Showing posts with label kumudham. Show all posts
Showing posts with label kumudham. Show all posts

Wednesday, October 8, 2008

வேண்டாம் இந்த அர்த்தமற்ற ஒப்பீடு!


பத்திரிகைகளில் ரஜினியைப் புகழ்ந்து எழுதினால் மகிழ்கிறீர்கள்... விமர்சித்தால் கோபித்துக் கொள்கிறீர்கள். எப்போதும் நாங்கள் துதி பாடிக் கொண்டேஇருக்க முடியுமா...?

-இது பிரபல வார இதழின் பொறுப்பாசியரியராக உள்ள நம் நண்பர் கேட்ட கேள்வி.

அவருக்கு நான் சொன்ன பதிலை இங்கே குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.

‘நல்லவர் ஒருவரைப் பற்றி நல்லவிதமாகவே எப்போதும் எழுதுவதில் தவறில்லை. இன்னொன்று பொது வாழ்க்கையில் பத்திரிகைகள் குற்றம் சாட்டும் அளவுக்கு ரஜினி எந்தத் தவறும் செய்யவில்லை. அரசியலுக்கு அவர் வருவது, கட்சி ஆரம்பிப்பது எல்லாம் அவருக்குள்ள சூழ்நிலைகளைப் பொறுத்த விஷயம். ஆனால் அதற்காக மட்டுமே அவர் மீது கடும் விமர்சனங்களை வைப்பதில் என்ன அர்த்தமிருக்கிறது...

கட்சி ஆரம்பிக்கவில்லை என்பது ஒரு குற்றமா..!

தொடர்ந்து பத்திரிகைகள் அவரது அரசியல் பிரவேசம் குறித்து யூகங்கள் வெளியிடுவதும் பின்னர் அந்த யூகங்கள் பொய்த்துவிடும் நிலையில் அவரைத் திட்டித் தீர்ப்பதும் என்ன வகை பத்திரிகை தர்மம்?’

இந்தப் பதில் அவரை அமைதியாக்கிவிட்டது.

ரஜினியைப் பற்றி எழுதப்படும் நல்ல விஷயங்கள் நாடறிந்தவை... குற்றச்சாட்டுகள் இட்டுக் கட்டப்பட்டவை. அவர் யாரையும் சுரண்டியோ, ஓட்டு வாங்கி பதவிக்கு வந்து ஏமாற்றிக் கொண்டோ இல்லை, குற்றம் சாட்டிப் பேச. இதைப் புரிந்து கொண்டாலே போதும், அவர் மீதான விமர்சனங்கள் அடியோடு நின்றுபோகும்.

இன்று வெளியாகியுள்ள ரிப்போர்டர் வாரமிருமுறை இதழிலும் ரஜினிதான் கதாநாயகன். வழக்கம்போல பத்திரிகையும் அமோக விற்பனை!

வழக்கத்துக்கு மாறாக இந்த இதழில் சற்று தெளிவான, பரந்த பார்வையுடன் கூடிய கட்டுரை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள்.

ஆனால் தலைப்பில் மட்டும் வழக்கம் போல வியாபாரத்தனம்.

தலைப்பு: யார் அடுத்த சூப்பர் ஸ்டார்? – ரஜினியை உசுப்பி விட்ட கருத்துக் கணிப்பு!

இது என்ன அபத்தம்... யாரை யாருடன் ஒப்பிடுவது?

யார் அடுத்த சூப்பர்ஸ்டார் என இனி கேள்வி எழுப்புவதில் அர்த்தமே இல்லை. இந்த விஷயத்தில் ஒரு மூன்றாம் தர கருத்துக் கணிப்புக்காக கவலைப்படும் சாதாரண நபரும் அல்ல சூப்பர் ஸ்டார்.

இனி இந்தியத் திரையுலகைப் பொறுத்தவரை சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் ரஜினிக்கு மட்டுமே. உலக சூப்பர் ஸ்டார் என எல்லோரும் அவரை கொண்டாடும் வேளை நெருங்கும் தருணத்தில் இந்த மாதிரி அபத்தங்களை மீடியா தவிர்க்க வேண்டும். மற்றபடி தலைப்புக்கும் கட்டுரைக்கும் சம்பந்தமில்லை என்பதால், கட்டுரையின் நல்ல விஷயங்களைப் பாராட்டாமல் இருக்க முடியாது.

