குசேலன் படத்தில் ஒரு காட்சி. நரிக்குறவர் இன பிரதிநிதிகளான சின்னி ஜெயந்தும், பிரம்மானந்தமும் சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் மனு கொடுப்பார்கள். அப்போது ரஜினி அழகாக ஒரு வாக்கியம் சொல்வார்: ‘மனு வாங்க நான் என்ன மந்திரியா... நான் ஒரு நடிகன் அவ்வளவுதான்!’-தன் நிலை உணர்தல் என்பதற்கு எத்தனை அழகான உதாரணம் பாருங்கள். இங்குள்ள நடிகர்கள் யாரும் தங்கள் நிலை உணர்ந்தவர்களாகவே தெரியவில்லை. உணர்வைக் காட்டுகிறோம் பேர்வழி என்று இருக்கிற பகையுணர்ச்சியைக் கிளறி விடுவதுதான் இவர்கள் செய்துவரும் வேலை.
பட்டால்தான் இவர்களுக்குப் புத்தி வருகிறது. ஒகேனக்கல் பிரச்சினையின்போது, ‘உருளுவது ரஜினி தலைதானே’ என்று பெரும்பாலான நடிகர்கள் சும்மா இருக்க, வயித்தெரிச்சல் கோஷ்டிகள் சந்தோஷமாக பார்ட்டி வைத்துக் கொண்டாடினார்கள்.
ரஜினி கன்னடர்களிடம் கேட்காத மன்னிப்பைக் கேட்டதாக மீடியாக்கள் பொய் பரப்பி, குசேலனில் தங்களுக்கு ஒரு ‘பங்கு’ கிடைக்காத கோபத்தைப் போக்கிக் கொண்டார்கள்!

ஆனால் அதே ஒகேனக்கல் பிரச்சினையில் தமிழக அரசு அடித்த குட்டிக் கரணங்களைப் பார்த்த பிறகுதான் பல முன்னணி நடிகர்களுக்கு, இதில் ‘புகுந்து விளையாடும்’ அரசியல் புரிய ஆரம்பித்தது. அதனால்தான் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக ராமேஸ்வரத்தில் போராட்டம் நடத்தக் கூப்பிட்ட போது முதலில் உணர்ச்சி வேகத்தில் ஒப்புக் கொண்டவர்கள் பின்னர் சற்றே பின்வாங்கி, பின்னர் முழுசாகவே மறுத்துவிட்டனர்.
அமீர், சீமான் கைது என தமிழக அரசு போட்ட வேடத்தைப் பார்த்த பிறகு, தங்களின் எல்லை என்ன, எப்படி இனி பேச வேண்டும் என்றும் ஓரளவு ‘தெளிவாகி’ விட்டார்கள். அதன் விளைவுதான் இப்போது சரத்குமார் விடுத்துள்ள அறிக்கை.
அந்த அறிக்கையில், நடிகர் நடிகைகள் தங்கள் வரம்பு மீறி எதும் பேசக்கூடாது என்றும், தங்கள் உணர்வுகளை சுருக்கமாக வெளிப்படுத்தினால் போதும் என்றும், எந்தக் காரணம் கொண்டும் உணர்ச்சி வசப்பட்டு உளறக் கூடாது என்றும் அறிவித்து அதில் கையொப்பமிட்டு அனைத்து நடிகர் நடிகைகளுக்கும் விநியோகித்து வருகிறார்.
இதைத்தானே ஆரம்பத்திலிருந்து ரஜினி சொல்கிறார்.
