Showing posts with label New Party. Show all posts
Showing posts with label New Party. Show all posts

Monday, October 13, 2008

அரசியல் இல்லையேல் சாகும் வரை உண்ணா விரதம்!


இது இன்று மாலை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் சிலர் அவசரமாகக் கூடி எடுத்துள்ள முடிவு.

இதுகுறித்து இன்றைய தட்ஸ்தமிழ் செய்தியை அப்படியே தந்து விடுகிறேன்...

“ரஜினிகாந்த் ரசிகர்கள் கோமா நிலையில் கிடக்கிறார்கள். அவர்களுக்கு உற்சாகத்தை அளித்து புத்துணர்வை அளிக்கும் வகையில், ரஜினிகாந்த் உடனடியாக கட்சி தொடங்க வேண்டும். இல்லாவிட்டால் தமிழகம் முழுவதும் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிப்போம் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு ரசிகர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என அவ்வப்போது குரல்கள் வெடிக்கும். இப்போதும் அதுபோலவே கோரிக்கைகள் வலுத்துள்ளன. ஆனால் இந்த முறை ரசிகர்கள் சற்று வேகமாக உள்ளனர். கோவை மாவட்ட ரசிகர்கள் ஒரு படி மேலே போய் தேசிய திராவிட மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் கட்சி ஒன்றை துவக்கினர். கட்சிக்கு கொடியையும் அவர்களே அறிமுகப்படுத்தினர்.

இனி கோவை மாவட்டத்தில் ரஜினி ரசிகர் மன்றம் எதுவும் செயல்படாது என்றும், தேசிய திராவிட மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரிலேயே இயங்குவோம் எனவும் அவர்கள் அறிவித்தனர்.

மேலும், சென்னையில் தங்களை ரஜினி சந்திக்கும் போது கட்சிக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் மறுக்கும் பட்சத்தில் அனைத்து மாவட்ட ரஜினி ரசிகர் மன்றங்களும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில 2 நாட்களுக்கு முன்பு சென்னையில் அனைத்து மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகள் கூடி ஆலோசனை மேற்கொண்டனர். இந்தச் சூழ்நிலையில் இன்று சென்னை மாவட்ட ரஜினி மன்றத்தினர் வள்ளுவர் கோட்டம் அருகே கூடி ஆலோசனை நடத்தினர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், 15ம் தேதி தலைவர் எங்களை சந்திப்பதாக கூறியிருக்கிறார். அன்றைய தினம் நாங்கள் அனைவரும் அவரை பார்க்க முடியாது. குறிப்பிட்ட சில பேர் மட்டும் தான் செல்ல முடியும்.

எனவே அன்றைய தினம் தலைவரிடம் என்ன பேச வேண்டும்; என்ன கூற வேண்டும் என்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் இது. இந்த கூட்டத்தில் எடுக்கும் முடிவு அனைத்து ரசிகர்களையும் கட்டுப்படுத்தும்.

தலைவர் நிச்சயமாக அரசியலுக்கு வரவேண்டும். ஒகேனக்கல், காவிரி பிரச்சனையை விட இன்று ரசிகர்கள் உணர்ச்சிவசப்பட்டு காணப்படுகிறார்கள்.

திரையுலகில் தன்னை திட்டியவர்களுக்கு கூட தனது படங்களில் வாய்ப்பு தரும் தலைவர், இத்தனை ஆண்டுகளாக அவருக்கு பின்னால் இருக்கும் எங்களுக்கு என்ன செய்திருக்கிறார்?

உறுப்பினர் பெருமையே போதும்!

நாங்கள் என்ன எம்பி பதவி, எம்எல்ஏ பதவியா கேட்கிறோம். அவர் அரசியல் கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்று தானே கேட்கிறோம். எங்களைக்கூட கட்சி நிர்வாகிகளாக போட வேண்டாம். ஆனால் அவர் கட்சி ஆரம்பித்து அதில் நாங்கள் உறுப்பினர் என்ற பெருமையே எங்களுக்கு போதும்.

தேர்தல் வரும் போதெல்லாம் அரசியல் கட்சிகளுக்கு ரஜினி ரசிகர்கள் தேவைப்படுகிறார்கள். ஆனால் தேர்தல் முடிந்த பிறகு, ஒரு ரேஷன் கார்டு பிரச்சனைக்கு சென்றால் கூட எங்களை ஒரு பொருட்டாக மதிக்க மாட்டேன் என்கிறார்கள்.