இந்தக் கட்டுரையின் ஆரம்பம் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது.

படை பரிவாரங்களுடன் ரோம் நகரை நெருங்கிவிட்டார் ஜூலியஸ் சீசர். இடையே நொப்பும் நுரையுமாகக் கொந்தளித்து ஓடும் ரூபிகான் ஆறு. ‘ஆற்றைக் கடந்து போய் ரோமைக் கைப்பற்றுவதா? இல்லை அப்படியே பின்வாங்கி விடுவதா?’ என்ற அறத்துன்பமான நிலை.

அப்போது சீசர் எடுத்த முடிவு ரூபிகான் ஆற்றைக் கடப்பதுதான். அதன்பின் நடந்ததெல்லாம் வரலாறு.

சீசரைப் போல சூப்பர் ஸ்டார் ரஜினியும் அவரது வாழ்க்கை வரலாற்றில் ஒரு ரூபிகான் ஆற்றின் பக்கம் வந்து சேர்ந்து விட்டதாகவே தோன்றுகிறது, அண்மையில் அவர் தொடர்பாக நடக்கும் சில நிகழ்வுகளைப் பார்க்கும்போது....


-இந்த சிறப்பான ஆரம்பம் இறுதி வரை தொடர்வதுதான் இக்கட்டுரையின் நல்ல அம்சம் (இங்கே தரப்பட்டுள்ள கட்டுரையின் பக்கங்களைக் கிளிக்கிப் பெரிதாக்கிப் படிக்கவும்!).

மற்றொரு சிறப்பு, நமது நண்பர் சுந்தரின் (http://www.onlyrajini.com) கருத்துக்களும் இந்தக் கட்டுரையில் இடம் பெற்றிருப்பது, அக்கட்டுரையை சரியான பாதையில் கொண்டு போய் முடிக்க உதவியிருக்கிறது.

ரஜினியைத் தாண்டிவிட்டார் விஜய் என்ற லயோலாவின் கருத்துக் கணிப்புக் குறித்த கேள்விக்கு சுந்தர் அளித்துள்ள பதில் சிறப்பாக இருந்தது. இதோ அந்தப் பகுதி:

“உடுமலையில் குசேலன் படப்பிடிப்பில் கலந்து கொண்டு சென்னை திரும்பும் வழியில் கோவை விமான நிலையத்துக்கு ரஜினி வருகிறார் என்ற தகவல் கசிந்ததும் சில மணிநேரங்களில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் விமான நிலையம் முன் குவிந்து விட்டார்கள். அப்போது, அவர்களின் நெரிசலில் சிக்கிய ரஜினியை விமான நிலையத்துக்குள் அழைத்துச் செல்ல அவரது உதவியாளர்கள் திணறிவிட்டார்கள்.

கடந்த 1989-ல் தனது நண்பருக்காக குளிர்பான அறிமுக விழாவில் கலந்து கொள்ள ரஜினி திருச்சி சென்ற போது, அவருக்கு கிடைத்த வரவேற்பை யாரும் மறந்துவிட முடியாது. இத்தனைக்கும் அந்த விழாவுக்கு முதல்நாள் இரவுதான் விழாவில் ரஜினி கலந்து கொள்கிறார் என்று அறிவித்தார்கள்.

ராமராஜன்(!) தொடங்கி கமல் வரை ரசிகர் மன்ற மாநாடுகளை நடத்தி விட்டார்கள். ஆனால், இதுவரை ரஜினி தனது ரசிகர்களை சென்னையைத் தவிர்த்து வேறு இடங்களில் சந்தித்ததே இல்லை. அப்படி ரஜினி மட்டும் ரசிகர்களைச் சந்திக்க ஒரு விழா நடத்தினால், அது தமிழகம் இதுவரை பார்த்திராத மிகப் பெரிய திருவிழாவாக இருக்கும். இதில் ரஜினி செல்வாக்குக் குறைந்து விட்டது என்று யாரோ சொல்கிறார்கள் என்பதையெல்லாம் எந்த ரசிகரும் நம்பத் தயாராகவே இல்லை...''


-கட்டுரையை முழுவதும் படியுங்கள்!
http://www.envazhi.com

Sunday, September 21, 2008

கதை-வசனம் கரெக்டாதான் இருக்கு... ஆனா நம்பத்தான் முடியல!


குமுதம் ரிப்போர்ட்டர் இந்த இதழைப் படித்துவிட்டு நமது நெருங்கிய நண்பரும் பத்திரிகையாளருமான ஒருவர் அடித்த காமெண்ட் இது. காரணம் கடந்த காலம் உணர்த்தும் உண்மைகள் அப்படி...

இந்த பிளாக்கில் நாம் பதிவு செய்துள்ள சில விஷயங்களைப் படித்துவிட்டு, ரஜினி ரசிகர்களும், நடுநிலையாளர்களும், சக ப்ளாக்கர்களும் கூட நம்ப முடியாமல், ‘இதெல்லாம் உண்மைதானா...?’ என என்னிடமே கேட்டிருக்கிறார்கள்.

ரஜினி ஒரு சமூக நல அமைப்பைத் தொடங்கி அதை ரசிகர்களிடம் ஒப்படைக்கப் போகிறார்... அல்லது அந்த அமைப்பின் செயல்பாடுகளைப் பார்த்துவிட்டு பின்னர் அதையே அரசியல் இயக்கமாக மாற்றப் போகிறார் என்ற பேச்சுக்களை நாமும் கூட முழுமையாக நம்பவில்லைதான். ஆனால் வழக்கத்துக்கு மாறான சில வேலைகளில் ரஜினியின் நெருங்கிய வட்டத்தினர் ஈடுபட்டு வருவதைப் பார்க்கும்போதுதான் இந்தப் பேச்சுக்களை நம்ப வேண்டி வருகிறது.

இந்த இதழ் ரிப்போர்ட்டரில் எழுதப்பட்டுள்ள ரஜினி டிவி விஷயம் ஏதோ இன்று நேற்று உருவானதல்ல... பல மாதங்களாகவே பேசப்பட்டு வருவதுதான். ஆனால் இதனை ரஜினியின் மகள் சவுந்தர்யா ரஜினியின் பொது வாழ்க்கையை மனதில் கொண்டு ஆரம்பிப்பதுபோல் தெரியவில்லை.

ஒரு திரைப்படம் அல்லது இதர கமர்ஷியல் ப்ராஜக்ட் போலத்தான் இதுவும். இந்த யோசனை தனக்கு இருப்பது பற்றியும், ரஜினியின் அனுமதிக்காக காத்திருப்பதாகவும் ஏற்கெனவே சவுந்தர்யா சில பத்திரிகையாளர்களிடமும் பேசியிருக்கிறார். இப்போது ரஜினியின் அக்டோபர் சந்திப்பு, அரசியல் முயற்சி ஆகியவற்றோடு இதை வசதியாக முடிச்சுப் போட்டிருக்கிறார்கள்.
இருந்தாலும் நண்பர் சொன்னதுபோல், கதை வசனத்தை நன்றாகத்தான் எழுதியிருக்கிறது குமுதம் குழு.

பத்திரிக்கை விற்க வேறு வழியே தெரியவில்லை... !

இன்றைய சூழலில் யாரைப் பற்றி எழுதினாலும் மக்கள் படிக்க ஆர்வம் காட்டுவதில்லை. கருணாநிதி, ஜெயலலிதா, விஜய்காந்த், சரத்குமார் அல்லது கமல்ஹாசன் என யாரைப் பற்றி எழுதினாலும் அவை வெறும் செய்திகள் அல்லது கிசுகிசுக்கள்தான். பத்திரிக்கை விற்பனையைத் தூண்டும் சக்தி அந்த எழுத்துக்களுக்குக் கிடையாது.
ஆனால் ரஜினி பற்றிய எழுத்துக்களுக்கு மட்டும் – என்னதான் மோசமாகவே எழுதினாலும் - தனி ஜீவன் வந்துவிடுகிறது.

