அப்பாடா... ஒரு பெரிய பிரச்சினை தீர்ந்துடுச்சுப்பா...
இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் ஆஸ்கார் விருதுகளை வாங்கினாலும் வாங்கினார்... அடுத்த நொடியில் அவருக்கு வாழ்த்துச் சொல்லக் கூட பலருக்கும் தோன்றவில்லை.
'ரஹ்மானுக்கு இளையராஜா வாழ்த்துச் சொன்னாரா?'
'இன்னும் இல்லையா...? அவருக்குப் பொறாமை... அவர் காலம் முடிந்துவிட்டது... அந்த வயித்தெரிச்சல்ல பாராட்டுத் தெரிவிக்கவில்லை'
'ராஜா ஒரு இசையமைப்பாளரா... ரஹ்மான்தான் தி பெஸ்ட்...'
-இப்படி ஆளாளுக்கு கிளம்பிவிட்டார்கள்.
அட, கிளம்பியவர்கள் வெறும் வாயை மென்றதோடு நில்லாமல், வளைகளிலும் கயிறு திரிக்க, இந்த ஒரு வாரமாக இதே பேச்சு, எழுத்து எந்த வலையைத் திறந்தாலும். இரண்டு மேதைகள் நம்முடன் இருக்கிறார்களே, என்ற சந்தோஷமும் பெருமையும் பெரும்பாலானோருக்கு இல்லாமல் போனது நமது பண்பாட்டுக்கு இன்னொரு உதாரணம்... போகட்டும்!
நல்ல வேளை அதற்கொரு முற்றுப் புள்ளி வைத்துவிட்டார் இசைஞானி இளையராஜா. நேற்று காலை ஹைதராபாத்தில் நடந்த மோகன்பாபு மகன் திருமணத்தில் கலந்து கொண்ட ராஜா, இந்த நிகழ்ச்சிக்காக பிற்பகலிலேயே சென்னை திரும்பிவிட்டார்.
நேற்று மாலை (ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் திரை இசைக் கலைஞர்கள் சங்கம் சார்பில் நடந்த பாராட்டு விழாவில், ரஹ்மானின் ஆஸ்கார் சாதனைகளைப் 'போதும் போதும்' எனும் அளவுக்குப் பாராட்டியதோடு, ஆஸ்கர் வென்ற தன் அருமை மாணவருக்கு தங்கச் சங்கிலி அணிவித்து தன் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொண்டார்.
ரஹ்மானைப் பாராட்டி அவர் பேசுகையில், 'உலகில் மிகச் சில இசையமைப்பாளர்களுக்குத்தான் அளவிட முடியாத திறமையும், அதை பெரிய அளவில் எடுத்துச் செல்லும் முயற்சியும் உள்ளது. அந்த மாதிரி அரிய கலைஞர்களில் ஒருவர் ஏஆர் ரஹ்மான். இசையமைப்பாளர்களில் அவர் ஒரு அரிய சாதனையாளர். அண்ணன் எம்எஸ்வி அவர்கள்தான் இந்த இசைத் துறையின் ஆதார ஸ்ருதி என்றால் நானும் தம்பி ரஹ்மானும் பஞ்சமங்கள். அதனால்தான் அவருக்கு ஒரு விருது போதாது எனப் புரிந்து இரண்டு விருதுகளாகக் கொடுத்துள்ளது ஆஸ்கர் விருதுக் குழு', என்றார்.
விழாவில் ரஹ்மான் பேசியதாவது: எல்லா புகழும் இறைவனுக்கே. எங்கப்பா ஆசியால்தான் எனக்கு ஆஸ்கார் விருது கிடைத்து இருப்பதாக எல்லோரும் சொல்கிறார்கள். அதுவும் உண்மைதான். அவர் பட்ட கஷ்டத்திற்கு நான் அறுவடை செய்திருக்கிறேன்.
கடந்த 10 வருடங்களாக ஒவ்வொரு முறை ஆஸ்கார் விருது வழங்கப்படும் போதும் சீனா, ஐப்பான், இத்தாலி ஆகிய நாட்டை சேர்ந்தவர்களுக்கே விருதுகள் கிடைத்து வந்தது.
அந்த விருதை இந்தியா வாங்க முடியாதா என்று பல முறை நினைத்து இருக்கிறேன். இங்கே இளையராஜா, எம்.எஸ். விஸ்வநாதன், கே.வி.மகாதேவன், நவுஷாத் போன்ற மேதைகள் எல்லாம் இருக்கிறார்கள். இளையராஜா மீது எவ்வளவு மரியாதை வைத்திருக்கிறீர்கள், வெளிநாடுகளில் அவர் இசைக்கு எந்த அளவு மரியைாதை உள்ளது என்பதை நான் நேரில் பார்த்து பெருமிதப்பட்டிருக்கிறேன். இது ஆஸ்காரை விட பெரிய மரியாதை. ஆஸ்கருக்கு அப்பாற்பட்ட மிகச் சிறந்த மேதைகள் இவர்கள் எல்லோரும்.
இது எனக்குக் கிடைத்த விருதல்ல!எனக்கு நேரமே கிடைக்காத சூழ்நிலையில்தான் ஸ்லாம்டாக் மில்லினர் படத்திற்கு இசையமைத்தேன். அந்த படத்திற்கு நான் இசையமைக்க எடுத்துக்கொண்ட காலம் 3 வாரங்கள்தான். அந்த இசையை நான் ஆஸ்கருக்கு சமர்ப்பித்தபோது அமெரிக்கர்கள் எல்லாம் என்னைப் பார்த்து புன்னகைத்தார்கள்.
ரோஜா படத்திற்கு இசையமைத்தபோது அதன் பாடல்களை கேட்டு மற்றவர்கள் எல்லாம் எப்படி புன்னகைத்தார்களோ அதே போன்று புன்னகையை அந்த அமெரிக்கர்களின் முகத்தில் பார்த்தேன்.
ஆஸ்கார் விருதுகளை எனக்கு கிடைத்ததாக நான் நினைக்கவில்லை. இங்கிருக்கும் எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா போன்ற பெரிய மேதைகளுக்கு கிடைத்த விருதாகவே கருதுகிறேன். பாலமுரளி கிருஷ்ணா பேசும்போது, இசையின் ஆழத்தை உணர முடிந்தது. இசையமைப்பாளர்கள் அனைவரும் பரந்த மனப்பான்மை கொண்டவர்களாக இருப்பதற்கு நன்றி.
மோசமான வலையுலக 'கமெண்டர்'களுக்குக் குட்டு!இந்த சந்தோஷத்திலும் எனக்கு ஒரு வேதனை உண்டு. ஒவ்வொரு இசை கலைஞர்களுக்கும் குறிப்பிட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். பல இணையதளங்களில் என்னை வாழ்த்துவதற்காக இன்னொருவரை தூற்ற வேண்டாம். என்னையும் இளையராஜா சாரையும் ஒப்பிட்டு மோசமாக சிலர் எழுதுவதைப் பார்க்கும்போது வேதனையாக உள்ளது. என் ரசிகர்களை நான் கேட்டுக்கொள்வது, தயவுசெய்து எல்லாம் யாரையும் திட்டாதீர்கள். ஒப்பிட்டுப் பேசாதீர்கள், என்றார் ரஹ்மான் (ரஹ்மான் அனைத்து செய்திகளையும் படிப்பதே இணைய தளத்தில்தான். நிறைய பிளாக்குகள் படிப்பார். அவரே தனது இணையதளத்தில் தன்னைப் பற்றி இணையத்தில் வருகிற தகவல்களைச் சேகரிக்கவும் தொடங்கியுள்ளார்.).
ஹாரிஸ் ஜெயராஜ் மோதிரம் பரிசு!விழாவில் டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா, எம்.எஸ்.விஸ்வநாதன், பட அதிபர் ஏவி.எம்.சரவணன், இயக்குநர் கே.பாலசந்தர், இசையமைப்பாளர்கள் தேவா, வித்யாசாகர், ஹாரிஸ் ஜெயராஜ், பரத்வாஜ், தேவி ஸ்ரீபிரசாத், சங்கர் கணேஷ், யுவன்சங்க ராஜா, பின்னணி பாடகர்கள் டி.எம்.சவுந்தராஜன், மனோ, பாடகிகள் எல்.ஆர்.ஈஸ்வரி, எஸ்.ஜானகி ஆகியோரும் பேசினார்கள்.
நிகழ்ச்சியின் போது ஏ.ஆர்.ரகுமானுக்கு மோதிரம் அணிவித்தார் ஹாரிஸ் ஜெயராஜ். சங்கர் கணேஷ், ஏ.ஆர்.ரகுமானை கட்டிப்பிடித்து அவர் கன்னத்தில் முத்தம் கொடுத்தார்.
விழா குழு சார்பில் ஏ.ஆர்.ரகுமானுக்கு ரூ.2 லட்சம் மதிப்புள்ள வெள்ளியால் ஆன உலக உருண்டை நினைவு பரிசாக வழங்கப்பட்டது.
-எஸ்எஸ்
No comments:
Post a Comment