Showing posts with label Super Star. Show all posts
Showing posts with label Super Star. Show all posts

Thursday, October 9, 2008

கண்ணா வேணாம்... இது நல்லதுக்கில்ல!


நான் தீவிர ரஜினி ரசிகனாக்கும் என்று சொல்லிக் கொண்டே, ரஜினியைச் சிறுமைப்படுத்தும் முயற்சியில் சிலர் இறங்கியிருக்கிறார்கள்.

அவர்களில் முக்கியமானவர்கள் விஜய் மற்றும் அவரது தந்தை எஸ்ஏ சந்திரசேகரன்.
இன்று நேற்றல்ல... ஆரம்பத்திலிருந்தே இந்த இருவரும் இது போன்ற உள்ளடி வேலைகளில் தீவிரமாக இருந்திருப்பது சற்றே பின்னோக்கிப் பார்த்தால் புரியும்.

இன்றைய தேதிக்கு தன் சொந்த முகத்துக்கு பெரிய ஈர்ப்பு கிடைக்காது என்று தெரிந்து கொண்டு, ரஜினி ரசிகன் எனும் இரவல் முகத்தை மாட்டிக் கொண்டவர்தான் விஜய். அவர் இதுவரை நடித்துள்ள 48 படங்களில் 47-ல் ஏதாவது ஒரு காட்சியிலாவது ரஜினியின் முகம், அவர் நடித்த படத்தின் காட்சி அல்லது அவர் பெயராவது வருமாறு பார்த்துக் கொள்வார் விஜய்.

ரஜினி ரசிகர்களை ஈர்க்க இதைவிட்டால் வேறு வழி கிடையாது அவருக்கு.

ஆனால் இன்று ஏதோ ஒரு இடம் கிடைத்ததும், தீட்டிய மரத்திலேயே கூர் பார்ப்பது போல ரஜினியை மட்டம் தட்டும் காட்சிகளை விஜய்யின் தந்தை சந்திரசேகரன் தன் சமீபத்திய மூன்றாம் தரப் படமான பந்தயத்தில் வைத்திருந்தார்.

அந்தக் காட்சிகளைப் பார்த்தும் ரஜினி ரசிகர்கள் அமைதியாக இருக்கக் காரணம் இதைப் பெரிதுபடுத்தப் போய், தேவையில்லாமல் அந்த கேவலமான படத்துக்கு விளம்பரம் கொடுத்துவிடக் கூடாதே என்ற எண்ணத்தில்தான்.

ஆனால் இப்போதோ...

லயோலா கல்லூரி தயாரித்து வெளியிட்ட ஒரு சர்வேயைக் காட்டி, தந்தையும் மகனும் வானுக்கும் பூமிக்குமாய் குதிப்பதை தமிழ் மக்கள் கிண்டல் புன்னகையோடு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

நாம் முன்பே சொன்னது போல லயோலா சர்வே என்பது ஒட்டு மொத்த தமிழ் மக்களின் தீர்ப்பல்ல... அப்படி ஒரு சர்வே வெளியானதன் பின்னணி, அதில் குறிப்பாக விஜய்க்கு மட்டும் அளிக்கப்பட்ட முக்கியத்துவம், ரஜினியைச் சிறுமைப்படுத்த மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் ஒவ்வொன்றாக இப்போது வெளிவரத் தொடங்கியுள்ளன.

ரஜினியை விட விஜய் 0.2 சதவிகிதம் அதிக ஆதரவைப் பெற்றுவிட்டதாக அந்த கருத்துக் கணிப்பு கூறியுள்ளது. இதெல்லாம் ஒரு கணிப்பா... ரஜினி என்ற மனிதரின் நிஜ செல்வாக்கினை அரசியல், சினிமா எல்லைகளுக்கு அப்பாற்பட்டு இயங்கும் பொது மக்களே நன்கறிவார்கள்.

ஆனால் இதைப் புரியாத போலி ரசிகர் விஜய், ரஜினியை மிஞ்சும் ஆதரவு மக்களிடம் தனக்கு இருப்பதாகவும், தானே அடுத்த முதல்வர் என்றும் பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்து, தன்னைத் தானே புகழ்ந்து சந்தோஷம் கொள்கிறார். இந்த சர்வே முடிவை பெரிய பெரிய கட் அவுட்களில் எழுதி வைத்து பெருமையடித்து வருகிறார்.

சில பத்திரிகைகளில், தானே அடுத்த சூப்பர் ஸ்டார் என சிறப்புக் கட்டுரை வெளியிட ஏற்பாடு செய்து வருகிறார்கள் என்றும் அறிகிறோம்.

இவர்களுக்கு ரஜினி பாணியிலேயே நாம் சொல்ல விரும்புவது ஒன்றை மட்டும்தான்: கண்ணா வேணாம்... இது நல்லதுக்கில்ல, ரொம்ப நாள் தாங்காது!
http://www.envazhi.com

Saturday, September 20, 2008

யார் அடுத்த சூப்பர் ஸ்டார்? - மதன் நச்!


விகடன் போக்கில் ஆயிரம் குற்றம் குறைகள் இருந்தாலும், மதனின் புத்திசாலித்தனம் மற்றும் எழுத்து நடை இன்னும் கூட பல நடுநிலை வாசகர்களை நிறுத்தி வைத்திருக்கிறது.
இதை அவரிடம் சொன்னபோது சிரித்துக் கொண்டார். அதுக்குக் காரணமும் விகடன்தானே... என்றார் ஒருமுறை.

என்னதான் அவரைப் புகழ்ந்தாலும் அல்லது வெறுப்பேற்றினாலும் அப்படியா... என சாதாரணமாக கேட்டுவிட்டுப் போகும் குணம் அவருக்குண்டு. அதே போல ஹாய் மதன் கேள்வி – பதில் பகுதிகளில் மதன் சொல்லும் பதில்களுக்கு தனி மரியாதையே உண்டு.
தமிழ் இலக்கிய உலகின் சகலகலா வல்லவர் அமரர் சுஜாதாவுக்குப் பிறகு, அதே சுவாரஸ்யமும் நம்பகத் தன்மையும் கொண்ட பதில்களைத் தந்தவர் மதன் மட்டுமே. காரணம் ஒவ்வொரு பதிலுக்கும் அவர் செலவழிக்கிற உழைப்பு, அவரது விசாலமான வாசிப்பு...

ஒருமுறை இளையராஜா – ஏஆர் ரஹ்மான் ஒப்பிடுங்கள்... என்று ஒரு கேள்வி.
அதற்கு அவர் அளித்த நச்சென்ற பதில்தான் அதன்பிறகு அத்தகைய முட்டாள்தனமான ஒப்பீடுகளுக்கே ஒரு முற்றுப்புள்ளி வைத்தது.

மதன் பதில் இதோ: இளையராஜா- ரஹ்மான் இருவரையும் ஒப்பிடுவதே முட்டாள்தனம். ராஜா திரையிசையில் மட்டுமல்ல... சாஸ்திரிய இசையிலும் சிகரம் தொட்டவர். ரஹ்மான் தமிழ் திரையிசையை இன்னொரு தளத்துக்கு இட்டுச் செல்லும் முயற்சியில் இருக்கிறார். இந்த இருவேறு துருவங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கும் சிறுபிள்ளைத்தனம் இனியும் வேண்டுமா...

மீண்டும் ஒருமுறை இதேபோன்ற கேள்வி வந்தபோதும், முந்தைய தன் கருத்தை மாற்றிக் கொள்ளாமல் அதே போன்றதொரு பதிலைத் தந்தவர்.

கடந்த 2004-ம் ஆண்டு, பாபாவுக்குப் பிறகு புதிய படங்கள் எதையும் ரஜினி அறிவிக்காத நேரம். பொதுத் தேர்தல் முடிவுகளும் ரஜினியின் விருப்பத்துக்கு மாறாக அமைந்துவிட்டன. அவர் யாரை புறக்கணிக்கச் சொன்னாரே அந்தக் கட்சிக்கு அமோக வெற்றி கிடைத்திருந்தது.

