Showing posts with label Latha Rajinikanth. Show all posts
Showing posts with label Latha Rajinikanth. Show all posts

Monday, March 2, 2009

கலைக் குளத்தில் கல்லெறியாதீர்கள்! - கன்னட விழாவில் கமல்


கன்னட திரைப்பட பவள விழா:மொழியால் திரையுலகைப் பிரிக்காதீர்! - கமல்

பெங்களூர்: மொழியை வைத்து கலை குடும்பத்தை உடைக்க வேண்டாம் என்று கன்னட திரைப்பட பவள விழாவில் நடிகர் கமலஹாசன் வேண்டுகோள் விடுத்தார்.

கன்னட திரைப்படத்துறை உருவாகி 75 ஆண்டு ஆனதைத் தொடர்ந்து பிரமாண்டமாக பவள விழா நடத்த கர்நாடக சினிமா வர்த்தக சபை முடிவு செய்தது. 3 நாட்கள் நடைபெறும் இந்த விழா நேற்று தொடங்கியது. இரவு 7 மணிக்கு விழாவை கர்நாடக முதல்வர் எடியூரப்பா குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

விழாவுக்கு கர்நாடக தகவல் துறை மந்திரி கட்டா சுப்பிரமணிய நாயுடு தலைமை தாங்கினார். இதில் நடிகர் கமலஹாசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

பார்வதம்மா ராஜ்குமார், கன்னட நடிகர்கள் விஷ்ணுவர்த்தன், அம்பரீஷ், நடிகைகள் சரோஜாதேவி, லட்சுமி, சவுகார்ஜானகி, தென்னிந்திய சினிமா வர்த்தக சபை தலைவர் ராஜகோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் நடிகர் கமலஹாசன் பேசியதாவது:

அரசியல் லாபத்துக்காக யாரும் கலையை பயன்படுத்த வேண்டாம். கலை வேறு, அரசியல் வேறு. கலைக்கும், அரசியலுக்கும் மக்களை ஈர்க்கும் சக்தி இருந்தாலும் நிச்சயம் இரண்டும் வேறுபட்டது. அது எண்ணையும், தண்ணீரையும் போன்றது.

நான் தமிழன். அதை மாற்ற முடியாது. ஆனால் எப்படிபட்ட தமிழன் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். குண்டுராவ் நாகேஷ் என்ற பெரிய நடிகரை எங்களுக்கு தாரை வார்த்து கொடுத்த போது அவரை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டோம். சரோஜாதேவியை எங்களது சொத்தாக மதிக்கும் தமிழன். புட்டனகனகல் போன்ற பல்வேறு கன்னட மகான்களை மரியாதையோடு நடத்திய தமிழன்.

தமிழகத்தில் கொடிகட்டிப் பறக்கும் சிவாஜிராவ் கெய்க்வாட் என்ற இயற்பெயர் கொண்ட ரஜினிகாந்த் என்ற எனது சக மாணவரை, போட்டியாளரை எங்களுக்கு சொந்தமாக்கிக் கொண்ட தமிழன்.

இந்த சேதியைச் சொல்லத்தான் இந்த விழாவில் நான் கலந்து கொண்டேன்.

நூற்றாண்டு விழாவுக்கும் வருவேன்!

கலை குடும்பத்தை ஒருபோதும் உடைக்க முடியாது. கலை என்னும் குளத்தில் கல்வீச நினைக்க வேண்டாம். எனது சித்தியான கன்னட சினிமா துறையின் நூற்றாண்டு விழாவுக்கும் என்னை அழையுங்கள். அப்போதும் எனக்கு பேச வாய்ப்பு கொடுங்கள். அப்போது என்னை வயதான கிழவன் என்று ஒதுக்கி விட வேண்டாம். நூற்றாண்டு விழாவில் நாம் மீண்டும் சந்திப்போம், என்றார் கமல்ஹாசன்.

ரஜினி எப்போது?

இன்றைய நிகழ்ச்சிகளில் கமல் மட்டுமே பங்கேற்றார். தனது நெருங்கிய நண்பர் மோகன் பாபுவின் வீட்டுத் திருமண விழாவுக்குச் சென்ற ரஜினி இன்று அல்லது நாளை கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது.

