Monday, October 13, 2008

அரசியல் இல்லையேல் சாகும் வரை உண்ணா விரதம்!


இது இன்று மாலை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் சிலர் அவசரமாகக் கூடி எடுத்துள்ள முடிவு.

இதுகுறித்து இன்றைய தட்ஸ்தமிழ் செய்தியை அப்படியே தந்து விடுகிறேன்...

“ரஜினிகாந்த் ரசிகர்கள் கோமா நிலையில் கிடக்கிறார்கள். அவர்களுக்கு உற்சாகத்தை அளித்து புத்துணர்வை அளிக்கும் வகையில், ரஜினிகாந்த் உடனடியாக கட்சி தொடங்க வேண்டும். இல்லாவிட்டால் தமிழகம் முழுவதும் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிப்போம் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு ரசிகர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என அவ்வப்போது குரல்கள் வெடிக்கும். இப்போதும் அதுபோலவே கோரிக்கைகள் வலுத்துள்ளன. ஆனால் இந்த முறை ரசிகர்கள் சற்று வேகமாக உள்ளனர். கோவை மாவட்ட ரசிகர்கள் ஒரு படி மேலே போய் தேசிய திராவிட மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் கட்சி ஒன்றை துவக்கினர். கட்சிக்கு கொடியையும் அவர்களே அறிமுகப்படுத்தினர்.

இனி கோவை மாவட்டத்தில் ரஜினி ரசிகர் மன்றம் எதுவும் செயல்படாது என்றும், தேசிய திராவிட மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரிலேயே இயங்குவோம் எனவும் அவர்கள் அறிவித்தனர்.

மேலும், சென்னையில் தங்களை ரஜினி சந்திக்கும் போது கட்சிக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் மறுக்கும் பட்சத்தில் அனைத்து மாவட்ட ரஜினி ரசிகர் மன்றங்களும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில 2 நாட்களுக்கு முன்பு சென்னையில் அனைத்து மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகள் கூடி ஆலோசனை மேற்கொண்டனர். இந்தச் சூழ்நிலையில் இன்று சென்னை மாவட்ட ரஜினி மன்றத்தினர் வள்ளுவர் கோட்டம் அருகே கூடி ஆலோசனை நடத்தினர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், 15ம் தேதி தலைவர் எங்களை சந்திப்பதாக கூறியிருக்கிறார். அன்றைய தினம் நாங்கள் அனைவரும் அவரை பார்க்க முடியாது. குறிப்பிட்ட சில பேர் மட்டும் தான் செல்ல முடியும்.

எனவே அன்றைய தினம் தலைவரிடம் என்ன பேச வேண்டும்; என்ன கூற வேண்டும் என்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் இது. இந்த கூட்டத்தில் எடுக்கும் முடிவு அனைத்து ரசிகர்களையும் கட்டுப்படுத்தும்.

தலைவர் நிச்சயமாக அரசியலுக்கு வரவேண்டும். ஒகேனக்கல், காவிரி பிரச்சனையை விட இன்று ரசிகர்கள் உணர்ச்சிவசப்பட்டு காணப்படுகிறார்கள்.

திரையுலகில் தன்னை திட்டியவர்களுக்கு கூட தனது படங்களில் வாய்ப்பு தரும் தலைவர், இத்தனை ஆண்டுகளாக அவருக்கு பின்னால் இருக்கும் எங்களுக்கு என்ன செய்திருக்கிறார்?

உறுப்பினர் பெருமையே போதும்!

நாங்கள் என்ன எம்பி பதவி, எம்எல்ஏ பதவியா கேட்கிறோம். அவர் அரசியல் கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்று தானே கேட்கிறோம். எங்களைக்கூட கட்சி நிர்வாகிகளாக போட வேண்டாம். ஆனால் அவர் கட்சி ஆரம்பித்து அதில் நாங்கள் உறுப்பினர் என்ற பெருமையே எங்களுக்கு போதும்.

தேர்தல் வரும் போதெல்லாம் அரசியல் கட்சிகளுக்கு ரஜினி ரசிகர்கள் தேவைப்படுகிறார்கள். ஆனால் தேர்தல் முடிந்த பிறகு, ஒரு ரேஷன் கார்டு பிரச்சனைக்கு சென்றால் கூட எங்களை ஒரு பொருட்டாக மதிக்க மாட்டேன் என்கிறார்கள்.

கோமாவில் கிடக்கிறோம்:

ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் தொடர்ந்து எங்களை தாக்கி வருகிறார்கள். நாங்கள் கோமா ஸ்டேஜில் கிடக்கிறோம். பல இடங்களில் எங்களுக்கு அவமானம் ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ரஜினி ரசிகர்களின் நிலைமை இதுதான்.

அரசியல் கட்சிக்கு மாற்றாக சமூக இயக்கம் ஆரம்பிப்பது என்பதெல்லாம் பேச்சுக்கு உதவாத காரியம். அதற்காக தலைவரை நாங்கள் எதிர்ப்பதாக அர்த்தம் கிடையாது. ஆனால் அரசியல் கட்சி ஆரம்பிப்பது அவசியமான ஒன்று.

சமீபத்தில் கோவை மாவட்ட ரசிகர்கள் தனி கட்சிக் கொடி ஆரம்பித்தது அவர்களுடைய நெருக்கடி நிலைமையை காட்டுகிறது. இருப்பினும் கட்சி, கொடி ஆகியவற்றை தலைவர் அறிவித்ததால்தான் மரியாதை. அதேநேரம் அவர்கள் மீது எந்த விதமான தவறான நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்பதுதான் எங்கள் நிலைப்பாடு.

ஒருவேளை அரசியல் கட்சி ஆரம்பிப்பது குறித்து தலைவர் மறுக்கும் பட்சத்தில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் ஈடுபடுவார்கள் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ரசிகர்களின் இந்தக் கொந்தளிப்பை எப்படி சமாளிக்கப் போகிறார் ரஜினி என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.”


-இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அனைவருமே ரஜினி சமூக நல இயக்கம் தொடங்கக் கூடாது, கட்சிதான் துவங்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்களின் இந்த தனிக்கட்சி, சாகும் வரை உண்ணாவிரத நெருக்கடிகள், ரஜினியை வேறு முடிவுக்குத் தள்ளிவிடக் கூடாது. எனவே சற்று நிதானம் தேவை!
http://www.envazhi.com

No comments: