
ஈழ ஆதரவு விஷயத்தில் நமது நிலைப்பாடு எப்போதும் ஒன்றுதான். இலங்கையில் வசிக்கும் அனைத்து தமிழர்களும் (மலையகத் தமிழர்கள் உள்பட) சம உரிமையுடன், சிங்களர்களுக்கு சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதே.
அதற்கான தீர்வு காந்தீய வழியில் வந்தாலும் சரி, நேதாஜி வழியில் கிடைத்தாலும் சரி, பெரும்பகுதி தாயகத் தமிழர்களைப் போல நமக்கும் சம்மதமே. எந்த முடிவும் தமிழர்களுக்கு சாதகமாகவே அமைய வேண்டும்.
யதார்த்தமாக இலங்கை விவகாரத்தைப் பார்ப்பவர்கள் பெரும்பாலும் இத்தகைய கருத்துக்களையே கொண்டிருப்பதை அறியலாம்.
ஆனால் அரசியல்வாதிகளின் ஆதரவுக்குள் ஆயிரம் கணக்குகள் இருக்கிறது. அப்படி ஒரு கணக்கைத்தான் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.
மற்றபடி இலங்கைப் பிரச்சினையின் உண்மைகள் குறித்து பின்னொரு சமயம் ஒரு தொடர் கட்டுரை எழுதும் விருப்பம் உள்ளது.
ரஜினிக்கு ஆதரவான இந்த தளத்தில் விஜய்காந்துக்கு எதிரான கருத்துக்கள் வருவது சகஜம்தான் என்ற மனநிலையில் உள்ளவர்களை நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை. உண்மையை யாரும் உரத்துச் சொல்லலாம்!
தனித் தமிழீழம் மலரும் வரை நான் பிறந்த நாள் கொண்டாட மாட்டேன் என்று வீர சபதம் எடுத்து, வைராக்கியமாக ‘வாழ்ந்து’ வருபவர் நம்ம விஜய்காந்த். ஈழத் தமிழர் ஆதரவு விவகாரத்தில் இயக்குநர்கள் ஒரு பக்கம் சிறை செல்வதும், நடிகர்கள்
உண்ணாவிரதமிருப்பதுமாக திரையுலகம் பரபரவென இயங்கிக் கொண்டிருக்கையில், மகனுக்கு பிரபாகரன் பெயர் சூட்டி தன் தமிழ்ப் பற்றை பறை சாற்றிக் கொண்டிருந்த விஜய்காந்த் மட்டும் அடக்கி வாசிப்பது ஏனோ?
அரெஸ்ட் பயமா... இல்லை... இல்லவே இல்லை! அரசியல் லாப நோக்கம்தான்!
இது என்ன புதுக்கணக்கு என்கிறீர்களா...
இது புதுசல்ல... பழைய கணக்குதான். என்றைக்கு டெல்லிக்குப் போய் மேலிடப் பிரதிநிதிகளைச் சந்தித்து காங்கிரஸ் கூட்டணிக்கு அச்சாரமிட்டு வந்தாரோ அன்று முதல் விஜய்காந்தின் ஈழப் பற்று ஈனஸ்வரத்தில் கேட்கத் துவங்கியிருப்பதை அரசியல் பாலபாடம் படிப்பவர்களும் கூட உணர முடியும்.

ராமேஸ்வரம் உண்ணாவிரதத்துக்கு வருவதாய் வாக்களித்த விஜய்காந்த் கடைசிவரை அந்தப் பக்கமே எட்டிப் பார்க்காத மர்மமும், இளைஞரணி மாநாடு முடிந்ததிலிருந்தே மந்திரித்துவிட்டவர் போல ஒரு மார்க்கமாய் திரிவதும் இந்த கூட்டணித் தேவைக்காகத்தான்.
இந்த மர்மம் புரிந்த பிறகுதான் கலைஞரும் ‘இந்திய இறையாண்மை மீதான தனது பற்றுத’லைக் காட்ட வேண்டி சில கைதுகளை அரங்கேற்றினார். இருக்கிற கூட்டணியைக் காப்பாற்ற வேண்டிய கடமை அவருக்கு மட்டும் இல்லாமல் போய்விடுமா என்ன?
இப்போது உண்ணாவிரத விவகாரத்துக்கு வருவோம். நாளை உண்ணாவிரதம். முன்பு பிரபாகரனை தனது தலைவராக அறிவித்த கேப்டன், இந்த உண்ணாவிரதத்தின் போது என்ன செய்யப் போகிறார்?
எல்லோரையும் போல சும்மா வந்து போகப்போகிறார். அவ்வளவுதான். இயற்கையாகப் பெய்யும் மழையாக இருந்தாலும் சரி, தன் வீட்டுத் தெருவில் பொங்கி வழியும் சாக்கடையாக இருந்தாலும் சரி, எல்லாவற்றுக்கும் கலைர்ஞர்தான் காரணம் என்று அறிக்கையாய் விட்டுத் தள்ளும் இந்த அரிதார கேப்டன், இலங்கை விவகாரத்தில் மட்டும் தன் நிலைப்பாட்டை பகிரங்கப்படுத்த மறுப்பது மீடியாவுக்கு தெரியாதா...
இந்த திடீர் பதுங்கலை விமர்சித்து முடிந்தால் ஒரு ‘மனம் திறந்த மடல்’ எழுதிப் பார்க்கட்டுமே மீடியா உலக ஜோல்னா பையன்கள்...
தமிழினத்தின் ஏக போக பிரதிநிதிகளாய், தமிழர்களின் ஒட்டுமொத்த மனசாட்சியாய் தங்களைத் தாங்களே சித்தரித்துக் கொள்ளும் அஞ்ஞானிகளுக்கு இப்போது எங்கே போனது அறிவு?
அது சரி... இந்த அரிதார கேப்டனுக்கு பார்ட் டைம் ஆலோசகராகச் செயல்படும் அவர்களிடம் இதையெல்லாம் எதிர்பார்க்க முடியுமா?
ஆனால் இந்த கபட நாடகங்களையெல்லாம் அறியாத தமிழ் மக்கள் செய்தித்தாள்களில் / மீடியாவில் பதிப்பிக்கப்படுகிற அனைத்தையும் நம்பி அல்லது அதன்பால் உணர்ச்சி வசப்பட்டு, இம்மாதிரி நிகழ்களில் கலந்து கொள்ள முடியாத அனைவரையுமே தமிழ்த் துரோகிகளாகவே வரித்துக் கொள்கிறார்கள். அல்லது இந்த அவலங்களைத் தோலுரித்துக் காட்ட முயல்பவர்களையும் இதே பட்டியலில் சேர்த்துக் கொள்கிறார்கள்.
இங்கே நல்லவர்கள் அதிகம் பேசுவதில்லை; அதிகம் பேசுபவர்களின் பின்னணியில் ஆயிரம் அரசியலிருக்கிறது!
இந்த வருட ஈழ ஆதரவு சீஸன் நமக்கு உணர்த்தும் பாடம் இது!
http://www.envazhi.com