Monday, March 2, 2009

கலைக் குளத்தில் கல்லெறியாதீர்கள்! - கன்னட விழாவில் கமல்


கன்னட திரைப்பட பவள விழா:மொழியால் திரையுலகைப் பிரிக்காதீர்! - கமல்

பெங்களூர்: மொழியை வைத்து கலை குடும்பத்தை உடைக்க வேண்டாம் என்று கன்னட திரைப்பட பவள விழாவில் நடிகர் கமலஹாசன் வேண்டுகோள் விடுத்தார்.

கன்னட திரைப்படத்துறை உருவாகி 75 ஆண்டு ஆனதைத் தொடர்ந்து பிரமாண்டமாக பவள விழா நடத்த கர்நாடக சினிமா வர்த்தக சபை முடிவு செய்தது. 3 நாட்கள் நடைபெறும் இந்த விழா நேற்று தொடங்கியது. இரவு 7 மணிக்கு விழாவை கர்நாடக முதல்வர் எடியூரப்பா குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

விழாவுக்கு கர்நாடக தகவல் துறை மந்திரி கட்டா சுப்பிரமணிய நாயுடு தலைமை தாங்கினார். இதில் நடிகர் கமலஹாசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

பார்வதம்மா ராஜ்குமார், கன்னட நடிகர்கள் விஷ்ணுவர்த்தன், அம்பரீஷ், நடிகைகள் சரோஜாதேவி, லட்சுமி, சவுகார்ஜானகி, தென்னிந்திய சினிமா வர்த்தக சபை தலைவர் ராஜகோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் நடிகர் கமலஹாசன் பேசியதாவது:

அரசியல் லாபத்துக்காக யாரும் கலையை பயன்படுத்த வேண்டாம். கலை வேறு, அரசியல் வேறு. கலைக்கும், அரசியலுக்கும் மக்களை ஈர்க்கும் சக்தி இருந்தாலும் நிச்சயம் இரண்டும் வேறுபட்டது. அது எண்ணையும், தண்ணீரையும் போன்றது.

நான் தமிழன். அதை மாற்ற முடியாது. ஆனால் எப்படிபட்ட தமிழன் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். குண்டுராவ் நாகேஷ் என்ற பெரிய நடிகரை எங்களுக்கு தாரை வார்த்து கொடுத்த போது அவரை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டோம். சரோஜாதேவியை எங்களது சொத்தாக மதிக்கும் தமிழன். புட்டனகனகல் போன்ற பல்வேறு கன்னட மகான்களை மரியாதையோடு நடத்திய தமிழன்.

தமிழகத்தில் கொடிகட்டிப் பறக்கும் சிவாஜிராவ் கெய்க்வாட் என்ற இயற்பெயர் கொண்ட ரஜினிகாந்த் என்ற எனது சக மாணவரை, போட்டியாளரை எங்களுக்கு சொந்தமாக்கிக் கொண்ட தமிழன்.

இந்த சேதியைச் சொல்லத்தான் இந்த விழாவில் நான் கலந்து கொண்டேன்.

நூற்றாண்டு விழாவுக்கும் வருவேன்!

கலை குடும்பத்தை ஒருபோதும் உடைக்க முடியாது. கலை என்னும் குளத்தில் கல்வீச நினைக்க வேண்டாம். எனது சித்தியான கன்னட சினிமா துறையின் நூற்றாண்டு விழாவுக்கும் என்னை அழையுங்கள். அப்போதும் எனக்கு பேச வாய்ப்பு கொடுங்கள். அப்போது என்னை வயதான கிழவன் என்று ஒதுக்கி விட வேண்டாம். நூற்றாண்டு விழாவில் நாம் மீண்டும் சந்திப்போம், என்றார் கமல்ஹாசன்.

ரஜினி எப்போது?

இன்றைய நிகழ்ச்சிகளில் கமல் மட்டுமே பங்கேற்றார். தனது நெருங்கிய நண்பர் மோகன் பாபுவின் வீட்டுத் திருமண விழாவுக்குச் சென்ற ரஜினி இன்று அல்லது நாளை கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது.

குறிப்பு: வழக்கத்தை விடவும் சற்று கடுமையான தமிழில் அமைந்திருந்தது கமல் பேச்சு. அதன் எளிய வடிவத்தை இங்கே தந்துள்ளோம். ஒரிஜினல் பேச்சு இணைப்பாகத் தரப்பட்டுள்ளது!!

No comments: