இதற்கான பதிலை நாமே சொன்னால் அது ரஜினி மீதுள்ள ப்ரியத்தில் கூறியதாகத்தான் நமது நண்பர்களே நினைப்பார்கள்.
மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்?
எத்தனை பேர் ரஜினிக்கு ஆதரவுக் கரம் நீட்டுவார்கள்?
இதோ அரசியல், வணிகம், சினிமா என பல துறைகளைச் சேர்ந்த ஒரு 10 விஐபிக்களிடம் நான் நேரடியாகப் பேசியவற்றிலிருந்து இந்தக் கேள்விக்கான பதிலாய் தருகிறேன்!
சு.திருநாவுக்கரசர் – பாஜக தலைவர்
அவர் எப்போதோ கட்சி ஆரம்பித்திருக்க வேண்டியவர். ஆனால் பல காரணங்களால் அது இன்னமும் நடக்கவில்லை. இன்றைய சூழலில் கூட முதல்வர் பதவிக்கான் வேட்பாளர் என்று அவர் தன்னை முன்னிறுத்தி மக்களைச் சந்தித்தால் தமிழ்நாட்டு அரசியலே தலைகீழாகிவிடும். ஆனால் செய்வாரா... தெரியவில்லை.
அவர் சொல்வதுபோல காலம்தான் இதற்கு பதில் சொல்லும்.
பி.வாசு – இயக்குநர்
ரஜினி சார் இன்னும் அரசியல் பத்தி வெளிப்படையா எதுவும் அறிவிக்கல. அதனால் நானும் ஓபனா பேச முடியாது. ஒருவேளை ஆரம்பிச்சார்னா, நிச்சயம் தமிழ்நாட்டு அரசியலை நிர்ணயம் செய்யும் சக்தியாக அவர் இருப்பார். இப்போதே அவர் அப்படித்தான் இருக்கிறார் என நம்புகிறேன்.
எனக்கென்னமோ அவர் மிகப்பெரிய உயரத்தைத் தொடப் போகிறார் என்று உள்ளுணர்வு சொல்கிறது. பார்க்கலாம்!
சோ – பத்திரிகையாளர்
எதுக்கு இப்போ இந்தக் கேள்வி?
அவர் முதலில் தன்னைத் தயார்படுத்திக்கிட்டு வரட்டும் சொல்றேன்.... இன்னொன்னு நான் யாரை பாராட்டுகிறேனோ அவர்கள் பெருசா வர்றதில்லை. அதனால இனி ரஜினியை நான் பாராட்டப் போறதில்லை. கடுமையா விமர்சிக்கப் போறேன்.
அப்பதான் அவர் எம்ஜிஆர் மாதிரி முதல்வர் ஆகி இன்னும் என்னோட விமரிசனங்களுக்கு ஆளாவார்னு நம்பறேன்...!!
மோகன்பாபு – நடிகர்
ரஜினி அரசியல் கட்சி தொடங்கி ஒரு வருஷம் கடுமையா கவனம் செலுத்தினாலே போதும், இந்த தமிழ்நாட்டின் அதிகாரம் அவர் கைக்கு வந்துடும்.
நான் பலமுறை அவன்கிட்ட சொல்லியிருக்கேன்...
‘டேய் கட்சி ஆரம்பிச்சு, இந்த ஜனங்களுக்கு இன்னும் நிறைய செய்டான்னு... ஆந்திரா அரசியல்ல நான் ஒரு எம்பியாக இருந்தேன். அவ்வளவுதான். அங்க பெருசா செய்ய முடியல. ஆனா ரஜினி கட்சி ஆரம்பிச்சான்னா உச்சத்துக்குப் போவான். இது அவன் ராசி. சினிமாவில் இப்போ அவன்தான் முதல்வர். அரசியலிலும் இது நிச்சயம் நடக்கும்... அப்போ இந்த மோகன்பாபுவை நினைச்சுக்கங்க.
எனக்கு ஒரு வாய்ப்புக் கொடுத்தான்னா... நான்கூட அவன் கட்சியில சேர்ந்துருவேம்பா... ஜோக் இல்ல.. சீரியஸாதான் சொல்றேன். எனக்கும் தமிழ்நாட்டுல செட்டில் ஆகற ஆசையிருக்கு!
எஸ்பி முத்துராமன் – இயக்குநர்
நான் இந்த கேள்விக்கு பதில் சொல்ல தயங்குவேன்னு நினைச்சீங்களா... மாட்டேன்.
கட்சி ஆரம்பிச்சு முழுசா இறங்கினார்னா, ஒரு முதல்வரை வைத்து அதிகப் படங்களை இயக்கியவன் என்ற பெருமை எனக்குக் கிடைக்கும். ஆனா அவர் இயல்புக்கு அரசியல் சரிப்படுமா என்பதை அவர்தான் தீர்மானிக்கணும்.
உங்க கேள்விக்கு பதில் கிடைச்சுடுச்சா....!
வெங்கட் பிரபு – இயக்குநர்
சார் கட்சி ஆரம்பிச்சா நிச்சயம் ஜெயிப்பார். ஆனா எங்களுக்கு சினிமாவின் ஒரே சூப்பர்ஸ்டாரான ரஜினி சாரும் வேணுமே... அதான் பிரச்சினை. என்னை மாதிரி உள்ளவர்கள் ரஜினியை அரசியல்ல பெரிய தலைவரா பார்க்கவும் ஆசைப்படறோம், சினிமாவில சூப்பர்ஸ்டாரா இருக்கணும்னும் ஆசைப்படறோம்.
பேராசைதான்... ஆனா சார் விஷயத்தில அந்த அளவெல்லாம் கிடையாது.
வடிவேலு - நடிகர்
‘பணம் சம்பாதிக்க ஆயிரம் தொழில் இருக்கு... அதை விட்டுட்டு இந்த புனிதமான அரசியலை ஏன்யா பயன்படுத்தறீங்க!’-ன்னு தன்னோட படத்துல கேட்டவர் அண்ணன் சூப்பர்ஸ்டார்.
எனக்கு ஒரு பிரச்சினை வந்த உடனே நான் கட்சி ஆரம்பிப்பேன், தேர்தல்ல நிப்பேன்னு கொதிச்சிட்டேன். நான் கண்டிப்பா தேர்தல்ல நிப்பேன். அதுல மாற்றமில்ல.
ஆனா எவ்வளவோ சோதனைகளுக்குப் பின்னும் அமைதியா, தன் வழியில போயிட்டிருக்கிற ரஜினி சாரை நினைச்சா எனக்கு பிரமிப்பா இருக்கு. இப்படியொரு மனுஷன் அரசியலுக்கு வரணும்... நிறைய செய்யணும்.
அன்புமணி – மத்திய சுகாதாரத் துறை அமைச்சர்
இது ஜனநாயக நாடு. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அதை நாங்கள் எதிர்க்கவில்லை. எந்தக் கொள்கையுமில்லாமல், வெறும் நடிகர் என்ற புகழை மட்டும் வைத்துக்கொண்டு அரசியலுக்கு வருவதைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம்.
ரஜினி வரட்டும்... தன் கொள்கைகளைச் சொல்லட்டும். அவற்றுக்கு மக்களிடம் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து அவரது அரசியல் வெற்றி அமையப்போகிறது.
தங்கராஜ் – ஐஏஎஸ் அதிகாரி
நல்ல விஷயம்தான். நான் அரசியலுக்கும் அப்பாற்பட்டு ரஜினியை விரும்புகிறேன். அவரது கொள்கைகளும், மக்களிடம் அவரது அணுகுமுறையையும் பொறுத்து அவரது அரசியல் வெற்றி அமையும். மற்றபடி நான் அரசியல் பேசக்கூடாது.
தொல் திருமாவளவன் – விடுதலைச் சிறுத்தைகள்
அவர் ஒரு புகழ்பெற்ற நடிகர் என்பதை விடுத்துப் பேசுகிறேன்... ரஜினியின் இயல்புக்கு அரசியல் சரிப்படும் என்று எனக்குத் தோன்றவில்லை. மற்றபடி நல்ல மனிதர்.
அவருக்கு அரசியல் களப்பணி தெரியாது. அவர் கட்சி ஆரம்பித்து களத்துக்கு வந்தால்தான் எதையும் கூறமுடியும். மீடியா பிம்பத்தையும் உங்களைப் போன்ற பத்திரிகையாளர் யூகங்களையும் மட்டுமே வைத்து நான் எந்தக் கருத்தைச் சொல்வது?
ரஜினி இதுவரை அரசியலில் இல்லை. அவர் அரசியலில் இறங்கட்டும், வெற்றி வாய்ப்பு குறித்துப் பிறகு பேசலாம்.
தள மாற்றங்கள் @ giriblog | Announcement
4 years ago