கர்நாடகத்தில் லட்சக்கணக்கான தமிழ் மக்கள் நிரந்தரமாகத் தங்கி அந்த மாநிலத்தவர்களாகவே மாறிவிட்டிருக்கிறார்கள். பெங்களூருவில் சரிபாதி தமிழர்கள்தான். ஐடி நிறுவன ஊழியர்களில் 80 சதவிகிதம் தமிழர்கள் நல்ல சம்பளத்துடன், தமிழ்நாட்டுக்கு திரும்பும் யோசனையே இல்லாமல் செல்வாக்குடன் வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள். இவர்களின் அமைதி கெட்டும் போகும் விதத்தில் நாம் எப்போதும் பேசக் கூடாது. அரசுகள் மட்டத்தில் ஆராய்ந்து நிதானமாக எடுக்க வேண்டிய ஒரு முடிவை கலைஞர்களாகிய நாம் உணர்ச்சிவசப்பட்டுப் பேசி கெடுக்க வேண்டாம், என்று பல ஆண்டுகளாகக் கூறிவருகிறார் ரஜினி.
இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தமிழர் நலன் பாதிக்காத வகையில் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். அப்பாவி தமிழர்கள் காப்பாற்றப்பட வேண்டும் எனக் கூறி வருகிறார்.
ஆனால் இதையெல்லாம் சொன்னதாலேயே அவரை தமிழர் விரோதியாகச் சித்தரித்தது ஒரு கும்பல். மீடியாவும் அவர்களுக்கு சொரிந்து கொடுத்தது. இப்போது அதுவே பெரிய புண்ணாகிப் போனதால், அடக்கி வாசிக்கலாம் என முடிவு செய்திருக்கிறார்கள்.
அப்படியென்றால் இலங்கைத் தமிழர்கள் மீது பரிவு காட்டக் கூடாதா... அங்கே அவர்கள் செத்து மடிகிறார்கள்.. இங்கே இவர்கள் சொகுசு வாழ்க்கை வாழ அவர்களும்தானே காரணம், அவர்களுக்குக் குரல் கொடுக்கக் கூடாதா...?
குரல் கொடுக்கலாம்... தப்பில்லை... ஆனால் குரல் கொடுக்கச் சொல்லிவிட்டு, குரல் வளையை நெறிக்கும் வேலையில் ஈடுபடும் அரசியல்வாதிகளை நம்பி குரல் கொடுப்பதில் என்ன பலன்...?
ராஜீவ் காந்தியைக் கொன்றதற்காக தமிழர்கள் தண்டிக்கப்படுவது நியாயமா என முழங்கிய அரசியல்வாதிகள் தப்பிவிட்டார்கள். அதே குரலை உரத்து ஒலித்த பாரதிராஜாவைக் கைது செய்யுங்கள் என்ற முழக்கம் கேட்கிறதே... இந்த முழக்கத்துக்குப் பயந்து அவரும் அடக்கி வாசிக்கிறாரே... இதற்குப் பெயர் என்ன?
அன்று ரஜினியை விமர்சித்த அனைவரும் இன்று, ‘ரஜினி சொல்வதுதான் சரியானது. நமது உணர்வுகளை எந்த வற்புறுத்தலுக்கும் பணியாமல், அதேநேரம் யாரையும் வற்புறுத்தாமல் காட்டுவதுதான் சரியானது’ என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.
ஏன்...? பச்சை சந்தர்ப்பவாதம்.
தங்களுக்கு ஒரு பிரச்சினை என்றதுமே, 'ரஜினி சொல்வதுதான் சரி... நாம் அப்படியே செய்யலாம்' என்று பேசத் தொடங்குகிறார்கள். இத்தகைய சந்தர்ப்பவாதம் ஒருபோதும் உதவாது.
இலங்கைத் தமிழர்கள் விஷயத்தில் மட்டுமல்ல... இம்மாதிரி உணர்ச்சிப்பூர்வமான பல்வேறு பிரச்சினைகளில் கலைஞர்கள் என்றில்லாமல், அனைவருமே ஒருமித்த குரலில் தங்கள் உணர்வுகளை அழுத்தமாகப் பதிய வைக்க வேண்டும். அதுதான் அந்த போராட்டத்துக்கு சரியான அந்தஸ்தைத் தரும். வெறும் உணர்ச்சிவசப்படல், எவ்வளவு சீரியஸான போராட்டத்தையும் கேலிக் கூத்தாக்கிவிடும்!
http://www.envazhi.com