குறிப்பு: வழக்கத்தை விடவும் சற்று கடுமையான தமிழில் அமைந்திருந்தது கமல் பேச்சு. அதன் எளிய வடிவத்தை இங்கே தந்துள்ளோம். ஒரிஜினல் பேச்சு இணைப்பாகத் தரப்பட்டுள்ளது!!

மோகன் பாபு மகன் திருமணத்தில் ரஜினி!


நடிகர் மோகன் பாபுவின் மூத்த மகன் விஷ்ணு மஞ்சு பாபுவுக்கும் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் சகோதரர் ஒய்எஸ் சுதீகர் ரெட்டியின் மகள் விரானிகாவுக்கும் நேற்று பிரமாண்டமான முறையில் திருமணம் நடந்தது.



ஹைதராபாத் கச்சிபௌலி உள்விளையாட்டு அரங்கில் நடந்த இந்த திருமணத்துக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி, அவர் மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா, சௌந்தர்யா ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

இசைஞானி இளையராஜா, இயக்குநர் பி.வாசு உள்பட பலரும் பங்கேற்றனர்.


ஆந்திர திரையுலகமும் அரசியல் தலைவர்களும் திரண்டு வந்து மணமக்களை வாழ்த்தினர்.

Wednesday, December 17, 2008

சரோஜா தேவியோடு நடிக்க முடியாமல் போய்விட்டதே...! - ரஜினி கலகல பேச்சு!!

ரோஜாதேவி காலத்தில் ஹீரோவாக நடிக்க முடியாதது வருத்தம் அளிக்கிறது என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசினார்.

திருமதி லதா ரஜினிகாந்த் நடத்தும் ஆஷ்ரம் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நேற்று மாலை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு லதா ரஜினிகாந்த் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக சூப்பர் ஸ்டார் ரஜினி கலந்து கொண்டார்.

விழாவில் பழம்பெரும் பாடகர் பி.பி.சீனிவாஸ், நடிகை சரோஜாதேவி, எஸ்.என்.லட்சுமி, தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன், அரசு ஆஸ்பத்திரி மருத்துவ நிபுணர் கிருஷ்ணசாமி, விளையாட்டு வீராங்கனை சிறுமி விஜயலட்சுமி உள்பட பலர் சிறப்பிக்கப்பட்டனர்.

விழாவில் நடிகர் ரஜினிகாந்த், சரோஜாதேவிக்கு விருது வழங்கி பேசியதாவது:

சரோஜாதேவி காலத்தில் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று எனக்கு ஆசை இருந்தது. ஆனால் அப்போது முடியவில்லை. அவருடன் நடிக்க முடியாதது எனக்கு மிகுந்த வருத்தம் அளிக்கிறது.

ஒரு வேளை அந்த நேரத்தில் நான் ஹீரோவாக நடித்தால் கூட, அப்போது திரையுலக ஜாம்பவான்களாக இருந்த எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன் ஆகியோரை மீறி என்னால் அவருடன் நடித்திருக்க முடியுமா, அதற்கு அவர்கள் என்னை அனுமதித்திருப்பார்களா தெரியவில்லை.

சரோஜாதேவியின் நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் இந்த விழாவிற்கு வந்து கலந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது, என்றார் ரஜினி.

இந்த விழாவில் ரஜினியின் மதிப்புக்குரிய எஸ்பி முத்துராமன், மகளும் முன்னாள் மாணவியுமான சவுந்தர்யா ரஜினிகாந்த், முன்னாள் மாணவர்கள் நகுல், சிம்பு ஆகியோரும் பங்கேற்றனர்.

முன்னதாக பள்ளி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. குழந்தைகளுக்கு ரஜினி தன் கையால் பரிசுகளை வழங்கினார்.

வெள்ளை வேட்டி, சட்டையில் ஒரு பேராசிரியரின் கம்பீரத்துடன் விழாவுக்கு ரஜினி வந்திருந்தார். விழா முடிந்த பிறகும் அரங்கில் சிறிது நேரம் இருந்து, குழந்தைகளிடம் பேசிக் கொண்டிருந்தார் ரஜினி.

http://www.envazhi.com