Showing posts with label ilayaraaja. Show all posts
Showing posts with label ilayaraaja. Show all posts

Sunday, March 15, 2009

விருதுகளைத் தாண்டிய மகா கலைஞர் இளையராஜா! - பாலமுரளி கிருஷ்ணா

.ஆர் ரஹ்மான் ஆஸ்கர் வாங்கினார்… மகா சந்தோஷம். அதற்காக மற்ற கலைஞர்களை குறைவாக மதிப்பிடுவது அறியாமை. இளையராஜா என்ற மகா கலைஞன் பிறக்காமல் போயிருந்தால் தமிழ் சினிமா இசையே தெரியாமல் போயிருக்கும். அவரும் எம்எஸ்வியும் இன்னும் எத்தனையோ மேதைகளும் விருதுகளையே வென்றவர்கள். அவர்களை யாரோடும் ஒப்பிட வேண்டாம், என்று கூறியுள்ளார் கர்நாடக இசை மேதை டாக்டர் எம் பாலமுரளிகிருஷ்ணா.

கர்நாடக இசை கலைஞரும், திரைப்பட பாடகருமான பாலமுரளி கிருஷ்ணா 40 வருடங்களுக்கு பிறகு ‘கதை’ என்ற படத்தில் பாடகராகவே நடித்து வருகிறார்.

இதுகுறித்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது: 40 வருடத்துக்கு முன்பு ‘பக்தபிரகலாதன்’ என்ற படத்தில் நாரதர் வேடத்தில் நடித்தேன். அது புகழ்பெற்றது. பிறகு வந்த வாய்ப்புகள் அனைத்தும் நாரதர் வேடங்களாக வந்ததால் மறுத்துவிட்டேன்.

இப்போது ‘கதை’ படத்தில் நான் பாடிய பாடல் ஒன்று இடம்பெறுகிறது. அந்த பாடலை பாடுவது போன்று நடிக்கிறேன். சினிமாவில் நடித்தது குறைவுதான். காரணம் என் முழு கவனமும் இசையின் பக்கம் இருந்தது. இப்போது நிறைய நேரம் இருக்கிறது. நல்ல கேரக்டரோடு வாய்ப்பு தந்தால் தொடர்ந்து நடிப்பேன்.

யாரையும் யாரோடும் ஒப்பிட வேண்டாம்!

ரஹ்மான் ஆஸ்கர் வாங்கியது பற்றி நிறைய கேட்டு விட்டார்கள். நானும் நிறைய சொல்லிவிட்டேன். இந்த விஷயத்தில் நான் அதிகம் சங்கடப்பட்டது விருது பெற்ற ரஹ்மானோடு இளையராஜாவையும் மற்றவர்களையும் ஒப்பிட்டு வந்த செய்திகள் மற்றும் அரைவேக்காட்டுத்தனமான கட்டுரைகள்.

ரஹ்மான் ஒரு இளம் மேதை. அவர் ஆஸ்கர் விருது வாங்கியது எல்லாருக்கும் பெருமையான விஷயம்தான். ஆனால் அதற்காக மற்ற மேதைகளை சிறுமைப்படுத்தும் போக்கு, உண்மையான இசை ரசிகர்கள் செய்யும் வேலையல்ல.

இசை பொதுவானது. யாருக்கும் பட்டா போட்டுக் கொடுத்து விடவில்லை. ஆனால் தனக்குத் தெரிந்த வித்தையை மட்டுமே விஸ்தாரமாகக் காட்டிக் கொண்டிருக்காமல், இசையின் இலக்கணத்தை மீறாமல் சாதனைகள் படைத்துக் கொண்டிருப்பவர் ராஜா. அவருக்கு விருதுகள் ஒரு பெரிய விஷயமல்ல. விருதுகளைத் தாண்டிய மகா கலைஞன் அவர். நியாயமாக இப்போது உலகின் உயர்ந்த இசை விருதுகள் அவரைத் தேடி வரவேண்டும்.

இன்னொரு விஷயம் தெரிந்து கொள்ளுங்கள். உலகின் அனைத்து இசைக்கும் ஆதி இந்திய இசையே. இங்கிருந்துதான் சகலமும் ஆரம்பம். ஒரு இந்திய இசையமைப்பாளருக்கு தெரிந்த ஆத்மார்த்தமான இசையை வெளிநாட்டுக்காரனால் தரமுடியாது.

நான் உலகின் பெரும்பாலான இசையைத் தெரிந்து வைத்திருக்கிறேன். பல மொழிகளில் பாடியிருக்கிறேன். அந்த அனுபவத்தில் சொல்கிறேன். இந்திய சாஸ்திரிய இசைக்கு இணையில்லை. அந்த சாஸ்திரிய இசையில் கரை கண்டவர் இளையராஜா என்றார் பாலமுரளி கிருஷ்ணா.

இளையராஜாவின் இசையில் சின்னக் கண்ணன் அழைக்கிறான்… என்ற காலத்தால் அழியாத இனிய பாடலைப் பாடியவர் டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா. ராஜாவின் திருவாசகம் ஆரட்டோரியோவை வெளியி்ட்டவரும் அவரே.