அப்போது மதனின் கேள்வி பதில் பகுதியில் ஒருவர் இப்படிக் கேட்டிருந்தார்:

கேள்வி: இனி ரஜினி?

மதன்: இனி ரஜினி இனி கஜினி என எழுதுவேன் என்று எதிர்பார்த்தீர்களா... இல்லை. இந்த தேர்தலில் ரஜினி வாய்ஸ் எடுபடவில்லை என்பதற்காக அவர் அவ்வளவுதான் என்று சொல்லிவிட முடியாது. நிச்சயம் அவர் திரும்பி வருவார், முன்பைவிட பலமாக. என்னுடைய கவலையெல்லாம், கடைசி மேட்சில் டக் அடித்துவிட்டு ஓய்வுபெற்ற பிராட்மேனைப் போல அவர் ஆகிவிடக் கூடாது என்பதுதான்.


இதோ இந்த வார விகடனில், ரஜினிக்கு அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? என்ற கேள்விக்கு இப்படிக் கூறியுள்ளார்:

மதன்: சூப்பர்ஸ்டார் என்பது ஒரு டைட்டில். சிவாஜியையும், எம்ஜிஆரையும் நாம் சூப்பர்ஸ்டார் என்று அழைத்ததில்லை. ரஜினிக்கு மட்டுமே சூப்பர்ஸ்டார் பட்டத்தைத் தந்திருக்கிறோம். எதிர்காலத்தில் அவருக்கு இணையாக அல்லது அவரை விடப் புகழுடன் ஒரு நடிகர் வந்தாலும் அவருக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் தருவோமா என்பது சந்தேகமே!

இது எப்படி இருக்கு!!

Saturday, August 23, 2008

சிங்கம் சிங்கிளாகவே ஜெயிக்கும்!


ஆம்... கடவுள் நிறைய சோதித்துப் பார்த்து கடைசியில் கைவிடாமல் ரஜினி என்ற நல்லவரைக் காப்பாற்றியிருக்கிறார். (ஆனாலும் இது ஒரு தற்காலிக காப்பாற்றல்தான். இன்னும் நிறைய சோதனைகள் காத்திருக்கின்றன. அதற்கு முன் ரஜினி செய்ய வேண்டிய காரியங்களும் நிறைய உள்ளன. அடுத்து வரும் பதிவுகளில் அவற்றைப் பார்க்கலாம்.)

பேராசை பிடித்த திரையரங்கு உரிமையாளர்களின் நச்சரிப்பு மற்றும் மீடியாக்களின் பொய்ப் பிரச்சாரங்களை முழுமையாக நிறுத்த ரஜினியே முன் வந்து திரையரங்கு உரிமையாளர்களின் பிரிதிநிதிகளைச் சந்தித்து ஒரு சமரசத் தீர்வு கண்டிருக்கிறார்.

திரையுலகின் பவர்புல் அமைப்புகள் என்று பீற்றிக்கொள்ளும் நடிகர் சங்கம், தயாரிப்பாளர் கவு்சில், பிலிம் காட்டும் பிலிம் சேம்பர்... போன்ற அமைப்புகளின் தயவில்லாமல் தனியாகச் சாதித்திருக்கிறார் ரஜினி இம்முறையும். இந்த முயற்சியில் ஆரம்பத் தடைகள் இருந்தாலும் நாளை காலைக்குள் பிரச்சிநை முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுபற்றி ஆரம்பத்தில் வந்த செய்தி, அதன் பின்னர் ஏற்பட்ட திருப்பங்கள் ஆகியவற்றின் முழு வடிவத்தையும் அப்படியே தருகிறோம். அதற்கு முன் சில விஷயங்களில் ஒரு தெளிவு காண்பது நல்லது.

இனி விஜய், அஜீத், கமல் படங்களுக்கும் இதே சுறுசுறுப்பைக் காட்டுவார்களா தியேட்டர்காரர்கள்.... (மும்பை எக்ஸ்பிரசுக்கு என்ன கணக்கு?)

விஜயகாந்தின் 7 படங்கள் வரிசையாகத் தோல்விப் படங்களே... இந்த நஷ்டம் எப்படி ஈடுகட்டப்பட்டது என்ற பேருண்மையைச் சொல்வார்களா...

வெற்றிப் படங்களுக்கு பதில் வெற்றுப் படங்களை மட்டுமே தந்து கொண்டிருக்கும் சரத்குமாரின் படங்களை திரையிடும் போதும் இந்த நடைமுறை தொடருமா...

மேலே நாம் கூறிய அத்தனை நடிகர்களின் தோல்விப் பட நஷ்டங்களையும் ஈடு கட்டியவை ரஜினியின் படங்கள்தான். இன்று அவர் படத்துக்கே பொய்க் கணக்கு காட்டி நஷ்ட ஈடு கேட்டு மிரட்டிப் பார்க்கிறார்கள் தியேட்டர்காரர்கள்.

எல்லாம் நேரம்தான்...

இனி அந்த செய்தியின் ஒரு பகுதி- (From thatstamil.com)

குசேலன் விவகாரம் – சுமூகமாக முடித்து வைத்த ரஜினி!!

ஒரு வழியாக குசேலன் பட விவகாரம் முடிவுக்கு வந்துவிட்டது. குசேலன் படத்தின் நாயகன் ரஜினியே முன் நின்று இந்த நஷ்ட விவகாரத்தில் சுமுகமான தீர்வு கண்டு, திரையரங்க உரிமையாளர்களையும் திருப்தியோடு அனுப்பி வைத்திருக்கிறார். ஆனாலும் சிலரது அதிருப்தி முணுமுணுப்புகள் ஓய்ந்தபாடில்லை...!

இந்தப் படத்தைத் திரையிட்ட பிரமிட் சாய்மிரா நிறுவன திரையரங்குகள் தவிர, மற்ற திரையரங்குகளின் உரிமையாளர்கள் தாங்கள் செலுத்திய மினிமம் கேரண்டி தொகையை எடுக்க முடியாமல் நஷ்டத்துக்கு உள்ளானதாகக் குரல் எழுப்பினர்.

படம் வெளியாகி 23 நாட்கள் மட்டுமே முடிந்திருந்த நிலையில், படம் ஓட அவகாசம் தராமல், மக்களைப் படம் பார்க்க வரவிடாமல் தடுக்கும் வகையில் தியரையரங்க உரிமையாளர்கள் வேண்டுமென்றே பிரச்சினை செய்வதாக தயாரிப்பாளர்கள் குற்றம் சாட்டினர்.

பதிலுக்கு, இந்த தயாரிப்பாளர்களுக்கு எதிர்வரும் நாட்களில் ஒத்துழைக்க மாட்டோம் என திரையரங்கு உரிமையாளர்கள் எச்சரித்தனர்.

இந்நிலையில் சென்னையில் திரண்ட இவர்கள் அனைவரும், தங்கள் நஷ்டத்தை ஈடுகட்ட ரஜினிகாந்த் உதவ வேண்டும் எனக் கோரினர்.

நேற்று மாலை ரஜினிகாந்தை அவரது அலுவலகத்தில் சந்தித்த திரையரங்க உரிமையாளர் சங்க நிர்வாகிகள், தங்களுக்கு 70 சதவிகித மினிமம் கியாரண்டி தொகையைத் திரும்பத் தரவேண்டும் எனக் கோரினர்.