கோமாவில் கிடக்கிறோம்:

ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் தொடர்ந்து எங்களை தாக்கி வருகிறார்கள். நாங்கள் கோமா ஸ்டேஜில் கிடக்கிறோம். பல இடங்களில் எங்களுக்கு அவமானம் ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ரஜினி ரசிகர்களின் நிலைமை இதுதான்.

அரசியல் கட்சிக்கு மாற்றாக சமூக இயக்கம் ஆரம்பிப்பது என்பதெல்லாம் பேச்சுக்கு உதவாத காரியம். அதற்காக தலைவரை நாங்கள் எதிர்ப்பதாக அர்த்தம் கிடையாது. ஆனால் அரசியல் கட்சி ஆரம்பிப்பது அவசியமான ஒன்று.

சமீபத்தில் கோவை மாவட்ட ரசிகர்கள் தனி கட்சிக் கொடி ஆரம்பித்தது அவர்களுடைய நெருக்கடி நிலைமையை காட்டுகிறது. இருப்பினும் கட்சி, கொடி ஆகியவற்றை தலைவர் அறிவித்ததால்தான் மரியாதை. அதேநேரம் அவர்கள் மீது எந்த விதமான தவறான நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்பதுதான் எங்கள் நிலைப்பாடு.

ஒருவேளை அரசியல் கட்சி ஆரம்பிப்பது குறித்து தலைவர் மறுக்கும் பட்சத்தில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் ஈடுபடுவார்கள் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ரசிகர்களின் இந்தக் கொந்தளிப்பை எப்படி சமாளிக்கப் போகிறார் ரஜினி என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.”


-இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அனைவருமே ரஜினி சமூக நல இயக்கம் தொடங்கக் கூடாது, கட்சிதான் துவங்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்களின் இந்த தனிக்கட்சி, சாகும் வரை உண்ணாவிரத நெருக்கடிகள், ரஜினியை வேறு முடிவுக்குத் தள்ளிவிடக் கூடாது. எனவே சற்று நிதானம் தேவை!
http://www.envazhi.com

Wednesday, October 8, 2008

எம்ஜிஆருக்குப் பின் ரஜினிதான்! - திருநாவுக்கரசர்


சில தினங்களுக்கு முன் பாஜக தலைவரும், ரஜினியின் நலம் விரும்பிகளில் ஒருவருமான சு.திருநாவுக்கரசர் எம்.பி, ரஜினியின் அரசியல் எதிர்காலம் குறித்து அளித்த சிறப்புப் பேட்டியின் ஒரு பகுதியை கொடுத்திருந்தேன்.

கிட்டத்தட்ட அதே கருத்தை நேற்றைய மாலைப் பத்திரிகைகளுக்கும் பேட்டியாகக் கொடுத்திருந்தார்.

நமது நண்பர்களில் சிலர், திருநாவுக்கரசரின் பேட்டி வந்து என்ன ஆகப்போகிறது என நினைக்கலாம்.

எந்தக் காரியத்திலும் இறங்கும் முன் நமக்கான ஆதரவுக் குரலைப் பெறுவது மிக முக்கியம். அது தருகிற மன உறுதியும், குதூகலமும் தனியானது.

ரஜினி மட்டும் கட்சி ஆரம்பித்தால், நான்தான் அக்கட்சிக்கு பொதுச் செயலாளர். இந்தப் பணியை விரும்பி செய்வேன். என் மனைவி ராதிகா எந்த நிலையிலும் அவரது கட்சியில் பணியாற்றத் தயார் என்று பகிரங்கமாக சேனல்களுக்கெல்லாம் பேட்டி கொடுத்த சரத்குமார் இன்று என்ன நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார்?

ஆனால் 12 ஆண்டுகளுக்கு முன் ரஜினியோடு இணைந்து செயல்படவும் தயாராக இருந்த, மக்கள் செல்வாக்கு மிக்க தலைவர் திருநாவுக்கரசர். இந்தப் 12 ஆண்டுகாலத்துக்குப் பிறகும் அதே மரியாதையுடன் ரஜினிக்கு அவர் ஆதரவு தர முன் வந்திருப்பது சாதாரண காரியமா?

மீண்டும் அவரிடம் பேசினோம்:

ரஜினியை எதற்காக அரசியலுக்கு மீண்டும் அழைக்கிறீர்கள்?

மிக எளிய ஆனால் உண்மையான காரணம் என்ன தெரியுமா... ரஜினிக்கு நிஜ வாழ்க்கையில் நடிக்கத் தெரியாது. அதனால்தான் அவருக்கு இத்தனை சிக்கல்கள் வருகின்றன. இந்த மாதிரி நல்ல மனம் படைத்தவர்கள்தான் இன்று நமக்குத் தேவை.

ரஜினி என்றைக்கோ முதல்வராகியிருக்க வேண்டியது. ஐயா மூப்பனார் அவருக்காக ராஜபாட்டை போட்டுக் கொடுக்கத் தயாராக இருந்தார். ஆனால் ரஜினி மறுத்துவிட்டார்.

பதவியை மறுப்பது சாதாரண விஷயமா... பத்துப் பைசாவுக்கு பிரயோஜனமில்லாத ஏதாவது ஒரு சங்கத்தின் உறுப்பினர் பதவியைக் கூடத் துறக்க யாரும் தயாராக இல்லாத இந்த நாட்டில், சகல அதிகாரமும் நிறைந்த மாநில முதல்வர் பதவியையே வேண்டாம் என ஒருவரால் மறுதலிக்க முடியுமென்றால் அவர் சாதாரண மனிதராக இருக்க முடியுமா?

அதனால்தான் ரஜினியை மீண்டும் மீண்டும் அழைக்கிறோம்.

ஆனால் இந்த விஷயத்தில் ரஜினி ஒன்றும் சொல்வதாகத் தெரியவில்லையே...?

அது அவரது தனிப்பட்ட விருப்பங்களைப் பொறுத்தது. என்னைக் கேட்டால், முன்னெப்போதும் இல்லாத சரியான சந்தர்ப்பம் அவருக்கு இப்போதுதான் வாய்த்திருக்கிறது. பாராளுமன்றத் தேர்தல் நெருங்கும் இந்த வேளையில் தமிழகத்தில் உள்ள முன்னணிக் கட்சிகள் அனைத்தும் மக்களிடம் நம்பிக்கையை இழந்து நிற்கின்றன. கட்சி ஆரம்பித்துள்ள வேறு சில நடிகர்களின் நிலைமையும் சொல்லிக் கொள்கிற மாதிரி இல்லை. அவர்களையெல்லாம் விட மிகச் சிறப்பாக, திட்டமிட்டுச் செயல்படக் கூடியவர் ரஜினி.

இந்தத் தருணத்தை அவர் சரியாகப் பயன்படுத்தி, தன்னை வாழவைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்.

ரஜினியிடம் நீங்கள் இது குறித்துப் பேசினீர்களா?

பேசியிருக்கிறேன். எல்லாவற்றுக்கும் ஒரு சிரிப்பு சிரித்து வைப்பார்.

ரஜினி வந்தால் இந்த முறை ஆட்சியைப் பிடித்துவிடும் வாய்ப்பு எந்த அளவு உள்ளது?

ரஜினியைப் பற்றி மீடியாவில் வருகிற செய்திகளை விடுங்கள். ஆனால் கிராமங்களில் பொது மக்களிடம் அவருக்கு நல்ல செல்வாக்கு உள்ளது.

எனக்குத் தெரிந்து புரட்சித் தலைவர் எம்ஜிஆருக்குப் பிறகு அவருக்கு இணையான செல்வாக்கு பெற்ற ஒரே நடிகர் ரஜினி மட்டும்தான். கூடவே அவருக்கு மக்களிடமுள்ள மிஸ்டர் கிளீன் இமேஜ், லஞ்சத்தின் பிடியில் சிக்கித் தவிக்கும் மக்களின் வாக்குகளை அள்ளித்தரும்.

ரஜினி அரசியலுக்கு வந்தால், நானும் அவருக்குத் துணையாக இருப்பேன் என்று முன்பு கூறினீர்கள். அதே மன நிலையில் இபேபோதும் இருக்கிறீர்களா...?

நிச்சயமாக... அதே நேரம் அவர் தனிக் கட்சி கண்டால் பாஜக அவருடன் கூட்டணி வைக்க முயற்சிக்கும். அல்லது தனியாகவே நின்றாலும் நாங்கள் ஆதரவளிப்போம். ஒரு நல்லவர் வரட்டுமே... அதற்காகத்தான்!
http://www.envazhi.com

Tuesday, September 30, 2008

Exclusive: இப்போது கட்சி ஆரம்பித்தால் ஆட்சியைப் பிடிப்பாரா ரஜினி?

இதற்கான பதிலை நாமே சொன்னால் அது ரஜினி மீதுள்ள ப்ரியத்தில் கூறியதாகத்தான் நமது நண்பர்களே நினைப்பார்கள்.

மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்?

எத்தனை பேர் ரஜினிக்கு ஆதரவுக் கரம் நீட்டுவார்கள்?

இதோ அரசியல், வணிகம், சினிமா என பல துறைகளைச் சேர்ந்த ஒரு 10 விஐபிக்களிடம் நான் நேரடியாகப் பேசியவற்றிலிருந்து இந்தக் கேள்விக்கான பதிலாய் தருகிறேன்!

சு.திருநாவுக்கரசர் – பாஜக தலைவர்

அவர் எப்போதோ கட்சி ஆரம்பித்திருக்க வேண்டியவர். ஆனால் பல காரணங்களால் அது இன்னமும் நடக்கவில்லை. இன்றைய சூழலில் கூட முதல்வர் பதவிக்கான் வேட்பாளர் என்று அவர் தன்னை முன்னிறுத்தி மக்களைச் சந்தித்தால் தமிழ்நாட்டு அரசியலே தலைகீழாகிவிடும். ஆனால் செய்வாரா... தெரியவில்லை.
அவர் சொல்வதுபோல காலம்தான் இதற்கு பதில் சொல்லும்.

பி.வாசு – இயக்குநர்

ரஜினி சார் இன்னும் அரசியல் பத்தி வெளிப்படையா எதுவும் அறிவிக்கல. அதனால் நானும் ஓபனா பேச முடியாது. ஒருவேளை ஆரம்பிச்சார்னா, நிச்சயம் தமிழ்நாட்டு அரசியலை நிர்ணயம் செய்யும் சக்தியாக அவர் இருப்பார். இப்போதே அவர் அப்படித்தான் இருக்கிறார் என நம்புகிறேன்.

எனக்கென்னமோ அவர் மிகப்பெரிய உயரத்தைத் தொடப் போகிறார் என்று உள்ளுணர்வு சொல்கிறது. பார்க்கலாம்!

சோ – பத்திரிகையாளர்

எதுக்கு இப்போ இந்தக் கேள்வி?

அவர் முதலில் தன்னைத் தயார்படுத்திக்கிட்டு வரட்டும் சொல்றேன்.... இன்னொன்னு நான் யாரை பாராட்டுகிறேனோ அவர்கள் பெருசா வர்றதில்லை. அதனால இனி ரஜினியை நான் பாராட்டப் போறதில்லை. கடுமையா விமர்சிக்கப் போறேன்.

அப்பதான் அவர் எம்ஜிஆர் மாதிரி முதல்வர் ஆகி இன்னும் என்னோட விமரிசனங்களுக்கு ஆளாவார்னு நம்பறேன்...!!

மோகன்பாபு – நடிகர்

ரஜினி அரசியல் கட்சி தொடங்கி ஒரு வருஷம் கடுமையா கவனம் செலுத்தினாலே போதும், இந்த தமிழ்நாட்டின் அதிகாரம் அவர் கைக்கு வந்துடும்.

நான் பலமுறை அவன்கிட்ட சொல்லியிருக்கேன்...

‘டேய் கட்சி ஆரம்பிச்சு, இந்த ஜனங்களுக்கு இன்னும் நிறைய செய்டான்னு... ஆந்திரா அரசியல்ல நான் ஒரு எம்பியாக இருந்தேன். அவ்வளவுதான். அங்க பெருசா செய்ய முடியல. ஆனா ரஜினி கட்சி ஆரம்பிச்சான்னா உச்சத்துக்குப் போவான். இது அவன் ராசி. சினிமாவில் இப்போ அவன்தான் முதல்வர். அரசியலிலும் இது நிச்சயம் நடக்கும்... அப்போ இந்த மோகன்பாபுவை நினைச்சுக்கங்க.

எனக்கு ஒரு வாய்ப்புக் கொடுத்தான்னா... நான்கூட அவன் கட்சியில சேர்ந்துருவேம்பா... ஜோக் இல்ல.. சீரியஸாதான் சொல்றேன். எனக்கும் தமிழ்நாட்டுல செட்டில் ஆகற ஆசையிருக்கு!

எஸ்பி முத்துராமன் – இயக்குநர்

நான் இந்த கேள்விக்கு பதில் சொல்ல தயங்குவேன்னு நினைச்சீங்களா... மாட்டேன்.

கட்சி ஆரம்பிச்சு முழுசா இறங்கினார்னா, ஒரு முதல்வரை வைத்து அதிகப் படங்களை இயக்கியவன் என்ற பெருமை எனக்குக் கிடைக்கும். ஆனா அவர் இயல்புக்கு அரசியல் சரிப்படுமா என்பதை அவர்தான் தீர்மானிக்கணும்.

உங்க கேள்விக்கு பதில் கிடைச்சுடுச்சா....!

வெங்கட் பிரபு – இயக்குநர்

சார் கட்சி ஆரம்பிச்சா நிச்சயம் ஜெயிப்பார். ஆனா எங்களுக்கு சினிமாவின் ஒரே சூப்பர்ஸ்டாரான ரஜினி சாரும் வேணுமே... அதான் பிரச்சினை. என்னை மாதிரி உள்ளவர்கள் ரஜினியை அரசியல்ல பெரிய தலைவரா பார்க்கவும் ஆசைப்படறோம், சினிமாவில சூப்பர்ஸ்டாரா இருக்கணும்னும் ஆசைப்படறோம்.

பேராசைதான்... ஆனா சார் விஷயத்தில அந்த அளவெல்லாம் கிடையாது.

வடிவேலு - நடிகர்

‘பணம் சம்பாதிக்க ஆயிரம் தொழில் இருக்கு... அதை விட்டுட்டு இந்த புனிதமான அரசியலை ஏன்யா பயன்படுத்தறீங்க!’-ன்னு தன்னோட படத்துல கேட்டவர் அண்ணன் சூப்பர்ஸ்டார்.
எனக்கு ஒரு பிரச்சினை வந்த உடனே நான் கட்சி ஆரம்பிப்பேன், தேர்தல்ல நிப்பேன்னு கொதிச்சிட்டேன். நான் கண்டிப்பா தேர்தல்ல நிப்பேன். அதுல மாற்றமில்ல.

ஆனா எவ்வளவோ சோதனைகளுக்குப் பின்னும் அமைதியா, தன் வழியில போயிட்டிருக்கிற ரஜினி சாரை நினைச்சா எனக்கு பிரமிப்பா இருக்கு. இப்படியொரு மனுஷன் அரசியலுக்கு வரணும்... நிறைய செய்யணும்.

அன்புமணி – மத்திய சுகாதாரத் துறை அமைச்சர்

இது ஜனநாயக நாடு. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அதை நாங்கள் எதிர்க்கவில்லை. எந்தக் கொள்கையுமில்லாமல், வெறும் நடிகர் என்ற புகழை மட்டும் வைத்துக்கொண்டு அரசியலுக்கு வருவதைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம்.
ரஜினி வரட்டும்... தன் கொள்கைகளைச் சொல்லட்டும். அவற்றுக்கு மக்களிடம் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து அவரது அரசியல் வெற்றி அமையப்போகிறது.

தங்கராஜ் – ஐஏஎஸ் அதிகாரி

நல்ல விஷயம்தான். நான் அரசியலுக்கும் அப்பாற்பட்டு ரஜினியை விரும்புகிறேன். அவரது கொள்கைகளும், மக்களிடம் அவரது அணுகுமுறையையும் பொறுத்து அவரது அரசியல் வெற்றி அமையும். மற்றபடி நான் அரசியல் பேசக்கூடாது.

தொல் திருமாவளவன் – விடுதலைச் சிறுத்தைகள்

அவர் ஒரு புகழ்பெற்ற நடிகர் என்பதை விடுத்துப் பேசுகிறேன்... ரஜினியின் இயல்புக்கு அரசியல் சரிப்படும் என்று எனக்குத் தோன்றவில்லை. மற்றபடி நல்ல மனிதர்.
அவருக்கு அரசியல் களப்பணி தெரியாது. அவர் கட்சி ஆரம்பித்து களத்துக்கு வந்தால்தான் எதையும் கூறமுடியும். மீடியா பிம்பத்தையும் உங்களைப் போன்ற பத்திரிகையாளர் யூகங்களையும் மட்டுமே வைத்து நான் எந்தக் கருத்தைச் சொல்வது?

ரஜினி இதுவரை அரசியலில் இல்லை. அவர் அரசியலில் இறங்கட்டும், வெற்றி வாய்ப்பு குறித்துப் பிறகு பேசலாம்.