இந்த ரிப்போர்ட்டர் இதழே கூட அதற்கு ஒரு சாட்சிதான்.

வழக்கத்துக்கு மாறாக ஒருநாள் முன்னதாகவே இந்த இதழ் கடைகளுக்கு வந்துவிட்டது. ஆலந்தூர் சுரங்கப்பாதை அருகே ஒரு கடையில் போஸ்டர் தொங்கவிடும்போதே அதை வேடிக்கைப் பார்க்க ஐந்தாறுபேர் நின்றுவிட்டனர்.

‘திரும்ப ஆரம்பிச்சிட்டாங்கடா...’ என்று முணுமுணுத்தபடி அந்த இதழை வாங்கத் தொடங்கினர். நான் திரும்ப அந்தக் கடைக்கு வந்த போது ஒரு மணி நேரத்துக்குள் 25 இதழ்கள் விற்றுவிட்டாக சந்தோஷத்துடன் சொன்னார் கடைக்காரர்.

‘இந்த சூட்சுமம் தெரிஞ்சதாலதான் தொடர்ந்து ரஜினி மேட்டரா எழுதித் தள்றாங்க... எப்படியும் ரோபோ படம் வரும் வரை இப்படியே காலத்தை ஓட்டிட முடியும். வேற எந்த நடிகர் பத்தி நியூஸ் போட்டாலும் வாங்க மாட்டேங்கறாங்க... ரஜினி அட்டைப்படம்னா அன்னிக்கே வித்துத் தீந்துடும்... ஜனங்க அவர்மேல அவ்வளவு நம்பிக்கை வச்சிருக்காங்க...’ என்றார் கடைக்காரர்.

இதோ... அடுத்த இதழ் விகடனுக்கும் ரஜினிதான் அட்டைப்பட நாயகனாக அருள்பாலிக்கப் போகிறார்!

எல்லாம் சரிதான்... இப்படியெல்லாம் சம்பாதித்துவிட்டு படம் ரிலீசாகும்போது வேண்டுமென்றே பொய்யையும் புழுதியையும் வாரித் தூற்றுகிறார்கள்...
கேட்காத மன்னிப்பைக் கேட்டதாக எழுதினார்கள்... நல்ல படத்தை ஓடவிடாமல் செய்தார்கள். நல்லதே செய்தாலும் தமிழர்களுக்கு எதிரானவராக ரஜினியைத் திட்டமிட்டுச் சித்தரிக்கிறார்கள்.
நியாயம்தானா?

Friday, September 5, 2008

இது குமுதத்தின் முறை!


போனவாரம் ரஜினியின் இமேஜ் சரியத் தொடங்கிவிட்டதாக, கொலம்பஸூக்கு இணையான அரிய கண்டுபிடிப்பை வெளியிட்டு தனது முட்டாள்தனத்தைப் பறைசாற்றிக் கொண்டது விகடன்.

இந்த வாரம் குமுதத்தின் முறை. அவர்கள் கேட்டிருப்பது ஒரே கேள்விதான். அதாவது, ரஜினியின் வாய்ஸூக்கு மவுசு குறைந்துவிட்டதா?

இதில் ரஜினியின் வாய்ஸூக்கு இன்னும் மவுசு இருப்பதாக, அதாவது ரஜினிக்கு ஆதரவாக 86 சதவிகிதமும், மவுசு குறைந்து விட்டதென 10 சதவிகிதமும், தெரியவில்லை என 4 சதவிகிதத்தினரும் தெரிவித்திருந்தார்கள்.

எத்தனை பேரிடம் கேட்ட கேள்வி இது, எத்தனை பேர் பதில் சொன்னார்கள், எந்தெந்த ஊர்களில் நடத்தப்பட்டது என்ற விவரங்கள் எதையும் குமுதமும் தரவில்லை. ஜனங்களுக்கு என்ன தெரியும் என்று நினைத்து விட்டார்களோ... அல்லது சர்வே நடத்தியவர்களுக்கே விஷயம் தெரியாதா... புரியவில்லை.

