தமிழகத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் குசேலன் பற்றி இங்கே பலவிதமான தகவல்கள் வந்தாலும், வெளிநாடுகள் மற்றும் கேரளாவில் இந்தப் படம் நல்ல லாபம் சம்பாதித்துக் கொடுத்துள்ளதாக கேரள விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனை பிரமிட் சாய்மிரா நிறுவனமும் உறுதிப்படுத்தியுள்ளது.
கேரளாவில் இந்தப் படம் 85 திரையரங்குகளில் வெளியானதாகவும் இரண்டாவது வார முடிவில் இந்தப் படத்தின் விநியோகஸ்தர்களுக்கு கணிசமான லாபப் பங்கு கிடைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். முதல் வார நிலவரப்படி இந்தப் படம் கேரளாவின் அனைத்து சென்டர்களிலும் ரூ. 2.16 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்திரிகைகளின் விமர்சனங்கள் இந்தப் படத்தின் கேரள வசூலை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. உண்மையில் கேரள மீடியாவில் இந்தப் படத்துக்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்துள்ளன, என்கிறார் பிரமிட் சாய்மிரா இயக்குநர்களில் ஒருவர்.
படம் வெளியாகி 15 நாட்கள் ஆகும் நிலையில் இன்னமும் எல்லா திரையரங்குகளிலும் ஓடிக் கொண்டிருப்பதால் விநியோகஸ்தர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
இதே போல இந்தப் படத்தின் வெளிநாட்டு விநியோகஸ்தர்களில் நாக்ரவி தவிர, மற்றவர்கள் நல்ல லாபம் கிடைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் இன்னமும் இப்படம் ஓடிக்கொண்டிருப்பதால் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் கிடைக்க வாய்ப்புள்ளதாக பிரமிட் சாய்மிரா நிறுவனம் தெரிவித்துள்ளது.
Courtesy: www.oneindia.thatstamil.com
No comments:
Post a Comment