யோசித்துப் பார்த்தால் மீடியாவுக்கு ரஜினிமீது எப்போதுமே பாசமோ, நல்ல அபிப்பிராயமோ இருந்தது கிடையாது.
அபூர்வ ராகங்கள் தொடங்கி அவரது ஆரம்ப காலப்படங்கள் அனைத்திலும் அவரை ஒரு செட் ப்ராபர்ட்டி மாதிரி கண்டு கொள்ளாமல் விட்டிருந்தன, அறிவுஜீவிப் பத்திரிகைகள்.
அவர் ஒரு சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டார் என்ற உண்மையை பலகாலம் ஜீரணிக்க முடியாமல் தவித்தது ஆனந்த விகடன்.
நினைத்தாலே இனிக்கும், தில்லுமுல்லு படங்களுக்குக் கூட நியாயமான, சமநிலையுடன் கூடிய ஒரு விமர்சனத்தை அவர்களால் முன் வைக்க முடியலவில்லை.
முள்ளும் மலரும் தவிர வேறு எந்த ரஜினி படத்துக்கும் பெரிதாக மார்க் போட்ட மாதிரி நினைவில்லை. சொன்னால் நம்ப மாட்டீர்கள், தம்பிக்கு எந்த ஊரு படத்துக்கு இந்த மேதாவிகள் தந்த மதிப்பெண் 35!
அட, ஏவிஎம்முக்கு கோடிகளைக் குவித்த மனிதன் படத்துக்கும் அதே கதிதான். அதனால்தான் பல ரசிகர்கள்... அப்பாடா இவங்க குறைவா மார்க் போட்டுட்டாங்களா... இனி படம் நல்லா ஓடும், என்பார்கள் தமாஷாக.
பாபா படத்துக்கு வரம்பு மீறி செய்தி வெளியிட்டதாக ரஜினி தரப்பில் ‘ஆவி’ மீது வழக்குப்போட அடுத்த சில தினங்களிலேயே மன்னிப்புக் கேட்டு வழக்கை வாபஸ் வாங்க வைத்தார்கள்.
அந்தக் கோபத்தை எப்படிக் காட்டினார்கள் தெரியுமா...
வழக்கமாக இருவாரங்களுக்குப் பிறகு நிதானமாக விமர்சனம் எழுதும் இவர்களின் விமர்சனக் குழுவினர், பாபா வெளியான இரு தினங்களில் விமர்சனம் என்ற பெயரில் படத்தைக் குதறி விட்டிருந்தார்கள். இந்தப் படத்தின் நிஜமான ஹீரோக்கள் என்று வாலிக்கும் வைரமுத்துவுக்கும் மகுடம் வேறு (இவர்களுக்காகத்தான் ரூ.100 கோடிக்கு அந்தப் படம் விலைபோனது பாருங்கள்!).
மூன்று வருடங்களுக்குப் பிறகு சந்திரமுகி வந்தது. சச்சினுக்கு முதலிடத்தையும், மும்பை எக்ஸ்பிரசுக்கு இரண்டாமிடத்தையும், சரித்திரம் படைத்த சந்திரமுகிக்கு கடைசி இடத்தையும் கொடுத்து கேவலப்படுத்த முயன்று கேவலப்பட்டு நின்றார்கள்.
இதில் கொடுமை பாருங்கள்... இதே விகடன், சந்திரமுகி வெற்றிக்குப் பிறகு ரஜினியின் பாபாஜி குகைப் பயணத்தை அட்டைப்படக் கட்டுரையாக்கி காசு பார்த்தது. கொட்டும் தேள் எனத் தெரிந்தும் அதைக் கையிலெடுத்து காப்பாற்றும் முனிவரைப் போல ரஜினியும் இவர்களுக்குத்தான் பேட்டி தருகிறார் என்பது வேதனையான உண்மை.
அது என்னமோ தெரியவில்லை... எம்ஜிஆர், ரஜினி போன்றவர்களை ஆதரிப்பவர்களுக்கு பாமரப் பட்டமும், தனக்கும் புரியாமல், கேட்பவர்ளுக்கும் புரியவிடாமல் உளறிக்கொண்டே இருக்கும் கமல், நாசர் போன்ற சில நடிகர்களின் ஆதரவாளர்களுக்கு அறிவு ஜீவிப் பட்டமும் கொடுத்து வந்திருக்கின்றனர் பத்திரிகையாளர்கள்.
இந்த பட்டத்துக்கு பயந்தே பல பத்திரிகையாளர்கள் கமல்ஹாசன் மாதிரி நடிகர்கள் சொல்வதுதான் நிஜமென்றும், அவர்கள் நடிப்புதான் நிஜ சினிமா என்றும் ஏமாந்து போகிறார்கள். (ரஜினியும் கமலும் நண்பர்கள் என்பது வேறு விஷயம். நமது கருத்தைச் சொல்கிறோம், அவ்வளவுதான்.)
ரஜினிக்கு நெருக்கமான பத்திரிகையாளர்கள் அல்லது பத்திரிகைகள் சோ - துக்ளக் தவிர வேறு யாரும், எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.
மற்ற அனைத்துப் பத்திரிகைகளுமே சந்தர்ப்பத்துக்காக ரஜினியைப் பயன்படுத்தி கவர் ஸ்டோரியாக்கிக் காசு பார்த்தவைதான்.
விகடன், குமுதம், கல்கி வகையறாக்களுக்கு அப்போதெல்லாம் ஹீரோக்கள் என்றால் செக்கச் செவேலென்று சுண்டினால் ரத்தம் வருமளவுக்கு இருக்க வேண்டும் (அப்படி இருந்தாலும் எம்ஜிஆரைப் பிடிக்காது இவர்களுக்கு!!).
சிவாஜி கணேசன் என்ற இமயத்தையே கிண்டல் செய்த பாதகர்கள்தானே இவர்கள்.
ரவிச்சந்திரன், ஜெய்சங்கர், கமல்ஹாசன், ஸ்ரீகாந்த், சிவக்குமார்... போன்றவர்களை மட்டுமே தொடர்ந்து உயர்த்திப் பிடித்து எழுதி, ரஜினியை அமுக்கப் பார்த்தவர்கள் 70களின் இறுதியில். தினத்தந்தி மட்டுமே விதிவிலக்கு.
இந்த மீடியா எதிர்ப்பைத் தாண்டித்தான் அவர் மேலே வந்தார்.
அசைக்க முடியாத சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டார் என்பது புரிந்துதான் சற்று அடங்கினார்கள் இந்த மேல்தட்டு மீடியா பிரதிநிதிகள். ஆனாலும் சந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம் கொட்டிக் கொண்டேதான் இருக்கிறார்கள்.
பிளாஷ்பேக்!பத்திரிகையாளர்களை நேருக்கு நேர் சந்தித்து வெட்டு ஒன்று துண்டு இரண்டாகப் பேசுவதில் ரஜினிக்கு நிகர் வேறு யாருமில்லை.
ஒரு சின்ன பிளாஷ்பேக்...
ரஜினி – லதா திருமணம். அடுத்த நாள் திருப்பதியில் நடக்கும் திருமணத்துக்கு ஒரு நாள் முன்னதாக பத்திரிகையாளர்களை சோழாவுக்கு அழைத்து அழைப்பிதழ் கொடுத்து, இரவு மதுவிருந்தும் தருகிறார் ரஜினி.
‘இந்தாங்க அழைப்பிதழ், ஆனா கண்டிப்பா நீங்க யாரும் கல்யாணத்துக்கு வந்துடாதீங்க...’
அனைவருக்கும் பெரும் அதிர்ச்சி.
‘ஒருவேளை வந்தா...’ – இது தினத்தந்தி நிருபர்.
‘உதைப்பேன்..’ – இது சூப்பர்ஸ்டார்.
உடனே எழுந்தார் ஒரு புகழ்பெற்ற நடிகரும் பத்திரிகையாளருமான அந்த நபர். ‘ரஜினி சார்... கல்யாணத்துக்கு வர வேணாம்னு சொன்னது ஓகே. ஆனா இவ்வளவு கடுமை தேவையா... கொஞ்சம் பாத்துக்கிடுங்க...’ என்று கூற,
‘நைஸ்... நைஸ் மேன் யூ ஆர்... ஓகே.. நான் அப்படிப் பேசினது தப்புதான். ஆனா என் பேச்சை மீறி வந்து என் தனிமையை, ஒரு புனிதமான நிகழ்ச்சியைக் கெடுத்தா வேற வழியில்ல... திரும்பவும் சொல்றேன், உதைப்பேன்...’
-இதுதான் ரஜினி.
இந்த நேர்மையும், எதற்கும் அஞ்சாத தன்மையும்தான் அவரை பத்திரிகையாளர்களின் எதிரியாக்கிவிட்டது; தனிமனித ஒழுக்கமற்ற, தொழில் நேர்மையில்லாத நபர்களையெல்லாம் பெரிய நாயகர்களாக்கிவிட்டது!
ஆனால் அவரோ இவர்கள் போற்றுவதையும் கவனிப்பதில்லை, தூற்றுவதையும் காதுகொடுத்துக் கேட்பதே இல்லை.
இந்த பத்திரிகை அரசியலெல்லாம் தெரியாத அடித்தட்டு மக்கள்தான் ரஜினியின் சொத்து. அவர்களை ரஜினி மகிழ்விக்க, அவர்களும் தங்களில் ஒருவராய் ரஜினியை பாவித்து கோடிகளைக் கொட்டிக் கொடுத்து வருகின்றனர் தங்கள் அபிமான கலைஞனுக்கு.
இந்த பந்தத்தை உடைக்கத்தான் இன்று பெரும்பாடுபட்டுக் கொண்டிருக்கிறது மீடியா!
நண்பர்கள்... புரிந்து கொண்டால் சரி!