இருந்தாலும் இந்த சர்வே கட்டுரை முழுக்க ரஜினியின் புகழ் பாடும் வகையில் பாலச்சந்தர், எஸ்பி முத்துராமன், ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் சத்தியநாராயணா, ரஜினியின் நண்பர்கள் சோ எஸ் ராமசாமி, பாபு ராஜேந்திரன் ஆகியோரிடம் கருத்துக்களைப் பெற்று பதிவு செய்துள்ளனர்.

‘இருபத்தைந்து வருஷமா அவர் சூப்பர் ஸ்டாரா நிக்கறாருன்னா சும்மாவா... அவரது படங்களுக்குப் போட்டியே அவரோட அடுத்த படம்தான் சார்...’ என ஒரு இளம் பெண் கூறியிருப்பதையே பல இளைஞர்களும் வழிமொழிந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர் இக்கட்டுரையில்.

ரஜினியின் எந்தப் படத்திலும் நஷ்டம் வந்ததே இல்லை என முத்துராமனும், எனக்கு உதவி செய்ய வந்த அந்தப் புண்ணியவானுக்கு இப்படி இக்கட்டு ஏற்பட நானே காரணமாகிவிட்டேனே, என பாலச்சந்தரும் உருக்கமாகக் கூறியிருந்தனர்.

ஆயுளில் பாதி நாட்களைக் தலைவருடனே கழித்துவிட்டேன். தலைவரைப் பற்றி பெரிய மனிதர்கள் பெருமையாகப் பேசுவதைக் கேட்பதே தனக்கு சந்தோஷமான விஷயம் என ரஜினி மன்றத் தலைவர் சத்யநாராயணா தெரிவித்திருந்தார்.

நல்லது... ஒரு நல்ல விஷயத்தை ஒப்புக் கொண்டு, வெளியிட்ட குமுத்துக்கு நன்றி!

நியாயமா?

ஏன்... இதே இதழில், குசேலன் வெளியான அடுத்த வாரம் ஒரு அஞ்ஞானி, கடிதம் என்ற பெயரில் ரஜினி குறித்து ஒரு குப்பைக் கட்டுரை எழுதியிருந்தாரே... அப்போது தெரியவில்லையா ரஜினியின் செல்வாக்கு என்ன என்பது?

இவர்களுக்கு நிச்சயம் தெரிந்துதானிருக்கிறது.

ஆனால் அதை வெளியில் லட்சக்கணக்கானோர் படிக்கும் ஒரு ஊடகத்தின் மூலம் வெளிப்படுத்தி, குசேலன் என்ற படத்துக்கு பாஸிடிவ் இமேஜ் ஏற்படுத்துவதை இவர்கள் விரும்பவில்லை.

குசேலன் ரிலீசாவதற்கு ஒரு நாள் முன்பே படத்துக்கு ஓஹோவென விமர்சனம் எழுதிய இதே குமுதம், அடுத்த வாரமே அஞ்ஞானிகளை விட்டு காலை வாருகிறது. போன இதழில் கூட ரஜினிக்கு சவுந்தர்யா அட்வைஸ் என இஷ்டத்துக்கும் அவிழ்த்துவிட்டுள்ளது.

எதற்காக... எல்லாம் வியாபார உத்தி!

எனவே... ஆஹா இவர்கள் பரவாயில்லையே... நமக்கு ஆதரவாக சர்வே போட்டிருக்கிறார்களே எனறு மயங்கிவிட வேண்டாம் ரஜினியின் ரசிகர்கள்.
இவர்கள் ஒருபோதும் ரஜினிக்கு மனப்பூர்வமான ஆதரவைத் தெரிவிக்க விரும்பாதவர்கள்.

இதே குமுதம் அரசு பதில்களில் மறைமுகமாக ரஜினியைத் தாக்கி, அமிதாப்பைத் தூக்கியிருப்பதையும் மறந்துவிட வேண்டாம்.

அப்படியெனில் ரஜினி பற்றி யாருமே எதையும் எழுதக் கூடாதா..?

நியாயமாகப் பார்த்தால் ரஜினியைப் பற்றி எழுத இவர்கள் யாருக்கும் முதலில் குறைந்தபட்ச உரிமை கூடக் கிடையாது.

