Showing posts with label New Party 1996. Show all posts
Showing posts with label New Party 1996. Show all posts

Thursday, September 25, 2008

இதுதான் ஒரு நல்ல மக்கள் தலைவனுக்குரிய குணம்!


ரஜினி இப்போது அரசியல் கட்சியை அறிவிக்கப் போகிறார்... அல்லது சமூக இயக்கம் தொடங்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு முன்னெப்போதுமில்லாத அளவுக்கு பெரிதாகிக் கொண்டே போகிறது.

சிலர் இந்த நிலையை 1996-ல் நிலவிய சூழலுடன் ஒப்பிடுகிறார்கள்... சில பத்திரிகைகளிலும் இந்த ரீதியிலான அலசல்கள் ஆரம்பமாகியுள்ளன.

அன்றைய சூழலில் செய்திக்காக ரஜினியின் பின்னாலேயே சுமார் 3 ஆண்டுகாலம் சுற்றியவன், அவரது அனைத்து பத்திரிகையாளர் சந்திப்புகளிலும் பங்கேற்றவன் என்ற முறையில் இது குறித்த என் பார்வை...

1996-ல் மக்கள் ஒரு நிஜமான அரசியல் மாற்றத்தை விரும்பினார்கள். அதற்கு ரஜினிதான் பொருத்தமான தலைமையைத் தருவார் என்றும் தீவிரமாக நம்பினர்.
அவருடைய ஒரு வார்த்தையை மட்டுமே மந்திரம் மாதிரி நம்பி அவர் பின்னால் ஓடிவரத் தயாராக இருந்தார்கள்.

அரசியல் கட்சிகள் பக்கமும் அவருக்கிருந்த செல்வாக்கு அபரிமிதமானது. தமிழ் மாநிலக் காங்கிரஸ் எனும் கட்சியைத் துவங்கிய மூப்பனார், அந்தக் கட்சிக்குத் தலைமை ஏற்க வருமாறு ரஜினியை ஒருமுறையல்ல 4 முறை பத்திரிகையாளர் சந்திப்புகளில் அழைத்தார்.
தனிப்பட்ட முறையிலும் ரஜினியை கட்சித் தலைமை ஏற்கும்படி மூப்பனார் எந்த அளவு வேண்டிக் கொண்டார் என்பதை சோ பலமுறை மேடைகளிலேயே கூறியது உங்களுக்கும் நினைவிருக்கும்.

டெல்லியிலோ, அன்றைய பிரதமர் நரசிம்மராவ் ரஜினி முதல்வராக ஒப்புக் கொண்டால், காங்கிரசுக்கு கூட்டணியே வேண்டாம். சில உதிரிக் கட்சிகளுடன் தனித்தே போட்டியிட்டு ஆட்சியைப் பிடித்து விடலாம் என்று கூறினார்.

இந்த அளவு தங்கத் தட்டில் வைத்து வழங்கப்பட்ட வாய்ப்பைத்தான் ரஜினி மறுத்தார். உலகில் எந்தத் தலைவருக்கும் கிடைக்காத வாய்ப்பு இது. வேறு நபராக இருந்திருந்தால்...

நினைக்கவே முடியவில்லை அல்லவா...

ஆனால் ரஜினி இந்தப் பதவிக்கும், அதை ஒரு வியாபாரமாகக் கொண்டு பணம் சம்பாதிக்கவும் என்றுமே விரும்பியதில்லை.

அவர் விரும்பியது ஒரு நல்ல ஆட்சி... அதை யார் தந்தால் என்ன? என்பதுதான் அவரது வாதம். அந்த நல்ல எண்ணத்தில் மக்கள் தந்த அரிய வரத்தை வேறு சிலரிடம் ஒப்படைத்தார். என்ன... அன்று அதைத் தரக் கூடாதவர்களிடம் தந்துவிட்டார். அதுதான் பிரச்சினையே!

அன்று ரஜினிக்கு நிலவிய செல்வாக்கைப் பார்த்து, நிச்சயம் அடுத்த எம்ஜிஆர் அல்லது அவரையும் தாண்டி ஒரு படிமேலே கூடப் போய்விடுவார் இந்த மனிதர் என்று நிருபர்களிடம் கமெண்ட் அடித்த ரகுபதி, ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், சாத்தூர் ராமச்சந்திரன் போன்றவர்கள் இன்னும்கூட அமைச்சர் என்ற அந்தஸ்தை கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அன்று மட்டும் ரஜினி மந்திரிசபை அமைத்திருந்தால், இவர்கள் ஒருபோதும் கோட்டைக்குப் போயிருக்க முடியாது...

இதற்காக, கருணாநிதி உள்ளிட்டவர்கள் ரஜினிக்குப் பட்டிருக்கும் நன்றிக்கடன் அடுத்த ஜென்மத்திலும்கூட தீராதது.

உண்மை... இது மிகைப் புகழ்ச்சியில்லை. இந்த விவரங்கள் நம்மில் பலருக்கும் நன்கு தெரியும், எனவே மேம்போக்காக இவற்றை நினைவுபடுத்துகிறேன்.

அன்றைய சூழல் இது... இன்றைக்கு...?

தொடரும்!