Sunday, October 26, 2008

அது ஒரு ‘பாண்டியன்’ காலம்!

த்தனையோ தீபாவளிகள் வந்து போனாலும், 1992-ம் ஆண்டு தீபாவளியை இப்போது நினைத்தாலும் மனதுக்குள் மத்தாப்பு மழை...

பாண்டியன் ரிலீசான வருடம் அது... இத்தனைக்கும் அதற்குப் பிறகு உழைப்பாளி, முத்து என இரு ‘மெகா தீபாவளிகள்’ கடந்திருந்தாலும், பாண்டியன் மட்டும் ‘சம்திங் ஸ்பெஷல்’!
காரணம்... அந்தப் படம் எங்கள் ஊரில் நேரடி ரிலீஸ்!!

திருப்பத்தூருக்குப் பக்கத்திலுள்ள சற்றே பெரிய கிராமம் கெஜல்நாயக்கன்பட்டி. பெயரிலேயே தெரிகிறதல்லவா ஊரின் அந்தஸ்து!

உண்மையில் இந்த ஊருக்கு பெரிய அந்தஸ்தைத் தந்ததே அந்த ஊரின் நடுவில் அமைந்திருக்கும் ராமு தியேட்டர்தான். கிட்டத்தட்ட 32 வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட தியேட்டர் என்றாலும் இப்போது பார்த்தாலும், ஏதோ ரஷ்ய பாணி திரையரங்கம் மாதிரி கம்பீரமாக நிற்கிறது.

இரண்டு மூன்று வாரங்களுக்கு ஒரு எம்ஜிஆர் படம், ரஜினி படம் கண்டிப்பாக வந்துவிடும். திரையரங்க உரிமையாளர் மகன் எங்கள் வகுப்புத் தோழன். தீவிர ரஜினி வெறியன். அவனுக்காகவே ரஜினி படங்களை அடிக்கடி போடுவார் அவன் தந்தை. கிட்டத்தட்ட எங்கள் பள்ளி / கல்லூரி இளமையின் பெரும்பகுதி நாள்களைக் கழித்த இடம்!

அது என்னமோ தெரியவில்லை... அந்தத் திரையரங்கம் இன்னொருவருடையது என்ற நினைப்பே எங்கள் யாருக்கும் இருந்ததில்லை. ஏதோ நம் சொந்த வீடு, நிலம் மாதிரி... நம்ம ராமு திரையரங்கம். திரையரங்க உரிமையாளர், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் வேறு. சமயத்தில் அவரே டிக்கெட்டும் கொடுப்பார் அல்லது கிழிப்பார்.

எப்போதெல்லாம் ரஜினி படம் அல்லது எம்ஜிஆர் படம் ரிலீஸாகிறதோ அன்றைக்கு நிச்சயம் அவரது அட்டெண்டன்ஸில் நாங்கள் இருப்போம். அடுத்த நாள் தலைமையாசிரியர் அறைக்குக் கூப்பிட்டு லிஸ்ட்டைப் படிப்பார். ஆனால் அந்த மிரட்டலெல்லாம் நமக்கு ஜுஜூபி...!

பொதுவாக ரஜினி படங்கள் குறைந்த பட்சம் ஒரு வருடம் கழித்துதான் இங்கு ரிலீசாகும். அதுவரை யாரும் பொறுத்திருக்க மாட்டார்கள். சைக்கிளில் ஏறி ஒரு மிதி மிதித்தால் திருப்பத்தூர் டவுன். தடுக்கி விழுந்தால் திரையரங்குகள். அங்கு ஏற்கெனவே பார்த்த ரஜினி படங்களை, இன்னொரு முறை ராமு தியேட்டரில் பார்ப்பதற்கே முதல் மூன்று நாள் கூட்டம் அலைமோதும். எந்தப் படமாக இருந்தாலும் இங்கு அதிகபட்சம் மூன்று நாட்கள்தான். எம்ஜிஆர் / ரஜினி படமென்றால் 5 நாட்கள். இந்த திரையரங்கில் அதிக பட்சம் 33 நாட்கள் ஓடியது ஒரு ரஜினி படம் மட்டுமே!

அண்ணாமலை என்ற மிகப்பெரிய வெற்றிப் படத்தை ரஜினி கொடுத்திருந்த நேரம் அது... தமிழகத்தில் புதிய அரசியல் மாற்றம் வரப்போகிறது ரஜினியால் என்ற நம்பிக்கை ஆழமாக வேரூன்றத் தொடங்கியிருந்தது. இந்தப் படம்தான் அதிக நாட்கள் ஓடி சாதனை படைத்தது அந்த ஊரில்.

இந்த சூழலில் யாருமே எதிர்பார்க்காமல் ஒரு அதிசயம் நடந்தது-

அது... 1992 தீபாவளிக்கு ராமு திரையரங்கில் பாண்டியன் நேரடி ரிலீஸ்!

நம்பவே முடியவில்லை...

