ஒப்பந்தத்தில் அடிப்படையாக இருந்த வட-கிழக்கு இணைப்பு விவகாரம் சிங்கள சமூகத்தால் தூக்கி வீசப்பட்டபோது கையாலாகாத நிலையில் இருந்த இந்தியா இன்று, கிழக்கு அதிகாரம் வேண்டும். வடக்கிற்கு அதிகாரம் வேண்டும் என்று கேட்பது கூட்டறிக்கையின் சுவைக்கு இடப்பட்ட வாசனைத் திரவியங்களை போன்றதே. இந்தக் கோலத்தில், இந்தியாவுக்கு சொல்லி இலங்கை அரசை யுத்தத்தை நிறுத்தச் செய்யலாம் என்று நினைத்த அனைத்து அரசியல் கூத்தாடிகளையும் என்ன பெயர் சொல்லி அழைப்பதென்றே தெரியவில்லை.

ஒரு காலத்தில் தமிழ் ஆயுத அமைப்புக்களை வைத்து இலங்கையை மிரட்டிய இந்தியா, மிகவும் பலவீனப்பட்டு போயுள்ள தனது இலங்கை சம்பந்தமான இராஜதந்திர நடவடிக்கைகளை மீண்டும் தீவிரப்படுத்திக் கொள்ள கலைஞரின் உதவியை பெற்று செயற்பட முயற்சிக்கிறது போலும். இருந்தும் இந்தியா இதில் வெற்றிபெறப் போவதில்லை. எதிரியை வெல்ல முடியாவிடின் இணைந்துவிடுவதே மேல் என்று சொல்வதுபோல் இந்தியா இலங்கை அரசுடன் இணைந்து செயற்படவும் மறுபுறத்தில் முயற்சிக்கிறது.. ஆனாலும் அதிலும் இந்தியாவிற்கு வெறும் தோல்விதான். இலங்கை அரசின் நண்பர்கள் வரிசையில் இந்தியாவுக்கு முன்னால் பல நண்பர்கள் நிற்கிறார்கள். உலகிலேயே சிறந்த நண்பன் இந்தியாதான் என்று புதுடில்லியில் பசில் கூறியது ஏமாற்று என்பது பசிலுக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கும் புரியும்.

இவற்றையெல்லாம் மேவி கலைஞர் இந்திய மத்திய அதிகார வர்க்கத்துடன் இணைந்து நடாத்திய நாடகத்தின் பிரதான விளைவுகள் எனச்சிலவும் சுட்டிக்காட்டப்பட வேண்டியுள்ளது.

கருணாநிதி கொடுத்த (?) இரண்டுவார காலக்கெடு பகுதியில் வடக்கில் இலங்கை விமானப்படை குண்டு வீச்சுக்களில் உயிரிழப்புக்கள் ஏற்படுவது தவிர்க்கப்பட்டிருந்தது. இந்நடவடிக்கையை இலங்கை அரசு இந்திய அரசின் கையறுநிலையை ஆசுவாசப்படுத்த மேற்கொண்டிருந்தது என்பதை, மீண்டும் நேற்று (காலக்கெடு முடிவின் முதல்நாள்) இலங்கை விமானங்கள் நடாத்திய கண்மூடித்தனமான குண்டுவீச்சில் மூன்று தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டமை உறுதிப்படுத்துகின்றது.

அடுத்ததாக, எதிர்வரும் காலங்களில் தமிழகத்தில், ஈழத் தமிழர்கள் சார்பாக அந்த மக்களால் முன்னெடுக்கப்படும் எத்தகைய எழுச்சிகளையும் அரசும், அதன் தோழமைக் கட்சிகளும் கணக்கிலெடுக்காமலிருக்கக் கூடிய துணிச்சலையும் ஈழத்தமிழர்களுக்காக ஆக்கபூர்வமான செயற்பாடுகளை முன்னெடுக்கக்கூடிய ஆதரவு நிலை வட கிழக்குக்கு வெளியே இருக்கப் போவதில்லை எனும் மோசமான நிலையையும் தமிழர்கள் தரப்பில் கருணாநிதியின் கூத்து உருவாக்கியுள்ளது.

ரஜீவ் காந்தியின் படுகொலையின் பின்பு, நீண்ட காலத்தின் பிறகு, சாதாரண தமிழக மக்கள் மத்தியில் உருவாகியுள்ள ஆரோக்கியமான கரிசனையை ஈழத் தமிழர்களாகிய நாம் அவமதிக்க வேண்டாம் வரவேற்போம். அதேநேரத்தில் தமிழக அரசியல் தலைமைகளிற்கு ஈழத் தமிழர்களின் அரசியல் போராட்டத்தில் அவர்களின் சுயநலமற்ற பங்கு, பணி எவ்வாறு அமைய வேண்டும் என்பதை ʽஅ" இலிருந்து சொல்லிக் கொடுக்க யாராவது முன் வந்தேயாக வேண்டும். என்றோ ஒரு நாளிலாவது, ஈழத் தமிழர்களுக்காக அர்த்தபுஷ்டியான ஆதரவை வெளிப்படுத்த அதை நெறிப்படுத்தக்கூடிய தலைமை உருவாகும் என்று காத்திருப்போம்.

www.thenee.com