இவர்கள் ஒன்றும் அவரை ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுத்து பொது வாழ்க்கையில் அமர்த்திவிடவில்லை. அல்லது, சும்மா கிடந்தவரைக் கூப்பிட்டு கோடிக் கணக்கில் கொட்டிக் கொடுத்து விடவில்லை.

கஷ்டப்பட்டு 30 வருடங்கள் நடித்துச் சம்பாதித்தார். தன்னோடு இருந்த அத்தனைப் பேருக்கும் சம்பாத்தியத்துக்கு வழி செய்து கொடுத்தார். எத்தனையோ சாதாரண தயாரிப்பாளர்களை நட்சத்திர தயாரிப்பாளர்களாக்கினார். இதோ இப்போதும் கூட தன் படத்தில் பணியாற்றிய பின்னணி தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு லட்சக் கணக்கில் அள்ளிக் கொடுத்திருக்கிறார். அதுவும் தான் கவுரவ வேடத்தில் நடித்த ஒரு படத்துக்காக.

காசு கொடுத்து யாரையும் அவர் மன்றத்துக்கு அழைக்கவில்லை, பேனர் கட்டச் சொல்லவில்லை. அவர் மீதான ஈர்ப்பில், அன்பில் தானாகச் சேர்ந்த கூட்டம் இது. அதனால்தான் மற்ற எல்லோரையும் விட ரஜினி ரசிகர்களுக்கு ஒரு தனி மரியாதை இப்போதும். அவர்கள் சொல்வது கூட நட்சத்திர அந்தஸ்துடன் செய்தியாகும் தகுதியைப் பெறுகிறது.

ஒரு இஸ்திரிப் பெட்டியை வழங்கி போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டு, அன்று மாலைப் பத்திரிகையிலேயே வண்ணத்தில் அந்தச் செய்தி வெளியாகியிருக்க வேண்டும் என அலையும் சரத்குமார்கள், விஜய்காந்துகளுக்கு மத்தியில் லட்சணக்கணக்கான ரூபாய் பெறுமானமுள்ள உதவிகளை சத்தமில்லாமல் செய்துவரும் ரஜினியைப் பற்றி அவதூறு பரப்ப இவர்கள் யாருக்குமே உரிமை கிடையாது.

நியாயமாக இதுவரை இவர்கள் பரப்பிய அவதூறுகளுக்கு ரஜினி சற்றே விரலசைத்திருந்தால் கூட கம்பி எண்ணிக் கொண்டிருந்திருப்பார்கள்.

ஆனால் ரஜினி இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்ட, விமர்சனங்கள் தீண்டாத மனிதராக தன்னை மாற்றிக் கொண்டுள்ளார்.

ஒன்றுமில்லை... விஜயகாந்துக்கு எதிராக ஒரே ஒரு கட்டுரையை எந்த அஞ்ஞானியையாவது விட்டு எழுதச் சொல்லுங்களேன் பார்ப்போம்... அல்லது எந்த ஒழுக்க நெறிமுறைகளுக்கும் உட்படாத கமல்ஹாசனை விமர்சனம் செய்து ஒரு கட்டுரை எழுதச் சொல்லுங்கள் பார்க்கலாம். இவர்களால் நிச்சயம் முடியாது.

ஆனால் ரஜினி...

தன்னைப் பற்றி நல்லவிதமாக எழுதிச் சம்பாதிப்பவர்களையும் கண்டு கொள்வதில்லை, திட்டி எழுதி கல்லா கட்டும் நச்சுப் பத்திரிகைகளையும் கண்டு கொள்வதில்லை.

மக்களும், தனக்கு மேலுள்ள மகான்களும் பார்த்துக் கொள்வார்கள் இந்தக் கும்பலை என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை அவருக்கு. தனக்காக ரசிகர்கள் ஆவேசப்பட்டு எந்த வித ஆபத்திலும் மாட்டிக் கொள்ளக் கூடாது என்ற நிஜமான அக்கறையில், ரசிகர்களை இம்மாதிரி சோதனையான கட்டங்களில் மட்டும் சந்திப்பதே இல்லை. ஒரு நல்ல தலைவனுக்குரிய தகுதி இதுதான்.