இறுதியில் பிரமிட் சாய்மிரா அல்லாத திரையரங்குகளுக்கு மட்டும் விற்கப்பட்ட தொகையைக் கணக்கிட்டு, அவர்களிடம் பெற்ற மினிமம் கியாரண்டி தொகையில் 33 சதவிகிதம் வரை அதாவது 7 கோடி ரூபாய் வரை திருப்பித் தர ஏற்பாடு செய்வதாக ரஜினிகாந்த் உறுதியளித்துள்ளார். அதை பன்னீர்செல்வம் தலைமையிலான திரையரங்கு உரிமையாளர் சங்கப் பிரதிநிதிகளும் ஏற்றுக் கொண்டதாகத் தெரிவித்தனர்.

இந்தத் தொகையை ரஜினிகாந்த் செலுத்த வேண்டியதில்லை என்றும் தயாரிப்பாளர்கள் மற்றும் பிரமிட் சாய்மிராவிடமிருந்து வாங்கிக் கொடுத்தால் போதும் என்றும் இந்தப் பிரதிநிதிகள் கூறியுள்ளனர்.

ஆனால் பாலச்சந்தரிடம் எக்காரணம் கொண்டும் பணத்தைக் கேட்டு தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும், தானே அந்தப் பணத்தைக் கொடுத்து விடுவதாகவும் ரஜினி கூறியதாக திரையரங்க உரிமையாளர் சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

தற்போது பிரமிட் சாய்மிரா மற்றும் ஜிபி விஜயகுமார் இருவரும் இந்தத் தொகையில் ஒரு பகுதியைத் தர முன்வந்துள்ளனர். இதைத்தவிர பிரமிட் சாயம்மிராவின் சரோஜா படத்தையும் குறைந்த விலையில் தர ஒப்புக் கொண்டுள்ளார்களாம். நஷ்ட ஈடு வேண்டாதவர்களுக்கு மட்டும் சரோஜாவை முழுவதும் இலவசமாகத் தருவதாகத் திட்டம்.

ஒரு பிரிவினர் எதிர்ப்பு:

மேற்கண்ட செய்தி வெளியான சிலமணி நேரங்களில், மீண்டும் ஒரு கும்பல் பிரஸ் மீட் என்ற பெயரில் நடத்திய நாடகம் பற்றிய குறிப்பு இது.

ரஜினியின் சமரச முயற்சியை அவர் எதிரில் ஒப்புக் கொண்டுவிட்டு வெளியே வந்ததும் வழக்கம் போல நேர்மையற்ற முறையில் நடக்க ஆரம்பித்து விட்டனர் சில தியேட்டர்காரர்கள்.

இவர்களில் 25 பேர் மட்டும் சமரசத் தீர்வுக்கு ஒத்துழைக்க மறுத்துள்ளனர்.

தங்களுக்கு 75 சதவிகித தொகை வேண்டும் என அவர்கள் கோரியுள்ளனர். அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் இந்த 75 சதவிகிதம் 80 ஆகிவிட்டது (சன் குழும கைங்கர்யம்?)

இப்படிப் பார்த்தால், ஒரு பைசா கூட வசூலாகவில்லை. மொத்த பணத்தையும் கொடுங்கள் என்கிறார்களா... அப்படியெனில் தியேட்டர்களில் முதல் வாரம் முழுக்க நாம் பார்த்தது ஆட்டு மந்தைக் கூட்டமா.. யாரும் காசு கொடுத்து டிக்கெட்டே வாங்கவில்லையா...

அடப் பாவிகளா... ரஜினி இந்த கொள்ளைக் கும்பலை அழைத்துப் பேசியதுதான் தவறு.

இந்த நிலை குறித்து கலைப்புலி சேகரன் இப்படிச் சொல்லியிருக்கிறார்:

திரையரங்கு உரிமையாளர்களின் கோரிக்கைக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்து, தான் ஒரு சிறந்த மனிதன் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார் ரஜினி.

ஆனால் இதையும் ஒப்புக்கொள்ளாமல் பிரச்சினை செய்தால், மேற்கொண்டு கடுமையான நடவடிக்கை எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை. எங்கள் தரப்பில் ரஜினிக்கு ஆதரவு தொடரும் என விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் ஜி.சேகரன் தெரிவித்துள்ளார்.