எப்படியாவது தங்கள் தலைவர் ரஜினி படத்தை நேரடியாக ரிலீஸ் செய்தே தீரவேண்டும், அந்தப் படத்தை குறைந்தபட்சம் 50 நாட்களாவது ஓட வைப்போம் என்று அந்தப் பகுதி ரஜினி ரசிகர்களும் ராமு திரையரங்க உரிமையாளருக்கு வாக்குறுதியளித்திருந்தனர் (இன்னொரு பக்கம், பாண்டியன் படத்தை ரிலீஸ் செய்யலேன்னா... தற்கொலை செய்து கொள்வேன் என்று உரிமையாளரை மிரட்டிவிட்டானாம் அவரது மகன்!)

அவரும் துணிந்து இறங்க, திருப்பத்தூர் டவுனே அதிர்ந்து விட்டது. இத்தனை பெரிய திரையரங்குகளை பின்னுக்குத் தள்ளிவிட்டு இந்த சின்ன கிராமத்தைச் சேர்ந்த ஒரு சாதாரண திரையரங்குக்கு எப்படி ரஜினி பட உரிமை கொடுத்தார்கள் என்ற அதிர்ச்சி அது. ஏற்கெனவே அண்ணாமலையை இரண்டு திரையரங்குகளில் வெளியிட்டு நல்ல லாபம் பார்த்திருந்ததால், பாண்டியனை நழுவ விட்டுவிட்டோமே என்ற ஆதங்கம்.

இடையில் ஒரு பெரிய திரையரங்க உரிமையாளர், ராமு உரிமையாளரிடம் சமரசம் பேசி திருப்பத்தூர் நியூ சினிமாவிலும் ரிலீஸ் செய்து கொள்ள ஒப்பந்தம் போட்டார்கள்.
படம் வெளியாவதற்கு ஒரு வாரம் முன்பிருந்தே கெஜல்நாயக்கன்பட்டியிலும் அதன் சுற்று வட்டாரங்களிலும் ‘பாண்டியனின் தீபாவளி’ தொடங்கிவிட்டது. வண்ண விளக்குகள் மின்ன புதிய அரங்கம் போல ஜொலித்தது ராமு.

ரஜினியின் 90 அடி கட்-அவுட்டுகள் இரண்டு மிரட்டலாய் நிறுத்தப்பட, அதைப் பார்ப்பதற்கென்றே எப்போதும் ஒரு கூட்டம் திரையரங்கைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது.

அக்டோபர் 24-ம் தேதி இரவே அமர்க்களப்பட்டது ஊர். முதல் காட்சி இரவு 12 மணிக்குத் தொடங்கியது. கிருஷ்ணகிரி நெடுசாலையில் அமைந்திருக்கிறது அந்தத் திரையரங்கு. டிக்கெட் கவுண்டரிலிருந்து குறைந்தது 300 மீட்டர் தூரத்துக்கு வரிசை நீண்டது. பருகூர், மத்தூர், நாட்றம்பள்ளி என அந்த சுற்று வட்டாரத்தின் பெரிய ஊர்களிலிருந்தெல்லாம் ரசிகர்கள் திரண்டு வந்து திருவிழாக் கோலாகலத்தை ஏற்படுத்தியிருந்தார்கள். விடிய விடிய பாண்டியன் சிறப்புக் காட்சிகள்...

ரஜினி கட் அவுட்டுக்கு மாலை மரியாதை பாலாபிஷேகமெல்லாம் அமர்க்களமாக நடந்தது. அந்த கூட்டத்துக்குள் சுற்றிச் சுற்றி வந்து, நண்பர்களையெல்லாம் ஒன்று திரட்டி, முதல் காட்சிக்கு வந்திருந்த ரசிகர்களுக்கு இனிப்புகள் கொடுத்து, கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையில் பைவ் தவுசண்ட் வாலா வெடித்தும் கொண்டாடிய அந்த தீபாவளி... இன்னும் எத்தனை தீபாவளிகள் வந்தாலும் மறக்க கூடுமா என்ன!!

பின்குறிப்பு: விதவிதமான விமர்சனங்கள் வந்தாலும், பாண்டியன் அந்த ஊரில் 51 நாட்கள் ஓடியது. ஷீல்டும் வழங்கப்பட்டுள்ளது, இன்னமும்கூட திரையரங்கில் மின்னிக்கொண்டிருக்கிறது. தயாரிப்பாளருக்கு ஓரளவு லாபம்.

அவருக்கு அதைவிடப் பெருமை, இந்தப் படத்தை நேரடியாக வெளியிட்டதால் ரஜினியை நேரில் சந்தித்துப் பேசும் வாய்ப்பு கிடைத்தது. தன் மகனையும் அழைத்துப் போய் ரஜினியைப் பார்த்துவிட்டு வந்தார்.

இதைத் தொடர்ந்து ரஜினி கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயாரித்து நடித்த வள்ளி படமும் இங்கு நேரடியாக ரிலீசானது. ரஜினியே இவருக்கு விருப்பப்பட்டு அந்தப் படத்தைக் கொடுத்தாராம்!


http://www.envazhi.com

1 comment:

மாதவராஜ் said...

தீபாவளி வாழ்த்துக்கள் !