வாய்ப்புக் கிடைத்தால் வன்னிக்கு மீண்டும் செல்வேன்!
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை நான் சந்தித்தது பகிரங்கமான ஒன்று. அரசுக்கு கடிதம் எழுதிவிட்டேதான் வன்னிக்குச் சென்றேன். வாய்ப்புக் கிடைத்தால் மீண்டும் செல்வேன், என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவவித்துள்ளார்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனும், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் இணைந்து காணப்படும் புகைப்படங்களை இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ளது. விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த ஒரு கட்டிடத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பு தொடர்பான வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒரு புகைப்படத்தில் விடுதலைப் புலிகளின் சீருடையை அணிந்தபடி வைகோ பிரபாகரனுடன் நின்று கொண்டு குறி பார்ப்பது போல உள்ளதாக தெரிகிறது. மற்றுமொரு புகைப்படத்தில் விடுதலைப் புலிகள் பங்கேற்ற கூட்டம் ஒன்றில் வைகோ உரையாற்றுவது போலவும் இருப்பதாக கூறப்படுகிறது.
உண்மையில் இந்தப் படங்கள் எதுவும் இப்போது எடுக்கப்பட்டவை அல்ல. வைகோ திமுகவில் இருந்தபோது படகு மூலம் வன்னிககுச் சென்றபோது, பிரபாகரனுடன் எடுத்த படங்கள் இவை. இவற்றை இப்போது புதிதாக வெளியிடுவது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது இலங்கை ராணுவம்.
இந்த சூழ்நிலையில் பாளையங்கோட்டை ஜெயிலில் இருந்து வைகோ, நேற்று மாலை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். ஜெயில் வாசலில் வைகோ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
"பிரபாகரனுடன் நான் எடுத்துக்கொண்ட படங்களை இலங்கை ராணுவம் வெளியிட்டு உள்ளது. உள்நோக்கத்துடன் இந்த படத்தை வெளியிட்டு உள்ளனர். அவை பழைய படங்கள். இருந்தபோதிலும் அந்த படங்கள் பற்றி நான் பெருமைப்படுகிறேன்.
எனக்கு வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் வன்னி பகுதிக்கு செல்வேன். விடுதலைப்புலிகளிடம் நாங்கள் பணம் வாங்குவதாக கூறுவது அபத்தமானது. விடுதலைப்புலிகளிடம் பணம் பெற்று அரசியல் நடத்தினால் அது விபச்சாரத்தை விட மோசமானது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தி.மு.க. கூட்டணிக்கு எதிரான பிரசாரத்தை பாளையங்கோட்டை ஜெயில் வாசலில் இருந்து தொடங்குகிறேன், என்றார்.
தள மாற்றங்கள் @ giriblog | Announcement
4 years ago
No comments:
Post a Comment