சில தினங்களுக்கு முன்புதான் முன்னாள் அமைச்சரும் ரஜினியின் நலம் விரும்பிகளுள் ஒருவருமான சு.திருநாவுக்கரசர் எம்பி, ரஜினியின் அரசியல் பிரவேச அவசியம் குறித்து வெளியிட்ட கருத்துக்களைத் தெரிவித்திருந்தோம். அதன் பிறகுதான் அவர் பத்திரிகைகளுக்கு பேட்டியளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த நமது மதிப்புக்குரிய முன்னாள் அமைச்சரும், எம்ஜிஆர் கழகத் தலைவருமான ஆர்எம் வீரப்பன்.
ரஜினியின் அரசியல் பிரவேசத்துக்கு முதல் கட்டியம் கூறியவர் ஆர்எம்வீதான். பாட்ஷா படத்தின் வெள்ளி விழாவையும் அதில் ரஜினி நிகழ்த்திய புயல் வேக உரையையும், அதனால் எழுந்த அரசியல் பூகம்பங்களையும் மறுபடியும் ஒருமுறை இங்கே நினைவு கூற வேண்டியிருக்காது என நம்புகிறேன்.
ரஜினிக்காக மந்திரி பதவியையே துறந்தவர், ரஜினி கட்சி ஆரம்பித்தால் எதையும் செய்யத் தயாராக இருந்தவர் என அமரர் மூப்பனார் அவர்களால் வர்ணிக்கப்பட்டவர் ஆர்எம்வீ.
இன்று ‘காலத்தின் கட்டாயம்’ அவரை இன்னொரு அணிக்குள் நிற்க வைத்திருந்தாலும் (அந்த ஏற்பாட்டைச் செய்தவரும் ரஜினிதான்!), இந்த நிமிடமே ரஜினி பொது வாழ்க்கை குறித்த சாதக அறிவிப்பை வெளியிட்டால் தயங்காமல் முதல் ஆதரவுக் குரல் தரத் தயாராக இருப்பவர்.
அவரிடம் எவ்வளவோ விஷயங்கள் பற்றி பேசினேன்.
அதில் அவர் ரஜினியைப் பற்றி, அவரது அரசியல் பிரவேசம் குறித்து கூறியதில் ஒரு பகுதியை மட்டும் தருகிறேன்.
இனி ஆர்எம்வீ:
நல்லவர்கள் எல்லோரும் ஒருமித்த குரலில் ஒரு நல்லவரை அரசியலுக்கு வருமாறு வேண்டிக் கொண்டோம். புரட்சித் தலைவருக்குப் பிறகு அப்படியொரு வாய்ப்பு ரஜினிக்கு மட்டுமே அமைந்தது.
இது யாராலும் உருவாக்கப்பட்டதல்ல... நான் முன்பே சொன்ன மாதிரி, காலத்தின் கட்டாயத்தில் அந்த வாய்ப்பு அவருக்கு தானாகவே அமைந்துவிட்டது. அதை அவர் மறுதலித்ததும் அதன் பின் வந்த நிகழ்வுகளும் வரலாறு.
அந்த முடிவு குறித்து நான் எதுவும் சொல்லமாட்டேன். அது அவரது சொந்த முடிவு.
ஆனால் இன்றைக்கு பத்திரிகைகளில் பரபரப்பாக பல விஷயங்களை எழுதுகிறார்கள். அதைப் படிக்கும்போது எனக்குள் பழைய வரலாறு சற்றே எட்டிப் பார்த்தது.
இப்போது ரஜினி அரசியலுக்கு வருவது சாத்தியமா?
இது ஜனநாயக நாடு. அவர் அரசியலுக்கு வருவதை யார் தடுக்கப் போகிறார்கள்... ஆனால் முதலில் அதற்கு அவர் தயாராக இருக்கிறாரா எனத் தெரியவேண்டும்.
யூகங்களுக்கு பதில் சொல்வது சரியாக இருக்காது. இருந்தாலும் உங்களைப் போன்ற அபிமானிகள் வருந்திக் கேட்பதால் சொல்கிறேன்... அரசியலில் ரஜினியின் இடம் அப்படியே இருப்பதாகத்தான் நம்புகிறேன்.
காரணம் மக்கள் மனதில் அவர் மீதான மரியாதை கொஞ்சமும் குறைந்ததாகத் தெரியவில்லை. தாங்கள் எதிர்பார்த்த மாதிரி அவர் அரசியலுக்கு வரவில்லையே என்ற கோபத்தில் சிலர் அவரை விமர்சிக்கக் கூடும். ஆனால் நல்லவர்களின் புகழ் நீண்டகாலம் நிலைத்திருக்கும், புரட்சித் தலைவரைப் போல...
-நிறைய பேசினாலும் அதில் அளவோடு எடுத்துக் கையாளுமாறு கேட்டுக் கொண்டார் ஆர்எம்வீ. அரசியல் சாணக்கியராயிற்றே!
குறிப்பு: ரஜினி ஆதரவாளர்களிடம் கருத்துக் கேட்டால் இப்படித்தானே சொல்வார்கள் என நண்பர் ஒருவர் கருத்து தெரிவித்திருந்தார். ஒரு காரியத்தில் இறங்குகிறோம்... அதற்கு நாம் யாரைக் கைத்துணைக்கு அழைப்போம்... நம்மை விமரிசிப்பவர்களையா... நலம் விரும்பிகளையா?
பல நேரங்களில் விமரிசனம் எனும் பெயரில் வரும் வக்கிரக் கணைகள் நல்ல முயற்சிகளைத் துவண்டு போகச் செய்துவிடும்.
ரஜினி அடிக்கடி சொல்வதுபோல, ஒரு நல்ல விஷயத்தைச் செய்யும்போது நமக்கு வேண்டியவர்களையெல்லாம் துணைக்கு அழைத்துக் கொள்ளவேண்டும். அந்த செயலின் முடிவில் கிடைக்கும் வெற்றியை தனக்கும் சிறிது வைத்துக் கொண்டு மீதியை துணை நின்ற அனைவருக்கும் பகிர்ந்து அளிக்க வேண்டும். என்ன சரிதானே! http://www.envazhi.com
1 comment:
"அரசியலில் ரஜினியின் இடம் அப்படியே இருப்பதாகத்தான் நம்புகிறேன்"
இடம் அப்படியேதான் இருக்கும், ஓட்டு போட ஆள் இருக்காது.
Post a Comment