Friday, October 17, 2008

இதுவா பத்திரிகை தர்மம்! – ஆர்எம்வீ

ஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து 1995 முதல் வெளிப்படையாகப் பேசி வருபவர் ஆர்எம் வீரப்பன். ஒருவிதத்தில் அவர்தான் இந்த அரசியல் குறித்த பேச்சுக்கெல்லாம் பிள்ளையார் சுழி போட்டவர் என்பது அனைவருக்கும் தெரியும்.

ஆனால் அவரே, ரஜினி அரசியலுக்கு வரவே மாட்டார் என்றெல்லாம் கருத்துத் தெரிவித்ததாக சமீபத்தில் ஒரு பத்திரிகையில் குறிப்பிட்டிருந்தார்கள்.

இதைச் சொன்னவர் ஆர்எம்வீதானா? – இந்தக் கேள்வியை அவரிடமே கேட்டோம் இன்று.
அவரது பதிலை அப்படியே தருகிறேன். பத்திரிகை தர்மத்தின் லட்சணம் உங்களுக்கும் புரியும்!

ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றிய அவரது சமீபத்திய அறிக்கை குறித்தும் கருத்து கேட்டு என்னிடம் வந்தார்கள் சில பத்திரிகையாளர்கள். நானும் சில கருத்துக்களைச் சொன்னேன். ஆனால் அவர்களோ... நான் சொன்னவற்றில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில வரிகளை எடுத்து அவர்களுக்குப் பிடித்த மாதிரி கருத்து ஒன்றையும் வெளியிட்டுள்ளதைக் கண்டு உள்ளபடியே நான் வருத்தப்பட்டேன்.

இது பத்திரிகை தர்மமா... நான் சொன்னது என்ன?

“ரஜினி நல்ல மனிதர். எப்போதும் என்னிடம் அரசியல் குறித்து ஆர்வமாக பல விஷயங்களைப் பேசுவார், விவாதிப்பார். தனது முடிவான கருத்துக்களையும் கூறுவார். ஆனால் அரசியலுக்கு வரப்போவது குறித்து முடிவாக எதையும் சொல்லமாட்டார்.

எனக்குத் தெரிந்து ரஜினி இப்படித்தான். அவர் அரசியலுக்கு வருவதாக இருந்தால் எப்போதே வந்திருக்க வேண்டும். இப்போது அவருக்கு தனி அரசியல் இயக்கம் தொடங்கி நடத்தும் அளவுக்கு ஆர்வம் இருக்கிறதா எனத் தெரியவில்லை. இனி வருவாரா என்றும் உறுதியாகச் சொல்ல முடியாது.

மேலும் இந்த அறிக்கையில் தனது அரசியல் பிரவேசம் பற்றி அவர் எதையும் சொன்னதாக எனக்குத் தெரியவில்லை.

இப்போது அவரது தொண்டர்கள் சிலர் வேண்டாத வேலையில் இறங்கி அவருக்கு கெட்ட பெயரை உண்டாக்க முயற்சித்து வருகிறார்கள். தனிக் கட்சி, கொடி என்றெல்லாம் குழப்பம் ஏற்படுத்தி வருகின்றனர். அதற்கு முடிவு கட்டவே இந்த அறிக்கை. அவரது எதிர்காலத்தை நாம் தீர்மானிக்க முடியாது...”

-இதுதான் ஆர்எம்வீ சொன்னது.

அதை எப்படி வெட்டி, ஒட்டி திரித்து வெளியிட்டுள்ளன சில பத்திரிக்கைகள் என்பதை நீங்களே நேற்று பார்த்திருப்பீர்கள்!

இதைவிடக் கொடுமை, இன்னொரு பத்திரிகை ரஜினியின் அறிக்கை பற்றிய செய்திக்கு கொடுத்திருக்கும் தலைப்பு, ‘ரசிகர்களைக் கைவிட்ட ரஜினி!”
இவர்கள்தான் காஞ்சிபுரம் போய் நடராஜ குருக்களைத் தேடிப் பிடித்து, ரஜினி சோழி போட்டு நாள் பார்த்த கதையையெல்லாம் புலனறிந்து கொடுத்த நிகழ்காலத்தின் குரல்!

நல்லாருக்கு உங்க பத்திரிகை நியாயம்!

No comments: