Monday, September 22, 2008

எதிர்பார்த்த மாதிரியே திமுக மீது பழிபோட்ட விஜய்காந்த்!


இப்போதுதான் விஜய்காந்த் பிரஸ் மீட் முடிந்தது...

இதற்கு முந்தைய ஒரு கட்டுரைக்கு வந்த ஒரு பின்னூட்டத்துக்கு பதிலளித்தபோது, நிச்சயம் இது திமுக – அதிமுக சதி என்றுதான் விஜய்காந்த் கூறுவார் என கூறியிருந்தேன்.

அதில் சின்ன மாற்றம்... திமுகவின் திட்டமிட்ட சதி இது என விஜய்காந்த் தெரிவித்துள்ளார். அவருக்குத் தெரிந்த அரசியல் அது. அவரது இந்தப் பொய்யை வலுவாக, உரத்துச் சொல்ல பேருதவி புரிந்துள்ளது சன் நெட்வொர்க், தனது நேரடி ஒளிபரப்பு மூலம்!

வடிவேலு என்ன, கருணாநிதியே எதிர்த்து நின்றாலும் நான் போட்டிக்குத் தயார் என கொக்கரிக்கிறார் விஜயகாந்த் தனது பேட்டியில். எல்லாம் நேரம்!

பேட்டிக்கு வந்திருந்த நிருபர்கள் எல்லாரும் நமுட்டுச் சிரிப்புடன் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். காரணம் இந்த பதில் அவர்கள் முன்கூட்டியே எதிர்பார்த்த ஒன்றுதானே!

இதோ... விஜய்காந்த் பேட்டியின் சில பகுதிகள்...!

அப்போ எம்ஜிஆர்... இப்போ நான்!? (கொடுமை... கொடுமை)

இது ஆளுங்கட்சியின் தூண்டுதலின் பேரில் நடந்ததுள்ளது. இது கருணாநிதிக்கு கை வந்த கலை. அப்போது எம்.ஜி.ஆருக்கு எதிராக இப்படித்தான் செய்தார். எம்.ஜி.ஆர். வளர்ந்தது, கட்சியில் அவரது செல்வாக்கு வளர்ந்தது அவருக்குப் பிடிக்கவில்லை. சேலத்தில் ராஜேந்திரன் தாக்கப்பட்டார். பிறகு சுகுமாரன் வழக்கு. இப்படி நிறைய பொய் வழக்குகளைப் போட்டவர் கருணாநிதி. இப்போது எனக்கும் அதே மாதிரி செய்கிறார்.

கருணாநிதியின் திட்டத்திற்கு வடிவேலு பகடைக் காயாகி விட்டார். அவ்வளவுதான். அதை அவருடைய பேச்சுக்களைப் பார்த்தாலே தெரியும். ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை அவர் மாறி மாறிப் பேசுகிறார்.

முதலில் கல்லால் அடித்தார்கள் என்றார், பிறகு 20 பேர் வந்தார்கள் என்றார், பிறகு 30 பேர் வந்தார்கள், ஒரு பைக்கில் நான்கு பேர் வந்தனர் என்றார். பைக் நம்பரைப் பார்க்கவில்லை என்றார். அதாவது ஆளுங்கட்சியினர் சொல்லிக் கொடுக்கக் கொடுக்க அதன்படி பேசுகிறார். தப்பு தப்பாக சொல்கிறார்.

கடைசியில் மாலை 6 மணிக்கு மேல், ஆளுங்கட்சியினர் சொன்னார்களோ என்னவோ, விஜயகாந்த் தூண்டுதல்தான் காரணம் என்கிறார்.

என் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது வன்முறையான கேஸ், தவறான கேஸ்.

சக நடிகரை தாக்கலாமா என்கிறார். அவர் சக நடிகர் என்றால், எனது தங்கை கணவர் இறந்தபோது நான் இல்லாத நிலையில், அவர் நல்லது செய்திருக்கலாம். அதை செய்யவில்லை. பிரச்சினைதான் செய்தார்.

அடுத்த மாதம் நடக்கப் போகும் தேமுதிக இளைஞர் அணி மாநாட்டைத் தடுக்கவும், கெடுக்கவுமே இந்த சீப்பான நடவடிக்கையில் இறங்கியுள்ளார் கருணாநிதி. எனது கட்சி வளருகிறது என்று அவருக்கு கோபம்.

நேற்று காலையில் காங்கிரஸுக்கு ஆட்சியில் பங்கு கொடுக்கலாம் என்றார். மாலையில் புதுச்சேரியிலும் பங்கு கேட்போம் என்கிறார். எப்போது பார்த்தாலும் அவருக்கு பதவி ஆசைதான். பதவி ஆசை அவரை விடாது (இவருக்கும் இவர் மனைவி மச்சானுக்கும் ஆசையே கிடையாது பாருங்க...) .

முதலில் தமிழ்நாட்டு காவல்துறையில் உள்ள திமுக போலீஸ், அதிமுக போலீஸ் ஒழிய வேண்டும். காவல்துறையினரின் போக்கையெல்லாம் பார்த்து விட்டு, காக்கி டிரஸ் போட்டு நடிக்கவே கூடாது என்று முடிவெடுக்கும் நிலைக்கு நான் வந்து விட்டேன். என்ன பேசினாலும் கேஸ், எத்தனை பொய் கேஸ்.

என்னை எப்படி ஒழிக்க முடியும் என்றுதான் யோசித்துக் கொண்டிருக்கிறார். என் வீட்டைச் சுற்றி போலீஸ். நல்லதைச் சொல்லி அவரால் ஓட்டு வாங்க முடியாது. எல்லாமே ஊழல். எல்லாமே பொய்க் கேஸ். இதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்.

கருணாநிதியே போட்டியிட்டாலும் கவலை இல்லை!

வடிவேலு அரசியல் காழ்ப்புணர்ச்சி என்கிறார். தேர்தலில் நிற்பேன் என்கிறார். யார் வேண்டுமானாலும் நிற்கலாம், இது ஜனநாயக நாடு. கருணாநிதியே என்னை எதிர்த்து நின்றாலும் நான் பயப்பட மாட்டேன். எனக்கு தெரியும் எப்படி தேர்தலை சந்திக்க வேண்டும் என்று.

இந்த அரசுக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் ஓய மாட்டேன். தைரியத்தை சோதித்துப் பார்த்தால் அது முடியாது. நான் தைரியமானவன். மக்கள் பிரச்சினைகளுக்காக உள்ளே தூக்கிப் போட்டால் தைரியமாக போவேன்(தூக்கி உள்ளே போடுங்கப்பா முதல்ல... எத்தை நாள் தாக்குப்பிடிக்கும் இவர் கட்சி பார்க்கலாம்!)

காவல்துறை நல்லவர்களுக்காக பாடுபட வேண்டும். கெட்டவர்களுக்குத் துணை போகாதீர்கள். அடுத்த ஆட்சி மாறினால், நீங்கள் எங்கே போய் விழுவீர்கள் என்று தெரியாது. அத்தனையும் தூசு தட்டி எடுக்கப்படும். அப்போது நீங்கள் மாறித்தான் ஆக வேண்டும். மக்கள் வரிப்பணத்தில் நீங்கள் சம்பாதித்த காசை திரும்ப வாங்குவோம்.

இப்போது எனது பேச்சை மக்கள் பார்க்கக் கூடாது, கேட்கக் கூடாது என்பதற்காக அனைத்து மாவட்டங்களிலும் பவர் கட் (!!) என எனக்கு செய்தி வந்துள்ளது. இதற்குப் பெயர்தான் சர்வாதிகாரம். இதுதான் சர்வாதிகார ஆட்சி என்றார் விஜயகாந்த்.

ரெம்பத்தான் கண்ணைக் கட்டுதே... என்கிறீர்களா...

வடிவேலு சொன்னதைத்தான் நானும் இங்கே சொல்ல வேண்டியிருக்கிறது.

இன்னும் ஆட்சியின் அருகில்கூட வரவில்லை... அதற்குள் என்னமா சவுண்ட் விடுறார்... அடுத்த தேர்தல்ல இவருக்கு கூடுதலா ஒரு சீட் கெடச்சா கூட தமிழ் மக்களுக்கு ரொம்ப இருட்டான காலமாயிடும் போலருக்கே!

2 comments:

Dr. சாரதி said...

Vijayakanth is a low class politician

Vaanathin Keezhe... said...

நன்றி சாரதி சார்...