குறிப்பு: தட்ஸ்தமிழில் வந்த கட்டுரை இது. ஒரு விஷயத்தை நண்பர்கள் கவனிக்க: இளையராஜா மற்றும் ரஹ்மான் இருவரின் நலம் விரும்பி டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா. யாரையும் யாரோடும் ஒப்பிடக்கூடாது என்பதே அவரது இந்தப் பேட்டியின் நோக்கமாக இருந்துள்ளது. ரஹ்மானை இளம் மேதை என்றே அவர் வர்ணிக்கிறார். எனவே கருத்து எழுதும் முன் இவற்றைக் கவனத்தில் கொள்வது நலம்.

Monday, March 2, 2009

ரஹ்மானுக்கு தங்கச் சங்கிலி அணிவித்து இளையராஜா பாராட்டு!


ப்பாடா... ஒரு பெரிய பிரச்சினை தீர்ந்துடுச்சுப்பா...

இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் ஆஸ்கார் விருதுகளை வாங்கினாலும் வாங்கினார்... அடுத்த நொடியில் அவருக்கு வாழ்த்துச் சொல்லக் கூட பலருக்கும் தோன்றவில்லை.

'ரஹ்மானுக்கு இளையராஜா வாழ்த்துச் சொன்னாரா?'

'இன்னும் இல்லையா...? அவருக்குப் பொறாமை... அவர் காலம் முடிந்துவிட்டது... அந்த வயித்தெரிச்சல்ல பாராட்டுத் தெரிவிக்கவில்லை'

'ராஜா ஒரு இசையமைப்பாளரா... ரஹ்மான்தான் தி பெஸ்ட்...'

-இப்படி ஆளாளுக்கு கிளம்பிவிட்டார்கள்.

அட, கிளம்பியவர்கள் வெறும் வாயை மென்றதோடு நில்லாமல், வளைகளிலும் கயிறு திரிக்க, இந்த ஒரு வாரமாக இதே பேச்சு, எழுத்து எந்த வலையைத் திறந்தாலும். இரண்டு மேதைகள் நம்முடன் இருக்கிறார்களே, என்ற சந்தோஷமும் பெருமையும் பெரும்பாலானோருக்கு இல்லாமல் போனது நமது பண்பாட்டுக்கு இன்னொரு உதாரணம்... போகட்டும்!

நல்ல வேளை அதற்கொரு முற்றுப் புள்ளி வைத்துவிட்டார் இசைஞானி இளையராஜா. நேற்று காலை ஹைதராபாத்தில் நடந்த மோகன்பாபு மகன் திருமணத்தில் கலந்து கொண்ட ராஜா, இந்த நிகழ்ச்சிக்காக பிற்பகலிலேயே சென்னை திரும்பிவிட்டார்.

நேற்று மாலை (ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் திரை இசைக் கலைஞர்கள் சங்கம் சார்பில் நடந்த பாராட்டு விழாவில், ரஹ்மானின் ஆஸ்கார் சாதனைகளைப் 'போதும் போதும்' எனும் அளவுக்குப் பாராட்டியதோடு, ஆஸ்கர் வென்ற தன் அருமை மாணவருக்கு தங்கச் சங்கிலி அணிவித்து தன் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொண்டார்.

ரஹ்மானைப் பாராட்டி அவர் பேசுகையில், 'உலகில் மிகச் சில இசையமைப்பாளர்களுக்குத்தான் அளவிட முடியாத திறமையும், அதை பெரிய அளவில் எடுத்துச் செல்லும் முயற்சியும் உள்ளது. அந்த மாதிரி அரிய கலைஞர்களில் ஒருவர் ஏஆர் ரஹ்மான். இசையமைப்பாளர்களில் அவர் ஒரு அரிய சாதனையாளர். அண்ணன் எம்எஸ்வி அவர்கள்தான் இந்த இசைத் துறையின் ஆதார ஸ்ருதி என்றால் நானும் தம்பி ரஹ்மானும் பஞ்சமங்கள். அதனால்தான் அவருக்கு ஒரு விருது போதாது எனப் புரிந்து இரண்டு விருதுகளாகக் கொடுத்துள்ளது ஆஸ்கர் விருதுக் குழு', என்றார்.

விழாவில் ரஹ்மான் பேசியதாவது:

எல்லா புகழும் இறைவனுக்கே. எங்கப்பா ஆசியால்தான் எனக்கு ஆஸ்கார் விருது கிடைத்து இருப்பதாக எல்லோரும் சொல்கிறார்கள். அதுவும் உண்மைதான். அவர் பட்ட கஷ்டத்திற்கு நான் அறுவடை செய்திருக்கிறேன்.

கடந்த 10 வருடங்களாக ஒவ்வொரு முறை ஆஸ்கார் விருது வழங்கப்படும் போதும் சீனா, ஐப்பான், இத்தாலி ஆகிய நாட்டை சேர்ந்தவர்களுக்கே விருதுகள் கிடைத்து வந்தது.

அந்த விருதை இந்தியா வாங்க முடியாதா என்று பல முறை நினைத்து இருக்கிறேன். இங்கே இளையராஜா, எம்.எஸ். விஸ்வநாதன், கே.வி.மகாதேவன், நவுஷாத் போன்ற மேதைகள் எல்லாம் இருக்கிறார்கள். இளையராஜா மீது எவ்வளவு மரியாதை வைத்திருக்கிறீர்கள், வெளிநாடுகளில் அவர் இசைக்கு எந்த அளவு மரியைாதை உள்ளது என்பதை நான் நேரில் பார்த்து பெருமிதப்பட்டிருக்கிறேன். இது ஆஸ்காரை விட பெரிய மரியாதை. ஆஸ்கருக்கு அப்பாற்பட்ட மிகச் சிறந்த மேதைகள் இவர்கள் எல்லோரும்.

இது எனக்குக் கிடைத்த விருதல்ல!

எனக்கு நேரமே கிடைக்காத சூழ்நிலையில்தான் ஸ்லாம்டாக் மில்லினர் படத்திற்கு இசையமைத்தேன். அந்த படத்திற்கு நான் இசையமைக்க எடுத்துக்கொண்ட காலம் 3 வாரங்கள்தான். அந்த இசையை நான் ஆஸ்கருக்கு சமர்ப்பித்தபோது அமெரிக்கர்கள் எல்லாம் என்னைப் பார்த்து புன்னகைத்தார்கள்.

ரோஜா படத்திற்கு இசையமைத்தபோது அதன் பாடல்களை கேட்டு மற்றவர்கள் எல்லாம் எப்படி புன்னகைத்தார்களோ அதே போன்று புன்னகையை அந்த அமெரிக்கர்களின் முகத்தில் பார்த்தேன்.

ஆஸ்கார் விருதுகளை எனக்கு கிடைத்ததாக நான் நினைக்கவில்லை. இங்கிருக்கும் எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா போன்ற பெரிய மேதைகளுக்கு கிடைத்த விருதாகவே கருதுகிறேன். பாலமுரளி கிருஷ்ணா பேசும்போது, இசையின் ஆழத்தை உணர முடிந்தது. இசையமைப்பாளர்கள் அனைவரும் பரந்த மனப்பான்மை கொண்டவர்களாக இருப்பதற்கு நன்றி.

மோசமான வலையுலக 'கமெண்டர்'களுக்குக் குட்டு!

இந்த சந்தோஷத்திலும் எனக்கு ஒரு வேதனை உண்டு. ஒவ்வொரு இசை கலைஞர்களுக்கும் குறிப்பிட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். பல இணையதளங்களில் என்னை வாழ்த்துவதற்காக இன்னொருவரை தூற்ற வேண்டாம். என்னையும் இளையராஜா சாரையும் ஒப்பிட்டு மோசமாக சிலர் எழுதுவதைப் பார்க்கும்போது வேதனையாக உள்ளது. என் ரசிகர்களை நான் கேட்டுக்கொள்வது, தயவுசெய்து எல்லாம் யாரையும் திட்டாதீர்கள். ஒப்பிட்டுப் பேசாதீர்கள், என்றார் ரஹ்மான் (ரஹ்மான் அனைத்து செய்திகளையும் படிப்பதே இணைய தளத்தில்தான். நிறைய பிளாக்குகள் படிப்பார். அவரே தனது இணையதளத்தில் தன்னைப் பற்றி இணையத்தில் வருகிற தகவல்களைச் சேகரிக்கவும் தொடங்கியுள்ளார்.).

ஹாரிஸ் ஜெயராஜ் மோதிரம் பரிசு!

விழாவில் டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா, எம்.எஸ்.விஸ்வநாதன், பட அதிபர் ஏவி.எம்.சரவணன், இயக்குநர் கே.பாலசந்தர், இசையமைப்பாளர்கள் தேவா, வித்யாசாகர், ஹாரிஸ் ஜெயராஜ், பரத்வாஜ், தேவி ஸ்ரீபிரசாத், சங்கர் கணேஷ், யுவன்சங்க ராஜா, பின்னணி பாடகர்கள் டி.எம்.சவுந்தராஜன், மனோ, பாடகிகள் எல்.ஆர்.ஈஸ்வரி, எஸ்.ஜானகி ஆகியோரும் பேசினார்கள்.

நிகழ்ச்சியின் போது ஏ.ஆர்.ரகுமானுக்கு மோதிரம் அணிவித்தார் ஹாரிஸ் ஜெயராஜ். சங்கர் கணேஷ், ஏ.ஆர்.ரகுமானை கட்டிப்பிடித்து அவர் கன்னத்தில் முத்தம் கொடுத்தார்.

விழா குழு சார்பில் ஏ.ஆர்.ரகுமானுக்கு ரூ.2 லட்சம் மதிப்புள்ள வெள்ளியால் ஆன உலக உருண்டை நினைவு பரிசாக வழங்கப்பட்டது.
-எஸ்எஸ்