நல்லவர்களைப் பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை... குமுதம், விகடன், நக்கீரன் போன்ற பத்திரிகைகள் புரிந்து கொண்டு அமைதியாக இருந்தால் கூடப் போதுமே!

உருவாகிறது ஒரு பரபரப்பு கவர் ஸ்டோரி!


‘ஏ... என்னப்பா... இந்த இஷ்யூவுக்கு என்ன போடப்போற... முன்ன கூட்டிச் சொல்லிடுய்யா... நானும் பார்த்துக்கிறேன். அப்புறம் நம்மைப் போட்டு ராவிடுவானுங்க..’
-இது தமிழகத்தின் பிரபலமான இரண்டு வாரமிருமுறைப் பத்திரிகை நிருபர்கள் தினசரி பேசிக் கொள்ளும் வழக்கமான வசனங்கள்.

சென்னை பெருநகரில் மட்டுமல்ல... ஒவ்வொரு மாவட்டத்திலுமுள்ள அவர்களின் நிருபர்கள் இப்படித்தான் கூடிப் பேசி வாரமிருமுறை கும்மியடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரே விஷயத்தை தலைப்புச் செய்தியாகச் சொல்ல இரண்டு குழுமம் இரண்டு வித பத்திரிகைகளை நடத்துவானேன்..!

நாம் என்னமோ கற்பனையாக இங்கே எழுதுவதாக சிலர் இங்கே கமெண்ட் எழுதக் கூடும். உங்கள் பங்குக்கு நீங்களே கூட ஒருமுறை புலனறிந்து பாருங்கள், உண்மை புரிந்து அதிர்ந்து நிற்பீர்கள்.

இந்த வாரம் ரஜினிதான் டாபிக் என்று வைத்துக் கொள்ளுங்களேன்...
‘வீழும் மவுசு – அதிர்ச்சியில் ரஜினி’, என ஒரு அரைவேக்காடு எழுதியிருக்கும். அதே நாளில் வெளியான போட்டிப் பத்திரிகை எனக் கூறிக்கொள்ளும் நிகழ்காலக் குரலோ, ‘ரஜினியின் புகழ் இன்னும் ஒருபடி உயர்வு’ – என செய்தி வெளியிட்டிருப்பார்கள். அவர்கள் நோக்கம் பத்திரிகை தர்மமல்லா... கல்லாப் பெட்டி தர்மம்.

‘நான் அடிக்கிற மாதிரி அடிப்பேனாம், நீ தடவிக் கொடுப்பியாம். எப்படியோ ரெண்டு பேர் மேலேயும் பார்வை இருந்து கொண்டே இருக்குமல்லவா... அதுதான் பிழைக்கும் வழி. இதிலிருந்து மட்டும் மாறவே கூடாது’ - இந்த இரு குழுமங்களின் எடிட்டோரியல் விதி இதுதான்!


எக்ஸ்க்ளூசிவ் மேட்டர் என்று போஸ்டர், அட்டைப் படம், பத்திரிகை விளம்பரம் என எல்லா வழியிலும் இவர்கள பிரம்மாண்டப் படுத்துவார்கள். வாங்கிப் படித்துப் பார்த்தால், இருவருமே ஒரே விவகாரத்தைதான் எழுதியிருப்பார்கள், அதுவும் ஒரே மாதிரியாக! அப்போதுதானே உங்களைப் போன்று காசு கொடுத்துப் பத்திரிகை வாங்குபவர்கள் இவர்களின் பொய்யை உண்மையென்று நம்புவார்கள்.

சரி... ரஜினி விவகாரத்தில் மட்டும் ஏன் ஒருவர் எதிர்ப்பு, ஒருவர் ஆதரவு என்ற நிலையை எடுத்தார்கள். பத்திரிகை விற்பனைதான்.

இதே அழகிரி விவகாரமென்றால் இருவரும் ஒரே மாதிரிதான் எழுதியாக வேண்டும். இல்லாவிட்டால் சென்னைய விட்டே காலி செய்துகொண்டு ஓட வேண்டி வரும். ஆனால் ரஜினியைப் பற்றி எவ்வளவு எழுதினாலும், எந்த மாதிரி எழுதினாலும் இவர்கள் பத்திரிகை விற்கும்.

இனி இந்த சனியன்களை வாங்கவே கூடாது என சபதமேற்றவர்கள் கூட, காசு கொடுத்து அந்த இரு குழுமப் பத்திரிகைகளையும் வாங்கக் காரணம், ஏதாவது ஒரு வழியில் மீண்டும் மீண்டும் ரஜினி, ரஜினி படங்கள், சௌந்தர்யா, அல்லது இருக்கவே இருக்கிறது ரஜினி அரசியல் பிரவேச ‘எக்ஸ்க்ளூசிவ் கட்டுரை’... என போட்டுத் தாக்கிக் கொண்டே இருக்கிறார்கள்.

காரணம் வற்றாத செய்திச் சுரங்கம் ரஜினி!

இவர்கள் மட்டும் என்றில்லை... பிற வார, மாத செய்தி இதழ்களும் கூட வேறு யாரைப் பற்றியும் தனிப்பட்ட முறையிலோ அல்லது அவர்களின் பொது வாழ்க்கை – நிர்வாகத் திறன் பற்றியோ எழுதத் திராணியற்றுக் கிடக்கின்றன. ஆனால் ரஜினி விவகாரம் என்று வந்துவிட்டால் மட்டும் தங்கள் அபார கற்பனைத் திறனைக் காட்டுகின்றன.

அரசு இலவச கலர் டிவி, இலவச நிலம், இலவச வீடுகள் என எல்லாம் பணக்காரர் வீடுகளில் தஞ்சமடைகின்றன. அல்லது கட்சிக்காரன் மட்டுமே அனுபவிக்க வசதியாகக் கொடுக்கப்படுகின்றன. இதை எழுத ஒரு பத்திரிகைக்கும் வக்கில்லை.

தொழில் வளர்ச்சி எனும் பெயரில் விளை நிலங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டு வருகின்றன. சென்னையைச் சுற்றி 100 கிலோ மீட்டர் தூரத்துக்கு வயல்கள் கிடையாது. ஆங்காங்கே சின்னச் சின்னத் தீவுகள் மாதிரிதான் சொற்ப அளவில் விவசாய வயல்கள் தெரிகின்றன. இதைப் பெரிதாக எழுத ஒரு ஜோல்னா பையனுக்கும் துப்பில்லை.

இம்மாதிரித் தகவல் கிடைக்கும் போது இரு குழும நிருபர்களுமே ஒன்றாகப் போய்த்தான் லோக்கல் அரசியல் பிரபலங்களைப் பார்க்கிறார்கள். கனமான ‘கட்டோடு’ வீடு திரும்புகிறார்கள். பின்னர் விஷயம் கமுக்கமாகிவிடும்.

இதிலும் ஓரிரு விதிவிலக்குகள் இருக்கவே செய்கிறார்கள் என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் அவர்கள் நேர்மையாய் இருந்து என்ன பலன், அந்த நிர்வாகங்கள்தான் ஏற்கெனவே அடிமாடுகளாகப் போய்விட்டனவே...

ஆனால் ரஜினி... வாய்ஸ் என்ற இரு வார்த்தைகள் இருந்தால் போதும் வரிந்து கட்டிக் கொண்டு வந்துவிடுகின்றன எழுதுவதற்கு.

பிரபலமான ஒரு மனிதரைப் பற்றி எப்படி எழுதாமல் இருக்க முடியும்?
நியாயமான கேள்விதான். ஆனால் நியாயமாக எழுத வேண்டும் அல்லவா... மலிவான வியாபார நோக்கத்துக்காக, ரஜினி போன்ற நல்ல மனிதர்களின் இமேஜை சிதைக்கும் உரிமையை, அதிகாரத்தை இவர்களுக்கு யார் தந்தது?

குறிப்பு: இந்தப் பதிவுக்கும், அடுத்து வரும் குமுதம் சர்வே குறித்த கட்டுரைக்கும் நீங்களாகவே முடிச்சுப் போட்டுக் கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல!!