வன்னி: வன்னிப் பகுதியில் சாப்பாட்டுக்குக் கூட வழியில்லாத அவல நிலையில் தமிழர்கள் பெரும் துயரத்தில் மூழ்கியுள்ளனர். கடந்த 4 நாட்களில் மட்டும் பட்டினிக்கு 10 சிறார்கள் உள்பட 18 பேர் பலியாகியுள்ளனர்.
வன்னிப் பகுதிக்கு சாப்பாடு, மருந்து என எந்த பொருளையும் அனுப்பாமல் தடை செய்து வருகிறது இலங்கை அரசு.
குண்டு வீசிக் கொல்வதும், காயமடைந்தவர்கள் மருத்துவ வசதியின்றி உயிரிழப்பதும் அங்கு தினசரிக் கதையாகி விட்டது. இந்த நிலையில் தற்போது பட்டினிச் சாவும் அங்கு அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.
கடந்த 4 நாட்களில் 10 சிறுவர்கள் உட்பட 18 தமிழர்கள் வன்னியில் பட்டினியால் உயிரிழந்துள்ளனர்.
தொடர்ச்சியான உணவின்மை காரணமாகவும் நீரிழப்பு காரணமாகவும் காய்ச்சல் போன்ற நோய்களுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் - நோய் எதிர்ப்புத் தன்மையை இழந்து விட்டதனாலும் - இவர்கள் உயிரிழந்திருக்கின்றனர் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இலங்கைப் படையினர் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் வான் மற்றும் எறிகணைத் தாக்குதல்கள் காரணமாக உணவுப் பொருட்களை பெற்றுக்கொள்ள வெளியே செல்ல முடியாத நிலையில் வீடுகளிலும் பதுங்குழிகளிலும் கூட இவர்களில் பலர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த நான்கு நாட்களில் உயிரிழந்த 18 பேர் தொடர்பாக ஆய்வு செய்த போது நடைபெற்ற மருத்துவ விசாரணைகளில் இவர்களின் சாவுக்கு போதிய உணவின்மை, ஊட்டமின்மை மற்றும் நோய் எதிர்ப்புத் தன்மை இழப்பு ஆகியவையே காரணம் என மருத்துவ வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
கனகசபை பிரவீணன், சிவநேசன் சுலக்சன், மகேஸ்வரன் கர்ணன், கருணாகரன் பிருந்தா, ஒன்றரை வயது குழந்தையான சபேசன் சிந்து, சிவகடாட்சம் கார்த்திகாயினி, பாலச்சந்திரன் சிவரூபன், சிவராசா சக்தி கணேசன், மலர்வேந்தன் மகிழன், யோகராசா ரவி, அனித் கிப்சன், பரமநாதன் புவியரசன் ஆகிய சிறார்களும், சிவராசா கண்ணன், மகிந்தன் விநோதா, தேவராசா கஜேந்திரன், சிவகடாட்சம் ரமணன், திருச்செல்வம் சிவகணேசன் ஆகியோரும் உயிரிழந்துள்ளனர்.
உணவு கிடைக்காமல் மயங்கிய நிலைக்குச் சென்று விட்ட ஐந்து பேர் மாத்தளன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உணவு மற்றும் மருத்துவ வசதி இல்லாத இதே நிலை தொடர்ந்தால் பட்டினி மற்றும் நோய் காரணமாக இன்னும் சில வாரங்களில் இழப்புக்கள் நூற்றுக்கணக்கில் அமையக்கூடும் எனவும் மருத்துவ தரப்பினால் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, உலக உணவுத் திட்டத்தின் கீழ் வர வேண்டிய உணவு வாகனங்கள் கடந்த ஒரு மாதமாக இந்தப் பகுதிக்கு வரவில்லை.
கடந்த இரண்டு நாட்களில் 5 வாகனங்களில் நிவாரணப் பொருட்கள் மட்டுமே உலக உணவுத்திட்டத்தால் செஞ்சிலுவைச் சங்க கப்பல் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.
சிறிலங்கா படையினரின் தொடர்ச்சியான வான் மற்றும் எறிகணைத் தாக்குதல்களினால் வளம் கொழிக்கும் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டு வந்த காய்கறிகளை பறிக்க முடியாத நிலையும் மரக்கறி வகைகளை பயிரிட முடியாத நிலை தோன்றியிருப்பதனாலும் மரக்கறி வகைகளுக்கு பெரும் தட்டுப்பாடு வன்னியில் ஏற்பட்டுள்ளது.
இங்கு தங்கியுள்ள மக்களில் 95 சதவீதம் பேர் ஒரு நேர உணவை மட்டுமே உண்ணும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இதனால் சிறுவர்களுக்கு ஊட்டச்சத்து என்பது முற்றிலும் இல்லாமல் போய் விட்டது. பெண்களும், கர்ப்பிணிகளும் படும் துயரத்தை சொல்லி மாள முடியாது.
டீ குடிக்கலாம் என்றால் அதற்குத் தேவையான தேயிலை, சீனி போன்றவை கூட கிடைப்பதில்லை.
தாக்குதலில் நேற்று 42 தமிழர்கள் படுகொலை:
இதற்கிடையே இலங்கைப் படையினர் வன்னிப் பிரதேசத்தில் நேற்று நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 42 பேர் கொல்லப்பட்டனர். 85 பேர் காயமடைந்தனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு மாத்தளன் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.30 மணி முதல் தொடர்ந்து ஆர்ட்டில்லரி, பலகுழல் வெடிகணை, மார்ட்டர் மற்றும் பீரங்கித் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் 37 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 65 பேர் காயமடைந்தனர்.
முள்ளிவாய்க்கால் பகுதியில் நடந்த தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டனர். 20 பேர் காயமடைந்தனர்.
No comments:
Post a Comment